ஊஞ்சல்
தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர்.
நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் தான் அவனை நிறுத்தி வைக்கும். முக்கால்வாசி நாள், அதில் கால் நீட்டி, ஒரு பக்க கம்பியில் தலைகாணி வைத்து, அதில் சாய்ந்து, மெல்ல ஆடிக் கொண்டு, பேப்பர் வாசித்துக் கொண்டிருப்பார், ரிடையர்ட் தாத்தா பத்மநாபன். பேப்பர் படிக்கிற மாதிரி, வீதியில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது எனவும் நோட்டம் விடுவார், என்பார்கள் அவரை.
அன்று ஒரு நாள் தாத்தாவைக் காணோம். ஓடிப் போய் ஒரு முறையாவது ஊஞ்சலில் உட்கார்ந்து பார்த்துவிடணும் என்று நினைத்தான். ஆனால், ஆளுயர அல்ஷேஷன், கம்பி கேட்டினுள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது கண்டு பயந்து பின் வாங்கினான்.
அன்றிரவு, சாப்பிட்டு விட்டு அம்மாவின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தான் சௌந்தர். ஊஞ்சல் அவன் மனதை விட்டு அகலுவதாய் இல்லை.
“தூங்கு சௌந்தர். நேரம் ஆச்சு பாரு. நாளைக்கு ஸ்கூலுக்கு போக சீக்கிரம் எந்திரிக்க வேணாம் ?!” என்றாள் அம்மா.
“அம்மா அந்தத் தாத்தா வீட்டுல ஒரு ஊஞ்சல் இருக்கு பாத்திருக்கியா ? எனக்கும் அதுமாதிரி ஒன்னு வாங்கித் தாயேன் ?!”
“ஊஞ்சலா … இந்த குட்டியூண்டு வீட்டுல எப்படி, எங்க மாட்டுவே ?அதெல்லாம் வேண்டாம். பேசாம தூங்கு” என்றாள்.
“ஏதாவது கதை சொல்லும்மா. ஊஞ்சல் கதையாவது சொல்றியா ?!” என்றான்.
“அதென்னடா ஊஞ்சல் கதை ? எனக்கு பாட்டி கதை, நரி கதை, வாத்து கதை தான் தெரியும்” என்றாள் அம்மா.
நெருப்பில் விழும் புழுவாய்த் துடித்த மகனிடம், “சரி சரி சொல்றேன்” என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஒரு ஊருல ஒரு அப்பா, அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு மூனு பசங்களாம். அவங்க வீட்டுல ஒரு அழகான ஊஞ்சல் இருந்துச்சாம். தினம் பசங்க அதில் ஆட்டம் போட்டு விளையாடிட்டு, படிக்க மாட்டேன்கிறதுங்கனுட்டு, அவங்க அப்பா, ஊஞ்சல மாடியில் ஒரு ரூமில் போட்டு பூட்டி வச்சிட்டாராம் !”
“ச்சோ ச்சோ, அப்புறம் என்னம்மா ஆச்சு ?” என்று பரிதாபப்பட்டான் சௌந்தர்.
“அப்புறம் என்ன. பரீட்சைக்கு லீவு விட்டா மட்டும், ஊஞ்சல கீழ இறக்கி, உத்திரத்தில மாட்டித் தருவாராம் அப்பா. லீவு முழுக்க ஆட்டம் தான். ரெண்டு பேரு உக்காந்துக்க, ஒருத்தர் கீழ இருந்து தள்ளணும். கொஞ்ச கொஞ்ச நேரத்துக்கு ஆள் மாத்திகுவாங்க. இது தான் அவங்க ஊஞ்சல் விளையாட்டுக்கு வச்சிக்கிட்ட சின்ன விதி.”
“விதின்னா என்னம்மா ?” என்றான்.
“விதின்னா … ஏய் கதைய விட்டு வேற எங்க போற ? கதைய மட்டும் கேளு. விதின்னா என்னான்னு அப்புறம் சொல்றேன்.”
“அப்புறம் அந்த வீட்டில பசங்க வளர, வளர எல்லோரும் ஊஞ்சல மறக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஹிம்ம்ம்” என்று நிறுத்தினாள் அம்மா.
‘கால்கள் தரையிலும் படாமல், மேலே வானிலும் பறக்காமல், ஒரு வித உயரத்தில் பாதுகாப்பாய் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பது தான் எத்தனை சுகம். நாம தான் ஆடுகிறோம் என்பதை மறந்து, உத்தரம் ஆடுவதாய், வாசல் ஆடுவதாய், வீடே ஆடுவதாய், ஏன் உலகமே ஆடுவதாய் தோன்றும் சில நேரங்களில். இனி வருமா அத்தருணங்கள் ?!!!’
“ஏம்மா கதையை நிறுத்திட்ட ?! … ” படக்கென்று தலையைத் தூக்கி கேட்டான் சௌந்தர்.
“அப்புறம் எல்லோரும் பெரியவங்க ஆகி, கல்யாணம் பண்ணிகிட்டு தனித் தனியா போய்ட்டாங்க”
“ஊஞ்சல் என்னம்மா ஆச்சு ?!”
“சொல்றேன் இரு. குறுக்கே குறுக்கே பேசக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல ?!” என்று அன்பாய்க் கடிந்து கொண்டாள்.
“அவங்க அப்பா திடீர்னு ஒரு நாள் சாமி கிட்ட போய்ட்டாரு. அப்ப, ‘இப்பல்லாம் எங்ககேயும் இப்படி ஒரு ஊஞ்சல் கிடைக்காது, அதனால எனக்கு தான் ஊஞ்சல் வேணும், எனக்குத் தான் ஊஞ்சல் வேணும்’னு அவங்க பசங்களுக்குள்ள சரியான போட்டி.”
“கடைசியல் யாரு ஜெயிச்சாங்க ?!” என்று ஆர்வமானான்.
“யாரும் ஜெயிக்கலேப்பா. பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஆளாளுக்கு சொல்லிப் பார்த்தும் யாரும் ஒத்துக்கலை. அதனால அப்படியே போட்டு, யாருக்கும் பயனில்லாமப் போச்சு அந்த ஊஞ்சல் !” என்று முடித்தாள்.
“எனக்கு இந்தக் கதை பிடிக்கலம்மா…” என்று தேம்பினான்.
“தம்பீ… ராத்திரில தூங்கறதுக்கு முன்னாடி அழக்கூடாது. பாரு, சமத்துல்ல, உங்க அப்பா வரட்டும், உனக்கு ஒரு ஊஞ்சல் வாங்கித் தரச் சொல்றேன். பேசாமத் தூங்கு” என்று ஆறுதல்படுத்தினாள்.
“நீ தான் இந்த குட்டியூண்டு வீட்டுல மாட்ட எடம் இல்லேன்னுட்டியே ! எனக்கு ஊஞ்சலே வேணாம்.” என்று தூங்கிப் போனான் சௌந்தர்.