ஒருத்திக்கு ஒருவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 15,352 
 
 

1

புருஷனால் விவாகரத்து செய்யப்பட்டு, அன்று தீர்ப்பாகி நீதிமன்றத்தை விட்டு வெளிப்பட்டாள் பானுமதி.  நேற்று வரை ரணகளமாக இருந்த மனம் இப்பொழுது நிர்மலமாய் இருந்தது.  வாழ்ந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது என்ற நினைப்போடு  கூண்டை விட்டு வெளியேறிய பறவை போல்  நிம்மதியும் ஆத்மார்த்தமான சுகமும் அடைந்தாள். 

வாழ்வின் புதிய அத்தியாயத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் மனோதிடமும் அவளுக்கு தோன்றியது. 

 கடைசிப் படிக்கட்டில் கால் வைத்தவளை எதிர்கொண்டான் அவளின் மாஜி புருஷன் ராஜன்.   தான் செய்த பெருந்தவறை நினைத்து வாடுவது போல் அவன் முகத்தில் துயரக்களை அப்பட்டமாய் தெரிந்தது.   அதைப் பற்றி  கவலை கொள்ள வில்லை பானு. வினை விதைத்தவன் வினையை   அனுபவிக்கிறான் என்ற  நியாயமான  நினைப்பு தோன்றியது. 

ராஜன் வழிமறித்து நிற்க எரிச்சலடைந்தாள் பானுமதி.  நேருக்கு நேர் அவனை பார்த்து முறைத்தாள். 

சீற்றம் மிகுந்த  அவள் பார்வையின் தீட்சண்யம் தாளாமல்  தலை கவிழ்ந்தவன்,  “ஸாரி பானு!  இதுதான் நம்முடைய கடைசி சந்திப்பு! “பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான். ”  நீ ஜீவனாம்சம் வேண்டாம்னு எழுதிக் கொடுத்தது மனசுக்கு கஷ்டமாயிருக்கு.  பரவாயில்லை.  ஆனால், உனக்கு கடைசியாக ஏதாவது தர வேண்டும்ங்குற ஆசை! எதுவாக  இருந்தாலும் கேள் பானு , தர சித்தமாயிருக்கேன். “என்றான் கெஞ்சும் தொனியில் சீற்றம் குறையாமல்  அவனைப் பார்த்தாள்.  ‘ஹூம்..நான் கேட்காமலே  எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தீர்களே. அதுவே அருமையான பரிசுதான். அதைத் தவிர வேறு என்ன வேண்டும்?’  என வேதனையுடன்  நினைத்தவள்  மனத்தில் சட்டென அந்த யோசனை  தோன்றியது.  கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி,  “சரி, ஒண்ணு கேட்கிறேன்..செய்வீர்களா?” 

அவள் இப்படி கேட்டதும், பரவசப்பட்டு  தலை நிமிர்ந்தான்.  “என்ன செய்யணும்? சொல்லு  பானு ..”  என்று பட படத்தான்.

அவனை குறு குறுவன்று பார்த்தவள் ,”இனி அடுத்ததாக கட்டிக்கப் போறவளை யாவது, என்னை மாதிரி பாதியில் கழற்றிவிடாமல்  கடைசி வரைக்கும் வைத்துக் காப்பாற்றுங்கள்.   அது ஒண்ணே போதும். “சரியான பதிலடி கொடுத்த திருப்தியில்,  விடு விடுவென்று  நடந்து  சென்றாள் பானுமதி. 

சாட்டையடிகளாக விழுந்த வார்த்தைகளில் நிலைகுலைந்து போனான் ராஜன்.   அடிபட்ட பாம்பு சீறுவதுபோல், சொல்ல வேண்டிய தருணத்தில்,  மிக கச்சிதமாக உள்ளக் குமுறல் மூலம் வார்த்தைகளைப் பிரயோகித்து விட்டாள்.  அம்மாவின் பயமுறுத்தல் பேச்சைக் கேட்டு,  சாதுவானவளையும் , பண்புமிக்க நல்லவளையும்  நிரந்தரமாகப்  பிரிய வேண்டியிருப்பதை நினைத்து வருத்தமும் வேதனையும் அடைந்தான்.  

பானு செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையை கண்ணீர் கசிந்து திரையிட்டு மறைத்தது.  கூடவே ஆழ்ந்த பெருமூச்சொன்றும் ராஜனிடமிருந்து வெளிப்பட்டது.  அப்படியே துவண்டு போய் நடையைக் கட்டினான்.  இனி பானுமதி தனக்குச் சொந்தமில்லை. அவள் யாரோ, தான் யாரோ? நினைக்கும் போதே நெஞ்சு பூராகவும் வேதனை கவ்வியது. 

சின்ன வயதில் அப்பாவை இழந்த தன் மகன் ராஜனை எந்தவிதக் கஷ்டமும் தெரியாவண்ணம் நன்றாக  வளர்த்தாள் சரோஜா.  கல்லூரிக்குச் சென்று வர புதிய டூ வீலர், வித விதமான காஸ்ட்லி உடுப்புகள், மேலும் மகன் எது கேட்டாலும் தட்டாமல் வாங்கிக் கொள்ள பணமும்  கொ டுத்தாள்.

அவர்கள் பண விஷயத்தில் சிரமம் ஏற்படா திருக்க பெரிய வீடு, கணிசமான வங்கி இருப்பு, மற்றும் கிராமத்தில் ஏராளமான நில புலன்கள் – இவைகளை விட்டுச் சென்றார் ராஜனின் தந்தை .

பி.இ. படிப்பை முடித்தவன்  நல்ல வேலையில் சேர்ந்தான்.  சிவந்த நிறத்தில்  ஆறடி உயரம் கொண்ட  கம்பீரமான தோற்றம் ; மூக்கும் முழியுமாக சினிமா நட்த்திரம் போல் கவர்ச்சியாகவும் காணப்பட்டான் ராஜன்.

மகனின் கல்யாணத்திற்காக பெண் பார்க்க  அலைய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை சரோஜாவிற்கு. ஒரே ஒரு வரன், அதுவும்  நல்ல வரனாக பானுமதி கிடைத்தாள்.  இருவரது ஜாதகமும் நன்றாக பொருந்தியிருந்தது .  அதுவும் நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பானுமதிக்குத்  தாய் கிடையாது. தந்தை ராகவன் மட்டுமே இருந்தார். 

பெண் பார்க்கும் படலத்தில், பானுமதிக்கும் ராஜனுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது மட்டுமில்லாமல், ராகவனுக்கு பிள்ளையையும், சரோஜாவிற்கு பெண்ணையும் பிடித்திருந்தது. 

 சரோஜா கல்யாணத்திற்காக எதுவும் டிமாண்டு செய்யவில்லை.  ராகவனின் இஷ்டம் போல் திருமணத்தை நடத்தச் சொல்லிவிட்டாள்.  

வசதி படைத்தவர்கள் கார் கேட்பார்கள்,  ஏராளமான வரதட்சணை,  மற்றும் நகை நட்டுகள், பாத்திரம் பண்டங்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள் என நினைத்தார் ராகவன். ஒரே மகளுக்காக அவைகளைச் செய்யவும் தயாராய் இருந்தார். 

ஆனால் இவைகள் எதையும் சரோஜாவோ அல்லது ராஜனோ கேட்கவில்லை. அதுதான் ஆச்சரியமாக இருந்தது.  ஆனாலும். எந்தக் குறையுமில்லாமல் நிச்சயத்தார்த்தம் தொடர்ந்து மகளின் திருமணத்தையும் சீரும் சிறப்புமாக  நடத்தினார் ராகவன் .

 புகுந்த வீட்டில் தாலி கட்டிய  கணவனிடம் அன்புடனும் பாசத்துடனும் முகம் கோணாமலும்  நடந்து கொண்ட பானுமதி மாமியாரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.  எந்த விகல்பமும்  இல்லாமல் ஒளிவு மறைவின்றி திறந்த மனத்துடனும்,  சிரித்த முகத்துடனும் பழகும்  மருமகளை வெகுவாகப் பிடித்துப் போயிற்று சரோஜாவிற்கு.  பெற்ற மகளைப்போல் மருமகளை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினாள்.

தந்தை அழைப்பது போல் மாமியாரும் தன்னை ‘பானும்மா’ என்று அழைப்பது வெகுவாகப் பிடித்திருந்தது பானுமதிக்கு. அதன் மூலம் மாமியார் தன் மீது எவ்வளவு பாசமும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து பூரித்துப் போனாள் பானுமதி. 

தாயில்லாத குறையை தீர்த்து வைக்கும் மாமியாரைத் தனக்கு தந்த இறைவனுக்கு மானசீகமாக நன்றி செலுத்தினாள் பானுமதி.  

அதனால், மாமியாரை அத்தை என்று அழைக்காமல் ‘மம்மி ‘என்று அழைக்கத் தொடங்கினாள். அப்படி மருமகள் அழைப்பதைக்  கேட்டு உவகை கொண்டாள் சரோஜா.

“இதோ பார் பானும்மா! நீ புதுசா கல்யாணமானவள்.  கொஞ்ச நாள் ஹாய்யா இருந்துக்கோ”. திடீரென மாமியார் இப்படிச் சொன்னதும் பானுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால், “மம்மி, என்ன சொல்றீங்கன்னு தெரியல்லையே!”  என்றாள்.

லேசாகச் சிரித்த சரோஜா, “நீ வேலை எதுவும் செய்ய வேணாம் . சின்னஞ் சிறுசுகள். உன் புருஷனோடு வெளியில் நாலு இடங்களுக்கு ஜாலியா போயிட்டு வா. வீட்டுல இருக்கும் போது  டி.வி.பாரு. புத்தகம் படி . இல்ல நியூஸ் பேப்பர் படி…” 

“மம்மி , சமையல் வேலை தவிர மற்ற வேலைகள் செய்ய ஆளுங்க இருக்காங்க. சமையலை நீங்க கவனிச்சுக்கிறீங்க. அதுக்கு கூட மாட நான் ஒத்தாசை செய்ய வேணாமா?” 

“பானும்மா!  அந்த ஒத்தாசைதான் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டி வைன்னு சொல்றேன். ஒரு வருஷமோ இல்ல ஓண்ணரை வருஷமோ நீ இந்த வீட்டுல எந்த வேலையும் செய்யக் கூடாதுங்கறது என் விருப்பம்! நீ என்னை ‘மம்மி’ ன்னு உள்ளன்போட நினைக்கறதா இருந்தால் நான் சொல்றதை நீ கேட்டுதான் ஆகணும்.”

சரோஜா  தீர்த்துக் கூற அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் பானுமதி.  எத்தனை உன்னதமான மாமியார்!  மருமகள்கள் கண்களில் விரலை விட்டு  உண்டு இல்லேன்னு ஆட்டும்  மாமியார்கள் மத்தியில் இப்படி தங்கமான ஒரு நபர்! 

இப்படியே இருவருக்குமிடையே எந்தச் சுணக்கமுமில்லாமல் நாட்கள் மெதுவாக நகர்ந்தன. 

மனைவியும் அம்மாவும் நல்ல புரிதலோடு பழகும் விதம் கண்டு பூரித்துப் போனான் ராஜன். இவர்களின் நல்லுறவு இப்பொழுது போல் எப்பொழுதும் தொடர்ந்து இருக்க வேண்டும்; விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தான். 

ஆனால் சில வருடங்களில் பெரும் துயரை தான் சந்திக்க நேரிடும் என்பது அவனுக்குத் தெரியாது.

கல்யாணமாகி நாலரை  வருடங்கள் வரை எந்த ஓரு வில்லங்கமும் இல்லாமல் ஓடியது வாழ்க்கை!

முதல் வருடம் தேன்நிலவுக்கு பானுமதியை சிம்லா, அடுத்த வருடம் ஊட்டி, அதற்கு அடுத்த வருடம் கொடைக்கானல் என்ற இடங்களுக்கு  அழைத்துச் சென்றான். உள்ளூரிலும் நாடகம், திரைப்படமென்று அடிக்கடி வெளியே செல்ல, பொழுது இன்பமாக கழிந்தது. 

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி  வருவது இயற்கையாக இருந்தாலும் ,  இன்பத்தை மட்டும் ஏற்று துன்பத்தை ஏற்க மனமில்லாமல் அவதிப்படுவோர் நிறைய பேர்  உள்ளனர். 

அப்படித்தான் நாலரை வருடங்களாக துன்பம் என்பது அறியாமல் இருந்த பானுமதிக்கு, இனி (அந்த வீட்டில் இருக்கும் வரை) தான் துன்பத்தில்  உழலப்போகும் துர்பாக்கிய நிலை ஏற்படப் போகிறது என்பது தெரியாது. ஆனால் கூடிய சீக்கிரமே தெரிய ஆரம்பித்தது. 

திடீரென கடந்த சில நாட்களாக மாமியாரிடம் ஏதோ வித்தியாசம் தெரிவதை கண்ட பானுமதி துணுக்குற்றாள். முன்பு இருந்த அன்பும், அரவணைப்பும் சுத்தமாகக் காணாமல் போய், சிடு சிடுப்பும், கடு கடுப்பும்  குடிகொண்டிருந்தது. இத்தனைக்கும்,  கடந்த மூன்று வருடங்களாக தான் வழக்கம்போல் செய்து வரும் காரியங்களில் எந்த விதக் குறைபாடும் இல்லை என்பதை பானு அறிவாள். ஆயினும், திடீரென்று மாமியாரிடம் காணப்படும் மாறுதல் கண்டு கவலை கொண்டாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். முடியவில்லை. அன்று இரவு மனசு தாளாமல் தன் புருஷனிடம், “என்னங்க! வர வர உங்கம்மா இப்போதெல்லாம் என்னைப் பார்த்தாலே முகத்தை தூக்கி வச்சுக்கிறாங்க. என் கிட்ட சரியா பேசறதில்ல. நான் மாறிவிட்டேனா? இல்லையே, எப்பவும் போல நார்மலாதானே இருக்கேன். ஏங்க இப்படியிருக்காங்க?” குரல் தழு தழுக்கச் சொன்னாள் பானு.

காது கொடுத்துக் கேட்ட ராஜன், “பானு, அம்மாவுக்கு வயசாகிவிட்டது. எதையாவது மனசுல வச்சுக்கிட்டு இப்படி நடந்துக்குறாங்க. கொஞ்ச நாள்ல சரியாகிடும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் நார்மலா இருந்துக்க.” என்றான் ஆறுதலாக.

அதே சமயம் அவன் மனதில் நடந்த இரு சம்பவங்கள் வந்தன. அவை இரண்டும் மாமியார் மருமகளாக இல்லாமல் தாய் மகள் என்ற உறவைப் பிரதிபலிக்கும்படியாக அமைந்தது இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருந்தது! 

முதலாவது… கல்யாணமாகி சில நாள் கழிந்திருக்கும். அன்று ராஜன் அலுவலகம் சென்றிருந்தான். மதியம் ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் பானுமதி. கடந்த அரை மணி நேரமாக தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. தன் வலது கையால் நெற்றியைத் தேய்த்தபடி முனகிக் கொண்டிருந்தாள். 

அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட சரோஜா, பானு அவஸ்தையில் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். 

“பானும்மா, என்னம்மா உடம்புக்கு?”பதற்றத்துடன்  கேட்ட மாமியாரிடம் தலைவலி என செய்கையில் காண்பித்தாள் பானு.

உடனே,  பானுமதியை அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்து அவள் நெற்றியில் தைலத்தை சரோஜா இதமாகத் தடவி விட சில நிமிடங்களில் தலைவலி குறைந்தது. 

“தேங்க்ஸ் மம்மி! எங்கம்மா இருந்திருந் தால் கூட இந்த அளவுக்கு இப்படி நடந்திருப்பாங்களாங்குறது சந்தேகம்தான். உங்களோட அன்பும் பாசமும் பெற நான் கொடுத்து வெச்சிருக்கணும். “நெகிழ்ச்சியுடன் கண்கள் பனிக்க கூறிய மருமகளைப் பார்த்து கனிவோடு சிரித்தாள் சரோஜா.  

“பானும்மா! நீ எனக்கு மருமகள் மட்டும் கிடையாது. மகளும் கூட. அதனால்தான் உன் மம்மியாக நடந்துக்கிறேன். “

மாமியார் பேச்சு பானுவை உருக்கியது! அப்படியே பாசத்துடன் மாமியார் உள்ளங்கைகளைப் பற்றி தன் இரு கன்னங்களிலும் வைத்துக் கொண்டாள். தன் அம்மாவைக் காட்டிலும் பல மடங்கு அன்பையும் பாசத்தையும் தன் மீது பொழியும் மாமியார் மீது அளவில்லாத நேசம் உண்டாகிற்று. 

இதை அலுவலத்திலிருந்து திரும்பிய தன் புருஷனிடம் சொல்லி மாய்ந்து போனாள் பானுமதி.  

இன்னொரு சம்பவம்! சரோஜா விற்கு எப்பொழுதாவது இரண்டு முழங்கால்களிலும் வலி தோன்றும்.  நடக்க முடியாமல் சிரமப்படுவாள்.  உட்கார்ந்திருந்த போதிலும் வலி யில் அவஸ்தைப்படுவாள்.  அப்போதெல்லாம் சிரமப்பட்டு தானாகவே தைலம் தேய்த்துக் கொள்வாள்.  

அன்று அந்த வலி தோன்றியது. அதனால் சோஃபாவில் அமர்ந்திருந்தவள் வலி மிகுதியால் கால்களை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள் சரோஜா.

பார்த்த மாத்திரத்தில் பானுவுக்குப் புரிந்தது, மாமியாருக்கு முழங்கால் வலியென்று.  “மம்மி, கால் வலிக்கிறதா? இருங்க நானே  தைலம் தேய்ச்சி விடறேன்.”  என்றவள்,  உடனே கப் போர்டைத் திறந்து பாட்டிலை எடுத்து வந்து மாமியார் முன்னால் தரையில் அமர்ந்தாள். 

ஏற்கனவே அந்த தைல பாட்டில் பற்றி  மாமியார் சொல்ல கப் போர்டில் பார்த்திருக்கிறாள் பானு. இடது உள்ளங்கையில் தைலத்தை ஊற்றிக் கொண்டு மாறி மாறி மாமியாரின் வலது, இடது முழங்கால்களைப் பற்றி தடவி, நீவி விட்டாள்.  உருகியும் விட்டாள். 

மருமகளின் பணிவிடையில் உச்சி குளிர்ந்து போய் மெய் மறந்திருந்தாள் சரோஜா.

அதன்பிறகு அவர்கள் சம்பாஷனையில் உள்ளம் உருகும் வரையில் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன! 

இவை போதாதென்று தினமும் தன் கையாலேயே மருமகள் தலையைச் சீப்பு கொண்டு வாரி பின்னல் பின்னி ஒரு முழம் ஜாதிமல்லிப் பூவைச் சூடி அழகு பார்த்து மகிழ்வது சரோஜாவின் வழக்கம்! 

இதெல்லாம்  நியாபகத்தில்  வர நொந்து போனான் ராஜன். இப்படியெல்லாம் இருந்த அம்மா திடீரென பானு மீது ஏன் வெறுப்புக் கொள்ள வேண்டும் என்பது விளங்கவில்லை.  

ஆரம்பத்தில் மகளைப் போல் பழகி, அதீத அன்பையும் பாசத்தையும் பொழிந்தவள்  இப்பொழுது தலைகீழாக மாறிவிட்டதை எண்ணி கவலை கொண்டான். 

ஆனால், அம்மாவின் மாறுதலுக்கான காரணம்  கூடிய சீக்கிரமே தெரிய ஆரம்பித்தது. 

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, பானுமதி தந்தையைப் பார்ப்பதற்கு பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தாள்.  

தன் அறைக்குள் இருந்தபடியே லேப்  டாப்பில் மூழ்கியிருந்த ராஜன் அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான். சரோஜா நின்று கொண்டிருந்தாள்.

“வாம்மா.” 

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்ட சரோஜா , “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”என்றதும் லேப் டாப்பை  ஆஃப் செய்தான். “சொல்லும்மா, என்ன விஷயம்?” என்றான். 

“ராஜன், சுற்றி வளைக்காம நேராக விஷயத்துக்கு வரேன்…உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி நாலரை வருஷமாகறது. இல்லையா?” 

“சரிம்மா..அதுக்கென்ன இப்போ?”கன்னத்தில் தன் வலது கையை வைத்தபடி ராஜன் கேட்டான்.

“உன் பெண்டாட்டி இன்னும் மூழ்காமல் இருக்கிறாள். எனக்கும் வயசாகிக்கிட்டே போகறது. காலா காலத்தில் ஒரு பேரனோ இல்ல பேத்தியோ பெத்துக் கொடுத்திருந்தால் அதுக்கூட நான் கொஞ்சி விளையாடிக்கிட்டிருப்பேன்….போற போக்கைப் பார்த்தால் அதுக்கு வழியில்லாமல் போயிடும்போல இருக்கு!” ஆழ்ந்த வருத்தத்துடன் கூறிய அம்மாவைக் கனிவுடன் பார்த்தான். 

“உன் வருத்தம் எனக்கு புரியுது. எதுக்கும் ஒரு நேரம் காலம் வரணும். கொஞ்சம் பொறுமையா இருந்துக்கோம்மா.” 

“இதோ பாருப்பா…நம்ம பரம்பரையில்,  எல்லாருக்கும் அதிகப்பட்சமாக ரெண்டு வருஷத்துக்குள்ளாறயே குழந்தை பிறந்திருக்கு. உன்னோட தாத்தா, கொள்ளுத்தாத்தா, எல்லாருக்கும் கல்யாணமாகி அடுத்த வருஷமே குழந்தை பெத்துக்கிட்டாங்க. 

“இவ்வளவு ஏன்? எனக்கு கல்யாணமாகி  ஒண்ணரை வருஷத்தில் நீ பிறந்தே…ஆனால், உன் விஷயத்தில் நாலரை வருஷமாகியும் எதுவும் நடக்காதது  எனக்கு கவலையாயிருக்கு! நல்லா யோசிச்சுப் பார். நம்மக் கிட்ட இருக்கற ஏராளமான சொத்துக்களைக் கட்டிக் காக்க உனக்கு ஒரு வாரிசு வேண்டாமா?”  விழியசையாமல் அம்மாவையேப் பார்த்துக் கொண்டி ருந்தான் ராஜன். 

சரோஜா தொடர்ந்தாள்.  “நான் ஒண்ணு சொல்றேன் செய்வியா?”  என கேட்க,

“சொல்லும்மா!”என்றவனுக்கு திடும் என்றிருந்தது.  அம்மா வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளை பீதியுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் ராஜன்.

“ஒருதடவை நீயும், பானுமதியும் நம்ம கிராமத்துல இருக்குற பொட்டு அம்மன் கோயிலுக்குப் போய் குழந்தை வரம் வேண்டி விரதம் இருங்க. சக்தி வாய்ந்த அம்மன்!  இதுவரை சில பேருக்கு அந்த பாக்கியம்  கிடைச்சிருக்கு. உங்க ரெண்டு பேரையும் அம்பாள்கைவிடமாட்டா. நிச்சயமா பலன் கிடைக்கும். உடனே புறப்படுற வழியைப் பாரு.” 

‘இவ்வளவுதானா’ என நிம்மதியடை ந்தவன், “சரிம்மா” என்றான்.

அம்மா அறிவுரைபடி மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி அவளை பூர்வீக கிராமத்தில் உள்ள  அம்மன் கோயிலுக்கு அழைத்துச்சென்றான் ராஜன். தான் இன்னும் தாய்மையடையவில்லை என்பதுதான் மாமியாரின் கவலை கலந்த கோபம் என்பதை அப்போது அறிந்து கொண்டாள் பானு.

ஆனாலும் அதற்காக இத்தனை வெறுப்பும் அலட்சியமும் தன் மீது மாமியார் கொண்டிருப்பது பெருங்கவலையைத் தந்தது பானுவிற்கு.

கிராமத்து மக்கள் வந்திருப்பது  இன்னாரென்று அறிந்து இருவரையும் முகம் மலர்ந்து வரவேற்றனர். விகல்பமில்லாமல்அவர்கள் பழகும் விதம் கண்டு சந்தோஷப்பட்டாள்  பானுமதி.  

மேலும் பானுமதிக்கு அந்தப் புதிய சூழ்நிலை நிறையவேப் பிடித்திருந்தது. பச்சை பசேலென்று காணப்படும் வயல்வெளிகள், தென்னந் தோப்புகள், மாந்தோப்புகள், பலா, வாழை மரங்கள்  என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தன.  வெகுவாக ரசித்தாள் பானு.  

கோயிலுக்குச் சென்றார்கள் இருவரும். விரதம் இருந்தனர். கூடவே நேர்த்திக் கடன்களும்  செலுத்தினார்கள்.

இதுமட்டுமல்ல. இன்னும் சில கோயில்களுக்கும் சென்று உள்ளம் உருகி வேண்டுதலும் செய்தார்கள். பிள்ளை வரம் வேண்டி வீட்டில் யாகமும் செய்தாகிவிட்டது. ஆனால் மாதாமாதம் முதல் தேதி பிறந்ததேயொழிய பானுமதிக்கு குழந்தை பிறக்கும் சுவடே தெரியவில்லை. 

சரோஜா  பொறுமையிழந்தாள். கூடவே வெறுப்பும் கவலையும் சேர்ந்து கொண்டன. இது வரை தடையில்லாமல்   வழி வழியாக வாரிசுகள் உருவாகி வந்தனர். அப்படி வாரிசு உருவாகாமல், இப்பொழுது வம்ச விருத்திக்கு முடிவு வந்துவிடுமோ என்ற அச்சமும் அவள் மனதில் தோன்றியது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டாள். 

அன்று வெள்ளிக்கிழமையானதால், பானுமதி கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்ல, தோதாய் சந்தர்ப்பம் கிடைத்தது சரோஜாவிற்கு.  குளியல் அறையைவிட்டு வெளி வரப்போகும் மகனுக்காக ஒருவித படபடப்புடன்காத்துக் கொண்டிருந்தாள்.

குளித்து விட்டு  ராஜனும் ஹாலுக்கு வந்தான். உடனே, சரோஜா அரக்க பரக்க சமையலறையில் இருந்து வெளிப்பட்டாள். கையில் கரண்டியுடன், புடவைத் தலைப்பை இழுத்து சொருகியபடி பத்ரகாளிபோல் அவள் வந்து நின்ற தோற்றம் கண்டு ஆடிப்போனான் ராஜன். 

“இதோ பாருப்பா. இப்படியே மச மசன்னு இருக்குறதில ஒரு பிரயோஜனமுமில்ல.. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குற வழியைப் பாரு..நான் சொல்றது புரியறதா?”  

‘என்ன நடவடிக்கை எடுப்பது? ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கலாமா.  இல்லை ஒருவேளை உன் மனதில் இருக்கற வேற மாதிரி  யோசனைபடி பானுவை…’

….அதற்குமேல் நினைக்கப் பிடிக்கவில்லை. கஷ்டமாயிருந்தது. 

மலங்க மலங்க விழித்தவனுக்கு  குழந்தை விஷயத்தில் அம்மா படுகின்ற அவசரம் கவலையைக் கொடுத்தது .

“என்னம்மா செய்யச் சொல்றே?… குழந்தை காப்பகத்திலேர்ந்து  ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கலாமா  சொல்லு?”  தயங்கி தயங்கி கேட்டான்  ராஜன்.

வெகுண்டாள்  சரோஜா, “போடா போக்கத்தவனே! யாருக்கோ பிறந்த குழந்தையை நீ ஏண்டா தத்தெடுக்கணும்? உனக்குப் பிறந்ததாக இருக்கணும். அப்போதாண்டா குழந்தைமேல் மெய்யான அன்பும், பாசமும் ஏற்படும்! கடைசி வரை என் குழந்தைன்னு நீ பெருமையாச் சொல்லிக்கவும் முடியும். அதைவிட்டு தத்து எடுக்கறானாம் தத்து!”  வார்த்தைகளில் அனல் பறக்க,  ராஜன் மிரண்டான்.

தொடர்ந்து,  “இதோ பார், நான் சொல்லப் போற விஷயம் உனக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் வேற வழி எனக்குத் தெரியல்ல… ஆமாம்..குழந்தை பெற்றுத் தரமுடியாத பானுமதியை உடனே நீ ஒதுக்கணும். அதாவது விவாகரத்து செய்துவிட்டு வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கணும்…அது ஒண்ணுதான் தீர்வு! “என முடித்தாள். 

சரிதான்,  அம்மா இந்த மாதிரி ஒரு விபரீதமான யோசனைதான் கூறுவாள்

என எண்ணிக் கொண்டிருந்த ராஜனுக்கு மனசு வலித்தது. இவ்வளவு சீக்கிரத்தில் பானுவிற்கு இப்படிப்பட்ட தண்டனை கொடுப்பதில் துளிக்கூட சம்மதமில்லை.

“அம்மா, எத்தனையோப் பேருக்கு திருமணமாகி பல வருஷங்கள் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு. எங்களுக்கு மணமாகி அஞ்சு வருஷம்தான் ஆகிறது. அதுக்குள்ள இப்படி அவசரப்பட்டால்  எப்படிம்மா?”  என்றான் பவ்யமாக.

“நீ காக்கலாம்பா! என்னால் முடியாது….” என்றவள் கண்கள் சட்டென கலங்கின.  “உனக்குத் தெரியாது….இப்பல்லாம் அடிக்கடி எனக்கு நெஞ்சு வலி வரது.. நான் எப்ப வேணும்னாலும் கண் மூடலாம்…” தொண்டையடைக்கச் சொன்னாள். 

ராஜன்  பதற்றமடைந்தான். “அய்யோ! இதை ஏம்மா என் கிட்டச் சொல்லல்ல?” அம்மா கையை ஆதூரத்துடன் பற்றினான். 

“சொன்னால் வருத்தப்படுவே. எப்படியோ சமாளிச்சுக்கிட்டிருக்கேன்…சரி,  நான் கண் மூடறதுக்குள்ள என்னோட பேரனையோ இல்லை பேத்தியையோ என்  கண்ணால பார்க்கணும். பானுமதியால் முடியாது.  அதனால் அவளை விவாகரத்து பண்ணிட்டு வேற நல்ல பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. அது ஒண்ணுதான் எனக்கு ரிலீஃபை கொடுக்கும்.” தீர்த்துச் சொல்லிவிட்டு  அகன்றாள் சரோஜா.

திகைத்துப் போய் நின்றான் ராஜன். வெகு சுலபமாக சொல்லி விட்டாள். அவ்வளவு எளிதில் செய்யக் கூடிய காரியமா இது? குழந்தைப் பேறு இல்லை என்பதுதான் காரணம்! இருவரில் யாரிடம் குறை இருக்கும்..ஒருவேளை தன்னிடம் இருந்தால் கேஸ் அடிபட்டுப் போகுமே! அப்படி தன்னிடம் குறையிருக்கும் பட்சத்தில் பானு மீது குற்றம் சுமத்தினால் அது அயோக்கியத்தனம் ஆகாதா?. அல்லது கண்ணை மூடிக் கொண்டு பானுமதி இதற்கு சம்மதிப்பாளா?  

பானுமதியை நினைக்கையில் பாவமாயிருந்தது. இது வரையில் எடுத்தெரிந்து பேசியதில்லை. எள் என்றால் எண்ணையாக வந்து  சொன்ன வேலைகளைச் செய்து முடிக்கிறாள். எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபமே வருவதில்லை. எப்பொழுதும் சாந்தம் தவழும் முகம். இப்பொழுதெல்லாம் அம்மா மூஞ்சியைக் காட்டினாலும் பானு முகம் கோணாமல் நடந்து கொள்கிறாள். இப்படி எல்லா விஷயங்களிலும் அரவணைத்துச் செல்வதால், அவளிடம் குற்றம் காண முடியாது. அப்படிப்பட்ட பண்பானவளையும் நல்லவளையும்  இழக்கச் சொல்கிறாளே  அம்மா! மனதுக்குள் பொருமினான்.

அம்மாவின் கூற்று நியாயம் இல்லாமல் போனாலும் அவளின் தேக ஆரோக்கியம் பயமுறுத்துகிறது. அந்த அஸ்திரத்தை கையில் எடுத்து விட்டாள். மிரட்டுகிறாள்.  ‘அம்மாவா, அல்லது  மனைவியா? பெற்றவளா, இல்லை என்னை நம்பி வந்தவளா?‘ 

குழப்பத்தில் தவித்தவன், நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, கடைசியில் மனசில்லாமல் அம்மாவின் சொல்படி நடப்பது என்று முடிவு எடுத்தான். அதன் விளைவு பல்லைக் கடித்துக் கொண்டு பானுவிடம் கொஞ்சம் கொஞ்சமாக  வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தான் ராஜன். 

இப்பொழுதெல்லாம், கணவன் முன்போல் இல்லாதது கண்டு கவலையுற்றாள் பானு. காலையில் காஃபி குடிப்பது முதல் இரவு டின்னர் சாப்பிடும் வரை ‘பானு பானு’ என்று மூச்சுக்கு மூச்சு முன்னூறுதடவை கூப்பிடுபவன் மாறாக அம்மாவைக் கூப்பிட்டு தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். பானுவின் அருகாமையை வெறுக்கிறான். 

இரவு நேரங்களில் அறைக்குள் படுப்பதையும் தவிர்க்கிறான். இப்படி எல்லா விஷயங்களிலும் புருஷன் தன்னை வெறுத்து ஒதுக்குவதை அறிந்த பானுவிற்கு மனசு  வலித்தது. அம்மாக் கூடச் சேர்ந்து பிள்ளையும் ஆடுவதாக மனதில் பட உள்ளுக்குள் புழுங்கித் தவித்தாள்.

மகனிடம் காணப்பட்ட மாற்றம் கண்டு உள்ளுக்குள் உவகை கொண்டாள் சரோஜா.

தான் எதிர்பார்க்கும் செயல் நடந்தேறப்போவதை நினைத்து களிப்பும் அடைந்தாள்.

பானுவிற்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாகக் கழிவதுபோல் இருந்தது. மொத்தத்தில் தான் நரகத்தில் இருப்பது போல உணர்வுதான் தோன்றியது. 

அன்று, சந்தர்ப்பம் பார்த்து, நெஞ்சைக் எல்லாக்கிக்கொண்டு , தயங்கி தயங்கி  ‘விவாகரத்து’ விஷயம் பற்றி ராஜன் எடுத்துச் சொல்ல பானுமதி அவ்வளவாக அதிர்ச்சியடையவில்லை.  

விஷயத்தைக் கூறிவிட்டு தலை கவிழ்ந்து நின்ற தன் புருஷனை வெறுப்புடன் நோக்கினாள். ஏதோ கூற வேண்டும் என மனம் படபடத்தது. ஆனாலும் எதைக் கூறினாலும் அவன் மண்டையில் ஏறாது என்ற எண்ணமும் தோன்றியது. 

தான் இன்னும் தாய்மைப்பேற்றை  அடையவில்லை என்பதுதான் தன்னை அவர்கள் வெறுத்து ஒதுக்கக் காரணம் என்பது புரியாமலில்லை  பானுமதிக்கு. ஆனால் அப்படி ஒன்றும் நேரம் கடந்துவிட வில்லை. மாமியார் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருந்திருக்கலாம். புருஷனும் நல்ல விதமாக தன் அம்மாவுக்கு விஷயத்தைக் கூறி ‘கன்வின்ஸ்’ செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யாமல் தன் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருந்து விட்டான் தன் புருஷன் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருந்தது பானுவிற்கு.

மொத்தத்தில்  கடந்த சில நாட்களாக அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் உச்சக்கட்டம் இது என்பதும் விளங்கிற்று. நல்ல புரிதல் இல்லாத குடும்பத்தில் இருப்பதைக் காட்டிலும் இவர்களைவிட்டு நிரந்தரமாகப் பிரிவதே மேல் என எண்ணி விவாகரத்திற்கு  சம்மதம் தெரிவித்தாள் பானு. 

ஆனால் சட்டப்படி இருவரும் ஒரு வருடம் பிரிந்திருந்தனர். அதன்பிறகு விவாகரத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. அதற்குத்  தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட பானுமதி எல்லாவற்றுக்கும் தன் முழு ஒத்துழைப்பையும்  தந்தாள். கண்களை மூடிக்கொண்டு எல்லா பேப்பர்களிலும் கையெழுத்திட்டாள். 

நல்ல வேளையாக இந்தக் கண்றாவியை பார்த்து வேதனைப்பட பானுவின் தந்தை இப்பொழுது உயிரோடில்லை. சமீபத்தில் தான் காலமானார். 

ஆனால் விவாகரத்திற்குப் பிறகு மகனின் போக்கு எல்லா விஷயங்களிலும் விட்டேர்த்தியாக இருப்பதைக் கண்டாள் சரோஜா.

காலையில் எழுவது முதல் இரவு படுக்கும் வரை எதிலும் மனசு ஒட்டாமல் இருந்தான் ராஜன். பானுவின் பிரிவு அவனை நிறையவே பாதித்திருந்தது. அவசரப்பட்டு செயல்பட்டது தீயாக அவன் நெஞ்சைச் சுட்டது. இரவு நெடுநேரம் தூங்காமல் அழுது கொண்டிருந்தான்.

கொஞ்ச நாள் போகட்டும். தன் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம். அதன் பிறகு சரியாகிவிடுவான் என நம்பிக்கை கொண்டிருந்தாள் சரோஜா.

பதினைந்து நாள் விடுப்பில் இருந்து விட்டு அன்று டியூடியில் சேர்ந்தான் ராஜன்.

சேதி கேள்விப்பட்ட செக்ஷ்ன் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து விசாரித்தனர்.

மனதை கல்லாக்கிக் கொண்டு ஒருவாறு பதில் சொல்லி சமாளித்தான் ராஜன்.

அன்று மதியம் உணவு இடைவேளையின் போது ராஜனின் உயிர் தோழன் கிரி நைஸாகப் பேச்சு கொடுத்தான். கிரி அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவன். ராஜன் பர்சனல் பிராஞ்ச். இருவரும் கேண்டினில் ஒரு ஒதுக்குப் புறமாக அமர்ந்திருந்தனர்.

“ராஜன், நான் ஒண்ணு சொன்னால் கோபிக்கமாட்டியே?” என்றான் கிரி.

‘இல்லை’ என்று ராஜன் தலையாட்டினான்.  

“விவாகரத்து விஷயத்தில் நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்னு தோணறது. சில நாள் வெயிட் பண்ணியிருக்கலாம். ” 

பெருமூச்சொன்று விட்டவன், “உனக்குத் தெரியாது கிரி! பானுவை டைவர்ஸ் பண்ண எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. எங்கம்மாவின் தொல்லை தாங்க முடியல்ல . ‘நாலு வருஷம் ஆச்சு, அஞ்சு வருஷமாச்சு. இன்னமும் குழந்தை பெற்றுத் தரமுடியாத பானுமதியை உடனே டைவர்ஸ் பண்ணுன்னு’ ன்னு சொல்லி என் உசுரை வாங்கிட்டாங்க. அதோடு, அவங்களுக்கு அடிக்கடி நெஞ்சு வலி வேற வர்றது. அதை சாக்காக வைத்து அடிக்கடி என்னை பயமுறுத்தினாங்க. அதனால வேற வழியில்லாமல் நான்  அவங்க பேச்சை கேட்கும்படியான நிலைமை!” 

“சரி , நீ தப்பா நினைக்கல்லைன்னா ஒரு கேள்வி கேட்கலாமா?” 

“கேளு.” 

“டைவர்ஸூக்கு என்ன கிரவுண்ட் காண்பிச்சே?” 

“எங்கம்மா சொல்படி பானு குழந்தைப் பேறுக்கு தகுதியற்றவள்னு காண்பிச்சேன்.” 

“உங்கம்மா சொல்படியா..” என ஆச்சரியப்பட்டவன், “சரி, கேஸூக்கு தேவை டாகுமெண்ட்ரி புரூஃப்! அதை உன்னால் வாங்க முடிஞ்சுதா?” என்றான். 

“யெஸ், ஒரு மகப்பேறு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட பானுவை அழைச்சிக்கிட்டுப் போனாங்க எங்கம்மா. அவங்க தரோவாச் செக் பண்ணிப் பார்த்துவிட்டு பானுவுக்கு தாய்மை அடையும் பாக்கியம் இல்லைன்னு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. அதை வெச்சுதான் கேஸே முடிஞ்சுது.” 

“நீ கூட போகல்லையா?” 

“போகல்ல.” 

“ஏன்?” 

“போக பிடிக்கல்ல.” 

“ஓ.கே. ஆனால் உன் ஒய்ஃப் நல்லவங்க, கோபப்படாமல் சிரிச்சுக்கிட்டே எல்லா வேலையும் செய்யறாங்க. அவங்க ஒரு தெய்வப் பிறவி அப்படின்னு நீயே பெருமையாப் பேசியிருக்கே. அவங்க உன்னையும் உங்கம்மாவையும் அனுசரிச்சுக்கிட்டுப் போகும் பட்சத்தில், டைவர்ஸ் தவிர  குழந்தை விஷயத்தில் வேறு முடிவு எடுத்திருக்கலாம்.” 

“இதைப் பற்றி எங்கம்மாக் கிட்ட நான் பேசினேன் கிரி! அதாவது அப்படி ஒண்ணும் வயசாகல்லை. இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து பார்க்கலாம்.  அப்படி எதுவும் நடக்கல்லைன்னா குழந்தை காப்பகத்திலிருந்து ஏதாவது ஒரு குழந்தை தத்தெடுத்துக்கலாம்னு எங்கம்மாக்கிட்டச் சொல்லிப் பார்த்தேன். அவங்க கேட்கல்லே.” இதைச் சொல்லும் போது தொண்டை அடைத்தது ராஜனுக்கு. 

“ஏன், நம்ம டெஸ்பாட்ச் கிளார்க் குமாரை எடுத்துக்கோயேன். அவருக்கு  ஏழு வருஷம் கழிச்சுதான் குழந்தை பிறந்திருக்கு. இது மாதிரி நமக்குத் தெரியாம உலகத்தில் எத்தனையோப் பேர் இருக்காங்க.ஓ.கே! அடுத்ததாக உன் திட்டம் என்ன? நீ இப்படியே இருக்க முடியாது. உன் அம்மாவுக்குப் பிறகு உன்னை பேணிக்காக்க ஓரு நபர் வேண்டும். உனக்கு அப்படி ஒண்ணும் வயசாகல்லை. வந்து…நான் சொல்றது…உனக்கு புரியும்னு நம்பறேன்…” கிரி தயக்கமாய் கூறினான். 

நண்பன் என்ன சொல்ல வருகிறான் என்பது நன்றாகவே புரிந்தது ராஜனுக்கு.  

“கிரி, சட்டப்படி பானுவை நான் டைவர்ஸ் செய்தாலும் எனக்கு பானுவோட இடத்தில் வேறு ஒருத்தியை ஏத்துக்க மனசு இடம் கொடுக்க மாட்டேங்குறது. பானுமதி இன்னும் என் மனதோடு வாழ்ந்துக்கிட்டிருக்கா. அவளை  என்னால் முழுமையாக  மறக்க முடியல்ல. “

அழுத்தம் திருத்தமாகச் சொன்ன ராஜனைப் பார்த்து லேசாகச் சிரித்தான் கிரி.

“நல்ல வேடிக்கை நண்பா! டைவர்ஸ் பண்ணின உன் மாஜி மனைவியைப் பற்றி இன்னும் நீ நினைச்சு உருகறது காலம் கடந்த ஞானம்!  இந்த மன உறுதியை நீ டைவர்ஸூக்கு முன்னாடி காட்டியிருந்தால் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. சட்டப்படி பிரிஞ்சாச்சு.  இனி நீ அடுத்த நடவடிக்கையைப் பற்றிதான் யோசிக்கணும். ஆனால் சட்டப்படி  பிரிஞ்சு  தொன்னூறு நாள் காக்க வேண்டும்.  அதன் பிறகுதான் நீ மறுமணம் செய்து கொள்ள முடியும் என்பது என்னோட அபிப்ராயம்! இருந்தாலும் வேறு ஏதாவது ஷரத் படி நீ உடனே மறுமணம் செய்து கொள்ளலாமா என்பதை சட்ட வல்லுனர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேட்டர் ஓ.கே.ஆகும் பட்சத்தில் அட்லீஸ்ட் உங்கம்மாவுக்காகவாவது நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் ஆகணும். நல்லா சிந்திச்சுப் பாரு நண்பா!”

கிரியின் அறிவுரை ராஜனை சிந்திக்க வைத்தது.  

நியாயம்தான். இரண்டு தடவை அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து டாக்டரிடம் காட்டியாயிற்று. இரண்டாவது தடவை வலி வந்தபோது டாக்டர் தரோவாகச் செக் செய்ததில் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. டயட்டில் இருந்துக்கிட்டு மருந்து மாத்திரை வேளா வேளைக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய ஓய்வு தேவை. முக்கியமாக அதிர்ச்சி தரும் எந்தச் செய்தியையும் அம்மா காதில் போடக்கூடாது.  மொத்தத்தில் அம்மாவை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் – டாக்டரின் எச்சரிக்கை! 

அம்மாவின் உடனடி எதிர்பார்ப்பு தன்னுடைய இரண்டாவது திருமணம். அப்படிச் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டால் அம்மாவுக்கு சந்தோஷம் கலந்த திருப்தி ஏற்படும்; அதனால்  நெஞ்சு வலியின் தாக்கம் குறையும். 

அதே சமயம் பானுவையும் மறக்க முயற்சி செய்ய வேண்டும். அம்மா சொல்படி மறுமணம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற எண்ணம் ராஜன் மனதில் எழுந்தது.

நாட்கள் ஓடியது. 

2

கோகுலம் குழந்தைகள் காப்பகம். 

அன்று   ஒரு மாத இதழைப் படித்துக் கொண்டிருந்த பானு அருகில் நிழலாட தலை நிமிர்ந்து பார்த்தாள். ஆளைப் பார்த்ததும் வந்திருப்பது குழந்தைப் பேறு மருத்துவர் சுந்தரி என்பது  தெரிந்தது. அந்த சுந்தரிதான் பானுமதி கருத்தரிக்க லாயக்கில்லை என்ற சான்றிதழ் தந்தவர். லேசில் மறக்கக்கூடிய விஷயமா அது?

ஆனால் சுந்தரி அநியாயத்துக்கு உடல் இளைத்துப் போய் பார்க்க கண்றாவியாக இருந்தார்.

மரியாதை நிமித்தம் எழுந்து நின்ற பானு,  “வாங்க டாக்டர். அதிசயமா என்னைத் தேடி வந்திருக்கீங்க என்ன மேட்டர்?” 

“பானு உன்னைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசணும்னு….” 

“ஓ.கே. டாக்டர், ப்ளீஸ் பி சீட்டட்” 

எதிர் இருக்கையில் சுந்தரி அமர்ந்து கொண்டார். சுற்று முற்றும் பார்த்தார்.

 பானுவும் தன் இருக்கையில் உட்கார்ந்து கொள்ள பேச ஆரம்பித்தார் சுந்தரி. 

“உன்னிடம் நிறையவே வித்தியாசம் தெரியறது பானு!” 

“ஐந்து வருஷம்தானே ஆச்சு! அதுக்குள்ள அவ்வளவு வித்தியாசமா தெரியறது?” 

“எத்தனை வருஷம் ஆனால்  என்ன? லேடீஸ் ஒரு வருஷம் கழிச்சுப் பார்த்தாலே வித்தியாசம் தெரியத்தான் செய்யும்! உன் விஷயத்தில் ஐந்து  வருஷமென்பது ஜாஸ்திதான்..அப்புறம் நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறன்.  அதைக் கேட்டு உனக்கு அதிர்ச்சி ஏற்படலாம்.  ஆத்திரம்  கூட வரலாம்..அதை   நான் சொல்லாமலிருந்தால் உனக்கு துரோகம் இழைக்கிறதுக்கு சமம்.” 

“புதிர் போடாமல் விஷயத்தைச் சொல்லுங்க டாக்டர்.” 

டாக்டர் தொடர்ந்தார்.   “நான் உன் மாஜி மாமியார் சரோஜாவுக்கு தூரத்து ரிலேஷன்; தெரியுமில்ல?” 

“தெரியும்.” 

“சுமார் ஆறு  வருஷங்களுக்கு முன்னால் அந்த சரோஜா உன்னை என் கிளினிக்குக்கு கூட்டிக்கிட்டு  வந்தாங்க.” 

“ம் ..நல்லா நியாபகம் இருக்கு. என் வாழ்க்கையையே புரட்டிப் போட காரணமாயிருந்த  திருநாளல்லவா அது!” 

பானுவின் கிண்டலை அசட்டை செய்த சுந்தரி,  “உன்னை செக் பண்ணி, உனக்கு தாய்மை அடையும் பாக்கியம் உண்டான்னு பார்க்கச் சொன்னாங்க சரோஜா…” 

சட்டென இடைமறித்த பானு, “அதான் தரோவா செக் பண்ணிப் பார்த்துவிட்டு ‘நெகடிவ்’ன்னு சர்டிஃபிகேட் கொடுத்தீங்களே! அதை வச்சுதான் விவாகரத்து வழக்கே முடிஞ்சுது!”  என பட படத்தாள். 

 “ஆனால் உண்மை அது இல்லை பானு!” 

பானு டாக்டர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, டாக்டர் தொடர்ந்தார். 

“யெஸ் பானு. உனக்கு தாய்மை அடையும் பாக்யம் பரிபூரணமா இருக்கு. ஆனால், சரோஜா ‘இல்லை’ ன்னு சர்டிஃபிகேட்டை மாற்றி கொடுக்கச் சொன்னாங்க. நான் ஆரம்பத்தில் முடியாதுன்னு மறுத்தேன். அதனால,  பிளாக்மெயில் பண்ணினாங்க.”

 “பிளாக்மெயிலா?” 

“யெஸ். என்னோட டாக்டர் படிப்புக்கு சரோஜா நிறைய  செலவு செய்தாங்க.  சொந்தமாக கிளினிக் வைக்கவும் ஏராளமா பண உதவி பண்ணினாங்க. இதுமட்டுமில்ல. என் பெண் கல்யாணத்துக்கும் சரோஜா ஃபைனான்ஸ் பண்ணலேன்னா எசகுபிசகாயிருந்திருக்கும். ஸோ நான் சர்டிஃபிகேட் மாத்தி கொடுக்கல்லேன்னா பைசா குறையாம எல்லாப் பணமும் எண்ணி வைன்னு பிளாக்மெயில் பண்ணினாங்க.  அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போகறது? அதனால எனக்கு வேற வழி தெரியல்லை. நான் அவங்க சொல்படி கேட்கும்படியாச்சு.  ஆனால் இந்த விஷயம் ராஜனுக்குத் தெரியாது. அவன் ஒரு அப்பாவி! தான் சாகும் வரை இந்த ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு என் கிட்டே சத்தியம் வேறு  வாங்கிக்கிட்டாங்க சரோஜா. இப்போ அவங்க உயிரோடில்லை. அதனால் என் மனசில் இருந்ததைக் கொட்டி விட்டேன்.” இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

“நான் உனக்கு செய்த துரோகத்துக்கு ஆண்டவன் எனக்கு சரியான பாடம் புகட்டிவிட்டான் பானு. யெஸ்,  கல்யாணமாகி  ரெண்டு வருஷத்துக்குள் என் பொண்ணு வாழா வெட்டியாக எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்திட்டா. நான் உன்னை ராஜன்கிட்டேர்ந்து அநியாயத்துக்கு பிரிச்சேன். அதன் பிரதிபலன், என் பொண்ணு அவள் புருஷன்கிட்டேர்ந்து பிரிஞ்சு வந்திட்டா. ரெண்டாவது, அயம் கவுண்டிங் மை டேஸ் பானு. யெஸ்,  அயம் சஃபரிங் ஃப்ரம் லியுகிமியா ..!” 

 “யு மீன் பிளட் கேன்சர்?” 

 “யெஸ் பானு! நான் கண் மூடறதுக்குள்ள உனக்கு உண்மை தெரியணும்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். அப்படி நான் சொல்லாமல் உயிரை விட்டால் என் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்காது. இப்போ சொல்லி விட்டேன். எம் மனசுல உறுத்திக்கொண்டிருந்த பெரிய  பாரம் இறங்கிடிச்சு. அப்பா..இப்பதான் நிம்மதியாயிருக்கு!” மிகவும் ஆயாசமாயிருக்க அப்படியே இருக்கையில் சாய்ந்தவாறு  சற்று கண்களை மூடிக் கொண்டார் சுந்தரி.

டாக்டர் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த  பானுவின் மனதில் எண்ண அலைகள். டாக்டர் சுந்தரி செய்தது துரோகமாக இருந்தாலும் சூழ்நிலை அப்படிச்செய்ய வைத்துவிட்டது. எய்தவர் மாமியாராய் இருக்க பாவம் அம்பாக வந்தவர் டாக்டர்! அது குற்றமாக இருக்கும் பட்சத்தில், அதற்காக  அவருக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய தண்டனைதான் இந்த டபுள் ப்ளோ! இதை நினைக்கும் போது நெஞ்சில் வேதனை ஏற்பட்டது பானுவிற்கு. 

 மெல்ல கண் திறந்தார் சுந்தரி.

“டாக்டர், ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறீங்களா?”  

பானுவின் கேள்விக்கு ‘ஆமாம் ‘ என தலையாட்டியவர்,  “பட் அட்வான்ஸ்டு ஸ்டேஜ். ஹூம்! விதிப்படிதான் நடக்கும். என்னைப் பற்றி கவலை இல்லை. ன் பெண்ணை நினைச்சாதான் வேதனையா இருக்கு. நான் இல்லாம அவளின் லோன்லி வாழ்க்கையை நினைச்சு விசனப்படாத  நாளே இல்லை..அதை விடு  நீ எப்படியிருக்கே பானு ?” 

“நல்லாயிருக்கேன் டாக்டர். மேலே ஜாகை; கீழே குழந்தைகள் காப்பகம் .” 

அப்போதுதான் கவனித்தார் டாக்டர். உள்ளேயிருந்து வரும்  குழந்தைகளின் காச் மூச் சத்தங்கள், கூடவே ஒத்து ஊதும் ஆயாக்களின் குரல்கள் இவைகள் காதில் விழ, அது ஒரு  குழந்தைகள் காப்பகம்தான் என்பதை அவருக்கு உணர்த்தியது! 

“இப்படி ஒரு காப்பகம் நீ நடத்தறது பெரிய விஷயம் பானு..” என்றவர் தொடர்ந்து, “நான் கேட்கறனேன்னு தப்பா எடுத்துக்காதே.  நீ மறுமணம் செய்துக்கல்லையா?”  என கேட்டார்.

“அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.  நான் தாய்மையடைய தகுதியற்றவள்னு நீங்கள்   கொடுத்தது ஃபேக்  சர்டிஃபிகேட்டுன்னு  நான் பின்னாளில் தெரிஞ்சுக் கிட்டேன்.” பானுமதி அழுத்தம் திருத்தமுமாகச் சொன்னாள். 

ஏராளமாக அதிர்ச்சியுற்றார் டாக்டர். “உண்மையை நீ எப்போது தெரிஞ்சிக்கிட்டே? தெரிஞ்சதுக்கப்புறமும்  நீ இப்படி மெளனமா இருக்கறது  ஆச்சரியமாயிருக்கு. ஏன்,  எங்கள் மீது மான நஷ்ட கேஸ் போட்டிருக்கலாமே பானு?”  

“கேஸ் முடிஞ்சு மூணு மாதம் கழிச்சு கொல்கத்தாவில் இருந்து வந்த  என்னோட ஃப்ரெண்டு கலாதான் சந்தேகத்தின் பேரில் என்னைத் திரும்பச் செக் பண்ணச் சொல்லி ஐடியா கொடுத்தாள். அவள் சொன்னபடி டாக்டர் கிட்டக் காட்டினேன். அப்போதான் நான் தாய்மையடைய தகுதியானவள்னு தெரிஞ்சுக்கிட்டேன். நீங்கள் சொல்ற மாதிரி என் ஃப்ரெண்டும் ஆத்திரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது டேமேஜ் ஸூட் போடச் சொன்னாள். அதன்படி  பொய் கேஸ் போட்டு என் வாழ்க்கையப் பாழாக்கியவர்களை நான் கேஸ் போட்டு சந்தி சிரிக்க வைத்திருக்க முடியும்.  அதனால் என்ன பிரயோஜனம்? அதோடு  அப்படி பழி வாங்கும் எண்ணம் எனக்கு துளிக்கூட இல்ல டாக்டர்.” 

“அய்யோ!  எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உன் வாழ்க்கையை பாழாக்கிட்டோம் பானு. ஐ ஃபீல் அஷேம்டு. அதுக்கு  எனக்கு தண்டனை கிடைச்சிருச்சு. இரண்டாம் கல்யாணம் செய்துகிட்ட ராஜன் நாலு  வருஷமாகியும்  குழந்தைக்கு அப்பாவாக முடியல்ல…ரெண்டாவது மனைவி ரொம்பவும் சென்ஸிடிவ் டைப்! அதனால் ராஜனைக் கட்டிக்கிட்டவ தன்னிடம் குறையில்லேன்னு உறுதி செய்துக்கிட்டு, குறையோடு இருக்கும் புருஷனை வெறுக்க ஆரம்பிச்சா. ராஜனோடு வாழ பிடிக்காமல் கடைசியில் டைவர்ஸ் செய்திட்டா. வேடிக்கை பார்த்தாயா?  அநியாயமா உன்னை டைவர்ஸ் செய்தான் ராஜன். இப்போ நியாயமா ராஜனை டைவர்ஸ் செய்தா அவனோட ரெண்டாவது பொண்டாட்டி. தன் அம்மா பேச்சைக் கேட்டு உன்னை கழற்றி விட்ட அவனும் தண்டனை அனுபவிச்சாச்சு. எல்லாத்துக்கும் மேலே குறை தன்னிடம்தான் இருக்கிறது என்ற உண்மை அறிந்து உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப் போனான் ராஜன்.  இதில் ஒரு விசேஷம் என்னன்னா இரண்டாவது மருமகள் தன் மகனை டைவர்ஸ் பண்ணி விட்டுப் போனது அதன் மூலம் மகனிடம் உள்ள குறை வெட்ட வெளிச்சமாக தெரிந்து போக அது சரோஜா மனதை வெகுவாக பாதித்தது. மூன்றாவது அட்டாக் வந்தது.  

“இறக்கும் தருவாயில் உனக்கு இழைத்த துரோகம் பற்றி ராஜனிடம் சொன்னாங்க.  சொல்லிவிட்டு ஒரேயடியா கண் மூடிட்டாங்க. ராஜன் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். தன் தாயோட இறப்பைக் காட்டிலும் உனக்கு இழைத்த  கொடுமை அவனை நிறையவே பாதித்தது.…” பேசி முடித்த டாக்டருக்கு மூச்சு வாங்கியது.

“டாக்டர்,  எது எப்படி நடக்குமோ;  அது அப்படி நடந்தே தீரும். யாராலும் மாற்ற முடியாது. அதைப்பற்றி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.  ஆனால் ஒரு விஷயம்தான் இடிக்கிறது.”  என்றாள் பானுமதி.

“எது?” 

“எதற்காக ராஜனின் அம்மா நான் கருத்தரிக்க லாயக்கில்லைன்னு பொய் சர்டிஃபிகேட் கொடுக்கச் சொன்னாங்க?. ஒருவேளை அவங்க பிள்ளையிடமே குறை இருக்கும் பட்சத்தில் அவங்க அப்படிச் செய்தது பெரிய அயோக்யத்தனம் இல்லையா? அதோடு அடுத்த வருபவளுக்கும் இதே மாதிரி கசப்பான  அனுபவம் ஏற்படாதுங்குறது என்ன நிச்சயம்?” 

“கரெக்ட் பானு! சரோஜாவிற்கு அதைப்பற்றி கவலையில்லை. சிம்பிளாக சொல்லணும்னா சரியோ, தவறோ  தான் எடுத்த முடிவுபடி நடக்கணுங்குற ஒரு பிடிவாதம்…ஈகோ! அது  சரோஜாவுக்கு நிறையவே இருந்தது. அதாவது  உன்னைக் கழற்றி விடவேண்டும் என்கிற முடிவை ஏற்கனவே அவங்க எடுத்துட்டாங்க.  அதுலேர்ந்து பின் வாங்க இஷ்டமில்ல. அதன்படிதான் பிற்பாடு வேண்டாததெல்லாம் நடந்திருக்கு!”

“ஹூம்! இந்த ஃபால்ஸ் ஈகோ தேவையா? இதனால் அவங்க அடைஞ்ச நன்மை என்ன?” 

“நத்திங், ஆனால் பானுமதி,  அநியாயமாக நீ குற்றம் சுமத்தப்பட்டவள்ன்னு தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கோபமோ ஆத்திரமோ படாதது உன் அசாத்தியப் பொறுமையையும், எதையும் லைட்டாக எடுத்துக்கிற குணத்தையும் காட்டுகிறது.  உண்மையிலேயே நீ நற்பண்புள்ளவள்;  உயர்ந்தவளும் கூட.  ஹூம்! உன்னைக் கழற்றிவிட்ட அவர்கள்தான் சரியான அதிர்ஷ்டக்கட்டைகள்!”  டாக்டருக்கு  மூச்சிரைத்தது. 

மூடிவைத்திருந்த டம்ளர் நீரை எடுத்து அவரிடம் நீட்டினாள் பானு.”ப்ளீஸ் இந்தாங்க.  தண்ணியக் குடிங்க. ” 

வாங்கி இரண்டு மிடறு விழுங்கிய டாக்டருக்கு ஆசுவாசமாக இருந்தது . டம்ளரை மேஜைமேல் வைத்தவர், சில வினாடிகள் கண்களை மூடிக்கொண்டார்.  அவரைப் பார்க்க பாவமாயிருந்தது பானுவிற்கு. 

மனசாட்சிபடி டாக்டர் நடந்து கொண்டது அவள் மனதை விரிவடையச் செய்தது.  அவரைப் பற்றி நல்ல அபிப்ராய எண்ணங்களோடு இருக்கும்போது,  டாக்டர் கண் திறந்தார்.

உதடுகளில் தோன்றிய சிறு புன்னகை, அவர் ஓரளவு தெளிவு பெற்றதை சுட்டிக்காட்டியது

“பானு, ஏதேதோ சொல்லி உன் மூடை கெடுத்துவிட்டேன். ஆனால் உண்மையை மூடி மறைக்கிறதில் எனக்கு இஷ்டமில்லை. அதனால் நடந்ததை அப்படியே சொல்லி விட்டேன். என் மேல் கோபமில்லையே?” 

 “நாட் அட் ஆல் டாக்டர்!” மென்மையாகச் சிரித்தவாறு  கூறினாள் பானு. 

“தேங்க் யு பானு. அப்புறம் உன்னோட  மறுமணம் பற்றி நீ ஒண்ணும் சொல்ல வில்லையே?”

 கேட்ட டாக்டரைப் பார்த்து புன்முறுவல் செய்தாள். 

“அந்த எண்ணமே எனக்கில்லை டாக்டர்!” 

“ஏன் பானு? அப்படி ஒண்ணும் உனக்கு வயதாகல்லையே! ஒரு வேளை  ராஜனின் போக்கு கண்டு உனக்கு ஆண் வர்க்கம் மீது தீராத வெறுப்பு தோணிடிச்சா?” 

“அதெல்லாம் இல்லை டாக்டர்!  ஏற்கனவே அந்த ராஜனோடு  ஐந்து வருஷம் வாழ்ந்து விட்டேன்.  ஏதோ போதாத வேளை நான் பிரிய வேண்டிய தாயிற்று. அதனால் வேறு ஒருவரை கணவராக மனசு ஏற்க மாட்டேங்கறது.”  

ஸோ  ராஜனை மறக்க முடியாமல் தன் மனதில் ஒரு ஓரத்தில் அவனைப் பற்றிய நினைப்பை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறாள் பானுமதி என்ற எண்ணம்  டாக்டருக்குத் தோன்றியது. 

வேறு ஒருத்தியாக இருந்தால் ராஜன் குடும்பத்தின் மீது மான நஷ்ட வழக்குபோட்டு அவமானப்பட வைத்திருப்பது மட்டுமில்லாமல்,  வேறு ஒருவரையும் மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பாள். ஆனால் பானு அப்படிச் செய்யவில்லை.  இது அவளின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

பானுமதியைக் காட்டிலும் சிறந்த நபரை இந்த உலகில் காண்பது அரிது!அவளை இழந்தது ராஜனுக்கு பெருத்த நஷ்டமே! ஆயினும் அதிர்ஷ்டவசமாக பானுமதி வேறொரு கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  

ராஜனும் தனிக் கட்டையாக இருக்கிறான்.  அவன் மனதை பானுமதி இன்னும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் அவனுக்கு பானுவோடு மீண்டும் இணைவதில் நிச்சயம் மகிழ்ச்சி கலந்த கொண்டாட்டமாக இருக்கும். 

சரி, பானு இதற்கு ஒத்துக் கொள்வாளா..என்னதான் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் ஏற்கனவே வாழ்ந்து பிரிந்தவனோடு மீண்டும் இணைய அவள் மனசு இடம் கொடுக்குமா? 

இதைப் பற்றி பானுவிடம் நேரிடையாக கேட்க டாக்டருக்கு தயக்கமாயிருந்தது. ஒரு வேளை மறுத்துவிட்டால் என்ன செய்வது? விட்டுப் பிடித்தால் நல்ல முடிவு கிடைக்கும், பார்க்கலாம். யோசனை செய்து பார்த்த சுந்தரிக்கு ஏதோ ஒரு பிடி கிடைத்தாற் போல் இருந்தது. அவர் முகத்தில் சட்டென ஒரு பிரகாசம் தோன்றியதைக் கண்டாள் பானுமதி. 

அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு திட்டம் தோன்றியிருக்க வேண்டும்; அதன் பிரதிபலிப்புதான் அது என்பதை புரிந்து கொண்டாள். 

சிறிது நேரம் நிலவியிருந்த மெளனத்தை கலைத்தார் சுந்தரி.

“அப்புறம் பானு! இத்தனை வருஷம் கழிச்சு உன்னைச் சந்திச்சு பேசினது மனசுக்கு நிறைவாயிருக்கு.  முடிஞ்ச அளவு நான் உயிரோடிருக்கும் வரையில் உன்னை அடிக்கடி பார்க்கணும்னு நினைப்பு வரும்  போதெல்லாம் இங்க நான் வரலாமா ?” 

“தாராளமாக வரலாம் டாக்டர்! யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்!”புன்சிரிப்போடு கூறினாள் பானுமதி.

“தேங்க் யு மை டியர் சைல்டு! மே காட் பிளஸ் யு!”என்றபடி எழுந்து கொண்டார் சுந்தரி. 

டாக்டரை வழியனுப்பிவிட்டு வந்த பானுமதி நெஞ்சில் மறந்து போன  பழைய கசப்பான அனுபவங்கள் வந்து போயின.  டாக்டரின் பேச்சால் ரீவைவைண்டிங் ஆன நிகழ்வுகள்!  

டாக்டர் சொல்வது போல் ராஜன் நல்லவன்தான். ஆரம்பத்தில் தன் மீது உயிரையே வைத்திருந்தான்.  எந்த நேரத்திலும் வெறுப்புக் காட்டியதில்லை. ஆனால் அம்மாப் பேச்சைக் கேட்டு ஆடியது;  தான் மலடி என டாக்டர் கிட்டே ஃபேக்  சர்டிஃபிகேட்( ராஜனு க்குத் தெரியாமல் போனாலும்) வாங்கி டைவர்ஸ் பண்ணும் அளவிற்குப் போனதில் உடன் பட்டது இவைகளெல்லாம் அவசிய மற்றவை என மனதில் பட்டது. ராஜன் ஸ்டெடியாக  இருந்துகொண்டு தன் அம்மாவின் பிரச்னையை இலகுவாகக் கையாண்டிருக்கலாம். 

இரண்டாவது,  யாரிடம் குறையிருந்தால் என்ன?  மருத்துவரீதியாக முயன்று பார்த்து  சரி செய்திருக்க வேண்டும். அல்லது ஓரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கலாம்.  ஆனால் மாஜி மாமியாரின் தேவையில்லாத ட்ரிக்கில் ராஜன் அநியாயமாக மாட்டிக் கொண்டது அவன் மீது கரிசனத்தை ஏற்படுத்தியது. 

இப்பொழுது அவன் தனித்து விடப்பட்டது வேறு பரிவையும் உண்டாக்கியது. ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்று உள் மனம் கூறியது பானுவிற்கு. 

இரண்டு நாள் கழித்து அவள் எதிர்பார்த்தது நடந்தது. 

அன்று காப்பகத்தினுள் நுழைந்தவனைப் பார்த்து லேசாக அதிர்ந்து போனாள் பானு. உடல் அநியாயத்திற்கு இளைத்து, கொஞ்சம் கூன் விழுந்த முதுகுடன் முகம் மழிக்கப்படாமல் காணப்பட்ட ராஜனின் தோற்றம் பானுவிற்கு வேதனையைத் தந்தது .

“வாங்க. “எழுந்து நின்று வரவேற்றவளின் மரியாதை அவன் மனதை விரிவடையச் செய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜன் முகம் கொஞ்சம் தெளிவாகக் காணப்பட்டது. 

“உட்காருங்க .”என்று அவனை அமரவைத்து விட்டு தானும் அமர்ந்துகொண்டாள்.

அன்று கோர்ட் வாசலில் கடைசியாக சந்தித்தபோது ராஜன்  கூனிக் குறுகி நின்றாலும் அதிலும்  ஒரு கம்பீரம் தென்பட்டது!  முழுக்கைச் சட்டையை இன் பண்ணிக் கொண்டு பார்க்கப் பாந்தமாயிருந்தான். 

ஆனால் இப்போது தொள தொள சட்டையுடன் அதையும் இன் பண்ணாமல் வெளியே விட்டபடி இருந்தது பார்க்கக் கண்றாவியாக இருந்தது பானுமதிக்கு .

“எப்படியிருக்கீங்க?” கேட்ட பானுவைப் பார்த்து பெருமூச்சொன்று விட்டான்.”ஏதோ இருக்கேன்..”என்று விட்டேர்த்தியாகக் கூறியவன், “சுந்தரி ஆண்டி இங்கே வந்து உன் கிட்டேப் பேசினதாச் சொன்னாங்க…” 

“யெஸ், எல்லா விஷயமும் சொன்னாங்க. பட் நடந்தது நடந்து போச்சு. இப்போ அதைப் பற்றி மறுபடியும் பேச விருப்பமில்ல. “

“பானுமதி, நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து இப்போது வரை நரக வாழ்க்கைதான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். நான்  உனக்கு இழைத்த துரோகத்திற்கு நல்ல பலன் கிடைச்சிடுச்சு. உன்னை நேரில் பார்க்கணும். பார்த்து மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கணும்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டிருக்கு.  ப்ளீஸ் என்னை மன்னிப்பாயா?” இரு கரம் குவித்து கண்ணீர் மல்க வணங்கியபடி கேட்டவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பானுவிற்கு.

“முதல்ல கையைக் கீழே இறக்குங்க. மன்னிப்பெல்லாம் கேட்க வேணாம்.  நீங்க ஏற்கனவே, செய்த தவறை உணர்ந்து வருத்தமும் வேதனையும் படுவதாக டாக்டர் சொன்னாங்க. அதுவே போதும் .” 

சிறிது நேரம் மெளனமாக இருந்தவன், “சரி பானுமதி, உன் விருப்பம் அதுவானால் நான் அப்படிச் செய்யல்லை……அப்புறம் நீ எப்படியிருக்கே ? உன் லைஃப் எப்படி போகறது?” என்றான்.

“மேலே ஒரு ஃப்ளோர் எழுப்பி, நான் குடியிருக்கேன்.  கீழே குழந்தைகள் காப்பகம்..

குழந்தைகளின் மழலைப் பேச்சு , அதுங்களுடைய ஆக்டிவிடீஸ் ரொம்ப இன்டரிஸ்ட்டிங்காகவே போகறது லைஃப். “

“ஹூம்,  தாய்மையடைய லாயக்கில்லேன்னு உன் மீது அபாண்டமா பழி போட்டு உன்னை இழந்தேன்.  ஆனால் இப்போது இங்கிருக்கிற குழந்தைகளுக்குக் தாயாக உன்னைப் பார்க்கிறேன். யு ஆர் கிரேட் பானுமதி!” 

“அதிருக்கட்டும். நீங்கள் இங்கு வந்ததின் நோக்கம்…?”என கேட்டு பானுமதி ராஜனை குறு குறுவென்று பார்த்தாள். 

சட்டென பானுமதி இப்படிக் கேட்டதும் கொஞ்சம் ஆடிப் போனான் ராஜன்.

“பானுமதி, உன்னை நேரில் பார்த்து நான் செய்த பிளண்டருக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, என்னை மறுபடியும் ஏற்றுக் கொள்வாயா?  என கேட்க எண்ணியி ருந்தேன். ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டாமென்றாய்.  சரி, அடுத்ததாக ‘என்னை மறுபடியும் ஏற்றுக்கொள்வாயா’ என்ற கோரிக்கையை உன் காதில் போடலா மென்றால் சிறிது தயக்கமாகவும் அச்சமாகவுமிருக்கு! ‘அதோடு நீ அன்னி க்கு கோர்ட் வாசலில் இனி அடுத்து வரவளையாவது பாதியில் கழற்றி விடாமல் கடைசிவரை வைத்து காப்பாற்றும்படி கேட்டுக்கிட்டே..ஆனால் அவளே என்னைத் தவிக்க விட்டுப் போய் விட்டாளே பானு…’ மனதுக்குள் அழுதான் ராஜன்.

பானுமதியின் கேள்விக்கு ராஜனால் பதில் சொல்ல முடியவில்லை.  மெளனமாயிருந்தான்.

அதே நேரம் டாக்டர் சுந்தரி உள்ளே நுழைந்தார்.  அவரைப் பார்த்த ராஜனுக்கு தன்னை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்ற வந்த கடவுளாகத் தோன்றியது .

“வாங்க டாக்டர்! ராஜன் இங்கிருப்பது தெரியுமா ?” 

பானுவின் கேள்விக்கு நமுட்டுச் சிரிப்போடு “ராஜனை அனுப்பி வைத்ததே நான்தானே!”என்றபடி ராஜன் பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார் டாக்டர்.

நிறையவே சோர்ந்து போய் காணப்பட்டார்.

“ஓ.. .. பிளான்படி நடக்கிறதா விவகாரம் ?”என்றாள் பானுவும் அமுக்கமாகச் சிரித்தபடி! 

“யெஸ் பானு, நேராக விஷயத்துக்கு வரேன்….ஆமா ராஜனைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன?”டாக்டர் கேட்டார்.

“ம்..முன்னாடி எப்படியோ இருந்தவர் இப்போது இப்படி ஆகிவிட்டார்.  அவ்வளவுதான் விஷயம்!”குரலில் ஹாஸ்யம் ததும்பியிருந்தது. 

“ம்.அதுக்குக் காரணம் இருக்கு பானு! ராஜன் ஆரம்பத்தில் தன் அம்மா பேச்சைக் கேட்டு உனக்கு துரோகம் இழைத்ததை எண்ணியெண்ணி குமுறிக்கிட்டிருக்கான். ஹூம், நானும்தான் ஒரு விஷயத்தில் சரோஜாவிற்கு உடன்பாடா இருந்தேன்.  அதனால் தேவையில்லாமல் உன்னை இழந்தோம்.அதன் விளைவு ராஜன் வேளா வேளைக்கு ஆகாரம் சாப்பிடறதில்ல . சரியான தூக்கமுமில்ல. சதா உன் நியாப கம்தான்.  ஏன் நீ கூட ராஜனோடு வாழ்ந்த வாழ்க்கையை மனதில் வெச்சுக்கிட்டு இன்னொருவரை மறுமணம் செய்துக்க விருப்பமில்லேன்னு சொன்னே. நியாபக மிருக்கா ? பானு, நான் என்ன சொல்ல வரேன்னா…. வந்து…”என்று இழுத்தவர், “உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். ஸோ டியர், நவ் பால் ஈஸ் இன் யுவர் கோர்ட்!”  கூறி முடிப்பதற்குள் டாக்டருக்கு மூச்சிரைத்தது. 

“ஸாரி டாக்டர்!”கொஞ்சமும் யோசிக்காமல் பானு சட்டென சொன்ன பதிலைக் கேட்டு திடுக்கிட்டுப் போய் டாக்டரும் ராஜனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏன் பானு உனக்கு இஷ்டமில்லையா?”குரல் கம்ம  கேட்டார் டாக்டர்.

“நவ் தி பால் ஈஸ் டைவர்டட் டு யுவர் கோர்ட்!”  என்றாள் பானுமதி புன்சிரிப்போடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *