ஒருவருக்கு நீ… உதவினால்…?





(கதைப் பாடல்)
உலகில் சிறந்த பண்பென
உரைக்கப் படுவதியாதெனின்
பிறர்க்குதவி செய்வது
என்று பெரியோர் சொல்லுவர்.

மன்னன் ஒருவன் ஓர்தினம்
மக்கள் சிலரை அழைத்துமே
உண்ண உணவு வழங்குவேன்
உண்டு போவீர் என்றனன்.
அன்ன தானம் அரசரும்
அவையில் வைத்துச் செய்வதால்
தின்ன வேண்டி யாவரும்
திண்ணையிலே கூடினர்
அரசர் உணவு என்பதால்
அனைவருமே காலையில்
எதுவும் உண்ண வில்லையாம்
இருந்து விட்டார் பட்டினி
திண்ணையிலே இருந்தவர்
திகைக்கும் படி மன்னனும்
வாயிற் கதவைப் பூட்டியே
வைத்துவிட்டான் வெளியே
வயிறு பசியால் துடித்தது
வாட்டி வாட்டி எடுத்தது
வயிறில் நெருப்பு எரியவே
வதங்கி வாடித் தவித்தனர்
மதிய வேளை வரும்வரை
மன்னன் வரவில்லையாம்
யாவருக்கும் கடும்பசி
இலையைப் போட்டு விட்டனர்
பாசுமதி அரிசியில்
வடித்தெடுத்த சாதமும்
பருப்புமிதக்கும் குழம்புடன்
பச்சடியில் பலவகை
பழத்தில் பங்கனப்பள்ளியும்
பாயசத்தில் பலாடாவும்
பஜ்ஜி வடை முறுக்குமே
பந்தியிலே இருந்ததாம்
உண்ணும் முன்பு மன்னனும்
உங்கள் கைகள் மடங்கினால்
ஓட்ட வெட்டி வீசுவேன்
என்று வாளை எடுத்தனன்.
கைகள் மடக்காமலே
கையிலெடுத்து அன்னத்தை
உண்ணுவது எப்படி
உள்ளம் கலங்கி நின்றனர்!
அதிலிருந்த ஒருவரும்
அன்புமிக்க மனிதராம்
அனைவரையும் பார்த்தவர்
அன்புடனே கூறினார்…
அன்னம் எடுத்து எதிரிலே
அமர்ந்தவர்க்கு ஊட்டுங்கள்
கைகள் மடங்காமலே
காரியத்தைச் செய்யலாம்..!
அவரெடுத்து அன்னத்தை
உங்களுக்கு ஊட்டட்டும்
எவர்தடுக்க முடியும்நாம்
இலையில் உண்ணும் அன்னத்தை?
என்று வழியும் காட்டிட
யாவருமே அடுத்தவர்
அரும்பசியைப் போக்கினர்
அன்னம் உண்டு களித்தனர்
மன்னன் வந்து பார்த்தனன்
மலைத்துப் போய் நின்றனன்
மந்திரியை அழைத்துமே,
“பொற்கிழியைக் கொடுத்திவர்
புகழ் பரப்பு!’ என்றனன்,
‘ஒருவர்க்கு நீ… உதவினால்…
உனக்குதவ ஒருவரை
இறைவன் உலகில் அனுப்புவான்
இதனை உணர்ந்து வாழுவீர்!’