ஏமாற்றங்கள்!





ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான பெரிய செல்வந்தர் தனது இடத்தோடு சேர்த்து சுற்றுச்சுவர் வைத்து அடைத்திருப்பதோடு , தன் இடத்தில் பாதியளவு வீடு நீண்டு கட்டியிருப்பதையும் கண்டு மிகுந்த கோபமும், வேதனையுமடைந்தான்.

இடத்தை வாங்கி விட்டு பராமரிக்காமலோ, பார்க்கச்செல்லாமலோ இருந்தால் பத்திரம் நம் மீது பதிவு செய்திருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர். இடங்களை சைட் போட்டு விற்பவர்கள் சிலர் ஒருவருக்கு விற்ற இடத்தையே மற்றவருக்கு விற்று காசாக்கி விடுகின்றனர்.
ரகு ராமன் இருபது வருடங்களுக்கு முன் இடம் வாங்கியதோடு இது வரை இடத்தை சென்று பார்க்காததாலும், இடத்துக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் இது தனது இடம் என சொல்லி வைக்காததாலும், வேலைக்காக ஊர் மாறி சென்றதாலும் விற்றதை மறைத்து இடம் விற்பவர் வேறு ஒரு செல்வந்தருக்கு கிரையம் செய்து விட்டார் என்பதையறிந்து செய்வதறியாது திகைத்து நின்றான்.
பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகி கேட்டபோது ‘தனி காலையாக இருந்தால் விற்றதை மறுபடியும் விற்க முடியாது. ஆனால் ஒரே காலையில் உள்ள நிலத்தை பல பேருக்கு கிரையம் செய்யும் போது இது போன்ற தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் சைட்போடும் இடத்தை வாங்கினால் உடனே கம்பி வேலி அமைப்பதும், வாங்கியவர் பெயர் பதித்த போர்டு வைப்பதும் தான் சரியான தீர்வு’ என்று கூறியவர்கள் சைட் போட்டவர்களைப்போய் பார்க்கச்சொன்னார்கள்.
ஒரு பிரமாண்டமான வீட்டின் முன் இருந்த காவலாளி கேட்டைத்திறந்து விட்டான். விலையுயர்ந்த பல கார்கள் அணி வகுத்து நிற்க சிட்டவுட்டில் சொட்டைத்தலையுடன் முண்டா பனியன் அணிந்தவாறு தினசரிகளைப்புரட்டிக்கொண்டிருந்தவர் வா” தம்பி” என வரவேற்று அமரவைத்தார்.
“புரோக்கர் பரமசிவம் வந்து நடந்த விசயத்த சொன்னாரு. ஏதோ தெரியாம தப்பு நடந்து போச்சு. நான் பவர் கொடுத்தவன் எனக்கே தெரியாம இந்த வேலையப் பண்ணியிருக்கான். உங்க சைட்ட ரெண்டாவதா கெரையம் பண்ணின பக்கத்து எடத்துக்காரர் ஊட்ட உங்க சைட்லயும் சேர்த்து கட்டிப்போட்டார். கட்டின ஊட்ட இடிக்கச்சொல்ல முடியாது. அதுக்கு பதுலா இப்ப புதுசா ஒரு ஏரியாவுல சைட் போட்டிருக்கறோம் அங்க ஒரு சைட்ட குடுக்கச்சொல்லறேன். ஒன்னங்கொஞ்சம் கூடுதலா செலவாகும். அதுக்கு வேணும்னா பேங்க்கடன் ஏற்பாடு பண்ணச்சொல்லறேன்” என கூறியதில் ரகு ராமனுக்கு உடன்பாடில்லை.
நகரத்தில் உள்ள இடத்தை விட்டு ஒதுக்குப்புறமான, மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடத்திற்கு போகச்சொல்வதோடு கூடுதல் பணம் கேட்டு கடன்காரனாக்கப்பார்ப்பது மனிதத்தன்மையற்ற செயலாகவே பார்த்தான்.
“நாளைக்கு சொல்கிறேன் ” எனக்கூறி அங்கிருந்து கிளம்பியவன் தனது வக்கீல் நண்பனை நவியைச்சந்தித்தான்.
“இத பாரு ரகு, எடம் பத்திரம் பண்ணினா போதும்னு எல்லாரும் நினைச்சிட்டு வாங்கிட்டு எடத்தையே மறந்து போயிடறாங்க. பத்திரமா பார்த்துக்கனம்னு யாருக்கும் தெரியறதில்லை. இதுக்கு போய் கேஸ் போட்டோம்னா வருசக்கணக்குல இழுக்கும். கீழ் கோர்ட்டுல தீர்ப்பானா மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இழுப்பாங்க. வித்தவனும் பணக்காரன். வாங்கி ஊடு கட்டுனவனும் பணக்காரன். கௌரவப்பிரச்சினையால உன்ற பக்கம் நாயம் இருந்தாலும் நாயம் கெடைக்கிறத தாமதப்படுத்தறதோட உனக்கும், உன்ற குடும்பத்துக்கும் பல வழில தொல்லை கொடுப்பாங்க. உன்னை நிம்மதியா தூங்க விட மாட்டானுக. வேலையக்கெடுத்துட்டு, வாங்கற சம்பளத்த கோட்டுக்கும், வக்கீலுக்கும் செலவு பண்ணீட்டு நிம்மதிய இழக்க வேண்டாம். அவங்க கொடுக்கிற எடத்தை வாங்கீட்டு உன்ற பத்திரத்த அவங்ககுட்ட கொடுத்து கையெழுத்து போடறது தான் நல்லது” என்று கூறிய போது தற்கால நடைமுறை நிலையை, சட்டத்தை மதிக்காத அல்லது தவறை நியாயப்படுத்தும் நிலையை எண்ணிக்கண் கலங்கியவனாய் வெளியே சென்றவன், பைக் சாவியை அறையின் மேஜை மீது வைத்து விட்டு மறந்ததால் திரும்பவும் நண்பன் அறைக்குச்சென்ற போது நண்பனின் அலை பேசி உரையாடலில் “கவலைப்படாதீங்க சார், ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் பேசற மாதிரி பேசி ரகுவ ஒத்துக்க வெச்சிட்டேன். நாளைக்கு பத்திரத்தோட வந்திடுவான். கையெழுத்து வாங்கிட்டு, இதுல பாதி வெலை கம்மியா போற சொத்த கொடுத்து அனுப்பிச்சிடுவோம். எனக்கு பேசியபடி கொடுக்க வேண்டியதைக்கொடுத்திடுங்க” என கூறி அலை பேசியை டேபிளின் மீது வைக்கும் போது ரகுராமன் உள்ளே நுழைந்ததைப்பார்த்ததும் முகத்தில் வேர்த்துக்கொட்டியது நண்பனுக்கு.