எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
“இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத வயிற்றுவலியை எவர் தீர்த்துவைக்கிறாரோ அவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.” – அரண்மனை மதில் மேல் நின்று முரசு அடித்து பறைசாற்றினர்.
அந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் நகைத்துக்கொண்டே கலைந்தனர்.
மேல்கலிங்கத்து சோழிங்கம், தென்னிந்தியாவின் ஒரு மாகாணம். பரப்பளவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாகாணம். கடந்த தலைமுறையில் இம்மாகாணத்தை ஆண்டவர் எழுபத்து மூன்றாம் எழுங்கனார் எல்லப்பநாயகன். வெகு அருமையாக ஆட்சி புரிந்தார். வீராதி வீரர், கருணையில் கடவுள், எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் வள்ளல். அவரால் மேல்கலிங்கத்து சோழிங்க மாகாணமே செல்வச் செழிப்பாய் திகழ்ந்தது.
அவருக்கு முதுமை தீண்டியதும் அவரது ஒரே புதல்வன் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அரியணையில் அமர்ந்தார். இவர் தந்தைக்கு நேர் எதிர். மந்தமானவர், போர் என்றால் பயம், சாப்பாட்டுப் பிரியர், ஒன்றுக்கு ஐந்து மனைவியர், விதவிதமான விளையாட்டுகளில் விருப்பம் என வித்தியாசமான அரசராக இருந்தார். அரசரே இவ்வாறு இருந்தால் மக்கள் மதிப்பார்களா? மக்களால் இவர்முன் ஏதும் தைரியமாக சொல்ல முடியாவிட்டாலும், இவருக்குப் பின்னால் இவரை கேலியும் கிண்டலும் செய்தார்கள்.
இவரது கிறுக்குத்தனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.
தனது தளபதியைத் தேர்ந்தெடுக்க மல்யுத்தப் போட்டியை வைத்தாலாவது போனால் போகட்டும் என நினைக்கலாம். ஆனால், இவர் ஏற்பாடு செய்தது எலிச்சண்டைக்கு (இவர் பெயரில் எலி சேர்ந்தது அப்போதிலிருந்துதான்). கேட்டால், ‘எலியையே சண்டைக்கு தயார்படுத்தியவர் நிச்சயம் வீரர்தான்’ என்பார்.
ஒருமுறை வடமாகாணத்து மன்னன் ஒருவன் இவரை போருக்கு அழைத்தான். போர் என்றதுமே இவர் மூர்ச்சை அடைந்துவிட்டார். எல்லோரும் இவரை உலுக்கி எழுப்பி ஒருவழியாக போருக்கு அனுப்பினார்கள். போர்க்களத்தில் இவர் என்ன செய்தார் தெரியுமா? தளபதி, படைத்தலைவர்கள், படைவீரர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தி முன்னே அனுப்பிவிட்டு, இவர் மட்டும் போர்க்கள மைதானத்தின் ஓரத்தில் இருக்கும் ஒரு மரத்தில் பதுங்கிக்கொண்டார். தளபதி படைகளைத் திறமையாக வழிநடத்தி வென்றுவிட்டார். முடிவில் அனைவரும் ஆரவாரம் செய்யும்போது எங்கிருந்தோ சிம்ம கர்ஜனை கேட்க, அனைவரும் திரும்பிப்பார்த்தால், மண்ணையும் குருதியையும் பிறரிடமிருந்து தடவிக்கொண்டு, தானே படைகளை வழிநடத்தி வென்றதுபோல் எலிமாறன் கர்ஜித்தார். அனைவரும் இவரை ஆமோதிப்பதுபோல் நடித்தனர்.
அரசவையில் இவரது அரியணை வித்தியாசமானது. ஒரு பொத்தானை அழுத்தினால், அப்படியே அரியணை கீழ்த்தளம் செல்லும். அங்கேதான் இவரது பிரத்தியேக சமையலறை உள்ளது, எப்போது வேண்டுமோ என்ன வேண்டுமோ சாப்பிட கிடைக்கும். கொடுமை என்னவென்றால், கவிகள் இவரைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும்போதே இடையில் இவர் கை உயர்த்துவார் —உடனே கவிகள் பாட்டை நிறுத்தவேண்டும். எலிமாறன் கீழ்த்தளம் சென்று விரும்பியதைச் சாப்பிட்டு, மீண்டும் மேலே வந்து சைகை செய்வார். இப்போது சரியாக நிறுத்திய இடத்தில் இருந்து, அதே ராகத்தில், தாளத்தில், பிசிறு தட்டாமல் அவர் பாடவேண்டும், இல்லையெனில் பரிசு இல்லை, தண்டனை உண்டு. எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இதுபோன்ற ‘இடைநிறுத்தி/மறுதொடங்கி’ வசதிகள் இசைப்பான்களில் வருவதை முன்கூட்டியே அறிந்த ஞானி இவர்.
சரி, இவரது வயிற்றுவலிக்கு வருவோம். நீண்ட காலமாக இவரை வயிற்றுவலி பாடாய்படுத்துகிறது. என்னென்னவோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை, இறுதியாகத்தான் பறைசாற்றினார். அதைக்கேட்டு வட இந்தியாவிலிருந்து வந்தார் ஒரு வைத்தியர். சில நாட்கள் அரண்மனையிலேயே தங்கி மன்னரை நன்கு ஆராய்ந்தபின், “அரசே! நீங்கள் உடல்பருமனைக் குறைத்தால் தானாகவே இந்த வயிறுவலி குணமாகிவிடும்” என்று சொல்லிச் சென்றார்.
எலிமாறனுக்கு வேறுவழி எதுவும் இல்லாததால் அவர் சொல்படி கேட்க முடிவு செய்தார்.
முதலில் நடைப்பயிற்சி. பகல் வேளையில் இவரால் சுதந்திரமாக நடைபயில முடியவில்லை, எப்போதும் ஒரு கூட்டம் இவரின் ஆணைக்கு அடிபணியத் தொடர்ந்து கொண்டு இருந்தது. அதனால் இரவில் நடக்கலானார். இவரின் பார்வை விரிவடைய ஆரம்பித்தது. அரண்மனை வளாகத்தில் நடந்த பல அநியாயங்கள் இவரது பார்வைக்கு வந்தன. சிறுவர், சிறுமிகள் பாடசாலை செல்லாமல் அரசபணியில் இருப்பது மட்டுமல்லாமல், கொடூரத்தின் உச்சமாய் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை கண்முன்னே கண்டு வெகுண்டெழுந்தார். தவறு செய்தவர்களை கடுமையாக தண்டித்து, சிறுவர்/சிறுமியரை பாடசாலைக்கு அனுப்பினார். ‘அரண்மனை வளாகத்திலேயே இத்துனை தவறுகள் நடந்தால், நாட்டில்….?’ எனத் தெளிந்து, இரவில் நகர்வலம் செல்ல விழைந்தார்.
தெருவில் தீமூட்டி குழுமியிருந்த மாந்தர்களை மறைவிலிருந்து கவனித்தார். ஒட்டுமொத்தமாக இவரைத் திட்டித்தீர்த்தார்கள், இவர் தந்தையின் ஆட்சிக்கும் இவருக்கும் நூலிழைகூட ஒற்றுமை இல்லை என. மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பினார். ஒரு வாரம் யாரையும் காணாமல், ஆழ்ந்த யோசனையில் இருந்தார். தான் நம்பும் சில பணியாளர்களை அழைத்து நாட்டு நடப்பை நேர்மையாக சொல்லச்சொல்லி அறிந்தார். எல்லாவற்றையும் நன்கு அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்.
நியாயமான வரி கட்டாமல் ஏய்ப்போர் மீது நடவடிக்கை, அபரிமிதமான நிலங்களை ஆக்கிரமித்து அவற்றைப் பராமரிக்க ஏழைகளை கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலிப்பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றும் பெருநில மாந்தர்களின் நிலங்களை மக்களுக்குப் பிரித்து அளித்தல், கட்டாயக்கல்வி அமலாக்கம், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அன்றாடத் தேவைகளை மக்களே விதைத்துக்கொள்வது, பல்வேறு விளையாட்டுகளில் மக்கள் அனைவரையும் ஈடுபடுத்தி ஊக்குவிப்பது, எதிரிகளை கட்டுப்படுத்தி அரவணைத்து போருக்கான தேவையைக் குறைப்பது, மாகாணங்கள் தாண்டிய வியாபாரத்தை விரிவுபடுத்தி அனைவரும் பயனுறச் செய்வது என பலப்பல தீர்வுகளால் இவரது மாகாணம் மட்டுமல்லாமல் மற்ற மாகாணங்களிலும் நற்பேர் பெற்றார்.
இவ்வளவும் செய்தபின் இவரது உடல் பருமன் காணாமல் போனது. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் உடற்கட்டு பலமானது. வயிற்றுவலி அறவேயில்லை. அந்த வைத்தியரை அழைத்து விசாரித்தால் “அரசே! நீங்கள் எப்போதும் ஏதாவது தின்றுகொண்டே இருந்ததால் செரிமான உறுப்புகள் அதிகப்பளுவால் அவதிப்பட்டதே வயிற்றுவலிக்குக் காரணமாயிருந்தது. ஓர் அரசராக உங்களின் கடமையை செய்யத்தொடங்கியதுமே உங்களின் உணவுப் பழக்கம் கட்டுக்குள் வந்தது. கடுமை உழைப்பு உங்களை கட்டழகனாக ஆக்கியது” என்றார்.
எல்லாம் மாறினாலும் ஒன்றே ஒன்று மட்டும் மாறவில்லை – அது இவரது ‘விரல் சூப்பும்’ பழக்கம். இவருக்கு எப்போதாவதுதான் விரல் சூப்பவேண்டும் என்று தோன்றும், அப்போது அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. வேடிக்கை என்னவென்றால், உக்கிரமாகப் போர் நடக்கும் வேளையில், திடீரென போர் நிறுத்தப்பட்டு, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, இவர் ரசனையாக விரல் சூப்புவார். எதிரி நாட்டு மன்னன் இவரது வீரத்தின் மேலுள்ள பயத்தால் பொறுமை காப்பான். அரை மணி நேரம் கழித்து மீண்டும் போர் தொடங்கும்.
ஹாஹாஹா அருமை …
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி