எட்றா வண்டியெ






(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
7. ஏய் நாஞ்சொல்றதைக் கேளு | 8. வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம் | 9. தொண தொணன்னு கூத்து கூத்துனுட்டு
“மாமா. அப்புறமென்ன இங்கயே ஏன் உட்கார்ந்துட்டு இருக்காட்டி? இனி அங்க போனாலும் எப்பிடியும் ஒரு மணி நேரம் ஆகும்ல. என்னோட சைக்கிள்லயும் சாமிநாதன் சைக்கிள்லயும் லைட்டு வேற இல்ல. மணி நாலரைக்கும் மேல ஆயிப் போச்சாட்ட இருக்குது” முருகேசன் தன் மாமனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பக்கதில் சின்னச்சாமியும் அவன் அம்மாவும் சாமிநாதனும் உட்கார்ந்திருந்தார்கள்.
எல்லாம் சரோஜாவின் ஏற்பாடு தான். சாமிநாதனிடம் சொன்ன மாதிரியே தம்பியை இரண்டு நாட்களுக்கு முன்பே சீனாபுரம் வந்து பார்த்து சாமிநாதனின் நிலைமையைச் சுத்தமாக எடுத்துச் சொல்லிவிட்டது. “வழுவுக்குள் முத்தண்ணன் பெண் இன்னுமா படிக்கப் போயிட்டிருக்கு?” என்று கேட்டது.

“படிப்பெல்லாம் முடிஞ்சு இப்ப ஒரு வருசமா பெருந்துறை பனியன் கம்பெனிக்கு அந்தப் புள்ளை போயிட்டு இருக்குது. செலவுக்கெல்லாம் காசு கையில வெச்சிட்டு இருக்காங்களா என்னன்னு தெரியல? போயி என்ன ஏதுன்னு கேட்கலாம். கேக்கறதுல தப்பொன்னும் இல்லதான். ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டாங்கன்னா நாம மறுபேச்சு பேச முடியாம போயிடுமேக்கா'” என்று சொன்ன தம்பிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சரோஜா உட்கார்ந்திருந்தது!
“ஆனது ஆகுது பார்த்துட்டே வந்துடறேன்டான்னு சாமிநாதன் கிட்ட சொல்லீட்டு வேற வந்துட்டேன்டா தம்பி” என்றது.
“கல்யாணக் காரியமக்கா.. நின்னது நிக்க மளார்னு எல்லாம் செஞ்சுட முடியுமா! நீ ஊட்டுக்குப் போ. நான் முத்தண்ணங்கிட்ட ரெண்டொரு நாள்ல என்ன ஏதுன்னு பேசீட்டு அவரு என்ன சொல்றாருன்னு நானு உனக்கு போனு பண்டிச் சொல்லிடறேன். இதை நீ போன்லயே என்கிட்ட கேட்டிருக்கலாம்” என்றே தம்பி சொல்ல அக்கா வீடு வந்துவிட்டது.
“தம்பி போன் பண்டிச் சொல்லுவான், நாம போய் புள்ளைய பார்த்துட்டு வந்துடலாம்” என்று தான் சாமிநாதனிடம் சரோஜா அக்கா சொல்லியிருந்தது.
சொன்னது மாதிரி தம்பி இரண்டு நாள் கழித்துச் சீனாபுரத்திலிருந்து கூப்பிட்டான். சமையல் அறையில் நின்று கொண்டிருந்த சரோஜா அக்கா அலறிக் கொண்டிருந்த செல்போனை எடுத்து யார் கூப்பிட்டார்கள் என்று பார்த்தது. போன் அலறல் சப்தம் கேட்டுத்தான் வீட்டுக்குள் நுழைந்து டிவி வைத்திருந்த டேபிள் மீதிருந்த செல்லை எடுத்துப் பார்த்தது. முருகேசன் வாசலில் சைக்கிள் துடைத்துக் கொண்டிருந்தான். “டேய் முருகேசா, உம்மொட மாமன் தான் கூப்புடறான்.ஆத்தா பரட்டத் தலச்சியாத்தா. இவன் இனி எம்பட காதுக்கு நல்ல சேதி சொல்லணுமாத்தா” என்று பேசிக் கொண்டே செல்போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தது.
“ஹலோ, அக்கா எங்க இருக்கிறே?”
“ஹலோ டேய் பாலா, என்னடா எழவு செல்லு இது. நீ பேசறது உட்டு உட்டுக் கேட்குதுடா. ஊட்டுக்கு உள்ளார நின்னுட்டுப் பேசுறியா? வெளிய வந்து நின்னுட்டு பேசுடா. ம். இப்பக் கேட்குது. சொல்லு என்ன விசயம்? போயி முத்தண்ணனைப் பார்த்தியா? என்ன சொன்னாரு?’
“முத்தண்ணனை நேத்துப் பார்த்துட்டேனக்கா. அவுரு ஆரம்பத்துல செரியா புடி குடுத்தே பேசுல”
“அப்புறம் நீ சொல்ல வேண்டீது தான? நல்ல பையன்னு.”
“ம். எல்லாம் சொல்லி, வயசுக்கு வந்த புள்ளைய எத்தனை நாளைக்கித்தான் சம்பாதிக்க அனுப்பிச்சுட்டு இருப்பேன்னு பேசி கடைசியா ஒரு வழியா சம்மதம் சொல்லீட்டாருக்கா”
“ஆனா நீ ராசிக்காரன்டா. குத்து மதிப்பா உன்னையப் புடிச்சா காரியம் ஆகும்னு நெனச்சேன். ஆயிப்போச்சு பாரு”
“ஆமா. நீ சாமிநாதனுக்குப் பொண்ணு வேணும்னு எல்லாம் எம்பட ஊடு தேடீடு வர்றே. கணக்கே என்னன்னு தெரியலியே?’
“அப்பனும் மவனுமே எத்தனை நாளைக்குத்தான்டா சோத்தை ஆக்கித் தின்னுட்டு இருப்பாங்க? பக்கத்துல தான நான் இருக்கேன். இதைப் பார்த்துட்டேதான இருக்கேன்”
“உன்னட ஊட்லயும் தான மாப்ள இருக்கான். அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு தோணலியா உனக்கு? நான் தான் இனி மாப்ள வேணும்னு உன் ஊடு தேடி வந்து கேட்கணுமா?”
“அடப் பாப்புரு! சரி, இதைய முடிச்சுக்குடு. சூட்டோட சூடா பண்ணிப் போடுவம். சரி, எப்ப சாமிநாதனைக் கூட்டிட்டு வர்றது?”
“இன்னைக்கே சாயந்தரமா கூட்ட்டிட்டு வா. காலைல வேலைக்குப் போற புள்ளைகிட்ட சாயந்தரம் நாலு மணிக்கே வந்துருன்னு முத்தண்ணன் சொல்லித்தான் உட்டுருக்குதாமா. சாமிநாதனுக்குப் புள்ளையப் புடிச்சிருந்தா கையோட மேக்கொண்டு பேசி முடிச்சிடலாம்.”
“சேரி.நான் கூட்டிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு அக்கா போனை வைத்தது. பிறகுதான் சைக்கிளிலேயே போய் வந்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள். “மூன்று பேர் போனால் காரியம் சுத்தப்படாதே!” என்று சரோஜா அக்கா சொல்லிற்று.
சின்னச்சாமியை தேடிப் பிடித்து நான்கு பேராய்ச் சேர்ந்து கொண்டார்கள். சின்னச்சாமி தான் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கேட்டான் “சாயந்தர நேரத்துல பொண்ணு பார்க்கலாமா?’ என்று.
“பொண்ணு பாக்கறதுக்கு நேரங்காலம் பார்த்துட்டு இருக்கப்புடாது” என்று சரோஜா அக்கா சொல்லியது. இப்போது அரை மணி நேரமாய் பாலன் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
“போலாம் மாமா. இங்கேய ஏன் உட்கார்ந்துட்டு இருக்காட்டி” முருகேசன் மறுபடியும் கேட்டான்.
“அட, சாமிநாதன் கூட கம்முன்னு உட்கார்ந்திருக்கான் மாப்ள. நீங்களே பொண்ணு பாத்துடுவீங்களாட்ட இருக்கு”
“ஆமான்டா பாலா.. இருட்டு கட்டக்கட்டப் போனம்னா பூச்சீக வேற கண்ணுல உழுவும். சரி எந்திரி, அவிங்க ஊட்டுலயே போயிப் பேசீட்டு உட்கார்ந்துக்கலாம்”
“இதென்னக்கா, ரெண்டு வீதி தாண்டி மூனாவுது வீதியில இருக்கறாங்க. ரெண்டு எட்டுல போயிடலாம். சரீ, நீங்க ரொம்ப அவசரத்துல இருக்கீங்க. நடங்க போலாம்” என்று துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு பாலன் கிளம்ப, இவர்களும் எழுந்து அவன் பின்னாலேயே சென்றார்கள். பக்கத்துச் சந்திலிருந்து பூனை ஒன்று மியாவ் என்று கத்திக் கொண்டு குறுக்கே ஓடியது. பின்னாலேயே சைக்கிள் டயர் ஒன்று உருண்டு வந்து பாதையில் வட்டமிட்டுப் படுத்தது. கையில் தடிக்குச்ச்சியோடு ஒரு சிறுவன் ஓடிவந்து டயரைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.
“பூனை கத்தீட்டு போவுதுன்னு மெரண்டுக்காதே அக்கா. எனக்குப் பூனை ரொம்ப ராசி. பல தடக்கா எனக்குக் காரியம் நல்லவிதமா ஆகி இருக்குது. செம்பூத்து குறுக்கால போனாத்தான் ஊட்டுக்கே திரும்பிருவேன். பொழுதுக்கும் ஒரு காரியம் உருப்படி ஆகாது. நான் தான முன்னால நடக்கிறேன். எனக்கு ரொம்ப திருப்தி. வாங்க. கல்லைப் பார்த்து வாங்க. இதான் முத்தண்ணன் ஊடு” என்று செருப்பைக் கழட்டி விட்டுவிட்டு, “முத்தண்ணா..” என்று சப்தம் போட்டான் பாலன்.
“த்தாரு, பாலனா? வாப்பா வாப்பா. ஊட்டுக்குள்ளார கூட்டிட்டு வா அவிங்களை. வாங்க வாங்க!” வீட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு வணக்கம் வைத்து வரவேற்றார் முத்தண்ணன்.
“முன் ஏற்பாட்டோட பாய் எல்லாம் விரிச்சு வச்சுருக்கீங்ளாட்ட இருக்குதுண்ணா?”
“அப்புறம் வரச் சொல்லியாச்சு. புள்ளை இப்பத்தான் போன் பண்டுனா. கம்பெனிய உட்டு வெளிய வந்துட்டாளாம். இனி என்ன பஸ் ஏறியாச்சுன்னா பத்து நிமிசத்துல வந்துடுவா. அலேய், பாரு இவிங்க வந்துட்டாங்க. தண்ணி கொண்டாந்து குடு” வீட்டினுள் பார்த்துச் சப்தம் போட்டார். அந்த அம்மாள் உள் அறையிலிருந்து இவர்களை எட்டிப் பார்த்து வணக்கம் வைத்தது. பிறகு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது.
“அப்புறம்.. இன்னிக்கி எங்கீம் போவலீங்ளாண்ண்ணா?”
“தறிக்குத் தான் போயிருந்தேன். மூனு மணிவரைக்கும் ஓட்டிட்டு நிறுத்தீட்டு வந்துட்டேன். இவ தார் போட்டுட்டு இருந்தா. வாடி போலாம்னு கூட்டிட்டு வந்துட்டேன்”
“மாப்பிள்ளை யாருங்க?” ரெண்டு பேரு இருக்கீங்க. யாருன்னு எனக்குத் தெரியலியே!” அந்த அம்மாள் காலி சொம்பை சரோஜாவிடம் வாங்கிக் கொண்டு கேட்டது.
“எம்பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கறது எம்பட பையனக்கா. இவங்கப்பன் கலராப் போயிட்டான். செவப்பா உட்கார்ந்துட்டு இருக்காப்லைல்ல. அதான் உங்க மாப்பிள்ளை. என்ன சதை புடிக்காம இருக்காப்லையேன்னு பார்க்காதீங்கக்கா. உங்க பிள்ளை வந்து மூனு வேளையும் வடிச்சுக் கொட்டினாள்னா பூசுனாப்ல ஆயிடுவாப்ல”
“சோறெல்லாம் எங்க புள்ளை ஒணத்தியா திங்கற மாதிரி செஞ்சு போடுவாங்க. ரசம் வெச்சான்னு வெய்யுங்க. இவுரு தனியா ரெண்டு டம்ளர்ல கேட்டு வாங்கிக் குடிப்பாரு. தெங்கியோ இன்னம் காணம் அவளை. பொட்டிக் கடைக்கிட்ட போயி நின்னு பார்த்து தான் கூட்டிட்டு வாங்க போங்க. இன்னுமா பஸ் ஏறி வர்றா?”
“எம்பட செல்லுல வேற காசில்ல. இல்லீனா கூப்புட்டுப் பார்க்கலாம்” என்று முத்தண்ணன் சொல்லியது.
“நெம்பரை சொல்லுங்க. இதுல அடிச்சாப் போவுது” என்று சாமிநாதன் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்தான். முத்தண்ணன் நெம்பர் சொல்லியதும், இவன் நெம்பரைப் போட்டு அழுத்தினான். எதிர்முனையில் கடவுள் தந்த அழகிய வாழ்வு என்று பாடியது.
“இந்தாங்க ரிங் போவுது எடுத்துப் பேசுங்க” என்று சாமிநாதன் செல்லை முத்தண்ணனிடம் நீட்டினான்.
“அம்மிணி எங்க உன்னை இன்னும் காணம்? பஸ் சத்தம் கேட்குகுது. சேரி சேரி காணமுன்னு கூப்பிட்டேன். பஸ்சு சேனடோரியம் தாண்டிடுச்சா! இந்த நெம்பரா? இது தான் மாப்பிள்ளை போன்! வா வா!” என்றவர் செல்போனை சாமிநாதனிடமே நீட்டினார்.
“புள்ளை பஸ்சுல வந்திட்டு இருக்குமாட்ட!”
“ஆமாம் பாலா. சேனடோரியம் தாண்டி வந்தாச்சாமா. வந்துருவா”
“ஏம் முத்தண்ண்ணா, என்ன கெழமெ லீவு உடறாங்க”
“ஞாயத்துக்கெழம தான் புள்ளைக்கி லீவு. காத்தால எட்டு மணிக்குப் போனாள்னா நைட்டு ஊட்டுக்கு வர்றப்ப மணி எட்டரை ஆயிடுது. சாயந்தரம் இந்த மாதிரி நேரத்துல வர முடியுமா சுமதின்னு தான் கேட்டேன். என்ன ஏதுன்னு கேட்டா. இந்த மாதிரின்னு சொன்னேன். கம்பெனில வேலையும் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்குதுன்னா. அவ வந்துடறேன்னு சொன்னங்காட்டித்தான் உனக்கே சொன்னேன் பாலா”
“புள்ளை வரட்டும். அப்புறம் எப்பிடி பண்டலாம் என்னன்னு நீங்க சொல்லுங்க”
“எல்லாம் திட்டம் இருக்குது பாலா. பெருசாவா பண்டப் போறோம். நமக்குத் தக்கனாப்ல நாம செய்வோம்ல. புள்ளைய எதுக்கும் பார்த்துக்கட்டும் மொதல்ல. புள்ளையப் புடிச்சிருக்குதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டாப்லைன்னா படபடன்னு நாம நம்ம காரியத்தைப் பேசிட வேண்டீது தான். இந்த மாசத்துல இன்னம் இருவத்தோரு நாள் இருக்குது. அதுக்குள்ள காரியத்தை முடிச்சுக்கலாம். என்ன நாஞ்சொல்றது?” என்ற முத்தண்ணன் மூக்குப் பொடி டப்பியை எடுத்து மூடியைத் திறந்து விரலில் எடுத்து மூக்கில் சரீர் என உறிஞ்சிக் கொண்டார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே தோள்பை மாட்டியபடி சுமதி வீட்டுக்குள் நுழைந்தாள். “இதா சுமதி வந்தாச்சு. பின்னாடி போய் முகம் கழுவீட்டு வாம்மா” என்றார் முத்தண்ணன். சுமதி உட்கார்ந்திருந்த யாரையும் பார்க்காமலேயே சென்றுவிட்டாள். சுமதி இளநீல வர்ணத்தில் சுடிதாரும் வெள்ளைத் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். மாநிறம் தான் என்று சாமிநாதனுக்குப் பட்டது.
“சுமதி முகம் கழுவீட்டு வந்தாள்னா காபிய குடுத்து உடு. நீ அந்தத் தட்டத்துல மிச்சரும் ஜிலேபியையும் எடுத்துட்டு வா” என்று உள்புறமாக முகத்தைத் திருப்பிச் சத்தமிட்டார். இவர் சொல்லி முடிக்கும் போதே மிச்சர், ஜிலேபி தட்டத்தை அந்த அம்மாள் கொண்டுவந்து இவர்களருகே வைத்துவிட்டுத் திரும்பவும் வீட்டினுள் சென்றுவிட்டது.
“எடுத்துச் சாப்பிடுங்க, சாப்பிடுங்க”
“மொதல்லயே ஏற்பாடெல்லாம் பண்ணி வச்சிட்ட்டீங்ளாட்ட?’ என்றான் பாலனும்.
“இதுக்குப் போயி என்ன ஏற்பாடு பண்ட வேண்டியிருக்கு? கடைவீதிக்குப் போனா வாங்கீட்டு வந்தறதாச்சு’
“பெரிய பொண்ணை எங்கக் கட்டிக் குடுத்திருக்கீங்க?’
சரோஜா அக்கா பேச்சுக் கொடுத்தது.
“காஞ்சிக் கோயிலுக்குத்தான் குடுத்துச்சு அம்மிணி. மாப்ள லாரிக்குப் போயிட்டு இருக்காப்ல”
“எத்தன பவுனு போட்டுத் தாட்டி உட்டீங்க?”
“அஞ்சு பவுனுதான். பெருசாப் பண்றதுக்கு வக்கு இருந்தாத்தான. என்ன கொடுமைன்னா கட்டிக்குடுத்து அஞ்சு வருசம் ஆயிப்போச்சு. இன்னும் ஒரு புழு பூச்சிகூட அவ வவுத்துல காணம்”
“பாத்துட்டே இருக்காட்டி இப்பத்தான் ஊசியப் போட்டுப் பெத்துக்குறாங்ளே?”
“மாப்பிள்ள அப்பிடித்தான் சொல்றாப்லயாமா. இவதான் இன்னம் பார்ப்போம். இப்ப என்ன வயசா ஆயிப் போச்சுங்றாளாமா. ரெண்டு வாய் எடுத்துப் போட்டீங்க. நிறுத்தீட்டிங்ளே? சிக்கு வாசம் அடிக்குதா?”
“நல்லாத்தான் இருக்குது” என்று சரோஜா அக்கா எடுத்துக் கொண்டது. தட்டத்தில் காபி டம்ளர்களை எடுத்துக் கொண்டு சுமதி இவர்களருகே வந்து குனிந்த வாக்கில் எடுத்துக் கொள்ளச் சொல்லி நீட்டினாள். சாமிநாதன் தான் முதலில் கை வைத்து டம்ளரை எடுத்தான்.
“இப்ப எடுத்தாப்லைல்ல அதான் மாப்ளை அம்மிணியோவ்” என்று பாலன் குரல் கொடுத்தான். சுமதி அந்தச் சுடிக்குள் சீலைக்கு மாறி இருந்தாள். முகத்தில் பவுடர் பூச்சு அதிகமாயிருந்தது. காலில் கொலுசு முளைத்திருந்தது. கைகளில் கண்ணாடி வளையல்கள் சலசலத்தன. எல்லோரும் ஆளுக்கொரு காபி டம்ளர் எடுத்துக் கொண்டார்கள். எல்லோரும் சாமிநாதன் முகத்தையே பார்த்தார்கள். அவன் முகமும் மலர்ச்சியாகவே இருந்தது. காலியான காபி தட்டத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சுமதி ஓரமாய் நின்றிருந்தாள். சுமதிக்கு இது தான் முதல்முறை. கொஞ்சம் வெட்கமாய்த்தான் இருந்தது.
எல்லோரும் காபியைக் குடித்து முடித்து டம்ளரை சுமதியை நோக்கியே நீட்டினார்கள். சுமதி எல்லா டம்ளர்களையும் வாங்கிக் கொண்டு வீட்டினுள் சென்றாள். சரோஜா அக்கா தான் ஆரம்பித்தது.
“ஒரு பேச்சுகூடப் பேசாம காபிய நீட்டுச்சு, நின்னுச்சு, வாங்கீட்டுப் போயிடுச்சு பொண்ணுப் புள்ள.. பேசவே இல்ல?”
“ஊமைன்னு நெனைச்சுட்டீங்ளா? நீங்க எதாச்சும் என்னைக் கேட்டிருந்தா தான நானும் பேசியிருப்பேன்” என்று சுமதி வீட்டினுள்ளிருந்து வெளியே கதவுக்கருகில் நின்று சொன்னாள்.
“சரி, அதனால என்ன உடு சாமி” என்றே சரோஜா அக்கா சொன்னது.
“அப்புறம் மாப்பிள்ளை சொன்னா சரி. இந்த சினிமாப் படத்துல காட்டுற மாதிரி நீங்க தனியாப் போயி பேசணுமா?” என்றார்
“அதெல்லாம் எதுக்குங்கண்ணா? ஆனா காலமும் மாறிட்டு தான் வருது” அதற்குள் சரோஜா அக்கா சாமிநாதனிடம் கேட்டு தெரிந்து கொண்டது.
“சரி, எங்க சாமிநாதனுக்குப் பொண்ணப் புடிச்சுப் போச்சு. மேல பேசுங்க”
‘புடிச்சுப் போச்சுன்னா சரி. மேல பேசிற வேண்டீது தான். பெரிய புள்ளைக்கி செஞ்ச மாதிரியே சின்னவளுக்கும் பண்ணிப் போடறேன். கல்யாணத்தை இங்க நீங்க வர்ற வழியில இருந்துச்சே.
பரட்டத்தலைச்சி கோயில்லயே வச்சுக்கலாம். மண்டபமும் இருக்கு. போதும். நாளும் கெழமையையும் இங்க ஜோசியகாரர்கிட்ட கேட்டுக்கலாம். மாப்பிள்ளை என்ன குலம்?”
“மாப்பிள்ளை குலம் என்ன குலம்? வட்டியான் குலம் தானுங்க. உங்குளுது?”
“எங்களுது தாசிரான் குலம். மொத மாப்பிள்ளையும் வட்டியான் குலம் தான். சகளைங்க பங்காளி ஆயிடுவாங்க. சரி, இந்த மாசக் கடைசிக்குள்ளாரவே வச்சுக்கலாம். பத்திரிகை இங்க பெருந்துறையில் குடுத்து அடிச்சிடலாம். எங்களுக்கென்ன நூறு பத்திர்கை இருந்தாப் போதும். உங்களுக்கு?”
“நூறு போதும். நெறையா அடிச்சு வெச்சுட்டு என்ன பண்றது? மிச்சம் ஒன்னு ரெண்டு அப்படி எச்சுபுச்சா இருந்தா வெத்தலை பாக்கு குடுத்து அழைப்பு போட்டுக்கலாம்.” என்றது சரோஜா.
“சரி, அப்ப படபடன்னு நாளைல இருந்தே ஏற்பாடு பண்ணிடலாம்”
“பொண்ணு புள்ளைக்கு மாப்பிள்ளையப் புடிச்சிருக்குதான்னு ஒரு வார்த்தை கேட்காம உட்டுட்டீங்ளே?”
“அவளை என்ன கேட்கறது? நாங்க சொன்னா சரி”
“செரி, அப்புறம் நாங்க புறப்படறோம். டேய் பாலா, இருட்டு கட்டீருச்சுன்னா நாங்க போயிச் சேரணும்ல. நாளைக்கி அவருகூட இருந்த எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்க. கலியாணச் செலவு ஆளுக்குப் பாதி போட்டுக்கலாம், எந்திரி” அக்கா அவசரப்படுத்தக் கும்பிடு போட்டுவிட்டு எழுந்து எல்லாரும் புறப்பட்டார்கள்.
ஸ்ரீ முருகன் துணை திருமண அழைப்பிதழ்
அன்புடையீர்,
சுபமிகு சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 20ஆம் நாள் (03.04.2009) திங்கட்கிழமை பஞ்சமி திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் மேஷ லக்கினத்தில்
மூங்கில்பாளையம் சீனாபுரம் மாசிலாமணி (லேட்) தாயாள்
(லேட்) பேரனும் திரு சுப்பன்- ராசாத்தி அவர்களின் குமரனுமான திருநிறைச் செல்வன்
எஸ்.சாமிநாதன்
முருகன் (லேட்) மாகாளி(லேட்) பேத்தியும் திரு. முத்தன் – சரஸா அவர்களின் குமாரத்தியுமான திருநிறைச்செல்வி
எம். சுமதி
ஆகியோர் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி திருமணம் சீனாபுரம் பரட்டத்தலைச்சி கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் அன்புள்ள
எம். முத்தன் – சரஸா,
சுப்பன் – ராசாத்தி
கந்தன் – கலா
மூங்கில்பாலையம்
சீனாபுரம்.
(இரு இல்ல அழைப்பு)
(குறிப்பு: பெருந்துறையிலிருந்து சீனாபுரத்திற்கு பஸ் வசதி உண்டு)
சாமிநாதன் கட்டிலில் கிடந்தான். இடையில் இரண்டு முறை சுமதியுடன் இரவு நேரத்தில் கல்யாண விசயமாகப் பேசுவது போல் பேசி இருந்தான். சுமதி இவனுக்குப் புதுவிதமாய்த் தெரிந்தாள். ஏதாவது ஜாலியாய்ப் பேசலாம் என்று நினைத்தாலும் “அப்பா வந்துட்டாரு” என்று சுமதி போனைக் கட் செய்து விடுகிறாள். என்ன மாதிரி பெண் இவள் என்று சாமிநாதனுக்குக் குழப்பமாய் இருந்தது. திருமணத்திற்கு இன்னும் இரண்டே இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன. கடந்த நான்கு நாட்களாகத்தான் சுமதி வேலைக்குச் செல்வதில்லையாம். வீட்டில் சப்தம் போட்டுத்தான் வேலைக்கு விடுப்பு போட்டிருக்கிறாளாம். இங்கே கட்டிக் கொண்டு வந்தாலும் பஸ் ஏறிவிடுவாளோ என்று தான் சாமிநாதனுக்குத் தோன்றியது. சரி, வேலைக்குப் போகிறேன் என்கிறவளை ஏன் வேண்டாம் என்று சொல்லாட்டி என்றும் நினைத்தான். இடையில் ஒருதரம் பத்திரிகை வாங்க அவள் வீட்டுக்குச் சென்றபோது வேலைக்குப் போய்விட்டதாய்க் கூறினார்கள். சுமதியைப்
பெண் பார்க்க சென்றபோது பார்த்தது தான். அவள் முகம் கூட இவனுக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. கூப்பிடலாம் என்று தான் யோசித்தான். அதன்படியே சுமதியின் செல்லிற்கு அழைத்தான்.
“ஹலோ சொல்லுங்க. நான் கோவில்ல இருக்கேன். அப்பா நெம்பருக்குப் பண்ணுங்க”
“உன்கிட்ட பேசுறதுக்குத்தான் பண்ணினேன்”
“என்கிட்டயா? என்கிட்ட என்ன பேச்சு? அப்பாவுக்குத் தெரிஞ்சா சத்தம் போடும்”
“தெரிஞ்சாத்தானே?”
“சரி பேசுங்க”
“உன் முகமே எனக்கு ஞாபகம் வரமாட்டீங்குது”
“சாவுறவரைக்கும் மறக்காத முகமா என் முகம்! இன்னும் இரண்டு நாள்ல ஆயிடும்ல”
“ஒரே ஒரு விசுக்காத்தான் உங்க வீட்டுல பார்த்தது. மறூபடி ரெண்டு விசுக்கா உங்க வீடு வந்தேன். வேலைக்குப் போயிட்டதா சொன்னாங்க”
“மூனு நாள் லீவு போட்டதுக்கே ஒரே போர் அடிக்குது”
“போர் அடிக்குதா? டிவி இருக்குதுல்ல. பார்த்துட்டு இருக்க வேண்டிதுதான?”
“அதையே எவ்ளோ நேரம் பார்க்குறது? தலைவலிதான் வருது. இப்ப இல்ல. அனாசின் போட்டு வந்தேன், இப்போ தேவலை. என பண்ணீட்டு இருக்கீங்க?”
“படுத்துட்டேன்’
“என்னது? எட்டு மணிக்கே படுத்தாச்சா?’
“பின்ன? காலையில இருந்து தூரத்துச் சொந்தத்துக்கெல்லாம் எங்கம்மா பத்திரிகை குடுத்துடலாம், கல்யாணத்துக்கு வந்தாலும் வராட்டியும் குடுப்போம்னு அவினாசி, கருமத்தம்பட்டின்னு ஒரே அலைச்சல்”
“எங்க வீட்டுல எல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னயே குடுத்து முடிச்சுட்டாங்க”
“எங்கப்பன் இப்பத்தான் ஊருக்குள்ள பத்திரிகை குடுக்க சரோஜா அக்காவோடப் போயிருக்குது.”
“அது உங்க சொந்த அக்காவா?”
“ஏன் கேட்கறே?”
“இல்ல சும்மாத்தான் கேட்டேன்”
”சொந்த அக்கா இல்ல. அப்பிடியே கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழக்கம் ஆயிடிச்சு.”
”உங்க வீடு எங்க வீடு மாதிரி இருக்குமா?”
”அதே மாதிரிதான், என்ன உங்க வீட்டுல தெற்க பார்த்த மாதிரி வாசல் இருக்குது. அதையவே திருப்பி வச்ச மாதிரிதான் வடக்கே பார்த்து எங்க வீடு இருக்கும்.”
“உங்க ஊர்ல இருந்து ஒரு பிள்ளைங்ககூட எங்க கம்பெனிக்கு வர்றது இல்ல”
“ஏன்? என்னையப் பத்தி விசாரிக்கறதுக்கா?”
”உங்களைப் பத்தி விசாரிச்சு இனி நான் என்ன பண்ணப் போறேன்?”
“பொய் சொல்லக்கூடாது”
“இது என்ன பொய்யி. ஒருத்தரும் வர்றதில்லைன்னு சொன்னேன்.”
“எல்லாரும் இங்க ஊத்துக்குளி போற வழியில இருக்கிற கெம்பெனிக்குப் போறாங்க. கம்பெனி பஸ்ஸே எங்க ஊருக்கு வருது.”
”எத்தனை மணி நேரம் ஷிப்டு?”
“ஒன்றை ஷிப்டுதான். நைட்டு எட்டரைக்குத்தான் வருவாங்க. என்னோட முகமாவது உனக்கு ஞாபகம் இருக்குதா?”
“உங்களை நான் பார்க்கவே இல்லை. பார்த்திருந்தா தானே ஞாபகம் இருக்கிறதுக்கு?”
“நான் வந்த அன்னிக்குக் காபி குடுத்தீல்ல. அப்போ பார்த்திருப்பீல்ல”
“காபி குடுத்தேன். நின்னேன். பார்க்கலை நான்.”
“அப்புறம் உன் சம்மதம் இல்லாம உன் அப்பா ஏற்பாடு பண்ணுவாரா”
“அவருதான் ஏற்பாடு பண்ணினாரு. எங்க வீட்டுல அவரு வச்சது தான் சட்டம். அம்மாவே பயந்துட்டு தான் இருக்கும்.”
“அப்பாவைக் கண்டா நீயும் பயந்துக்குவியா?”
“ஆமா தடி எடுத்தாருன்னா கண்ணுமண்ணு தெரியாம அடிச்சுடுவாரு. அதுக்குப் பயந்துட்டே பொட்டாட்ட இருந்துக்குவேன்.”
“சரி நீ மட்டும் தனியாவா இப்ப கோவில்ல இருக்கே?”
“ஆமா உள்ளார பூசாரிகிட்ட பேசிட்டு இருக்குது. ஏன் தனியா வந்து உட்கார்ந்துட்ட்டு இருக்கேன்னு நினைச்சீங்ளா?”
“அப்படித்தான் நினைச்சேன்”
“தனியா எல்லாம் இருட்டுல எங்க வீட்டுல உடமாட்டாங்க”
“வேலைக்கு மட்டும் தனியா உட்டுருவாங்க?”
“உள்ளூர் புள்ளைங்க எல்லாரும் ஒட்டுக்காத்தான் போயிட்டு வந்துட்டு இருக்கோம்.”
“நீ உன் பிரண்ட்ஸுக்கு எல்லாம் பத்திரிகை குடுத்துட்டியா?”
“நான் யாருக்கும் குடுக்கலை”
“அதே அப்படி? அவங்க வந்து வாழ்த்த மாட்டாங்ளா?”
“அவங்க வாழ்த்தினா என்ன வாழ்த்தாட்டி என்ன? நீங்க உங்க பிரண்ட்ஸ்களுக்குக் குடுத்தாச்சா? பார்ட்டி கேட்டாங்ளா? நீங்க குடுக்கணூமா? அவுங்க உங்களுக்கு குடுப்பாங்ளா?”
“நான் பத்திரிகை குடுத்துட்டேன். பார்ட்டி எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டேன்”
“உடமாட்டாங்களே!”
“காசு கல்யாணத்துக்குச் செலவாயிட்டு இருக்குதுல்ல. பார்ட்டின்னா எப்படியும் தனியா ரெண்டாயிரம் செலவாகும்.”
“நீங்க குடிப்பீங்ளா?”
“எப்பாச்சிம் சடவா இருந்தா குடிப்பேன்”
“இப்ப குடிச்சுட்டுப் பேசிட்டு இருக்கீங்ளா?”
“இப்பல்லாம் இல்ல. குடிச்சா உனக்குப் புடிக்காதா?”
“எனக்கென்ன வந்துச்சு? குடிச்சா உங்க ஒடம்புதான கெடும். எனக்கா கெடும்”
“பரவாயில்ல”
“என்ன பரவாயில்ல?”
“அப்படிச் சொல்றதுக்குப் பொண்ணு வேணும்ல?”
“இப்படி யாரும் உங்கிட்ட சொன்னதில்லையா?”
“எனக்கு யாரும் குடின்னும் சொன்னதில்ல, குடிக்க வேண்டாம்னும் சொன்னதில்ல”
“உங்க ஊருக்குப் பக்கத்துல தான் என்னமோ பாறை இருக்குது?”
“பாறையா? குன்னாங்கல் பாறையச் சொல்றியா?”
“ஆமாம். அதே தான் பெரிய்ய பெரிய்ய உருண்டைப் பாறைக”
“உனக்கெப்படித் தெரியும்? நீ வந்திருக்கிறயா?”
“போன வருசம் பூப்பறிக்கிற நோம்பியனைக்கி நானும் ன்னொரு பார்ட்டியும் அதே வந்தோம். ஆனா செரியான கூட்டம்.”
“பார்ட்டின்னா ஆம்பளையா?”
“சந்தேகம் வந்திருச்சா?”
“பார்ட்டின்னு நீதான சொன்னே?”
“வந்து கரும்பு தின்னுட்டு, கடையில வளையல், ஸ்டிக்கர் பொட்டு, அது இதுன்னு வாங்கீட்டு வந்தோம். அதென்ன அப்படி அந்த ஊர்ல பாறையில உட்கார்ந்துட்டு பூப்பறிக்கிற நோம்பிய கொண்டாடுறாங்க?”
“ஆது முன்னத்திலிருந்தே அப்படித்தான். எல்லா ஊர்ல இருந்தும் சனம் கூடிக்கும்”
“அந்த ஊர் பேர் என்ன? என்னமோ சொன்னாங்க”
“கள்ளியம்புதூர். அந்த அன்னைக்கு மட்டும் தான் சனம் கூடும். அப்புறம் வருசம் பூராவும் ஒரு ஈ காக்கா கூடப் போவாது. வேற எடம் இல்லிங்றதுனால அங்க கூடிக்குது.”
“நீங்க போவீங்களா? நெறையப் பொண்ணுக வர்றாங்ளே?” “இவத்திக்கி வெச்சுட்டுப் போகாம இருப்பனா? பசங்களோட போவேன்”
“எல்லாரும் பொண்ணுங்களை சைட் அடிப்பீங்க. அப்பிடித்தான?”
“சைட்டா? நாங்க பசங்க கம்முன்னு இருந்தாலும் பொண்ணுங்களே சைட் அடிப்பாங்க! சிரிப்பாங்க! எந்த ஊரும்பாங்க!’
”பார்த்தேன்”
”என்னையா”
“உங்களை யாரு சொன்னா? அப்பிடித்தான் அங்க நடந்துட்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இப்ப நீங்க எதுக்கால வந்தாலும் கூட எனக்கு யார்னே தெரியாது.”
“பக்கத்துல எதுக்கால தான் நின்னுட்டு இருக்கேன்”
”ஐயோ எங்கே?”
“சும்மா சொன்னேன் சுமதி”
“நான் பயந்தே போயிட்டேன்”
“எதுக்குப் பயம்? இன்னம் ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணப் போறவன் நானு. சரி ஒரம்பரை சனம் வந்திடுச்சா உங்க வீட்டுக்கு?”
”அக்கா மட்டும் வந்திருக்குது. மச்சான் கல்யாணத்தனைக்கு தான் லாரியில இருந்து இறங்குறாராமா. மத்த சனம் எல்லாம் நாளைக்குச் சாயந்திரமே வந்து இறங்கிடும். உங்க வீட்டுல?”
“எல்லாம் நாளைக்குச் சாயந்திரம் தான். மாமன் லோக்கல்ல லாரி ஒன்னுக்கு சொல்லியிருக்காரு. எப்படியும் நாளைக்கு இங்க எங்க வீட்டுல சாப்புட்டுக் கிளம்புறப்ப பத்தாயிடும். அங்கக் கோயிலுக்கு பத்தரைக்குள்ள வந்திடுவோம். உனக்குச் சீரே அந்தன்னைக்குத் தான் பண்றாங்களாமா”
“ஆமாம். இப்புடி பொண்ணு வேணும் பொண்ணு வேணும்னு பறந்துட்டு வந்து விழுந்தா எல்லாம் ஒரே நாள்ல தான் எங்க அம்மா, அப்பா பண்டியாகணும். சீர் செய்யாம பின்ன கட்டிக் குடுத்துருவாங்களா?”
“பறந்துட்டு வந்து விழுந்தமா?”
“பின்ன இல்லையா? வந்த சுடிக்கு எல்லாக் காரியமும் நடக்குதுல்ல. ஊருக்குள்ள அஞ்சு பொண்ணுக என்னைவிட வயசு சாஸ்த்தி. இருபது முப்பது மாப்பிள்ளை வந்துட்டுப் போயிட்டாங்க. ஒருத்திக்கும் இன்னும் கல்யாணமில்ல. எனக்குன்னா பார்த்த மொதல் மாப்பிள்ளையே ரெடி ஆயிடுச்சுன்னு பொறாமைல சுத்துறாங்க. எங்கம்மா தெனமும் படியில் உப்பு மொளகா போட்டுச் சுத்திக் கொண்டி அடுப்புல போடுது”
“கண்ணு பட்டுக்குமுன்னா? நல்லது தான பண்றாங்க. உனக்குப் புடிக்காத மாதிரி பேசுறே?”
“எனக்கு புடிக்குதா இல்லையான்னு என்னை எல்லாம் யாரும் கேட்கவே மாட்டாங்க. எங்க வீட்டுல”
“சின்ன வயசுல இருந்தே அப்புடித்தானா?”
“ஆமாம். பச்சை கலர்ல சுடிதார் வேணும்னா செவப்பு கலர்லதான் எடுத்துக் குடுப்பாங்க. நான் கேட்குற கலர் கெடைக்கது.”
“நீயே சம்பாதிக்கறே. நீயே எடுத்துக்க வேண்டிதுதான?”
“என் சம்பளப் பணத்தைத்தான் பைசாக் கொறையாம வாங்கிக்கறாங்ளே? என்னோட காசை வச்சுத்தான் இந்தக் கல்யாண ஏற்பாடே நடக்குது.”
“உன்கிட்ட வாங்கி உனக்கே செலவு பண்றாங்க?”
“அதுக்கு எதுக்கு என்னைப் பெத்தெடுத்தாங்க?”
“இதுக்கெல்லாம் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. நான் மொதல்லயே நடுங்கீட்டு இருக்கேன்”
“நடுங்கீட்டா? பனிக்காலம் போனது எப்போ இன்னுமா நடுக்கம்?”
“ஆந்த நடுக்கம் இல்ல எனக்கு. கூட்டத்து முன்னாடி நின்னு தாலியக் கட்டணும்ல நானு. பயத்துல மூனு முடிச்சு போடறதுக்கு ரெண்டோடயே நிறுத்தினாலும் நிறுத்திடுவேன்”
“நீங்க ரெண்டு முடிச்சு போட்டாலோ பயத்துல நாலைஞ்சு முடிச்சுப் போட்டாலோ எனக்கொன்னும் இல்ல.”
“ஏன் சுமதி இப்படியே பேசிட்டு இருக்கே?”
“நல்லாத்தான பேசிட்டு இருக்கேன்?”
“எனக்கென்னமோ கல்யாணப் பொண்ணு பேசுற மாதிரியே தெரியலை”
“பின்ன தங்கச்சிகிட்ட பேசுற மாதிரி இருக்கா?”
“என்னைய பிடிக்குதா? பிடிக்கலையா? சொல்லு”
“எங்கப்பா அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு. நான் தான் நீங்க அழகா? சிவப்பா? கருப்பா? பார்க்கவே இல்லையே!”
“என்னையச் சரியா பார்க்கலை சரி. என்னைக் கூப்பிடலாம்ல. செல் இருக்குதில்ல?”
“எங்க கூப்பிடறது நான்?”
“ஏன் கம்பெனிக்குக் கூப்பிடறது.. இல்ல வீட்டுக்குக் கூப்பிடறது”
“ஐயோ, இது வேற வம்பா? பறப்பெடுத்தவன்னு என்னைச் சொல்லிடுவாங்க”
“சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. நரம்பில்லாத நாக்கு எதை வேணாலும் பேசத்தான் செய்யும்”
“அதுவும் சரிதான். இனி என்ன ரெண்டாம் நாள் காலைல கல்யாணம்”
“நீ யாரையாச்சும் லவ் பண்றியா? இருந்தா சொல்லிடு சுமதி”
“அதெல்லாம் இல்லைங்க. வீட்டுல அப்பா அம்மாவுக்கு ஏன் தான் இத்தனை அவசரம்னு தான் தெரியல. எனக்கு வயசு பதினெட்டு தான் ஆச்சு. என்ன அவசரம் எனக்கு? இருபதுக்கும் மேல பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தேன். அந்த நெனப்புல மண்ணைக் கொட்டிட்டாங்க”
“அதென்ன இருபதுக்கும் மேல? எப்ப பண்ணினாலும் கல்யாணம் தான?”
“ஒரு ரெண்டு வருசமாச்சும் ஜாலியா இருக்க வேண்டாமா? பதினெட்டு வயசுலயே புள்ளை பெத்துட்டு இடுப்புல தூக்கி வெச்சுட்டு சுந்த்தோணுமா?”
“அதுக்கா பயந்துட்டு இருக்கே? சரி உடு. ரெண்டு வருசம் கழிச்சுக் கொழந்தை பெத்துக்கலாம். நீ ஜாலியா இரு. வேலைக்குப் போ”
“எதுக்கும் தலை ஆட்டீட்டு சரீம்பீங்ளா?”
“நீ எது சொன்னாலும் இனி ஆட்டித்தான ஆகணும்?”
“எல்லாம் இப்போ கல்யாணம் ஆகிறவரை அப்படித்தான் ஆட்டுவீங்க. அப்புறம் தெரியும்”
“நான் எப்பவும் இப்படித்தான். தாலி கட்டியாச்சுன்னா எனக்கு ரெண்டு கொம்பு மொளச்சுக்குமா?”
“அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிங்ளே! அப்படி வட்டுக்காய்ஞ்சு கெடக்கீங்ளா?”
“அப்போ உன்னைத் தூக்கிப்போட்டு மிதிச்சாத்தான் ஊட்டுக்காரன்பியா?”
“எங்கம்மா வருது. நைட்டு பதினொரு மணிக்குக் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அணைத்தாள் சுமதி.”
சாமிநாதனுக்கு எப்படியோ சுமதியிடம் பேசிவிட்டோமென்று நிம்மதியாய் இருந்தது. உடம்பு சடவெல்லாம் ஓடிப்போன இடம் தெரியவில்லை. கொறட்டுக் கொறட்டு என இரவு பதினொரு மணிவரை விழித்திருந்து சுமதியைக் கூப்பிட்டான். சுமதி செல் சுவிட்ச் ஆப் என்று சொன்னது. மண்டையப் பிய்த்துக் கொள்ளலாம் போலாகிவிட்டது. ஒரு கோட்டரே அடிக்கலாம் என்று தோன்றியது. கடையை பத்து மணிக்கே சாத்திவிடுகிறார்களே. என்ன பிள்ளைடா இவ என்று யோசித்துக் கிடந்தான் சாமிநாதன்.
சாமிநாதன் வீட்டு வாயிலில் பச்சைத் தென்னை ஓலை கட்டி வாழைக் கம்பம் பூவோடு நிறுத்தப்பட்டிருந்தது. சீரியல் பல்ப் அணைந்து அணைந்து மினுக்கிக் கொண்டிருந்தது. கொடை ரேடியோ தனியாக மூங்கில் கம்பம் நட்டி உச்சியில் கட்டப்பட்டிருந்தது. விஜய் பாட்டு ஊர் முழுக்கவும் கேட்டுக் கொண்டிருந்தது.
“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே”
“லாரி வந்துடுச்சு லாரி வந்துடுச்சு” சிறுவர்கள் கீக்கீ என ஓடிவந்து கத்தினார்கள். எல்லோரும் ஒரு மணி நேரத்துக்கும் முன்பே சாப்பிட்டு முடித்துப் பொறப்பட்டுத் தயாராய் இருந்தார்கள். லாரிக்காக தான் காத்திருந்தார்கள்.
“ரேடியோவை நிறுத்துங்கப்பா, லாரி வந்தாச்சு”
“எடுக்கிற சாமான் செட்டுகளை எல்லாம் எடுத்துட்டுக் கெளம்புங்க”
“மாப்பிள்ளை எங்கப்பா? லாரிக்கு முன்னாடி ஷீட்டுல ஏத்துங்க. சுப்பனையும் அவன் கூடவே ஏத்துங்க”
ஆள் ஆளுக்குக் கூச்சலாய்ப் பேசிக் கொண்டார்கள்.
கல்யாண மாப்பிள்ளை வீட்டில் காவலுக்கு மாரனே தங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டான். ஏற்கனவே முக்கால் திட்ட போதையில் ஆள் இருந்ததால் அதுவே நல்லது என்று விட்டுவிட்டார்கள். சேர் ஒன்றைத் தூக்கிச் சென்று லாரியில் ஏறுவதற்கு வசதியாகப் போட்டார்கள். சனங்கள் கிடுகிடுவென லாரியில் ஏறிக் கொண்டார்கள். கிளீனர் கதவைத் தூக்கி உயர்த்திக் கம்பி செருகிவிட்டதும், “போலாம் போலாம்” என்று சத்தம் கேட்க, டிரைவர் முன் வீலுக்கு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை நசுக்கிக் கொண்டு கிளப்பினார்.
லாரி ஆயிக்கவுண்டம்பாளையத்தை நெருங்கும் சமயத்தில் முன் வீல் பஞ்சராகி நின்றது.
“தென்றா சாமிநாதா? உன் கல்யாணத்துக்கு தாலி கட்டுறப்பத்தான் போயிச் சேருவமாட்ட!” குரல்கள் ஆரம்பித்தன.
ஸ்டெப்னி டயரை மாற்றிக் கிளப்ப அரை மணி நேரமாயிற்று. சீனாபுரத்தில் லாரி முட்டி வழுவுக்குச் செல்லும் பாதையில் சென்றது பரட்டத்தலச்சி கோவில் முன்பாகப் பெரிய ஆலமரத்தினடியில் லாரி நின்றது. எல்லோருமே இறங்கினார்கள். கோவில் வாசலில் வாழைக் கம்ப சீரியல் பல்ப்பில் மின்னியது. வரவேற்பு டேபிளில் ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை என்றிருந்தது.
வரவேற்கத்தான் சனம் இல்லை. கோவில் மண்டபத்தினுள் பத்து இருபது தலைகள் தெரிந்தன.
“என்னடா இது? வாங்கன்னு கூப்பிடக் கூட உன் மாமனார் ஊட்டுல சனம் இல்லையா? கல்யாணம் நாளைக்குன்னு நினைச்சுட்டு இருக்காங்ளா? மாப்பிள்ளை அழைப்புக்கு மோதிரம் போடறன்னு சொன்னாங்களா? எல்லாரும் போயி தூங்கீட்டாங்ளா! பாருங்டா சித்தே!’
மண்டபத்தில் சமையல் செய்த பெண்கள் தான் வெளியே வந்து இவர்களுக்குத் தகவல் சொன்னார்கள். அந்த சுமதி புள்ளை ஒன்பது மணிவரைக்கும் வீட்டுல தான் இருந்துச்சுங்ளாமா! கம்பெனில வேலை செய்யுற பையனோட ஓடிப்போச்சுங்ளாமா!
சாமிநாதன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். “செலவு கணக்கப் போயி அவ அப்பன்கிட்ட வாங்கீட்டு வர்றோம் நடங்கடா அவன் ஊட்டுக்கு” நான்கைந்து பேர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊருக்குள் நுழைந்தார்கள்.
“அவ அப்பவும் ஒரு புடிமானமே இல்லாமத்தான் எங்கிட்ட பேசினாக்கா. நான் அவளைக் கேட்டனே. லவ் பண்ணியிருந்தா சொல்லீருன்னு. அவ இல்லைன்னாளே! என்னக்கா இப்படி ஆயிப்போச்சு! எனக்கு மொதல்ல இருந்தே உறுத்தீட்டே தான் இருந்துச்சுக்கா. ஆரம்புத்துலயே பூனை குறுக்க போச்சு. இப்பக் கூட லாரியே பஞ்சராச்சு!” என்று புலம்பினவனுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அவன் அம்மாவும் சரோஜா அக்காவும் அருகில் நின்றிருந்தார்கள். “இங்க வா சாமிநாதா” என்று சரோஜா அவனை இருட்டுக்குக் கூட்டிப் போய் இடுப்பில் இருந்த கோட்டரை எடுத்துக் குடுத்தது. வாங்கியவன் மூடியைத் திறந்து கடகடவெனக் குடித்துவிட்டுப் பாட்டிலைத் தூரமாய் வீசினான்.
– தொடரும்…
– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012