உள்ளத்தில் ஊனமில்லை!




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் இந்தத் தெருவின் இந்த வீட்டுக்கு குடியேறி இரண்டு நாட்கள் தான் ஆயிற்று. வாடகை வீடுதான். சிறியது. என் ஒருவனுக்குப் போதுமானது வேறொரு ஊரில் பாங்க் கிளர்க்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மாற்றல் வந்ததால் இந்த ஊருக்கு வந்துவிட்டேன். நான் ஒரு தனிக்கட்டை. திருமணத்தை எதிர்பார்த்த்துக் கொண்டிருப்பவன்.

நான் குடியிருக்கும் தெருவில் கொஞ்சம் கலர் மயம் அதிகம் தான். ஆகவே பேரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அந்தத் தெருவில் நடக்கும் போதெல்லாம் என் கண்கள் பூமியை நோக்கியே இருக்கும்.
இருந்தாலும் அவ்வப்போது எதிர்வீட்டு ஜன்னலைப் பார்க்கத் தவறுவதில்லை. ஜன்னலில் அந்த வீட்டுப் பெண் எதிர்ப்படுவாள். என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்முறுவல் பூத்து பேருக்கு கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொள்வாள். நாளடைவில் ஜன்னலில் நான் அவளை எதிர்பார்த்திருப்பதும், அவள் என்னை எதிர்பார்த்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இது வரவர மூன்றெழுத்தாகவே மாறிவிட்டது. அதுதான் காதல்!
இத்தனைக்கும் நான் அவளை வெளியில் பார்த்ததேயில்லை. அவளும் வெளியில் வருவதேயில்லை. ஜன்னலோடு சரி. அவள் ஏன் எப்போதும் வீட்டிலேயே இருக்கின்றாள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அவளை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லி தனியே சந்தித்து ஆசை தீர பேச வேண்டும் என்றெல்லாம் அவ்வப்போது மனதிற்குள் ஆசைகள் அலைமோதுவதுண்டு. முதலில் அவளை முழு உருவமாகவாவது பார்த்துவிட வேண்டுமென்று தீர்மானித்தேன்!
அதற்காகவே, இதுநாள் வரை அந்தத் தெருவிலே யாரிடமும் பழகாமல் இருந்த நான், அவளது அப்பாவிடம் பேச்சுக் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பழக ஆரம்பித்தேன்.
பழக்கம் அதிகமானதால், அவர் என்னை வீட்டுக்கு அழைத்தார். அழைப்பை ஏற்று வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருந்தேன்.
எனது கண்கன் அங்குமிங்குமாக துழாவியது அவளைத் தேடித்தான்! சற்று நேரத்தில் ஒரு டம்ளரில் காபி கொண்டு வந்தாள் அவள், நொண்டிய கால்களுடன்! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! இத்தனை அழகான பெண்ணுக்கா இப்படிப்பட்ட ஊனமான கால்கள். அதுவும் நான் காதலிக்கும் பெண்ணுக்கு!
எண்ணங்கள் சிதறியது . மனதிற்குள் நொந்தேன். எனக்குள் கோபப்பட்டேன்! எல்லாம் ஒரு நொடிக்குள்!
மின்னலாக ஒரு முடிவுக்கு வந்தேன்.
‘அழகில்லையென்று என்னை வெறுத்து ஒதுக்கிய என் அத்தை மகளைவிட, உள்ளத்தில் ஊனமான திமிர் பிடித்த அவளைவிட, அழகில் சிறந்த, குணத்தில் உயர்ந்த, உடலில் ஊனமிருந்தாலும், உள்ளத்தில் ஊனமில்லாத இவளையே திருமணம் செய்து கொள்வதென்று!
அதன்படி அடுத்த வாரமே பெண் பார்க்க வரச் சொல்லி, என் பெற்றோர்க்கு கடிதம் எழுதி இன்றே அஞ்சலில் சேர்த்துவிட்டேன். மனம் நிறைவானது எனக்கு!
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்