சினிமா அனுபவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

இவ்வளவு மும்முரமாக என்னுடைய அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நான் செல்வதற்கு காரணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை இன்று நான் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற என்னுடைய ஆவல்தான். பொதுவாகவே நிறைய சமயங்களில் நாம் ரசித்து அனுபவிக்கும் கணங்கள் முடிந்த பிறகே நம் பிரக்ஞைக்கு அது எட்டும். எனக்கும் அப்படித்தான். ஆனால் இந்த ஒன்றை அனுபவிக்கும் போது மட்டும், அது தரும் சுகானுபவம் மகா உன்னதமான பரவசமானது- நிகழும் முன்னரும், நிகழும் போதும், நிகழ்ந்த பின்னரும் என் பிரக்ஞையிலிருந்து அவ்வளவு எளிதாக நழுவிவிடுவதில்லை.

ஒரு சனிக்கிழமை மாலை வேளையில் செய்யக்கூடிய அப்படி ஓர் உன்னதமான அனுபவத்தை அளிக்கும் செயல் என்னவாக இருக்க முடியும்? மது குடிப்பது என்று நிறையப் பேருக்குப் பதில் தோன்றலாம். அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், எனக்கோ அந்தச் செயல்- சினிமாவுக்கு செல்வது. மிகவும் எளிமையான செயல் என்ற போதிலும் அது எனக்குத் தரும் கிளர்ச்சி அளவிட இயலாதது.

நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள் குழந்தையாக இருந்தபோது அல்லது உங்கள் பள்ளி நாட்களில் நீங்கள் படம் பார்க்கச் சென்றதும், அது உங்களுக்குள் ஏற்படுத்திய அற்புத உணர்வும் இப்போதும் உங்களுக்குள் பசுமையாக இருக்கின்றதுதானே? இப்போதும் தொலைக்காட்சியிலோ அல்லது வேறு ஏதாவது தளங்களிலோ நீங்கள் பல வருடங்களுக்கு முன்னால் திரையரங்கில் பார்த்த திரைப்படம் வரும்போது அந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்த்ததையும், அருகில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டதையும், வரும் வழியில் படத்தைப் பற்றிய அலசல்கள் மேற்கொண்டதையும் பற்றி பேசுகிறீர்கள்தானே?

பொழுதுபோக்கு மட்டுமே நான் சினிமா பார்ப்பதற்கான நோக்கமன்று. பொழுது போக்கத்தான் போகிறது நான் முயன்றாலும் இல்லாவிட்டாலும். நானும் குழந்தை பருவத்தில் இருந்து ஆரம்பித்து என்னுடைய பள்ளி, கல்லூரி நாட்கள் வரையிலும் பொழுதைப் போக்கி ஆகிவிட்டது மிகவும் வெற்றிகரமான வகையில். அதற்கு நிறைய விஷயங்கள் உதவி இருக்கின்றன, சினிமா உட்பட. இன்று நாற்பது வயதில் தனிமையில் வாழும் எனக்குத் தேவை வெறும் பொழுதுபோக்கல்ல, ஓர் அனுபவம்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக் கூடும் நான் ஏன் இவ்வளவு கொண்டாட்ட மனநிலையோடு சினிமாவுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன் என்று. நான் திரையரங்கிற்கு சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. வேலை பளுவாளோ, பொருளாதார நெருக்கடிகளாலோ அல்ல. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்ற என்னுடைய எண்ணத்தால். சற்று முன்னர் நான் குறிப்பிட்ட, பொழுதுபோக்கு மட்டுமே ஒரே அம்சமாகக் கொண்ட, அதற்கு மட்டுமே உதவும் படங்களே அதிக அளவில் திரைக்கு வருகின்றன. அதை ஒரு குறையாக நான் இங்கே சொல்லவில்லை. எனக்கு அவை உகந்ததாக இல்லை. அதனால் தான் நான் திரையரங்கத்திற்கே கடந்த சில மாதங்களாக செல்ல முடியவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே சொன்னேன்.

இவ்வளவு விளக்கமும் எதற்கு என்றால் என்னைச் சுற்றியுள்ள கிட்டத்தட்ட அனைவரும் கருதுவதாவது-” சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. ஏதோ போனோமா, சிரிச்சோமா, கூச்சல் போட்டோமா, வந்தோமான்னு இருக்கணும். மனுஷனுக்கு இருக்கிற ஆயிரம் பிரச்சனைகளை மறக்கத்தான் படம் பார்க்கவே போறோம். நீ என்னடான்னா கலை அது எதுன்னு சொல்லி உளறிட்டு இருக்க”

முன்பெல்லாம் இதற்கு நான் தர்க்கப்பூர்வமான வாதங்களை எல்லாம் எனது தரப்பில் இருந்து எடுத்து வைப்பேன் நான் சொன்னதே சரி என்று மற்றவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களையும் நல்வழிப்படுத்துவது என்பது எனது கடமை என்றும் நான் எண்ணிக்கொண்டிருந்த காலங்களது. ஆனால், இப்போதெல்லாம் அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாம் காரணம் எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது என்பதால் அவர்களோடு சேர்ந்து நான் திரைப்படத்திற்கு செல்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. ஆனால், மிக முக்கியமான காரணம், இரண்டாவது காரணம்- நான் திருந்திவிட்டேன் என்பதாகும். ஆம், யாரிடமும் எந்தத் தர்க்கப்பூர்வமான வாதங்களும் எடுபடாது ஒருபோதும் என்பதை நான் உணர்ந்தவன் ஆகிவிட்டேன்.

இப்போதெல்லாம் நான் என்னோடு மட்டுமே தர்க்கம் செய்து கொள்கிறேன்.” கஷ்டத்தை மறக்கவே சினிமா பார்க்கிறேன் என்றால் அவனைவிட முட்டாள் அல்லது அவளைவிட முட்டாள் இருக்க முடியுமா? இரண்டரை மணி நேரம் உன் கஷ்டத்தை ஒரு சினிமா மறக்கடித்துவிட்டால் உன் வாழ்வு சீராகிவிடுமா? எதையும் சரி, தவறு என்று தீர்மானிக்கும் நிலையில் நான் இல்லை என்றாலும், இது முட்டாள்தனமான வாதம்தானே? எனக்கும் கஷ்டங்கள் இல்லையா? யாருக்குத்தான் இல்லை? அதற்காக சினிமா பார்த்தால் சரியாகிடுமா? என்ன பைத்தியக்காரத்தனம் இது? அப்படியே கஷ்டத்தை மறக்க சினிமா பார்க்க வேண்டும் என்றால் ரசிக்கவே முடியாதபடி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் வெளியாகும் குப்பைகளைத்தான் ‘ஆற்றுப்படுத்தும் சினிமாவாக’ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?”(குறிப்பு: தர்க்கப்பூர்வமான வாதங்கள் ஒருபோதும் மனிதர்களிடத்தில் எடுபடுவதில்லை!)

அப்படியெனில் எதற்காக நான் சினிமா பார்க்கிறேன்? உறுதியாகச் சொல்ல தெரியவில்லை எனக்கு. ஏன் ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம்? அதுவும் புனைவு கதைகளை படிக்கிறோம் என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? என் கருத்து என்னவென்றால், ஒரு நல்ல கதையைக் கேட்க வேண்டும் என்ற பேராவல்தான் என்பேன். மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் கதைகள் சொல்லியே வளர்க்கப்பட்டேன் என்பதால் உளவியல் ரீதியாக வயதான பின்னரும் அதுவே என்னை ஈர்ப்பதால் கூட இருக்கலாம்.

சரி, இன்றைய திரைப்படத்தை பற்றிய விஷயத்துக்கு வருவோம். பொதுவாக நல்ல தமிழ்ப் படங்கள் திரையரங்கிற்கு வரக்கூடாது. அப்படியே தப்பித் தவறி வந்துவிட்டால், இரண்டு நாட்களுக்கு மேற்கொண்டு ஓடிவிடவே கூடாது என்பது ஓர் எழுதப்படாத விதியாகவே உள்ளது. இன்று நான் காண விழையும் படமும் ஏற்கனவே பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல்வேறு விருதுகளையும் அள்ளிக்குவித்த ஒரு தமிழ்த் திரைப்படம்தான். நல்ல படம் என்பதால் ஏதோ என்னைப் போன்ற ஜென்மங்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தால் பரிதாபப்பட்டு ஒரு காட்சி மட்டும் ஒதுக்கி இருந்தார்கள் எங்கள் ஊர் திரையரங்கில். அதுவும் இரவு காட்சி.

ஒரு வகையில் எனக்கு அது சந்தோஷம்தான் கூட்டம் இருக்காது எந்த தொல்லையும் இருக்காது. குறிப்பாகப் படத்தின் பெயர் போடும்போதோ அல்லது நடிகர்கள் அறிமுகம் ஆகும் காட்சியிலோ, திரையரங்கம் முழுக்க இருக்கும் தற்குறிகள் அதை செல்போன்களால் பதிவு செய்து, உடனே அவர்களின் வாழ்க்கையின் ஒரே லட்சியமான- அவர்களின் சமூக ஊடகங்களில் பதிவிடுதல்- போன்றவை இருக்கவே இருக்காது.

எனது நெருங்கிய நண்பன் ஒருவனையும் இப்படத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்(அவன் மனைவி ஊருக்குச் சென்று இருந்ததால்). அவன் வரவில்லை என்று சொன்னது கூட எனக்கு ஏமாற்றம் இல்லை ஆனால் படத்தைப் பற்றி அனைத்து விதமான தகவல்களையும் என்னை நோண்டி நோண்டி கேட்டுவிட்டு நான் ஏதோ படம் இயக்க, தயாரிப்பாளரான அவனிடம் கதை சொல்ல வந்தது போல் என்னை நடத்தி விட்டு கடைசியில் அவன் சொன்னது தான் என்னை வெறுப்பேற்றியது.

” ட்ரைலர் பார்த்தேன். எனக்கு இந்த மாதிரி அவார்டு ஃபிலிம்ஸ் எல்லாம் செட் ஆகாது. உன்னைப் போல ‘உலக சினிமா விரும்பிகளுக்கு'(சற்றே இளக்காரமான தொனியில்) மட்டும்தான் இந்தப் படம் எல்லாம் எடுக்குறாங்க. நீயே போய் பாரு.”

இவற்றையெல்லாம் நினைத்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு திரையரங்கிற்கு வந்துவிட்டேன். இரவு பத்து முப்பதுக்குக் காட்சி. நான் பத்து மணிக்கே திரையரங்கிற்கு சென்று விட்டேன். அந்த இடத்தில் அமர்ந்து உள்ளே இருந்து வரும் பாப்கார்ன் வாசனையும், காபி வாசனையையும் நுகர்ந்தபடியே, அந்த இருள் சூழ்ந்த அரங்கம் எனக்குத் தரப்போகும் ஓர் உன்னத அனுபவத்தை நினைத்துப் பார்த்து மோனத்தில் ஆழ்ந்திருந்தேன். நான் நினைத்ததை விடவும் திரையரங்கில் கூட்டம் அதிகமாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக எண்ணியதை நினைத்து நான் வெட்கித் தலை குனிந்தேன். தமிழ் மக்கள் கலா ரசிகர்கள்தாம் என்று பறைசாற்றும் கூட்டமிது என்று எனக்குள் அந்தப் படத்தின் தயாரிப்பாளரை விடவும் அதிக மகிழ்வோடு களித்துக் கொண்டிருந்தேன்.

அன்றைய தினம் தமிழின் மிகப் பிரபலமான நடிகரின் படம் வெளியாகி இருந்தது. அவரை திரையில் ‘தரிசிக்க’ அவரது ரசிகக்கூட்டம் பேராவலில் இருந்தது. பத்து மணிக்கு அந்தத் திரைப்படம் திரையிடப்படும் என்பதால் அந்தப் படத்திற்கு வந்தவர்கள் முதலில் திரையரங்கினுள் அழைக்கப்பட்டனர். பெரும் கூச்சலோடும், விசில் சத்தத்தோடும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சிலர் குடித்து இருந்ததால், திரையரங்க பாதுகாவலர்களால் வாசலிலேயே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களோடு அந்த ரசிகர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

சற்று நேரம் முன்னர் வெட்கித் தலை குனிந்து இருந்த நான் தற்போது எப்போதும் போல் இப்போதும் நானே சரி என்று தர்க்கப்பூர்வமாக எனக்கு நானே நிரூபித்துக் கொண்டதால் தலை நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதற்கு, எஞ்சி இருந்த சொற்பநபர்களே சாட்சியாகத் திகழ்ந்தனர். எங்கள் திரைப்படத்திற்கான அனுமதி நேரம் வந்ததால் எஞ்சி இருந்த சொற்ப நபர்களோடு நானும் திரையரங்கினுள் நுழைந்தேன்.

மொத்தமே ஒரு பதினைந்து நபர்கள்தான் இருந்திருப்போம். அதிலும், பெரும்பாலோனர் அந்தப் பெரிய நடிகரின் படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் (குடிப்பழக்கமும் இல்லாதவர்கள் என்ற காரணத்தினால்- இது என்னுடைய அனுமானம்- அல்லது மதுக்கடைகள் மூடும் நேரம் கடந்து விட்டது என்ற காரணத்தால்) வேறு வழியில்லாமல் இந்தச் சனிக்கிழமை இரவை கழிப்பதற்காக இங்கு நுழைந்தவர்கள் என்றே தோன்றிற்று எனக்கு.

” உலக சினிமா என்பது உள்ளூர் சினிமாதான் ” என்னும் வாக்கியம் திரையில் தோன்றிய உடனேயே நான் மிகவும் மகிழ்ச்சியோடு திரைப்படத்திற்குள் ஒன்றிவிட்டேன். ஒரு இருபது நிமிடங்கள் கழித்து, டார்ச் அடித்துக் கொண்டு ஒரு குடும்பம் உள்ளே வந்தது- கணவன், மனைவி, அவர்களின் இரண்டு சிறு குழந்தைகள். எனக்குப் பின் வரிசையில் வந்து அமர்ந்தார்கள். மிகச் சரியாக ஐந்தே நிமிடம் கழித்து குழந்தைகள் அழத் துவங்கின. நான் படத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் அதை குலைப்பது போல் இருந்தது அந்த அழுகை சத்தம். இருப்பினும் நான் பொறுமை காத்தேன். கணவனும் மனைவியும் மாறி மாறி கீச்சுக் குரல்களில் சண்டை வேறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

” நீ மட்டும் சீக்கிரம் ரெடி ஆகி இருந்தா தலைவர் படத்துக்கே போய் இருக்கலாம். இதெல்லாம் ஒரு படம்னு இந்தப் பாடாவதியை எல்லாம் பார்க்க வந்து தொலைச்சிருக்கோம். எல்லாம் உன்னால. இதுங்க வேற அழுதுகிட்டே இருக்கு அந்தப் படமா இருந்தா ஒரே சவுண்டா இருந்திருக்கும் அந்தச் சத்தத்தில் பாட்டு ஃபைட்னு இதுங்களும் எதையாச்சும் பாத்துகிட்டு இருந்திருக்கும். இப்ப இதங்கள வேற நான் வெளியே தூக்கிட்டுத் தூக்கிட்டுப் போயிட்டு வரணும்” அதற்கு மேலும் என்னால் பொறுமை காக்க முடியாத காரணத்தால் சற்றே கோபமான தொனியில்” கொஞ்சம் அமைதியா இருங்க நான் படம் பாக்கணும்னு வந்து இருக்கேன்”, என்றேன்.

அவர்கள் இருவரும் அதற்கு திமிராக பதில் அளித்ததால் கோவப்பட்டு வார்த்தைகள் முற்றியது. இறுதியில் திரையரங்க பாதுகாவலர்களால் (நீங்கள் கணித்த அதே முடிவுதான்) நான் வெளியேற்றப்பட்டேன். குடும்பஸ்தன் எப்போதும் போல நல்லவன் என்றும் தனியான ஆண் மகனாகிய நான் ஒரு பொறுக்கி என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. என்னை வெளியேற்றிய பாதுகாவலர்களிடத்தில் நான் கேட்டதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் ” வெளியே குடிச்சவன உள்ளே விட மாட்டேன்னு சொல்லுறீங்களே இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் தானே! எதற்கு குழந்தைகளை உள்ளே அனுமதித்தீர்கள்? எந்தத் தவறும் செய்யாத என்னை ஏன் வெளியேற்றுகிறீர்கள்? ” (தர்க்கப்பூர்வமான வாதங்கள் ஒருபோதும் மனிதர்களை மாற்றுவதில்லை என்ற அசரீரி மீண்டும் ஒலித்தது)

தமிழ் சினிமாவில் நல்ல படங்களுக்கு எப்படி இடமில்லையோ அதேபோல தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் நல்ல சினிமா ரசிகர்களுக்கும் இடமில்லையோ என்று எண்ணியபடியே இனி திரையரங்குகளுக்குப் போவதில்லை என்று முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *