என்னைக் கதை சொல்லச் சொன்னா…?!





ஓவ்வொருத்தருக்கு ஞானம் ஒவ்வொரு இடத்தில பிறக்கும். புத்தருக்கு போதிமரத்தடியில, அசோகருக்கு கலிங்கப்போர்க்களத்துல, அர்ச்சுனனுக்கு குருச்சேத்ரத்துல, தர்மருக்கு பீஷ்மர் பீடத்துல, எனக்கு எங்கேன்னுதானே கேக்கறீங்க?!
என்னதான் எல்லாத்துலயும் கடலைப் படம் போட்டிருந்தாலும் கரண்டிக் காம்புல அடிவாங்கினதுக்கு அப்புறம்தானே சிலருக்கு என்ன எண்ணைங்கற ஞானம் பிறக்குது?!

கரண்ட்டு கம்பில அடிபட்டும் காக்கைகள் உட்காற எடத்த மாத்துதா என்ன!?.. சிலருக்கு ஞானம் வழங்கப்பட்டாலும் வாங்கிக்கற யோகம் யோக்கிதை இருக்காது. அது மாதிரிதான் எனக்கும் நேர்ந்தது.
‘டாப்லோடட் வாஷிங்க் மெஷின்’ ‘ஸ்பின்’ முடிச்சிட்டேன்னு வா எடுத்துக் காயப்போடுன்னு சிணுங்க, மூடியைத் திறந்து துணியை எடுத்தா… இல்லே… இல்லே இழுத்தா… துச்ச்சாதனன் இழுத்துத் தோத்த சேலை வரிசையா வந்துட்டே இருக்கு. சேலைகள்! சரி.. போகட்டும் நம்ம துணி அதுககூட இருக்குமேன்னு எட்டிப் பார்த்தா.. தாகம் மிக்க காக்கா கூஜாக்குள்ள இருந்த தண்ணியைப் பார்த்தா மாதிரி ஒரு லுங்கி ஒரு ஜட்டி ஒரு பனியன். ‘என்னைக் கதை சொல்லச் சொன்னா’ன்னு ஆரம்பிச்சேன், சேலை வரிசையை எடுத்துக் காயப்போடும்போது கிடைத்த ஞானமோ,
‘அட, என்னடா பொல்லாதா வாழ்க்கை.. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?! இதுக்குத்தானா நம்மை எல்லாம் பெத்தாளோ அம்மா.. அடப் போகுமிடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மான்னு வித்வம் பொறந்துதுன்னா பார்த்துக்குங்களேன்!!