எமலோகத்தில் கொரோனா






“தரும நெறி நின்று, நீதி பிறழாமல், பூமியின் பாரத்தைக் குறைக்கும் தருமராஜர் வருகிறார்” என்று காவலர்கள் கட்டியம் கூற, ராஜசபைக்குள் நுழைந்தார் எமதர்ம ராஜன்.
பூவுலகில் ஆயுள் முடிந்து வந்தவர்கள் தர்ம ராஜனைக் காண வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். கிங்கரர்கள் பூவுலகிலிருந்து வந்தவர்களை கட்டுப் படுத்தும் பணியில் இருந்தார்கள்.
“என்ன, சித்திரகுப்தா பூவுலகிலிருந்து மானுடர் வரத்து அதிகமோ?” என்றார். “ஆமாம், எங்களுடைய வேலைநேரம் போக அதிகமாகவே உழைக்க வேண்டியிருக்கிறது, கூடுதல் சம்பளம் எதுவும் இல்லாமல்” என்றார் சித்திர குப்தர்.
“மானிடர்கள் நேர் காணலை ஆரம்பிக்கலாம்” என்றார் தர்மராஜர். தன்னிடமிருந்த குறிப்பேட்டின் துணையுடன் பூவுலக வாசிகளை அறிமுகம் செய்து அவர்கள் செய்த நன்மை, தீமைகளை எமனிடம் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். விசித்திரகுப்தன், ,குறிப்பேடுகளை சரி பார்த்து, சித்திரகுப்தன் கேட்கும் ஏடுகளை எடுத்து உதவிக் கொண்டிருந்தான்.
தற்போது தர்மராஜனை நேர்காணும் முறை சத்தியசீலனுக்கு. சித்திரகுப்தன் ஏடுகளைப் பார்த்துப் பேசுவதற்கு, முன்னால் பேச ஆரம்பித்தான் சத்தியசீலன்.
“என் பெயர் சத்தியசீலன். பாரதநாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் எல்லோராலும் மதிக்கப்பெற்ற அரசியல்வாதி. பூவுலகில் என்ன நடக்கிறது, அங்கு மக்களின் நிலை என்ன என்றறியாமல் நீங்கள் இங்கே நடத்துகின்ற நேர்காணல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.”
திடுக்கிட்ட எமராஜன் “நீர் சொல்வது ஒன்றும் புரியவில்லையே மானுடனே” என்றார்.
“கொரோனா என்ற பெயர் கொண்ட ஒரு கொடுமையான நுண்கிருமி பூலோகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாகுபாடில்லாமல் எல்லா நாடுகளும் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நுண்கிருமியின் பரவலைத் தடுக்கவும், அதன் தாக்கத்தைக் குறைக்கவும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி, ஊரடங்கு உத்தரவு என்று பற்பல வழிகளை நாடுகள் கையாண்டு வருகின்றன.”
“இதைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் திருவிழா போல இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் நுண்கிருமி பரவுவதற்கு ஏற்றமான இடமாகத் தோன்றுகிறது. பூவுலகத்திலிருந்து மேலுலகம் வருகின்ற நுழை வாயில் எமலோகம். இங்கு சரியான கட்டுப்பாடுகள் இல்லையென்றால் நுண்கிருமி தேவலோகம், சத்தியலோகம் என்று மற்ற லோகங்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. பூவுலகத்திலிருந்து வந்த கொரோனாவை மற்ற லோகங்களுக்கும் பரப்பிய பழிச்சொல் எமதர்மராஜனாகிய உங்களையே சாரும்.” என்று நீண்ட பிரசங்கத்தை முடித்தார் சத்தியசீலன்.
மிகவும் மனக்குழப்பத்துடன் என்ன செய்வது என்று வினவுவது போல் சித்திரகுப்தனைப் பார்த்தான் காலதேவன்.
“தேவரே…… சத்தியசீலன் சொல்வது அனைத்தும் உண்மை. காற்றில் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்ற காரணத்தால் வாயையும், மூக்கையும் மூடி வைக்கும்படியான முகக்கவசம் அணிகிறார்கள். பொது இடத்தில் நபர்களுக்கிடையே ஆறடி இடைவெளி விட்டு நிற்கிறார்கள். மனிதன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல அரசின் அனுமதி வேண்டும். அனுமதியுடன் சென்றாலும் சென்ற இடத்தில் சில நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு அப்புறம் தான் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். பூவுலகிலிருந்து திரும்பி வருகிற கிங்கரர்கள் தலைவலி, இருமல், ஜூரம் என
சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆகவே சத்தியசீலனின் அறிவுரைப்படி தேவையான நடவடிக்கை எடுப்பது உசிதம்.” என்றார் சித்திரகுப்தர்.
தர்மராஜர், சத்தியசீலனுடன் ஆலோசித்து கீழ்கண்ட அரசாணைகளை வெளியிட்டார்.
1. எல்லோரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
2. அரசவையிலும், பொது இடங்களிலும் ஆறு அடி சமூக இடைவெளி கட்டாயமாகக் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.
3. பூமியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களும், அவர்களை அழைத்து வந்த கிங்கரர்களும் 20 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர். மற்ற காரணங்களால் உயிர் துறந்து வந்தவர்களும், அவர்களுடன் வந்த கிங்கரர்களும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
4. தனிமைப் படுத்துதல் முடிந்தவுடன் பூலோகத்திலிருந்து வந்தவர்கள் எமதர்மனின் நேர் காணலுக்கு அழைத்து வரப்படுவர்.
5. தனிமைப்படுத்தும் காலத்தில் கிங்கரர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு கொடுக்கப்படும்.”
சத்தியசீலனின் அறிவுரையால் மனம் மகிழ்ந்த காலதேவன், தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதைப் போல, அவரைத் தன் ஆலோசகராக நியமித்தான். தனிமைப் படுத்தியவர்களை கவனித்துக் கொள்ள மற்ற லோகங்களிருந்து கன்னிகையர் தருவிக்கபட்டனர்.
பூலோகத்திலிருந்து வந்த யம தூதர்கள் தனிமைப் படுத்தப்பட்டதால் அவர்கள் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பூலோகம் செல்ல நேர்ந்தது. மற்ற நாட்களில் வேலை செய்யாமல் சம்பளம் பெற்றுக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
முன்பு, பூலோகம் செய்ய தயக்கம் காட்டிய கிங்கரர்கள், குறைந்த வேலை, முழுச் சம்பளம் என்பதனால் பூலோகம் சென்று உயிர் பறித்து வர போட்டி போட ஆரம்பித்தார்கள். இதற்கு வெள்ளி, தங்க காசுகள் கையூட்டாகக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தார்கள்.
காலதேவனின் ஆலோசகர் என்ற முறையில் சத்தியசீலன் காசுகள் பெற்றுக் கொண்டு பூவுலகம் செல்வதற்கு கிங்கரர்களைத் தேர்வு செய்வதாக செய்தி பரவியது.
அரசியல் சித்து விளையாட்டில் வல்லவரான சத்தியசீலன், சித்திரகுப்தன் பதிவேட்டில், உள்ள, அவரைச் சார்ந்தவர்களின் பாவ புண்ணிய கணக்குகளை மாற்றும் வழி முறையை அறிந்து கொண்டார். அதிகமான எண்ணிக்கையில் கிங்கரர்கள் தனிமைப் படுத்தப் பட்டதால் மேலும் பலரை பணியமர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் தர்மராஜன்.
செலவினங்கள் அதிகரிக்க, லஞ்சம் தலை விரித்தாட வேறு வழி தோன்றாமல் ருத்ர தேவனின் பாதங்களில் சரணடைவதென்று முடிவு செய்தார் காலதேவன்.
காலதேவனின் கலக்கத்தைப் போக்க வந்தது போல அரசவையில் நுழைந்தார் முக்காலமும் உணர்ந்த நாரத மாமுனிவர்.
“என்ன யமதர்மரே, ஏன் வாட்டம் உன் முகத்தில். கொரோனா வருகையால் உன்னுடைய வேலைப் பளுவும் அதிகமாகி விட்டதா, என்ன”?
“எல்லாம் அறிந்த உமக்கு என்னுடைய நிலை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று ஆரம்பித்த காலதேவன் செலவினங்கள் அதிகரித்திருப்பதையும், லஞ்சம் என்ற பூதம் காலடி எடுத்து வைத்திருப்பதையும் சொன்னார். பரமசிவனை சரணடைவதுதான் இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி” என்று முடித்தார்.
நாரதர் கேட்டார் “பூவுலகில் உயிர் பிரிந்தவுடன் என்ன செய்வார்கள்”
“அவரவர்கள் குல வழக்கப்படி உடலை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள்.’
“அப்படியானால் கிங்கரர்கள் கொண்டு வருவது”
“இறந்த அந்த உடலினில் அடைபட்டுக் கிடந்த ஆத்மா”
“ஒரு மனிதன் நோய் வசப்பட்டால் அது உடலைத் தாக்குகிறதா, ஆத்மாவையா அல்லது இரண்டையுமா”
“இதிலென்ன சந்தேகம். உடலைத் தான்.”
“அப்படியென்றால் இங்கே வருகின்ற ஆத்மாவில் நோய் இருக்காது அல்லவா ?”
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய யமதர்மன் “நீர் சொல்வது உண்மை. உடலை விட்டு இங்கே வருகின்ற ஆத்மாவில் கொரோனா கிருமிகள் இருக்காது. சத்தியசீலனின் அலங்காரப் பேச்சில் நான் என்னையும், படித்த சாத்திரங்களையும் மறந்து விட்டேன். ஒரு நிமிடத்தில் இந்த மானுடன் என்னை நிலை தடுமாற வைத்து விட்டான்.”
“நான்கு வேதங்கள், தர்ம சாத்திர நெறிமுறைகள் என்று அனைத்தையும் கற்ற உன்னை ஒரு நொடிப் பொழுதில் தன் வசப்படுத்திய இவனைப் போன்றவர்கள், மனித குலத்தை, மயக்கும் பேச்சால், என்னதான் செய்ய மாட்டார்கள் ? அவர்களை நினைத்துப் பரிதாபப்படு. எமதர்மா.” என்று கூறி “நாராயணா” என்று சொல்லிய வண்ணம் யமலோகத்திலிருந்து கிளம்பினார் நாரதர்.
– துகள், ஜெர்மனி அக்டோபர் 2021 நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |