ஏன் அப்படிச் செய்தாள்..?!




மாட்டக்கூடாது என்று நினைத்துக் கூட்டத்தில் ஒளிந்த நடந்த சிவா மாட்டிக்கொண்டு விட்டான்.
பெண்ணுடன் வந்த வேதாச்சலம்……
“வணக்கம் தம்பி !”என்று கூறி கை கூப்பி தடுத்து நிறுத்தி விட்டார்.
அவளை விட்டு அவசரமாக கொஞ்சம் விலகி வந்து வந்து…
“என்ன தம்பி இப்புடி பண்ணிப்புட்டீங்க..?”முகத்துக்குக்கெதிரே கேட்டும் விட்டார்.
இவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
பதினைந்து நாட்களுக்கு முன்….
வேதாச்சலம், இவன் அலுவலகத்திற்குப் போய் வரும் வழியில் நன்கு பழக்கமானவர்.
ஒரு நாள் இவனே இவரிடம்….
“தம்பிக்கு வரன் ஒன்னு தேடிக்கிட்டு இருக்கேன். நல்ல இடமா இருந்தா சொல்லுங்க. பொண்ணு நல்லா படிச்சுருந்தா போதும். வேலைக்குப் போகனும்ன்னு ஒன்னும் அவசியமில்லே. கிடைச்சா போகலாம். அதுவும் தப்பில்லே. என் தம்பிதான். தங்க கம்பி. அரசாங்க உத்தியோகம்.”சொன்னான்.
“அப்படிங்களா..!? என் மகள் இருக்காள். வந்து பாருங்களேன். புடிச்சிருந்தா தாராளமா..முடிச்சிக்கலாம்.”சொன்னார்.
மறுநாளே இவன், மனைவி, தம்பியுடன் போனான்.
இதோ நிற்கும் இவர் மகள் அனிதாவைப் பார்த்தார்கள்.
‘பிடிக்கவில்லை’ என்று மனைவி சொல்ல…அப்படியே கைபேசியில் தகவலும் சொல்லி விட்டான்.
நாலைந்து நாட்களாகக் கண்ணில் படவில்லை. இதோ போட்டுவிட்டார். ஏதாவது கேட்டுவிடப் போகின்றாரோ என்று பதுங்க..பிடித்து விட்டார்.
‘இந்த இடம் தகையுமென்று வேதாச்சலம் நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருந்திருப்பார் போலிருக்கிறது. ஏமாற்றம் ! அதான் கேட்கிறார். பெண் அருகிலிருக்கும் போது உண்மையை எப்படி சொல்ல..? மனசு நோகும் !’- அந்த சங்கடம் மனதை உறுத்த … தர்மசங்கடத்தில் தவித்தான்.
“வ… வந்து… வந்து சார்..!”
சிவா தவிப்பாய் இழுத்தான்.
“தம்பி ! எதையும் மறைக்காம சொல்லுங்க. அதிகம் எதிர்பார்த்தாலும் கூசாம கேளுங்க…”
‘இனி மழுப்புவதற்கோ, மறைப்பதற்கோ சரியில்லை. !’என்று முடிவிற்கு வந்த சிவா..
“சார் ! பொண்ணு வலது கால் கொஞ்சம் தாங்கி நடக்கிறதா கேள்வி. !”
தட்டுத் தடுமாறி சொன்னான்.
கேட்டவர் முகத்தில் பயங்கர அதிர்ச்சி.
“பொய் ! யார் சொன்னா..?”
ஆத்திரத்தில் சீறினார்.
“எ…எ ..என் மனைவிதான் !”
இவன் சொல்ல…
அயர்ந்தார். ஒரு நிமிடம் கப்சிப்.
“அதெல்லாம் கிடையாது. வேணுமின்னா… இப்பவே சோதனை பண்ணிப்பாருங்க.”என்று கடுப்பாக சொன்னவர், இவன் பதிலை எதிர்பார்க்காமலேயே நாலடி தள்ளி நின்ற மகளை…..
“இங்கே வாம்மா !” அழைத்தார்.
தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் நீட்டி..
‘அந்த பங்க் கடையில போய் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கிட்டு வாம்மா..”அனுப்பியும் விட்டார்.
அவளை அனுப்பிய கையோடு …
“என் பொண்ணுக்குக் கால் ஊனமான்னு இப்ப பார்த்துச் சொல்லுங்க தம்பி !”என்றார் கோபமாக.
அவள் நடையைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. முகத்தில் கரி. அனிதா அன்னம்போல அழகாக நடந்தாள்.
“என்னங்க தம்பி முழிக்கிறீங்க..? உங்க மனைவி தப்பாச் சொல்லி இருக்காங்க. பொண்ணு வேணாம் என்கிறதுக்காக எதை வேணும்ன்னாலும் சொல்லிடறதா..?”குற்றம் சாட்டியவர் அதோடு நிற்கவில்லை.
“என் பொண்ணு பத்தரை மாற்றுத் தங்கம் தம்பி. வரதட்சணை, நகை, நட்டு, சீர்செனத்தி அதிகமா எதிர்பார்த்தாலும் கேளுங்க.”என்று சொன்னவர்……
மகள் அருகில் வர பிஸ்கட் பாக்கெட்டை அவள் கையிலிருந்து வாங்க….
“வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போங்க. போய் நல்லா யோசிச்சி, கலந்து நல்ல சேதி சொல்லுங்க. அதுக்காக வற்புறுத்தலில்லே. !! ” இவன் கையில் பிஸ்கட் பாக்கெட்டை திணித்து விட்டு பெண்ணுடன் நடையைக் கட்டிவிட்டார்.
இப்போது நடந்தது கனவா, நனவா..என்று தெரியாமல் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் சிவா.
‘அழகு, அந்தஸ்து என்று எந்தவித குறையுமில்லாமல் நன்றாக இருக்கும் இந்தப்பெண்ணை.. நிர்மலா ஏன் ஊனமென்று குறை கூறினாள்….?’- மனசுக்குள் கேள்வி எழுந்தது.
தம்பி நித்தீசுக்கு வயது 32 . அவனுக்காக இருபது பெண்ணிற்கு மேல் பார்த்தாகிவிட்டது. ஒரு இடமும் சரி இல்லே. பார்த்த அத்தனை இடங்களையும்… முகம் சரி இல்லை, மூக்கு சப்பை , முடி குட்டை, அது சொத்தை, இது சொத்தை என்று நிர்மலா தட்டிக் கழித்து விட்டாள்.
அப்படியென்றால்…இவ்வளவு நாளும் அவள் சொன்னதெல்லாம் பொய்யா..? ஏன் அப்படிச் சொன்னாள்..?
கூடத்தில் அமர்ந்திருக்கும் ஆண்களுக்கு… நமஸ்காரம் செய்யும் பெண்ணை நல்லா இருக்கு, நல்லா இல்லை என்று ஓரளவுக்குத்தான் பார்க்க முடியும். உள்ளே நுழைந்து பார்ப்பவளுக்குத்தான் பெண்ணின் குறை தெரியும் என்று நம்பியது தவறு. திருமண வயதைத் தாண்டிய தன் கொழுந்தனுக்கு, தாய் இடத்திலிருந்து முடிக்க வேண்டியவள் ஏன் இப்படி முரணாக நடந்து கொள்கிறாள்..? தட்டிக் கழித்துப் பழி வாங்குகிறாள் ..?
அண்ணிக்கும் கொழுந்தனுக்கு தனக்குத் தெரியாமல் ஏதாவது மன வருத்தமா..? உனக்குத் திருமணம் முடிக்கிறேனா பார் ? – என்று உள்ளுக்குள் சபதம், சவாலா..? என்ன ஆச்சு இவளுக்கு..?!!
‘ஒருவேளை இருவருக்கும் தொடர்போ..?’ – திடீரென்று சிவாவிற்குள் இந்த நினைப்பு தலை துக்க..
‘ச்சே ! ச்சே! அப்படியெல்லாம் இருக்காது. !’மனம் மறுத்தது. மனைவி, தம்பி அத்தனை கீழ் தரம் இல்லை. அவனே அதை ஒதுக்கினான்.
‘ஆனாலும்…. ஏன் இருக்கக் கூடாது..?’- மனசு முரண்டியது.
இப்படிப்பட்ட தவறான உறவுகள் நாட்டில் நடக்காமல் இல்லை.
கொழுந்தனுக்குத் திருமணம் முடித்தால்… தன்னை மறந்து விடுவான். அதனால் பெண் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று தட்டிக் கழிப்பது சமூகத்தில நடக்கிறது. இப்படியும் இருக்கலாம்..!! – நினைக்க தொண்டைக்குள் கசப்பு மருந்து இறங்கியது போலிருந்தது.
தம்பி நித்தீஸ் தலை தெரிந்தால் போதும்…மரியாதை நிமித்தம் நிர்மலா எழுந்து கொள்வாள். அப்பால் செல்வாள். அதோடு அன்பும், பாசமும் அதிகம். எது செய்தாலும் எடுத்து வைத்துக் கொடுப்பாள். பங்கு பிரித்து வைப்பாள். தொட்டால் போதும்… ”தொடாதீங்க . அது தம்பிக்கு !” என்று பதறுவாள். அப்படிப் பட்டவளா இப்படி செய்வாள்..?!!
ஒரு வேளை நடிப்போ. கணவன் கண்ணில் மண்ணைத் தூவவேண்டும் என்கிற நினைப்பு, நாடகமோ..?
உண்மையென்றால்..? !!….நினைக்கவே மனம் ஆடியது, நடுங்கியது சிவாவிற்கு.
‘அப்படி என்றால் இருவரையும் கண்டம் துண்டமாக வெட்டிப் போட வேண்டும் !’மனம் கறுவியது.
பொறுமையாக விசாரிக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன்என்றில்லாமல் ஆத்திரம் அடக்கி அமைதியாக விசாரிக்க வேண்டும். – சிவா மெல்ல நடந்தான்.
வாசலில் வழக்கம் போல் நிர்மலா சீவி, சிங்காரித்துக் கொண்டு நின்றாள்.
கணவனைக் கண்டதும் அழகாகப் புன்னகைத்தாள்.
சிவா பதிலுக்குச் சிரிக்கவில்லை.
உள்ளே எரிமலை கனன்று கொண்டிருக்கும்போது சிரிப்பு எப்படி வரும்..?
உம்மென்று உள்ளே சென்றான்.
சோபாவில் அமர்ந்து பிஸ்கட் பாக்கெட்டை டீபாயில் வைத்தான்.
”ஏதுங்க பிஸ்கட்..?”அருகில் வந்த நிர்மலா கேட்டாள்.
“வேதாச்சலம் கொடுத்தார்..!”
“எந்த வேதாச்சலம்..?”
“போன வாரம் பெண் பார்க்கப் போனோமே.. அந்தப் பெண்ணோடா அப்பா !”
“ஏன் கொடுத்தார்..?”- சட்டென்று பதற்றம். குரலில் மாற்றம்.
“சும்மா…!”
நிர்மலா முகத்தில் வியர்வை அரும்புகள்.
“எதுக்குத் திடீர் வியர்வை..?”இவன் அவளப் பார்த்தான்.
”தெ.. தெரியல…”- தடுமாற்றம்.
“பொய் ! எதையோ மறைக்கிறே..?”
“அ.. அ .. அது வந்து..”
“சொல்லு..?”
சங்கடம். – கையைப் பிசைந்தாள்.
“சுத்தி வளைக்காம நானே விசயத்துக்கு வர்றேன். அவர் பொண்ணு விசயத்துல நீ என்கிட்டே பொய் சொல்லி இருக்கே !..”
“என்ன உளர்றீங்க..?”
“நடிக்காதே !. இன்னைக்கு நானே அவளை கடைத்தெருவில நேர்லப் பார்த்தேன். முடமில்லே..!”
துணுக்குற்றாள். வியர்வை பெருகியது.
“இந்த ஒரு விஷயத்தை வைச்சி பார்க்கும்போது நீ எல்லா பொண்ணுங்க விஷயத்திலும் பொய் சொல்லி இருக்கேன்னு தோணுது. ஏன் நிர்மலா…?”
”………………..”
“என் தம்பிக்கு மணம் முடிக்க என்ன தயக்கம் .?”
”……………..”
“ரெண்டு பேருக்குள்ளே ஏதாவது மனக்கசப்பு, வருத்தமா..? இதனால் பழி வாங்கும் நடவடிக்கையா..?”
”………………..”
“தொடர்பா..?”
“அத்தான்!”அதிர்ந்து அலறினாள்.
அந்த அலறல் அவளது உண்மைத் தன்மையைக் காட்டிக் கொடுத்தது.
“இருக்காது நம்பறேன். காரணத்தைச் சொல்லு..?”
“சொன்னா கோபம் கூடாது..”
“இல்லே சொல்லு..”
“சாதாரண விசயம்தான்..”
“பரவாயில்லே சொல்லு…?”
“நமக்குப் பின்னாடிதான் அவர் குழந்தைப் பெத்துக்கனும்..”
“பு..புரியல..”
“ஆமாங்க. நமக்கு திருமணமாகி அஞ்சு வருஷங்கள் ஆகியும் குழந்தை இல்லே. உங்க தம்பிக்கு திருமணம் முடிச்சி உடனே பொறந்தா… நமக்குச் சங்கடம். எனக்கு அவமானம்.”
எதிர்பாராதது. – எதுவோ இவனுக்குள் மளுக்கென்று முறிய ..
“தப்பு நிர்மலா..! இந்த சாதாரண விசயத்துக்காக அவன் திருமணத்தைத் தள்ளி போடுறது தப்பு. இன்னொரு விஷயம் தெரியுமா..அவனுக்குச் சீக்கிரம் திருமணத்தை முடிக்கனும். உடனே குழந்தைப் பிறக்கனும். அதை நீயும், நானும் எடுத்துக் கொஞ்சனும். அதன் விளைவால் நமக்குள் இருக்கும் குறை நீங்கி… நமக்குக் குழந்தைப் பிறக்கனும். அதான் என் எண்ணம், திட்டம். குழந்தை இல்லாத வீட்ல குழந்தை பிறந்தால்… அதன் நடமாட்டத்தில் பிறக்காதவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு, குறை இருந்தாலும் நிறைவாகி குழந்தைப் பிறக்கும் என்பது நூத்துக்கு தொண்ணுறு விழுக்காடு உண்மை. இதிலும் நமக்குத் தோல்வி…பிறக்கலைன்னா அவன் குழந்தையையே நாம நம்ம குழந்தையா வளர்க்கலாம். அதிலும் உனக்குத் திருப்தி இல்லேன்னா… அவன் குழந்தைகள்ல ஒன்னை நாம தத்தெடுத்துக்கலாம். இது புரியாம, தெரியாம ..கொஞ்சம் புத்தி பிசகி இப்படி தப்பா யோசிச்சுட்டே. தப்பு !”நிறுத்தினான்.
நிர்மலாவிற்குக் கணவன் சொன்ன உண்மை உறைத்தது.
“ஆமாங்க… தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுக்கோங்க. அந்த பெண் அனிதாவையே நம்ம நித்தீசுக்கு முடிப்போம். குழந்தை பாக்கியம் பெறுவோம்.!”மலர்ச்சியாக சொன்னாள்.
சிவா முகத்தில் மகிழ்ச்சி !