ஒரு வேசி, ஒரு திருடன், ஒரு செல்வந்தன்…
ஆள் அரவமற்ற அமைதியான சாலை. இரண்டு பக்கமும் பசுமையாய் மரங்கள். அதில் அமர்ந்து, ஆனந்த கீதம் பாடும் பறவைகள். சற்று தொலைவிலிருந்த சர்ச்சிலிருந்து மணியோசை கேட்டது.
புத்தம் புது பழுப்பு நிற ஹுண்டாய் கார் ஒன்று, ஐஸ்கட்டியில் நழுவும் நுங்கை போல, அந்த சாலையில் வழுக்கியபடி சென்று, சர்ச் இருந்த இடத்திற்குள் நுழைந்தது.
அந்த காரிலிருந்து இறங்கினான் ஜான். அவன் உடையிலும், பகட்டிலும் செல்வச் செழிப்பு தெரிந்தது; ஆனால், முகம் வாடியிருந்தது. அவன் சர்ச்சுக்கு வருவது அபூர்வம்.
நேராக உள்ளே நுழைந்தான். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபடி, கன்பெஷன் அறையை நோக்கி சென்றான்; பாவ மன்னிப்பு கோரும் அறை.
அந்த அறை, ஒரு கதவு மூலமாக இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கம், பாதிரியார் இருந்தார். ஜன்னலை விட சிறிய சந்து ஒன்று, அந்த கதவில் இருந்தாலும், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாது; குரலை மட்டும் தான் கேட்க முடியும்.
பாவங்களை வரிசையாக அறிக்கையிட்டான் ஜான். பின், பாதிரியார் சொல்லச் சொன்ன ஜெபத்தை சொல்லி, ஆலயத்தை விட்டு வெளியே வந்தவன், அவரிடம் கவுன்சிலிங் பெறுவதற்காக, அவரது அலுவலகத்தை நோக்கி, நடக்கத் தொடங்கினான்.
“”பாதர்… என் பெயர் ஜான்! இந்த ஊரின் மிகப்பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரன்…” என்று நிறுத்தினான்.
மவுனமாக கேட்டுக் கொண்டிருந்தார் பாதிரியார்.
“”வசதி, வாய்ப்புக்கு எனக்கு குறைவில்லை. என்னிடம் இல்லாதது எதுவுமில்லை, ஒன்றைத் தவிர… அது தான் சந்தோஷம். ஏன், என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை?” என்று கேட்டான்.
சற்று நிதானித்த பாதிரியார், “”பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியுமா?” எனக் கேட்டார்.
மவுனம் காத்தான்.
“”தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை, தேவை உள்ளவர்களுக்கு கொடு… மற்றவர்களின் சந்தோஷம், உனக்கும் சந்தோஷத்தை தரும்,” என்றார்.
“”யாருக்கு தருவேன்? என் உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் எனக்கு ஈடாக வசதி படைத்தவர்கள். தெருவில் பிச்சை கேட்பவர்களுக்கு எவ்வளவு தருவது?”
“”ஒன்று செய்… இன்று இரவு, ஒரு பெரிய தொகையுடன் செல். அறிமுகமில்லாத யாருக்காவது, அதை கொடுத்து விடு. நீ யாரென்று அவர்களுக்கு தெரிய வேண்டாம்!”
அதை ஏற்றுக் கொண்டான் ஜான்; அவன் முகத்தில் திருப்தி.
அன்று இரவு கையில் ஒரு பையுடன், தெருவில் நடந்து சென்றான். அந்த பையில், ஒரு லட்ச ரூபாய் இருந்தது. யாராவது வருகின்றனரா என்று பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் ஏதோ சப்தம் கேட்டது… யாரோ வருகின்றனர். நெருக்கமாய் வந்தபோது தான் கவனித்தான். அவள் ஒரு இளம் பெண்; அழகாகவும் இருந்தாள்.
“”எக்ஸ்கியூஸ் மீ…” என்றான்.
அவள், அவனை கவனிப்பதற்கு முன், அவளிடம் அந்த பையை தந்துவிட்டு, “விறுவிறு’வென நடந்து, தன் கார் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். திரும்பிக் கூட பார்க்காமல், காரில் ஏறி பறந்தான். அந்தப் பெண் பதற்றமடைந்தாள்.
“யார் அந்த ஆள்… அவன் எதைக் கொடுத்தான்?’
பையை பிரித்து பார்த்தவளுடைய முகத்தில் பிரகாசம்!
“என்னிடம் ஏன் தந்தான்…’ என்று எண்ணியவாறு, யாரும் கவனிக்கவில்லையே என சுற்றிலும் பார்த்தாள். நல்லவேளை, அங்கே யாருமில்லை. “சர்’ரென்று தன் வீட்டை நோக்கி திரும்பினாள்.
மறுநாள் காலை, தோட்டத்தில் அமர்ந்து, பேப்பர் படித்து கொண்டிருந்தான் ஜான். பால்காரன், வேலைக்காரியிடம் பேசுவது, அவன் காதில் விழுந்தது.
“”இந்தக் கூத்தைக் கேட்டீயா… ராத்திரி, யாரோ ஒரு வேசிக்கு, லட்ச ரூபாயை எவனோ, சும்மா கொடுத்திருக்கான். யார் யாருக்கெல்லாம் ஆண்டவன், எப்படி பணம் கொடுக்கிறான் பாரு!”
ஜானுக்கு தலை சுற்றியது. தான் பணம் கொடுத்தது ஒரு வேசிக்கா?
“”ச்சே…”
கொஞ்ச நேரத்தில் தயாராகி, மீண்டும் சர்ச்சுக்கு சென்றான். கன்பெஷன் அறையில், பாதிரியாரிடம் புலம்பினான்.
“”கவலைப்படாதே… இன்று இரவு மறுபடியும், ஒரு புதிய மனிதனுக்கு உதவு,” என்றார் பாதிரியார்.
“”மறுபடியுமா?” – பதறினான் ஜான்.
“”உனக்கு சந்தோஷம் வேண்டுமென்றால், இதை செய்…”
அதை அமைதியாக ஆமோதித்த ஜான், அங்கிருந்து அகன்றான்.
அதே போல இரவு நேரம்… தன் கையில் இருந்த பையை தடவிப் பார்த்தான் ஜான். அந்த தெருவில் சிலர், நடந்து சென்று கொண்டிருந்தனர். சற்று தொலைவில் ஒரு ஆள், பதற்றமாக வருவதை கவனித்து, அவனை நெருங்கினான் ஜான். “”ஒரு நிமிடம்…” என்று கூறி, அவன் கையில் பையை திணித்து, உடனே புறப்பட்டான்.
“”சார்… சார்…” என்று அந்த ஆள் அழைத்தும், அதை கண்டு கொள்ளாமல், காரில் ஏறிச் சென்றான்.
மறுநாள் காலை, தான் வழக்கமாக செல்லும் முடிதிருத்தும் கடைக்கு சென்றான். அவனுடைய முடியை வெட்டியபடி, மெல்ல பேச்சுக் கொடுத்தான், “ஹேர் ஸ்டைலிஸ்ட்!’
“”சார்… இந்த கண்றாவியை கேள்விப்பட்டீங்களா… ராத்திரி யாரோ ஒருத்தன், ஒரு திருடனுக்கு லட்ச ரூபாய் கொடுத்திருக்கான்… கலிகாலம் சார்!”
ஜான் முகம் மாறியது.
“”நீங்க ஏன் தலையாட்டறீங்க… சரியா உட்காருங்க… அவன் ஒரு பைத்தியம்!”
ஜானுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. மறுபடியும் அதே விஷயங்கள் தொடர்ந்தன. பாதிரியாரை சந்தித்தான் ஜான். அவர் சொன்னதை போலவே, அன்றிரவும் பணப் பையுடன் புறப்பட்டான். இந்த முறை, நகரை விட்டு சற்று தொலைவாக சென்றான்.
காரிலிருந்து இறங்கவில்லை. அவனுடைய காருக்கு பக்கமாக நடந்து சென்றவரை அழைத்தான். அவனை உற்றுப் பார்க்க முயன்று தோற்றுப் போன அந்த மனிதர், “”என்ன விஷயம்?” என்றார்.
“”இதை கொஞ்சம் பிடியுங்கள்!” என்று, அவரிடம் பையை கொடுத்தான்.
அவர் எதுவும் சொல்வதற்கு முன், காரை வேகமாய் செலுத்தினான்.
மறுநாள் காலை, பேப்பர் போடும் பையன், “”ராத்திரி ஒரு ஆள், எனக்கு தெரிஞ்ச ஒருவருக்கு, காரணமேயில்லாமல் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இருக்கான்…” என்று கூறிச் சென்றான்.
ஜானுக்கு அதை அறியும் ஆவல் உண்டானது.
“”உனக்கு தெரிஞ்ச ஆளா… யாரு?”
“”நான், அவர் வீட்டுக்குப் பேப்பர் போடுவேன் சார்; அவர் ஒரு செல்வந்தர்…”
ஜானுடைய முகம் பேயறைந்தது போலானது. “போதுமடா சாமி!’ என்று நினைத்துக் கொண்டான். இனி, பாதிரியாரை பார்க்க வேண்டாமென்று முடிவு செய்தான்.
சந்தோஷத்தை தேடப் போய், இருக்கும் கொஞ்சம் சந்தோஷமும் பறிபோய் விட்டது என்று நினைத்தான். மறுபடியும் அவர் முன் போய் நின்றால், மீண்டும் அதையே செய்யச் சொல்வார். எதற்கு வம்பு… இறைவனுக்கே தான் வேண்டாதவனாகி விட்டதை போல உணர்ந்தான் ஜான்.
அதனால் தான், அல்லும், பகலும் உழைத்து சேர்த்த செல்வம், இப்படி தகுதி இல்லாதவர்களுக்கு சென்று சேர்கிறதே என்று வருந்தினான்.
இரண்டு மாதம் கடந்திருக்கும் –
ஒரு மாலை நேரம், அவனைத் தேடி, பாதிரியாரே அலுவலகத்திற்கு வந்து விட்டார்.
அவரை வரவேற்று, ஒப்புக்கு புன்னகைத்தான்.
“”இப்போதெல்லாம் நீங்க சர்ச்சுக்கே வருவதில்லையே… ஏன்?” என்றார் பாதிரியார்.
என்ன சாக்கு சொல்வது என்று தெரியாமல் நெளிந்தான் ஜான்.
“”மை டியர் சன்… நீ செய்த உதவிகளை, கர்த்தர் மனப்பூர்வமாக ஏற்று, உன்னை ஆசிர்வதித் திருக்கிறார்.”
“”என்ன சொல்றீங்க பாதர்?” – அவனால் நம்ப முடியவில்லை.
“”யெஸ் ஜான்… நீ தவறான ஆட்களுக்கு பணம் கொடுத்ததாய் நினைத்தாய்; அப்படி அல்ல, கடவுளின் சித்தத்திற்கேற்ப சரியான ஆட்களுக்குத்தான் தந்திருக்கிறாய்.”
“”எப்படி சொல்றீங்க பாதர்,” ஜான் முகத்தில் வியப்பு.
“”முதலில் அந்த பெண்; தன் உடலை விற்று பிழைப்பு நடத்தி வந்தவள். நீ திடீரென ஒரு லட்ச ரூபாய் கொடுத் தவுடன், அவள் அதிர்ந்து விட்டாள். இறைவன், தன்னை நாடியவருக்கு, எவ்வளவு பெரிய செல்வத்தையும், மிகச் சுலபமாக தருவான் என்பதை உணர்ந்து, தன் தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்டு திருந்தி விட்டாள். இப்போது, அவளும், அவளைப் போன்ற சில பெண்களும் சேர்ந்து, நீ கொடுத்த அந்த பணத்தில், தையல் மிஷின்களை வாங்கிப் போட்டு, உழைக்க ஆரம்பிச்சுட்டாங்க…”
அவன் கண்கள் பனித்தன; எதுவும் பேச முடியாமல், உதடுகள் துடித்தன. தொடர்ந்தார் பாதிரியார்…
“”அடுத்ததாய் அந்த திருடன்; எங்கெங்கோ திருடி, தன் குடும்பத்தை காப்பாற்றியவன், பாதி வருடம் ஜெயிலில் தான் இருப்பான். பணக்காரர்கள் என்றால் கெட்டவங்க; அவர்களிடமிருந்து பணம் பறிச்சாத் தான் உண்டு என்று நினைத்து வந்தவனை, உன் உதவி மாற்றி விட்டது. நீ கொடுத்த பணத்தில், ஒரு பெட்டிக் கடை வெச்சு, கவுரவமாக பிழைக்கிறான்.”
“”அந்த மூன்றாவது ஆள்…” என்று ஆர்வமாய் கேட்டான் ஜான்.
“”அவர் ஒரு செல்வந்தர்; ஆனால், கஞ்சன். யாருக்கும் ஒரு பைசா தர மாட்டார். அவருக்கே நீ ஒரு லட்சம் தந்தவுடன், அவருக்கு அதிர்ச்சி. பணத்திற்கு மதிப்பில்லையா என்று குழம்பியவர், நேற்று தான் என்னிடம் வந்து, நடந்ததை சொன்னார். அந்தப் பெண்ணுக்கும், திருடனுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை, நான் அவருக்கு சொன்னேன். அவர் ஒரு புதிய மனிதராக மாறினார்.
“”பணத்தை பெட்டியில் பூட்டி பயனில்லை; நாம் இறந்த பிறகு, செல்வம் கூடவே வரப் போவதில்லை; நாம் செய்த நற்செயல்கள் தான், உடன் வரும். வாழும் போதே உருப்படியான வழியில் பணத்தை செலவிடுவேன்… என்று, உறுதி கூறி சென்றார்…” என்று கூறி, ஜானையே பார்த்தார் பாதிரியார்.
“”என்ன பார்க்கறீங்க பாதர்?” என்றான்.
“”சந்தோஷத்தை உன் முகத்தில் பார்க்கிறேன்,” என்றார்!
– அப்சல் (ஜூன் 2011)
இந்த கதை இஸ்லாமிய நிகழ்வுகளில் வரும் நடந்த சம்பவம். இங்கு வேறு பெயர் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.