ஒரு காலத்துல… – ஒரு பக்க கதை





பழைய திரைப்படம் ஒன்றை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.
படத்தில் தீடீர் பணக்காரனான கதாநாயகன் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கிப் பாடி மகிழ்வது போல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
பாடலில் லயித்திருந்த பார்வதி எதைச்சையாக வாசலைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே…ஒரு பிச்சைக்காரன் நின்று கொண்டு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்ன தைரியம் இருந்தா கேட்டைத் திறந்து வந்து டி.வி. பார்த்துக் கொண்டிருப்பே? முதல்ல வெளியே போ…’ சுட்டெரிக்கும் வாரத்தைகளில் கத்தினாள்.
‘’அப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மா….நான் இப்ப வேணும்னா பிச்சைக்காரனா இருக்கலாம். ஆனால் ஒரு காலத்திலே படத்தாயாரிப்பாளரா இருந்தேன்.
அந்தக் காலத்தில் இந்தப்படத்தை தயாரிச்சவனே நான்தாம்மா….ஏதோ என் நேரம்…இப்படி ஆயிட்டேன். சரி …சரி…அந்தக் கதையெல்லாம் எதுக்கு?….ஏதாவது பழசு இருந்தா போடுங்கம்மா’’ – பரிதாபமாக் கேட்டான் பிச்சைக்காரன்.
– செல்வராஜா (20-10-10)