ஒல்லித் தேங்காய்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2025
பார்வையிட்டோர்: 1,149 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிபரால் இருக்கவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை… மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாடப்பதிவுக் கொப்பிகளையும், இடாப்புக்களையும் எடுப்பதும் விரிப்பதும், மூடுவதுமாக இருக்கின்றார் அவரது மனம் நீரில் விழுந்த ஒல்லித் தேங்காய் போல் தத்தளிக்கின்றது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகுமென நேற்றைய தினசரி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. 

‘ஆசிரியராகி, உப அதிபராகி… அதிபராகி… முப்பது வருட சேவையை முடித்தவர்… இன்னும் ஐந்து மாதங்களில் ஓய்வு பெறப்போகின்றார். 

வருகின்ற பரீட்சை முடிவுகள் தனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடுமா என்ற ஏக்கம் அவருக்கு. 

நேற்றுப் பிற்பகலில் உப அதிபர் நடராசாவைச் சந்தித்து, இன்று காலையில் கல்விக் கந்தோருக்குச் சென்று பரீட்சை முடிவுகளை எடுத்து வருவதற்கான ஒழுங்கு செய்திருந்தார். 

இன்னும் சிலமணி நேரத்தில் உப அதிபர் நடராசா பரீட்சை முடிவுகளுடன் வந்துவிடுவார். 

பாடசாலையிலிருந்து இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தோற்றி, பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருப்பதையும் அதிபர் யன்னலுக் கூடாக அவதானித்துக் கொள்கிறார். 

“சேர்… உங்கடை நியமனக் கடிதத்தை நான் வெச்சிருக்கிறன்… மிச்ச வேலையளை நாளைக்குப் பாப்பம்… இண்டைக்கு ஒருமாதிரிச் சமாளியுங்கோ அரியபுத்திரனைப் பார்த்துக் கூறுகின்றார் அதிபர். 

அதிபர் – கனகச்சந்திரன் 

அரியபுத்திரன் இவர் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக இப்பாடசாலைக்கு இன்றுதான் நியமனம் பெற்று வந்திருக்கின்றார். சில நிமிடங்களுக்கு முன்புதான் நியமனக் கடிதத்துடன் இங்கு வந்தார், அதிபரின் வேண்டுதலை அரியபுத்திரன் ஏற்றுக்கொண்டு தலையை மட்டும் அசைத்துக் கொள்கிறார். 

“என்ன சேர்…யோசிக்கிறியள்…” அரியபுத்திரனின் முகத்தை அவதானித்த அதிபர் கேட்கின்றார். 

”ஒண்டுமில்லைச் சேர்…” 

“பரவாயில்லை சொல்லுங்கோ சேர்…” 

இந்தக் கிராமத்தைப் பற்றித்தான் சேர் யோசிக்கிறன்… பதினைஞ்சு வரியத்துக்கு முன்னம் இந்தக் கிராமம் எப்படி இருந்திதோ… அப்பிடியேதான் இப்பவும் இருக்கு… எந்த முன்னேற்றமும் இல்லை…”அரியபுத்திரன் மிகவும் வேதனையோடு கூறுகிறார். அரியபுத்திரன் ஏன் கிராமத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார் என்ற காரணத்தைக் கனகச்சந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை… அரியபுத்திரனின் பேச்சை ஆமோதிப்பது போல் இலேசாகச் சிரித்துக் கொள்கின்றார். “எல்லாம் விளக்குப் புடிச்சுக் கிணத்துக்கை விழுகிற வேலைதான்…” கனகச்சந்திரன் என்னத்தை நினைத்துக் கொண்டாரோ… இப்படிக் கூறுகின்றார். 

கனகச்சந்திரன் இலேசானவரல்ல… காலத்தோடு முற்றி… முற்றாகக் கனிந்த பழம்! அவர் வாய்திறந்து ஏதாவது கூறினால் அதில் ஏதாவதொரு அழமான கருத்திருக்கும். 

கிட்டத்தட்ட நூறடி நீளமான அந்த மண்டபத்தில் முன்பக்கத்தில் அதிபரின் காரியாலயம் அமையந்திருக்கின்றது. அதிபரின் அலுவலக வாசலோடு இணைந்து ஐந்தடி நீளமானதொரு விறாந்தையும் அந்த மண்டபத்தோடு அமைந்துள்ளது. அந்த விறாந்தையிலிருந்து பத்தடி தள்ளி ஏழு செவ்விளை மரங்கள் ‘தாய்ப்பால்’ குடித்து வளர்ந்த குழந்தைபோல் மூக்கும் முழியுமாக நிற்கின்றன. 

பரீட்சை முடிவுகளை அறிய வந்த மாணவர்கள் அந்த மரங்களில் கீழ் நிற்கின்றனர். 

“மொத்தமாக எத்தனை பிள்ளைகள் சேர் சோதினை எடுத்தது..” அங்கு வந்த இராஜேஸ்வரன் ஆசிரியரிடம் கேட்கிறார் கனகச்சந்திரன். அவருக்கு தெரியாததல்ல…. 

“முதலாம் முறை எடுத்தது முப்பத்தாறு பேர்… இரண்டாம் முறை எடுத்தது முப்பத்தேழு பேர்…” வாய்ப்பாடமாக கூறுகிறார் அதிபரின் அலுவலக வேலைகளை எல்லாம் இரஜேஸ்வரன் ஆசிரியர் தான் செய்வார் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் வாங்கியவர். 

“மொத்தம் எழுபத்தி மூண்டு… இதிலை இருபதெண்டாலும்… பாஸ் பண்ணிச்சுது களெண்டால்… அதிபர் அங்கலாய்க்கின்றார். 

“வழமையாய் கிட்டத்தட்ட எத்தனை புள்ளையள் சேர்… பாஸ் பண்ணிறவை…” இதுவரை மெளனமாக இருந்த அரியபுத்திரன் கேட்கிறார். 

“பத்துப் பதினைஞ்சு புள்ளையள் பாஸ் பண்ணும்…” 

“பத்துப் புள்ளையள் எண்டு பார்த்தாலும்… கடந்த பதினைஞ்சு வருஷத்திலையும் நூற்றி அம்பது புள்ளையள் பாஸ் பண்ணியிருக்க வேணும். நூறு உத்தியோககாரராவது இருக்க வேணும்… நான் விசாரிச்சு பார்த்ததிலை… பத்தோ பதினைஞ்சு மாஸ்ரர்மார் மட்டும் இருக்கினம்… மிச்சப்பேர் எங்கை…? இந்தக் கிராமத்திலை என்ன முன்னேற்றமிருக்கு சேர்…” அரியபுத்திரன் புள்ளி விபர அடிப்படையில் பேசுகிறார். 

இராசேஸ்வரன் இக்கிராமத்தைச் சேர்ந்தவர். அரியபுத்திரன் இக்கிராமத்தைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டது … இராசேஸ்வரனின் மனதில் தைத்திருக்க வேண்டும். அரியபுத்திரனை மிகவும் அவதானமாகப் பார்க்கின்றனர். 

“இவர் மிஸ்டர் அரியபுத்திரன் எங்கடை பள்ளிக்குடத்துக்குப் பகுதி நேர ஆங்கில ஆசிரியராக வந்திருக்கிறார்…” அரியபுத்திரனை இராசேஸ்வரனுக்கு அறிமுகப்படுத்துகிறார் அதிபர். 

இராசேஸ்வரன் அரியபுத்திரனைக் கவனமாகப் பார்க்கின்றார். 

உயர்ந்த மெல்லிய உடல், நரைத்தாலும் மிகப் பக்குவமாக வாரி விடப்பட்டிருக்கும் தலைமயிர்… நரைத்த அடர்த்தியான மீசை… தடித்த பிறேமுள்ள கண்ணாடி… மடிப்புக் கலையாத உடுப்புக்கள்… சப்பாத்து… சென்ற் வாசனை… பெருவாழ்வு வாழ்ந்த தளகர்த்தத்தனமான முக அமைப்பு… இராசேஸ்வரனின் மனம் ஒட்டுத் தாளைப்போல் அரியபுத்திரனின் உருவத்தைப் பதித்துக் கொள்கின்றது… 

“என்ன சேர்… நான் சொல்றது புழையா… ஆகக் குறைஞ்சது வருஷம் ஒண்டெண்டு பார்த்தாலும் பதினைஞ்சு பட்டதாரிகளாவது இருந்திருக்க வேணும்… ஆக ஐஞ்சு பட்டதாரிகள் மட்டும் இருக்கினம்… ஆக இந்தக் கிராமம் எப்பிடிச்சேர் முன்னேர்றது…” 

…..” அரியபுத்திரன் மீண்டும் கூறுகிறார், 

“விளக்குப் புடிக்க கிணத்துக்கை விழுகின்ற வேலைதான்…” கனகச்சந்திரன் முன்பு கூறியதையே திரும்பவும் கூறுகிறார். இராசேஸ்வரனாலோ, அரியபுத்திரனாலோ அதபரின் பேச்சை புரிந்து கொள்ள முடியவில்லை. 

அதிபர் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்க்கின்றார்… பத்தரை மணி .

பரீட்சை முடிவு பற்றிய எண்ணம் எலியாய் அதிபரின் மனக்கயிற்றை அறுக்கின்றது. 

“கந்தோர்க்காரர் ஒன்பது மணிக்குத்தான் வருவினம்… வந்து ‘கந்தோர் தர்பார்’ நடாத்தி முடிஞ்சு கதிரைக்கு வர… எப்படியும் பத்து மணியாகும். அதுக்குப்பிறகு ‘றிசல்டை’ வாங்கிக் கொண்டுதானே வரவேணும்…எப்பிடியும் பதினொரு மணியெண்டாலும் செல்லும்…” கனகச்சந்திரன் மன அரிப்போடு கூறிக் கொள்கிறார். 

கனகச்சந்திரன் எழுந்து விறாந்தைக்கு வருகிறார். மாணவர்கள் செவ்விளை மரத்தின் கீழ் நிற்கின்றனர். 

கடந்த பன்னிரண்டு ஆண்களாக இந்தப் பாடசாலை எல்லைக்குள் பகல் பொழுதின் பெரும் பகுதியைக் கழித்தவர்கள்… புத்தகம், பென்சில்,கொப்பி…இன்னும் சில மணித்தியாலங்களில் தங்களின் முடிவுகளைச் சந்திக்கப் போகின்றனர். 

எத்தனைபேர் வெற்றியடைந்து படிப்பைத் தொடரப் போகின்றனரோ… 

எத்தனைபேர் வெற்றியடைந்தும் படிப்பைத் தொடரமுடியாமல் அவதிப்படப் போகின்றனரோ… 

எத்தனைபேர் தோல்வியடைந்து துயரப்படப் போகின்றரோ… 

கனகச்சந்திரனின் இதயம் கலங்கி… பல சிந்தனைக் குமிழ்கள் வெடித்துச் சிதறுகின்றன… எத்தனையோ 

எத்தனையோ பரீட்சை முடிவுகளைச் சந்தித்த அனுபவம்… காயப்பட்டு தளும்பான இடத்தில் முட்கம்பி குத்திக் கிழித்து எரிவதைப்போல்… அவரது மனம் எரிகின்றது. 

ஒவ்வொருவராக அவர் பார்க்கின்றார்… சகலரின் முகங்களிலும் ஏக்க உணர்வுகள்… 

“எத்தனை மணிக்குச் சேர்… றிசல்ட் வரும்….” அவள் யசோதா கேட்கிறாள். 

“உப அதிபர் போட்டார்… எப்பிடியும் பதினொரு மணிக்குள்ள வந்திடுவர்…” 

“எங்களுக்கு பயமாய்க் கிடக்குச் சேர்…” கணேசலிங்கம் கூறுகின்றான். 

“ஏன்…” 

“பெயில் விட்டால்… வீட்டை போய் என்னத்தைச் சேர்… செய்யிறது…” எதிர்கால வாழ்க்கை உணர்வு… பிறந்த வடு மாறாத நாய்க்குட்டியின் கண்கள் துடிப்பதைப் போல் துடிப்பதை அதிபர் உணர்கிறார்… 

புத்தகத்தையும்…. கொப்பியையும் பேனாவையும் விட… எழுத வாசிக்கப் பழக்கியதை விட… எங்கடை வாழ்க்கைக்கு ஆதாரமாய் வேறு எதைக் கற்பித்தீர்கள் என்பதைத்தான் கணேசலிங்கம் கேட்கிறான் என்பதை அதிபர் புரியாமலில்லை… 

“இன்றைய பாடசாலைகள்… தலைநகரிலிருந்து இறக்குமதியாகும் ஏட்டுச் சுரக்காய்களின் விற்பனை நிலையங்கள்… கனகச்சந்திரனின் இதயத்துள் தேங்கிக் கிடக்கும் அனுபவங்கள் குரல் எழுப்புகின்றன… 

இதே பிரச்சினையைக் கடந்த முப்பது வருஷங்களாகச் சந்தித்து… சமாளிக்கப் பழகியவர் கனகச்சந்திரன். எந்தவித கஷ்டமுமின்றி அவர் தன்னைச் சமாளித்துக் கொள்கிறார். 

“நீங்கள் எல்லாரும் பாஸ் பண்ணத்தான் போறியள்… ஏ.எல் படிக்கத்தான் போறியள்… என்ன பாலசிங்கம் நான் சொல்றது சரி தானே…”இந்த மாணவர்களுள் பாலசிங்கம் மிகவும் நல்லவன், சமய பக்தி மிக்கவன். அவனிடம் அதிபருக்கு தனியான அபிமானமுண்டு எதற்கும் அவனைத்தான் கூப்பிடுவார். அந்த அடிப்படையில் தான் இப்போதும் அவனிடமே அபிபிராயம் கேட்கின்றார். 

“இண்டையோடை எங்கடை பள்ளிக்குட வாழ்க்கையும் சரி… எனித்தான் சேர் பிரச்சினை… மதவிலை குந்த வேண்டியது தான்…” பாலசிங்கத்தை முந்திக்கொண்டு பேசுகிறான் திசநாயகம் அதிபர் திசநாயகத்தைப் பார்கிறார். 

“திசநாயகம் நீங்கள் இந்தப் பாடசாலையை விட்டுப் போனாலும்… உங்கடை ஞாபகம் எங்களுக்கிருக்கும்” 

“ஏன் சேர்” 

“நீங்கள் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்தண்டைக்குத்தான் இந்தச் செவ்விளை மரங்களை வெச்சனாங்கள்…” 

திசநாயகம் அதிபரைப் பார்க்கின்றான். 

“உங்களை இந்தப் பாடசாலையில் சேர்ந்த அண்டைக்கு உங்கடை தகப்பனார் இந்தச் செவ்விளை மரங்களைக் கொண்டுவந்து… தானே நிலமெடுத்துக் கிடங்கு வெட்டி நட்டுப் போட்டுப் போனவர்… உங்கடை பள்ளி வாழ்க்கைக்கும் இந்தச் செவ்விளை மரங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது…” அங்கு நின்ற சகல மாணவர்களும் எத்தனையோ தடவைகள் பார்த்துவிட்ட அந்த செவ்விளை மரங்களை இப்போது புதுமையாகப் பார்க்கின்றனர்… 

வரிசையாக ஏழு செவ்விளை மரங்கள்… மூக்கும் முழியாக… வட்டு நிறைந்த காய்களுடன்… நிறைவோடு நிற்கின்றன. 

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு… 

திசநாயகம் தகப்பனின் வேட்டித் தலைப்பைப் பிடித்தபடி ஐந்து வயதுச் சிறுவனாக இந்தப் பாடசாலைக்கு வந்தான்… தனது மகனும் படிக்கப் போகிறான் பெரியவனாகப் போகிறான் என்ற கற்பனைப் பூரிப்பில் அவனது தகப்பனார் தன்னிடமிருந்த ஏழு செவ்விளை மரங்களையும் இப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார்… அதன் பின்பு வகுப்பு ரீதியாகப் பசளை இடப்பட்டு… வகுப்பு ரீதியாக தினசரி தண்ணீர் ஊற்றப்பட்டு… இன்று பயனுள்ளவைகளாக அவைகள் நிற்கின்றன. 

அதிபர் திரும்பவும் தனது கதிரையில் வந்தமர்கிறார். அரியபுத்திரன் அதே இடத்தில் அமர்ந்திருக்கின்றார். 

“நீங்கள் எந்த இடம் சேர்…” அதிபர் அரியபுத்திரனிடம் கேட்கிறார். 

“இந்த ஊர்தான்…” அரியபுத்திரன் சிரித்தபடி கூறுகிறார். அதிபர் சிறிது அதிர்வுடன்… புருவங்களைச் சுருக்கி கேள்விக் குறியோடு அரியபுத்திரனைப் பார்க்கிறார் அதிபர். 

“இந்த ஊரெண்டால்’ 

“மெயின் றோட்டிலை அந்த அச்சகம்” 

“அச்சகத்துக்கு எந்தப் பக்கம்…” 

”அச்சகத்துக்கு பக்கத்திலை ஒரு ஒழுங்கை…” 

‘ஒழுங்கையிலை…” 

“மூன்றாவது வீடு…” 

“மூன்றாவது வீடெண்டால்…” 

‘யாழ்ப்பாணத்து புத்தி”யில் விசாரணை தொடர்ந்து… இப்போது மூன்றாவது வீட்டை நினைவுப்படுத்துகிறார் அதிபர். 

“சுந்தரலிங்கம்…” 

“ஓம் தெரியும்… அவற்றை பெண்சாதி ஒரு ரீச்சர்…” 

“அவற்றை மூத்த மகன்தான் நான்…” 

“அப்பிடியே… எங்கடை சுந்தரலிங்கத்தாற்றை மகனே… கிட்டக்கிட்டத்தான் நிக்கிறியள்… உங்கடை அம்மாவின்ரை ஒண்டைவிட்ட சகோதரியின்ரை மகளைத்தான்… என்ரை இளையவன் கட்டினவன்… அப்ப கல்வி அமைச்சிலை பெரிய உத்தியோகமாய் இருந்தது…” அதிபர் பெருமகிழ்ச்சியுடன் விசாரணையைத் தொடர்கிறார். 

“நான் தான்…” 

‘கல்வி அமைச்சிலை என்ன உத்தியோகமாய் இருந்தனீங்கள்” 

“கல்வித் திட்டமிடல் பிரிவிலை…” 

“சரி… சரி… சந்தோஷம்…” அதிபர் பெரு மகிழ்ச்சியுடன் கதையை முடிக்கிறார். 

அரியபுத்திரன் 

இவர் ‘கிளறிக்கலில்’ எடுபட்டு பல இடங்களிலும் வேலை செய்து பதவி உயர்வுகள் பெற்று இறுதியாகக் கல்வி அமைச்சில் கல்வித் திட்டமிடல் பிரிவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தான் பிறந்த மண்ணில் சிறிது காலமாவது வாழ்வேண்டும் என்ன இறுதிக் காலத்தில் பலருக்கேற்படுகின்ற ‘மண்பற்று இவருக்கும் ஏற்பட்டு ஊரோடு வந்தவர். அளவுக்கு மிஞ்சிய ஓய்வு… தொல்லையாகி… அதைச் சமாளிக்க… இந்தப் பகுதிநேர ஆங்கில ஆசிரியர் நியமனத்தை எடுத்துக் கொண்டார். 

“இப்ப நடைமுறையிலை உள்ள கல்வித்திட்டம்…நீங்கள் போட்டதுதானே…” தலையை நிமிர்த்தாமல் கேட்கிறார் கனகச்சந்திரன்…. 

”ஒமோம்…” 

“கஷ்டமான வேலை…” 

“சரியான கஷ்டம் சேர்… கல்வி உளவியல் தெரியவேணும்… கல்விக் கோட்பாடு தெரியவேணும்… கல்வித் தத்துவம் தெரியவேணும்… அயல் நாடுகளின்ரை கல்வி அமைப்புத் தெரியவேணும்… சமூகவியல் தெரியவேணும்…சரியான கஷ்டம்… என்னும் நான் ஐஞ்சு வருஷம் வேலை செய்யலாம்… இப்ப எனக்கு ஐம்பத்தாறு வயது… கஷ்டத்திலை தான் பென்சன் எடுத்தனான்…” 

“எல்லாம் நன்மைக்குதான்… உங்கடை திட்டங்களை ஒருக்கால் நீங்களே நடைமுறைப்படுத்தி பாருங்கோவன்…” அதிபர் அர்த்தபுஷ்டியாகக் கூறுகிறார். அரியபுத்திரன் பெருமிதத்தோடு சிரிக்கிறார். 

“எங்கடை கிராமப் புள்ளைகள் படிப்பிலை எப்பிடிச் சேர்…” 

“கிராமப்புறந்தானே பெரிசாய் எதிர்பார்க்கேலாது…” 

“கல்வித் திட்டமும் அதைக் கற்பிக்க ஆசிரிய பயிற்சிகளும் பொதுவானதாக இருக்கயிக்கை… கிராமப்புற பரீட்சை றிசல்ட் மட்டும் குறைஞ்சு போறதுக்குக் காரணமில்லையே சேர்…” 

“நீங்கள் சொல்றதும் சரிதான்…” அதிபர் தலை நிமிராமலேயே பதில் கூறுகிறார். 

“சேர்… நடராசா சேர்… வாறார்…” றிசல்ட் எடுக்கச் சென்ற உப அதிபரின் வருகையை யசோதா அதிபருக்குக் கூறுகிறாள். நடராசா மாஸ்ரர் அதிபரின் அலுவலகத்துள் வருகின்றார். அவரைத் தொடர்ந்து முதலாம்முறை பரீட்சை எடுத்த மாணவர்களும், இரண்டாம்முறை பரீட்சை எடுத்த மாணவர்களும், ஆசிரியர்களும் வருகின்றனர். அலுவலகம் நிறைகின்றது. 

அதிபர் றிசல்ட்டைப் பார்க்கிறார்… அலுவலகத்துள் பெரும் அமைதி… 

“முதலாம் முறை எடுத்தவையிலை… ஏழு பேர் பாஸ்… மூன்று பேர்… ஏ.எல் செய்யலாம்… இரண்டாம் தடவை எடுத்தவையிலை… எட்டுப் பேர் பாஸ்… நாலு பேர் ஏ.எல் செய்யலாம்…” அதிபரின் முகத்தில் திருப்தியின்மை பிரதிபிக்கின்றது. 

“பேருகளை வாசியுங்கோவன் சேர்…” யசோதா அதிபரைத் துரிதப்படுத்துகிறாள். 

“முதலாம் முறை எடுத்தவர்களிலை… கணேசலிங்கம், பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா, பொன்னம்பலநாதன், பாக்கியநாதன், தர்மராசா… ஆகியோர் பாஸ் பண்ணியிருக்கினம்… பாலசிங்கமும் பாக்கியநாதனும் ஸ்ரீஸ்கந்தராசாவும் ஏ.எல் செய்யலாம்… இரண்டாம் முறை எடுத்தவர்களிலை… யசோதா, யோகேஸ்வரி, ரவீந்திரன், பாலசுந்தரம், கைலாசநாதன், சிவஞானசுந்தரம், குமாரசாமி ஆகியோர் பாஸ் பண்ணியிருக்கினம் இதிலை… யசோதா, ரவீந்திரன், பாலசுந்தரம், கைலாசநாதன் ஆகியோர் ஏ.எல் செய்யலாம்… 

மொத்தமாக பதினைந்து பேர் பாஸ் பண்ணியிருக்கினம்… 

ஏழு பேர்… ஏ.எல் செய்யலாம்” அதிபர் கூறிவிட்டு றிசல்டை விபரமாகப் பார்க்க ஆரம்பிக்கின்றனர். 

முதல் முறை பரீட்சைக்குத் தோற்றிப் பெயில் விட்டவர்கள் திரும்பவும் தங்கள் வகுப்புக்குச் செல்கின்றனர்… இருந்த கதிரைகளில் இன்னும் ஒரு வருஷம் அவர்கள் இருக்கலாம்… 

இரண்டாம் முறை பரீட்சைக்குத் தோற்றிப் பெயிலானவர்… மெளனமாக நிற்கின்றனர்… இவர்களின் பாடசாலை வாழ்க்கை மேற்கடிவானத்தில் இறங்கிவிட்டது…. 

இவர்களில் முப்பதுபேர்… சகலரது முகங்களிலும் கழுத்து வெட்டப்பட்ட கோழியின் குரல்வளையிலிருந்து குருதி கொப்பளிப்பது போல்…. ஏக்க உணர்வும் ஏமாற்ற உணர்வும் கொப்பளிக்கின்றன…! 

“போட்டு வாங்கோ பிள்ளையள்” என்று கூற அதிபராலும் முடியவில்லை…. ” போட்டுவாறம் சேர்” என்று கூற மாணவர்களாலும் முடியவில்லை… 

அதிபரின் அலுவலக வாசலில் ஏழு செவ்விளை மரங்கள்… ஏழு காய்களிலிருந்து பிரசவித்தவைகள்… இன்று வட்டு நிறைந்த காய்களுடன் நிற்கின்றன…. 

இவைகளுக்கும் இந்த மாணவர்களின் பள்ளி வாழ்க்கைக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது… 

ஆனால் இந்த முப்பது மாணவர்களும்… ஓல்லித் தேங்காய்களாக நிற்கின்றனர்…? அதிபர் பெருமூச்சு விடுகின்றார்…! அது ஆத்மாவின் முகாரி இராகம்! அரியபுத்திரன் அவர் தலை சிமிரவேயில்லை! 

– ஈழநாதம், 14.04.1995.

– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *