ஊதுபத்தி
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 111
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அக்கினி நட்சத்திரம் கொளுத்திக்கொண்டிருந்தது. கரையான் திரட்டு வயலில் கதிர் வாரிக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அறுப்புக் காரர்கள் காலையில் அறுத்துப் போட்ட இரண்டரை ஏக்கர் வாசறு மிண்டான் பயிர் பன்னிரண்டு மணிக்குள் சுக்காய் காய்ந்து விட்டது. அறுப்புக்காரர்களுடன் கதிர் வாருவதை மேற்பார்க்க அப்பாதான் வந்திருந்தார். ஒன்றரை மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டுச் சிதம்பரம் வயலுக்கு வந்தான். அவன் வந்ததும் அப்பா சாப்பிடப் போனார்.
“கதிரு விளாம வாரச் சொல்லு… கதிரு பொறக்கும் குட்டியளை கெட்டுக்கு பொறத்த நிண்ணு பொறக்கச் சொல்லு -நெல்லு தொளியாம் கட்டை இறுக்கச் சொல்லு… என்னா?” என்று எச்சரிக்கைகள் செய்து விட்டுப் போனார்.
கரையான் திரட்டு வயல், ஒன்றே முக்கால் கோட்டை விதைப்பாடு ‘வாம்பிரி’ வயல். அரையாள், முக்காலாள், முழு ஆள்கூலியாக இருபத் திரண்டு பேர்கள். தலைக்குக் குறைந்தது ஏழு நடை கட்ட வேண்டும். இந்த வயல் அமையக் குறைந்தது நாலரை மணியாகும். அடுத்த வயல் முக்கால் கோட்டை விதைப்பாடு. பக்கத்துத் துண்டுதான். வீட்டை அடுத்து அறுத்தடிப்புக் களத்தில் இருந்து வயல் நாலு ஃபர்லாங் தூரம் இருக்கும். கால்வாய் வரப்பைத் தாண்டி, ஆற்றில் இறங்கி ஏறி, ரோட் டில் ஓடி, தெருவில் நுழைந்து, களத்துக்குப் போகவேண்டும். போகும் போது அஞ்சல் ஓட்டத்தில் போனால்தான் சுமை பொறுக்காது.
“கதிரு விளாம வாருங்கப்பா… குட்டியளே, பொறத்த போங்கோ,” என்று இடையிடையே குரல் கொடுத்துக்கொண்டு, கதிர் வாரிய நிலத்தில் தாள்கள் கணுக்காலில் குற்றியாய் உரச, அங்குமிங்கும் நடந்து கொண்டி ருந்தான் சிதம்பரம். அரியரியாகச் சேர்த்துப் படையாக்கி, கட்டின் மேல் வைத்து இறுக்கி, கட்டு நிறைந்ததும் கூறுவடியுடன் நின்று ஒரு கை தூக்கி விட்டு, வயல் சேற்றில் அறுப்புக்காரன் பாதம் பதிய நடந்து வரப்பில் ஏறுவதைப் பார்த்துத் திரும்பியபோது ஒரு குட்டி இரண்டு அரிகளைச் சேர்த்துச் சுருட்டுவதைப் பார்த்தான்.
‘குட்டி… அரியைக் கீள போடு… போ… கெட்டுக்குப் பொறந்த போ…” கூறுவடியும் சேர்த்து விரட்டினார்.
“போவுட்டி பெறக்க போவுட்டி…”
சாரத்தை மடித்துக் கட்டி, துவர்த்தை வட்டக்கட்டாய் தலையில் சுற்றியிருந்தான் சிதம்பரம். கரண்டை வரைகாலில் தொழியாகியிருந்தது. வியர்வை சுனைபோல் பொங்கியது.
நெற்கதிருக்கு அவித்த மரச்சீனிக்கிழங்கும் வறுத்த நிலக்கடலையும் சீனிக்கிழங்கும் விற்கும் கிழவி நார்ப்பெட்டியை வரப்பில் இறக்கி வைத்து உட்கார்ந்தாள். இரண்டாவது கூறில் கதிர் வாரிக்கொண்டிருந்த அம்புரோஸ் சத்தமாகக் கூப்பிட்டான்.
“பண்ணையாரே… ஓய் ஒம்மத்தான் பண்ணையாரே. கௌங்கு வேண்டட்டா..”
வாங்கிக்கொள் என்று சொன்னால் மூன்று அரிக் கதிரோடு அம்பு ரோஸ் கிழவியிடம் போவான் என்று அவனுக்குத் தெரியும். கவனிக் காததுபோல நின்றான் சிதம்பரம்.
“தானியலு…கதிரு நெறையத் தொளியி பாத்துக்கோ… அரி விடாமச் சேத்து வாரு…”
”பண்ணையாரே… ஓய்…” மறுபடியும் அம்புரோஸ்.
“சும்மா வாரிக் கெட்டுப்பா… கூறு பிந்திக் கெடக்கு பாரு…” என்றான் அவன்.
அம்புரோஸ் கெட்டு மூத்துவிட்டது. அவனே ஆறேகாலடி உயரம். அதற்கு மேல் கெட்டு மூன்றடி உயரம். சாதாரணக் கெட்டைத் தூக்க கெட்டுக்காரன் அடக்கம் நான்கு பேர் போதும். அம்புரோஸ் கெட்டுக்கு ஆறு பேர் வேண்டும்.
திருத்தமான வேலைக்காரன். இருபத்தைந்து வயதிருக்கும். அறுத்த கதிரை அரிவாள் மேல் தாங்கி அரியாக, குத்தி நிற்கும் தாள் மேல் விரிப் பதில் ஓர் அழகு இருக்கும். மற்ற கட்டுக்காரர்களைப் போலல்லாமல், சவளாமல் சரியாமல் சுசீந்திரம் சாமிதேரைப் போல் அம்சமாக இருக்கும் அவன் கட்டு.
நான்கு பூவாகத்தான் அறுப்புக்காரர்களுடன் அறுத்துக் கெட்ட வருகிறான் அம்புரோஸ்.
நாஞ்சில் நாட்டுக்கு அறுக்க வருபவர்களும் சூடடிக்க வருபவர் களும் உள்ளூர்க்காரர்களல்ல. எல்லாப் பத்துக்களும் நிறைசூலி போலப் பழுத்து முதிர்ந்து தலை சாய்த்துக் கிடக்கும்போது உள்ளூர்க்காரர்களால் அறுத்து அடித்து ஒதுக்க முடியாது.
பெரும்பாலும் சூடடிக்காரர்கள் சூரங்குடி, ஈத்தாமொழி, பெரிய காட்டுக்காரர்களாக இருந்தனர். அறுப்புகாரர்கள் தொடுவட்டி, களியக்கா விளைசுற்று வட்டாரங்களில் இருந்து வருபவர்கள்.
சிதம்பரத்துக்கு அறிவு தெரிந்த நாள் முதல் அவர்களுக்கு அறுத்துக் கட்ட நாடான்கண்ணு கூட்டத்தினர்தான் வந்தார்கள். நாடான்கண்ணு இல்லாத நாட்களில் ரேவதி கூறுவடி. இரண்டு பேரும் அத்தான் மைத்து னர்கள். அடிமுறை தெரிந்தவர்கள்.
நெற்பயிர் தலை பழுக்க ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு வாசம் எட்டும். அறுப்பு விசாரித்து வரும்போது இரண்டு வருக்கைப் பலாக்கள், பனங்கிழங்குக் கட்டுக்கள், நுங்குக் குலைகள், செவ்வாழைக் குலைகள் என்று பருவத்துக்குத் தகுந்தபடி கொண்டுவருவார்கள்.
இலை போட்டுச் சாப்பிட்டு, அப்பாவுடன் இருந்து வெற்றிலை போட்டதும் பஸ் சார்ஜுக்கு ரூபாயும் குட்டிச் சாக்கில் ஆளுக்கு ஐந்து மரக்கால் நெல்லும் கொடுத்து அனுப்புவார். அறுப்புக்கு எப்போது ஆள் கொண்டுவர வேண்டும் என்ற தகவலும் சொல்லி அனுப்புவார்.
பெரும்பாலும் முற்பகலில் கூட்டமாக வந்து இறங்குவார்கள். களத்தில் தென்கிழக்கு மூலையில் மூங்கில் நாட்டி, கிடுகு வைத்துப் பக்கம் மறைத்து, ஒலைப் புரை போடுவார்கள். மாட்டுத் தொழுவத்தின் தட்டில் அடுக்கி வைத்திருக்கும் சோற்றுப் பானைகள், கறிச்சட்டிகள், சிரட்டைத் தவிகள், ஓலைப் பட்டைகள், சாப்பிடும் பரந்த சட்டிகள் எல்லாவற்றையும் கீழிறக்கிக் கழுவுவார்கள். அவரவர் சாப்பாட்டுச் சட்டிகளில் மறுபடியும் துலக்கமாகச் சுண்ணாம்புக் குறிகள் போடுவார் கள் அடையாளத்துக்கு.
உடைந்த சட்டிகளுக்கு மாற்றுச் சட்டிகள், புதிய சட்டிகள், சமை யலுக்கு மசாலா சாமான்கள் வாங்க, ஒரு குழு தாழக்குடிக்குப் போகும். வந்த அன்று சாப்பிடக் கட்டுச்சோறு இருக்கும். மற்ற நாட்களின் தேவை கருதி, தலைக்கு இரண்டு பனங்கருப்பட்டியும் சம்மந்தியும் கதிர் அரி வாளும் பனைநாரும் மாற்றுடையும் சாக்குப் பொதியினுள் இருக்கும். வந்த நாளில் செக்கச் சிவந்த புழுங்கலரிசிச் சோறும் இடி சம்மந்தியும் பிசைந்து சாப்பிடுவதைக் காணச் சிதம்பரத்துக்கு நூதனமாக இருக்கும்.
வந்த நாள் சாயந்திரம் உரலும் உலக்கையும் கேட்டு அம்புரோஸ் வந்தான். அவன் வயதுதான் இருக்கும்.
“என்னலே…இந்த வருசம் புதுசா வந்திருக்கியா?” என்று அம்மா கேட்டபோது சிரித்தான்.
சமையலுக்கு என்று தனியாக ஆள் வரும். நெல் அவித்துக் காயப் போடுவது, மிஷினில் கொண்டு போய்க் குத்தி வருவது, தண்ணீர் கோரு வது… இரண்டு வேளை சாப்பாடு போக அவருக்கு அரையாளங் கொத்து. ஓய்விருக்கும்போது மற்றவர்களும் கூடமாட வேலை செய்வார்கள். பொங்கத் தேவையான அரிசி, அரிவாள் கட்டு நார்க்கெட்டுக் கதிரில் வருவது போதுமானதாக இருக்கும்.
இரண்டாவது முறை வெட்டுக்குத்தி வாங்க வந்தபோது அவன் பெயரைக் கேட்டான்.
அறுத்துக் கட்டும் வேலை முடித்து, குளித்து, வைக்கோல் மீது துண்டு விரித்துப் படுத்துக் கிடக்கும்போது சிதம்பரம் களத்துக்குப் போவான். சட்டியில் கறி கொதிக்கும் வாசனையின் பின்புலத்தில் ரசமான கதைகள் நடக்கும். தெம்மாங்குப் பாடல் கேட்கும். அம்புரோஸ் நன்றாகப் பாடுவான்.
வயல் அறுக்கும்போதும் கெட்டும்போதும் மேற்பார்க்க அவன் போவதால் கூட்டத்திலுள்ளோர் எல்லோரையும் பழக்கம் உண்டு. அந்தப் பூவிலேயே அவனுக்கும் அம்புரோசுக்கும் நட்பு ஏற்பட்டுவிட்டது. அம்புரோஸ் கொண்டுவரும் கருப்பட்டியில் பாதியை அவன்தான் நான்கு பூவாகத் தின்கிறான்.
முன்னிரவில் நிலவொளியில் மண் சட்டியில் பெரிய சிரட்டைத் தவியால் நிறையச் சம்பா அரிசிச் சோறு போட்டு, கொதிக்கும் குழம்பை மேலே ரேவதி ஊற்றும்போது எழும் மசாலாவின் மணம் நாவில் தெறிக்க கும். அம்புரோஸ் சாப்பிடக் கூப்பிடும்போது ஆசை ஏற்படும்.
அறுத்துக் கெட்டி முடித்துக் குளிக்கப் புறப்படுமுன் சோறு வடித்த கஞ்சியைத் தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, கருப்பட்டியைக் கடித்துக் கொண்டு சுடச்சுடக் குடிக்கும்போது சில சிரட்டைகள் அவனும் குடித் திருக்கிறான்.
வெயில் காய்ந்து முறுகி வியர்வை பெருகியது. தலை முண்டை அவிழ்த்து, அழுந்தத் துடைத்து, மறுபடியும் கட்டியபோது அறுப்புக் காரன் இரண்டு பேர் ஓடி வருவது தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சற்று அருகில் வந்ததும் ஒருவன் கூவினான்.
“ஏம்பிலே ஓடி வாறா?”
“அம்புரோஸ் பெய விளுந்திட்டான்… பெய கெட்டப் போட்டு கிட்டு விளுந்திட்டான்…”
கூறுவடி நிதானமாகக் கேட்டார். “ஏம்பிலே விளுந்தான்…”
“பெய வேதக் கோயிலு கிட்டே ஓடிவந்தான்… பாரவண்டி வந்துன்னு ஒதுங்கினான்… கதிரு கெட்டை பூவரசங்கொப்பு தட்டி காலு மடங்கீட்டு… கெட்டு தலைக்கு மேல வந்து விளுந்திற்றுவே… ஓடியாரும்… பெய என்னுண்ணோ வாறான்…”
கூறுவடி ஓடியவாறே சொன்னார் – “ரெண்டு பெயக்க கூட வாருங்கபிலே… பாக்கிப் பேரு சோலியைப் பாருங்கோ…”
கூறுவடியும் ரேவதியும் தானியலும் தங்கையாவும் ஓட்டமும் நடையுமாகப் போனார்கள்.
என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு அனுமானிக்க முடிந்தது.
தூரத்தில் சுப்பையண்ணன் ஒடி வருவது தெரிந்தது. வந்தவன் அவனிடம் சொன்னான் – “உன்னை அப்பா உடனே வரச் சொன்னா… சுணங்காமப் போ…”
ஆற்றில் இறங்கி, சேற்றைக்கழுவி, நேரே வீட்டுக்குப் போனான். வீட்டின் தெருப்படிப்புரையில் அம்புரோஸைக் கிடத்தி இருந்தார்கள். கூறுவடி எங்கெல்லாமோ தடவிக்கொண்டிருந்தார். அனக்கம் ஏதும் இல்லை. எல்லோர் முகங்களிலும் கவலையின் கூறுகள். சைக்கிளில் வந்து இறங்கிய வேலப்பண்ணன் சொன்னான். “கார் இன்னா வந்திரும் சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிரலாம்…”
அப்பா சட்டைபோட்டுக்கொண்டு வரச் சொன்னார். கையில் நூறு ரூபாய் சில்லறையாகத் தந்தார். “நீயும் கூடப் போ… செலவைப் பத்திக் கவலைப்படாதே…”
காரின் பின்சீட்டில் நாடான்கண்ணு, ரேவதி, தானியல், அம்புரோசை மடி மீது கிடத்தியிருந்தார்கள். முன் சீட்டில் சிதம்பரமும் வேலப்பண்ணனும்.
உயிர் இருப்பதற்கான அசைவுகள் இல்லை. உடம்பு சூடாக இருந்தது. சர்க்கார் ஆஸ்பத்திரி வாசலில் காரை நிறுத்தி ஆளுக்கொரு பக்க மாய் பிடித்துத் தூக்கி, எமர்ஜென்ஸி வார்டை அடைந்து டாக்டரை அழைத்து வந்து… எல்லாம் முடிந்து அரை மணி நேரம் இருக்கும் என்றார் கள். பீதி படர ஒருவர் மற்றவரைப் பார்க்க போலீசுக்குத் தகவல் போயிற்று.
ஆஸ்பத்ரிக்கு எதிரே நகரக் காவல் நிலையம். சப் இன்ஸ்பெக் டரிடம் விவரமாகச் சொன்னான். எல்லாம் கேட்டுவிட்டு அவர் கேட்டார், “நீ ஆருலே?”
”சார்… நான்… எங்க வயல்லேதான் அறுத்துக் கெட்டுகா… எங்க களத்திலேதான் தாவளம் போட்டுருக்கா…”
“கூறுவடி யாருவே?”
”எசமான், நாந்தான்.”
“எசமான், இவுரு தானியலு… பெயலுக்க சித்தப்பா…” “எல்லாரும் அந்த மூலையிலே போய் இரிங்கவே…”
“சார்… நான்…” மெதுவாகக் கேட்டான் சிதம்பரம்.
“ஒன்னையும் தாம்பிலே! நீயென்ன பெரிய கெவர்னரா? மயிராண்டி… போயி இரிடா அங்கிண…” ஒரு மாதிரி வந்தது சிதம்பரத் துக்கு.
வேலப்பண்ணன் வந்த காரில் ஊருக்குத் தகவல் சொல்லப் போயிருப்பான். சற்று நேரத்தில் உதவி வரும் என்ற எண்ணத்தில் காத்திருந்தாலும், கைகால்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டன. இங்கிருந்து
ஓடிவிட முடிந்தால் போதும். கன்னிக் களவு போல கன்னிக் காவல் நிலைய நுழைவு.
வேலப்ப அண்ணன் தாலுகா ஆபீசில் பியூன் வேலை பார்ப்பவன். நாலு பேரைப் பழக்கம் உண்டு. சற்று நேரத்தில் வக்கீல் ஒருவருடன் வந்தான்.
மற்றுமொரு முறை நடந்தது எல்லாம் விளக்கமாகக் கேட்டுவிட்டு சப்இன்ஸ்பெக்டர் சொன்னார்.
”சம்பவம் நடந்த இடம் ஆராம்புளி ஸ்டேஷனுக்கு உட்பட்டது. அவங்கதான் வந்து விசாரிச்சு எஃப் ஐ ஆர் போடணும்… நீங்க அங்கே போயிச் சொல்லுங்க… பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணித்தான் தருவா… எதாம் ஃபவுல் பிளே இருக்காண்ணு பாக்கணும்…
கூறுவடியும்கூட ரெண்டு பேரும் இங்க இருக்கட்டும்.நீங்க ஆராம்புளிக்குப் போங்க…”
“கூறுவடி நாடான்கண்ணு தெவங்கித் தெவங்கி அழ ஆரம்பித்தார். அம்புரோஸின் சித்தப்பா சொல்லிழந்து மூலையை வெறித்தவாறிருந் தார்.
அதே காரில் ஆரல்வாய்மொழி போய் சேர்ந்தபோது மணி ஐந்து தாண்டிவிட்டது. வக்கீல் கூட இருந்ததில் பல வசதிகள் இருந்தன. வேலப்பண்ணன் முன் யோசனைக்காரன்தான்.
மறுபடியும் ஊருக்கு வந்து, போலீசார் சம்பவம் நடந்த ஸ்தலம் பார்வையிட்டு, டேப்பால் நீள அகலம் அளந்து, கண்டவரை விசாரணை கள் செய்து, வீட்டுக்கு வந்து இளநீர் பருகி, பக்கம் பக்கமாய் எழுதி, கையெழுத்துக்கள் வாங்கி கையூட்டுப் பெற்றுக்கொண்டு…
சூரியன் சாய்ந்த பின் போஸ்ட்மார்ட்டம் செய்ய மாட்டார்களாம். மார்ச்சுவரியில் கிடந்த அம்புரோஸின் உடல் மறுநாள் காலை பத்து மணிக்குப் பிறகுதான் கிடைக்கும் என்றார்கள். சவக் கிடங்கு காவல்காரன் மறுநாள்காலை பெட்டி சகிதம் வரச் சொன்னான். டாக்டர் நல்லமனிதர். அதிகமாக உடலைக் கூறு கெடுக்காமல் பாடியைத் தர ஏற்பாடு செய்வ தாகச் சொன்னான் முன்பணம் பெற்றுக் கொண்டு.
களத்தில் எல்லா முகங்களிலும் சோகம் கப்பிக் கிடந்தது. அறுத்த பயிர்களம் வந்து சேர்ந்திருந்தாலும் இராச் சாப்பாட்டுக்கான தடயங்கள் இல்லை. எல்லா முகங்களும் குற்றம் சுமந்து திரிந்தன.
வீட்டில்போய் குளித்துவிட்டுப் படுத்த சிதம்பரத்துக்கு உறக்கம் வரவில்லை. இடையிடையே உறங்கியபோது கனவுகள் துரத்தின.
காலை ஒன்பது மணிக்கு, மருத்துவமனையின் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த சவக்கிடங்கினுள் கிடந்த அம்புரோஸின் உடலைப் பெற வேண்டி வெளியே கும்பலாய், சிறு சிறு முனகல்களுடன் நின்றனர்.
அம்புரோஸின் ஊருக்கும் தகவல் போய் ஏழெட்டுப் பேர்கள் வந்திருந் தனர்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தபோது டாக்டர் வந்தார். பதினோரு மணிக்கு ஓலைப்பாயில் சுருட்டிக் கொடுத்தனர். சவப் பெட்டியினுள் வைத்து, மாலை போட்டு, ஊதுபத்தி கொளுத்தி…
தொடுவட்டியிலிருந்து வடக்காக இறங்கும் கப்பி ரோட்டில் இரண்டாவது மைலில் அந்தக் கிராமம் புலப்பட்டது.
சுற்றிலும் செம்மண் காவி படர்ந்திருந்தது. பலாக்கள் பெரும் பன்றிகளாய் காய்த்துக் தொங்கின. மா மரங்களின் கிளைகளில் நீண்ட காம்பு கொண்ட கோட்டுக்கோணம் காய்கள். கவிந்திருந்த கொல்லா மரங்கள் கொல்லாம் பழங்களை நாலைந்து நிறங்களில் அசைத்துக் காட்டின. பனைகளில் பதனீர்க் கலயங்களும் நுங்குக் குலைகளும். வேலி யெல்லாம் புருத்திச்சக்கை, தோட்டமெல்லாம் மரச்சீனி, மாவில் பற்றிப் படர்ந்திருந்த நல்ல மிளகுக் கொடிகள். பெயர் தெரியாத காட்டுச் செடி கொடிகள். கண்கள் அவற்றைக் கணக்கெடுத்துக்கொண்டாலும் மனம் சென்று சேரவில்லை.
ஒரு முறை அம்புரோசுடன் அவன் ஊருக்குப் போய்ப் பார்த்து வர வேண்டும் என்று பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. உல்லாசமான தோர் சூழ்நிலையில் வந்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் கையிலிருந்து வழுகி விழுந்துவிட்டது. இனி எப்போதும் இங்கு நுழைவதை எண்ணிப்பார்க்க முடியாது என்று தோன்றியது சிதம்பரத்துக்கு.
டிரைவர் தவிர யாரிடமும் அசைவுகள் இல்லை, பிணம் சுமந்த மனங்கள். மனதில் சுய வெறுப்பும் கசப்பும் கலந்து தத்துவம் ஊறலெடுத் தது. சொட்டுச் சொட்டாக நினைவுகள் எதுக்களித்தன.
அம்புரோஸின் குடும்பம் பற்றிய ஒரு அறிவும் கிடையாது. ஆள்முகம் கண்டால் அடையாளம் தெரியக்கூடும். தெரிந்துதான் என்ன செய்ய?
கிராம நுழைவில் காரைக் கண்டதும் திரண்ட முகங்கள். வீட்டு வாசலில் பெருங்கூட்டம். பேரழுகை. ஆண்களும் பெண்களுமாய் சவப் பெட்டியின் பின்னால் வீட்டினுள் பாய்ந்து சென்றனர். வறுமை வரியோடிய கண்களில் இருந்து வருத்தம் வழிந்து ஓடியது.
புதிய முகமான அவனைச் சில பகைப் பார்வைகள் துளைத்தன. கூறுவடி ஒரு குற்றவாளிபோலச் சோர்ந்து நின்றார். தானியலைச் சுற்றி யொரு கூட்டம் என்ன நடந்தது என்பதை மீண்டும் மீண்டும் அறிய முயன்றது.
மேலும் அங்கு நிற்க முடியாதவாறு சூழ்நிலை இறுகிக் கனல ஆரம் பித்தது. சிதம்பரத்தைச் சுட்டிக் காட்டிக் கோபத்தோடு ஏதோ பேசுவது கேட்டது.
நிலமை சிக்கலாகும் போலத் தோன்றியதை உணர்ந்து டிரைவர் போகலாமா என்று தலையை அசைத்தார். அவன் மெதுவாகக் கூறுவடி பக்கம் போய், அப்பாதந்தனுப்பிய ஐந்நூறு ரூபாயைக் கையில் கொடுத்து விட்டுப் புறப்படுவதாகச் சொன்னான்.
டிரைவர் திருப்பி நிறுத்திய டாக்சியை அணுகி, சிதம்பரம் முன் சீட்டுக்கதவைத் திறந்தபோது பளீரெனப் பிடரியில் ஓர் அறை விழுந்தது.
தொடர்ந்து, அருமாந்த மக்களைக் கொன்னு போட்டியளே பாவியளே!” என்ற அலறலும். மேலும் ஒரு கை அவனை அறைய முயன்றபோது ரேவதியின் கை அதை ஏறிப்பிடித்தது.
”பண்ணையாரு இனி நிக்காண்டாம்… பொறப்பட்டுப் போவும்… பொறவு பேசிக்கிடலாம்” என்றான் ரேவதி, ஆத்திரத்துடனும் அவசரத் துடனும்.
புழுதியைப் புரட்டிக்கொண்டு கார்வேகமெடுத்தபோது பின் பக்கக் கண்ணாடி வழியாகப் பார்த்தான். சின்னதோர் அடிதடிக்கான முகடு கூடிக் கொண்டிருந்தது.காரை நோக்கிக் கற்கள் சில பாய்ந்து வந்தன. காரினுள் கிடந்து கமழ்ந்த ஊதுபத்திப் புகை மட்டும் சிதம்பரத்தின் மூக்கில் நிரந்தரமாய்த் தங்கிப் போயிற்று.
– ஆல், ஆகஸ்ட் 1992.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
இளையவேணி கிருஷ்ணா
September 6, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 6, 2026
