ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2025
பார்வையிட்டோர்: 287 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நித்தியம் ஐந்தரை மணிக்கே எழுந்துவிடுகிற பழக்கம்,  இன்றும் அதேநேரத்திற்கு விழிப்பைத் தருகிறது. ‘நாளைக் குப்போயா! ஆறுதலாக எழும்பலாம். விடியற்காலையின் தூக்க சுகத்தை அனுபவிக்கவேண்டும். என்று நேற்றுப் படுக்கும்போது செய்தமுடிவு. இந்த அரைத் தூக்கத்தி லும் மங்கலாக ஏதோ கனவுமாதிரி-நினைவிற்கு வருகிறது நேற்றைய அசதி வேறு! திறக்க நினைத்த கண்களை மீண்டும் மூடிக்கொண்டு, சிவம் தூக்கத்தில் மூழ்க முயன்றான். 

‘ஓ… இன்று போயா; வேலையுமில்லை ஏழுமணி மட் டுமாவது இப்படியே கிடக்கவேண்டும். எவ்வளவு சந் தோஷம்! பூவிதழ்கள் மேலேகுவித்து மூடுவதைப்போல, இளங்காலை நேரத்தின் தூக்கம் அவனை மயக்கிற்று. 

“தம்பி தம்பீ..” 

அம்மாவின் குரல், ஒட்டியிருந்த இமைகளைப் பிரிக்க வைக்கிறது. திறந்த கண்கள் நேரே மணிக்கூண்டை நாடின மணி ஏழரை! 

”யாரோ உன்னைத் தேடினம், படவைக்குள்ளை…” அம்மர போய்விட்டாள். 

கண்களைக் கசக்கிக்கொண்டு, படுக்கையில் எழுந்து உட்காரும் போதே, மனம் ஒரு தேவாரத்தை முணுமுணுக்கின்றது. 

‘வந்தது யார்?’-பிடிபடவில்லை. தலையைச் சீவி முகத்தைத் அழுந்தத் துடைத்துக்கொண்டு வெளியே வரும் போது படலைக்கு வெளியே நிற்பவனின் தலை தெரிகிறது. 

‘யாரது’ 

“நான்தான் ஐஸே… விக்கி!” 

அட இவனா! வாய் தன் பாட்டிற் சொல்கிறது.

”ஓ..! என்ன சங்கதி? வாரும்” 

‘இவனுக்கு விடிய முந்தி என்ன வேலை?’ ஒரு விநாடி தயக்கம்: மறு விநாடி விஷயத்தைச் சொல்கிறான். 

‘ஒன்றுமில்லை சிவம்; ஒரு இருபத்தைஞ்சு ரூபா அவசரமாய்த் தேவை, என்ர தம்பிக்கு பள்ளிச்சம்பளம் கட்ட வேணும். அப்பா இன்னும் காசு அனுப்பேல்லை. அது தான். தந்தீரேண்டால், இரண்டு நாளிலை தந்திடுவேன்… ப்ளீஸ்’.

விக்கி, ஒரே மூச்சில் பேசி முடித்து விட்டான். சிவத்திற்கு வியப்பாயும் பரபரப்பாயுமிருந்தது. 

‘அட, வராதவனெல்லவோ வந்திருக்கிறான்! உண்மையில், விக்கியொன்றும் ‘முட்டுப்பட்ட’ வனல்ல தகப்பன் வெளியூரிலே பெரிய வியாபாரம். இன்று இவனுக்கு உண்மையிலே ஏதோ அவசரந்தான் போலிருக்கிறது சிவத்திற்கு! உண்மையிலேயே பரிதாபமாய்த்தானிருந்தது. அத்துடன் இவனுக்குக் கடன் கொடுத்தால் பழக்கமும் மதிப்புமல்லவா கிட்டும்? 

‘கையிலை ஒரு சதமில்லையே!’ – மனம் கூறியது. 

அவன் ‘சட்’டென ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்.

‘பின்னேரம் தந்தால் சரியோ? ஒரு இடத்திலை தர வேணும்; வாங்கித் தாறேன்..’. 

‘ஓ ஓ..! அதுக்கென்ன ஐஸே! நாளைக்கிடையிலை என்றாற் சரி. மெத்தப் பெரிய உபகாரம். தாங்ஸ்!’ அவன் போய் விட்டான். 

வெய்யில் ஏறிவிட்டதென்றாலும், முகத்தில் தண்ணீர் பாட்டபோது ஒரு குளிர்.! வீட்டுக் கூரைக்கு மேலே புகை மூட்டமாகப் பனி அசைந்து கலைவது தெரிகிறது. ‘நல்ல பனிதான்!’ 

இன்று செய்ய வேண்டிய வேலைகள், அவன் மனதில் நினைவிற்கு வருகின்றன. பெரிதாக ஒன்றுமேயில்லை. ‘பெரியப்பா வீட்டிற்கும். மாமி வீட்டிற்கும் ஒருக்கால் போக வேணும். பின்னேரம் ஒரு படம் – ஏதாவது.’ 

அம்மாவிடஞ் சொல்லிவிட்டுப் புறப்படுகையில் ஓன்பது மணியாகி விட்டது. இந்த இளம் வெய்யிலில், புகையிலைத் தோட்டத்தின் வரம்புகளினூடே செல்வதே தனி மகிழ்ச்சி. அடர்ந்து வளர்ந்த செடிகள், இருபுறமும் இடுப்பளவு உயரத்தில் நிற்பது ஒரு தனி அழகு, கடலில் படகிற் போவது போல, ஒரு இன்பம். அந்த நெடி? 

அதுவும். இனிமை தான். 

சுற்றுப்புறத்தின் அமைதி சிவத்தைக் கவர்ந்தது. சைக்கிளை மெல்ல மிதித்தான். 

பெரியப்பா வீடு, மாமி வீடு இரண்டும் அருக்குகே தானிருந்தன. பெரியப்பா பணக்காரர் மாமி அப்படி யல்ல. பெரியப்பா மீதுதான் அன்பு. அவர் பணக்கார றென்றல்ல. அவர்தான் மாமியிலும் பார்க்க நல்ல ரென்பது அவர் எண்ணம், தவிர மாமிக்குப் பெண் பிள்ளைகளேயில்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம். 

வீட்டிற்குள் நுழைந்ததுமே பெரியப்பா கண்டு விட்டார். 

“வாடா சீமானே!” அவர்தான் கேட்டார்.

“எங்கை இவ்வளவு நாளும் காணேல்லை”

“ஒண்டுமில்லை பெரியப்பா! ஒரே வேலை”

“என்ன கண்டறியாத வேலை உனக்கு?”

வழக்கமான பேச்சுக்கள், உபசாரங்கள். 

சிவத்திற்கு விக்கி கேட்ட காசு நினைவிற்கு வந்தது. தருவதாகச் சொல்லியாயிற்றே தவிர எங்கே காசு வாங்வது என்றே யோசிக்கவில்லை. ஒரு கணம் நினைத்தான. 

கொடுக்காமல் விட்டாலென்ன? 

சே! அவனுக்கா கொடுக்காமலிருப்பது? கொடுத்தால் என்ன மதிப்பு, அவன் பழக்கம்! அதைவிட லாபம்? எங்கே போவது காசுக்கு? 

பெரியப்பாவிடம் கேட்டாலென்ன? 

சட்டென்று கேட்டு விட்டான். 

“பெரியப்பா உங்களிட்டை ஒரு இருபத்தைஞ்சு ரூபா எடுக்கலாமே?” 

“என்னடா காசோ? உனக்கேன்?” 

“எனக்கில்லை பெரியப்பா! என்ர சினேகிதன் ஒருவனுக்கு அவசரமாய்…!” 

”எட வேறை யாருக்கோ? உனக்கேன் உந்தவேலை? பொறு. பெரியம்மாவைக் கேட்டுப் பார்க்கலாம். என்னட்டை இல்லை. ‘ 

பெரியப்பா எழுந்து உள்ளே போனார். அவர் சொன்ன விதம் நம்பிக்கையூட்டுவதாயில்லை. 

பெரியப்பா திரும்பி வந்தார். முகத்தில் முன்பிருந்த பொலிவில்லை. ஏதோ ஒரு சிடுசிடுப்புக் காணப்பட்டது. 

“இல்லையாமடா தம்பி! என்ன செய்ய?” 

“விடுங்கோ. வேறை எங்கையாவது பார்ப்போம்”.

திடீரென்று பெரியம்மா அங்கே வந்தாள்.

‘சிவத்திற்கும் ஒரு இருபத்தைஞ்சு ரூபா கொடுக்க வேணுமெல்லே தாங்கள்? அதுக்காகவே கேட்டனி தம்பி?’ 

சிவம் திகைத்தான். 

அப்போது தான், அவர்கள் தன்னிடமிருந்து போன வருஷம் வாங்கிய காசு நினைவிற்கு வந்தது. 

‘ஐயையோ… அதில்லை பெரியம்மா, அதை நான் மறந்தும் விட்டேன்.’ 

‘ஏன் மறந்தனீ? நாங்களென்ன தரமாட்டமெண்டு நினைச்சியோ?’ பெரியம்மா சிரித்துக் கொண்டே தான கேட்டாள், ஆனாலும் அதன் காரம் அவனுக்குப் புரிந்தது. 

பெரியப்பா ஒன்றும் பேசவில்லை. அவர் பேசவேண்டுமென்று அவன் எதிர்பார்க்கவுமில்லை. அங்கே நடப்பது ‘அல்லி இராச்சிய’மென்பது அவனுக்குத் தெரியும். 

ஏதேதோ பேச்சுக்களின் பின் சிவம் புறப்பட்டான்.

‘பயப்படாதையடா தம்பி! காசு அடுத்த முறை தரலாம்’ அதே நமட்டுச் சிரிப்போடு கூடிய பேச்சு – பெரியம்மா தான் வழியனுப்பினாள். சிவத்திற்கே எரிச்சலாக வந்தது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தான். 

‘அட, இன்று வீணாக மனஸ்தாபமாகி விட்டதே’.

ஏதோ ஒரு தோல்வி உணர்வு சூழ்ந்தது. 

‘நீ வருவாயெண்டு தெரியும். ஏற்கனவே தயாரயிருந்தே தேனீரைக் கொடுத்து வரவேற்றாள். மாமி, பெரியப்பா வீட்டில் அவன் பேசிக் கொண்டிருந்தபோது, மாமி அங்கே வந்தாளாம். அவன் தான் கவனிக்கவில்லை. ‘சண்டை மாமிக்குத் தெரிந்திருக்குமோ’ தேனீர் மட மடவென்று இறங்கிற்று. 

மாமி நேரே கேட்டே விட்டாள். 

‘என்னடா தம்பி! பெரியம்மா சத்தம் போட்டவ?’

மாமிக்கு விஷயம் தெரிந்திருக்கிறது; ஆழம் பார்க்கிறாள். சிவம் எல்லாவற்றையும் சொன்னான். 

‘இரடா நம்பி வாறன்!’ மாமி உள்ளே போவது தெரிந்தது. 

மாமிக்கும், பெரியம்மாவிற்கும் நீரும் நெருப்பும்போல ஒற்றுமை. ஒருவரையொருவர் மட்டந்தட்டுவதே பொழுது போக்கு. உள்ளே போன மாமி, வெளியில் வந்தபோது கையில் இருபத்தைந்து ரூபா இருந்தது. 

சிவம் புறப்பட்டான். புகையிலைத் தோட்டத்துப் பாதையால் திரும்பும்போது வெய்யில் நன்றாக ஏறிவிட்டது.

திரையில் செய்திப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிவம் பக்கத்திலிருந்த நண்பன் ஸ்ரீயின் காதில் முணு முணுத்தான். 

‘மச்சான் நீ என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டாய் இங்கே அவன் – விக்கி வந்து தேடியிருப்பான் பாவம்’. 

‘எட, பயப்பிடாதை, ஏழு மணிக்குள்ளை போயிடலாம்.’ 

அது ஒரு அறிவியற் படம். ஆங்கிலப் படமானாலும் சரியான நெரிசல், பிற்பகல் விக்கியின் வரவை எதிர் நோக்கியிருந்த சிவத்தை, ஸ்ரீ எப்படியோ இழுத்து வந்து விட்டான். 

அவர்கள் மேலே பேசவில்லை படம் முடிய சில நிமிடங்களே இருந்தன. திரையில் ஒரு ஆபத்தான சத்திர சிசிச்சைக் காட்சி தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். ஏதோ மரந்தடியைக் கையாளுவதைப் போல வெட்டுங் கொத்துமாய்…! 

சிவத்திற்கு என்னவோ செய்தது. கை கால்கள் ‘குறு குறு’ வென்றன. 

திடீரெனத் தியேட்டரில் ஒரு சலசலப்பு, ஸ்ரீயும் திரும்பி நோக்கினர். யாரோ ஒரு மனிதனை, நாலைந்து பேராகத் தூக்கிச் செல்வது தெரிந்தது.

“மயக்கமாம்…” காற்றில் வந்த குரல்கள்.

“ஒவ்வொரு ‘ஷோ’விற்கும் இரண்டு, மூன்று பேராவது மயங்கினமாமடா! இந்த ஒப்பரேஷணப் பார்த்து” ஸ்ரீ விளக்கினான். 

சலசலப்பு ஒய்தைற்குள் படம் முடிந்து விட்டது.தேசிய கீதத்தையும், கொடியையும் மதிப்பாரில்லை. கூட்டம் கலைய ஆரம்பித்தது. 

சைக்கிளை எடுக்கவந்தவன் அதன் மேற் சாய்ந்தார் போல நின்றவரிடம் அண்ணை கொஞ்சம் தள்ளுங்கே.. என்றான். பதிவில்லை. 

நெருங்கிப் பார்த்தபோது புரிந்துவிட்டது. 

இவருக்கும் மயக்கம்! 

கைத்தாங்கலாக ஆளைப் பிடித்து வந்து அருகிலிருந்த வரங்கொன்றிற் படுக்கவைத்தான். நல்லவேளையாக அவருக்கு அரை நினையிருந்தது. 

தம்பி.. தண்ணி கொஞ்சந் தாரும் பாப்பம்….

பதில்கூடக் கூறாமல் சிவம் ஓடினான். 

கடையொன்றில் பாத்திரம் நீர்பிடித்து வரவே ஐந்து நிமிடமாகி விட்டது! 

ஆள் மீண்டும் மயங்கிட்டார். 

நீரை முகத்தில் தெளித்து விசிறினான் 

“சிவம் கெதியாவா…உனக்கு நல்ல வேலை: நேரம் போகுது…” 

ஸ்ரீதான் நின்று முனுமுணுத்தான். இவர்களை விட வேறு ஆட்களேயில்லை. 

‘கொஞ்சம் பொறு மச்சாள்…’ சிவம் ஸ்ரீயைச் சயதானப் படுத்துவதற்குள் மயங்கியவருக்கும் பிரேக்ஞை வந்து விட்டது.’ 

“தம்பி. தண்ணியிருக்கே” 

“ஓ…இந்தாங்கோ…” 

ஒரு நிமிடத்தில் தீர்ந்துவிட்டது. வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்தவாறே அவர் எழுந்தார். களைப்பு மாறவில்லை. 

“இன்னுங் கொஞ்சந் தருவீரே?” – அவர்தான் கேட்டார். 

“ஓஒ…” சிவம் திரும்பினான்; “மச்சான்… ஒரு நிமிஷம்”

திரும்பி வந்தபோது, ஸ்ரீ அங்கில்லை. அந்த மனிதர் மட்டுந்தானிருந்தார். 

“உம்யோடை நிண்டவர் போட்டார் தம்பி…”

அடைத்து மெலிந்த குரலில் அவர் சொன்னார். 

“என்னலை உமக்கு வீண் தொல்லை…” 

உண்மையான வருத்தந் தொனித்தது சூரலில்.

“குடியுங்கோ இதை” 

“ஸ்ரீ போட்டானா? என்ன மனுசன் அவன்!” சிவத்திற்கு சலிப்பாயுங் கோபமாயுமிருந்தது. 

“போவமா தம்பி?” அவர் குடித்தாயிற்று. 

“சரி” 

தேநீர்க் கடையின் அலங்கார ஒளியில் ஆளை நன்றாகப் பார்த்தான் சிவம். என்ன கட்டுமஸ்தான உடம்பு! வயது கூட முப்பதுக்கு மேலிராது. ‘இவ்வளவு வைரமான உடலில் இப்படியொரு பூஞ்சை மனமா?’ சிவத்திற்கு வியப்புத் தாளவில்லை. 

தேவராசா–அதுதான் அவர் பெயர்–சொன்னார்; தம்பி, நான் ஒரு கமக்காரன் கனக்க இங்கிலீஸ் படங்கள் பாக்கிறனான் தான். ஆனால், இண்டையைப் போல் ஒருநாளு மில்லை அதைப் பார்த்த உடனை என்னென்டு தெரியாமல் வந்தது. நீர் சமயத்திற்கு வந்தீர், காற்சட்டைக்காரர், வேட்டி-சாரக்காரரை கண்டா மதிக்கிறேல்லை நீரெண்டா உம்மடை சிநேகிதரையுக் விட்டிட்டு வந்தீரே. ஐயையோ! தம்பி .. நீரில்லாட்டி, நான் சரியாத் தவிக்கிருப்பன். கடவுளா உம்மை அனுப்பினார்…என்னாலை உமக்கு வீண் தொல்லை. மெத்த உபகாரம் தம்பி உம்மைப் பார்க்க எனக்கு எங்கடை’…..’, அந்த ‘…..’ படத்திலை வந்தது போலயிருக்கு” 

சிவம் இடைமறித்தான். 

”அண்ணை, இதெல்லாம் மனுசனுக்கு மனுசன் செய்யிற உதவி” தேவராசாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் இழையோடிய நன்றியை-வீண் உபசாரக் கலப்பற்ற அந்த உணர்ச்சியை – அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. கிராமப்புறத்து வெகுளித்தன்மை அந்தப் ‘பெயர்பெற்ற நடிகருடன் ஒப்பிட ‘அறிவு’- இவை அவனை மேலும் இரங்க வைத்தன. 

பிரியும்போது, சிவம் கேட்டான், “அண்ணை இனிப் போவியளே, தனியா?” 

“ஓ இனியொண்டுமில்லைத் தம்பி உம்மை நான் மறக்கேன் அப்ப வரட்டே…” 

கண்களில் நன்றி பளிச்சிட, தேவராசா புறப்பட்டார்.  

சிவத்தை இன்னவென்று தெரியாத ஒரு நிறைவு ஆட் கொண்டது. தேவராசாவின் கண்களில் பின்னிட்ட நன்றியுணர்வு, அந்நிறைவைக் குறைய விடவில்லை. 

‘விக்கி வந்திருப்பானோ?’ – சைக்கிளை வேகமாக மிதித்தான். 

வீட்டை அடைந்தபோது, மணி எட்டு. 

“அப்போதை வந்த பெடியன் வந்து வெகுநேரம் காத்திருந்திட்டுப் போகுது” என்றாள் அம்மா. 

அவன் வந்த விசயத்தை விளக்கினான். சிவம். 

ஐயோ! கட்டாயம் குடு; எதுக்கில்லை. எண்டாலும் படிப்புக்கு எண்டா, இல்லை யெண்ணக்கூடாது! இப்பவே போட்டு வா. எங்களுக்கு ஒரு அவதி வாறேல்லையே.’ சைக்கிள் அப்படியே திரும்பிற்று. 

‘கருங்கும்’ மென்றிருந்த இருட்டிடையே தூரத்தில் தெரிந்த விக்கிவீடு மின்மினிப் பூச்சியாய் மினுக்கிற்று. துரத்திவந்த கடிநாய்களிடமிருந்து தப்பி வருவதே பெரும் பாடாகி விட்டது. 

நிசப்தமான வேளையில், சைக்கிளின் மணி அலறிற்று. வந்து ஐந்து நிமிடமாகிவிட்டது. குரல் கொடுத்தும் பலனில்லை. இருளில் மூழ்சிக்கிடந்த வீட்டின் ஒரு புறத்தே ‘அரிக்கன் லாம்பு’ ஒன்று தெரிந்தது. இருந்தாற்போல, யாரோ வந்து விளக்கை மறைப்பது போலிருந்து. 

சிவம் குரல் கொடுத்தான். ‘விக்கி இல்லையே?’

யாரது? பதில் அதட்டலாக வந்தது பெண்குரல்.

‘…அவர் நித்திரை; நாளைக்கு வாரும்…’

‘இல்லைப் பாருங்கோ…ஒரு அவசர விசயம்…’ 

“என்னது…?” அந்தக் குரலுக்குரிய பென் விளக்குடன் வந்தாள். 

“என்னட்டைச் சொல்லும்.” சிவம் தயங்கினான். 

”ஒண்டுமில்லை; கொஞ்சக் காசு கேட்டவர் அதுதான்…” அவனை முடிக்கவிடவில்லை. 

“ஏன் மேனை? எவனுக்குத்தான் வேலையில்லை: உனக்கும் இல்லையே? அவனுப்பிடித்தான் ஊரெல்லாம் மானத்தை வாங்கிறான்… அவர் படம் பார்க்கிறதுக்குக் காசுக்குத் திரியிறார்…நீ போ மேனை, போ…” 

முகத்திலடித்தாற்போல நின்றான் சிவம்: ஒரு கணத்தான் “என்ன திருப்பம் இது? யாரை நம்புவது?”

இருளைப் போல, மனதுங் கனத்தது. சைக்கின் டைனமோவின் ‘கீர்’ரிட்ட ஒலி, ஒரே சீராய்ப் பின்னணி இசைத்தது. 

ஒழுங்கையின் வளைவு ஒன்று. சன நடமாட்டமேயில்லாத இடம். ஸ்ரீ வீடு, அருகிற்தான். 

ஏதோ மனித உருவம் போல பக்கவாட்டில் எதிரே தோன்றவே, கவனமாக நிமிர்ந்தான். 

அங்கே- 

இரண்டு உருவங்கள், தெருவோர அரசமரத்தடியில் ஒன்றையொன்று ஆலிங்கனஞ் செய்த நிலையில் நின்றன. 

சிவம் திகைத்தான். பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்து விட்ட அருவருப்பு: ஒரு பதட்டம் ஒரு அச்சம்: இவற்றினூடே, ஏதோ உள்ளத்திலுங் கிளர்ந்தது… 

இரண்டிலொன்று, பெண்! 

“ஐயோ…..ஆற்ரையோ சைக்கிள்…” என்று திணறியது.  

இருவரும் தெருவின் ஒவ்வொரு கரைக்கு ஓடி மறைந்தனர். 

பிரகாசம் பொருந்திய சைக்கிள் விளக்கு ஆட்களை அடையாளங் காட்டிவிட்டது. 

ஒன்று, விக்கி! தூங்கிவிட்டதாக சற்று முன் யாரோ சொன்ன அதே விக்கி… 

மற்றது ஸ்ரீயின் தங்கை… 

சிவத்திற்கு ஒரு திமைப்பு! அதிர்ச்சியல்ல அது! கவலையும் பயமும் ஏனோ மனத்தை மூடின… 

“காசு குடுத்திட்டியே?” அம்மா கேட்டாள்.

“ஆளில்லை வீட்டிலை….” விசயத்தைச் சொல்ல முடியவில்லை சிவத்தால்: மனமுமில்லை. 

“நீ சாப்பிட வாடா” 

“நான் பட்டணத்திலை சாப்பிட்டாச்சு; பசிக்கேல்லை”

மணி பதினொன்றடித்து. சிவம், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ஏற்கெனவே தேவாரஞ் சொல்லியாயிற்று. 

அன்று நடந்தவையெல்லாம் மனதில் நிழலாடின. அவனுத் தூக்கம் வரவில்லை. அன்றைய ‘வரவு செலவை” மனத்திலே முடித்தாற்தான் தூக்கம் வரும் அவனுக்கு… புரண்டு புரண்டு படுத்தான்.

– விவேகி, 01-06-1968.

– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *