எழுத்தாளர் ஏகலைவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 775 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று கடையடைப்பு! தமிழகமுழுதும் அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும்! அரசு ஆணையிட்டோ, அல்லது எதிர்க்கட்சிகள் வேண்டிக்கேட்டோ, அந்தக் கடையடைப்பு இல்லை. வணிகர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசாங்கத்தைக் கண்டித்துத் தாங்களே. தங்களின் கடைகளை அடைத்துவிட்டனர். கடையடைப்புச் செய்தியறிந்தோர் முன் கூட்டியே வீட்டிற்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களை வாங்கி வைத்துவிட்டனர். ஆனால், அன்றாடங்காய்ச்சிகளான ஏழை எளிய மக்கள் அன்றுதான் கிடைத்த கூலிக் காசுக்கு எந்தப் பண்டமும் வாங்கமுடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தனர்; கடைகள் மட்டுமல்ல, லாரிகள், ஆட்டோக்கள் கூட வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆங்காங்கு நின்று போயின. இவற்றையெல்லாம்விட எழுத்தாளர் ஏகலைவனுக்கு என்ன பெரிய கவலையென்றால் ‘கேபிள் டி.வி.’ களும் அன்று மூடப்பட்டதுதான்! உள்நாட்டுத் தொலைக்காட்சிகளிலும், வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளிலும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் எதைப் பார்ப்பது எதைத் தவிர்ப்பது என்று புரியாமல் எல்லா நிகழ்ச்சிகளையுமே கொஞ்சம் கொஞ்சம் பார்த்து ரசித்துவிட்டு மாலை 4 மணிக்கு உற்சாகமாக எழுதத் தொடங்குபவன்; உள்நாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏற்படுத்திய தலைவலியின் காரணமாக அவற்றை அறவே நிறுத்திவிட்டு ‘புலித்தைலம்’ தடவிக்கொண்டு தூங்க ஆரம்பித்தவன் மாலை 5 மணிக்குத்தான் மிகுந்த அலுப்புடன் எழுந்தான். 

முகத்தில் கடுகடுப்பு. ‘கேபிள் டி.வி.’ எதுவுமே பார்க்க முடியாமல் போயிற்றே; அதனால்! வீட்டின் கீழ்த்தளத்தில் வேலைக்காரக் கிழவி அவன் மனைவியுடன் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தாள். 

‘இன்னிக்கிக் காத்தாலேருந்து ஏழை பாழைங்களுக்கெல்லாம் ரொம்ப பேஜாராப் பூடுச்சும்மா, ரெண்டு மூணு பெரிய ஓட்டலுங்கதான் திறந்து வச்சிருந்தான். அங்ஙணபோயி என்னாத்த என்னா காசு கொடுத்து வாங்கி பசியை அடக்கிட முடியும்! நல்ல கவர்முண்டு இது, இந்த மூணு வருசத்திலே எத்தனை தபா கடையை மூடுறது! 

‘கருப்பி, உன் கவலை உனக்கு! மேலே நம்ப வீட்டு அய்யாவுக்கு, இன்னைக்கு ‘கேபிள் டி.வி, இல்லியேன்னு பெரிய கவலை’. ‘இருந்தா, நீ கூட ரெண்டு மணிக்கே கீழே இறங்கி வந்திருக்க மாட்டியே அம்மா.’ 

ஏகலைவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. கருப்பியிடம் தன் மனைவி நன்றாக மாட்டிக் கொண்டாள் என்ற உற்சாகத்துடன் குளியலறைக்குள் புகுந்தான். குளித்து விட்டு காலர் வைத்த காக்கி நிறப்பனியன் அணிந்து, பூப்போட்ட லுங்கியொன்றைக் கட்டிக்கொண்டு, தன் மேஜை மீது குவிந்திருந்த கடிதங்கள் மீது ஒரு கண்ணோட்டம் விட்டான். ஒரு கடித உறையின் மீது புகழ்பெற்ற ஒரு வாரப் பத்திரிகையின் அலுவலக முத்திரை இருந்தது. முதலில் அந்த உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படித்தான். 

‘அடுத்த இதழில் வெளியிடுவதற்கு உங்கள் சிறுகதையை ஒரு வாரத்திற்குள் அனுப்பி உதவிட வேண்டுகிறோம்’ 

என்பதுதான் கடிதத்தின் சாரம். அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு, மேஜை மீது அதைத் தனியாக வைத்துவிட்டு, மற்ற கடித உறைகளைக் கிழித்து; சிலவற்றிலிருந்து – அவன் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் பற்றிய வாசகர்களின் பாராட்டுரைகள், விமர்சனங்கள், மற்றும் சிலவற்றிலிருந்து அவற்றை வெளியிட்ட பத்திரிகை அலுவலகங்களிலிருந்து அனுப்பப்பட்டிருந்த காசோலைகள் அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் பார்த்தும் படித்தும் விட்டு; காசோலைகளை மேஜை டிராயருக்குள் வைத்துப் பூட்டியவாறே ‘லீலா’ என்று அன்பொழுகக் குரல் கொடுத்தான். ‘லீலா வந்து கால்மணி நேரமாச்சு’ கேலியாகச் சிரித்துக் கொண்டே காபியை லீலா அவனிடம் நீட்டினாள். 

‘கால்மணி நேரமாச்சா ? நான் கவனிக்கவே இல்லியே காலிலே மணி கட்டிகிட்டு வந்திருந்தா ஓசை கேட்டு உடனே கவனிச்சிருப்பேன்ல!’ ‘ஒரு சிலம்பு வாங்கிக் கொடுங்க! அது ஓசை எழுப்பிக்கிட்டே இருக்கும்’. 

‘ஒற்றைச் சிலம்பா? என் கண்ணகிக்கு இரட்டைச் சிலம்புதான் வாங்கித் தருவேன்’. 

‘ஓ ! என்னை கண்ணகியாக்கிட்டு, மாதவியொருத்தியைத் தேடுற திட்டமோ!’ சிரிப்பை அடக்கமுடியாமல் காப்பியை சிரமப்பட்டு விழுங்கினான். அவளை இறுகத்தழுவிக் கொண்டான். 

‘நான் வீட்டுக்குப் போறேம்மா.’ 

வேலைக்காரியின் விடைபெறும் குரல் கேட்டு; லீலா, அவன் பிடியிலிருந்து நழுவினாள். 

‘சரி, லீலா!நான் கடற்கரைப் பக்கம் போய்ட்டு வர்றேன்’.

‘எதுக்கு, தனியா ? ஊஹும்; கானல்வரி பாடவா?’ 

‘வரியைப் பத்தி பேசாதே – அதுக்காகத்தான் இன்னைக்குக் கடையடைப்பே’. 

‘சீக்கிரம் வந்து சேருங்க; சிந்திக்கிறதுக்காகக் கடற்கரைக்குத் தனியாப் போறேன்னு சொல்லிட்டு தாமதமா வந்தீங்கன்னா; ஊர்ல கடையடைப்பு – இங்க வீட்ல கதவடைப்புதான்!’ 

‘இப்ப முதல்ல உன் வாயை அடைக்கிறேன்’. 

‘இச்!’ 

ஒரு வாரத்திற்குள் சிறுகதை வேண்டுமென்று கேட்டு வந்த கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஏகலைவன் மாடிப்படிகளில் இறங்கினான். அவன் கால்கள் கடற்கரை நோக்கிச் செல்லும் சாலையில் நடைபோட்டன. 

சாலையின் எதிரே கடற்கரையில் கண்ணகியின் சிலையை மறைத்துக் கொண்டு மின் விளக்கால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கட் அவுட்! நன்றாக இருட்டாத காரணத்தால் மின் விளக்குகளில் ஒளிப்பிரவாகம் இல்லை. ‘உன்னையும் மறைத்துவிட்டார்களா?’ என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டு, ஓரமாகப் போய் கண்ணகி சிலை இருக்கிறதா; எடுத்துவிட்டார்களா என்று பார்த்தான். நல்லவேளை கையில் ஒற்றைச் சிலம்புடன் அவள் சினங்கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள். 

அவன் எழுதவேண்டிய கற்பனைச் சிறுகதைக்கான கரு உருவாகி, உருவான வேகத்திலேயே சிதைந்தது. ‘தமிழ்நாட்டில் எத்தனை கண்ணகிகள் காவல் நிலையத்தில்….’ என்று எண்ணியபொழுதே; ‘சே! இதைத்தான் எல்லாப் பத்திரிகைகளும் சிறுகதைகளாகவே; அதுவும் உண்மைக் கதைகளாகவே எழுதித் தீர்த்துவிட்டனவே’ என்ற நினைவு மின்னலாகத் தோன்றி, கதைக்கான கருவை காணாமல் அடித்துவிட்டது. 

‘சிறுகதை என்றால் வெறும் பொழுதுபோக்காகவா படிப்பதற்கு எழுதுவது ? அதில் ஏதாவது ஒரு கருத்து சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?’ 

இந்தச் சிந்தனையுடன் எழுத்தாளர் ஏகலைவன் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலையிருக்குமிடம் வரையில் வந்துவிட்டான். ஒரு நிமிடம் சிலையையே உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான். 

“மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டுத் தெருக்களிலே தமிழ்தான் இல்லை”. 

கவிஞர் எவ்வளவு கவலைகொண்டு தனது ஏக்கத்தைக் கவிதையாக்கிக் கண்கலங்கியிருக்கிறார்; அவரது வேதனையையே கருவாக அமைத்து, ஒரு சிறுகதை எழுதிவிட்டால் என்ன? 

அவன் இதயத்தில் ஓர் ஆவேசம் பிறந்தது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று எக்காள முழக்கமிடும் ஓர் இளைஞனைக் கதைநாயகனாக வைத்துச் சிறுகதை நெய்துவிட முடிவு கட்டினான். ஆனால் அக்கணமே அதற்கும் ஒரு முட்டுக்கட்டை விழுந்தது. மறைமலையடிகளார், திரு.வி.க., தேவநேயப்பாவாணர் போன்ற பல தமிழ்ச் சான்றோர்கள் தொடங்கிய முயற்சிதானே அது. அந்த முயற்சி முற்றாக நிறைவேறாத ஆதங்கத்தைத்தானே பாரதிதாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழுக்குச் சிறப்பிடம் கிடைத்திடத் தனியாக ஒரு போராட்டமே தேவைப்படும்போது; அவன் எழுதப்போகும் சிறுகதையால் அந்தக் குறிக்கோளை எட்டுவது அவ்வளவு எளிய காரியமா என்ன! ஒரு நீண்ட பெருமூச்சுடன், கடற்கரைச் சாலையிலிருந்து காந்தியடிகளின் சிலையைப் பார்த்தவாறே கடல் மணல் பரப்பை நோக்கி நடக்கலானான். காந்தியடிகள் சிலையை முழுமையாகக் காண முடியவில்லை. அந்தச் சிலையையும் மறைத்துக் கொண்டு பிரமாண்டமான கட்அவுட் ஒன்று ஆகாயத்தைத் தொடுமளவுக்கு நின்று கொண்டிருந்தது. 

கால் அழுந்தினால் சுலபத்தில் விடாத மணலில் இருந்து, ஊன்றிய கால்களை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டே கடல் அலைகள் கரையில் மோதும் பகுதிக்கு அவன் வந்து சேர்ந்தபோது இருளின் கரங்கள் உலகைத் தழுவிக் கொண்டன என்றாலும், மணல் வெளியில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் வெளிச்சம் காட்டிக் கொண்டுதானிருந்தன. 

கடலோரத்து ஈரத்தரையில் மெல்ல அவன் நகர்ந்து கொண்டிருந்தபோது, அவன் கண்ணெதிரே ஐந்தாறு நண்டுக் குஞ்சுகள்! தொலைவில் இருந்து அவைகளின் பரபரப்பான விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்லவேண்டுமென்ற தவிப்பு. ஆனால், அவன் அவைகளை நோக்கி அசைந்தானோ இல்லையோ அத்தனை நண்டுக் குஞ்சுகளும் அந்த ஈரத்தரையில் உள்ள சிறுசிறு பொந்துகளுக்குள், மின்னல் மின்னும் வேகத்தை மிஞ்சும் வண்ணம் ஓடிப்போய்ப் புகுந்து கொண்டன. 

ஆகா, அவன் சிறுகதைக்கு ஒரு கரு தயாராகிவிட்டது. கிராமத்தில் பருவமடைந்துள்ள பெண்கள்; இப்படித்தான் விடியற்காலை நேரத்தில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துப்பெருக்கி, கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்தப் பக்கம் தெருவில் யாராவது ஆடவர்கள் வந்துவிட்டால் போதும்; இந்த நண்டுக்குஞ்சுகளைப் போலத்தான் பரபரத்துப்போய் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வார்கள். 

கிராமங்களில் இந்தப் பழைய பண்பாடு இனியும் விட்டுப்போகாமலிருக்க; இந்த நண்டுக் குஞ்சுகளின் ஓட்டத்திலேயிருந்து சிறுகதையைத் தொடங்கி; தமிழ்நாட்டு கிராமங்களின் மண்வாசனையை மையமாக வைத்து எழுதினால் நன்றாக இருக்குமல்லவா ? இந்தக் கேள்வி அவன் இதயத்தில் எழுந்த அதே சமயம் அவன் மூளையிலிருந்து ஒரு சவுக்கடி.! 

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்,
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற 
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’. 

ஆம்; மகாகவி பாரதியின் பாட்டுத்தான் அவனுக்கு நினைவுக்கு வந்துவிட்டது. அந்த நினைவுச் சவுக்கின் நுனி; அவன் மூளை வீசிய வேகத்தில் அவன் இதயத்தில் சுளீர் என்று சுட்டதும்; கிராமத்துப் பெண்டுகள், நண்டுகள் போல் இருக்கவேண்டுமென்ற பத்தாம்பசலிக் கட்டுப்பெட்டிக் கற்பனையைக் கடலிலேயே தூக்கி எறிந்துவிட்டான். 

வேறு என்னதான்; அவன் எழுதவேண்டிய சிறுகதைக்கான மையப்புள்ளி கிடைக்கப்போகிறது ? 

அலைகளில் கால்களை நனைத்தவாறே நடந்தவன்; அந்த அலைகளின் மீது ஒட்டிக் கொண்டு துள்ளியும் பாய்ந்தும், கரையில் வீழ்ந்தும், பின்னர் கரையில் மோதும் அலைகளுடன் கைகோத்துக் கொண்டு கடலுக்குத் திரும்பியும் மீண்டும் கரையில் வந்து துள்ளியும் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்த மீன் ஒன்றின் மீது லயித்துப் போனான். அந்த மீன்; அலை, கரைக்கு வரும்போது அதனுடன் சேர்ந்து வரும். திரும்பும் அலையுடன் அதுவும் திரும்பிச் செல்லும். ஒருமுறை, அலையின் முதுகிலேறி வந்த அந்த மீன்; அலையுடன் சேர்ந்து போகாமல் கரையிலேயே தங்கிவிட்டது. இனி அலையின் கட்டுப்பாடு தனக்கில்லை; தன் இஷ்டம் போல் கரையில் துள்ளியாடலாம் என்று எண்ணியது போலும். அந்த நினைவில் அது குதியாட்டம் போடுவதாகவே அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அதாவது அப்படிக் கற்பனை செய்தான்; தனது சிறுகதைக்காக!. 

பாவம்; தரையிலிட்ட மீன், சில விநாடிகளில் அசைவற்றுப்போனது. சிறிது நேரத்துக்கு முன் அது ஆடிய ஆட்டமென்ன; துள்ளிய வேகமென்ன; எல்லாமே அடங்கிப் போயிற்று! அவன் எழுதப் போகும் கதைக்குப் பெயரும் கிடைத்துவிட்டது. ‘ஒரு மீனின் கதை’ தலைப்பு நன்றாக அமைந்துவிட்டது என்று தனக்குள் மகிழ்ச்சியடைந்தான். அப்போது அந்தப் பக்கம் ஓடிவந்த ஒரு நாய், செத்துக் கிடந்த அந்த மீனை, வாயில் கௌவிக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து போய் விட்டது. அந்த மீன் மட்டும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால்… எனக் கற்பனையில் மிதந்தான். 

வீட்டுக்குப் போய் இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து சிறுகதையைத் தொடங்க வேண்டியதுதான். உடனே ஒரு சந்தேகம். ஒருவேளை இது அரசியல் கதை போல ஆகிவிட்டால், வெளியிடுவதற்குத் தயங்குவார்களே வேண்டாம்! வேண்டாம்! வேறு மாதிரியாகச் சிந்திக்கலாம் என்று, அலைமோதும் கரையைவிட்டகன்று; கலங்கரை விளக்கத்திற்கு நேர் எதிரேயுள்ள மணற்பரப்பில் வந்து அமர்ந்தான். கற்பனை வானில் சிந்தனைக் கருமுகில்கள் ஆனால் ஒரு துளி மழையும்கூட விழவில்லை. பிறகெப்படி மெல்ல சிறுகதைக்கான விதையை ஊன்ற முடியும். இமைகளை மூடிக் கொண்டு அலைகளின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் காதில்; 

‘சுண்டல் முறுக்குக் கடலை’ 

என்ற குரல் கொடுத்துக்கொண்டு போகும் சிறுவனின் குறுக்கீடு! கண்ணைத் திறந்து பார்த்தான். அந்தச் சிறுவன், ஏகலைவன் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. 

‘ஏ, சுண்டல் முறுக்கு! நான் ஒருத்தன் இருக்கிறது தெரியலியா ? வா தம்பீ இங்கே!’ 

‘சாரி சார்! உங்க லுங்கியையும் பனியனையும் பார்த்தவுடனேயே, யாரோ மீனு பிடிக்கிற அண்ணன்னு நினைச்சிட்டு போய்ட்டேன். எவ்வளவுக்கு வேணும் சார்?’ 

‘எல்லாமே ரெண்டு ரூபாய்க்குக் கொடு’ 

பணத்தை நீட்டினேன் பையன் பண்டங்களைப் பொட்டலம் கட்டிக் கொடுத்தான். 

‘ஏன் தம்பி; எந்த ஊர் உனக்கு? இந்த வயசிலே படிக்காம ஏனப்பா இப்படி?’ 

‘என் கதை பெரிய கதை சார்!’ சொல்லிக் கொண்டே பையன் எழுந்தான். இவனை மடக்கினால் சிறுகதைக்கு நல்ல சரக்கு கிடைக்கும் போலிருக்கிறதே என்று ‘இரு, தம்பி! கொஞ்சம் உட்காரு! உன் சரக்கு பூரா நானே வாங்கிக்கிறேன் – உனக்கு எந்த ஊர்?’ 

‘சிவகாசி சார்!’ 

‘சிவகாசியிலேயிருந்தா சென்னைக்கு வந்து இந்த வேலை பார்க்கிறே ?’ 

‘ஆமாம் சார் – சிவகாசியிலேயே எங்க அப்பா, அம்மா, நான் மூணு பேரும் நல்ல வேலைதான் பாத்தோம்’. 

‘நல்ல வேலையா? என்ன தம்பி அந்த வேலை?’

‘தீப்பெட்டி பாக்டரியிலே வேலை!’ 

‘அப்புறம் ஏன் இங்க வந்தீங்க?’ 

‘ஒரு நாள் திடீர்னு பாக்டரியிலே நெருப்பு பிடிச்சு; எங்க அப்பா அந்த இடத்திலேயே கருகி செத்துட்டாரு….’ 

சிறுவன் சற்று மெளனமானான். கண்களைத் துடைத்துக் கொண்டான். எழுத்தாளர் ஏகலைவன் விழிகளும் கலங்கின. 

‘அம்மா என்ன ஆனாங்க தம்பி?’ 

‘அம்மா…பொழைச்சிக்கிட்டாங்க….ஆனா; அவுங்களுக்கு ஒரு கை முழுக்க எரிஞ்சு போச்சு… இப்ப அவுங்கதான் எனக்குத் துணை. நான்தான் அவுங்களுக்குத் துணை!’ ‘தம்பீ, உன் கதையை முழுக்க சொல்லு! அதை நான் எழுதி ஒரு பத்திரிகைக்குக் கொடுக்கப் போறேன். அதுக்கு எனக்கு அவுங்க தர்ற சன்மானத் தொகை முழுவதையும் உனக்கும் உங்க அம்மாவுக்குமே கொடுத்துடறேன்’. 

சிறுவன் முகத்தில் ஓர் எதிர்பார்ப்பு – நம்பிக்கை அந்தக் களங்கமற்ற ஒளி; கலங்கரை விளக்கத்தின் ஒளியில் பட்டுத் தெறித்தது. இளம்பிஞ்சு கதை சொல்லத் தயாரானான். ஏகலைவன் கதை கேட்கத் தயாரானான். 

‘சிவகாசி பாக்டரியிலே அப்பா, அம்மா, நான் மூணு பேரும் வேலை பாத்தோம்’. 

‘சின்னப் பிள்ளைகளை வேலை வாங்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கே தம்பி!’ 

‘சட்டத்தைப் பாத்தா சாப்பாட்டுக்கு என்ன வழி ? சட்டம், சாப்பாடு போடுமா சார்! எங்க அம்மா, அப்பாவுக்கு நல்ல சம்பாத்யம் இருந்தா என்னை வேலைக்கு விடாம, படிக்க வச்சிருப்பாங்க…… 

அப்போது மற்றொரு சிறுவன் அந்த மணற் பரப்பில் நடந்து வருகிறானா அல்லது பறந்து வருகிறானா என்றே தெரியாத அளவுக்கு, ‘டேய், குப்பு! நீ இங்கேயா இருக்கே ? ஓடி வாடா, ஓடிவா!’ என்று கத்திக் கொண்டே அங்கு வந்தான் மூச்சு வாங்க! 

‘ஏய், ஏண்டா! ஏண்டா!’ என்று குப்பன் கேட்பதற்குள், ‘உங்க அம்மா, பஸ்ஸில அடிபட்டு செத்துட்டாங்கடா! ‘ஆ! அம்மா அய்யோ, அம்மா!’ விற்பனைக்குப் பண்டங்கள் வைத்திருந்த பாத்திரங்களையும், தன்னிடம் கதை கேட்ட ஏகலைவனையும்; ஏன்? எல்லாவற்றையுமே மறந்துவிட்டு அவன் ஓடினான். செய்தி சொல்ல வந்த சிறுவனும் அவனுடன் ஓடினான். 

‘தம்பீ! தம்பீ! நில்! எழுத்தாளர் ஏகலைவன் கூப்பிட்டது அவர்களின் செவிகளில் விழுந்தால்தானே! 

‘அடப்பாவமே; அந்தப் பையன் எங்கேயிருக்கிறான் என்று கூட முகவரி விசாரிக்காமல் விட்டுவிட்டோமே தெரிந்தாலாவது அங்கு போய் ஏதாவது நம்மாலியன்ற உதவி செய்யலாம், ஏன், நல்ல பையனாக இருக்கிறான். இவனைக்கூட நம் வீட்டிலேயே வைத்து வளர்க்கலாம். இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லையே!’ 

திகைத்து நின்ற எழுத்தாளர் ஏகலைவனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் – கன்னங்களை நனைத்தன. 

சிறுவன் விட்டுச் சென்ற பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, கடற்கரை மணலில் கால்கள் அழுந்திட நடந்தான். 

சற்று இருண்டிருந்த பகுதியிலிருந்து ஒரு குரல்! 

‘இந்தாய்யா சுண்டல் முறுக்கு, கொண்டா இங்கே!’

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் ஒரு நவநாகரீகப் பெண்ணின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தான். 

தொடர்ந்து அதே குரல்; ‘என்னடா கூப்பிடுறேன்; சிலை மாதிரி நிக்கிறே?’ 

ஆமாம், கதை தேடி வந்தவன், கற்சிலை போலத்தான் கடற்கரையில் நின்றான். 

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *