ஒரு குளத்தில் மூன்று கொக்குகள்




ஒரு நாள் பெரிய கொக்கு, சிறிய கொக்கு என்ற இரண்டு கொக்குகள் இரைத் தேடி குளத்திற்கு சென்றன.
குளத்துக்குள் இறங்கிய இரண்டு கொக்குகளும் ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு மீன்கூட கிடைக்கவே இல்லை.
அப்போது பார்த்து நொண்டி கொக்கு ஒன்று அந்த இரண்டு கொக்குகளுக்கு அருகே வந்து நின்றது. ‘அடடா உங்களுக்கு ஒரு மீன்கூட சிக்கவில்லையா”? எப்படி சிக்கும் இதோ என் வயிற்றைப் பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதென்று இந்த குளத்தில் இருந்த அனைத்து மீன்களையும் இன்று நானே கொத்தி விழுங்கிவிட்டேன். நீங்கள் இருவரும் இன்று பட்டினிதான்’ என்று இரண்டு கொக்குகளையும் பார்த்து நொண்டிக் கொக்கு கேலி செய்து சிரித்தது.
அந்த இரண்டு கொக்குகளும் எதுவும் பேசாமல் அந்த குளத்தைவிட்டு சென்றன.
மறுநாள் அதே குளத்தில் நொண்டிக்கொக்கு மீன்களைச் சாப்பிடுவதற்காக காத்துக்கொண்டிருந்தது. மீண்டும் அந்த இரண்டு கொக்குகள் அக்குளத்திற்கு வந்தன.
நொண்டிக் கொக்கு ஒவ்வொரு முறையும் மீன்களை கொத்த முயற்சித்த போதெல்லாம் கொக்கின் வாய்க்கு அகப்படாமல் மீன்கள் லாவகமாக தப்பித்துக்கொண்டன. நொண்டிக்கொக்கு வெறுத்துப் போய் கரையேறியதும், பெரிய கொக்கும், சிறிய கொக்கும் அதன் அருகே வந்தன.
‘என்ன கொக்காரே இன்று உனக்கு சாப்பிட ஒரு மீன்கூட கிடைக்கவில்லையா? எப்படிக் கிடைக்கும்! அதான் உனக்கு முன் இன்று நாங்கள் முந்திக்கொண்டோமே!’ என்று சொன்ன இரண்டு கொக்குகளும் தங்கள் வாயை திறந்து காண்பித்தனர். அவைகளின் வாய்க்குள் மீன்கள் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தன.
‘உன்னை கோபப்படுத்துவதற்காக நாங்கள் இப்படி செய்யவில்லை. ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது அவர்களை பார்த்து கேலி செய்வது இழிவான செயலாகும். உன் தவறை நீ உணர்ந்து கொள்ளவே நாங்கள் இப்படி பேசினோம்’ என்றது அந்த இரண்டு கொக்குகளும்.
நொண்டிக்கொக்கு தன் தவறை உணர்ந்து இரண்டு கொக்குகளிடமும் மன்னிப்பு கேட்டது.
பிறகு அவர்களுக்கு கிடைத்த உணவை மூன்று கொக்குகளும் பங்கிட்டுக்கொண்டனர்.