ஒரு சொல்…




அது ஒரு அனாதை குழந்தைகளின் ஆசிரமம். காலையிலேயே பெரியவர் தன் பேரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தார். அனாதை என்பது தாயின் இடம் வெற்றிடமாகும் போதுதான் ஏற்படுகிறது.சிறுவனுக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. பெரியவரின் மனைவி லட்சுமி அம்மாள் இறந்த பின் அவர் முதியோர் இல்லம் செல்ல வேண்டி இருந்ததால் வேறு வழியின்றி சிறுவனை அழைத்துக் கொண்டு அனாதைக் குழந்தைகள் ஆசிரமத்திற்கு வந்திருந்தார்.

“பெரியவரே, பையன் பேரு என்ன?”- தம்பு என்றுதான் அழைத்து பழக்கம். அவன் தாய் தந்தை என்ன பெயர் வைத்திருந்தார்களோ தெரியவில்லை.சுருளியாண்டவரை நினைத்து சுருளி என்று பெயர் சொன்னார்.
“பிறந்த தேதி சொல்லுங்க “-அந்த ஆசிரமத்தின் தலைவி கேட்டார். எந்த பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பெரியவர் தெரியவில்லை என்றே சொன்னார்.
“அப்பா-அம்மா பெயர் தெரியுமா?”-என்றார் தலைவி. அந்த பெயர்களை சொல்ல துக்கம் தொண்டையை அடைத்தும் வேறுவழியின்றி தன் மகன் பெயரையும் மருமகள் பெயரையும் சொன்னார்.சிறுவனுக்கு தேவையான அடிப்படை பொருள்களை வாங்கி கொடுத்துவிட்டு பிரியும் போது தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டான் சிறுவன்.
சில நாட்களாக உணவின் மீது விருப்பம் இன்றியும் சக சிறுவர்கள் மீது நாட்டமின்றியும் இருந்த சிறுவன் பின்பு பழகிக் கொண்டான்.ஆனால்,ஒரு போதும் அவன் தன் தாத்தாவை மறந்துவிடவில்லை. இரவு உணவிற்காக சாப்பாட்டு தட்டின் முன் நின்று கடவுள் துதி பாடிவிட்டு அமரும் போது ஆயாவின் கைப்பேசியில் தன் தாத்தாவிடம் பேசிவிட்டே உண்பான்.
அது பெரியவர் இருக்கும் முதியோர் இல்லம். இரவு சரியாக எட்டு மணி.பெரியவர் படுக்கையில் கிடந்தார். அவரது கைப்பேசி ஒலித்தது. அவர் பேரனிடமிருந்து அழைப்பு.
“தாத்தா,நான் சாப்பிட போரேன். நீங்க சாப்பிட்டீங்களா!”-என்ற குரல்.
பெரியவர்,”ஆமா சாப்பிட போரேன். நீ சாப்பிட்டு நன்றாக தூங்கு. உனக்கு ஏதாவது வேணும்மினா சொல்லு. தாத்தா வரும்போது வாங்கிட்டுவர்றேன்.”-என்றார்.
“தாத்தா சாப்பிடாம இருக்காதீங்க…!”-என்று சொல்லும் போது சிறுவனின் குரல் குழைந்து வந்தது. கைப்பேசி மூலம் அவனுக்கு ஒரு முத்தம் தந்துவிட்டு படுக்கையில் சாய்ந்தார். இரவு பணிக்காக வந்த ஆயா, “பெரியவரே,சாப்பாடு அப்படியே இருக்கு. தினம் இப்படியே செய்தா சீக்கிரம் சீவன் போயிடும். சாப்பிடுங்க!”-என்று சொல்லிவிட்டு போனாள். அந்த அறையின் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்த பெரியவருக்கு கடந்த கால ஞாபகங்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.
பெரியவர்,இந்திய தபால் துறையில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பென்சன்தாரர். கோடம்பாக்கத்தில் தன்னுடன் பணியாற்றியவரின் வீட்டில் வரிசையாக இருக்கும் நான்கு ஓட்டு வீடுகளில் ஒன்றில் வாடகைதாரராக முப்பது ஆண்டுகள் வாசம் செய்தார். அந்த தெருவில் இருந்த அத்தனை வீடுகளும் மாடிவீடுகளாக மாறியும் அவர் வீடு மட்டும் சாலையிலிருந்து இரண்டடி பள்ளத்தில் இருக்கிறது. தனது நண்பரும் அந்த வீட்டுக்கு சொந்தக்காரருமான வேதபித்து இறந்து பத்து வருடமாகிறது.அவரது பிள்ளைகள் அன்னிய நாடுகளில் நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். வேதபித்துவின் தம்பி மாதம் ஒரு முறை வந்து வாடகை வாங்கி செல்வார். பெரியவருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் ஒரே மகன். நன்றாக படிக்க வைத்திருந்தார்கள். முற்போக்கு சிந்தனையாளர்களை முடமாக்கிவிடுகிறார்கள் இளைய தலைமுறைகள். அவர் மகனும் அப்படித்தான். தந்தையின் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் .வேறு மதம்-வேறு சாதியில் தன்னுடன் பணியாற்றிய ஸ்திரியை காதல் மணம் செய்து கொண்டான். லட்சுமி அம்மாள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கான பேச்சு வார்த்தை தொடங்கிய தினத்திலிருந்தே பெண் வீட்டாரால் பல தருணங்களில் அவமானப்படுத்தப்பட்டார் பெரியவர். பெண் வீட்டாருக்கு உயர் சாதியென்ற ஆணவ செறுக்கு இருந்தது.திருமணம் நகரின் பிரபலமான மண்டபத்தில் நடந்தது. தன் வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த பெருந் தொகையை தண்ணியாக செலவு செய்தார் பெரியவர். மணம் முடிந்தவுடன் தங்களுடன்தான் சேர்ந்து கூட்டுக் குடித்தனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பெரியவரை கடுமையாக மறுதலித்து பேசினாள் சம்பந்தி. மணம் முடிந்த அந்த நொடியிலிருந்தே மருமகனுக்கு கட்டளையிடும் அதிகாரத்தை வசப்படுத்திக் கொண்டாள் சம்பந்தியம்மா. தொலைக்காட்சி தொடர்களில் வரும் வில்லியைப் போல் இருந்தது அவள் செய்கை.
பெரியவரும் லட்சுமி அம்மாளும் கையறு நிலையில் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்தார்கள். சில வருடங்களுக்கு பின் புறநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி குடி பெயர்ந்தான் மகன். கூடவே மாமியும், மாமனாரும்,மச்சினிச்சியும் இருந்தார்கள்.தஞ்சை சீமையிலே பெரிய குடித்தனக்காரர்கள் என்று சொன்னவர்களுக்கு ஒரு கையகல இடம் கூட இல்லை என்பது காலதாமதமாக தெரிய வந்தது பெரியவருக்கு. மாதம் ஒரு நாள் மகன் வீட்டுக்கு போய்வரும் பெரியவருக்கு ஒரு வேளை உணவுகூட தராமல் மனம் நோகும்படி செய்து அனுப்புவதே வாடிக்கையாக வைத்திருந்தாள் வில்லி சம்பந்தி.
காலம் நம்மை கடந்து செல்லும் போது புதுப் புது காட்சிகளை நம் கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது. சபலப்பட்டவர்களும் சலனப்பட்டவர்களும் அடிமைப்பட்டுவிடுகிறார்கள். அப்படித்தான் நடந்தது பெரியவரின் மகன் வாழ்க்கையிலும். வில்லியின் கணவர் கொரணாவால் மரணமடைந்தார். இரண்டு மாதங்கள் கொரணாவால் பாதிப்புற்று பிழைத்து வந்தார்கள் வில்லியும் அவளது இரண்டாவது மகளும். ஆனால்,சில மாதங்களில் அவர்கள் உடல் முன்பைவிட மூன்று மடங்கு பெருத்துவிட்டது. மனதளவில் கோபதாரியாக மாறியிருந்தாள் வில்லி.கூடவே வறுமையும் இருந்தது. மருமகனையும் மகளையும் சார்ந்து வாழவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.
தன் இரண்டாவது மகளுக்காக பல இடங்களில் சொந்தத்தில் வரன் பார்த்தார்கள். ஒன்றும் கைகூடவில்லை தோற்றத்தில் உடல் சற்று பெருத்திருந்ததால் வந்த வரனும் வழுக்கிப் போனது. அப்படி திருமணம் கைகூடுமாயின் அதன் அத்தனை செலவுகளையும் மகளும் மருமகனுமே ஏற்கும் சூழ்நிலைதான் இருந்தது.
வில்லிக்கு தஞ்சையில் யாரோ ஒரு சூனியக்காரி தந்த அறிவுரை அது! நியாயம் எனப் பட்டது. வேறு வழியும் இல்லை. நியாயப்படுத்திக் கொண்டால் லௌகீக வாழ்க்கையில் கவுரவமாக தப்பிப் பிழைக்கலாம். அதை செயல்படுத்தும் பீடிகைகளை போட ஆரம்பித்தாள் வில்லி. அதற்க்கான மந்திரத்தை முதலில் தன் மூத்த மகளின் காதில் ஓதினாள். பின்பு,மருமகனிடம் அதை கட்டளையாக பிறப்பித்தாள். முதலில் அப்படி ஒரு செய்தியை, செயலை அசூயையாக உணர்ந்தவன், பின்பு மனமாற்றம் அடைந்தான். தனது மந்திர தந்திரத்தால் தினம் ஓதி ஓதி நல்ல வசியம் செய்திருந்தாள் வில்லி.அதை நிறைவேற்ற முதலில் சம்பந்தி பெரியவரிடம் அனுமதி கேட்க வேண்டும். இல்லை என்றால் தஞ்சை உறவினர்களே காறி உமிழக் கூடும்.
பெரியவரின் மகனுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால்,குழந்தை குட்டி இல்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வித விதமாக சமைத்து உண்டதும் புதிய புதிய இடங்களுக்கெல்லாம் ஊர் சுற்றி வந்ததும் அதனால் இரண்டு முறை வயிற்றைக் கழுவி துடைக்க வேண்டி வந்ததால், கோபங் கொண்ட இயற்கை ஒரு புளு பூச்சி கூட பிறகு ஜனிக்கவிடவில்லை. ‘மலடி’ என்ற பெயர் அவள் தோளில் வந்து அமர்ந்தது. அவளுக்கும் கஷ்டப்பட்டு பிள்ளை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை. இருந்தால், இருவரும் கோயில் குளம் என்று பரிகாரம் தேடி போயிருப்பார்கள். அவர்கள் பார்க்கும் உத்யோகமும் கைநிறையும் வரும்படியும் கண்களை மறைத்தது.பெரியவரின் மருமகள் செல்வியாக இருப்பதையே பெருமையாக கருதினாள். வில்லிக்கு இது நல்ல சந்தர்பமாக இருந்தது.சூனியக்காரியின் ஆலோசனைப்படி தன் இரண்டாவது மகளை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினாள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை பெரியவருக்கு அழைப்பு வந்தது. தனது இரண்டாவது திருமணத்தின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்படி மகன் அழைப்பு விடுத்திருந்தான். விருந்து தடபுடலாக இருந்தது. தஞ்சை உறவினர்கள் புடைசூழ வந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் அறுக்கப்படவிருக்கும் ஆடுகள் போல அமர்ந்திருந்தார்கள் பெரியவரும்-லட்சுமி அம்மாளும். பிள்ளை இல்லாததால் இரண்டாந்தாரமாக தன் இரண்டாவது மகளை மணமுடித்து வைக்க இருப்பதாக வில்லி சபையில் முன் மொழிந்தாள். இதில் தனக்கு கிஞ்சித்தும் இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டு கைநனைக்காமல் வெளியேறினார் பெரியவர். உடன் லட்சுமி அம்மாளும். அதுதான் மகன் வீடு வந்து செல்லும் கடைசி வாய்ப்பாக இருக்கப் போகிறது என்று அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணித்துவிட்டு வந்தது முதல் சில நாட்கள் சோறு தண்ணி இறங்காமல் உறக்கம் தடைபட்டு துவண்டு போனார்கள். ஏற்கனவே மகனை முற்றிலும் இழந்த நிலையில் மீண்டும் அவர்கள் குடும்பத்திலேயே வேறுவொரு பெண்ணை மணப்பது அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதன் பின் அவர்கள் அந்த திசை பக்கமே போகவில்லை.
ஒரு வருடத்திற்கு பின் அவர் மகனிடமிருந்து அழைப்பு வந்தது. பேரன் பிறந்திருக்கிறான் என்று. பெரியவர் போய் பார்க்கவில்லை. லட்சுமி அம்மாளும் அமைதியாக இருந்துவிட்டாள்.
சில வருடங்களுக்குப் பின் பெரியவரின் மூத்த மருமகளிடமிருந்து அழைப்பு வந்தது. அது ஒரு துயரமான அழைப்பு.விடுமுறை நாட்களில் எப்போதும் போல் ஆட்டம் பாட்டம் என சுற்றிக் கொண்டிருந்த மகனும் இரண்டாவது மருமகளும் ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்த செய்தி பெரியவரை உலுக்கிப் போட்டது. இடுகாடு வரை சென்று திரும்பிவிட்டார். அந்த நாள் முதல் லட்சுமி அம்மாளின் மனமும் உடலும் மெலிந்து தேய்ந்து கொண்டிருந்தது.
அம்மாவுக்கும் மகளுக்கும் தினசரி சண்டை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவர்கள் சண்டையில் ஒரு பிஞ்சுக் குழந்தை கவனிப்பாறற்று நின்றது. சரியான உணவு இன்றி தவித்தது. வில்லி ஒரு நாள் மகளிடம் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு தஞ்சை வந்துவிட்டாள். வீட்டின் கடன் சுமை, அலுவலக சிக்கல், பணிச்சுமை என்று இருந்தவள், பிள்ளை தன் பிள்ளை இல்லை என்று உணர்ந்தாள். பெரியவருக்கு போன் செய்து இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு வருவதாக சொன்னாள். சொன்னபடியே கோடம்பாக்கம்,கொய்யா தோப்பு, முனீசுவரர் தெருவில் உள்ள ஓட்டு வீடு முன் நீல நிற கார் வந்து நின்றது.பெரியவர் தூரத்தில் நின்று அவதானித்தார். மூத்த மருமகள் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தாள். உடன் ஒரு வாலிபன் இருந்தான். பின் இருக்கையையின் கதவை திறந்து கொண்டு மெதுவாக இறங்கினான் சிறுவன். ‘உங்க பேரன் நீங்களே வச்சுக்குங்க ‘-என்று உரக்க சொல்லிவிட்டு காரை கிளப்பினாள் மருமகள். சிறுவன் மெதுவாக நடந்து வந்து தாத்தாவின் கையை பற்றினான். உதற முடியவில்லை பெரியவரால். ஏனெனில் அந்த குழந்தை சிறு பிராயத்து தன் மகன் போல் இருந்தது. தாத்தாவின் ஸ்பரிசம் பட்டதுமுதல் சிறுவனுள் அலை அலையாக பாசம் பிரவாகமெடுத்தது. ஓட்டு வீட்டு குளுமையைவிட லட்சுமி அம்மாளின் அரவணைப்பு சிறுவனுக்கு பேரானந்தம் தந்தது. அன்று முதல் தாத்தா,பாட்டி என்று சதா பித்துப்பிடித்தவன் போல் சொல்லிக் கொண்டிருந்தான் சிறுவன்.
முதியோர் இல்லத்தில் பெரியவரின் அறையில் கயிற்றுக் கட்டில் வெற்றிடமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரது கைப்பேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அறையை சுத்தம் செய்ய வரும் ஆயாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்தச் சிறுவனை ஆற்றுப்படுத்த தமிழில் என்ன சொல் இருக்கிறது. பெரியவர் காலம் ஆகிப் போயிருந்தார்!
– ‘சிறுகதை’ இதழில் ஆகஸ்டு 2023 ல் பிரசுரமானது.