எப்பவோ கேட்ட குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 4,663 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“பாட்டி, உன் கூட பார்க்குக்கு போனா ஜாலியா இருக்கு”

“ஏன் இப்படி சொல்றே, கைலாஷ்?”

“அம்மாகூட போனா எதுவுமே வாங்கி தர மாட்டாங்க… நீதான் மிட்டாய், ஐஸ் க்ரீம் எல்லாம் வாங்கி கொடுக்கற…”

“இனிப்பு அதிகமா சாப்பிட்டா, பல்லுக்கு நல்லதில்லே”

செண்பகமும் கைலாஷும் காந்தி பூங்காவை நோக்கி நடந்தனர். வாரம் மூன்று முறை செண்பகம் பேரனுடன் காந்தி பூங்காவுக்கு போகிறாள். மனதுக்கு இதமாகவும், உடலுக்கு ஓரளவு பயிற்சியாகவும் இருப்பது செண்பகத்துக்கு உற்சாகமூட்டியது.

“பாட்டி… போன வாரம் நாம் எந்த பிளேவர் ஐஸ் க்ரீம் வாங்கினோம் ஞாபகம் இருக்கா?”

“இல்லையே, கைலாஷ்…”

“சாக்லேட் பிளேவர் தான் பாட்டி…”

“கைலாஷ், எனக்கு சில சமயம் சிலது மறந்து போயிடுது”

“அப்பா சொல்றாரு… உன் வயசுக்கு பரவாயில்லே…அதிகமா மறக்கலேயாம்…ஆனா, அம்மா சொல்றாங்க… அத்தைக்கு ரொம்பவே மறந்துடுது அப்டின்னு… அடிக்கடி சொல்றாங்க…”

“அம்மாவுக்கு என்மேல ரொம்ப பிரியம்…அதான் அடிக்கடி சொல்றாங்க…”

“அடிக்கடி சொன்னா பிரியம் அதிகமா?”

“ஆமா, கைலாஷ்…அடிக்கடி நம்பளை பத்தி நினைக்கறதாலதானே அடிக்கடி சொல்றாங்க…?”

பூங்காவில் வசதிக்காக இருக்கைகள் இருந்தன. ஒரு இருக்கையை நோக்கி பார்வையற்ற, எழுபத்தாறை நெருங்கும் கைலாசம் கையில் மடக்கிலிருந்து நீட்டப்பட்ட வெண்ணிற கோலுடன் மெல்ல வந்து கொண்டிருந்தார். அவருக்கு பார்வை போய் பத்தாண்டுக்கு மேலாகிறது. எப்போது பூங்காவுக்கு வந்தாலும் அதே இருக்கையில் அமர வருவார். இரண்டு காரணங்கள்…ஒன்று, அது பழகிய வழி… மற்றொன்று, அது ஒலிபரப்பு கருவிக்கு அருகில் இருப்பது. மாலையில் ஒலிபரப்பாகும் பழைய தமிழ் திரைப்பாடல்களை கேக்க வசதியாக இருக்கும். காதல் கீதங்களை தன்னை மறந்து ரசிப்பார். அதுவும் டி. எம். எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியவை என்றால் பிடிப்பு அதிகம்.

“சரி…நீ போய் கொஞ்ச நேரம் விளையாடு… வானொலியிலே பாட்டு போடுவாங்க… அது முடிஞ்சதும் போகலாம். போற வழியிலே ஐஸ் க்ரீம்… சரியா…”. கைலாஷ் ஆர்வமுடன் நண்பர்களுடன் விரைவாக விளையாட ஓடினான்.

“ரொம்ப வேகமா ஓடாதே…கைலாஷ்…மெதுவா போடா…கைலாஷ்…”

செண்பகம் கூவிய கடைசி கைலாஷ், காற்றில் மிதந்து வந்து கைலாசத்தின் காதில் விழுந்தது.

எப்போவோ கேட்ட குரல்… ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கேட்ட குரல்…

‘கைலாசம்…கைலாசம்’ என்று குழைந்து குழைந்து செண்பகம் தன்னை அழைத்த குரல்… மென்மையான, மேன்மையான காதலின் இனிய குரல்… இளமைக் காதலின் மயக்கும் குரல்…அவர்களின் காதல் குரல்…

கைலாசத்துக்கு மனசில் ஒரு துள்ளல். தன்னையே கூப்பிடுவதுபோல உணர்ந்தார்.

பார்வை மட்டும் இருந்திருந்தால்… கூவியது செண்பகமா என்று உறுதிப் படுத்தியிருப்பார்.

குரல் வந்த திசையை நோக்கி வெண்ணிற கோலை தரையில் தட்டியவாறு மெல்ல நடந்து சென்று, அடுத்த இருக்கையை தோராயமாக்க் கணித்து, அங்கே நின்றார்.

மெல்ல ‘செண்பகம்… இங்கே இருக்கறது செண்பகமா?’ என்று வினவினார்.

யாரோ தன்னை நோக்கி வருவதை உணர்ந்து தலையை சற்று உயர்த்தினார்.

“ஐயா…நீங்க கூப்ட செண்பகம் நான்தான்… நீங்க யாரு?” என்றது ஒரு பெண் குரல்.

எப்போவோ கேட்ட குரல்…

என் செண்பகம் தான்…தன் கைவிட்டுப் போன அதே செண்பகம்தான்…

கைலாசத்துக்கு நிற்க முடியவில்லை. கால்கள் சற்று தடுமாறின… ஆண்டுகள் உருண்டாலும், பார்வையை இழந்தாலும், பலமுறை ஊர் மாறி வசித்தாலும், இறுதியில் காதல் மலர்ந்த ஊருக்கே வந்து வசிக்கும்போது எப்போவோ கேட்ட குரலை மீண்டும் கேக்கும்போது, அந்த காதலின் மென்மை தன் உடல் சக்தி முழுக்க உறிஞ்சி எடுப்பதை உணர்ந்த கைலாசம் இருக்கையில் மெல்ல அமர்ந்தார்.

“யாரு… கைலாசமா? அடேயப்பா…எத்தனை வருசமாச்சு? மறுபடியும் நம்ம ஊருக்கே வந்துட்டியா… எல்லாம் முடிஞ்சு போச்சே கைலாசம்…”

“இல்லே, செண்பகம்… நம்ம காதலுக்கு முடிவே கிடையாது… ஒவ்வொரு தரமும் நீ கைலாசம்னு சொன்னாலும் சரி, கைலாஷ்னு உன் பேரனை கூப்பிட்டாலும் சரி, நம் காதலின் மென்மைமட்டும் உயிரோடவே இருக்கு. காதலின் இரசியம் என்னென்னு இந்த குருடனை கேட்டா, இதான்னு சொல்லுவேன்…”

ஒலிப்பெருக்கியில் ‘காலங்களில் அவள் வசந்தம்…’ பாடல்… செண்பகமும் கைலாசமும் இதே பாடலை இதே பூங்காவில் எத்தனை முறை கேட்டிருப்பார்கள்.

செண்பகத்தின் முகத்தில் இழையோடிய மெல்லிய சிரிப்பை கைலாஸத்தால் பார்க்க இயலாவிப்பட்டாலும் உணர முடிந்தது.

‘கலைகளிலே அவள் ஓவியம்…’ அடுத்த வரி…. எப்பவோ கேட்ட குரல். நிறைவேறாத காதலின் நிரந்தர குரல்.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *