எண்ணங்கள் நிலையானவை அல்ல
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 77
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு மணி ஒன்பது.
பலசரக்குக் கடையில் பலகை போட்டதும் வேலைக் காரர்கள் குளிக்கச் சென்று விட்டனர். ஆனால் சின்னக் கண்ணு மட்டும் போகவில்லை.
கடை அடைத்த பிறகும் அவர் உள்ளே வேலை செய்து கொண்டிருக்கிறார். ராக்கையில் நீட்டிக் கொண்டும், துருத்திக் கொண்டும் இருந்த பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்கிறார். கீழே கிடக்கும் சிறு மூட்டைகளையும், பைகளையும் தூக்கிப் பலகை மேடையில் வைக்கிறார்.
கணக்கு வழக்குகளில் மனம் ஒன்ற விட்டிருந்த கடை முதலாளியான நல்லதம்பியின் பார்வை சின்னக்கண்ணு மேல் விழுகிறது.
“இன்னும் நீ வீட்டுக்குப் போகலியா?” என்று ஒப்புக்காகக் கேட்கிறார்.
‘இதையெல்லாம் இப்படியே போட்டுவிட்டுப் போனா எப்படி? எல்லாம் தாறுமாறாகக் கிடக்கு. எலி வேறு கடிச்சுத் தொலைச்சுடும்!’ என்கிறார் சின்னக்கண்ணு.
‘அந்தத் தடிப்பயல்கள் இருக்கும் போதே வச்சிருக்கலாமே! சொக்கனுக்குச் சட்டி அளவுங்கிறதைப் போல மணியானதும் ஓடிப்போயிட்டாங்களா? சரி சரி காலையில் பாத்துக்கிறலாம் நீ வீட்டுக்குப்போ’ என்கிறார் நல்லதம்பி. இப்படிச் சொன்னால் சின்னக்கண்ணு போகமாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.
‘இன்னும் கொஞ்சந்தான் இருக்கு’ என்கிறார் சின்னக்கண்ணு.
நல்லதம்பி என்று கடை திறந்தாரோ அன்றிலிருந்து சின்னக் கண்ணு அங்கு தான் வேலை செய்து வருகிறார் ஏறக்குறைய இருபதாண்டு இருக்கும். நல்லதம்பி கடை வைக்கும் போது கடன் வாங்கித்தான் வைத்தார். அன்று வாங்கிய கடனை இருவரும் கூட்டாய் வாங்கிப் போட்டிருந்தால் இன்று சின்னக் கண்ணுவும் முதலாளிதான்.
நல்லதம்பியும் அப்படித்தான் திட்டம் போட்டிருந்தார்.
‘நாம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில் இருந்தே அண்ணன் தம்பியாய்ப் பழகிட்டோம். என்னைப் பத்தி உனக்கும்,உன்னைப் பத்தி எனக்கும் நல்லாத் தெரியும். ‘ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டாக வியாபாரம் செய்யலாம்’ என்று நல்லதம்பி கேட்டதற்கு, ‘எனக்குக் கடன் வாங்கிப் பழக்கமில்லை! நான் கடன் வாங்கவும் மாட்டேன்! கடன் இல்லாமல் கால் வயித்துக் கஞ்சி குடிச்சா போதும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க; பெருந்தொகையைக் கடையில் போடப் பயமா இருக்கு!’ என்று சின்னக்கண்ணு சொல்லிவிட்டிருந்தார்.
அதனால் அவருக்குக் கடையில் பங்கு இல்லை. சம்பளத்திற்குத்தான் இருந்து வருகிறார். வஞ்சகம் இல்லாமலும் உழைத்து வருகிறார்.
வியாபாரம் நன்றாக நடந்து வருகிறது.
நல்லதம்பி கடையில் வாங்கிப்போட்ட கடனைக் கட்டி விட்டு ஒரு கடைக்கு இரண்டு கடை என்றும், வீடு வாசல் என்றும் வாங்கிவிட்டார். இப்போது அவர் பெரிய புள்ளிகளுள் ஒருவராகவும் ஆகிவிட்டார். அவரிடம் வேலையாட்கள் பலர் வேலைக்குச் செல்கின்றனர். மேலும் ஒரு கடை வாங்கத் திட்டமிட்டு ஏற்பாடும் செய்து வருகிறார்.
‘சரி சரி அது கிடக்கட்டும். காலையில் வந்தவன்! நாளைக்குப் பார்த்துக்குறலாம்! வீட்டுக்குப் போ!’ என்கிறார்.
சின்னக்கண்ணு சிரித்தபடி, ‘எலி கடிச்ச பிறகு எடுத்து வைக்கச் சொல்லுறீங்களா? கையோடு எடுத்து வச்சிடுறேன்!’ என்கிறார்.
நல்லதம்பி மறுமொழி சொல்லவில்லை. தன் சொந்தக் கடையைப்போல் பொறுப்போடு வேலை செய்துவரும் சின்னக்கண்ணுவையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்.
மின் விசிறி தலைக்குமேல் சுற்றிக் கொண்டிருந்தாலும் வெப்பம் தாங்க முடியவில்லை. சின்னக்கண்ணுவின் அழுக்குப் படிந்திருந்த பனியன் வியர்வையால் நனைந்திருக்கிறது. விளக்கை வட்டமிட்டுக் கொண்டிருந்த விட்டில் பூச்சிகள் கீழே விழுந்து ஊர்ந்து செல்கின்றன. இறகு இழந்த சில பூச்சிகள் சின்னக்கண்ணுவின் ஊடுநரை ஓடி விட்டிருந்த தலையில் விழுந்து விழுந்து செல்கின்றன.
சின்னக்கண்ணு வேலைய முடித்துவிட்டு நல்லதம்பியிடம் வருகிறார்.
நல்லதம்பிக்கு அப்போதுதான் நினைவு வருகிறது. உடனே கல்லாவைத் திறந்து மூன்று வெள்ளி எடுத்துக் கொடுக்கிறார்.
வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது சின்னக் கண்ணு அன்றாடம் மூன்று வெள்ளி வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.
சின்னக்கண்ணு அந்த மூன்று வெள்ளியை வீட்டில் கொடுத்து விடுவார். அவர் மனைவி அதைச் சந்தைச் செலவுக்கு வைத்துக் கொள்வாள். மாதம் முடிந்ததும் எடுக்கும் சம்பளம் வீட்டு வாடகை, மளிகைக்கடை என்று போய்விடும். வாழ்க்கைத் தேர் ஏதோ ஒடிக்கொண்டிருக்கிறது.
சின்னக்கண்ணு சென்றதும் நல்லதம்பி கடைக்குத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மேல்மாடிக்குச் செல்கிறார். மேல் மாடியில்தான் நல்லதம்பி குடியிருக்கிறார்.
அவர் உள்மனம் இனம் புரியாமல் எதையோ உறுத்துகிறது. ஆனால் அவருக்குக் காரணம் புரியவில்லை.
குளிக்கச் சென்றவர் குளித்துவிட்டு வந்ததும் சாப்பிடுகிறார். எப்போதும் போல் சின்னக்கண்ணுவைப் பற்றித் தம் மனைவியிடம் வானளாவப் புகழ்கிறார்.
‘அவரைப் பத்தி வாயால் மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்கிறீர்களே!’
‘பிறகு என்ன செய்யச் சொல்லுறே!’
‘சொந்தக் கடையைப் போல் பொறுப்பா இருந்து பார்க்கிறவர்களுக்கு நீங்க ஏதாகிலும் உதவி செய்ய வேண்டாமா?’
‘இங்கேதாண்டி உன் மூளை வேலை செய்ய மாட்டேங்குது. அவன் வேலை செய்யுறதுக்குதான் மாதா மாதம் சம்பளம் கொடுத்துடுறமே! எல்லாரையும் விட ஐம்பது வெள்ளி கூட்டிப் போட்டுக் கொடுக்கிறேன். இதுக்கு மேலே எப்படிக் கொடுக்க முடியும். ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடணும்!’
‘அன்னிக்கு உங்ககூட சேர்ந்து கடன் வாங்கிப் போட்டிருந்தா இன்னிக்கு அவரும் உங்களைப்போலதானே இருப்பாரு?’
‘ஆமா. இருந்தாலும் விதின்னு ஒன்னு இருக்கே! தலையெழுத்து எப்போதும் கூலிக்காரனா இருக்கணும்னு இருக்கும் போது எப்படி முதலாளி ஆக முடியும். அதான் அன்னிக்கே ஆயிரம் வெள்ளி வாங்க வழி இருந்தும் வாங்குறத்துக்குப் பயந்திருக்கிறான்’ என்கிறார்.
‘நீங்க கடன் வாங்கிப் போட்டிருந்தாலும் அன்னையில் இருந்து இன்னிக்கு வரைக்கும் அவர் மாடா உழைச்சிருக்கிறாரே!’ என்கிறாள்.
‘அதுதான் தலையெழுத்துனு சொல்லிட்டேனே!’ என்று சொல்லிட்டு இருமுகிறார். இனியும் பேசினால் இருமுவார் என்றெண்ணி அவர் மனைவி அதற்கு மேல் பேசவில்லை.
புக்கிட் தீமா நெடுஞ்சாலையிலிருந்து திரும்பிய பிணவண்டி லிம் சூக் காங் சாலையில் பறக்கிறது. வண்டியில் நான்கு மூலைகளிலும் கட்டியிருந்த வாழைக்கன்றுகள் காற்றுவாக்கில் வளைந்து, இலைகள் பிய்ந்து ‘படபட’ என்று அடிக்கின்றன. பூச்சரத்தில் தொடுத்திருத்த மலர்கள் காற்றில் அடிபட்டு நைந்து உதிர்கின்றன. சாலையிலுள்ள சிறுசிறு மேடு பள்ளங்களை வண்டி கடந்து செல்லும் போது வாழ்க்கைப் பாதையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்த நல்லதம்பியின் பிணப் பெட்டி ஆடத்தான் செய்கிறது.
பிண வண்டியைத் தொடர்ந்து பேருந்துகளும் ஊர்திகளும் பறக்கின்றன. இடுகாட்டிற்குச் செல்வதில் அதற்கேனோ அத்துணை ஆவல். எல்லாரும் இடுகாட்டிற்கு விரைவில் செல்லக்கூடியவர்கள் தாம் என்பதை அவை உணர்த்துகின்றன போலும்.
வண்டிகள் இடுகாட்டை அடைந்ததும் நிற்கின்றன. எல்லாரும் இறங்குகின்றனர். கூட்டம் கூடியதும் இடுகாட்டமைதி களைகிறது.
எல்லாரும் ஒரு நாள் அந்த இடத்தில் நிலையாகக் குடியேற வேண்டியவர்கள் என்பதாலோ என்னவோ தங்களுக்கு முன் இடுகாட்டிற்குச் சென்றுள்ளவர்களின் கல்லறைகளைப் பார்க்கின்றனர்.
‘அதோ, அங்கே தான் ஐயாத்துரையை அடக்கம் செய்திருக்கு’ என்றார் ஒருவர்.
அந்த இடத்திற்குச் சென்ற பிறகுதான் தம் நெருங்கிய நண்பரைப் பற்றிய நினைவே அவருக்கு வருகிறது.
கல்லறைக்குள் அடங்கிக் கிடக்கும் நண்பரை அறவே மறந்துவிட்டிருந்த மற்றொருவர், ‘அப்படியா?’ என்கிறார்.
பலர் பார்வை பற்பல கல்லறைகளில் இருக்கின்றன.
கல்லறைகள் சொல்லும் கதைகளைவிடச் சிலர் கல்லறைகளின் கதைகளைக் கூட்டிக்குறைத்து அள்ளி விடுகின்றனர். பாவம் கல்லறைகள்! யார் சொல்லியதையும் அவை பொருட்படுத்தவில்லை. மறுத்துக்கூறவும் இல்லை. மறுத்துப் பேசினால் அங்கும் பூசல்கள் எழும் என்று இருந்துவிட்டனவோ என்னவோ!
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
நாடி தளர்ந்து, முடி நரைத்துவிட்டிருந்த முதியவர், ‘பயலைக் கூப்பிடுங்க நேரமாச்சு’ என்றவாறு கைத்தறி வேட்டியை மடித்துக் கட்டிக் கொள்கிறார்.
அவர் நல்லதம்பி உறவினர்களுள் பெரியவர்; அகவையில் மூத்தவர்.
அவருக்கு அருகில் நின்றவர், ‘இதோ வர்றான். என்கிறார். அழுத கண்ணீரோடு நல்லதம்பி மகனும் முதியவரை நெருங்கி விடுகிறான்.
சீமை ஓடு வேய்ந்த கொட்டகை அங்கு இருக்கிறது. அதை ஒட்டினாற்போல் குளியல் அறையும் இருக்கிறது.
குளியலறையைச் சுட்டிக் காட்டி, “போய்க் குளிச்சிட்டு வா!” என்று நல்லதம்பியின் மக்னிடம் சொல்லிவிட்டு அருகில் நிற்பவர் பக்கம் திரும்பி, “கூட்டிக்கிட்டுப் போய்க் குளிக்கச் சொல்லி அழைச்சிக்கிட்டு வாப்பா” என்கிறார் முதியவர்.
அவர்கள் குளியலறையை நோக்கி நடக்கின்றனர்.
முதியவர் பிண வண்டியை நோக்கி நடக்கிறார். உறவினர் சிலர் அவரைப் பின் தொடர்கின்றனர்.
“பெட்டியைத் தூக்கி வையுங்கள்!” என்கிறார் முதியவர், வண்டியிலிருந்த பிணப்பெட்டியை நாலுபேர் கூடித் தூக்குகின்றனர்.
குழிக்கருகில் புதிய மண் மேடாகக் கிடக்கிறது. குழி வெட்டிய மண்தான் அது. அந்த மேட்டில் பெட்டியை இறக்கி வைக்கின்றனர்.
முதியவர் நரைத்துவிட்ட கண்புருவத்தைத் தடவிக் கொண்டு சாலையைப் பார்க்கிறார்.
குளிக்கச் சென்றிருந்த நல்லதம்பியின் மகன் குளித்து விட்டு வருகிறான்.
அவன் வந்ததும் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. நல்லதம்பியின் பலசரக்குக் கடையில் உள்ள பொருட்கள் தாம் அச்சடங்கிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவர் அப்பொருட்களைக் கடையில் வாங்கி வைக்கும் போது அவை தம் இறுதிச் சடங்கிற்குத் தேவைப்படும் என்று வாங்கி வைத்தாரோ என்னவோ தெரியவில்லை. பொருட்கள் நல்ல பொருட்களாக இருக்கின்றன.
உறவினர்கள் வரிசையாகச் சென்று மஞ்சளரிசியோடு காசும் சேர்த்து வாய்க்கரிசி போட்டுவிட்டு கையையும் கழுவி விட்டு ஒதுங்கி நிற்கின்றனர். நல்லதம்பியை அவர்கள் கை கழுவிவிட்டாலு ம் அவர்கள் முகத்தில் சோகமே இழையோடுகிறது. கண்கள் கலங்கியபடி ஈரக்கையை உதறாமல் நிற்கின்றனர்.
நல்லதம்பியின் சடலத்தின் மேல் விரித்திருந்த வெள்ளைத் துணியில் மஞ்சௗரிசியோடு சில்லறை நிறைய விழுகிறது. இடுகாட்டுப் பணியாளர்களின் நெஞ்சில் பனிமலர் பூக்கிறது. அக் காசு அவர்களைத்தான் சேரும்.
எல்லோரும் வாய்க்கரிசி போட்டதும் சடலத்தின் கை
விரல்களிலும், கால்விரல்களிலும் போட்டிருந்த கட்டுகளை அவிழ்க்கின்றனர். விரலில் கிடந்த மோதிரம், கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி, ஒரு காதில் மட்டும் கிடந்த ஒற்றைக்கல் தருப்பு எல்லாவற்றையும் கழற்றிவிடுகின்றனர். தங்க நகைகளை விரும்பி அணியும் நல்லதம்பியின் உடலில் தங்கம் என்று சொல்ல எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் தங்கப் பல்லை மட்டும் விட்டுவிடுகின்றனர். குறடு கிடைத்தால் அதையும் பிடுங்கிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை.
அதையடுத்து பெட்டி மெல்லக் குழிக்குள் இறக்கப்படுகிறது. எல்லாரும் பிடி மண் அள்ளிப் போட்டதும் இடுகாட்டுப் பணியாளர்கள் மண்ணை வெட்டிக் குழிக்குள் தள்ளுகின்றனர். “மெதுவாகத் தள்ளுங்கப்பா!” என்கிறார் முதியவர். அவர் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கிறது.
‘ஆயிரக்கணக்கில் இருந்து என்ன செய்ய? இறுதியில் மண்ணுக்குள்தானே புதைக்கின்றனர்’ என்று பலர் மனத்தில் தத்துவங்கள் எழுகின்றன. இனிமேல் நேர்மையாக வாழ வேண்டும் என்றும் எண்ணிக் கொள்கின்றனர்.-ஆனால் அது எத்தனை நாளைக்கு என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
குழியில் மண் விழவிழ நல்லதம்பியின் உடலை அழுத்துகிறது.
குழியை நன்கு மூடியதும் எல்லாரும் திரும்பிவிடுகின்றனர். நல்லதம்பி கடையில் வேலை செய்யும் ஊழியர் சிலர் மட்டும் திரும்பவில்லை. ஓட்டுக் கொட்டகையில் அமர்ந்திருக்கின்றனர். முதலாளி உயிர்த்தெழுவார் என்று அவர்கள் காத்திருக்க வில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அறியாதவர்களும் அல்லர். மற்றொரு சவ அடக்கத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சற்று நேரம் கழிந்ததும்
மற்றொரு பிண வண்டியும், அதைத் தொடர்ந்து சுமையுந்தும் அங்கு சென்று நிற்கின்றன. சுமை உந்தில் இருந்து சிலர் இறங்கினர். அவர்கள் வேறு யாருமில்லை. இறந்து விட்டிருந்த சின்னக்கண்ணுவின் உறவினர்களும் நண்பர்களும் தாம். செல்வர்மொழியில் சொன்னால் ‘அன்றாடம் காய்ச்சிகள்.’
அவர்களுள் நால்வர் சேர்ந்து பிண வண்டியிலிருந்து பிணப்பெட்டியை இறக்குகின்றனர்.
ஏழைமை அந்தப் பிணப் பெட்டியிலும் தெரிகிறது. விலை மலிவான கள்ளிப் பெட்டி வெளியே தெரியாமல் இருக்க வெள்ளைத் துணி வைத்து அமுக்காணி குத்தியிருந்தனர்.
பெட்டியை இறக்கிக் குழிக்கு அருகில் வைக்கின்றனர்.
அந்தக்குழி நல்லதம்பியை அடக்கம் செய்த குழிக்குப் பக்கத்துக் குழிதான். பெட்டியை இறக்கி வைத்ததும் சுற்றும் முற்றும் பார்க்கின்றனர். நல்லதம்பிக்கு இறுதிச் சடங்கு செய்த பொருட்கள் சிதறிக் கிடப்பது அவர்கள் அவர்கள் கண்களில் படுகின்றன. அவர் சடலம் அடக்கம் செய்வதில் கலந்து கொண்ட ஒருவர் இந்த, ‘இந்த இடத்தில் தான் முதலாளியை அடக்கம் செய்திருக்கிறாங்க!’ என்கிறார்.
சின்னக்கண்ணு சவ அடக்கத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுள் ஒருவர், ‘இங்கேதான் உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே இல்லை!’ என்கிறார்.
இறுதிச் சடங்கு நிறைவேற்றப்பட்டதும் சடலத்தைக் குழியில் இறக்குகின்றனர். மண் தள்ளப்படுகிறது. சின்னக் கண்ணுவின் சடலத்தில் மண்தள்ளும்போது ‘மெள்ளத் தள்ளு!’ என்று யாரும் சொல்லவில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களைத் தாங்கித் தாங்கிப் பழகிவிட்ட சின்னக் கண்ணு இந்த மண்ணையா தாங்கிக்கொள்ள மாட்டார் என இருந்துவிட்டனர் போலும்!
சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர்.
நள்ளிரவு வருகிறது.
நல்லதம்பியின் ஆவி புதைகுழியில் வந்து நிற்கிறது.
தாம் நினைத்தவற்றை வாழ்க்கையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆவிகள் அக்கம்பக்கத்தில் உள்ள குழிகளில் சோகமாக இருக்கின்றன.
சில கல்லறைகளில் ஆவிகள் இல்லை.
‘நல்ல ஆவிகள் அதனால்தான் எங்கெங்கோ சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றன என்று நல்லதம்பி ஆவி எண்ணிக் கொண்டு நிற்கும்போது, அங்கு சின்னக்கண்ணுவின் ஆவி வந்து ‘முதலாளி!’ என்கிறது.
நல்லதம்பியின் ஆவி பேசவில்லை.
‘என்ன முதலாளி பேசாமல் நிற்கிறீர்கள்? உங்களிடம் வேலை செய்த சின்னக்கண்ணுவின் ஆவிதான் நான். மறந்து விட்டீர்களா?’ என்றவாறு நல்லதம்பி முன்போய் நிற்கிறது.
நீண்ட சிந்தனையில் இருந்து விடுபட்ட நல்லதம்பியின் ஆவி ‘வா சின்னக்ண்ணு! நீ குடியிருந்த உடம்பு நல்லாத் தானே இருந்தது; அதற்குள்…’ என்றவாறு இழுக்கிறது.
‘கடுமையாக உழைத்ததாலே உடம்பு நிரம்ப தளர்ந்து போய்விட்டது என்றும் நெஞ்சாங்குலையில் வலு இல்லை என்றும் மருத்துவர் சொல்லிவிட்டார்!’ என்கிறது சின்னக் கண்ணுவின் ஆவி.
‘கடுமையான உழைப்பு!’ என்றதும் நல்லதம்பின் ஆவிக்குச் ‘சுருக்’ என்று இருக்கிறது. இருந்தாலும் தனக்கே உரிய திறமையால் அதைச் சமர்த்தாக மறைத்துக் கொள்கிறது.
‘கடைசியில் இருவர் சடலத்தையும் அருகருகேதான் புதைத்திருக்கிறார்கள்! இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் சின்னக்கண்ணுவின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தித் தந்திரமாகவும் தட்டிக் கொடுத்தும் வேலை வாங்கி இருக்கமாட்டேன்! இவ்வளவு பணம் சேர்த்தும் கடைசியில் கூட வரவில்லையே! பிணப்பெட்டி மட்டும் விலை உயர்ந்த பெட்டியாக இருந்தால் போதுமா!’ என்று நல்லதம்பியின் ஆவி நினைத்துக் கொண்டு நிற்கிறது.
‘என்ன முதலாளி! மறுபடியும் பேசாமல் நிற்கிறீர்கள்?’
‘ஒன்றுமில்லை, இந்த ஆவி கட்டையில் இருக்கும்போது தெரியாத உண்மையெல்லாம் உடலை விட்டுப் பிரிந்த பின் தெரிகிறது. அதைப் பற்றித்தான்…’
அப்போது அங்கு சோர்ந்த முகத்தோடு வந்த மற்றொர் ஆவி நல்லதம்பியின் ஆவியைப் பார்த்து, ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் வேலைக்கார ஆவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்! உங்களுக்கு ஏவல் புரிய சின்னக் கண்ணுவின் ஆவி இருக்கிறது!’ என்று பழைய நினைவில் சொல்கிறது.
‘இங்குகூட இப்படியும் ஆவி இருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டு நல்லதம்பி ஆவி சிரிக்கிறது.
‘ஏன் சிரிக்கிறீர்கள்?’
‘நீங்கள் அற்ப ஆயுளில் உடலைவிட்டுப் பிரிந்துவிட்டீர்கள்! அதனால்தான் சில உண்மைகள் உங்களுக்குத் தெரியவில்லை. ஆயுள் முடியும் வரைக்கும் நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்! போய் உங்கள் கல்லறையில் அமர்ந்து கொள்ளுங்கள்’.
‘அப்படியா?’
‘ஆமாம், நானும் உங்களைப் போல் முதலாளிதான். பலர் என்னிடம் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் நான் நிறைந்த அகவையில் இறந்ததால் சில உண்மைகள் எனக்குத் தெரிந்துவிட்டது’ என்றது நல்லதம்பியின் ஆவி.
‘அப்படி என்னதான் தெரிந்து கொண்டீர்கள்?’ என்று சின்னக்கண்ணுவின் ஆவி வினவுகிறது.
‘ஊத்தை உடம்பில் ஆவி இருக்கும்போது சாதி, சமயம், ஏழை, பணக்காரன், வலுத்தவன், இளைத்தவன் என்றெல்லாம் பேசுகிறோம். ஆவி உடலை விட்டுப் பிரிந்த பிறகு அப்படி ஒரு நிலை இல்லை. ஆவி காற்றோடு காற்றாகக் கலந்து விடுகிறது. உடல் மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. இப்போது நீயும் நானும் ஒன்றுதான். இனிமேல் நீ என்னை முதலாளி என்று கூப்பிடாதே! நல்லதம்பி என்றே அழை!’ என்கிறது நல்லதம்பி ஆவி.
இதைச் செவிமடுத்ததும் மற்றோர் ஆவி போய்விடுகிறது.
‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? எத்தனையா இருந்தாலும் நான் உங்களிடம் வேலை செய்தவன். உங்கள் பெயரைத் தலையில் அடித்தாற்போல சொன்னால் பாவம் இல்லையா?’ என்கிறது சின்னக்கண்ணுவின் ஆவி.
‘நீ ஆவியாகியும் உன் அடிமைப் புத்தி இன்னும் போகவில்லையே! எது பாவம், இதுவா பாவம்? இல்லை! அறியாமையால் உயர்வு தாழ்வு பேசுகிறோமே அதுதான் பாவம். இங்கே உயர்வு தாழ்வுக்கே இடமில்லை உன் சடலத்தை அடக்கம் செய்யும்போது என்னை முதலாளி என்றா பார்த்தார்கள். இல்லை. என் குழியை மிதித்துக் கொண்டு எத்தனைபேர் என்னென்ன செய்தார்கள் பார்த்தாயா? நம் இருவர் உடல்களும் மண்ணுக்குள் அருகருகே கிடக்கின்றன. இனி அழுகி மண்ணில் ஒன்றாகக் கலக்கப்போகிறது. பிறகு மண்ணோடு மண்ணாக மாறப்போகிறது. மாஞ்செடி கொடிகளுக்கு உரமாகவும் ஆகப்போகிறது. அச்செடி கொடிகளில் காய்க்கும் காய் கனிகளைச் சுவைத்துப் பார்ப்போர்க்குச் சுவை வேறுபாடு தெரியாது. முதலாளி பாலும் பழமும் சாப்பிட்டார். அந்தச் சத்து இந்தப் பழத்தில் இருக்கிறது; தொழிலாளி உடம்பில் உள்ள சத்துத்தான் இந்தப் பழத்தில் இருக்கிறது என்றா தெரியப்போகிறது! இல்லை பழங்கள் இனிக்கத்தான் செய்யும். அதோ அந்த மூலையில் தெரிகிறதே தென்னை மரங்கள் அவற்றின் வேர்கள் எத்தனைச் சடலங்களை ஊடுருவிச் சென்றிருக்கின்றன தெரியுமா? இந்த இடுகாட்டில் புதைத்திருக்கும் பாதிப் பிணங்களை ஊடுருவிச் சென்றுள்ளன. அதனால் அவற்றின் தன்மை மாறாது. இளநீர் ஒரே சுவையாகத்தான் இருக்கும். இறப்புக்கு முன் தாம் எல்லாம். இறப்புக்குப் பின் எதுவு மே இல்லை. இந்த உண்மை மாந்தர்களுக்குத் தெரிந்தால் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். சண்டை சச்சரவு எதுவுமே இருக்காது. எல்லோரும் அன்பாக இருப்பார்கள். தன்னலத்தால் ஒருவரை யொருவர் ஏமாற்றமாட்டார்கள். எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் செல்வம் படைத்தவர்களாகப் பிறக்கவே கூடாது. அவர்களிடம் ஈவு இரக்கம் எதுவுமே இருக்காது. அவர்களுடைய பிள்ளைக் குட்டிகளிடமே அவர்கள் அவ்வளவு அன்பு செலுத்த மாட்டார்கள். அவர்களுக்குப் பணத்தின் மேல்தான் பக்தி. வேண்டுமானால் வாகாட்டுகிறேன்’ என்கிறது நல்லதம்பியின் ஆவி.
இரு ஆவிகளும் அருகருகே நிற்கின்றன.
அடுத்த நொடியே வானத்திற்கும் நிலத்திற்கும் ஒளித் தூண்களாக மாறி சூறைக்காற்றைப் போல் சுற்றுகின்றன. இடுகாட்டை ஒட்டினாற்போல் நின்ற கொய்யா, வாழை, தென்னை மரங்கள் அக்காற்றில் சிக்கிப் பேயாட்டம் போடுகின்றன. இலைகளும், பூக்களும் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.
விரைந்து சுற்றிய ஆவிகள் தரையிலிருந்து விடுபட்டு மேலெழுந்ததுதான் தெரிந்தது. அதற்குப் பின் அவை கண்களுக்குத் தெரியவில்லை!
இருவர் ஆவியும் நேராக நல்லதம்பி வீட்டிற்குச் சென்று யார் கண்களுக்கும் புலப்படாமல் நின்று பார்க்கின்றன.
நல்லதம்பியின் படத்திற்கு முன் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. அவர் மனைவி மட்டும் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறாள். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அடுத்து இருவர் ஆவியும் சின்னக்கண்ணு வீட்டிற்குச் செல்கின்றன.
சின்னக்கண்ணுவின் படத்திற்கு முன் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அவர் மனைவி அழுதழுது முகம் வீங்கிப் போய் இருக்கிறாள்; நிமிர்ந்து இருக்கக்கூட அவளுக்குத் தெம்பு இல்லை. உடல் சோர்ந்து தலைவிரி கோலமாகப் படத்தைப் பார்த்தவாறு ஒருக்கணித்துப் படுத்திருக்கிறாள். பிள்ளைகளின் கருமணி விழிகளில் கண்ணீர்.
அடுத்த வீட்டில் உள்ள கிழவி அவர்களை எத்தனையோ முறை சாப்பிடச் சொல்லியும் அவர்கள் சாப்பிடவில்லை.
‘அம்மா சாப்பிட்டால்தான் சாப்பிடுவோம்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நெஞ்சை உருக்கும் அக்காட்சியை இரு ஆவிகளும் பார்க்கின்றன. ‘பார்த்தாயா உன் வீட்டில் அன்பு, பாசம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று? என் வீட்டில் அழுதார்கள்; செய்ய வேண்டிய சடங்குகளை நன்றாகச் செய்தார்கள். ஆனால் இவ்வளவு ஆழமான அன்பு அங்கே இல்லை. இருந்திருந்தால் என் பிள்ளைகளுக்குத் தூக்கம் வந்திருக்குமா? என் மனைவிதான் விழித்திருக்கிறாள். அவளும் இன்னும் சிறிது நேரத்தில் தூங்கி விடுவாள்’ என்கிறது நல்லதம்பியின் ஆவி.
சின்னக்கண்ணுவின் ஆவி ‘ஆம்!’ என்கிறது.
‘உண்மை அன்பு எங்கிருக்கிறதோ அங்கேதான் தெய்வம் குடியிருக்கும். செல்வர் வீட்டில் தெய்வப் படங்கள் இருந்தாலும் அங்கு தெய்வம் இருக்காது. பணம்தான் இருக்கும். சரி சரி நீ உன் மனைவியின் மனத்திற்குள் புகுந்து சாப்பிடும்படி சொல்லிவிட்டுக் கிளம்பு என்கிறது நல்லதம்பியின் ஆவி.
உடனே சின்னக்கண்ணுவின் ஆவி மனைவி மக்கள் மனத்திற்குள் சென்று சாப்பிடச் சொல்கிறது.
அவர்கள் சாப்பிடச் செல்கின்றனர்.
ஆவிகள் இடுகாட்டுக்குத் திரும்பிச் செல்கின்றன.
நாளும் கிழமையும் நகர்கின்றன. மாதம் மலர்கிறது.
நல்லதம்பியின் ஆன்மா சாந்தியடைய உறவினர்கள் செய்யவேண்டியவற்றை விரிவாகவும், சற்றுத் தடபுடலாகவும் செய்து முடிக்கின்றனர்.
கல்லறையும் கட்டப்பட்டு விடுகிறது.
நல்லதம்பியின் பெயரும் பிறந்த நாளும் இறந்த நாளும் கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதில் எழுதப் பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் கண்களைப் பறிக்கின்றன. சீனர்தாம் எழுதியிருந்தார்.
கல்லறை எழுந்ததும் நல்லதம்பியின் மனைவி பார்க்கிறாள். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி.
அன்று இரவு ஆவிகள் எழுகின்றன.
‘என்னை மிதித்துக் கொண்டுதான் கற்களைத் தூக்கி வைத்து உங்களுக்குக் கல்லறை கட்டினார்கள். நான் வருத்தப் படவில்லை. நீங்கள் ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?’ என்று சின்னக்கண்ணுவின் ஆவி நல்லதம்பியின் ஆவியைப் பார்த்து வினவுகிறது.
‘என்மேல் எவ்வளவு பாரத்தைத்தூக்கி வைத்திருக்கின்றனர் என்பதை மறந்து விட்டாயே! முதலில்தான் குடும்பப்பாரம் என் தலைமேல் இருந்தது. இறந்தபின்னும் அவர்கள் என்னை விடவில்லை. அவர்கள் நினைவில் என் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காக என் சடலத்திலும் பாரத்தை ஏற்றி வைத்திருக்கிறார்கள்’ என்கிறது.
‘சுமை இருந்தாலும் உங்க பேரு, காலம் காலமாக இருக்கும் பாருங்க’ என்று சின்னக்கண்ணுவின் ஆவி சொல்கிறது.
‘எங்கே இருக்கப்போகிறது. இப்போதே குடும்பத்தினர் மனத்தில் என் நினைவு அறவே இல்லை. அவர்கள் கல்லறையைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். என் மனைவியே என்னை மறந்துவிட்டாள். இப்படி இருக்கும் போது என் பெயர்கல்லறையில் மட்டும் இருந்தால் போதுமா உன்னைச் சொல் உன் மனைவி மக்கள் உள்ளத்தில் நீ இன்னும் பசுமையாக இருக்கிறாய். அவர்கள் கல்லறையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. அவர்கள் ஆவியாக மாறும் போது அதே நினைவோடு உன்னைப் பார்க்க வந்து விடுவர். என் குடும்பத்தினர் இப்போதே மறந்து விட்டனர். அவர்கள் ஆவியாகும்போது என் நினைவு அவர்களுக்கு வராது. அவர்கள் ஆவி என் ஆவியைத் தேடியும் வரமாட்டாது. காற்றோடு கலந்து பணம் இருக்கும் இடத்திற்குச் சென்ற பேயாக அலையும்!’ என்கிறது.
சின்னக்கண்ணுவின் ஆவி தலையைச் சொறிகிறது. உலகில் ஏழையாகப் பிறந்ததும் நல்லதுதான் என்று நினைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் நல்லதம்பியின் ஆவி கவலைப்படுவதைப் பார்க்கும்போது அதற்கும் வருத்தமாக இருக்கிறது.
‘நீங்கள் சொல்லுவது சரிதான் முதலாளி!’
‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்கிற பழமொழியை மாற்றித் ‘தொட்டிற் பழக்கம் இடுகாட்டிலும் இருக்கும்’ என்று சொல்ல வேண்டும்போல் இருக்கிறது? எத்தனைத் தடவை சொல்லிவிட்டேன் முதலாளி முதலாளி என்று அழைக்காதே என்று. மீண்டும் மீண்டும் சொல்கிறாயே. இப்போது நாம் இருவரும் சமம்!’ என்கிறது நல்லதம்பியின் ஆவி.. ‘சரி’ என்கிறது சின்னக்கண்ணுவின் ஆவி.
இடுகாட்டில் இருள் அகல்கிறது.
ஆவிகள் அடங்கிவிடுகின்றன.
பொழுது புலர்கிறது.
கனவுலகிலிருந்து விடுபட்ட நல்லதம்பி பதறியபடி எழுகிறார். போர்வையை இழுத்துப் போட்டுவிட்டு சுற்று முற்றும் பார்க்கிறார்.
இடுகாடு இல்லையே! வீடுதானே! அவரை அறியாமலே சொற்கள் வெளிவருகின்றன.
‘என்னங்க?’ என்று அவர் மனைவி வியப்பு மேலிட வினவுகிறாள்.
தன் மனைவியைப் பார்த்ததும் இந்த உலகில் இருப்பதாக முடிவுக்கு வருகிறார்.
பிறகு தான் கண்ட கனவை மனைவியிடம் சொல்கிறார்.
அவர் சொல்லியதை அவள் செவிமடுத்துக் கொண்டிருந்து, ‘பார்த்திங்களா எத்தனையா இருந்தாலும் சின்னக்கண்ணுவைப் போல் யாரையும் பார்க்க முடியாதுங்க! அடுத்த பிறவியில் கூட அவர் உங்ககூடத்தான் இருப்பார் போலிருக்கு. அதனாலே அவருக்கு உதவி செய்யுங்க. அவராலே நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். இன்னிக்கு வீடு வாசல், கடை என்று நமக்கு இருக்குன்னா அதுக்கு அவர் உழைப்பும் சரிபாதிக்கு மேலேயே இருக்கு. நீங்க மனம் வச்சு ஏதோ கொஞ்சம் கொடுங்க பாவம்’ என்கிறாள்.
நல்லதம்பி மனத்தில் ஈரம் தட்டுகிறது.
‘புதிதாக வாங்கப்போற கடையைச் சின்னக்கண்ணு பெயருக்கு எழுதி வச்சிடணும்னு நினைக்குறேன்’ என்கிறார் நல்லதம்பி.
அவர் மனைவி முகத்தில் முல்லை பூக்கிறது.
நல்லதம்பி எழுந்து பல்துலக்கிக் குளித்துவிட்டு வரச் செல்கிறார்.
அவள் பலகாரம் செய்வதில் ஈடுபடுகிறாள்.
நேரம் ஓடுகிறது.
நல்லதம்பி குளித்து விட்டு வந்ததும் அவருக்குத் தோசை எடுத்து வைத்து சட்டினி ஊற்றியபடி, ‘நீங்க நினைச்சிருக்கிறதைக் கேள்விப்பட்டதும் சின்னக்கண்ணு அசந்து போயிடுவார்!’ என்கிறாள்.
நல்லதம்பி, ‘ஆமா!’ என்று சிரிக்கிறார்.
காலைக்கடன்கள் ஒரு வழியாக முடிகிறது. கடைக்குச் செல்கிறார்.
சின்னக்கண்ணு முதலிலேயே வந்து கடையைத் திறந்து விட்டிருந்தார். ஊழியர்கள் பொருட்களை நிறுப்பதும், மடித்துக் கொடுப்பதுமாக இருக்கின்றனர். காலை நேரமாக இருந்தாலும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.
நல்லதம்பி கல்லாவில் போய் அமர்கிறார். கணக்குப் புத்தகங்களை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டு ‘கடவுளே முருகா!’ என்கிறார்.
சின்னக்கண்ணு பற்ற வைத்திருந்த ஊதுவத்தி மணம் கடையெல்லாம் நிறைந்திருக்கிறது.
தோளில் கிடந்த துண்டை மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு கல்லாவில் அமர்ந்த நல்லதம்பி பேங் கணக்குப் புத்தகத்தை எடுத்து இருப்பு எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கிறார். அவர் முகம் மலர்கிறது அதோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துவிட்டால் பெருசில் மூனு ஆகிவிடும் என்று அவர் மனத்தில் ஓடுகிறது.
நிமிர்ந்து சின்னக்கண்ணுவைப் பார்க்கிறார். அவர் மனம் கல்லாகி விடுகிறது. முதலீடு செய்தால்தானே முதலாளியாக முடியும். வேலைக்கு வந்தவன் எப்படி முதலாளியாக முடியும்? சின்னக்கண்ணு வேலை செய்யவே பிறந்தவன். அது அவன் தலையெழுத்து என்று எண்ணியவாறு பேங் கணக்குப் புத்தகத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு இழுத்துப் பார்க்கிறார். பெட்டி பூட்டப்பட்டு விடுகிறது. நல்லதம்பியின் மனத்தைப் போல்!
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
1 நிமிட கதைகள் 2
ராமன் செல்வராஜ்
October 24, 2026
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
