ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மாமரம், இலைகளால் கண்ணீர் விட்டது.காய்களால் மாரடித்தது. பூக்களால் புலம்பியது. பின்னர் வலியின் உச்சத்தால், உணர்வுகள் மரத்துப் போக, உடலெங்கும் துளை போடும் மரங்கொத்திப் பறவைகளை, பாதி மயக்கத்தில், பட்டும் படாமலும் பார்த்தது. ஆனால், அந்த மரங்கொத்திகளோ,ஆப்பு போன்ற தம் அலகால், அந்த மரத்தை .அங்கு, இங்கு எனாதபடி. எங்கும் குத்திக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன. துளை போட்ட இடங்களை அலகுகளால் அங்குமிங்குமாய் தட்டி, அந்த மரத்தின் மரணத்திற்கு இழவு மேளச் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தன.
ஒரு காலத்தில், இந்த மாமரத்திற்கே, இந்த மரங் கொத்திகளின் கவர்ச்சியான தோற்றத்தில், ஒரு கிறக்கம் ஏற்பட்டதுண்டு. இவற்றின் தங்க நிற முதுகும், இடை யிடையே கருப்புக் கோடுகளும், இந்த மாமரத்தை வியக்க வைத்திருக்கின்றன. இதன் முதுகு வண்ணத்திற்கு இணை சேர்ப்பது போன்ற கூர்மையான அலகும், வெளுத்த மஞ்சள் உடம்பும், செஞ்சிவப்பு பிரடிக் கொண்டையும், கவுண் கம்பு போன்ற வாலும், வாலடியில் இரத்தச் சிவப்பு புள்ளிகளும், இந்த மரத்தை, இந்த மரங் கொத்திகளை அண்ணாந்து பார்க்க வைத்தது. ஆனால் இப்போதோ-
அந்த அழகான வண்ணத் தோப்பில், தென் கிழக்கு கோடியில் உள்ள இந்த மாமரம், வதைபட்டுக் கொண் டிருக்கிறது. எந்த மரங் கொத்திகள், தன்னை, பூச்சி, புழுக்களில் இருந்து காப்பாற்றும் என்று நினைத்ததோ, அதே மரங் கொத்திகள், அந்த மரத்தின் அனைத்து பகுதிகளையும் சல்லடையாக்கி விட்டன. அடிவாரத்திலும், கிளைகளிலும் முதலில் துளைகள் போட்டன. பின்னர் அந்த துளைகளைப் பொந்துகளாக்கின. பொந்துகளை, சுரங்கங்களாய் குடைந் தன. இந்த சுரங்கங்களிலும் சில, அந்த மரத்தின் மறு முனையை கிழித்து விட்டன. அப்படியும் திருப்தி அடையாத மரங்கொத்திகள், ஒவ்வொரு சுரங்கத்தின் மேல் பகுதி யையும், கீழ் பகுதியையும், அலகுகளால் கொத்திக் கொத்தி, நீக்குப் போக்கான முன் நாக்கால் கழிவுகளை வெளியே எடுத்துப் போட்டன. அதிலுள்ள பூச்சி புழுக்களை தின்று காட்டின…
அந்த மாமரத்திற்கு, கால்களான வேர்கள் அற்றுப் போவது போன்ற பிராண வலி. அடிவாரமும், கிளைகளும் வலிப்பு வந்ததுபோல் வெட்டிக் கொண்டன. இதனால், அதற்கு மரண பயம் ஏற்பட்டது. அந்த அச்சத்தில், தனது அடிவாரத்தில், வாலை மூன்றாவது கால்போல் ஊன்றிக் கொண்டு, தத்தித் தத்தி மேலே வந்த தலைமை மரங்கொத்தியிடம், கிளைக் கரங்களை வளைத்து கும்பிட்டபடியே மாமரம் மன்றாடியது.
“..என்னை விட்டுவிடு மரங்கொத்தியே விட்டு விடு… நீ போடுவதோ மூன்று முட்டை. அதற்கு சிறு பொந்தே போதும், இப்படியா என்னை உடம்பெங்கும் பொந்து களாக்கி சித்திரவதை செய்ய வேண்டும்? அடியற்றுப் போனேன். செயலற்று தவிக்கிறேன். உன்னை விரும்பி ஏற்ற என்னை இப்படி வதைக்கலாமா? நான் இருந்தால் தானே நீ வாழ முடியும்? பதில் சொல் மரங்கொத்தி பதில் சொல்…”
“தொண்டு” மரங்கொத்திகளின் ‘தூய’ பணியை பாராட்டுவதற்காக மேலே எம்பிய அந்த தலைமை மரங் கொத்தி, அந்த மாமரத்தின் அடிவாரத்தில் உள்ள ஒரு பொந்தின் விளிம்பை கால்களால் பற்றியபடியே, அந்த மரத்திற்கு எகத்தாளமாக பதில் அளித்தது.
“ஏய் மாமரமே! உன்னுடைய பாரம்பரியம் என்ன.. பண்பாடு என்ன… நீ, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த மரம்… முக்கனிகளில் முக்கிய கனியின் தாயகம்… கோவில் கும்பத்திலும், மங்கல நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை பெறும் இலைகளை ஈன்றெடுத்த மரம் நீ… என் முதுகைப் போலவே மின்னும் மாந்தளிரின் பிறப்பிடம் நீ…வடபுலத்து முரட்டு மரங்களை வென்ற மரம்… தென் மேற்கு தென்னையையும், நேர் மேற்கு பாக்கு மரத்தையும், ஆண்ட மரம் நீ… நீயா இப்படிப் புலம்புவது? உன்னை வதைப்படுத்திய மண் புழுக்களையும், பூச்சிகளையும் என் கூட்டத்தில் ஒவ்வொன்றும் மணிக்கு ஆயிரத்து இரு நூறுவீதம் கொத்திக் கொத்திக் கொன்று தீர்த்துள்ளன… என்னிடம் இருப்பவை நூற்று அறுபத்தைந்து மரங்கொத் திகள்… இவை ஒவ்வொன்றிற்கும் சின்ன வீடு, வளர்ப்புப் பிள்ளை, சொந்தப் பிள்ளை என்று ஐந்து தேறும். அவை யனைத்தும், ஒவ்வொன்றாய் நான் குறிப்பிட்ட மணி வேகத்தில் பூச்சிகளைத் தின்கின்றன… அப்படியானால் எத்தனை பூச்சிகளிடமிருந்து உன்னை காப்பாற்றியிருக் கிறோம்… நீயே கணக்குப் போட்டுப் பார்…”
அந்த மாமரம், தன்னை அசத்திய அந்த மரங்கொத்தியைப் பார்த்து, லேசாய் அசந்து போனது உண்மைதான். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, இப்படிப் பதில் அளித்தது.
“நீ சொன்னது பறவையியல் நிபுணர் கருத்து. நான் சொல்லப் போவதோ, தாவர விஞ்ஞானி கருத்து. உங்களில் ஒவ்வொரு மரங் கொத்தியும், மணிக்கு ஆறாயிரம் பட்டைத் துண்டு களை என்னிடமிருந்து பிய்க்கிறது… இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் எவ்வளவு பட்டைகளை உரித்திருப்பீர்கள்? நீயே கணக்குப் போட்டுப் பார்… தலைமை மரங்கொத்தியே”
துளை போட்டுக் கொண்டிருந்த, தொண்டு மரங் கொத்திகள், அந்தச் சுரண்டலை விட்டு விட்டு, “எங்கள் தலைவியையா எதிர்த்துப் பேசுகிறாய்” என்று கடிந்து பேசி, அந்த மரத்தின் மாம்பழங்களை பிய்த்துப் போட்டன… காய்களைக் குத்தின… இலைகளை பிடுங்கி எறிந்தன… பூக்களை கசக்கின.
தலைமை மரங் கொத்தியோ, அவற்றைக் கண்டுக்காமல், அந்த மாமரத்திற்கு, தான் செய்த அரும்பெரும் பணிகளை சொல்லிக் காட்டியது.
“உனக்குச் சிறிதேனும் நன்றி இருக்கிறதா மாமரமே.? உன் உச்சிக் கிளைக்கு ‘ஆகாயம் துழாவி’ என்று பெயர் வைத்தது நான்… உன் வலது கிளைக்கு ‘பூமி துழாவி’ என்று பெயர் வைத்ததும் நான்… உன் அடிவாரத்திற்கு “மாண்புமிகு மரங்கொத்தி தாங்கி” என்று பெயர் வைத்து, உன்னை இந்தத் தோப்பறியச் செய்திருக்கிறேன். இனிமேல் உன்னுடைய ஒவ்வொரு கொப்புக்கும் எவர் வாயிலும் நுழைய முடியாத புதுமையான பெயர்களைச் சூட்டப் போகிறேன்…
மாமரம் பதறிப் பதறி மன்றாடியது.
“வைத்தது போதும் மரங் கொத்தியே… என் கிளைகள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளும் மர்மம், இப்பொழு தான் எனக்குப் புரிகிறது. யார் உயரம் என்று என் முட்டாள் கிளைகள் போடும் அடிதடி என் கொப்புகளுக்கும் வந்துவிடக் கூடாது.” இது வருவதற்கு முன்பே, நீ வெளியேற நீ வேண்டும்…”
அந்த தலைமை மரங்கொத்தியின் கண்கள் சிவந்தன. அலகுகள் துடித்தன… கத்திக் கத்தி பதிலடி கொடுத்தது.
”நான் வெளியேறி விடுவேன் என்று பகல் கனவு காணாதே… உலகப் பறவைகளிலே சிறந்த பறவை என்று பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சாதாரணப் பறவை அல்ல… தெய்வப் பறவை என்பதைப் புரிந்து கொள்… இதோ இந்த தோப்பின் வடக்குப் பக்கம் மலைப் பாங்கான உச்சியில்,பறவைகளைப் பரிபாலனம் செய்யும் பறவை களின் அரசான ராசாளி, என்னைப் பகைப் பார்வையாய் பார்ப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், அது என் குடும்பத் தோழன். இதை விரட்டி விட்டு பரிபாலனத்திற்கு வர நினைக்கும், ‘பக்திப் பரவசமான’ கருடனும் எனக்கு நெருக்கமான நண்பன்… இந்த இரண்டையும் துரத்திவிட்டு கூட்டணி பரிபாலனம் செய்வதற்காக ஆயத்தம் செய்யும், ‘ஏழு சகோதரிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் காட்டு பூணிக் குருவிகளும் என்னைக் காப்பதாய் வாக்களித்திருக்கும்போது, உன்னை நீ எப்படிக் காப்பாற்ற முடியும்? காற்று என் பக்கம்… கடலும் என் பக்கம்… நிலமும் என் பக்கம்…நீ அடங்கிப் போகவில்லையானால், நான் புயலாவேன்… பூகம்பம் ஆவேன். எச்சரிக்கை… எச்சரிக்கை… இறுதி எச்சரிக்கை”.
தலைமை மரங் கொத்தி, இறக்கைகளை அடித்து, உயரே எம்பி, மேலும், கீழுமாய் வளைவும் சாய்வுமாய் பறந்து, அடித்த இறக்கைகளை நிறுத்தி, அப்புறம் மீண்டும் அடித்து அந்த மரத்திற்கு மேல் ஆல வட்டம் போட்டது… தொண்டு பறவைகளும், தாங்களும் ஆத்திரப்பட்டதாகக் காட்டிக் கொள்ள, அந்த மாமரத்தின் பொந்துகளை பலமாய்க் குத்தின… சில அந்த மாமரத்திற்காக அழுது கொண்டே கொத்தின…
வேதனை தாங்காது, விம்மிப் புடைத்த அந்த மாமரத்திற்கு விரக்தி ஏற்பட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல் அந்த தோப்பைச் சுற்றுமுற்றும் பார்த்தது… அப்படி பார்க்கப் பார்க்க, வயிறு பற்றி எரிந்தது… கண்கள் ஏக்கமாயின… வேர்க்கால்கள் தடுமாறின…
இந்தத் தோப்பு விசித்திரமான, வித்தியாசமான தோப்பு… எல்லாம் அடங்கிய தாவர சங்கமத்தின் ஏகப் பிரதிநிதி இருபது வகைக்கும் அதிகமான தாவர ரகங்களைக் கொண்டது… இடையிடையே புல்வெளிகள்… பாலை நிலங்கள்…நீர் நிலைகள்… மலைப் பகுதிகள்… சதுப்பு நிலங்கள்…சூரியனை உள்ளே விடாத காடுகள்… சொல்லின் செல்வர் சத்தியமூர்த்தி சொன்னதுபோல், ஒரே மாதிரியான கழுதைத்தனமாய் இல்லாமல், பல்வேறு வித குதிரைத் தனமானவை… ஒரு கட்டை விரல் பருமனுள்ள ரீங்காரப் பறவை முதல், நிமிர்ந்தால் குதிரை மட்டத்தை எட்டும் தீக்கோழி உள்ளிட்ட இருபத்தேழு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்தி இருநூறு வகை பறவைகளைக் கொண்ட குட்டி பூமி… இந்த மாமரத்திற்கு தென் மேற்கே மைனாக் கால்களைப் போல் மட்டை கொண்ட பச்சை ஓலைகளைச் சுமக்கும் ஒயிலான தென்னை மரம்… தென் மேற்கு, வட கிழக்கு ஆகிய இரண்டு பருவக் காற்றுகள் தவிர, எந்தக் கொம்பன் காற்றுக்கும் ஆடாத தென்னை… இதன் அடிவாரத்தில் மொட்டைத் தலையும், மார்பில் தொங்கு சதையும் கொண்ட பெரு நாரைகள்… ஆகாய விமானம் அடித்தளத்தில் ஓடுவதுபோல் ஓடி இறக்கைகளை அடித்தபடியே மேலே எம்பும் இந்த பெரு நாரைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்று கடைசி காலம் வரை வாழ்பவை… இந்த தென்னைக்கு வடக்குப் பக்கம் உள்ள பாக்கு மரம் கிளைகள், விழுதுகள் என்ற ‘பாரம்பரிய பெருமை’ இல்லாததுதான்… ஆனாலும் எந்த கூத்தாடிப் பறவையும் கூடு கட்ட முடியாமல் நேராய் நிமிர்ந்து நிற்கும் மரம்… இந்த மாமரத்திற்கு வடகிழக்கே உள்ள அத்தி மரத்தில் வாழும் பச்சைப் புறாக்களில் ஆண்கள், பெண் புறாக்களைக் கவர்வதற்காக ஒற்றைக் காலில் நின்று கரகம் ஆடுகின்றன… ஒரு பூனை, மரம் ஏறுவதைப் பார்த்ததும், அந்த அத்தி இலைகளோடு இலையாக, தலைகளாய்த் தொங்கி அசைவற் றுக் கிடக்கின்றது…
இந்தப் பச்சைப் புறாக்களுக்கும், அத்திக்குமுள்ள உறவைப் பார்த்த மாமரம், சுய இரக்கம் கொண்டது. அதை மறப்பது போல் துக்கித்து, உச்சியைத் தாழ்த்தியது… பின்னர் மீண்டும் சுற்று முற்றும் பார்த்தது…
வடகிழக்கு மூலையிலுள்ள கரு வேலமரத்தில், தூக்கணாங் குருவிக் கூடுகள் தொங்குகின்றன… குருவிப் பெண்களை வசியப்படுத்த ஆண் குருவிகள், அந்தக் கூடுகளை அழகியலோடு உருவாக்குகின்றன. வடமேற்கு மூலையில், செம்மண் நிறங் கொண்ட வானம்பாடிகள்,புல் மூடிய கூழாங்கல் கூட்டிலிருந்து எழுந்து, கானம் இசைக் கின்றன…மத்திய பகுதியிலுள்ள முரட்டுத்தனமான சோற் றுக் கற்றாழையின் கழுத்துப் பக்கம் ஒரு உள்ளான் குருவி கூடுகட்டி வசிக்கிறது… மாட்டின் குமிழ் போன்ற தோப்புப் பகுதிக்கு அடுத்துள்ள பாலைப் பகுதியில் ஒரு ஒட்டகப் பறவை புதர்ச் செடிகளுக்குள் பயபக்தியோடு போகிறது… அவ்வளவு ஏன்… இதோ இந்த மாமரத்திற்கு அருகேயுள்ள நீர் நிலையில் குவளைச் செடிகளை வளைத்துக் கட்டிய கூட்டில் உள்ள ஒரு ஊதா நிற மயில் கோழி, ஒரு செடியை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, தன் பெட்டையைப் பார்த்து வணங்குகிறது… இதே இனத்தைச் சேர்ந்த மஞ்சள் நிற மணற் கோழி, நீர் நிலைகளில் வயிற்று இறக்கைகளை ஈரமாக்கி, கட்டாந்தரையிலுள்ள கூட்டருகே வருகிறது… அங்குள்ள குஞ்சுகள், தாயின் இறக்கைகளை நக்கித் தாகம் தணிக்கின்றன.
தாவரங்களை விட்டுவிட்டு, தரையில் கூடு கட்டும் இந்த பறவையைப் பார்த்து தவித்த இந்த மாமரத்திற்கும் ஒரு சின்ன ஆறுதல்… நேராய் வடக்கேயுள்ள, ஒரு முள் முருங்கை… கனத்த அலகுகளையும், அதன் அடிவாரத்தில் குத்து மீசையும் கொண்ட கண்ணான் பறவைகள் ‘குடும்ப சகிதமாய்… அந்த மரத்தையும் துளை போடுகின்றன. இவற்றை துரத்திவிட்டு அங்கே போவதற்காக இன்னொரு வகையான பெரிய பச்சைக் கண்ணான் பறவை ஒரு விதவை போல் துடி துடித்து பரபரக்கிறது…
இந்தச் சுமயத்தில் ‘பறவைகளின் காவல்காரன்’ என்று கருதப்படும் கரிச்சான் குருவி, விளையாட்டாக நாய் போலவும், நரி போலவும், பூனை போலவும் குரலை மாற்றி மாற்றிக் கத்துகிறது… இதனால் முள் முருங்கையைக் குடையும் கண்ணான் பறவைகள் பதுங்குகின்றன…
இந்த மாமரம், தனக்கு இப்படி ஒரு கரிச்சான் இல்லையே என்று ஏங்கியது, இந்த கரிச்சானைப் போல் இல்லாது. எங்கிருந்தோ வந்த இன்னொரு வகைக் கரிச்சானின் அடாவடியால்தான், இந்த மரங்கொத்திகள் தன் உடம்பில் ஏறின என்பதை நினைத்து, நினைத்து நெஞ்சம் குமுறியது.. எதையும் பார்க்க முடியாமல் கண்களை மூடியது.. சிறிது நேரம் கழித்து கண் திறந்தால், கண்ணெதிரே பல்வேறு வகையான பறவைகள்… ‘சீசன்’ வந்துவிட்டதால் பழைய இறகுகளை உதிர்த்து விட்டு, உடம்பிலுள்ள திரவச் சுரப்பிக் கசிவால் அந்த இறக்கைகளை கழுவி விட்டு, புத்தம் புது பொலிவோடு தோன்றின.
“இப்போதுதான் உங்களுக்கு, கண் தெரிந்ததா…” என்று விம்மலுக்கிடையே கேட்ட மாமரம், அப்படிக் கேட்டுவிட்டு அழுதது… பிறகு எதிரேயுள்ள பறவைகளைப் பார்க்கப் பார்க்க, அதற்கு ஆறுதல் ஏற்பட்டது.
ஒரு பக்கம் குயில் கூட்டம்… காக்கா ஒல்லியானது போன்ற தோற்றம்… இந்த மாமரத்தில் வாழ்ந்த குயில் கள்தான் இவை… தொலைவில் இந்த தோப்புக்குச் சொந்த மில்லாத ‘குண்டு’ கரிச்சான்களை ஆதரித்த குற்றத்திற்காக மரங்கொத்திகளாலும், மயில்களாலும் விரட்டப்பட்டவை.. இந்தக் குயில் கூட்டத்தின் பக்கம் ஒரு சர்வதேசப் பறவை.. இன்னொரு பக்கம் இதே குயிலினத்தில் ஒன்றானதும், சொந்தமாய் கூடுகட்டத் தெரிந்ததுமான செம்போத்துப் பறவைக் கூட்டம்… இதற்கும் பக்கபலமாக இன்னொரு சர்வதேசப் பறவை… இந்த இரண்டு கூட்டத்திற்கும் மத்தியில் தேசியப் பறவையான மயில் கூட்டம்.
இந்த மாமரம் அந்த பறவைக் கூட்டங்களை ஒரே இனமாகக் கருதி முறையிட்டது.
“இந்த மரங்கொத்திகள் என்னைப் படுத்துகிறபாடு உங்கள் கண்களில் படவில்லையா” என் புலம்பலோ உங்கள் காதுகளில் ஏறவில்லையா… உங்கள் பொது எதிரியான இந்த மரங்கொத்திகளை துரத்துங்கள்… உங்களை நான் சுமக்கத் தயாராக இருக்கிறேன்… அதற்கு முன் ஒன்றாகச் சேருங்கள்”…
செம்பாக்கு நிற இறக்கைகளைக் கொண்ட செம்போத்துப் பறவை மாமரத்திற்கு இப்படி பதில் அளித்தது…
“யார் கூடச் சேர்ந்தாலும் இந்த கபடமான குயில் கூட சேரமாட்டேன்… இதோ இந்த கிழட்டுக் குயில் தனக்கு, சொந்தமில்லாத காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, காக்கையாலேயே தன் குயில் குஞ்சை பிறக்க வைத்தது… அந்தக் குயில் குஞ்சும் காகத்தின் சொந்தக் குஞ்சுகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிப் போட்டுவிட்டது… காகக் குஞ்சுகள் செத்ததும், இந்தக் குயில் குஞ்சு அரங்கத்திற்கு வந்ததும்தான் மிச்சம்… இந்த கிழட்டுக் குயிலுக்கு, உன்னிடம், தான் உட்கார வேண்டுமென்பதைவிட, தன் குஞ்சை உட்கார வைக்க வேண்டுமென்பதே நோக்கம் இதைவிட அந்த மரங்கொத்தியே பரவாயில்லை”…
மாமரம் ஏதோ பேசப் போனபோது அதை இடைமறித்து, தலைமைக் குயில் பேசிற்று.
“இந்த துரோகி செம்போத்தை நம்பாதே மாமரமே.. இது செய்த பாவங்களுக்கெல்லாம், நான் பழி சுமந்தேன். சுமக்கிறேன்… இதற்கு உன்னையும் பிடிக்காது… என்னையும் பிடிக்காது…இதற்குப் பிடித்ததெல்லாம் தொலைவாய் உள்ள ஏரித் தீவில் வாழும் ‘குண்டு கரிச்சான்தான்’ பல குரலில் இசைக்கும் திறமை மிக்க இந்த செம்போத்து, குண்டு கரிச்சான் குரலை மட்டுமே ஒலிக்கிறது… இதைவிட அந்த மரங்கொத்தியே இருந்துவிட்டுப் போகலாம்”…
அந்த மாமரம் இப்போது தன் கொப்புகளையும், இலைகளையும் குறுக்கி நின்றது. இதைப் பார்க்க சகிக்காத தேசியப் பறவையான மயில் மரத்திற்கு ஆறுதல் சொன்னது.
‘கவலைப்படாதே மாமரமே! உன்னுடைய இந்த நிலைமைக்கு நாங்களும் காரணம்… இதற்கு பிராயச் சித்தமாக எங்கள் தலைமை மயிலை பறவைகளின் அரசான ராசாளியிடம் அனுப்பி இருக்கிறோம்… அந்த ராசாளி, இதோ வரப் போகிறது… சர்க்கஸில் விளையாட்டாகத் துப்பாக்கி சுடுமே பச்சைக் கிளி, அதன் உதவியோடு, இந்தப் பறவைகளையும், அந்த மரங்கொத்திகளையும் ஒழித்துக் கட்டும்”…
அந்த மாமரம், மயில்களை நன்றியோடு பார்த்தபோது, அதன் மேனியில் மரங்கொத்திகள் ஒதுக்கீடு செய்த ஒரு நல்ல சுரங்கத்தில் ஜம்மென்று உட்கார்ந்துள்ள பகல் குருடன் ஆன ஆந்தை, அந்த சுரங்கப் பொந்துக்கு வெளியே முகத்தை மட்டும் நீட்டி கண்களை உருட்டி எச்சரித்தது….
“இந்த மரத்தை பொந்துகளாக்கி சமூக நீதி காக்கும் மரங்கொத்தியை துரத்தி விடலாமென்று மனப்பால் குடிக்காதீர்கள்… பறவைகளின் இனமானம் காக்கும் நான் இந்த ஆளும் பறவையின் விசுவாசி… அதன் கேடயம்.. எச்சரிக்கிறேன்”
அந்த மாமரத்தின் எதிரே அணியணியாய், தனித்தனியாய் நின்ற பறவைகள், அந்த ஆந்தையைப் பார்த்து எள்ளி நகைத்தபோது, அந்த மரமோ, வடதிசை நோக்கி கண் போட்டது… அங்கே தூக்கலான இடத்திலுள்ள ராமசாளிக்காக காத்திருந்தது.
ராசாளி வரவில்லை… ஆனாலும் அந்த ராசளி அங்கிருந்த படியே எல்லாபறவைகளுக்கும் கேட்கும்படி தனது முடிவை கத்திக் கத்தி சொன்னது…
“ஏய்… அற்ப மாமரமே… அந்த மரங்கொத்திகள் என் மரியாதைக்குரிய குடும்ப நண்பர்கள்… அவைகளை மரியாதையாய் கொத்தவிடு… அதுவும் சூட்கேஸ் வடிவத்தில் சுரங்கம் போடவிடு”
ராசாளியின் இந்த கொந்தளிப்பில், நடுவில் நின்ற மயில்களில் சில அந்த மரத்திலேறி, மரங்கொத்திகள் கொத்துவதற்கு துணை புரிந்தன… பல மயில்கள் குயிலின் அணியில் சேர்ந்து கொண்டன… ஒரு சில பறவைகள் அங்கும் இங்குமாய் அலைமோதின. ஒரே குழப்பம் ஒரே சண்டை…
ஆனால், ஆடி அடங்கிப் போனது அந்த மாமரம்தான்… எதிரேயுள்ள தன்னைக் காக்கவேண்டிய பறவைகளோ, ஒன்றை யொன்று கொத்திக் கொள்கின்றன… மரங் கொத்திகளோடு சண்டை போடுவதைவிட, இந்தச் சண்டை அவைகளுக்கு சுவையாக இருந்தது… இதற்குள், ராசாளி ‘கை’ கொடுத்து விட்டதாலும், சில மயில்கள் சேர்ந்து விட்டதாலும், இடையில் ஓய்வெடுத்த மரங்கொத்திகள், முன்னிலும் வேகமாக அந்த மரத்தை கொத்தித் துளைத்தன. சீசன் முடியும் முன்னால் கொத்த வேண்டிய மிச்ச மீதியை, கொத்திவிட வேண்டுமென்ற வேகம்…
ஒரு தொழு நோயாளியைப் போல், அடிவாரம், கிளைகள், கொப்புகள் என்று அத்தனையிலும் கொப்பளங்களாகவும், பட்டை போன சதைகளாகவும், சதைபோன எலும்பு களாகவும் தோன்றும் அந்த மாமரம், கண் முன்னாலேயே போரிடும் அந்த இருபெரும் பறவை அணிகளை பார்க்க மனமில்லாது, தென் மேற்கேயுள்ள தென்னை மரத்தை அழுது அழுது பார்த்தது… ஆறுதல் தேடி கேட்டது…
“ஒரு காலத்தில் எல்லா மரங்களையும் ஆண்ட, பரம்பரையில் வந்த எனக்கு, ஏற்பட்ட கதியைப் பார்த்தாயா தென்னை நண்பனே”…
‘தோழமைக்கு’ பெயர் போன அந்த தென்னையும் ஆற்றுப் படுத்தியது.
“மாமரத் தோழா! மாமரத் தோழா!!. நான் சொல்லப் போகிற சில கசப்பான உண்மைகளை கவனமாகக் கேள்… பழம்பெருமை பேசிப் பேசியே பத்தாம் பசலியாய் ஆகிப் போன மரம் நீ… தாவரங்களிலே இளிச்சவாய் மரம் ஒன்று உண்டு என்றால், அது நீதான் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை… எந்த வகை மரத்திடமும் இல்லாத அளவுக்கு, இருபத்தோரு உயிரினங்கள் உன்னை இம்சிக்கின்றன… உன் பூவுக்குள் பூச்சிகள் முட்டையிட்டு, அவை மாம்பழத்திற் குள்ளும், அதன் கொட்டைக்குள்ளும், பூச்சிகளாய் உருமாறி, பழத்தை அழுக வைப்பதும் கொட்டையை பேடியாக் குவதும், உனக்குப் புரியுமா… மாவிலைத் தோரணம் என்று, நீ தம்பட்டமடிக்கும், உன் இலைகளின் பின்பக்கம் கொப்பளம் கொப்பளமாக இருப்பவை பற்றி அறிவாயா… அவற்றிற்குள், பூச்சிப் புழுக்கள் கூடு கட்டி, உன் இலைச்சத்தை உறிஞ்சுவதை கண்டாயா… பூஞ்செயான காளான்கள் புற்று நோய் போல், உன் உடம்புக்குள் ஊடுருவி, உட் பகுதியை உச்சி முதல் பாதம் வரை செல்லரிக்கச் செய்ததை உணர்ந்தாயா… இல்லாதவன் பெண்டாட்டி எல்லோருக்கும் அண்ணி என்ற மனிதப் பழமொழிக்கு தாவர உதாரணம் நீ… உன்னை, கொத்தும் இந்த மரங்கொத்திகளால் என்னையோ, அதோ அந்த பாக்கு மரத்தையோ கொத்திப் பார்க்க வரச் சொல் பார்க்கலாம்… அலகை உடைத்து விட மாட்டோமா… ஏற்கெனவே பலவீனப்பட்ட உன்னை அந்த மரங்கொத்திகளால் கொல்ல முடிகிறது… ஏற்கெனவே கொல்லப்பட்ட கர்ணனை அர்ச்சுனன் கொன்ற கதைதான்”…
“இன்னொன்றையும் கேட்டுக் கொள் தோழா! எஞ்சிய பறவைகளின் சண்டையால், அந்த மரங்கொத்திகளே மீண்டும் உன்னிடம் வரலாம்… உன்னை ஆக்கிரமிக்கலாம்… ஒரு வேளை தனிப் பெரும் எண்ணிக்கையில் வந்தால், மற்ற பறவைகளை விலைக்கு வாங்கலாம்… இந்தக் குயில்கள் தள்ளி வைக்கப்பட்ட மயில்களோடு, உன்னை ஏற்றுக் கொண்டால், அடித்துப் பிடித்து பறவை பரிபாலனத்திற்கு ஒரு வேளை வரக் கூடிய அந்த ராசாளி, குயில் அணியை துரத்திவிட்டு, மீண்டும் மரங்கொத்திகளை மரமேற விடாது என்பது என்ன நிச்சயம்?”. இது போய், கருடன் வந்தாலும், அல்லது ஏழு சகோதரிகள் வந்தாலும், அவையும், ராசாளி போலவே நடந்து கொள்ளலாம்”…
அந்த மாமரம் நடுங்கிப் போனது… புதிய உண்மைகள் தெரியத் தெரிய, அது விம்மி, விம்மிக் கேட்டது
“அப்போ… என் கதி… நான் என்ன ஆவது…?”
“பயப்படாதே தோழனே… முதலில் உன் நோயாளித் தனத்தை ஒப்புக் கொள்… மருந்து தானாக கிடைக்கும்… உன் இளிச்சவாய் தனத்தை புரிந்து கொள்… பகுத்தறிவு உடனே வரும்… பழமையை திரும்பிப் பார்…ஆனால் அதில் திரும்பி நடக்காதே… புதுமை வந்து பொருந்தும்… இந்த தோப்பை விட உன்னைப் பெரிதாக நினைக்கும் மனோ வியாதியை போக்க, பிற மரங்களோடு ஒப்புறவை நாடு… அசுர பலம், தேவ பலம் அத்தனையும் கிடைக்கும்… எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது நடப்பது பறவைகளின் ஜனநாயகமே அன்றி, நமது ஜனநாயகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்… பறவைகளிலும் நம் நண்பர்கள் இருக்கிறார்களா… பறவைகள் இல்லாமல் நம் தாவர இனம் பெருகாதுதான்… ஆனால் அந்தப் பறவைகளுக்கு, ஏறிக் கொள்ளும், சுதந்திரம் இருப்பது போல், அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற சுதந்திரம் நமக்கில்லை… நம் மீது திணிக்கப்படும் பறவைகளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய இயலாமைச் சுதந்திரம்… ஆகையால் தாவரங்களின் ஜனநாயகத் திற்காகப் போராடு… போராடப் போராட உன்பலம் உனக்கே தெரியும்… பறவைகளின் கால்களுக்குப் பதிலாக, உன் வேர்களை நம்பு… அப்படி நம்ப, நம்ப, எந்த அக்கிரமப் பறவையும், அனுகூலச் சத்துரு பறவையும் உன்னை அண்ட முடியாது. தோழனே. என்னைப் பார்த்தாவது கற்றுக் கொள்… என் சகோதரா…”
கோணையாக இருந்தாலும், கேணையாகப்போகாத அந்தத் தென்னையின் அறிவுரையை இந்த பாவப்பட்ட மாமரம் ஏற்குமா?
காலம்தான் பதில் சொல்லும்…
– தமிழன் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 24, 1996.
– ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும், முதற் பதிப்பு: மே 1996, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.
![]() |
சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க... |