ஒரு காதல் கதை
பெங்களூர் விமான நிலையத்தில் திருவனந்தபுரம் போவதற்காக காத்திருந்தார் டாக்டர் கிருஷ்ணன்.
இது அவருடைய தனிப்பட்ட ஆசை, எதிர்பார்ப்பு காரணமாக அவரே ஏற்படுத்திக்கொண்ட பயணம். டாக்டர் வனமாலா என்ன சொல்லப் போகிறாளோ என்கிற எதிர்பார்ப்பு ஏராளமாக அவருள் அடங்கிக் கிடந்தது.
டாக்டர் வனமாலாவை அவருக்கு முப்பது வருடங்களுக்கு மேலாகப் பழக்கம். அப்போது வனமாலா, பஞ்சாபகேசன் என்கிற பஞ்சு, மற்றும் கிருஷ்ணன் மூவரும் ஒன்றாக திருவனந்தபுரம் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
வனமாலா சொக்க வைக்கும் அழகு என்பதால் அவள் பின்னால் மெடிகல் காலேஜ் மாணவர்கள் தவமிருந்தார்கள். ஒரே பேட்ஜ் என்பதால் பஞ்சுவும் கிருஷ்ணனும் மட்டும் அவளுடன் சற்று நெருங்கிப் பழக சந்தர்ப்பம் அதிகம் கிடைத்தது.
கிருஷ்ணனுக்கு வனமாலா மீது பயங்கரக் காதல் இருந்தது. ஆனால் அதை அவர் அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பஞ்சு அவருடைய ஹாஸ்டல் ரூம்மேட். மிகவும் அமைதியானவன், கெட்டிக்காரன். கிருஷ்ணனுக்கு அவனிடம் நல்ல நட்பும், மரியாதையும் இருந்தது.
ஒருநாள் திடீரென பஞ்சு கிருஷ்ணனிடம் “மச்சி, உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும். அது நிறைவேற நீதான் எனக்கு ஐடியா சொல்லித் தரணும்..” என்று பீடிகை போட்டான்.
“சொல்லுடா, உனக்கில்லாத ஐடியாவா, உனக்கு என்ன வேணும்?”
“எனக்கு வனமாலாவை ரொம்பப் பிடிச்சிருக்குடா… அவளை நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன். அவளிடம் என் காதலைச் சொல்லிவிட ஆசைப்படுகிறேன்… நீதான் எனக்கு ஐடியா கொடுக்கணும்.”
கிருஷ்ணனுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதுசரி, வனமாலாவை யாருக்குத்தான் பிடிக்காது? என்று நினைத்து நொடியில் சமாதானமடைந்தான். ஒருவேளை அன்று கிருஷ்ணன் வெளிப்படையாக நானும்தான் வனமாலாவைக் காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் பஞ்சு தன் காதலை விட்டுக் கொடுத்திருப்பான்.
கிருஷ்ணன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்படியா? சரி முதலில் உன் காதலைத் தெரிவிக்க ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடு. அவள் சம்மதம் சொன்னால் உன் பெற்றோர்களிடம் பேசு” என்றான்.
அவனுக்கு ஒரு காதல் கடிதத்தை கிருஷ்ணன்தான் டிக்டேட் செய்தான்.
“அன்புள்ள வனமாலா,
நம்முடைய படிப்பு முடிந்ததும் நான் தங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் சம்மதித்தால் என் பெற்றோர்களிடம் பேசுகிறேன். என்னால் ஒரு நல்ல கணவனாக உங்களைச் சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். யோசித்து நல்ல முடிவைச் சொல்லுங்கள்.
இப்படிக்கு, பஞ்சாபகேசன்.
இரண்டே நாட்களில் அவள் சம்மதம் தெரிவித்தாள்.
பஞ்சாபகேசன் மிகுந்த உற்சாகமடைந்தான்.
கிருஷ்ணனுடைய காதல் அடிபட்டு கருகிப்போனது. தான் முந்திக் கொண்டிருந்தால் தனக்கு வனமாலா கிடைத்திருப்பாள் என்று தோன்றியது.
அது அதுக்கு ப்ராப்தம் வேண்டும் என்று தன்னை சமாதனாப் படுத்திக்கொண்டான். மெடிகல் படிக்கும் கடைசி இரண்டு வருடங்கள் அவர்களின் காதலுக்கு நல்ல நண்பனாக உதவினான்.
படிப்பு முடிந்ததும் இருவருக்கும் சென்னை குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில் திருமணம் அமர்க்களமாக நடந்தது. அதற்கு கிருஷ்ணனும் போயிருந்தான். பஞ்சு வனமாலாவின் கழுத்தில் தாலி கட்டும்போது அவனுக்கு இதயம் வலித்தது.
பஞ்சுவும் வனமாலாவும் திருவனந்தபுரத்திலேயே செட்டில் ஆகிவிட்டனர். இருவரும் ஒரே பில்டிங்கில் தனித்தனியாக டாக்டர் ப்ராக்டீஸ் செய்தார்கள்.
அடுத்த இரண்டு வருடங்களில் கிருஷ்ணனுக்கு பெற்றோர்கள் பார்த்துவைத்த மீனலோச்சினியுடன் மதுரையில் திருமணமாயிற்று. அதற்கு பஞ்சுவும் வனமாலாவும் வந்திருந்தனர். கிருஷ்ணன் பெங்களூரில் செட்டில் ஆனார்.
வருடங்கள் ஓடின…
இரண்டு குடும்பங்களும் நட்புடன் நல்ல தொடர்பில் இருந்தன. பஞ்சுவின் இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். கிருஷ்ணனின் ஒரே மகனும் திருமணம் முடிந்து சிட்னியில் செட்டிலாகி விட்டான்.
கிருஷ்ணன் மீனலோச்சினிக்கு ஒரு நல்ல கணவனாக இருந்தாலும், வருடங்கள் பல கடந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வனமாலாவைப் பார்க்கும்போது அவருக்குள் ரகசியமாக ஒரு ஏக்கம் பொங்கி அடங்கும். முதல் காதல் ஏக்கம் அவருள் கனன்று கொண்டேயிருந்தது.
திடீரென ஐந்து வருடங்களுக்கு முன் பஞ்சாபகேசன் ஒரு கார் விபத்தில் பலியானார். கிருஷ்ணனும் அவர் மனைவியும் நேரில் சென்று வனமாலாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
காலச்சக்கரம் வேகமாக நகர்ந்தது…
இரண்டு வருடங்களுக்கு முன்னால் கிருஷ்ணனின் மனைவி ப்ரெய்ன் கேன்சரில் மரித்துப்போனாள்.
இறப்பு என்பது அனைவருக்கும் நிரந்தர உண்மையாயினும் மனைவியின் பிரிவு கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. தனிமையில் வாடுவது மிகவும் கொடுமையான விஷயம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தார்.
இரண்டு நாட்கள் முன்பு அவருக்குள் திடீரென ஒரு பொறி தட்டியது, ஒரு ஹன்ச். ‘வாழ்வின் ஆரம்பத்தில் கைகூடாத காதல், வாழ்க்கையின் அஸ்தமத்தில் கைகூடினால் என்ன? தானும் வனமாலாவும் இப்போது தனித்து விடப் பட்டிருக்கிறோமே ! வாழ்வின் எஞ்சிய காலங்களை வனமாலாவுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் என்ன?’
உடனே பரபரப்புடன் அவளை மொபைலில் தொடர்பு கொண்டார்.
திருவனந்தபுரத்திற்கு ஒரு வேலை நிமித்தம் வருவதாகச் சொன்னார். அவர் எதிர்பார்த்த மாதிரியே “வீட்டிற்கு வாருங்கள்” என்று டாக்டர் வனமாலா அழைத்தாள். “முடிந்தால் கண்டிப்பாக வருகிறேன்…” என்று பிகு பண்ணிக்கொண்டார்.
அவருக்குள் உற்சாகம் கரை புரண்டது. இதோ இப்போது கிளம்பிவிட்டார்.
திருவனந்தபுரம்.
ஹோட்டல் லெமன் ட்ரீயில் அறை எடுத்தார்.
அங்கிருந்தபடியே, “ஹலோ டாக்டர் மை ஒர்க் இஸ் ஓவர்… நாளை பெங்களூர் கிளம்புகிறேன்…” என்றார் பொய்யாக.
“இன்று இரவு டின்னருக்கு வீட்டிற்கு வாங்க கிருஷ்.”
“கண்டிப்பாக.”
ஏழரை மணிக்கு டாக்டர் வனமாலா கார் அனுப்பினாள்.
காரில் ஏறி அமர்ந்தார். கார் வாசனையாக இருந்தது… பின் ஸீட்டில் சந்தன நிறத்தில் சதுரமாக இரண்டு தலையணைகள் இருந்தன. அவைகளை ஆசையுடன் கட்டியணைத்தார். ஐம்பத்தைந்து வயதிலும் காதல் பொங்கியது. ‘இதே காரில் இனி நான் அடிக்கடி வனமாலாவுடன் பவனி வருவேன்’ என்று நினைத்துக் கொண்டார்.
கார் வீட்டையடைந்ததும், போர்டிகோவுக்கு வந்து நின்று டாக்டர் வனமாலா வரவேற்றாள்.
வீட்டினுள்ளே ஒரு வயதான அம்மாளும், ஒரு இளைஞனும் இருந்தனர்.
வனமாலா, “இது பஞ்சுவின் அம்மா; இது வினோத், பஞ்சுவின் கடைசி தம்பியின் மகன், நாம படிச்ச காலேஜ்லதான் மெடிகல் பைனல் இயர் படிக்கிறான்” என்று அறிமுகம் செய்தாள். இதை டாக்டர் கிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை.
டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்துகொண்டு சாப்பிட்டனர்.
ஹோட்டலுக்குத் திரும்பும்போது டாக்டர் வனமாலாவே காரை ஒட்டி வந்தாள்.
“வனமாலா நான் தங்களிடம் சற்று நேரம் பேச வேண்டும்…”
வனமாலா உடனே காரை ரோடின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஹஸார்டஸ் லைட்டை ஆன் செய்துவிட்டு, காரினுள் லைட்டை ஆன் செய்தாள். பிறகு கிருஷ்ணனை பக்கவாட்டில் திரும்பி உற்றுப் பார்த்தாள்.
“டாக்டர் அன்பார்ட்சுனேட்லி வி ஹாவ் லாஸ்ட் அவர் ஸ்பொளஸஸ்… நவ் அட்லீஸ்ட் ஒய் டோன்ட் வி லிவ் டுகெதர்? வீ நோ ஈச் அதர் மச் பெட்டர்…”
வனமாலா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
“ஹவ் இஸ் இட் பாஸிபிள் கிருஷ்? யு நோ மீ அண்ட் பஞ்சு வெரி வெல். முப்பது வருடங்கள் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டோம். நான் அவரை மணந்தவுடன் அவருடைய குடும்பமும் என்னுடைய குடும்பமாகி விட்டது கிருஷ்… தற்போது என்னுடைய வயதான மாமியாரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும்; அவருடைய தம்பி மகனைப் படிக்க வைக்கும் பொறுப்பும், தவிர உங்கள் கண்ணுக்குத் தெரியாத பல கடமைகளும் எனக்கு இருக்கின்றன கிருஷ்…
நம் இந்தியக் கலாசாரப்படி ஒரு விதவையை எந்த ஒரு இன்லாஸ் குடும்பமும் அப்படியே தனித்து விட்டுவிட மாட்டார்கள் கிருஷ். அவளுக்கு ஒரு நல்ல பாதுகாப்பு அரணாகத்தான் செயல் படுவார்கள்… நாம் இப்போது வெகுதூரம் கடந்து விட்டோம் கிருஷ். ஹோப் யு ரியலைஸ் அண்ட் அண்டஸ்டான்ட்… பட் ஸ்டில் ஐயாம் ஆனர்டு பை யுவர் ப்ரப்போசல்.”
காரைக் கிளப்பினாள்.
ஆரம்பக் காதலும் தோல்வி, அந்திமக் காதலும் தோல்வி.
டாக்டர் கிருஷ்ணன் மிகுந்த ஏமாற்றத்தினால் கண்களில் திரண்ட நீரை எச்சில் கூட்டி விழுங்கினார்.
மிக உணர்ச்சிகரமான கதை. காதலை மட்டும் உடனேயே சொல்லிவிட வேண்டும். அதுவும் பலத்த போட்டியின்போது முந்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் டாக்டர் கிருஷ்ணன் மாதிரி வாழ்நாள் முழுதும் முதல் காதலை நினைத்து ஏங்க வேண்டியதுதான்…. லாவண்யா, மேட்டூர்அணை