எம் மகனே! எம் மகனே!
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தாய்க்கு ஒத்த மகன். வளக்குறா. வளக்குறா, ஒத்த மகண்டு அப்டி வளக்குறா. வளத்து படிக்க வக்கிறா.
எப்டி படிக்க வக்கிறாண்டா, அங்கிட்டு-இங்கிட்டு, அடுத்த வீட்ல அண்டுன வீட்ல, குறுண மாவு பொடச்சு, அதுல கெடக்கிற அரிசிய மகனுக்கு காச்சி வச்சிட்டு, இவ, அந்த குறுணயப் போட்டு காச்சிக் குடிச்சிட்டு படுத்துக்கிறது.
இப்டி இருக்கயில, மகன் வளந்து பெரியவனாகி, கல்யாணம் முடிக்கத் தக்கன வந்திட்டர். வரவும், மகனே!! நிய்யி எனக்கு ஒத்த மகன், ஒனக்குக் கல்யாணம் முடிச்சு வைக்கணும்ண்டு, எனக்கு ஆசயா இருக்குண்டு சொன்னா.
சொல்லவும், யம்மா! ஒனக்கு வயசாயிருச்சு. இப்ப, கல்யாணம் முடிச்சா வந்தவ ஒன்னய மதிக்க மாட்டா. ஒன்னய மதிக்கலண்டா எனக்குப் பொறுக்காது. கல்யாணம் இப்ப வேண்டாம்மா. நிய்யி செத்துப் போனா ஒன்னய எடுத்து தான – தர்மஞ் செஞ்சுட்டு, பெறகு கல்யாணம் முடிச்சுக்கிறேம்மாண்டு சொன்னா.
இல்ல மகனே! நா கண்ணால பாக்கணும். பாத்திட்டுத்தான் சாகணும்ண்டு கண்டிச்சுச் சொல்லிட்டா.
அப்ப, ஒரு மகராசி பொண்ண பாத்து, கல்யாணம் முடிச்சு வச்சிட்டா. மருமக வந்திட்டாண்டு ஆசயா இருக்காக. அம்மா எப்பயும் போல இருப்பாண்ட்டு, இவ், இவ் பாட்ல வேலயப் பாத்துக்கிட்டிருக்கா.
இருக்கயில், மருமகளே! நா சும்மா இருக்கே. எனக்கு ஒரு எரும மாடு வாங்கித் தாங்க, நர் வளக்குறேண்டு சொல்றா.
சொல்லவும் புருச வரவும் புருசங்கிட்ட, ஒங்கம்மா ஒரு எரும மாடு புடுச்சுக் குடுங்க, நர் வளக்குறேண்டு கேக்குறாங்கண்டு சொன்னா.
சொல்லவும், சரிண்ட்டு, ஒரு நல்ல எரும மாட்டப் புடிச்சுக் குடுத்திட்டாங்க. இவ வளக்குறா. வளத்துக்கிட்டிருக்கயில, மருமக, மாமியாளுக்கு, இவங்க சாப்டுற சாப்பாட்டப் போடுறதில்ல. கூழு-கொளப்பட்டயக் காச்சி வச்சிட்டு, வெறுங் கஞ்சிய ஊத்தி வச்சுக்கிட்டிருக்கா. இது புருசனுக்குத் தெரியாது. நம்ம சாப்டுற சாப்பாட்டத்தா அம்மா சாப்டுறாண்டு நெனச்சுக்கிட்டிருக்கா. இத மகங்கிட்டவும் சொல்லாம, எரும மாட்ட மேச்சுக்கிட்டிருக்கா.
ஒரு நா, மடி நெறயா மூக்குத்திக் கொளயப் புடுங்கிட்டு வந்து, மருமகளே!! என்னால வெறுங் கஞ்சியக் குடிக்க முடியல. இந்த மூக்குத்திக் கொளய வேக வச்சு வையிண்டு சொன்னா. சரிண்ட்டு, மூக்குத்திக் கொளய வேக வச்சு, கஞ்சிய ஊத்திக் குடிக்க வச்சிட்டு, எனக்கு பாட்டுச் சொல்லிக் குடுங்கண்டு மருமக கேட்டா, எனக்கு ஒண்ணும் தெரியாதுமாண்டு மாமியா சொன்னா. சொல்லவும்.
இல்ல! எனக்கு எப்டிண்டாலும் பாட்டுச் சொல்லித் தரணும்ண்டு சொல்லிட்டு, தலகால முழுக வச்சு, புதுச் சீலயக் கட்டச் சொல்லி, இந்தக் காதுல ஒரு மொறம், இந்தக் காதுல ஒரு சொளகயும் கட்டித் தொங்க விட்டு, பாட்டுப் படிக்கச் சொல்றா. அவ, அலச்சு அலச்சுப் படிக்கயில, சொளகும் மொறமும், இந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இடிக்குது.
அப்ப, இவ் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறர் ஆரு? மகன். நிண்டு கேட்டுக்கிட்டிருக்கா. அப்ப, தாயி, இவ செய்யுற கொடுமயப் பொறுக்க மாட்டாம.
மூக்குத்திக் கொளையடா எம்மகனே!
முந்தி வந்தக் குறுணக் கஞ்சி எம்மகனே!
அண்ணக்கிச் சொன்னயடா எம்மகனே!
அதுபோல நடக்குதடா எம்மகனே! – ண்டு
சொல்லிச் சொல்லி அழுதுகிட்டுப் பாட்டாப் படிக்கிறா. இவ், கேட்டுக்கிட்டிருந்தவ், கதவாலத் தொறந்துகிட்டு, வந்ததும், இவளப் போடு – போடுண்டு போட்டு, வெரட்டி விட்டுட்டு, தாயும் மகனும் நல்லா இருந்தாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.