ஒரு ரூபாய்
கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 81
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று அவன் ‘பாங்க்’ போயாக வேண்டும். இதை அவன் ஒரு விதமான மனச் சங்கடத்துடன் நினைத்துக் கொள்ளக் காரணம், அவன் வீட்டிலிருந்து அந்த ‘பாங்க்’ பதினாறு மைல் தள்ளியிருந்தது. பாடம் சொல்லிக் கொடுக்கத்தான், வாரம் நாலு தடவை, பதினாறு மைல் பிரயாணம் செய்து யூனிவர்ஸிடி போக வேண்டியிருந்தது… அன்று ஓய்வு நாள், அன்றைக்கும் போக வேண்டுமென்றால்?
அவன் மனைவி கூறிவிட்டாள்: “ஆத்திலே ஒரு செல்லாக் காசு கூட இல்லே… பால்காரனுக்குக் கொடுக்கணும், பாட்டு வாத்தியாருக்குத் தரணும், அப்புறம் பேப்பர்க்காரன், அவனை நான் மறந்தே போயிட்டேன், முதல் வாரமே கொடுத்திருக்கணும், கொடுக்கலே; அப்புறம் ‘ஸி’ பிளாக்லே ஒரு பஞ்சாபிக்காரி எல்லோருக்கும் ‘பாடிக் டிஸைன்ஸ்’ சொல்லித் தராளாம், மாசம் முப்பத்தஞ்சு ரூபாதானாம். போகலாம்னுருக்கேன்” அவள் இருநூறு ரூபாய்க்குச் செலவு வைத்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. மூன்று நாட்களுக்கு முன்புதான் அவன் நானூறு ரூபாய் செக் ஒன்றை ‘டெபாஸிட்’ செய்திருக்கிறானென்று அவளுக்குத் தெரியும். யூனிவர்ஸிடியில் வாங்கும் சம்பளம் பத்து நாட்களுக்குத்தாம் இழுத்துப் பறித்துக் கொண்டு நிற்கிறது. அப்புறம் ‘கரிபி ஹட்டோ’ என்று இந்திரா காந்தியோடு சேர்ந்து கோஷம் போட வேண்டியதுதான். … நல்ல வேளை, அவன் பரீட்சை அதிகாரியாக இருந்ததற்கு பணம் இப்பொழுது சௌகர்யமாக வந்து சேர்ந்தது. இல்லாவிட்டால், அவன் என்ன செய்திருக்க முடியும்? என்ன செய்திருக்க முடியும்? நாடக பாணியாய் அவன் இதே கேள்வியை தனக்குள் இரண்டு, மூன்று தடவை கேட்டுக் கொண்டான். இது தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டிய சூழ்நிலையல்ல. இருந்தாலும் அப்படி எண்ணிப் பார்த்துத்தான் எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையினின்றும் தப்பித்தோம் என்று கற்பனை செய்வது அவனுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது.
நானூறு ரூபாய் இல்லாவிட்டால் அவன் என்ன செய்திருப்பான்? ஒன்று கடன் வாங்கியிருப்பான், அப்படி இல்லாவிட்டால், கொடுக்க வேண்டியவர்களுக்கு அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்லியிருப்பான். பழங்காலத்துக் கதா நாயகர்களுக்கு இருந்தது போல், இருப்பதா, இறப்பதா?’ என்ற பிரச்னையோ அல்லது உறவினர்களை போர்க்களத்தில் கொல்லலாமா, கூடாதா? என்ற எக்ஸிஸ்டின்ஷியலிஸ் விசாரமோ அவனைப் போன்ற ஜனநாயக உலகக் கதாநாயகர்களுக்கு இல்லை. இந்தச் சிறிய விவகாரங்களை பிரச்னையாக்கிக் கொண்டு, தீர்வில் சுகங்காணுவதுதான் மனத்துக்கு இதம் தருகின்றது… அற்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது…
அற்ப வாழ்க்கைதான்… பொருளாதாரத்தை வாழ்க்கையின் அடிப்படை மதிப்பாக ஏற்றுக் கொண்டு விட்ட சமூகச் சூழ்நிலையில், ‘வலிமையுடையது எஞ்சும்’ என்ற பாலபாடம் அறியாத அப்பாவிகளுடைய வாழ்க்கை வேறு எப்படி இருக்க முடியும்? அவன் மேஜை ‘ட்ராயரை’ இழுத்துப் பார்த்தான். நாலு ரூபாய் இருந்தது. யூனிவர்ஸிடிக்கு போவதற்கு இது போதும்… பஸ்ஸில் போய்விட்டு வந்தால், இரண்டு ரூபாய் மிஞ்சும்… அங்குதான் ‘பாங்கி’ல் பணம் வாங்கப் போகிறோமே, பையன்களுடன் முண்டியடித்துக் கொண்டு திரும்பி எதற்காக பஸ்ஸில் வரவேண்டும்? அவன் மணியைப் பார்த்தான். பன்னிரெண்டு. மை காட்!… இரண்டு மணிக்குள் ‘பாங்க்’ போக முடியுமா?
அவன் புறப்பட்டு ‘பஸ் ஸ்டாண்டி’ல் நின்றபோது மணி 12-30. நிறையப் பெண்கள் பலவிதமான உடை அலங்காரங்களுடன், பஸ் வருகைக்காகக் காத்துக் கொண்டு நின்றார்கள். பக்கத்திலிருந்த கல்லூரியில் படிக்கும் பெண்கள், சமீபத்தில் யூனிவர்ஸிடி தோட்டத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்த ஒரு மாணவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ‘கெடுத்திருக்க’ முடியாது என்பது அவர்கள் அபிப்பிராயம். அந்தப் பெண்ணைக் கண்டு அவர்களுக்குப் பொறாமையா அல்லது அந்தப் பையன்மீது அநுதாபமா என்ற அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.
பஸ்வரவில்லை… மணி 12-50. லாஜ்பத் நகருக்குப் போய், யூனிவர்ஸிடிக்கு நேரே செல்லும் ஒரு பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும்…இரண்டு மணிக்குள் போக முடியுமா? அப்பொழுது ஒரு ஆட்டோ-ரிக்ஷா வந்தது. அதை நிறுத்தி அதற்குள் ஏறி அமர்ந்தான்… “3 லாஜ்பத் நகர்…”
லாஜ்பத் நகருக்குப் போக ஒரு ரூபாய் ஆகலாம். அங்கிருந்து 57-ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்தால் யூனிவர்ஸிடிக்குப் போக 35 பைசா… 1-05க்கு ஒரு பஸ் இருக்கிறது. கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை… 1-05 பஸ்ஸைப் பிடிப்பதுதான் அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோள்.
லாஜ்பத் நகர் பஸ் ஸ்டாண்டில் ஒரு பெரியகூட்டம் பாம்பாக நீண்டு, வால் ‘லிங் ரோட்’ டை தொட்டுக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் குறிக்கோளை ஒரு ஐந்து நிமிஷப் பிரயாணத்தில் கைவிட வேண்டியிருக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை… இப்பொழுது என்ன செய்வது? கையிலிருந்ததோ மூன்று ரூபாய்… யூனிவர்ஸிடிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் போனால் ஐந்து ரூபாய் ஆகும். அவனை ‘பாங்க்’ வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு ‘பாங்க்’ கில் பணம் வாங்கிய பிறகு அவனுக்குக் கொடுக்கலாமா? அப்பொழுதுதான் அவனுக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.
‘செக்’ புஸ்தகம் புதிதாக வாங்கவேண்டும். போன வாரந்தான் ஒரு புது புஸ்தகம் வாங்கியிருந்தான். தொலைந்து போய்விட்டது. மானேஜரிடம் அசட்டுச் சிரிப்புடன் விஷயத்தைச் சொல்லி கடிதம் எழுதிக் கொடுத்து ஒரு புதுப் புஸ்தகம் வாங்க வேண்டும். அதுவரை ஆட்டோ-ரிக்ஷாக்காரன் காத்துக் கொண்டிருக்கமாட்டான்.
‘பாங்கு’க்கு நாளைக்குப் போனால் என்ன?…. ‘பாஸ்கரன், பாட்டுக்காரர், பேப்பர்காரன்…’ வீட்டுக்குப் போய் அவளை சமாளிக்க முடியாது. அப்பொழுது ஒரு மினி பஸ் வந்தது. மினி பஸ்ஸில் ஏறி சாந்தினி சௌக் வரை போய்விடலாம். எண்பது பைசா… அப்புறம் அங்கு போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.
மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினி செளக் போய்ச்சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர்மீது ஒருவராய் நிற்கும்போது, ஆண் – பெண் உணர்வு எங்கிருந்து வரும்? – காமத்தைக் கடக்க உதவும் மினி – பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமேயில்லை. அல்லது மினி – பஸ் கி.பி. 2000-ல் இருக்கப் போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையொன்று அடித்துக் கொண்டு சாகின்றன.
சாந்தினி சௌக்கைச் சென்றடைந்தபோது மணி 1-35. இனி மேல் யூனிவர்ஸிடிக்கு பஸ் கிடைத்து, பாங்குக்கு 2 மணிக்குள் போவது என்பது சாத்தியாமா? ஆட்டோ-ரிக்ஷாவில்தான் போக வேண்டும். அவன் எதிரே ஒன்று வந்து நின்றது. ‘ட்ரைவர்’ புன்னகை செய்தான். ‘உனக்கு டெலிபதி தெரியுமா?’ என்று ட்ரைவரை கேட்கலாமா என்று அவன் நினைத்தான். புன்னகை செய்தவன் அவனை ஏற்றிக் கொள்ளாமல் போய்விடலாம்… பைத்தியத்தை யார் ஏற்றிக் கொள்வார்கள்?…
அவன் ஆட்டோ-ரிக்ஷாவில் உட்கார்ந்தான். “மாரிஸ் நகர்.” இரண்டு ரூபாய், யூனிவர்ஸிடி போக, நாலு ரூபாயில் மீதி 20 பைசா. பண்டிட்ஜியிடம் ஒரு ‘பான்’ போட்டுக் கொள்ளலாம்… மீதி 5 பைசா.
பாங்கில் பணம் இல்லாவிட்டால்?… ஏன் இருக்காது?.. மூன்று நாட்களுக்கு முன்பு போட்ட ‘செக்’க்கு பணம் இன்னுமா வராமலிருக்கும்? அதுவும்உள்ளூர் பாங்க் செக்தான் – அவனுடைய பாங்க்தான், ‘ஸ்டேட் பாங்க்…’ -என்ன சுவாரஸ்யமான கற்பனை…! பிரதம் மந்திரியாயிருந்திருந்தால் சொந்தம் கொண்டாடலாம்… இதற்காக எத்தனை நாகர் வாலாக்களையும் தான் பலியிடத் தயார். முட்டாள்கள் கிடைத்தால் ஏன் பலியிடக்கூடாது?
‘பாங்க்’ வாசலில் போய் இறங்கியபோது மணி 1-50. இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. மிக விரைவாக உள்ளே சென்று மானேஜரை பார்த்தான்.
“மன்னிக்கவும்… என்னுடைய ‘செக் புஸ்தகம்’ தொலைந்து விட்டது… புதிதாக வேண்டும்.”
‘எத்தனை ‘செக்’ குகள் பாக்கி இருந்தன அந்தப் புஸ்தகத்தில்?”
”பதினேழு.”
“ஒரு விண்ணப்பம் எழுதி, எந்தெந்த நெம்பர் உடைய செக்குகளை நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று விவரம் எழுதி, அதோ ஹாலில், வழுக்கைத் தலையாக ஒருவர் உட்கார்ந் திருக்கிறாரே, அவரிடம் கொடுங்கள். ”
“விண்ணப்பம் எழுத ஒரு காகிதம் தரமுடியுமா?”
அவர் எடுத்துக் கொடுத்தார்.
”மன்னிக்கவும், பேனாவும் இல்லை…”
அவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். ஒன்றும் பேசவில்லை. மேஜை ட்ராயரில் தேடி ஒரு பால்பாய்ன்ட் பேனாவை கொடுத்தார். அவன் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விண்ணப்பத்தை எழுதினான்.
வழுக்கைத் தலை ஆசாமி விண்ணப்பத்தாளைப் படித்தார்.
“எங்கே தொலைந்தது?”
“எங்கே என்று தெரிந்திருந்தால், தொலைந்து விட்டது என்று முடிவுகட்டியிருக்க மாட்டேன்…’
“ஹாஸ்யமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்… எப்படித் தொலைந்தது என்பதையும் விளக்கமாக எழுத வேண்டும்.”
“துப்பறிந்து மறுபடியும் கண்டு பிடித்துத் தரப்போகிறீர்களா?”
“இதோபாருங்கள்… எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது…. ‘செக்’ புஸ்தகம் என்பது ஒரு முக்கியமான ‘டாக்குமென்ட்’. அது தொலைவதை நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது..”
“எனக்கும் விளையாட நேரமில்லை… எனக்கு இப்பொழுது அவசரமாகப் பணம் எடுத்தாக வேண்டும். பணம் இல்லாமல் வீட்டுக்குப் போக முடியாது.”
“எப்படி எடுக்க முடியும்… புது செக் புஸ்தகம் உங்களுக்கு ஒரு வாரம் கழித்துதான் தரப்படும்…”
“ஏன்?”
“இந்தக் கடிதத்தை அலுவலகத்தில் ஒட்டி வைப்போம். எல்லாப் பிரிவிலுள்ளவர்களுக்கும் இதுபற்றித் தெரிய வேண்டும். யார் கையில் இந்தப் புஸ்தகம் கிடைத்திருக்கிறதோ, அவன் இதைத் தவறான வழியில் பயன்படுத்தக் கூடாதல்லவா?”
“செய்தித் தாள்களில் பிரசுரிப்பீர்களா? என் கைவசம் என் ‘போட்டோ’ வேறு இல்லை, என்ன செய்யப் போகிறீர்கள்?”
அவர் அவன் கொடுத்த விண்ணப்பத்தாளை, மேஜையின் மீதிருந்த ‘ட்ரேயி’யில் போட்டார்… பெரிய லெட்ஜர் ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு கவனமாகப் பார்க்க ஆரம்பித்தார். அவர் ஏதாவது சூடாக பதில் சொல்லியிருந்தால்கூட அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவர் அலட்சியம் அவனுக்கு எரிச்சல் ஊட்டியது.
“எனக்கு இப்பொழுது பணம் வேண்டும். ‘
“மன்னிக்கவும்… உங்களுக்கு உதவி செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்.”
”ஒரு ‘வித்ட்ராயல் ஸ்லிப்’ கொடுங்கள்…”
“பாஸ்-புக் இருக்கிறதா?”
“இல்லை…”
“பாஸ்-புக் இல்லாமல் எப்படி ‘வித்ட்ரா’ பண்ண முடியும்?”
“நான் ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் என்பதை என் வீட்டில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கப் போகிற பால்காரனும், பேப்பர்காரனும் பாராட்டப் போவதில்லை…. இந்த நிலையிலும் பாஸ்-புக் அவசியம் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?”
லெட்ஜரில் எழுதிக் கொண்டிருந்தவர் நிறுத்திவிட்டு அவனை ஒரு கணம் நோக்கினார்.
”சரி… ‘வித்ட்ராயல் ஸ்லிப்’ எழுதி அந்தக் கிளார்க்கிடம் கொடுங்கள்…”
அவருக்கும் வீட்டில் அதே பிரச்னை இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றிற்று.
‘வித்ட்ராயல் ஸ்லிப்’பை வாங்கிக்கொண்டு ‘கிளார்க்’ ஒரு பெரிய நோட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.
“மன்னிக்கவும்… பணம் இல்லை… முப்பது ரூபாய்தான் இருக்கிறது.”
“மூன்று நாள் முன்பு நானூறு ரூபாய் டெபாஸிட் செய்தேன்.”
“பணம் வரவில்லை… அதோ அந்தக் – கவுண்டரில் போய் விசாரியுங்கள்.”
அவன் விசாரித்தான், பணம் வரவில்லை. அவன் ‘வித்ட்ராயல் ஸ்லிப்பை கிழித்தெறிந்தான்.
கையில் 20 பைசாதான் இருந்தது. எப்படி திரும்பிப் போவது?… யூனிவர்ஸிடியில் அவனுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. மூன்று நான்கு பேர்களைத்தான் பணம் கேட்க முடியும். அவர்கள் வரவில்லை என்றால்? – அவர்களுக்கும் இந்தச் சமயம் வகுப்பு இருப்பதாக அவனுக்கு நினைவில்லை… பதினாறு மைல் நடந்து போவது என்பது முடியாத காரியம்.
பண்ட்டிட்ஜியிடம் ‘பான்’ போட்டுக்கொண்டு, ஐந்து ரூபாய் கேட்கலாமா? அவன் கொடுக்கக்கூடும்… ஆனால் அவனை பார்க்கும் போதெல்லாம் பண்டிட்ஜிக்கு இந்த நினைவுதான் வரும்… 20 பைசாவை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எதற்கும் ‘பான்’ போட்டுக் கொள்ளலாமென்று அவனுக்குத் தோன்றிற்று.
“ஆயியே ப்ரோஃபஸர் சாப்..”
பண்டிட்ஜி முகமலர்ச்சியுடன் அவனை வரவேற்று ‘பானை’க் கொடுத்தான்.
‘துன்யா பஹுத் கராப் ஹை சாப்.’
அவன் இதற்குப் பதில் சொல்லாமல் புன்னகை செய்தான்.
பண்டிட்ஜியிடம் பையன்கள் கடன் வைத்துவிட்டு ஏமாற்றியிருக்கிறார்கள். இந்த சமயம் பார்த்தா பண்டிட்ஜி அவனிடம் இப்படிச் சொல்லவேண்டும. அப்படிச் சொன்னதும் நல்லதுதான். பண்டிட்ஜியிடம் கடன் வாங்கலாமா என்று அவனுக்கு ஏற்பட்ட சபலம் நீங்கிற்று.
“ஹல்லே, ஹள ஆர் யூ?”
அவன் திரும்பிப் பார்த்தான். டாக்டர் சௌத்திரி. அவனை ஏதோ ஸெமினாரில் சந்தித்திருக்கிறான். நிறைய படித்தவன்.
“வாருங்களேன், காப்பி சாப்பிடுவோம்” என்றான் சௌத்திரி. இவனைக் கேட்கலாமா?…. இரண்டாம் தடவை பார்த்தபோதே கடன் கேட்டால்?… அவனுக்குப் பசித்தது… காப்பி வாங்கித் தருகிறேன் என்கிறான்… ஏன் போகக்கூடாது-
அவர்கள் காப்பி ஹவுஸில் போய் உட்கார்ந்தார்கள்.
சௌத்திரி ‘சோஷல் ஃப்ராக் மென்டேஷன் ஆஃப் சொஸைட்டி’ என்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
“இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்றான் சௌத்திரி.
“பால்கனிஸேஷன் ஆஃப் லைஃப் என்று சொல்லலாமா?” என்றான் அவன்.
“சரியான வார்த்தை… நான் இது படிப்படியாக நிகழ்ந் திருக்கிறது என்று கருதுகிறேன்… மேனாடுகளில் நகரங்கள் ஏற்படத் தொடங்கியதிலிருந்து, தேசியக் கலாச்சாரங்கள், மறுமலர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி ஆகியவை பற்றிப் பிரக்ஞை பரவலாக உண்டானதிலிருந்து, இந்த ‘ஃப்ராக்மென்டேஷன்’ நிகழ்ந்திருக் கிறது… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“தொழிற்புரட்சிக்குப் பிறகு பொருளாதார அடிப்படையில் தான் வாழ்க்கை மதிப்புகள் கணிக்கப்பட வேண்டுமென்பதும், மத்தியதரக் குடும்பங்கள் பிரான்ஸில் ஏற்பட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஜனநாயக ரீதியாக கல்வி பரவத் தொடங்கியதும், மெடீவல் பண்பாட்டை சிதற வைத்திருக்கிறது.
Technology is the intervention of man in nature. மேலும் கடந்த ஐம்பது வருஷத்திய விஞ்ஞான முன்னேற்றம், மனிதனின் மனோதத்துவ அமைப்புக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்து, அவனை ஒரு பெரிய குழுப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.”
அவன்தான் படித்தவற்றையெல்லாம் ஒரு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டே போனான். அவன் பேசிக் கொண்டிருந்தது, அவனுக்கே ஆச்சர்யத்தைத் தந்தது. பையில் ஐந்து பைசாவை வைத்துக் கொண்டு என்ன சுகமாக ஒரு ‘மெண்டல் எஸ்கேபிஸம்’!… ‘ஃப்ராக் மெண்டேஷ’ னாம் புண்ணாக்காம்!
“நீங்கள் சொல்வது வாஸ்தவந்தான்… The insecure human being gives our epoch its physiognomy” என்றான் சௌத்திரி, ”நீட்சே என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா?”
“என்ன?”
“We have freed ourselves from the fear of reason, which was the spectre of the 18th century….. We once more dare to be childish, lyrical, absurd and in a way, we are musicians…”
“நிச்சயமாக; துன்பவியல் நாடகங்கள் அடிப்படையில், ‘காமிக்’ காக இருக்க வேண்டுமென்பதற்கும் இதுதான் காரணம். இதை எக்ஸிஸ்டென்ஷியல் காமெடி என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். Comedy is the logic of the absurd.”
“டோரத்தி ஸேயர்ஸ் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது…”
“என்ன?”
“The whole tragedy of futility is that it never succeeds in achiev- ing tragedy. In its blackest moment it is inevitable doomed to the comic gesture. அது கிடக்கட்டும்… என்னிடம் பணம் இல்லை… வீட்டுக்குத் திரும்பிப் போக ஒரு ரூபாய் வேண்டும்… தர முடியுமா?”
– சதங்கை தீபாவளி மலர் 1973.
– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
| இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
கமலாவின் தோழிகள்!
ரகுராமன் சீனிவாசன்
August 13, 2026
துன்னல்
நாஞ்சில்நாடன்
August 13, 2026