உழைப்பின் பயன்
ஒரு விவசாயிக்குத் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த விவசாயியின் நான்கு மகன்களும் படு சோம்பேறிகள். ஆதலால் அவர்களுடைய எதிர்காலம் பற்றி விவசாயி மிகவும் கவலை கொண்டார். அவர்களுக்கு எப்படியாவது நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினார்.
எதிர்பாராமல், விவசாயி, திடீரென நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி நின்றார்.
அந்தச் சமயத்தில் தனது நான்கு பிள்ளைகளையும் அழைத்து, “”நான் மிகவும் பாடுபட்டு உருவாக்கிய நமது தோட்டத்தில் செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளேன். அதைத் தேடி எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு உயிர் நீத்தார்.
நான்கு பிள்ளைகளும் செல்வத்தைத் தேடி, தோட்டத்தில் அங்குமிங்கும் குழி தோண்டினர். எங்கும் செல்வம் கிடைக்காததால் சலிப்பு எற்பட்டு மூன்று பிள்ளைகள் வேறு இடம் தேடி வேலைக்குச் சென்று விட்டனர்.
நான்காவது மகன் மட்டும், தன் தந்தையின் சொல் பொய்யாகாது என எண்ணி, முயற்சியுடன் தோட்டம் முழுவதையும் கீழ்மேலாகப் புரட்டிப் பார்த்தான். ஆனாலும் அவனுக்கும் புதையல் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால், நன்றாக உழப்பட்ட தோட்டத்தில் அந்த ஆண்டு பயிர் அமோகமாக விளைந்தது.
தந்தையின் வாக்கின் உட்பொருளைப் புரிந்து கொண்டான். நன்கு உழைத்தான். பயன் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினான்.
-தேனி முருகேசன்(ஆகஸ்ட் 2012)