ஒளவைப் பாட்டி




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒளவைப் பாட்டி என்று சொன்னலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேங்தன், கல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனல் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை இருந்தாள். அவளும் புலமை நிரம்பியவள்தான்; இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்தவள். மகா கெட்டிக்காரி. பெரிய பெரிய மன்னர்களெல்லாம் அந்த ஒளவையிடம் மதிப்பு வைத்திருந்தார்கள்.
அதிகமான் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் தகடுர் என்ற ஊரில் இருந்து அரசாண்டு வந்தான். இப்போது சேலம் மாவட்டத்தில் தர்மபுரி என்ற ஊர் இருக்கிறது. அதைத் தான் அந்தக் காலத்தில் தகடுர் என்று சொல்லிவந்தார்கள். அதிகமான் புலவர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்துகொள்வான்; அவர்கள் பாட்டைக் கேட்டுக் களிப்பு அடைவான்; பரிசுகள் கொடுப்பான்.
ஒரு நாள் ஒளவை அதிகமானிடம் வந்தாள். அப்போது அதிகமான் ஒரு நெல்லிக்கனியைக் கையில் வைத்துக்கொண்டிருந்தான். அந்தக் கனியைத் தின்றால் உடம்புக்கு அதிகமான பலம் உண்டாகும். வியாதி ஒன்றும் வராது; பல ஆண்டுகள் வாழலாம். மிகவும் அருமையாகச் சம்பாதித்தது அது. அது அதிகமான் கைக்கு எட்டியது. ஆனால் ஒளவை வந்தவுடன் அவன் அதை அந்தப் பெருமாட்டியிடம் கொடுத்தான். அவளுக்கு அதன் பெருமை தெரியாது. ஆதலால் அதை உடனே வாயில் போட்டுத் தின்றுவிட்டாள்.
பிறகு அங்கிருந்தவர்களின் மூலம் அவள் அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்தாள். “அடடா இந்த விஷயம் முன்பே தெரிந்திருந்தால் நான் வாங்கிக்கொண்டிருக்க மாட்டேனே. அரசன் வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் கிழவி; நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்!” என்று வருந்தினாள்.
அதிகமானே, “நான் ஒரு காட்டுக்கு அரசன். நீங்களோ தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளவர்கள். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு காலம் உங்களுடைய கவியினல் தமிழ் மக்களுக்கு நன்மை உண்டாகும்” என்று சொன்னான்.
“இந்த உபகாரத்தைச் செய்த நீ நஞ்சை உண்டும் இறவாமல் வாழும் சிவபெருமானைப்போல நீடு வாழ்வாயாக!” என்று வாழ்த்தினாள் ஒளவை. அதுமுதல் அதிகமானிடம் ஒளவை மிக்க மதிப்புடையவளாக இருந்தாள். அவனைப் பாராட்டிப் பல பாடல்கள் பாடினாள்.
காஞ்சிபுரத்தில் ஒரு தொண்டைமான் வாழ்ந்திருந்தான். அவனைப் போய்ப் பார்த்து வரும்படியாக அதிகமான் சொன்னான். அப்படியே ஒளவை தொண்டைமானிடம் சென்றாள். அந்தப் புலமை மிக்க பெண்மணியைக் கண்டு, தொண்டைமான் வரவேற்று உபசரித்தான். தன் அரண்மனையெல்லாம் கொண்டு போய்க் காட்டினான். படைகள் வைத்திருக்கிற ஆயுதசாலேயையும் காட்டினான். அதைப் பார்த்தபோது ஒளவைக்கு அதிகமானுடைய வீரம் நினைவுக்கு வந்தது.
தொண்டைமான் பலவகை உபசாரம் செய்துவிட்டு, “தங்கள் வாக்கால் ஏதாவது சொல்லவேண்டும்” என்றான். அரசர்கள் புலவர்களிடம் பாட்டுப் பெறுவதற்கு ஆசைப்படுவார்கள். தொண்டைமானுடைய பெருமையை அதற்கு முன் ஒளவை கேட்டதில்லை. போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவனைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படி எந்தப் போரிலும் அவன் கலந்துகொண்டதாகவும் தெரியவில்லை.
தொண்டைமானே கவிபாடும்படி கேட்டுவிட்டான். அதிகமான் சொன்னதனால்தான் அவள் அங்கே வந்தாள். அந்த மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? ஆதலால் ஒரு பாட்டுப் பாடிவிடலாம் என்று நினைத்தாள். பாட்டும் பாடிவிட்டாள். ஆனால் பாட்டு அந்தத் தொண்டைமானப் பாராட்டியதாக இருக்கவில்லை; அதிகமானைப் பாராட்டின பாட்டாக இருந்தது. அதில் என்ன சொல்லியிருந்தாள் தெரியுமா?
“அடடா இந்த ஆயுதங்கள் எவ்வளவு அழகாகப் பளபளப்பாக இருக்கின்றன. மயிற்பீலியைச் சூட்டி அலங்கரித்திருக்கிறார்கள். காந்தளெல்லாம் பண்ணின காலத்தில் இருந்த மாதிரியே இருக்கின்றன. கொஞ்சமாவது மூளியாகவேண்டுமே! இவ்வளவு பாதுகாப்பான இடத்தில் இவற்றை பத்திரமாக வைத்திருக்கிறாய். அதிகமான் ஆயுதக் கொட்டிலில் ஆயுதம் ஒன்றுகூட இல்லை. எல்லாம் கொல்லன் பட்டறையில் கிடக்கின்றன. ஒன்றாவது உருப்படியாக இருக்கவேண்டுமே! அவன் வேல், பகைவர்களேக் குத்தி நுனி சிதைந்துபோய், உடைந்து கிடக்கின்றது” என்று பாடினாள். தொண்டைமானுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதிகமானத் தாழ்த்தி, நம்மை உயர்த்திப் பாடியிருக்கிறாள்’ என்று அவனுக்கு ஆனந்தம்.
ஆனால் ஒளவை சொன்னதில் யாருடைய புகழ் வெளியாகிறது என்பது உங்களுக்குத் தெரிகிறது அல்லவா?
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு
இதுதான் வஞ்சப் புகழ்ச்சி அணி.அந்தக்கால புலவர்களுக்கு கைவந்த கலை!!!