ஒப்பீடு




வசந்தியின் உள்ளம் அப்பாவுக்கு நன்றி சொல்லியது. ’எவ்வளவு சிரமப்பட்டு என்னை இவ்வளவு பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார். என்ன மாதிரி கணவன்! அழகு, கம்பீரம், படிப்பு, வசதி!! இவர்கள் குடும்பம்தான் எப்படிப்பட்டது. மகாலட்சுமி மாதிரி ஒரு மாமியார். முகத்தில் என்ன ஒரு தேஜஸ். கணவருடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா.
இரண்டு அண்ணன்களும் மிகப்பெரிய நிறுவனங்களில், உயர்ந்த இடங்களில் வேலை பார்க்கின்றனர். கணவரின் அண்ணிமார் இருவருமே மிகப் பெரிய இடங்களில் இருந்து வந்தவர்கள். நாம்தாம் இருப்பதிலேயே கொஞசம் சாதாரணம். இங்கு வாழ்க்கைப்பட்டது நம் அதிர்ஷ்டம்தான். மணமாகி வந்த இரண்டாம் நாள் தானே என்று இருக்கக் கூடாது’.
எழுந்தாள். இன்னும் விடியவில்லை. சுருண்ட தலைமுடி கலைந்து கிடக்க ராகவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
சமயலறைக்கு சென்றவளை பார்த்து மெலிதாய் ஒரு புன்னகையுடன் வரவேற்றாள் ராகவனின் அக்கா புவனா. இந்த வீட்டிலேயே வசந்தி போல கொஞ்சம் சாதாரணமாய் தெரிந்தவள் நாத்தனார் புவனாதான்.
காலை டிபன் வேலை முடித்து சமையல் அறையில் இருந்து ஹாலுக்கு வந்ததும்தான் கவனித்தாள். முதல் ஓரகத்தி குளித்து முடித்து நல்ல சிகப்பு கலரில், ’மொடமொட’வென்று காட்டன் சேலை கட்டியிருந்தாள்.
“எக்ஸ்சலெண்ட் அண்ணி. எல்லோரும்தான் கட்றாங்க. கொச கொசன்னு. ஆனால், பிளீட் பிளீட்டா நீங்க புடவை கட்டுறதே அலாதி ஸ்டைல். இந்த புடவையில நீங்க பிரமாதமா இருக்கீங்க அண்ணி” சொன்னது ராகவன்தான்.
வசந்தி தன்னை அறியாது தன் புடவையை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டாள். அவளுக்கே பிடிக்கவில்லை. மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி முகம் நிமிர்ந்தால், இவற்றையெல்லாம் கவனித்தபடி இருந்த நாத்தனார் புவனா வசந்தியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தார். வசந்திக்கு வெட்கமாகிவிட்டது. ’ராகவன் சொன்னதைக் கேட்டுத்தான் நாம் நம் புடவையை கவனிக்கிறோம் என்று நினைக்கிறாளோ!’
வசந்தியும் குளித்து முடித்து, புடவையை முடிந்தவரை நேர்த்தியாக கட்டிக் கொண்டு வந்தாள். யாரும் கவனிக்காத நேரமமாய்ப் பார்த்து அவளை இறுக அணைத்தானே தவிர, தன் புடவை கட்டை கவனிக்கவில்லையே என கவலைப்பட்டாள் வசந்தி.
அண்ணன் தம்பிகள் மூன்று பேருமாய் டிபன் சாப்பிட அமர, நாத்தனார் புவனாவும் மாமியாரும் பறிமாறினார்கள். வசந்தை அவர்களுக்கு உதவ முயன்றாள்.
உடன் எங்கே இந்த ஓரகத்திகள் என்று கவலைப்பட்டது. ’அப்பப்பா அவர்களுக்குத்தான் என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது! சே! நாம்தான் இப்படி எதுவுமே தெரியாமல்..’
கையில் அன்றைய நியுஸ் பேப்பரை பிடித்தபடி அதன் பிரித்த ஒரு பக்கத்தை உற்றுப் பார்த்தபடி வந்தாள் இரண்டாம் ஓரகத்தி.
“சென்செக்ஸ் ஏறியிருக்கு. ஐம்பது ரிலையன்ஸ் வாங்கலாமா?”
”என்ன விலை நடந்திருக்கு”
”இருபது ரூபா இறங்கியிருக்கு. ஒவர் சோல்ட் பொசிஷன். கண்டிப்பா ஏறும். என்ன சொல்றீங்க?”
”நீ தான் ஷேர் மார்க்கெட்டில் எக்ஸ்பர்ட். நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும். ஓகே. வாங்கிடு.”
“சின்ன அண்ணி, என்ன அண்ணா. அப்படியே என் கணக்கிலும் ஐம்பது ஷேர் வாங்கிட சொல்லுங்க” என்றான் ராகவன்.
கையில் சட்னி பாத்திரத்துடன் அவர்கள் பேசுவதை கவனித்து பார்த்துக் கொண்டிருந்த வசந்தியை புவனாதான் முதுகில் தட்டி கவனத்தைத் திருப்பினார். புவனா முகத்தில் மீண்டும் அதே புன்னகை. ’உனக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்று கேலி பண்ணுவது போல பட்டது வசந்திக்கு. அவர்களெல்லாம் ஆபீசுக்கு போய் விட்டார்கள். இரண்டாவது ஓரகத்தி சம்பளமே 25 ஆயிரமாம். கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டரில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு கம்பீரமாய் போனாள். மாமியாரும் வெளியே போய்விட, தன் அறைக்குள் போய் புடவையை அவிழ்த்து முறையாய் பிளீட் வைத்துக் கட்டி ஆளுயர கண்ணாடியில் பார்த்து, மீண்டும் அவிழ்த்துக் கட்டி .. திடீரென கவனித்தால், சன்னலில் புவனா
முகம். அதே புன்னகை.
”என்ன வசந்தி, தம்பி ராகவன் பெரிய அண்ணி புடவை கட்டும் அழகை சொல்லிவிட்டானே என்று…” கேட்க, ”அதெல்லாம் இல்லை. எனக்கும் நல்லாவே கட்ட வரும்”
வேறு விஷயம் பேசிவிட்டு நாத்தனார் புவனா கிளம்பிப் போய்விட்டார். வசந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. ’என்ன பெரிய ஷேர் மார்க்கெட்! இந்த இரண்டாவது ஓரகத்தி பெரிசாய் என்னென்னமோ சொல்ல, இவர்கள் ஆண்கள், அவள் சொல்வதுதான் கரெக்ட் என்று சொல்லிக் கொண்டு…! நாம் கற்றுக்கொண்டு விட வேண்டும். எல்லாம் சீக்கிரமே கற்றுக்கொண்டு விட வேண்டும்.’
நியூஸ் பேப்பரை தேடி எடுத்து, ஷேர் மார்க்கெட் விவரம் உள்ள பக்கத்தைத் தேடினாள். அவளுக்குத் தெரியவில்லை.
“ஸ்போர்ட்ஸ் பக்கத்துக்கு முன்னாடி இருக்கும் பாரு. அங்க தான் இருக்கும். ஷேர் விலைகள் தானே!”
சொன்னது நாத்தனார் புவனாதான். பேப்பரை அவசரமாய் மூடினாள் வசந்தி. அவளுக்கு வெட்கம். சே! ’இவளுக்கு வேற வேலையே கிடையாதா? என்னையே நோட்டம் விட்டுக்கொண்டு!’
மதிய உணவு முடிந்ததும் வெளியே கடைக்கு போகலாமா என்று கேட்டு, வசந்தியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் புவனா. வழியில் பேசினார்கள். ”என்ன வசந்தி உனக்கு கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ண தெரியுமா?”
”தெரியாது”
“ஸ்கூட்டர் ஓட்ட? தொடர்ந்து இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் இங்கிலீஷ்சில் லெக்ச்சர் கொடுக்க?
”ஏன்?”
“அதெல்லாம் இரண்டாவது அண்ணிக்குத் தெரியும்”
சொல்லிவிட்டு புன்னகைத்தாள். அவனைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது வசந்திக்கு. ” சீட்டுக்கட்டில் பிரிட்ஜ் என்று ஒரு விளையாட்டு. ரொம்ப இண்டெலிஜெண்ட் மக்கள்தான் விளையாடமுடியும். உனக்கு தெரியுமா? உலக அரசியலில் டாக்டரேட் வாங்குற அளவுக்கு விஷயம் உன்கிட்ட இருக்கா? அதெல்லாம் முதல் அண்ணிக்கு அத்துப்படி. நீ அதெல்லாம் கூட கத்துக்கணும் இல்லையா?”
மீண்டும் அதே புன்னகை. ’என்ன சொல்கிறாள் இவள்? இந்த புவனாவுக்கு என்ன கொடூரமான மனது! எனக்கு இதெல்லாம் தெரியாது என்று. அவளுக்கு எல்லாம் உயர்ந்தவர்கள் என்று, மெனக்கெட்டு வெளியில் கூட்டி வந்து குத்திக் காட்டுகிறாளாம்’.
வழியில் ஒரு பழரச கடை வந்தது. ஜூஸ் சாப்பிடலாம் வா என்று உள்ளே கூட்டி போனாள் புவனா. அமர்ந்தார்கள். வசந்தியை சற்று நேரம் உற்றுப் பார்த்தாள்.
குறுக்கிட்ட சர்வரைக் கேட்டாள்,”என்ன இருக்கு?”
”மேங்கோ, கிரேப், சாத்துக்குடி, ஆப்பிள், தக்காளி”
“உனக்கு என்ன வேணும் வசந்தி?”
“கிரேப்ஸ்”
“ஒரு கிரேப்ஸ், ஒரு சாத்துக்குடி ஜூஸ் கொடுப்பா.”
சர்வர் போனதும் வசந்தியை பார்த்து கேட்டாள். ”மகாத்மா காந்தி கிட்ட இருந்த உயர்ந்த குணம் உன்னை பொறுத்தவரை எது வசந்தி?”
’இந்த புவனா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று நினைத்தபடி வசந்தி சொன்னாள்,” அகிம்சை மேல் நம்பிக்கை”
”சர்தார் வல்லபாய் பட்டேல் கிட்ட?”
“இரும்பு போன்ற கொள்கை பிடிப்பு”
“பண்டிட் ஜவஹர்லால் நேரு கிட்ட?”
”நவீனமான சிந்தனைகள்”
எனக்கு இதெல்லாம் கூடவா தெரியாது! கேட்கிறாள் பெரிதாய்!! ஜூஸ் வந்தது. இருவரும் மெதுவாய் பருகினர். குடித்து முடித்ததும் வசந்தியின் கையை ஆதரவாய் பற்றியபடி புவனா சொன்னாள்,
”பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, மணம். ஆப்பிள் மாதிரி இல்லையே என்று ஆரஞ்சை வெறுக்கிறோமா? இப்ப நம்மையே எடுத்துக்கொள். என்ன ஜூஸ் குடித்தோம்? நீ கிரேப்ஸ். நான் சாத்துக்குடி. ஒவ்ஒண்ணுக்கும் ஒவ்வொரு டேஸ்ட்.
நேரு மாதிரி படேல் இல்லை. படேல் மாதிரி காந்தி இல்லை. காந்தி மாதிரி யாருமே இல்லை. இதற்காக நமக்கு வருத்தமா? இல்லையே! எல்லோரையும் ஏதோ ஒரு விஷயத்துக்காக பிடிக்கிறது அல்லவா?”
கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் வசந்தி. ”அதே மாதிரிதானே வசந்தி நாமும்! நமக்கும் சில குணங்கள் உண்டு. சிலது வரும், சிலது வராது. உனக்கு டான்ஸ், பாட்டு, கவிதை நல்லா வரும். இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களுக்காகத்தான் ராகவனும் எங்கம்மாவும் உன்னை பிடிச்சிருக்கு ன்னு சொன்னாங்க. நீயும் நம்ம வீட்டு மருமகள் ஆயிட்டே. மத்தவங்களுக்கு எல்லாம் அது தெரியுது இது தெரியுது என்று நீ கவலைப்படுற மாதிரி எனக்குப் பட்டது. அதனால்தான் இதெல்லாம் சொல்கிறேன்.
நீ உன் குணங்களுக்காக விரும்பப்படுகிறாய். பயப்படாதே. உன் தனித்தன்மையை, ஒரிஜினாலிட்டியை இழந்து விடாதே. நீ கத்துக்க. நான் வேண்டாம்னு சொல்லலை. ஆனா உன்கிட்ட தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்காதே. அவ்வளவுதான்.”
வசந்திக்கு பயம் மேகங்கள் கலைந்து வானம் வெளிச்சமானது போல் இருந்தது. புவனா முகத்தில் மீண்டும் அதே புன்னகை.
வசந்தி புவனாவின் கைகளை அன்போடு பற்றிக் கொண்டாள்.
(செப்டம்பர் 1994 ல் எழுதியது)