என்னுள் கரைந்து போனவர்கள்




என்னுடைய நிலைமை ஒரு விவசாயின் இயலாமையினால் விளைந்த பலனாகவும் வைத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் அவனது பேராசையின் விளைவாகவும் வைத்துக்கொள்ளலாம், என்னை மலடாக்க அரசாங்கத்தில் இருந்து கொண்டே யோசனை சொல்லி வாழும் ஒரு சிலர் இல்லை எனில் ஒரு சில முதலாளி வர்க்கத்தவராலும் “இப்படி செய்தால்” உனக்கு கொள்ளை லாபம் கிடைக்க வழி கிடைக்கும் என்று சொல்லியிருப்பார்கள். அதுவரை அவனுக்கு ஏதோ வயிற்றுக்கு கொடுத்துக்கொண்டிருந்த என்னை (தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து பார்த்த கதை) மலடாக்க முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியும் பெற்று இறுதியில் அரசாங்க சட்ட திட்டத்தால் என்னை ‘மலடு’ என்று தெரிவித்து கூறு போட்டு பல கோடி லாபத்தை பார்த்து விட்டார்கள்.

இனி அந்த விவசாயிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை, நான் ஏன் அவனை பற்றி கவலைப்பட போகிறேன். அந்த விவசாயிக்கு முன்னர் வேறு ஒரு விவசாயி ! என்னுடைய கவலை அடுத்து என்னை யார் வைத்துக் கொள்ளப்போகிறார்கள்? என்பதுதான். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் இதுவரை விவசாயி ஒருவரை மட்டுமே பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நான் என்னை துண்டு துண்டாக்கி மற்றவர்களுக்கு விற்று விட்டபடியால் வாங்கிய எல்லோருக்கும் உடையவனாய் ஆகிப்போய் என் உடல் பிளந்து கிடப்பது போல் இவர்களே கோடுகள் போட்டு எல்லைகள் வகுத்துள்ளதை நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
அப்படி பிரிந்து கிடந்த என் வலது மூலை பகுதியில் ஒருவன் என் மேல் நின்று கண்களில் ஏக்கம் வழிய பார்த்துக்கொண்டிருந்தான். என்னை துண்டு போட்டு விற்றவன் அவனிடம் ஏதோ அதிகப்படியான தொகை சொல்லியிருப்பான் போலிருக்கிறது. அவன் கெஞ்சிக் கொண்டிருந்ததை பார்க்குபோது பரிதாபமாக இருந்தது. அட முட்டாளே பணத்துக்காகவே என்னை மலடாக்கி விற்பவனிடன் பாவ புண்ணியம் பேசி வாங்க நினைக்கிறாயே? எப்படியும் உன்னை ஏமாற்றி விற்று விட்த்தான் போகிறான் பார்த்துக்கொண்டிரு. நான் நினைத்தபடி விற்றவன் முகத்தில் யோசனை வரிகள் தெரிய வாங்குபவனிடம் பேசிக்கொண்டிருந்த்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆச்சர்யம்..! ஒரு வாரம் கழித்து அவன் என் மேல் நின்று தன் மனைவி குழந்தைகளை கூட்டி வந்து காண்பித்துக்கொண்டிருந்தான். எப்படியோ என்னை சொந்தமாக்கிக் கொண்டான் போலிருக்கிறது, நினைத்துக்கொண்ட நான் அடுத்து என்னை என்ன செய்யப்போகிறான் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.
அடுத்த ஐந்து மாதங்கள் என்னை வெட்டி கூறு போட்டு, அந்த கூறுக்குள் பாரங்களை கொண்டு வந்து வைத்து அதற்கு பிசினை போட்டு ஒட்டி அப்ப்ப்பா அந்த ஐந்து மாதங்கள் நான் பட்ட வேதனை, ஒரு வழியாய் என் உடல் மேல் பிரமாண்டமாய் ஒரு உருவத்தை கட்டி அதனை அழகு படுத்தி போவோர் வருவோரிட மெல்லாம் பெருமை பேசி !
முன்பெல்லாம் பச்சை வண்ணத்திலும், அதிலிருந்து வரும் பல வண்ண நிற பூக்களாகவும் சிறுத்த பெருத்த காய்கனிகளாகவும், சுமைகளை சுமந்து நின்ற நான் இன்று சுற்றிலும் மலை மலையாய் கட்டிட பொதிகளை சுமந்து என்னுள் இருப்பவர்கள் என்னை எப்படி ஆட்கொண்டோம் என்பதை அருகில் இருப்பவர்களிடம் பெருமை பேசிக்கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கை சக்கரங்கள் நாட்களாகி வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாக மாறிக்கொண்டே இருக்க என்னுள் புகுந்தவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் என் முன்னால் நடத்தி கொண்டிருக்கிறான். அவனது கூடல் முதல் குழந்தைகள் பெரியவர்கள் ஆனது வரையும், சில பல அவனது குடும்ப சமூக நிகழ்வுகள்,! குழந்தையாய் என் மேல் நின்று வியப்பாய் பார்த்தவர்களா இவர்கள்? பருவத்தின் வளர்ச்சியின் பக்குவமாய் அவர்கள்….!
கால சக்கரம் சுழல என் மேல் நின்று ஏக்கமாய் என்னை பார்த்தவன், அவயங்கள் எல்லாம் முடங்கிப்போய் கட்டிடத்து பொதிகளின் கடைசியில் எவருக்கும் பயன்படாத பகுதியின் ஓரமாய் ஒதுக்கப்பட்டு என்னை ஆட் கொண்ட பெருமைகளை கனவாய் கண்டு கொண்டு ஏக்கத்துடன் என் மேல்புறத்து வெளுப்பை பார்த்துக் கொண்டு மறைந்து போய்விட !
நானும் அவன் முகத்தை பார்த்த வண்ணம் ! அவனை வழி அனுப்பி விட்டு காலங்கள் சற்று நகர வேறொருவன் என்னுள் குடி புகுந்து அவனும் என்னை ஆட்கொண்ட பெருமையை மற்றவனிடம் பேசித் திரிய நான் என்னுடன் இருந்து கடந்து போன விவசாயிக்கு முன் இருந்த ஒருவன்..அதற்கு முன் இருந்த ஒருவன்…. அதற்குமுன்…. ஒருவன்….இப்படியே எத்தனையோ எண்ணில் சொல்லமுடியாத ஒருவன், ஒருத்திகள்.
என்னை உரிமை கொண்டதன் மூலம் என்னை ஆட்கொண்டதாக நினைத்து கொண்டிருக்கும் இவனும், எண்ணற்ற ராஜாதி ராசாக்கள் எல்லாம் என்னை உரிமை கொண்டவர்கள் என நினைத்து ஆடிவிட்டு கடைசியில் எனக்குள் கரைந்து போனது போல காலப்போக்கில் கரைந்து போவான் என்பதை நினைத்து பார்த்து எனக்குள் சிரித்துக்கொள்கிறேன். !