எலிகள் போட்ட ஐடியா !





ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களைத் தின்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.
ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.
எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறைகளைக் கூறின.
வயதான எலி ஒன்று, “”பிள்ளைகளே! கவலைப்படாதீர்கள். இப்போது நாம் இங்கு கூடியுள்ள பொந்து தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, முடிந்தவரை நாம் வெளியே செல்லாமல் இங்கேயே இருந்து விடுவோம்!” என ஆலோசனை வழங்கியது.
அத்திட்டம் நல்லதாக இருப்பதால் அதனை அனைத்து எலிகளும் ஏற்றுக் கொண்டன. எலிகள் யாவும் வளைக்குள்ளேயே இருந்தன. எலிகளின் நடமாட்டம் குறைந்ததால் பூனைக்கு இரை கிடைக்காமல் போனது.
எனவே, மயங்கியது போல் நடித்தது. பூனை இறந்து விட்டது என நினைத்து, எலிகள் வெளியே நடமாட ஆரம்பிக்கும். அப்போது எலிகளைப் பிடித்து விடலாம் எனவும் தனக்குள் கணக்குப் போட்டது.
மயங்கியது போல் நடித்த பூனை, அப்படியே தூங்கியும் விட்டது. எவ்வளவு நேரம் தூங்கியதோ பாவம், பசிக்களைப்பில் அதிக நேரம் தான் தூங்கி விட்டது.
அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது, சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக் கொண்டிருந்தன.
“ஆகா எவ்வளவு தைரியமாக இவை விளையாடுகின்றன. இவைகளை விட்டேனா பார், இன்று நமக்கு நல்ல இரைதான்!’ என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்தது.
திடீரென வந்த மணியோசையைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ஆச்சரியமாகிவிட்டது.
மீண்டும் ஓடியது, மணியோசை எழுந்தது. இந்த மணியோசை எங்கிருந்த வந்ததென ஆராய்ச்சி செய்தது. பூனை தூங்கும் போது அதன் கழுத்தில் மணியைக் கட்டி விட்டன கெட்டிக்கார எலிகள். இதை அறியாத பூனை மணியை கழட்டி எரிய முடியாமல் தவியாய் தவித்தது.
– செப்டம்பர் 17,2010