உழைப்பும் பிழைப்பும்!





சொத்து விலை உச்சத்துக்குச்சென்றதால் விதைக்கும் காட்டின் அளவையும், உழைக்கும் நேரத்தையும் குறைத்துக்கொண்டார் விவசாயி குப்பையன். வயல் காட்டில் இறங்குவதற்கு மறுத்தார். வேலை செய்வதையே வெறுத்தார்.

காலையிலெழுந்து காட்டிற்குள் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே குடும்பத்தினருடன் வெட்டி நியாயம் பேசி பொழுதைப்போக்கினார். உறவுகளின் விசேசங்களுக்கு வாரக்கணக்கில் சென்று தங்கினார். முன்பு போல் சேமிப்பதில்லை. யோசிக்காமல் மனம் போன போக்கில் ஆடு, மாடுகளை விற்று செலவு செய்தார்.
“அடப்போங்கப்பா…. பாடு பட்டு, பாடு பட்டு ஒன்னும் மிச்சமாகாத இந்த பூமி, பாடு படாமயே நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமா வெலை கூடிட்டே போகுது. ஒன்னி என்னத்துக்கு நானும் மாங்கு, மாங்குன்னு பாடு படோணும்? வெய்ய, வேணல்ல மாடு, கன்னு மேய்க்கோணும்? பத்து செண்ட வித்தா ஒரு கோடியாச்சு. பத்தேக்கறா கெடக்குது. பத்துத்தலை முறைக்கு வித்துத்திண்ணாலும் தீராது. ஒரு கோடிய பேங்குல வட்டிக்கு போட்டாலே சோத்துக்கு இழுத்துட்டு கெடக்கும்” உறவினரும், ஆசிரியருமான தங்கசாமியிடம் மனம் திறந்து மகிழ்ச்சியுடன் பேசினார்.
“உன்ன மாதிரியே எல்லாரும் சொத்த வித்துத்திங்க ஆரம்பிச்சா வெவசாயம் ஆரு பண்ணறது? ஆடு, மாட்ட ஆரு காட்டுக்குள்ள அவுத்து உடறது? நல்ல பாலுக்கு எங்க போறது? பாலு ஒரு படி ஐநூறுன்னாலும் கெடைக்காமப்போனா எப்படி ஊருல பொறக்கற கொழந்தைக உசுரு வாழும்?”
தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தங்கசாமி.
“நீ பொழைக்கத்தெரியாதவன். பொது நாயம் பேசியே பொழைக்கத் தெரியாமப் போனவன். ஊரும், நாடும் எப்படிப்போனா நமக்கென்ன? நாம இருக்கற வெரைக்கும் சொகமா வாழற வழியப்பாக்கோணும். பத்து வயசுல பாடு பட ஆரம்பிச்சு அறுபது வரைக்கும் வேகாத வெயில்லயும், சேத்துக்காட்லயும், வேத்துக்கொட்டற வேர்வையோட படாத பாட்டப்பட்டாச்சு. வாயக்கட்டி, வயத்தக்கட்டி மிச்சம்பண்ணி போற போது தலைக்கா கட்டீட்டு போகப்போறோம்” குப்பையனின் பேச்சை ரசிக்கவில்லை சம வயதுள்ள மாமன் மகன் தங்கசாமி.
“பணம், பணம்னு எல்லாத்தையும் பணமாக்கிட்டா பசிக்கு பணத்தையா திங்க முடியும்? ஊழல் பண்ணி சம்பாதிச்ச கருப்பு பணத்த வெள்ளாம வெளையற தோட்டத்துல போட்டு வெள்ளையாக்கப்பார்க்கிறாங்க. வெளையற மண்ணு இப்ப வெறுங்காடா மாறீட்டு வருது.
ஏழை பாலை ஆடு, மாடு மேச்சுப்பொழைச்சிட்டிருந்த காடுகளை கம்பி வேலி போட்டு பூட்டிப்போட்டா அந்த ஏழைகள், கோயில், கொளத்துச்சேரி பிச்சையெடுக்கத் தாம் போகோணும். காலங்காலமா வாழ்துட்டு வந்த வாழ்க்கை முறையை கெடுத்து தொலைச்சுட்டு வாராங்க. படிச்ச சமுதாயம் பணத்தாச புடிச்சு பாழாப்போகுது. படிப்ப சொல்லிக்கொடுத்த எனக்கே வேதனையா இருக்குது. உன்ற அப்பங்காரன் உன்னமாதர சொத்த வித்திருந்தா இப்ப நீ உக்கார கோமணத்தகளம் கூட எடமில்லாம எவனாச்சுங்கிட்ட பண்ணையத்துல சேந்து பாடுபட்டுட்டு இருந்திருக்கோணும்…” கோபமாக சொன்னவருக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.
‘அப்பா தனது சொத்துக்களை விற்றிருந்தால் நமக்கு இந்த சொத்து விற்க இருந்திருக்காது. நாம் நமது சொத்துக்களை விற்று விட்டால் நம் வாரிசுகளுக்கு எதுவும் இருக்காது’ எனும் தங்கசாமியின் கருத்து தனது எண்ணத்தை மாற்றுவதை உணர்ந்தார் குப்பையன்.
“உழைச்சுக்கிடைக்காம ஈசியா கெடைக்கிற பணம் இயல்பான நம்மோட வாழ்க்கையையே மாத்திப்போடும்னு தெரியுமா உனக்கு? ஊர்ல, நாட்ல, ஒலகத்துல வாழற எல்லாருத்துகிட்டையும் பணம் அளவுக்கு மீறி இருந்துச்சுன்னா ஒருத்தங்கூட அவங்கவங்க வேலைய செய்ய மாட்டாங்க. ஆருமே சிரமப்பட்டு படிக்க மாட்டாங்க. இயற்கையமைப்பு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்திருக்குது பாத்துக்க. நம்மளுக்கு கொடுத்திருக்கிற வேலையை நாம செய்யாம உடறது இயற்கைக்கு நாம செய்யற துரோகமாக்கும். ஒடம்புல காது, மூக்கு, வாய்,கை, கால்கள், இதயம்னு எல்லாமே செரியா இயங்குறதுனால தான் நாம உசுரு வாழ முடியுது. இந்த ஒலகமே நம்ம ஒடம்பு மாதர. அதுல நாமும் ஓர் உறுப்பு மாதர. நாம நம்ம வேலைய செய்யலேன்னா இயற்கைங்கிற ஒடம்பு படுத்துக்கும். இயற்கை படுத்திருச்சுன்னா நாமலும் நோயோட, பசியோட படுத்துக்கிற நெலமையாயிரும்” எனும் ஞானத்தைக் கொடுக்கும் ஆசிரியர் தங்கசாமியின் பேச்சால் மனம் மாறிய குப்பையன், வேட்டியை அவிழ்த்து கொய்யா மரத்தில் வைத்து விட்டு, இடுப்பில் கட்டிய கோவணத்துடன் மம்பட்டியை எடுத்துக்கொண்டு நீர் பாய்ச்ச வயலுக்குள் இறங்கினார்.
கடந்த சில மாதங்களாக உறக்கமின்றி சிரமப்படுவதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்த குப்பையன், இன்று வயலுக்குள் வேலை செய்து விட்டு வந்து படுத்தவுடன் உறங்கிப்போனதைக்கண்டு அவரது மனைவி குப்பாயி மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.