பதிவு செய்யப்படாதவள்!
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 179
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அதோ! அந்த ஜன்னலைப் பாருங்கள். கம்பிகளுக்கிடையே காணப்படும் அவள் முகம் கவலை நிறைந்திருப்பானேன்? அவள் வாழ்வில் ஒளிமறைந்து விட்டதே! அவளைப் பார்த்துக்கொண்டே போகும் பலரில் எவராவது அவள் வாழ்வில் படிந்த தூசியைத் துணிந்து தட்டிவிட எண்ணினீர்களா?”
இதைத்தான் அவன் அந்த வீட்டுப்பக்கம் போகும்போதும் வரும்போது உலகத்தைப் பார்த்துக் கேட்க நினைத்தான். வாயைத் திறந்து கேட்கவில்லை; அவளைப் பரிவாகப் பார்ப்பதும் உலகை ஆத்திரமாக நோக்குவதும் அவன் எண்ணத்தை வெளிப் படுத்தின.
அவள் யார் தெரியுமா? எதிர்வீட்டு ஜன்னலருகே நின்று இரக்கமற்ற உலகத்தைப் பார்த்துகொண்டிருந்தாளே அவளே தான்! பருவத்தில் பாழாக்கப்பட்ட பாவை; மலரும் வேளையில் சருகாக்கப்பட்ட மலர். அவள் கண்களில் கவர்ச்சி மறைய வில்லை, அதரங்களில் இன்பத்தின் துடிப்புகளிலிருந்துகொண்டு தான் இருந்தது. ஆனால்,உலகம் இன்ப எல்லையிலிருந்து அவளை நீக்கிவிட்டது. மஞ்சளும் குங்குமமும் மட்டும் அவள் முகத்தில் இருந்திருந்தால், சுமங்கலி பூஜைக்கு அவளுக்குத்தான் முதல் தாம்பூலம் வைத்து அழைத்திருப்பார்கள்.
அவன் அவளைப் பார்த்தான். பார்வையில் இரக்கந்தானிருந் தது. இரக்கம் காலப்போக்கில் வேறொரு உருவடைந்தது. வேறொன்றுமில்லை; சாதாரண அன்புதான். எப்போதும் சாதாரண அன்புதானே காதலாக மாறும்! அதுபோலத்தான் நடந்தது. அவன் கவியாக இருந்திருந்தால், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஒத்திருந்த அவள் முகத்தினைப் பற்றி ஒரு காவியம் புனைந்திருப் பான். சித்திரக்காரனாக இருந்திருந்தால் அள்ளிவிழுங்கும் அவள் விழிகளையும், அருகே வரவேற்கும் அதரங்களையும் ஒவியமாகத் தீட்டியிருப்பான். சிற்பியாக இருந்திருந்தால் அங்கலட்சணங்கள் அத்தனையும அமைந்த அந்தப் பேசும் சிலையைப் பேசாச் சிலையாக்கியிருப்பான். மூவரில் ஒருவராகவும் இல்லாத காரணத்தால் அவளைப் பார்த்து மகிழ்ந்து, மகிழ்ச்சியால் நெகிழ்ந்து, நெகிழ்ச்சியால் தூண்டப்பட்டு, அவளைப் பார்ப்பதையே அன்றாட நடவடிக்கைளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டான்.
அவளுக்குத்தான் என்ன இவன்மேல் திடீர்க் காதலா? தன் தலையில் அழிக்க முடியாமல் எழுதப்பட்ட எழுத்தை எண்ணி எதிரிலிருக்கும் ஏகாம்பரநாதரைத் துதித்துக்கொண்டிருந்தாள். ரயில் வண்டியில், ஒரு பெட்டியில் இடமில்லாவிட்டால் அடுத்த பெட்டியிலாவது கிடைக்குமா என்று தேடுவோமே, அதைப்போல இந்த ஜன்மத்தில் கிடைக்காத இன்பம் அடுத்த ஜன்மத்திலாவது கிடைக்க வேண்டுமே என்று ஆண்டவனுக்கு மனு செய்துகொண் டிருந்தாள். கேட்பாரற்றுக்கிடந்த அந்தக் கோயிலுக்குத் திடீ ரெனக் கிராக்கி ஏற்பட்டது. தனிமையிலேயே இருந்து பைத்தி யம்பிடிக்கும் நிலைக்கு அந்த ஆண்டவன் வந்ததும் எல்லோரும் துணைக்கு அங்கே கூட ஆரம்பித்தார்கள். எனக்குமட்டும் உயர்ந்த பண்பு என்கிறார்களே, அது இருந்தால் எதிர்வீட்டு எழில் வல்லியின் பலமான பக்திதான் அந்தக் கோவிலுக்கு அத்தனை மகிமையைக் கொடுத்தது என்று எழுதியிருப்பேன். ஆனால் சாதாரண அறிவு படைத்த என்னால், அழகி ஒருத்திக் கண்முன்னால் காட்சி அளிக்கிறாள் என்றால், இதைப் பார்ப்பதைத் தவிர ஊர்க்காளைகளுக்கு வேறென்ன வேலை, என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
தன்னை ஈடேற்றி வைத்த அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் அந்த ஏகாம்பரநாதர் எண்ணியிருக்க வேண்டும். அவன் அவளைப்பார்த்தான்; ஏகாம்பரநாதன் மன்ம தனைப் பார்த்தான்; மன்மதன் தன் பாணத்தைப் பார்த்தான்; பாணம் இருவர் உள்ளங்களையும் ஊடுருவிப் பார்த்தது. பாணம் பாய்ந்தவுடன் இருவர் கண்களும் ஒன்றுக்குள் ஒன்று பார்த்தன! காதல் தெய்வத்தின் ஸ்தலபுராணமல்ல இது. “ரசிகமணிகள்” ஸ்டைலில் எழுதினால் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள்! ”
எது எப்படி யிருந்தாலும் விதவையாயிற்றே என்று அவளை அவன் வெறுக்கவில்லை. “சட்டையில் கிழிசல் இருந்தால் ஒட்டுப் போடுகிறோம்; அதைப்போல விட்டுப்போன அவள் வாழ்வை சுட்டுப்போடுவோம் அதற்கு ஈடாக அவள் இதயம் நிறைந்த அன்பை நமக்களிப்பாள்” என்ற எண்ணத்தின் சாயல்தான் பலர் அவளைப் பார்த்தும் இவன் பார்வையை மட்டும் தனித்துக்காட்டி யது. காதல் வளர ஆரம்பித்தது. முதலில் கண்கள் பேசின; பின்னர் கடிதங்கள் பேசின; காதல் வளர்ச்சியின் கடைசீ கட்டமாகிய உதடுகள் பேசுவதற்குத் தடையாக அந்த ஜன்னல் கம்பிகள் இருந்தன!
இவர்கள் இருவரும் தமக்கிடையே இருந்த தூரத்தைக் குறைத்துக்கொள்வது, ஏகாம்பரநாதருக்குத் திடீரென ஏற்பட்ட அந்தப் பக்தர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆண்ட வனுக்கு அத்தனை கஷ்டப்பட்டு ஆராதனைகள் நடத்தியும், அந்தச் “சாமியும்” வரந்தரவில்லை, இந்த “அம்மாளும்” சரி சொல்ல வில்லை என்றால் ஏன் அவர்களுக்கு கோபம் வராது? கூடிக் கூடிப் பேசினர். பேசியதோடு நிற்கவில்லை; வீதியெல்லாம் தூற்றினர். விதவையின் விழிகளில் ஒளி தோன்றலாமா” என வாதிட்டனர். தாலியறுத்தவள் தகாதன செய்ய நினைக்கலாமா எனத் தத்துவம் பேசினர்; மஞ்சளோடு மங்களமும் மறையவேண் டாமா என்று மதவாதம் பேசினர். இவர்களுக்குத் தெரியாது மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது என்று!
இதற்கிடையில் அவளும் அவனும் இன்பக்கற்பனைகளை எழுப்பி மகிழ்ந்திருந்தனர்.
வெடுக்கென ஜடையைப் பிடித்திழுத்தான்.
“என்னை விடுங்கள்” என்றாள்.
இது ஒன்றும் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. “என்னைத் தொடுங்கள்? என்ற ஒரு பெண் வாய்விட்டுச் சொல்வாள்? வேதனையைப் பொருட்படுத்தாது வெட்கத்தை வெளிப்படுத்தும் அவள் விழிகள் அவளுக்குத் தெம்பையளித்தன. குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளுக்குள் பார்வையைப் பாய்ச்சினான். குளிர்ச்சியாலே மலர்ந்திருந்த குதூகலம் அவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. தொட் டிழுத்தான்- கிட்டவந்தாள்-கட்டிப்பிடித்தான்—துவண்டு விழுந் தாள். பிறகு……? எல்லோருக்கும் தெரிந்த நிகழ்ச்சிகளை எடுத்துருவாக்கிவேறு படித்துத் தொலைக்கவேண்டும்?
இது ஒரு காட்சி—அவன் கற்பனையில் நடந்தது.
“உங்களுக்கு நேரம், நாழியே கிடையாதா? வீட்டு வேலை பாக்கியிருக்கு விடுங்கள்.”
“நீ இருக்கும்போது நேரமே தெரிவதில்லை கண்ணே?”
“பைத்தியம்பிடிச்சுடப் போது”
“முந்தியே பிடிச்சுட்டுதே. அதனாலேதான்….”
“ஐயோ! இப்பபாருங்க, அத்தைகிட்டபோயி இதையெல்லாம் சொல்றே.”
“என்னான்னு சொல்லுவே?”
“சீ! இந்த ஆம்புள்ளைங்களுக்கே வெட்கம், மானம் ஒன்றும் கிடையாது. நாக்கை பாரு நாக்கை! எது பேசுகிறதில்லைன்னு தெரியறதே இல்லை!”
இது ஒரு காட்சி-அவள் கற்பனையிலே தோன்றியது. இரு வரும் நினைத்துப் பார்த்தார்களே தவிர, நேரடி நடவடிக்கைகளில் இறங்கவேயில்லை!
இதற்குள் ஊரே அவர்களுக்கு எதிராகத் திரண்டுவிட்டது. எங்கள் வீடு அவள் வீட்டுக்கு எதிர்வீடுதான். ஒருநாள் நான் அறைக்குள் உட்கார்ந்திருந்தேன். பக்கத்துவீட்டுக் கிழவர் என் தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார் அது என் காதுகளில் விழுந்தது.
“தம்பி! அந்த எதிர்த்தவீட்டு முண்டை, இருக்கிறாளே…?”
“என்ன தாத்தா, வயசானவங்க வாயிலே வந்தபடி பேசலாமா?”
“இல்லை தம்பி. அவன் அவகிட்ட கடுதாசி குடுத்தான். என் கண்ணாலே பார்த்தேன்.”
“வெளியிலே பறந்து வந்திருக்கும், எடுத்துக் குடுத்திருப்பான்.”
“இதெல்லாம் ஒனக்குக் தெரியாது தம்பி. நீ சின்னபுள்ளே. எனக்கு இதிலே எல்லாம் ரொம்பப் பழக்கம். நம்ப தெருவிலே இப்படி நடக்கலாமா?”
தெருப்பற்று அந்தக் கிழவருக்கு அளவுக்கு மீறி ஏற்பட்டு விட்டது. குப்பைத்தொட்டிகளில் குழந்தைகளைக் காண விரும்பி னார்களே தவிர, தொட்டிலில் தவழவேண்டும் அந்தக் குழந்தைகள் என்று நினைக்கவேயில்லை. எல்லோரும் சேர்ந்து அவளுடைய அப்பாவிடம் தூது போனார்கள். “அநீதி நடக்கிறதே அடக்கவேண்டாமா?” என்று முறையிட்டார்கள். ஆனால் அவள் அலட்சியம் செய்துவிட்டாள்.
ஒருநாள் அவன் வந்தான். கையில் இருந்த கடிதத்தை வீட்டுக்குள் வீசியெறிந்துவிட்டுத் திரும்பும் நேரம். ‘டேய்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். குச்சியை எடுத் துக்கொண்டு ஒரு கிழவன் ஓடோடி வந்தான் ஓங்கியடித்தான் இவனை. இவன் கைகள்மட்டும் பூப்பறிக்கப் போகவில்லை அல்லவா! போட்டான் ஒரு போடு. கிழவன் மண்டை பிளந்தது. ‘ஐயோ, அப்பா என்று அலறிக்கொண்டே ஓடிவந்த தகப்பன் மேல்விழுந்தாள் இவனுடைய அவள். கூட்டம் கூடிவிட்டது. ஆனால் ஏகாரம்பரநாதர் மட்டும் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை!
தூக்குமேடை அருகே கருப்புத்துணி போர்த்துக்கொண்டு நிற்கும் அவன்மேல் வைத்த பார்வையைத் திருப்பி அந்த வீட்டைப் பாருங்கள். ஜன்னலுக்கப்பால் திரை விழுகிறதே ஏன் தெரியுமா? வீட்டிலே இன்பங் காணாதவன் எவனோ அவளைத் தேடிவந்திருக்கிறான். அனாதையான அவள். வாழ்வை நடத்த வழுக்கி விழுந்துவிட்டாள். படிக்காத எந்தப் பெண்ணும் மூல தனம் இல்லாமல் நடத்தமுடியும் தொழில் இது ஒன்றுதானே இன்றைய சமுதாயத்தில்! கதாசிரியர்கள் உரிமைகள் பதிவு செய் யப்பட்டது என்பார்களே அது முன்பு-இப்போது அவள் உரிமை கள் பதிவு செய்யப்படாதவள்!
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காதல் மழை
புஷ்பராஜ் கந்தசாமி
October 9, 2026
அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு
ஜூனியர் தேஜ்
October 9, 2026
ஹார்மோனியம்
புஷ்பராஜ் கந்தசாமி
October 6, 2026
