எழுத்தாளரைத் தேடி வந்த கதாபாத்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர் புனைவு
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 7,124 
 
 

டிசம்பர் மாதம். கோவையில் சிங்காநல்லூர் ஏரிக்கரை. பழைய பெஞ்சுகளின் மீது வாடிய தென்னை ஓலைகள். நீரூற்றுக்கு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி புறாக்களுக்கு தானியம் போட்டுக்கொண்டிருந்தார். வயதான, சுருக்கம் விழுந்த கைகள், ஆனால் பழக்கமான வேகம்.

“இங்கே உட்காரலாமா?”

ராமமூர்த்தி தலை தூக்கிப் பார்த்தார். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரின் முகத்தில் சிநேகிதம் நாடும் புன்னகை. கருமையான முடி, கூர்மையான கண்கள். அவர் அணிந்திருந்த ஸ்வெட்டரின் விலை அதிகம்.

“தாராளமாக.”

ஸ்வெட்டர் நபர் பெஞ்சில் அமர்ந்தார். “அழகான மதிய நேரம்.”

“ஆமாம்,” ராமமூர்த்தி மேலும் தானியம் போட்டார். “நான் ராமமூர்த்தி.”

“நான் பாஸ்கரன். நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா, சார்?” தன்னை விட இரு மடங்கு வயதானவராக தெரிந்த ராமமூர்த்தியை பேர் சொல்லிக் கூப்பிட விரும்பவில்லை.

“கடந்த ஐந்து வருஷமா ஒவ்வொரு செவ்வாயும். ரிட்டையர்மென்ட் ஆயிடுச்சு. நேரம் நிறைய இருக்கு.”

“என்ன வேலையிலிருந்து ரிட்டையர் ஆனீங்க, சார்?”

“நான் ஒரு முழு நேர எழுத்தாளனாக இருந்தேன். பல பத்திரிகைகள்ள எழுதி இருக்கேன். ஆயிரத்து ஐநூறு கதைகள் இருக்கும். வானம்பாடிங்கிற பெயர்ல.”

“வானம்பாடியா!” பாஸ்கரன் புன்னகைத்தார். “உங்க கதைகள் சிலது படிச்சிருக்கேன், சார். நானும் இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுத முயற்சி பண்ணேன். சரியா வரலை. இப்ப சைக்காலஜிஸ்ட்டா இருக்கேன். அது தான் எனக்கு சரியான துறை.”

சில நொடிகள் மௌனம். பிறகு பாஸ்கரனே கேட்டார், “எழுதுறதை மிஸ் பண்றீங்களா, சார்? உங்க கதாபாத்திரங்களை அப்பப்ப நினைச்சுக்கிறீங்களா?”

ராமமூர்த்தியின் முகம் லேசாக மாறியது. “பாஸ்கரன், நீங்க ஒரு சைக்காலஜிஸ்ட். அதனால இந்த கேள்வியை உங்க கிட்ட கேட்கலாமென்று நினைக்கிறேன்.”

“கேளுங்க சார்.”

“கற்பனை கதாபாத்திரங்கள்… புத்தகத்திலிருந்து அவர்களால் வெளிய வர முடியுமா? உயிரோட வாழ முடியுமா?”

பாஸ்கரன் ராமமூர்த்தியை கூர்ந்து பார்த்தார். அவரது தொழில்முறை உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.

“என்ன சொல்றீங்க சார்?”

“பல வருஷத்துக்கு முன்னாடி நான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் – பிறைத் தழும்புடன் சாவித்திரி, மரகத மோதிரம் போட்ட கமலம், லேசாக நொண்டி நடக்கும் சுந்தரம். எல்லாரும் இங்க இருக்காங்க. இந்த ஊர்ல வாழ்றாங்க. நான் அடிக்கடி அவர்களை சந்திக்கிறேன்.”

“சார், என்னோட ப்ரொஃபஷன்ல இது மாதிரி நிறைய பார்த்திருக்கேன்.” பாஸ்கரனின் குரல் மென்மையாக, ஆனால் உறுதியாக இருந்தது. “நீங்க ஆயிரத்து ஐநூறு கதை எழுதியிருக்கீங்க. அப்படின்னா ஏகப்பட்ட கேரக்டர்ஸை உருவாக்கியிருப்பீங்க. யாரைப் பார்த்தாலும் உங்க கேரக்டர் மாதிரி தோன்றும். நம்ம மூளை பேட்டர்ன் தேடும். இந்த மாதிரி கோயின்சிடன்ஸ்கள் எல்லாம் நார்மல்தான்.”

“ஆனால் என் கதாபாத்திரங்களுடன் ஒத்துப்போகும் விவரங்கள்…”

“கன்ஃபர்மேஷன் பயஸ். உங்க கேரக்டரை ஒத்த ஒருத்தரை நிஜ வாழ்க்கையில் பார்க்கிறீங்க, உங்க மனசு பாக்கியை நிரப்பிடுது. இது கம்ப்ளீட்லி நார்மல், அதுவும் வாழ்நாள் முழுக்க கதைகள் படைத்த ஒருத்தருக்கு.”

“நீங்க சொல்றது சரியாயிருக்கலாம். நான் வேண்டாத கற்பனையெல்லாம் பண்ணிக்கிறேன் போலிருக்கிறது.” ராமமூர்த்தி எழுந்து நின்றார். “தேங்க்ஸ் பாஸ்கரன். எனக்கு நேரமாகி விட்டது. நான் கிளம்பணும்.”

தன்னுடைய கைப்பையை எடுத்தார். மரங்களுக்கு இடையில் நடந்து மறைந்தார்.

பாஸ்கரன் சிறிது நேரம் அமர்ந்திருந்து புறாக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனென்று தெரியவில்லை. ராமமூர்த்தி சொன்னது அவரைப் படுத்தியது. அவர் குரலில் இருந்த உறுதியா? இல்லை, வேறு ஏதோ இனம் காண முடியாத ஒன்றா?

சிறிது நேரம் கழித்து தன்னுடைய கிளினிக்கிற்கு வந்த பாஸ்கரனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. கடைசி இரண்டு பேஷண்டுகளின் அப்பாய்ண்ட்மெண்டையும் கேன்சல் செய்து விட்டு காரில் ஏறி வீடு நோக்கி கிளம்பினார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுத்திற்கு விடாமல் கிடைத்த நிராகரிப்பை நினைத்துக் கொண்டார். அவர் எழுதிய கதைகளும் அவர் படைத்த கதாபாத்திரங்களும் அவர் மனதில் வந்து போயின. அந்தக் கதைகளை தேடி எடுத்து மறுபடி படிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிளம்பியது.

வீடு வந்த சேர்ந்தவுடன், தன் உடைகளைக் கூட மாற்றாமல் மாடிக்கு ஓடினார் பாஸ்கரன். வேண்டாத தட்டு முட்டு சாமான்கள் போட்டிருந்த அறையில் ஒரு முலையில் இருந்த அட்டைப் பெட்டிக்குள் ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரின் மேல் “கதைகள் – 2006” என்ற லேபிள் ஒட்டியிருந்தது. உள்ளே லேசான மஞ்சள் நிறத்தில் காகிதங்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் கை விடப்பட்ட கையெழுத்துப் பிரதிகள்.

பாஸ்கரனின் கைகள் நடுங்கின. முதல் பக்கத்தில் “மாயை” என்ற கதை தலைப்பும் அதன் கீழே “பாஸ்கரன் சுப்பிரமணியம்” என்ற பெயரும் பச்சை மையில் எழுதப்பட்டிருந்தன.

இரண்டாவது பக்கத்தில் கதை தொடங்கியது. பாஸ்கரன் ஆவலுடன் படிக்க ஆரம்பித்தார்-

டிசம்பர் மாதம். கோவையில் சிங்காநல்லூர் ஏரிக்கரை. பழைய பெஞ்சுகளின் மீது வாடிய தென்னை ஓலைகள். நீரூற்றுக்கு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி புறாக்களுக்கு தானியம் போட்டுக்கொண்டிருந்தார். வயதான, சுருக்கம் விழுந்த கைகள், ஆனால் பழக்கமான வேகம்.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *