ஒரு பிடி அரிசி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 108 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரே ஒரு படி அரிசி போதும். என் பொஞ்சாதி சாகக் கிடக்கிறா,பட்டினிக் கொடுமையாலே. ஒரே ஒரு பிடி அரிசி தாங்கய்யா. ஒங்களுக்கு ரொம்ப புண்ணியமுண்டு. 

துண்டு துண்டாக ஒடிந்து விழுந்தன இந்தச் சொற்கள் முனியன் வாயிலிருந்து இல்லை. உள்ளத்திலிருந்து! பந்துமித்தி ரர்கள். பழக்கப்பட்டவர்கள். பார்த்துப் பேசியவர்கள் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் வேண்டினான். குமுறும் உள்ளத்தின் கொதிப்பைச் சூழ்நிலை காரணமாகக் குழைவாக மாற்றிக் கேட் டான் கெஞ்சினான். மன்றாடினான். 

“இல்லையே அப்பா! புளியங்கொட்டைக்கு ஆலாப்பறக் குறாங்க. அரிசி கேட்குறியே!” 

இந்த பதிலைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனது அவன் உள்ளம். உடலை-உள்ளத்தை உயிரை இவனை நம்பி ஒப்படைத் தவன் சாவோடு போராடிக்கொண்டிருந்தாள்- இழுத்துக்கொண் டிருக்கும் உயிரைத் தடுத்து நிறுத்த அல்ல அவன் பல்லைக் காட்டிக் கெஞ்சியது. சாகும்நேரத்திலாவது அவள் நிம்மதியோடு உயிர் விடட்டுமே என்றுதான் ! 

வீட்டுக்குத் திரும்பினான் முனியன் வெறுங்கையோடு உள்ளே நுழைந்தான். மூலையில் அந்த உடல் கிடந்தது. உயிர் பிரிந்து வெகு நாழிகையாகிவிட்டது. அழுகையோ அலறலோ அவ னிடம் அண்டவில்லை. உள்ளம்மட்டும் அவனிடமிருந்து கழன்று விழுந்து காணாமலே போய்விட்டது. 

அந்தக் குடிசைக்குள்ளே குவிந்து கிடந்த காரீருளில் சாவின் சாயல் படிந்திருந்தது. வெறிக்க வெறிக்க அவளுடைய உடலைப் பார்த்தான்; பிணம் அவன் மனதுக்குள்ளே உயிர்பெற்று உலவத் தொடங்கிற்று. அந்த நாட்கள்…! அன்பும் ஆசையுந் தவிர வேறு எந்த உணர்ச்சிக்கும் இதயத்தில் இடங்கொடுக்காத கடந்து போன அந்த நாட்கள் …! 

சிவந்த ரோஜா…மலர்ந்த மல்லிகை-விரிந்து மணந்தந்த விதவிதமான மலர் வகைகள்…1 ஆடும் கிளைகள்- அவற்றிலிருந்து பாடும் கிள்ளைகள்… தவழ்ந்துவரும் தென்றல்-அதிலே மிதந்து வரும் நறுமணம்… 

வாழ்க்கை வளமுள்ள சோலையாயிருந்தபோது மகிழ்ச்சி மலர் களாகப் பூத்தது முனியனுக்கு இளமை, எழில் மெருகு தீட்டிற்று. இன்பம், மணமாகி மனதைப் பரவசப்படுத்திற்று. 

போகும்போது காளியாத்தா கோவிலே விபூதி எடுத்துப் பூசிக்கிட்டுப்போ மச்சான்-என்று முனியன் மறக்காமலிருக்க நினைவுபடுத்தினாள் மாரி, 

திரும்பி வரும்போது ஒனக்குக் குங்குமமும் எடுத்துக்கிட்டு வர்றேன்’ பரிவையும் பரிகாசத்தையுங் கலந்து பதிலாக அளித் தான் முனியன். 

ஜிண்டான் மாத்திரைகளைத் தின்றதைப் போன்ற ஒரு லலித மான உணர்ச்சி இருவருடைய உடலெங்கும் பரவி உள்ளங் களிலும் நிறைந்தது. 

அவ்வளவுதானா…? 

“அதை மறந்து விடுவேனா? நெருக்கமாக்கட்டுன கதம்ப மாப் பார்த்து ஒரு முழம்…” 

இரண்டு ஜோடி விழிகளும் பார்வையை ஒன்றிலிருந்து மற்றொன்றில் பதித்தன. முனியன் நடந்தான் வெளியில். 

நிதானந்தவறாது ஓடும் ஓடைக்கும், நிம்மதி ததும்பும் அவர்கள் வாழ்வுக்கும் வேற்றுமையே இருந்ததில்லை. மாரி முனியனுக்கு மனைவியாகமட்டும் இல்லை ? தோழியானாள்-ஞானா சிரியையாக இருந்தாள். வழிகாட்டியாக எதிலும் இருந்து காட்டினாள். 

ஆண்மை நிறைந்த உடல் அன்பும் அனுதாபமுமே உருவான உள்ளம், நெஞ்சை நெகிழவைக்கும் நளினமான நடைநொடி பாவனைகள்—இவை மூன்றும் ஒரு ஆணிடமிருந்தால் எந்தப் பெண்ணும் அவளுக்கு அடிமையாகி விடுவாள். விதி விலக்கில் லாமல்! கணவன் கடவுள் ஆவான் – மனைவி பக்தையாக இருப் பாள். இடையிலே எந்தப் பூசாரியாவது நுழைந்தால்தான் இன்னலுந் தொல்லையும்! 

பூத்துக்குலுங்கிய ‘மாரி-முனியன் மலர்த் தோட்டத்திலே’ திடீரெனப் புயல் புகுந்து அதைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டது… தமிழ் நாட்டில் பருவ மழை தவறிவிட்டது. நீர் நிலைகள் வரண்டன. நிலங்கள் பாளம்பாளமாக வெடித்துப் பாழப்பட்ட சமுதாயத்தின் படப்பிடிப்பு போலத் தோன்றின. மரம் முறிந்து விழும்போது அதைச் சுற்றியுள்ள கொடியும் அலைந்து விடுவதைப் போல வானம் மோசம் செய்ததால் பலர் வாழ்வுநாசமாகி விட்டது. 

முனியனின் கட்டான உடல் துரும்பாக இளைத்தது கவலை யால். கட்டித் தங்கமாயிருந்த மாரி கறுத்து வதங்கிப்போனாள் வறுமையால். பஞ்சம் – பசி- பாழ்பட்ட வாழ்வு ! அலைந்தான்- சுற்றினான் -ஓரிடம் விடாமல் வேலையைத் தேடித் துளாவினான். மூட்டை சுமப்பது-கூலிவேலை செய்வது. கல்லுடைப்பது – கிடைத்த காசை வீட்டுக்குக் கொண்டுவருவான். அப்போதெல் லாம் அலுப்பும் களைப்பும் அவனை அண்டத்தான் செய்தன “காட்டில் விறகொடித்தேன்-பழைய கஞ்சியின்றி நெஞ்சொடியக் கல்லை உடைத்தேன். மூட்டை பல சுமந்தேன். முதுகெலும்பு முறியப் பாடுபட்டேன்.” வேலைக்காரி சினிமாவிலே கேட்ட அந்தப் பாட்டை, வேதனையைத் தீர்க்கும் மருந்தாக எண்ணி ஆறுதலுக்காக அடிக்கடி முணுமுணுப்பான் முனியன், 

கூலி என்னவோ கிடைக்கத்தான் செய்தது. ஆனால் அரிசி? 

“வரி கொடுக்கிறோம். எங்கள் வாழ்வு நாசமாவதைத் தடுக்க வில்லை இந்த சர்க்கார். இறக்குமதி செய்தால் என்ன”ன் 

உள்ளத்தின் குமுறல் ஒருநாள் வெடித்தது. அதன் எதி ரொலி அமைச்சர்களின் செவிகளிலே விழத்தான் செய்தது. ஆனால் கிடைத்த பதில்……? 

‘படியளக்கிறோம்! பாராமுகமாக இருக்கிறது மத்திய சர்க்கார்.’ 

கேட்ட கேள்விக்குப் பதில்-அப்போதைய நிலைமையைச் சமாளிக்க ஒரு சமாதானம். உள்ளக் குமுறலுக்கு ஒருவித சாந்தி! பொறுப்பும் திறமையும் புறமுதுகு காட்டி ஓடின அவர்களிட மிருந்து! 

அகில உலகக் கண்ணோட்டத்தில் இருந்தார் முதல் மந்திரி அரச பரம்பரையின் காவலனாக இருந்தார் உதவி மந்திரி – வரி விதிக்கும் திட்டத்தில் மூழ்கி இருந்தார் நிதிமந்திரி-வருமான உயர் வைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார் போக்குவரத்து மந்திரி காலியாகும் ஸ்தானங்களைக் கணக்கெடுப்பதில் கவனஞ் செலுத் தினர் மற்ற உறுப்பினர்கள். இந்த விசித்திரங்களையும் ஒரு லீலா வினோதம், என்று சும்மாயிருந்தார் ஈசன்! மக்களைக் கவனிக்க ஒரு நாதியும் இல்லாமலே போயிற்று ! 

பிணத்தை எரித்துவிட்டுப் பிழைப்புக்கு வழிதேடினான் முனியன். இலங்கைக்குத் திருட்டுத்தனமாக ஆட்கள் ஒடு கிறார்கள் என்று ஒருநாள் உளவு கிடைத்தது. மாரி விட்டுப்போன தாலியைப் பணமாக்கினான்; கிளம்பினான். 

நிலப்பரப்பில் நிம்மதி நிறைந்த நேரம். பார்வைபாயும் அளவுக்குப் பரந்துகிடந்த நிலப்பரப்பில் ஒருபெரும் போராட்டமும் நடந்துகொண்டிருந்தது. காற்றும் கடல்நீரும் கைகலந்து குஸ்தி போட்டன. குமுறல் கொந்தளிப்பு-உடலைக் குத்தித் துளைபோடும் வாடைக் காற்று ! இருள்கவிந்த வானம், உலகத்துக்கு மூடி போட்டதைப் போலத் தோற்றமளித்தது. நீரைக் கிழித்துக் கொண்டு ஓடிற்று அந்த ‘ஸ்டீம்லாஞ்சு’ 

“அண்ணேன், கொஞ்சம் நெருப்புத்தாயேன்” பக்கத்திலிருந் தவனைக் கேட்டுக்கொண்டே காதில் செருகியிருந்த பீடியை எடுத் தான் முனியன். அது நனைந்து நாசமாகியிருந்தது. அவனால் குளிர்தாங்க முடியவில்லை. 

கொஞ்சம் கீழேபோயி உக்காந்தா என்ன? என்று கொஞ்சும் குரலில் கேட்டான். 

“அங்கே போகக்கூடாது; அரிசி இருக்கு.”

“அரிசியா……?” 

“ஆமாம். அரிசியும் திருட்டுத்தனமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போகுது. அதைச் சாப்பிடுகிற ஒன்னையும் சேர்த்து அழைச்சுக்கிட்டுப் போறோம்” நகைச்சுவைத் ததும்ப பதில் அளித்தான் அந்த நண்பன். 

ஒரே வினாடி! முனியன் உடலில் துவண்டுகிடந்த அத்தனை நரம்புகளும் துண்டித்து விழுந்தன. “ஒரே ஒரு பிடி அரிசி’ அவலமே உருவான அந்தக் குரல்! பேய்க்காற்றோடு கலந்து பித்துப் பிடித்துப்போய் அவனைச் சுற்றிக் குதித்து கும்மாளம் போட்டது. இறந்துபோன அவன் மனைவி எதிரிலிருந்து அவனை அன்போடு அழைத்தாள். 

“அடபாவிகளா! ‘……'” இதைச் சொல்லி முடிக்கக்கூட இல்லை. கடல் நீருக்குள் முனியன் உடல் மூழ்கி மறைந்தது. 

”ஐயோ” என்று அவன் நண்பன் அலறினான். 

கனல்புரளும் ஏழ்மை யென்றும் பெருங்கடலில் அந்தோ, கதியற்ற குழந்தைகளோர் கோடானுகோடி, மனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம், வந்ததொரு பணம் என்ற கொடி பறக்கும் கப்பல், இனத்தவரின் குழந்தைகளோ ‘ஏ’ என்று கெஞ்ச ஏறிவந்த சீமான்கள் “சீ” என்று போனார்.” 

காற்றும் கடலும் கும்மியடித்து பாடின இப்பாடலை! 

புரட்சி கவிஞர் பாடலின் அடிகள்-அவைகளுக்கு எப்படித் தான் தெரிந்திருந்ததோ, தெரியவில்லை! 

– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.

டி.கே.சீனிவாசன் தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *