கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 105 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுப்பில் நெருப்பு கனிந்துகொண்டிருந்தது. அடுப்பின் முன் இரண்டடி தள்ளி, முழங்காலைக் கட்டிக்கொண்டு மாடசாமி உட்கார்ந் திருந்தான். எரிகின்ற சுள்ளிகளை வாக்காகத் தள்ளிக் கொடுத்துக் கொண்டு, எருமை மாட்டின் சோம்பலைப் போன்ற மெத்தனத்துடன் உட்கார்ந் திருந்தான்.

நாலுபிடி பழையதும் ஒரு சுட்ட அயிலைக் கருவாடும் இருந்தா எப்படி இருக்கும்?’ என்று முனகிக் கொண்டான். அந்த நினைப்பில் வாயூறிச் சில கணங்கள் மெய்மறந்தான்.

அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த மண் சட்டியில் துண்டு வெட் டிப் போட்ட மரச்சீனிக்கிழங்கு வெந்துகொண்டிருந்தது. சிரட்டைத் தவியால் சட்டியைத் துழாவி, ஒரு துண்டை எடுத்து ஊதியூதிச் சூட்டைத் தணித்து, நன்றாக வெந்துவிட்டதா என்று நசுக்கிப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் வேகவேண்டும். வெந்தும் வேகாததுமாய் இருந்த அந்தத் துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

மாடசாமிக்கு நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். ஊர் மக்கள் அவனைக் கூப்பிடுவதே ‘மசணை மாடசாமி’ என்றுதான். அத்தனை மெத்தனம். எதிலும் ஒரு மிதம். சோம்பலில் அவனை மிஞ்ச அங்கு யாருமில்லை. அவன் நடந்து வருவதே நிறைமாதச் சினை எருமையின் குளம்பு பதிந்த நடையைத்தான் நினைவூட்டும்.

ஆடைக்கும் கோடைக்கும் அரையில் ஒரு அழுக்குவேட்டி. உடம்பைப் போர்த்தி அதைவிட அழுக்கான ஒரு வேட்டி. சிலசமயம் அது தலையிலும் சுற்றப்பட்டிருக்கும். தாய் தந்தையர் இருந்தபோது ஒரு வேளை அவையும் அவனும் சுத்தமாக இருந்திருக்கக்கூடும்.

ஆண்டு பலவாகத் தனிமைதான். கருத்தாகக் கல்யாணம் செய்து வைக்க யாரும் இல்லை அல்லது பெண்மை அவனிடம் எந்தக் கிளுகிளுப் பையும் ஊட்டவில்லை. அல்லது அவனைக் கல்யாணம் செய்ய எந்தப் பெண்ணுக்கும் தியாகமனம் வந்து துணியவில்லை. ஆக மாடசாமிக்கு கல்யாணம் ஆகவில்லை.

முகத்தில் நிரந்தரமாக அட்டு குடிகொண்டிருக்கும். புன்னகையை மூன்று சந்தர்பங்களில் மட்டும்தான் காணமுடியும். வாடல் வெற்றிலை யும் வதங்கிய பச்சைப் பாக்கும் கணிசமாகக் கருப்பட்டிப் புகையிலையும் யாராவது தானமாகத் தரும்போது. காய்ந்துபோன வாழையிலைச் சருகில் அம்பாரம் போலப் பழையதைக் குவித்து அதன் உச்சியை அவன் எரி மலையின் வாய்போலக் குழிக்க, அதில் பழைய குழம்போ கறியோ ஊற்றி இரண்டு பச்சைமிளகாயோ உள்ளியோ கடித்துக் கொள்ளக் கொடுக்கும்போது…

“என்ன மாடசாமி! கலியாணம் எப்பம்?” என்று யாராவது கேட்கின்றபோது…

செலவில்லாமல் அவனைச் சிரிக்க வைப்பது மூன்றாவது வழி ஆதலால், எல்லோரும் அந்த வழியைத்தான் கையாள்வது வழக்கம். அப்போதெல்லாம் அவனிடம் இருந்து வரும் ஒரே பதில். ‘அட சும்மா இரியும்…” என்பதுதான்.

வேலையில் மாடசாமி நுணுக்கமற்றவன். கை நிச்சயம் கிடையாது. ஆனாலும் அவன் பார்க்காத வேலை குறைவு. நான்கு ரூபாய் பிறருக்குக் கொடுத்து, ஒரு பாட்டும் பாடிச் செய்யவைக்கும் வேலைக்கு மாட சாமிக்கு இரண்டரை ரூபாய் கொடுத்தால் போதும். சற்று ஏறக்குறைய இருந்தாலும் பாதகமில்லை. காலை ஏழு மணிக்கே வயலில் இறங்கி விடுவான்.

அவனை வேலைக்கு கூப்பிடுகிறவர்கள் ஒரு விஷயத்தில் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். ஒரு மணி அடிப்பதற்குள் இரண்டுபேர் சாப்பிடுகிற பழையது வேலைசெய்கிற இடத்துக்குப் போய்விட வேண்டும். சாப்பாடு வருகிற பித்தளைத் தூக்கு வாளியை மூடியைத் திறந்து பார்க்காமலேயே, கையினால் தூக்கிப் பார்ப்பான். அதன் கனத் தைப் பார்த்தே, அவன் முகத்தில் புன்னகை மலர்ந்துவிடும்.

கறி, குழம்பு என்றெல்லாம் அவன் அதிகம் அல்ட்டிக் கொள்வ தில்லை. ஒரு மணிக்குள் தூக்குவாளி வந்தாக வேண்டும். வரவில்லை யானால், மீதி வேலை அவ்வளவுதான். வயல் வரப்புத் திரட்டிலோ, கரை மரநிழலிலோ உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மண்வெட்டியைப் பிடித்தா னானால், கண் வெளிச்சம் மறையும் வரை வெட்டிக் கொண்டுதான் இருப்பான். அவன் உழைப்பின் சாரம் இறங்காத பண்ணை அங்கு இல்லை.

மும்முரமான வேலை நாட்களில்தான் இந்த ரேட்டு. ஆனி ஆடி அல்லது கார்த்திகை மாதங்களில் பயிர்கள் ‘மதமத’வென்று சிலிர்த்து நிற்கும். ஆனால் விவசாயக் கூலிகள் வேலையற்றுச் சோர்ந்து நடக்கும் நாட்கள் அவை. அப்போது மாடசாமியைச் சீந்துவார் கிடையாது. அல்லது ஒரு நேரம் புளித்த பழையதைப்போட்டு ஓராள் வேலை வாங்கி விடுவார்கள். அந்த நாட்களில் நல்ல வேலைக்காரன் பாடே திண்டாட்டம். மாடசாமியை என்ன சொல்வது?

வேலையுள்ள நாட்களிலேயே, நேரம் மிகவும் கடந்துவிட்டால் அல்லது வீட்டுக்குப் போய் சமைக்கும் ‘மனநிலை இல்லாவிட்டால் இரவு உணவு ஒரு வெள்ளரிக்காயும் நாலணா கருப்பட்டியும். அந்த நாட்களில் அவன் வயிற்றின் ஏக்கம் கண்களில் தொனிக்கும்.

எப்போதாவது மாடசாமிக்கு உற்சாகம் கசியும். அப்போதெல்லாம் ‘மாங்கொட்டை’ என்றும் ‘சுவரு முட்டி’ என்றும் பல செல்லப் பெயர் களால் அழைக்கப்படும் அரிஷ்டம்’ ஒரு பாட்டில் வாங்கி, மட மடவென்று குடிப்பான். மூடியைத் திறந்தாலே அதன் ‘மணம்’ மூன்று மைல் வீசும். என்றாலும் அதிலேயே முகம் கழுவுகிறவர்கள் இல்லாமல் இல்லை.

அது வயிற்றில் சங்கமமானதும் பாட்டுக் கிளம்பும்.செவி வழி அறிந்த சித்தர் பாடல்கள் தத்துவங்களாய் கரகரக்கும்.

அந்த மாடசாமிதான் வறுமையும் குளிரும் மிகுந்த ஆடி மாதக் கொந்தலில் கிழங்கு அவித்துக்கொண்டிருந்தான்.

நேற்று, தெற்குத்தெரு கந்தையா பிள்ளை வீட்டில் விறகு கீறியதில் ஒரு ரூபாய் கிடைத்திருந்தது. அதில்தான் ஒரு கிலோ மரச்சீனிக் கிழங்கு அறுபது பைசா கொடுத்து வாங்கினான். வாடி வதங்கிய வெற்றிலை, பச்சைப்பாக்கு, கருப்பட்டிப் புகையிலை வகையறாவுக்கு பதினைந்து பைசா போனது. மீதிப் பைசாவுக்கு காப்பி போட கருப்பட்டியும் சுக்கும் வாங்கினான்.

கிழங்கு வெந்துவிட்டது. தட்டு மூடி வைத்துத் தண்ணீரைக் கவிழ்த்து வடித்தான். வேறொரு சட்டியில் இரண்டு லோட்டா தண்ணீர் வைத்து, கருப்பட்டியும் சுக்கும் தட்டிப்போட்டு தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பைத் தணித்துவிட்டு வெளியே கிளம்ப யத்தனித்தான்.

தூறல் சற்று வெளிவாங்கி இருந்தது. தோள்வேட்டியை எடுத்து முட்டாக்கு போட்டுக்கொண்டான். ‘மணி பத்து இருக்குமா?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு, தன்மயமான நடையுடன் ஆற்றை நோக்கி நடந்தான்.

மழை நின்றிருந்தாலும் கூட, வெறிப்பு தற்காலிகமானது என்று வடக்குமலை எச்சரித்தவாறு இருந்தது.

நடந்து செல்லும்போதே, மாடசாமியின் மனம் காரணமின்றி மாரியம்மையை நினைத்துக்கொண்டது. ‘குட்டிக்கு கொளுப்பு கொஞ்சம் அதியந்தான்’ என்று உள்மனதில் முனகிக்கொண்டான்.

மாரியம்மைக்கு இருபது வயதிருக்கும். கல்யாணம் ஆகி கணவ னைத் தாள முடியாமல் தாலியை அறுத்து அவன் முகத்தில் வீசிவிட்டு வந்தவள்.மாடசாமியைக் காணும்போது அவள் நாக்கு ஒரு துள்ளுத் துள்ளும். நடவு வயலிலோ, களை பறிக்கும் போதோ அவன் அக்கம் பக்கம் நின்றிருந்தால் போதும்.

”ஏ மச்சான்… என்னா… கலியாணம் எப்பம்?” என்பாள். வழக்கம் போலவே மாடசாமிக்கு புன்னகைதான் மறுமொழி. ஆனால் அவள் அத்துடன் நின்றால்தானே? “என்னா? கட்ட மண்ணு போல நிக்கேரு? என்னைக் கெட்டிக்கிடுகேரா?”

வேலை செய்யும் பெண்கள் கூட்டம் சிரிப்பில் புரண்டு மறியும். ஆனால் அவனோ! மலை கல்லுதான், மண்வெட்டி இரும்புதான். இல்லை, கோபம்வந்தால் தான் அங்கு யார் வகை வைக்கிறார்கள்?

‘குட்டிக்கு வாயும் நீளம்தான்’ என்று முனகிக்கொண்டு ஆற்றில் இறங்கினான். பல் விளக்கி, கைகால் கழுவி ஆற்றங்கரையில் ஏறி நின்றான்.

வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைக்கவும், இடது பக்கம் ஆற்றங்கரையை ஒட்டி இருந்த தங்கையா நாடார் தோப்பில் ‘மடேர்’ என்று சத்தம் கேட்டது. “தேங்கா தானோ? வெட்டுக்கு நாளாயிருக்கும் போலிருக்கு…” என்ற முனகிக்கொண்டு தோப்பினுள்கூர்ந்து பார்த்தான். ஆளரவமே இல்லை.

“தேங்காதான் விழுந்திருக்கும். சரி! போயிப் பாத்திரலாம்!” என்ற யோசனையில் தோப்பை அணுகினான்.

நன்றாக நாலுபுறமும் வேலி கட்டப்பட்ட தோப்பு. தெங்கின் கொண்டை அடர்த்தியும் மழை இருட்டுமாக இருளோ கயமோ என்றி ருந்தது. தொண்டு பார்த்து ஆசாக வேலி பிரித்து நுழைந்தான் மாடசாமி. சுற்று முற்றும் பார்த்தான். கரிச்சான் வெட்டிய பெரிய கொச்சங்காய் ஒன்று அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு கிடந்தது. “அட கூறு கெட்ட எளவு? நீதான் ஆளை மெனக் கெடுத்துப் போட்டியா?” என்று வைதுவிட்டு திரும்பினான்.

நேரம் பார்த்துக்கொண்டிருந்த மழை ‘சடசட’ வென்று பிடித்துக் கொண்டது.கொடுங் காற்று சுழன்று அடித்தது. “அட மூத்தவளே… நீயும் நேரம் பாத்தியா?” என்று சபித்துக்கொண்டு தோப்பின் நடுவே, ஓலைக் கூரை வேய்ந்து, நான்கு புறமும் மண் வைத்து தங்கையா நாடார் இளைப் பாறுவதற்காகக் கட்டி வைத்திருந்த மாடத்தை நோக்கி ஓடினான்.

மாடத்தை நெருங்கி, உள்ளே நுழைந்தபோது அந்தக் குளிரிலும் வியர்த்து விட்டது. மாரியம்மையும் தங்கையா நாடாரின் மேற்பார்வைக் காரனும் பதறி அடித்து, கைக்கு அகப்பட்ட துணியை எடுத்து அவசரமாக உடல் போர்த்து… மாடசாமி கொலை பாதகம் செய்த கூச்சத்துடன் நின்றான்.

சேலையை உடம்பில் சுற்றிக்கொண்டு, முகம் கறுத்து, மாரியம்மை சரசரவென்று வெளியே நடந்தாள். ஒன்றும் பேசச் சக்தி அற்றவனாய், மாடசாமி பின்னால் நடந்தான். தோப்பை விட்டு வெளியே வந்ததும் மாரியம்மை ஆற்றங்கரையில் தயங்கி நின்றாள். அவள் முகம் பார்க்க வெட்கம் கொண்டு கடந்து போக முற்பட்டபோது ‘பாடையிலே போவான்…ஒனக்கு கள்ளத் தேங்கா பொறக்கதுக்க இந்த நேரந்தானா கெடச்சு? என் வயத்திலே மண்ணை வாரிப் போட்டிட்டியே கொள்ளையிலே போறவனே! கஞ்சி குடிச்சு ரெண்டு நாளாச்சு… இவனாவது ரெண்டு ரூவா தருவான்னு வந்தா அதைக் கெடுக்க நீ வந்து மொளச்சிற்றே… காலனாப் போவான்’

அழுகையும் ஆத்திரமுமாக மாரியம்மை பொரிந்து தள்ளினாள். மாடசாமி வெலவெலத்துப் போனான். அவள் தீவிரம் அவன் மண்டையைத் தாக்கியது. தீர்மானத்துடன் மாரியம்மையை ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த தீவிர பாவத்தைக் கண்டு மாரியம்மை ஓரடி பின்வாங்கினாள்.

மாடசாமி ஓரடி முன்னால் வந்து அவள் கையைப் பிடித்தான். ”வா சவமே எம் பின்னாலே… பட்டினி கெடந்தாளாம் பட்டினி” என்று சொல்லிக்கொண்டு அவளையும் இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

– தீபம், 1982.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *