ஒத்த கொலுசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,593 
 
 

அதிகாலையில் திண்ணையில் சிறுவன் ஆனந்த் நன்கு தூங்கிகொண்டிருந்தான். தன் அக்காவின் கொலுசு சத்தம், அவள் இடும் கோலபுள்ளிகளுக்கும் கோடுகளுக்கும் ஏற்றவாறு இசைந்து சங்கமித்தது, ஆனந்துக்கு தொந்தரவாகி விழித்து கொண்டான். இருப்பினும் எழாமல் படுத்தபடியே கோலத்தை ரசித்தவன், அக்காவுக்கு காலை வணக்கத்தை கையசைவில் கடத்திவிட்டு லேசாக கண் அயர்ந்தவன், திடுக்கென்று விழித்தான், அக்கோலத்தில் ஒற்றை கொலுசு பூத்திருந்து, ஆதவனின் வருகையை ஆனந்த் கண்ணுக்கு கடத்தியது.

எப்போதும்போல் ஆனந்த் எழுந்தவுடன் தன் நண்பன் அருள் வீட்டுக்கு விளையாட சென்றான். இருவரும் சேர்ந்து விளையாட மைதானத்திற்கு செல்லும் வழியில், அருள் “ டேய் ஆனந்து, அந்த ராகேஷ் அன்னே மட்டும் புது பேட்டு வாங்கிட்டு வெறும் சிக்சா அடிக்குதுடா” . ஆனந்த் “ விட்ரா பேட்டா சிக்ஸ் போகுது பால்தான் சிக்ஸ் போகும், அதால நாம பால் வாங்கிடலாம் ” என பேசிக்கொண்டே சென்றனர்.

காலை ஆட்டம் முடிந்தது, நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு செல்கின்றனர், இவர்கள் மட்டும் தனியாக வந்து, ஆனந்த் அருளிடம் “ டேய் நான் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டான்டா”. “என்னடா அது” என்றான் அருள். அப்போது தன் டவுசரில் இருந்து “இது எங்க வீட்ல தொலைஞ்சி போச்சுடா” என்றவாறு ஒத்த கொலுசை கட்டினான் ஆனந்த். அதை பிடுங்கியவாறு அருள் “ அய்யயோ அப்புறம் என்னாச்சுடா”. ஆனந்த் “தெரியலடா, நான்தான் விளையாட வந்துட்டேனே” அருள், ஆனந்த் கையை பிடித்தவாறு, “சரி வா சீக்கிரம் போகலாம்” என்றான் அவசரமாக.

இருவரும் ஒரு சைக்கிளை எடுத்து வேகமாக பக்கத்துக்கு டவுனுக்கு சென்றனர். நகைக்கடைக்கு சென்று, கடைகாரரிடம் “அண்ணே எங்க அக்காவோடு ஒரு கொலுசு தொலஞ்சு போச்சு எவ்ளோ வரும்” என்றான் கொலுசை காட்டியவாறு, அவரும் அந்த கொலுசை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்து, “இதே மாறி கொலுசு”..ன்னு தாடையை தடவியவாறு, “பசங்களா எவ்ளோ வச்சிருக்கீங்க” னு மூக்குகண்ணாடிக்கு வெளியே முழித்தார். சுதாரித்து அருள் “ நீ சொல்லு பெருசு அப்புறம் பாக்கலாம்” என்றான். கடைக்காரர், எதோ முனங்கிவிட்டு, “ஐநூறுபா வரும், ஆனா தனியா வராது இத கொடுத்துட்டு செட்டா வங்கிக்கோ” னு எதோ தேடினார். அதற்குள் பசங்க கிளம்பி வேற கடைக்கு போய்டாங்க

அவர்கள் அனுபத்திற்கு ஏற்ப அந்த ஒத்த கொலுசை விற்றுவிட்டு, விளையாட்டுக்கு தேவையான பேட்டு, பாலு, ஸ்டெம்பு இன்னும் சில வாங்கி, பிரியாணி, ஐஸ்கிரீம், தியேட்டர்னு பணம் முடிந்தது, மாலைவிளையாட்டை முடித்து வீட்டுக்கு திரும்பினர்.

வீடு கொலுசுக்காக சலிக்கபட்டு இருந்தது. ஆனந்த் வந்ததும், வீட்டு வாசலிலே அவன் அக்கா “அம்மா, எனக்கு இவன்மேலதான் சந்தேகமா இருக்கு, காலையிலேந்து இவனையும் காணும் கொலுசையும் காணும்” என சிறப்பாக தனது பணியை ஆற்றினாள். ஆனந்த் செய்வதறியாமல் முழித்தான். அம்மா, “எங்கடா போனனு ஆரம்பிச்சு மதியம் சாப்பிட கூட வரலன்னு” முடிவு பண்ணி வெளுத்து வாங்கிடாங்க. ஆனந்த் அழுதுகொண்டே, பொய் சொல்ல சரியாக தெரியாமல் அக்கா மீது இருந்த கோபத்தில், “ அக்காதான்மா எங்கேயாச்சும் தொலைச்சிருக்கும் அத கேக்காம என்னபோட்டு அடிக்கீறீங்க” னு பதிலுக்கு மாட்டி விடுவதாய் நினைத்து உண்மையை கூறினான்.

அக்கா பாவமாய் அம்மாவை பாக்க , அம்மா “பொம்புள புள்ள கொலுசு தொலையுறது சகஜம்தாண்டா, னு உள்ளே போய்கொண்டே “அப்டி தொலஞ்சாலும் இரண்டும் ஒன்னாவா தொலையும், நீ திருடிட்டு அவள குறை சொல்லாதே” உனக்கு முன்னாடி எழுந்து கோலம் போடும்போதே கொலுசு லூசா இருக்குன்னு சொல்லிட்டுதான் போனா”.ன்னு முனகியபடி வீட்டுக்குள் மறைந்தார்.

ஆனந்துக்கு பொறி தட்டியது, அப்போ பிளான் போட்டது நாம இல்லை, அக்காதான்னு புரிஞ்சது. ஆனால் பிரயோசனம் இல்ல இனிமே உண்மையை சொன்னாலும் எடுபடாது அடிதான் விழும்னு புரியுற அளவுக்கு ஆனந்துக்கு அறிவு இருந்தது. தனது அக்காவை திரும்பி துரோக பார்வை பார்த்தான். அவள் “பிப்டி-பிப்டி” னு சொல்லிட்டு உள்ளே சென்றாள் வில்லத்தனமாக.

“திட்டமிட்ட புத்திசாலித்தனமும் சமயோசிதமும் உடன் பிறந்தவைகள்”

நன்றி: குர்னாம் சிங் அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *