ஏவிவிடப்பட்ட கொலையாளி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 248 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2008ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

6. கசப்பு ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை. 

சுதந்திரமும் கசப்பும் கலந்த நாள். வழமையான நாட்களில் கிரணங்கள் பரவும் அதிகாலையில் நான்கு மணியில் எழுந்து மனதுக்குள் புதைக்கவென – மீள் ஞாபகத்துள் எடுக்கவென அடுக்க வேண்டிய நிறைய பரப்புகள் மேசை மீது கிடக்கும். கனவுகள் ஆக்கிரமித்து எழுப்பல் மணி மறக்கும்போது அப்பாவின் “பிள்ளை வளர்த்தான்” ஆட்டம் போட்டு உடலில் வரி விட்டு – மேசைக்கு வழிகாட்டி உட்காரப்பண்ணும். வெறி தலைக் கேறி ஆடும்வரை பிள்ளை வளர்த்தானின் ஆட்டம் அதிக மிருந்தது. 

வெறியின் உச்சத்தில் அலையத் தொடங்கிய பின் ஆணியில் தொங்கி இயல்பிழந்து போனது. ஆனாலும் உருவெடுத்து ஆடும் நேரத்தையும் நான் வழங்கி இருந் தேன். மின் இயக்கியை ஆராய்கையில், விளையாட்டுப் பொருளின் நுண்ணியல்புகளைக் கண்டு கொள்ள முனைகையில், தேவையற்றதை விட்டு புத்தகத்தை எடுக்கச் சொல்லி பயமுறுத்தும். 

ஞாயிறுகளில் தளர்ந்து போகும் நிகழ்ச்சி நிரல் என் விருப்பை முன்னிறுத்தி எனக்கானதாய் ஒதுக்கப்படும். ஆனாலும் மாலையில் காலப்பகுப்பு அமுலுக்கு வரும் – மறுதினம் பாடசாலைக்குரியது என்பதால் அன்றைய நாளில் வேப்பங்குச்சியின் சிதைந்த பிசிர்கள் பற்களை மினுக்கும். அது அப்பாவின் கண்டிப்பான உத்தரவு. அதற்கு அவரின் துணை “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது. 

நாளொன்றும் பழக்கி இருந்த அதிகாலை விழிப்பு ஊறிப் போய் குறித்த கணத்தில் விழிப்புத் தட்டும். அலுப்பை முறித்து – ஆசைதீர குப்புறக் கிடந்து – எழுந்து – ஆராய்ச்சி தொடரும். ஞாயிறு வரும் திகதியும், உடலம் நடமாடத் தொடங்கிய மணியும் ஞாபகத்தின் எல்லை தாண்டிப் போய் இருந்தாலும், அன்றைய திகதியும், நிகழ்வும் இறுக்கப் பட்டுப் போனது என்னுடன். 

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி, நேற்று யேசு பிறந்த நாள். 

வேப்பங் குச்சியை கடைவாய்ப் பல்லில் சப்பி பிசிர் களாக்கி பல்லுடன் ஒட்டிய தோல் பகுதியை நாக்கினால் கிண்டித் துப்பி விட்டு, வெட்டும் பற்களைத் தேய்த்துக் கொண்டு முன்னே விரிந்து கிடக்கும் கடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன். 

வழமையை விட கொந்தளித்துக் கிடந்தது. அடிக்கடி இப்படி இருப்புக் கொள்ளாமல் பொங்கி வழியும், பின் தணிந்து போகும். எல்லைப் பிரிப்புக் கோட்டிலிருந்து விநோதமாய் உயர்ந்தது. எதையும் ஊகிக்க முடியாத புது அனுபவம், அவகாசம் இல்லாத கால இடைவெளியில் ஐந்து தலை நாகமாய் தலை விரித்து சீறிப் பாய்ந்து பனை உயரத்துக்கு எழுந்தது. 

“அம்மா” – கத்திக் கொண்டு வீட்டின் பின்புறமாக ஓட எத்தனித்தேன். மண்ணில் விழுந்து பள்ளம் தோண்டி எனை இறுகப் பற்றி அள்ளி – அப்போதே என் இதயம் பாய்ச்சலை நிறுத்தி இருக்க வேண்டும் – எதிலோ அறைகிறது. முன் நெற்றி பிளந்து நீர் நுழைந்து… 

7. கடலின் வல்லபம்

யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத கணப்பொழுதில் பெண்ணலையும் அதைத் துரத்திக் கொண்டு ஆணலையும் ஊருக்குள் நுழைந்தன. யானைகளின் விளையாட்டில் எறும்புகள் நசிபட்டன. மக்களை அமுக்கி அவர்கள் உடலை உப்பச் செய்தன. வீடுகளை உடைத்து பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றன. 

வார இறுதி விடுமுறையில் கண்ணயர்ந்திருந்தவர் களைக் கட்டிலுடன் – குழந்தைகளைத் தொட்டிலுடன் அள்ளிச் சென்றன. 

வீட்டுச் சுவரைச் சாய்த்து பலரை நசித்தன. 

பனை மரங்களை வீட்டுக்குள் கொண்டு வந்தன. மலசலகூடங்களை தலைகீழாக்கிப் போட்டன. இவையெல்லாம் யாருடைய கற்பனைக்கும் எட்டாத தனால் திகைப்பில் ஆழ்த்தியது. 

“கடல் ஊருக்குள் வராது”

“கடலாவது இவ்வளவு தூரம் வருவதாவது” 

தனது பலத்தைக் காட்டியது. பல நூறு மீற்றர்கள் பரந்து தனது வலிமையை நிரூபித்துச் சென்றது. 

பெண்ணலையைக் கண்டு தலையுடன் தலையை மோதிக் கொண்டு ஓட்டமெடுத்தவர்களை ஆணலை துரத்திச் சென்று ஊர் எல்லைவரை விட்டது. சில கிராமங்கள் இருந்தன என்பதற்கு எந்த சாட்சியும் இன்றி வீடுகளை இடித்து தன் மணற்பருக்கைகளை மேவி ஊரைக் கரை யாக்கி தன் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக்கிச் சென்றது. 

அவன் இருந்த – கிராமத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான எந்த எச்சமும் இன்றி தின்று தீர்த்து மீதியை வாவியில் துப்பிச் சென்றது. 

தலை தெறிக்கத் தப்பி ஓடிய இருவரும், மூவரும் – அடி பாட்டுள் சிக்குண்டு மீண்ட நால்வரும் – ஐவரும், உயரமான பகுதியில் இருந்த பொதுக் கட்டடங்களுள் பதுங்கிப் பயமும், கவலையும் கலந்த விம்மலைத் தந்தார்கள். 

பாதுகாப்புக்காக அவர்கள் தஞ்சமடைந்திருந்த பாட சாலையும் – கோயிலும் சில மணி நேரங்களில் கதறல் களால் நிறைந்து போனது. கோயிலுள் இருந்த நாயகர் ஓடி ஒழிந்து கொண்டு வெளியே வர மறுத்தார். ஏனென்றால், தலையிலும், மாரிலும் இரு கைகளாலும் அறைந்து கொண்டு பெண்களை விட ஆண்கள் ஓலமிட்டார்கள். சிலருக்கு அழவும், பேசவும் நா எழாமல் வகுப்பறையில் ஒரு மூலையில் சாய்ந்து பிரமை பிடித்துக் கிடந்தார்கள். சிலர் எழுந்து பதற்றத்துடன் குழந்தையை – மனைவியை – கணவனை – தாயை – தகப்பனை- அண்ணனை தம்பியை – தங்கையை – அக்காவை என யாரையோ தேடித் திரிந்தார்கள். 

“ஐயோ என் பிள்ளை…”

“ஐயோ எனது இரண்டு பிள்ளை…..”

“ஐயோ எனது அம்மா…”

கதறல் ஒவ்வொரு திசையில் இருந்தும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அதனுடன் ஆறுதல் படுத்தும் வார்த்தைகளும் கலந்து வந்து கொண்டுதான் இருந்தது. 

கதறலும், அழுகையும், அரற்றலும் அன்றைய இரவு முழுவதையும் தின்று வயிறு புடைத்தது. 

8. பிணங்களின் வருகை

மறுதினம் காலை முதல் பிணங்களாய் உடல் பருத்த மனிதர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களை யாரென இனங்கண்டு கொள்வது சிரமமாகும் வகையில் சதைகள் நீரை உறிஞ்சி விகாரத் தோற்றத்தைக் காட்டியதுடன், உற்று அவதானித்தும் அடையாளங் காண முடியாவண்ணம் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. காலை பத்து மணிவரை இருபத்து நான்குடன் ஆரம்பமான எண்ணிக்கை மாலையில் நூறைத் தாண்டியது. 

அவர்களை தொடும்போது தோல் உள்ளே சென்று மேலே வந்தது. வயிறும் முகமும் வெடித்து வெள்ளையாய் சதை தெரிந்தது. கண்களை மூடிக் கொண்டு பாதி திறந்த நிலையில் – விழித்து உற்றுப் பார்ப்பதுபோல் மல்லாக்காய் வரிசையில் கிடக்கப் பண்ணி இருந்த பிணங்கள் அந்தச் சூழலை அருவருப்பானதாக மாற்றின. 

கிடத்தப்பட்டிருந்தவர்களுள் பலர் தங்கள் உறவுகளைத் தேடினார்கள். சிலருக்கு மட்டுமே தேடிய உறவு பிணங்களா யேனும் கிடைத்தது. 

அலறிக் கொண்டு வந்த ஒருவன் யாரையோ உற்றுப் பார்த்த வண்ணம் வரிசை வரிசையாய் வந்து எட்டு மாதம் மதிக்கத்தக்க ஆண்குழந்தை ஒன்றை அள்ளி அணைத்துக் கொண்டு “ஐயோ கடவுளே………” இத்துடன் அவனிடம் முடிவுற்ற வார்த்தைகளுடன் அழுதான். முனங்கினான். அவனிடம் கண்ணீரும் தீர்ந்து போனது. தலையை ஆட்டிக் கொண்டே அழுதான். இடதுகையில் குழந்தையை தாங்கிக் கொண்டு வலதுகையை மூடி நெஞ்சில் குத்திக் கொண்டான். 

“ஆ… ஆ….” இழுத்துக் கொண்டே தரையை ஓங்கி அறைந்தான். 

இதுமாதிரி புலம்பல் காட்சிகள் நிறைய நடந்து கொண்டே இருந்தன. மடியில் ஒருவரைக் கிடத்திக் கொண்டு அல்லது ஒரு பிணத்தின் தலைப்பக்கம் மண்டி இட்டுக்கொண்டு உறவு முறையை – இறந்த முறையை – இறக்கும் முன் நடந்த நிகழ்வைக் கூறிக்கொண்டே அழுதார்கள். அத்தகைய காட்சிகள் நடந்தேறும் போதெல் லாம் பார்வை கலங்கி, இதயம் வெடித்துக் கொண்டே இருந்தது. 

இரண்டாம் நாள் பிணங்கள் வைக்கக்கூட இடமில்லா மல் போனது. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டன. அவற்றை இனங்காண புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. பிணங்களிலிருந்து எழுந்த நெடி மூக்கை உறுத்தியது. தன் குடும்பத்தில் ஒருவரையாவது பார்த்து விடும் – பிணமாக வேனும் – எண்ணத்துடன் வந்த ஒருத்தி வயிறு குமட்ட வாந்தி எடுத்தாள். அவளைத் தாங்கி இருந்தவன் அந்த இடத்திலிருந்து அகற்றும் போது அவள் ஏதேதோ புலம்பி னாள். தன்னை மட்டும் விட்டுச் சென்ற கடலையும், இறைவனையும் திட்டினாள். அந்த நேரத்திலெல்லாம் சடலங்களைத் தேடும் பணி தீவிரம் அடைந்திருந்தது. அதற்காகவே தொண்டர்கள் சேர்ந்து கொண்டிருந்தார்கள். 

வாவியின் ஓரங்களில் மிதந்து கொண்டிருந்த கட்டை, கட்டில், தொலைக்காட்சி என்ற இதர பொருட்களுக்கு நடுவில் இருந்து ஊதிக் கிடந்த உடல்களை எடுத்தார்கள். சாவின் மணம் சடலங்கள் இருக்கும் இடத்தை இனங் காட்டியது. மீட்பவர்களுக்கு மூக்கைக் கட்டிக்கொள்ளவும், கையுறைகளை அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது. பிணங்களைக் கண்டு பிடித்தவர்கள் அவற்றை ஒன்றாகச் சேர்த்து லொறிகளிலும், உழவு இயந்திரங்க ளிலும் அள்ளிச் சென்று வைத்தியசாலை சவக்கிடங்கின் முன்பாக கிடத்தினார்கள். 

வைத்தியசாலையும் அதை அண்டிய பிரதேசமும் பிண வாடையால் நிரம்பியது. அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்கள் கதவு – யன்னல்களை திறக்காமல் சாப்பிட மனமில்லாமல் சோக இசையைக் கேட்டுக் கொண்டு நாட்டின் பிணங்களைக் கணக்கிட்டுக் கொண்டே மரண நெடியை உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

பெரும்பாலான வாகனங்கள் வீதி முழுவதும் பிணத் தின் மணத்தைப் பரப்பி விட்டபடியே பகலிலும் விளக்கு களை ஒளிரவிட்டபடி பறந்தன. அவையின் உள் புற அடித் தட்டு முழுவதும் எண்ணிக்கையற்ற பிணங்கள் பொலித்தீன் உறைகள் கட்டப்பட்டுக் கிடத்தப்பட்டிருந்தன. சடலங்கள் இறக்கப்பட்ட பின்னரும் அவ்வாகனங்களில் இருந்த நெடி காற்றுடன் கரைந்து போகாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. 

மூன்று நாள் கடந்து நாலாவது நாளிலும் சடலங்கள் மீட்கப்பட்டன. அவைகளின் மணம் சுற்று வட்டாரம் முழு வதும் சிதைந்து போயிருந்தது. சதை அழிந்து வடிந்தும் கண்கள் உள்ளே இறங்கியும், வாய் – மூக்கு துவாரங் களினால் நீர் வடிந்தும் கிடந்தன. பெரும்பாலானவை விறைத்துப் போய் இருந்தன. சிலையாய் – கறுப்பாகவும். இதன் காரணமாகவே அவை எடுக்கப்படும் இடத்திலேயே புதைத்துவிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன் அவை பற்றிய – முடிந்தளவு – விபரத்தை தொகுக்கும்படியும் கிராம அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாவி இழுத்து வைத்திருந்து அருவருத்துப் போய் மிதக்க விட்டதும், கரையொதுக்கியதுமான பல பிணங்கள் அவ்வாறே புதைக்கப்பட்டன. 

மூடுண்டு போன கிராமத்தைத் தோண்ட தொண்டர் படை கிளம்பியது. வீடுகளுள் சிக்கியும் மணல் மூடுண்டும் நிறைய மனிதர்கள் மாண்டு போயிருக்க வேண்டுமென ஊகம் அதிகமாக இருந்தது. உயிருடன் இல்லாமலும், பிணமாக கிடைக்காமலும் எண்ணிக்கையில் பலர் குறைவதால் அவர்கள் மூடப்பட்டிருக்கலாம் என்றார்கள். 

அப்படித் தோண்டும்போதுதான் மினியின் உடலும் மீட்கப்பட்டது. 

9. மினியின் கதை 

சனி இரவில் தனது அலுவல்களை முடித்துக் கொண்ட வன் ஊர் நோக்கிய தனது பயணத்தை இருக்கையில் அமர்ந்தபடி ஆரம்பித்திருந்தான். அதிகாலையின் பாதி இருளில் அது முடிந்தபோது தடவித் தடவி வீடு வந்து சேர்ந்தான் மினியின் தந்தை. மலையைப் பிளந்து பாறை களை புஜத்தில் ஏற்றிக் கடலில் இறக்கித் தொலைத்த களைப்பு அவனிடம் நிறைந்திருந்தது. ஆழ்ந்த உறக்கத் துள் கைகளை சிலுவையில் அறைந்து குப்புறக் கிடந்தான். 

அவனுக்குக் கதவு திறந்து வழியேற்படுத்திக் கட்டில் வரை பாதை காட்டியவள், அவன் வீழ்ந்த கணத்தில் அடுப்பறையில் பணியில் இருந்தாள். வாழ்வின் சிக்கலை அப்பத்துள் திணிப்பதில் அவளது கவனம் இருந்தது. பிழிந்தெடுப்பதில் மிகவும் சிரமப்பட்டிருந்தாள். 

தன் நண்பியுடன் குறியீட்டு உரையாடல் செய்து உலோக இயல்புகளை அறிந்து கொள்வதற்கு – முகத்தை நீரால் கழுவி, தலையை வாரி மூன்றாய்ப் பிரித்து கைகளைச் சுழற்றிக் கொள்ள ஆரம்பித்தாள்- மினி. அவளது பிம்பம் பக்கம் மாறிப் பின்னலைப் போட்டுக் கொண்டிருந்தது. 

தந்தை (கனவு)+ தாய் (இடியப்பம்) + IQ (பிம்பம்) =வீடு 

வீட்டிலிருந்து 75m வரையான தூரத்தில் நீலப்பாயில் வெள்ளை நுரை தள்ளிக் கிடந்தது கடல். கிடையாய்ப் படுத்திருந்த வீதியில் செல்லும் வாகனம், திண்மமாய் இருந்த மீன் வாடி, நிலைக்குத்தாய் நின்ற வேலிக்கட்டை எதனாலும் மறைக்க முடியாமல் விஸ்வரூபத்தின் பரந்து கிடந்தது அது. 

அன்றைய நாள் – ஞாயிறு காலை. அடிவானத்தி லிருந்து உயர்ந்து நகரத் தொடங்கியது. எந்தக் கோணத்தி லிருந்து பார்த்தாலும் அது உயர்ந்தது என்பதைக் கண்டு கொள்ளக்கூடியளவு வளர்ச்சியும், குரூரமும் கறுப்பாய் மிதந்தது. வானத்தைப் பாதி மறைத்து – எழுந்து கரைக்குப் பாய்ந்தது. 

சூன்யத்தின் மையத்திலிருந்து தோன்றிய அதிர்வு அலையாக உருக்கொண்டு முப்பது அடிக்கு மேலாக உயரப் பாய்ந்து முன் சுவரை மோதி, கதவு – யன்னலைத் துண்டாடி உட்சுவரை – அவளின் பிம்பத்தை அவளுடன் சேர்த்தது. 

நீரின் கைகள் கட்டிலை அந்தரத்தில் உயர்த்தியபோது விழிப்புத் தட்டிக் கொண்டவன் கூரை வளையைப் பிடித்துக் கால்கள் உள் நுழையும் வரை உதைத்துத் துரத்தினான். உடல் கிழிபட்டு திவலைகள் பிரிய பெண் ஓடிப் போனாள். முறுக்கேறி தோள் குலுக்கி வந்த ஆண், வாவிக்குள் சுருட்டிப் போட்டான் – மினியின் தந்தையை. 

முன் கதவை பெண் இடிக்க சமையலறைக் கதவால் தலையை நீட்டியவளையும், அவள் பிழிந்து அவித்த இடியப்பத்தையும் தூக்கி எடுத்தது. கபாலம் வெடித்து மூளை சிதற மரத்துடன் மண்டையை மோதி பாம்பு மாநாடு நடத்திய பாலத்தைத் தாண்டி நகரத்துள் கரையொதுக்கியது. அன்றைய நாளின் கால் பகுதி மீதமிருக்கும்போதே வைத்தியசாலை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப் பட்டாள். 

இரண்டாம் நாளை நிறைத்திருந்த சோகக் கணங் களின் ஒரு பகுதியில், ரணங்கள் நிறைந்து ஊதி வெடித்துச் சிதைவடைந்து மரங்களில் சிக்குண்டு கிடந்தபோது மினியின் தந்தை மீட்கப்பட்டான். 

மூன்று நாள் கரைந்து ஒழுகிப்போய் நான்காவது நாளின் காலை தாண்டி இருந்த நிலையில் மினியின் வீடு தோண்டப்பட்டது. மணற்படை அகற்றப்பட்டு இரு சுவர் களின் பகுதிகள் தூக்கப்பட்டபோது நைந்து தளமாகிக் கிடந்த அவளில் பிம்பங்கள் குத்திக் குத்தி இரத்தம் பாய்ந்திருந்ததாம். வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்காக அவளுடல் தூக்கப்பட்டபோது எவ்வித வாடையும் எழவில்லை. 

“உப்பு நீரும், மணலும் அவளின் நைந்த உடலுக்கு பாதுகாப்பளித்திருக்கின்றன” ஒரு தொண்டன் முணு முணுக்கும்போது வாகனத்தில் கிடத்தப்பட்டாள். 

10. கதைகள் எழுதல்

நான்கு நாள் முடிந்திருந்த நிலை, வருடத்தின் கடைசி நாள், கிட்டத்தட்ட எல்லாருமே தங்கள் தங்கள் உறவின் இருப்பு – இழப்புப் பற்றிய முடிவை அண்மித்திருந்தார்கள். சிதைக்கப்பட்டு – சூன்ய வெளியாய்ப் பரந்து கிடந்த செங்கல் அடுக்குகளில் குடியிருந்த உயிர்கள் ஊர்ந்து நீள் கட்டடத்தி னுள் வரியாய் அடுக்கப்பட்டிருந்தன. காய்ந்த தின்பண்டங் கள் ஈரமாக்கி உண்ணக் கையளிக்கப்பட்டன. “அ, ஆ……..’ புதைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு “ஐயோ……..” தேசிய கீதமாக ஒலிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. வாசற்படி ஈரமாகி யதைக் கண்டு நடுக்கமுற்றவர்களும் இங்கு போர்த்திக் கொண்டு கிடந்தார்கள். 

வாய்களின் புலம்பல், குறைவுபட்டு இருந்தது. பற்கள் உராய்ந்து கொண்டிருந்தன. மரண வாசைனை ஊரின் மூலைகளிலெல்லாம் உருவமிழந்து அலைந்து திரிந்தது. சா தன்னுருவின் விகாரங் காட்டி உயிர்களைத் தீண்டி பயத்தால் நிறைந்தது. இதயம் துடிதுடித்து நரம்புகளை அரட்டி வார்த்தைகளைக் கோர்த்தது. அவரவர் துயரங்களை அடுக்கிக் கொண்டிருந்தவர்கள் அறுகோணமாய் குத்தி நடுவில் பரப்பிக் காட்சிப்படுத்தினார்கள். யாருடைய சோகம் பெரிதானது என்ற போட்டி இன்றிப் பரவிக் கிடந்த கதை களால் வளாகம் முழுவதுமே நிரம்பி இருந்தது. 

வெறுமையின் பிம்பங்கள் கண் உருக்கி இதயம் கிழிந்து சொட்டாய் விட்ட துளிகள் மணலைக் கிழித்துப் பெருக்கெடுத்தது. உவர் கோடுகளும், கீறல்களும் முகங் களில் பரந்து தெறித்துக் கிடந்தது. 

அவர்கள் பரப்பி உருப்படுத்திய கதைகளெல்லாம் புகை உருவாய்க் கிளம்பி இதயங்களைப் பிழிந்து கூர்க்கம்பி களால் எல்லோரையும் துளைத்தது. இன்மையின் ஓலம் நிரம்பி நீட்சியின் மூச்சுக்களை வெளிவிட்டது. பார்வைக் கோளங்களை உறுத்தி வழிய விட்டது. 

வெறுமையின் கதைகளாகவே உற்பத்தி செய்யப் பட்டவை நிர்வாணமாயே அலங்காரம் புறந்தள்ளி உண்மை காட்டி அலைகையில் பேரலை உருவாகி அதிரச் செய்து உலுக்கி எடுத்தது. 

சூழக் குந்திக் கதையை உருவாக்கிய மையம் பின்னாளில் உவர்நீர் உற்பத்தித்தானமாய் பிரகடனப் படுத்தி பேணப்படும் – அத்தனை துளிகள் பருக்கைகளுள் பதுங்கி பொசிப்பற்றுக் கிடந்தன. 

– தொடரும்…

– ஏவிவிடப்பட்ட கொலையாளி, முதற் பதிப்பு: டிசம்பர் 2008, சிறுகுநுனி பதிப்பகம், கொழும்பு, ஸ்ரீலங்கா.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *