என்ன கொடுமை சார் இது?
என்னால் துளி கூட நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண் மீது காதல் வந்திருக்கிறது என்றால் நீங்கள் மட்டும் நம்பவா போகிறீர்கள். ஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.
காதல் எனக்கு இல்லை. என் ‘ரூம் மேட்’ வெங்கட் என்கிற வெங்கடாசத்திற்கு. என்னை விட இரண்டு வயது இளையவர். ஹைதராபாத் வந்து ஐந்து மாதம்தான் ஆகிறது. பெங்களூரிலிருந்து நான் பணிபுரியும் கம்பெனிக்கு வேலையை மாற்றிக் கொண்டு வந்த போது, ஹைதராபாத்தை மேய்ந்து கொண்டிருக்கும் என் தொலைபேசி எண்னை அவரது சொந்தக்கார அம்மிணி கொடுத்திருக்கிறார். அந்த அம்மிணி ஏற்கனவே எனக்குத் தோழி.
அதுவரை தடிமாடு கணக்காக வேலைக்குப் போவதும், ஞாயிற்றுக் கிழமையானால் நல்ல கடையாகத் தேடி கோழி பிரியாணியை வஞ்சகம் இல்லாமல் தின்பதுமாகச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம். ஆனால் இந்தக் கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை. இந்த உலகில் இருக்கும் இருநூற்றம்பது கோடி பெண்களில் ஒருத்தி கூட என்னோடு சேர்ந்து சுற்றும் வழியைச் செய்வதில்லை.
வெஙகட், சாண்டில்யன்,கல்கி என்று வாசித்துவிட்டு இ.பா,கரிச்சான் குஞ்சு வழியாக ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணனில் ‘டேரா’ போட்டிருக்கும் காஞ்சிச் சிங்கம். தூங்கக்ப்போகும் போது இலட்சியவாதம் பேசிக் மொக்கை போடும் போதெல்லாம் நான் பேசாமல் இருந்துவிடுவேன். வெளிநாட்டுக்காரனுக்கு சலாம் போட்டுவிட்டு டாலரையோ, யூரோவையோ எண்ணி சட்டைக்குள் போடும் ஆசாமிகளின் இலட்சியம் மேல் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் என்றால் நானும் அதே வகையறாதான்.’மரத்த ஜென்மம்’என்று ஒருவன் சொன்னான்.
நானும், வெங்கட்டும் மெகதிப்பட்டணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். அலுவலகம் இருக்கும் இடம் பேகம்பேட். 49 எம் பஸ் பிடித்தால் போதும். அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அலுவலகம் வந்து விடலாம். அதுவும் ஆந்திர அரசாங்கம், வேலையற்ற இளைஞர்களுக்கென்று ஒரு திட்டத்தில் நிறைய ‘மினிபஸ்’களை இயக்குகிறது. இருபது பேர் அமரக்கூடிய வண்டியில் அறுபது பேரைத் திணித்துக் கொள்வார்கள். மெகதிப்பட்டணத்திலேயே இடம் பிடித்து அமர்ந்துவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எவனாவது பான் போட்டு முகத்திற்கு முன்னாடியே பேசுவான். தெறிக்கும் எச்சில் சாரலைத் துடைத்துக் கொண்டே வர வேண்டியிருக்கும். இந்த எரிச்சலை போக்குவதற்காக நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ‘அந்திமழை பொழிகிறது’.
வெங்கட் ஹைதராபாத் வந்த நாளிலிருந்தே, தீவிரவாதிகளுக்கு குண்டு வெடித்துப் பார்ப்பதுதான் பொழுதுபோக்காக இருக்கிறது. நாங்கள் இருவரும் கவலையே படுவதில்லை. சென்றமுறை லும்பினி பார்க்கில் 7.55க்கு குண்டு வெடித்தது. 9.00 மணிக்கு ஹைதராபாத் பிரியாணி ஹவுஸில் மூக்கு பிடிக்க தின்று கொண்டிருந்தோம்.
நான்தான் கஞ்சத்தனப்பட்டு ஒரு பைக் வாங்கவில்லையென்றால், வெஙகட்டும் அப்படித்தான். இரண்டு பேரும் நாம் காந்தியை போல ‘எளிமையாக’ வாழ்வோம் என்று தேற்றிக் கொள்வோம். மனசுக்குள் சிரித்துக் கொள்வேன், தமிழில் எப்படி மோசமானவற்றையும், நல்ல வார்த்தைகளை வைத்து மொழுகிவிட முடிவதை நினைத்து.
பத்து நாட்களுக்கும் முன்னதாக மினிபஸ்ஸில் வரும் போது, பத்து ரூபாயை எடுத்து பஞ்சகுட்டாவில் பிச்சை எடுத்தவளுக்குக் கொடுத்தார். எனக்கு வியர்த்துவிடும் போலாகிவிட்டது.
‘பாவங்க. பாருங்க குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி அழுகிறாள்’ என்றார். கம்பெனிக்கு ஏற்கனவே தாமதமாகிவிட்ட கடுப்பில் இருந்தேன். பேசாமல் அலுவலகத்திற்கு வந்துவிட்டோம். இரவில்தான் யோசித்தேன் வெங்கட்டின் பெரிய மனம் குறித்து.
அடுத்த நாளும் பத்து ரூபாய் கொடுத்தார். வண்டியை விட்டு கீழே இறங்குங்கள் என்று இறக்கினேன். எதுக்கு அவளுக்கு தினமும் பத்து ரூபாய் என்றேன். அவள் தினமும் ஒவ்வொரு வண்டியாகச் சென்று அழுவதாகவும், குழந்தையை வேறு சுமந்து திரிகிறாள். மாதம் முந்நூறு ரூபாயில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றார். ‘யோவ்..உனக்கு பைத்தியமா’ என்று அவளைக் காண்பித்தேன். சிக்னல் விழுந்து வண்டிகள் நிற்கும் போது அழுகிறாள். மற்ற நேரங்களில் இன்னொரு பிச்சைக்காரியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இருபத்தைந்து வயதிருக்கும். சற்று உய்ரமாக இருந்தாள். அவளின் சாமுதிரிகா ல்ட்சணம் பற்றியெல்லாம் என்னால் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஹைராபாத் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.
மெதுவாக எங்களிடம் வந்தவள், என்னை ஏதோ ஒரு ஜந்துவைப்போல பார்த்தாள். வெங்கட்டை பார்த்து சிரித்தாள். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளிடம் அடித்த நாற்றமும், பல்லில் படிந்திருந்த கறையும் வெறுப்பை அதிகமாக்கின.
இரவு அறையில் பேசினோம்.
‘ஒரு சின்ன விஷயம்’
‘சொல்லுங்க’
‘வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க’
‘சூப்பர் வெஙட்’
‘இல்லைங்க நான் இன்னைக்கு காலையில் பார்த்தோமே அந்தப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்’.
‘யாரு? நம்ம கம்பெனியா?’
‘இல்லை. பஞ்சகுட்டாவில்”
எனக்கு அந்தச் சமயத்தில் கூட அவள் பெண் என்ற நினைப்பே வரவில்லை.
‘பஞ்சகுட்டாவில் யாரையுமே பார்க்கவில்லையே’.
‘விளையாடதீங்க. அந்தப் பிச்சை எடுக்கிற பெண்தான்’.
இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? எனக்குள் பெரும் பூகம்பம் வந்துவிடும் போலாகிவிட்டது. அநேகமாக ஜன்னி வந்துவிடக்கூடும்.பல்லை நறநறத்ததில் விழுந்துவிடும் போலிருந்தது. அந்த ஆளின் வார்த்தையை கவனியுங்கள். நான் விளையாடுகிறேனாம்.
அவளுக்கு இதற்கு முன்பாகவே பாரடைஸில் பிரியாணி பார்சல் வாங்கிக் கொடுத்ததெல்லாம் சொன்னார். பாரடைஸில் பிரியாணி என்ன விலை தெரியுமா?நூற்றிருபத்தைந்து ரூபாய். இனி எனக்கு சொல்வதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. ஆனாலும் கூடப்பழகிய தோஷத்திற்கு பேசாமல் இருக்க முடியவில்லை.
அவள் வீட்டில்(?) எந்தப்பிரச்சினையும் வராது என்றாலும், உங்கள் வீட்டில் பிரச்சினை எதுவும் வராதா என்றேன். அவளை குளிக்க வைத்து மேக்கப் போட்டு சரிக்கட்டிவிடுவதாகச் சொன்னதும், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்றுவிடலாம் போன்று இருந்தது. நீங்கள் ஹைதராபாத் வந்து ஒரு வேளை அவளை நேரில் பார்த்தால் உங்களுக்கும் வெங்கட் மேல் இப்படித்தான் கோபம் வரும். அவள் குளித்து, அழுக்கைப் போக்கி, நாற்றத்தை தணித்து, எண்ணெய் படாத தலையில் சிண்டு எடுத்து, அதை விட மிக முக்கியமாக, பல்லின் கறையை போக்கி…. நினைத்தாலே தலை சுற்றியது.
‘வெங்கட், இது எல்லாம் ஒத்து வராது. கலைவாணியோ, சங்கீதாவையோ பாருங்கள் அல்லது நம்ரிதா மொகந்தியிடமாவது பேசிப்பாருங்கள். ஒரிசாக்காரி. கொஞ்சம் உய்ரமாக, குதிரை மாதிரி நடக்கிறாள். எப்படியாவது வீட்டில் சம்மதம் வாங்கிவிடலாம்’ என்றெல்லாம் பேசினேன்.
செவிடன் காதில் சங்கு ஊதியது போலாகிவிட்டது. இவர்களின் காதல் உடல் பார்த்து வருவதில்லையாம். உடலைப் பார்த்தால்தான் வந்திருக்காதே என்று நான் சொன்னதும் கூட செ.கா.ஊ.சங்கு தான். தினமும் இந்தக்காதல் கதையின் அரிப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.
இங்கு இருந்தால் ஒன்று நான் செத்துவிடக்கூடும் அல்லது கொலைகாரனாகி விடக்கூடும் என்பதால் இரண்டு நாள் ஊருக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். என்ன ரொமான்ஸ் நடக்கப்போகிறதோ என திகிலாக இருந்தது. ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் வெங்கட் ஒன்றரை மாதங்களாக தாய்லாந்தில் இருப்பது பற்றி யோசித்தேன்.
அப்படியானால் வெங்கட்டின் இந்தக் காதல் விவகாரம் எல்லாம்? எனக்கு குழப்பமாக இருந்தது. சுரேஷிடம் பேசினேன். இப்படி வெங்கட் பஞ்சகுட்டா பிச்சைக்காரியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக எனக்கு ஒரு எண்ணம் வந்தது என்று. அவன் சிரித்துக் கொண்டே அது உன் மன’விஸ்கி’ என்றான். எத்தனை நாளைக்குத்தான் ‘பிராந்தி’யை உபயோகப்படுத்துவது என்று ‘விஸ்கியை’ உப்யோகப் படுத்தினானாம்.
எனக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை. கதையாக எழுதட்டுமா என்றேன். உன் உள் மன ஆசைகளை நீ தீர்த்துக் கொள்ளும் ‘Wish fulfillment’ கதையாக இருக்கும்டா என்றான்.
அப்படியானால் எனக்கு அந்தப்பெண்ணின் மீது ஆசையா? அடக்கடவுளே. இப்பொழுதுதான் ‘சென்னை 6000028’ படம் பார்த்தேன். ‘என்ன கொடுமை சார் இது?’.
– அக்டோபர் 11, 2007