உலகமெல்லாம் வியாபாரிகள்






(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

“உலகமெல்லாம் வியாபாரிகள்” – 1978ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலாகும். 1978க்கும் 1990க்கும் இடையில் நடந்த விடையங்களை பின்னோக்கிப் பார்த்தால் இவ்வளவு மாற்றமும் எங்கள் தமிழ் சமுதாயத்தில் நடந்திருக்கின்றதா என்று ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. 1970–1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் மக்களிடையே காணப்பட்ட பிரச்சினைகளை இந்நாவல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் சில கோட்பாடுகள் பண்பாடு என்ற போர்வைக்குள் ஒருத்தரை ஒருத்தர் சுரண்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்கள் முதலானவற்றின் அனுபவப் பிரதிபலிப்பாக இந்நாவல் காணப்படுகின்றது. 1970 களில் இலண்டனுக்குச் சென்ற முற்போக்கான பல தமிழ் இளைஞர்களை இந்நாவல் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. – இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்.
அத்தியாயம்-1
கலைகள் எந்த உருவில் இருந்தாலும் சரி. இசையாகட்டும், இயலாகட்டும், நாடக உருவிலாகத்தான் இருக்கட்டும். மக் களின் பிரச்சனைகளையும் அவர்கள் வாழும் காலத்தின் முரண் பாடுகளையும், தெரிவிக்காதவரை அது உண்மையான கலை யாகாது. இன்று இந்த மண்டபத்தில் கூடியிருக்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் தெரியும், இன்றைய சிங்கள அரசியல மைப்பில் எங்கள் நிலை என்ன என்று, எங்கள் நிலையைத் தெளிவாக உணர்த்துவதற்கும், சில குழுக்களிடம் பரவலாகக் கிடக்கும் அபிப்பிராய பேதங்களைக் களைவதற்காகவும் இந்தக் கலை விழா உதவும் என நம்புகிறேன்.
“இலங்கையில் தமிழர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், சிங்களவர் அடக்கப்பண்ணுபவர்களாகவும் இருக்கிறார்கள். போதாதற்கு இந்த அடக்குமுறையை மக்களுக்காக மக்களாற் தேர்ந்தெடுக் கப் பட்டதென்ற ஜனநாயக அரசின் அமைப்பு முறை என்று போற்றுகிறார்கள். எங்கள் இனம் இந்த அடக்கு முறையால் பட்ட சேதம் போதும். பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை வைத்து நாம் பட்ட அனுபவங்கள் குழந்தைகளுக்குக் கிடைக் கக் கூடாது என்பதற்காக எங்கள் இனத்தின் விடுதலைக் கான போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம். எங்களால் இன்று உண்டாக்கப்படும் கலைகள் எங்கள் வரும் கால சந்ததியினரின் விடுதலைக்கும் உரிமைப் போராட்டத் திற்கும் உணர்ச்சியூட்டுவதாக இருக்கவேண்டும்.”
நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிர்க்க அவன் பேசிக் கொண்டிருந்தான். ‘மைக்’ சரியாக வேலை செய்யாமல் மேடையில் சரியான முரண்டு பண்ணிக்கொண்டிருந்தது. வெளிச்சம்கூட இல்லை. ஆனால் இதொன்றும் அந்த மண்ட பத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தமிழரின் கண்களுக்குத் தெரியவில்லை. ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து வந்தும் தங்கள் மொழி, இன உணர்ச்சியால் உந்தப்பட்டதன் தெளிவு அவர்கள் முகத்தில் இருந்தது.
கார்த்திகேயனின் உணர்ச்சிமயமான பேச்சால் சில தாய்மார் களின் கண்களில் நீர் கூடத் துளிர்த்தது.”எங்கள் காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள்… என்று தொடங்கி கார்த்திகேயன் எழுபத்தியேழாம் ஆண்டின் கலவர நிலையை விளக்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த பெண் விம்மியழுது விட்டாள். இலங்கையில் நூற்றுக்கணக்காக இறந்த தமிழர்களில் அவளும் தன் தம்பியை, தாயை இழந்திருக்கலாமோ?
சகுந்தலா மேடையில் பார்வையைப் பதித்தாள். கார்த்தி கேயனின் பேச்சு முடிய குழந்தைகளின் கோலாட்டம் நடந் தது. திறமையான கண்காணிப்பில் அமைக்கப்படாததாய் இருந்தாலும் தமிழ்க் குழந்தைகளின் களிப்பு பொங்கும் முகங் கள் பார்க்கப் பரவசமாய் இருந்தது.
“அவர்கள் என்னம்மா செய்கிறார்கள்” குழந்தை கீதாஞ்சலி தாயைக் கேட்டாள். “கோலாட்டம் ஆடுகிறார்கள்; நீ வளர்ந்த பிறகு சொல்லித் தருகிறேன்.” தாயின் உறுதி மொழிக்குப் பின் குழந்தையின் கவனம் இன்னும் கூடியது. தாயின் சிந்தனை எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. ஐந்து வருடங்களின் பின் கார்த்திகேயனை மேடையில் திடீரெனக் கண்ட திகைப்பு அவளை விட்டு இன்னும் அகலவில்லை. எவனைக் காணக்கூடாதென்று ஐந்து வருடம் ஒழித்துக் கிடந்தாளோ அவனை வந்து ஒரு கிழமைக்கிடையில் கண்டாயிற்று. அவன் தன்னைக் கண்டிருப்பானா?
உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது அவளுக்கு. தற்செய லாக நேருக்குநேர் கண்டால் என்ன செய்வது. கடவுளே அந்தத் தர்மசங்கடமான நிலையை எனக்குத் தராதே. கஷ்ட மான நேரங்களில் எல்லாம் கடவுள் கைகொடுத்தால் உலகத் தில் ஏன் துன்பங்கள் மலிந்து கிடக்கின்றன. நானும் வரட் டுமா கலைவிழாவுக்கு என்று தகப்பனைக் கேட்டபோது பேரின்பநாயகத்தார் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடி யாமல் தவித்தது போன்று தெரிந்தது அவளுக்கு. இப்போது விளங்குகிறது பேரின்பநாயகத்தார் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று.
இருக்காதா அவருக்கு? ஐந்து வருடங்களுக்கு முன் அவனைத் தானே உருப்படியில்லாத உதவாக்கரை என்று திட்டினார். “காதலாம் கத்தரிக்காயாம். இவனைச் செய்து என்ன காணப் போகிறாய். இவர் தரவளிக்கு என்ன எஞ்சினியரிங் படிப்பு! ஏதோ செய்து பிழைச்சாப் போதும் என்று திரிகினம். உமக்கு அவரில் காதலோ? தான் போக வழியில்லை தும்புத் தடிக்கு மூஞ்சுறையும் துக்கிக்கொண்டு போன கதைதான் இவர் தரவ ளியின்ர கதை. இவரை நம்பி சகுந்தலா பைத்தியத்தனமான யோசனைகளை வைத்திராதே? தகப்பன் பேரின்பநாயகத்தார் இப்படித் திட்டியபோது எதிர்க்கதை பேசாமல் போனவனின் அரசியல் பேச்சைக் கேட்க விம்பிள்டனில் இருந்து அண்டக்கிர வுண்ட் ரெயின் எடுத்து வந்திருந்து கேட்பதும் தன் தகப்பன் தான் என்பது அவளால் நம்பமுடியாமல் இருந்தது. தூரத் தில் இருக்கும் தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவர் மேடையில் பார்வையைப் பதித்திருந்தார். என்ன நினைக்கிறார் இப்போது? இவர்களுக்கென்ன தகுதி அரசியலையும் கலையையும் பற்றிப் பேச என்று நினைப்பாரா? நேற்றைய மழைக்கு முளைத்த பூண்டுகள் துள்ளுகின்றன என்றுதான் கட்டாயம் நினைப்பார். அப்பாவைப் பொறுத்த வரையில் அரசியல் பேசும் தகுதி சில படித்த மனிதர்கள்-சட் டத் தரணிகள், பாராளுமன்ற (புழுகு) வாதிகளுக்குத்தான் உண்டு.
மெல்லிய சிரிப்பு சகுந்தலாவின் உதடுகளில் நெளிந்தது,தகப் பனின் மாற்றத்தை நினைத்ததும். உண்மையாகத்தான் தமிழ்க் கலையார்வத்தில் வந்திருக்கிறரா அல்லது உந்தப் பெடிப் பிள்ளைகளின் விழல்க் கூத்தை விண்ணாணம் பார்க்க வந்திருக்கிறாரா?
எத்தனையோ வசதிக்குறைவிருந்தும் நினைத்ததை விடத் திறமையாக நடந்து கொண்டிருந்தன நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் முடிய கையிலுள்ள புரோக்கிராம் பேப்பர் துண் டைப் பார்த்துக்கொண்டாள். கடைசி நிகழ்ச்சி முடிவதற் கிடையில் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டால் தற்செய லாக என்றாலும் கார்த்திகேயனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது.
சரியான ஒழுங்குகள் இல்லாமல் நிகழ்ச்சிகள் இழுபட்டுத் கொண்டிருந்தன. குழந்தை கீதாஞ்சலி மடியில் படுத்து நிக் திரை. தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் யாரோ ஒருத் தருடன் மும்முரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சிகள் முடிய முதலே குடும்பக்காரர்கள் குழந்தைகளுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி நிரலின்படி இரவு பத்துமணிக்கு முடிகிறது. இப் போதே இரவு பத்தரைக்குமேல். மீனா வந்து காத்துக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கு ஞாபகம் இருக்குமா; அல்லது போய்ச் சொல்லவேண்டுமா?
குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தகப்பன் இருக்கும் இடம் தேடிப் போனாள்.
ஹலோ கூப்பிட்ட குரலுக்குரியவனை அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஐந்து வருடமென்ன? இன்னும் ஐந்நூறு வருடங்கள் அவள் உயிரோடிருந்தாலும் கார்த்திகேயனின் குரலை அவளால் மறக்க முடியாது.
அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கேட்காத மாதிரிப் போகலாமா? என்று நினைத்தாள்.
‘ஹலோ சகுந்தலா’ அவனின் குரலில் கோபத்தின் சாயல் இருக்கிறதா என்று ஆராய அவளால் முடியவில்லை. எவனைக் காணாமல் ஓடவேண்டுமென்ற உந்தலில் நிகழ்ச்சிகள் முடிய முதலே எழுந்தாளோ அவன் அவள் முன் நிற்கிறான்.
‘ஹலோ’ ஏதோ தன் குரலே தன்னால் அடையாளம் காண முடியாத மாதிரி மாறிப்போனதுபோல் இருந்தது அவளுக்கு. பூமி பிளந்து அப்படியே விழுங்கிக் கொள்ளாதா என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநேரம் இருவருக்கும் என்ன பேசுவ தென்றே தெரியவில்லை. ஏன் எனக்கு முன்னால் வந்து நிற்கிறீர்கள், தெரியாமல் போய்த் தொலைப்பதற்கென்ன? என்று கேட்கத் துடித்தாள். நா வரண்டு வாய் வரவில்லை கதைக்க.
”மீனா சொன்னாள் நீர் வந்திருப்பதாக” அவன்தான் மீண்டும் கதைத்தான். அவள் உம் கொட்டினாள். பார்வை இன்னும் எங்கேயோ இருந்தது. அவனைப் பார்க்கத் தைரிய மில்லை அவளுக்கு.
“மீனாவின் கல்யாணத்தைக் குழப்பும் நாசகார வேலைக்கு நீர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டன்’ அவனின் குரலில் நையாண்டி இருப்பதாகப் பட்டது அவளுக்கு.
‘நாசகாரவேலைக்கு’ அழுத்தம் திருத்தமாக இன்னுமொரு தரம் சொன்னான். முதல் தான் சொன்னது தற்செயலாக அவளுக்குக் கேட்டிருக்காவிட்டாலும் என்ற சந்தேகமா? முதற் தரம் அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவள் பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மேடையில் கண்டதை விட அருகில் பார்க்கும்போது அவன் முகம் வித்தியாசமாகத் தெரிந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த அதே சிரிப்பு, முகம், நடை, உடை, பாவனை.
“என்ன பார்க்கிறீர் திருமதி சிவனேசன். அடியேனின் பெயர் தற்செயலாகத் தங்களுக்கு மறந்திருந்தாலும்…!” அவன் கண்களில் குறும்பு தவழ்ந்தது. அவன் தன் வேதனையை மறக்க அப்படி நடக்கிறானா! அல்லது தன்னை அவமானம் செய்யும் யோசனையில்… அவளால் சிந்திக்க முடியவில்லை.
சகுந்தலாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருமாற் போல் இருந்தது. ‘ஷட்அப்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது, அவனை நேரில் கண்டால் எப்படி நடந்து கொள்வான் என்று அவளால் முடிவுகட்ட முடியாமல் இருந்தது. முன்பின் தெரி யாதவன் மாதிரிப் போவானா அல்லது துரோகி, சண்டாளி என்று திட்டுவானா? என்றெல்லாம் யோசித்திருக்கிறாள்.
அவன் என்னவென்றால் மூன்றாம் பேர்வழிபோல் — மூன்றாம் பேர்வழியில்லாமல் யார் அவன் அவளுக்கு இப்போது!
மேடையில் கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்துவிட்ட தற்கான அறிகுறி. மண்டபத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரேயடியாகக் கதைக்க வெளிக்கிட்டதால் பலதரப்பட்ட ஓசை கள் பல திக்குகளிலுமிருந்து ஒலித்துக்கொண்டிருந்தன. சகுந்தலாவைப் பொறுத்தவரையில் யாருமில்லாத தனிக் காட்டில் அகப்படக்கூடாத இடத்தில் அகப்பட்டதுபோல இருந்தது. தோளில் குழந்தையின் பாரம் அழுத்தியது. ”குழந்தை நித்திரையா’ அவன் கேட்டான்.
“உம், அதுதான் வெள்ளணப்போக வெளிக்கிட்டன்” அவள் சமாதானம் சொன்னாள். தற்செயலாக அவன் கேட்டாலும் ஏன் நிகழ்ச்சிகள் முடியமுதல் ஓடுகிறீர் எனக்குப் பயந்தா? என்று.
“யார் தங்கச்சி சகுந்தலாவோ’ தங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்த பெண்மணி திரும்பி நின்று கேட்டாள். சகுந்த லாவின் முகத்தில் புன்முறுவல். கார்த்திகேயனிடம் இருந்து தப்பினோம், பிழைத்தோம் என்றிருந்தது அவளுக்கு.
“என்ன கனகாலமாக லண்டனுக்கு வரவில்லை நீங்கள்” திருமதி நடராஜா கேட்டாள். பேரின்பநாயகத்தாரின் சினே கிதர்களில் ஒரு குடும்பத்து பெண்மணி.
“தங்கச்சியாருக்குக் கல்யாணம் அதான் வந்திருக்கிறா” கார்த்திகேயன் குரலில் ஒரு குறும்பும் இல்லாமல் சொன்னான்.
திருமதி நடராஜனின் முகத்தில் ஆச்சரியம் “என்ன மீனா வுக்குக் கலியாணமோ?” சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. கார்த்திகேயனில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அவன் தன்னை வேண்டுமென்றே ஆட்களுக்கு முன்னால் அவமானம் செய்வதாகப் பட்டது அவளுக்கு.
“அவர் சும்மா சொல்கிறார். கனகாலமாக லண்டனுக்கு வராததால் பெரிய பகிடி இவருக்கு” கார்த்திகேயனை முறைத்தபடி சொன்னாள் சகுந்தலா.
“அதுதானே பார்த்தன் தெரிஞ்ச ஆட்கள் ஒருத்தருக்கும் சொல்லாமல் உமது தகப்பன் உமது கல்யாண வீட்டை நடத்தியதுபோல் மீனாவின் கல்யாணத்தையும் நடத்தினால் சினேகிதர்களுக்குள் பெரிய சண்டைதான் வரும் எண்டு சொல்லும் உமது தகப்பனுக்கு” திருமதி நடராஜா போய் விட்டாள்.
“சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் நடத்தினார் உமது தகப்பன்” கார்த்திகேயன் ஒன்றும் தெரியாதவன் கதை கேட்பதுபோல் கேட்டான். அவளுக்கு ஆத்திரத்தில் எல்லை மீறிக் கண்கள் கலங்கின. வேண்டுமானால் என்னை வாயா ரத் திட்டுங்கள். துரோகி. ஏமாற்றுக்காரி என்று என்ன வெல்லாம் சொல்லவேண்டுமோ சொல்லித் தொலையுங்கள், ஆனால் இப்படி என்னைக் குத்தாமல் குத்திக் கிழிக்காதீர் கள்! என்று கதறவேண்டும் போல இருந்தது. சொல்ல வேண்டிய சில சொல்லப்படாமற் போகின்றன சந்தர்ப்பங்களால்.
சனங்கள் போய்க் கொண்டிருந்ததால் அவர்களைத் தாண்டி அவளால் ஓடமுடியாமல் இருந்தது.
“என்ன என்னிடமிருந்து ஓடப்பார்க்கிறீரா?” கார்த்திகேயன் கேட்டான். கதைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தை விடாமல்.
இவர் என்ன வழக்கறிஞரா என்னை விசாரணை செய்ய. கலங்கும் கண்கள் நீர்கொட்டாமல் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
‘நீங்கள் வருவதாகத் தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக இங்கு வந்திருக்கமாட்டேன்” உணர்ச்சிவசப்பட்டு உதடுகள் துடித்தன. உண்மைகள் வெடித்துச் சிதறின வார்த்தைகளாய்.
“எனக்காக ஒளிந்து வாழச்சொல்லி யாரையும் பயப்படுத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை” அவன் சொன்னான். காதலின் மகத்துவம் மன்னிப்பதிலும் மறந்துபோவதிலுமா இருக்கிறது?
அவளின் பொறுமை எல்லை மீறியது. “என்னை வேண்டுமானால் மனம்போனபடி திட்டுங்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கதைக்க வேண்டாம்” வேதனையில் அவள் சொற்கள் தடுமாறின. அவள் கண்களில் துயரத்தின் சாயை தவழ்ந்து மறைந்தது. “சொறி சகுந்தலா” மெல்லச் சொன்னான் பெருமூச்சுடன். காதலர்கள் பொய்மையுடன் இருந்ததாகச் சரித்திரம் இல்லை.
“இப்படியெல்லாம் மனவேதனை வருமென்றுதான் இவ்வ ளவு நாளும் லண்டனுக்கு வராமல் இருந்தேன்” அவளின் குரல் சோகமாக இருந்தது.
“இப்ப மட்டும் ஏன் வந்தீர். தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கவா வந்தீர்? அமெரிக்கா விலிருந்து இங்கு வந்து மாப்பிள்ளை வேட்டையாட கன செலவாகியிருக்குமே. உமது அப்பர் மலிவாக ஒரு விளம்பரம் போட்டிருப்பாரே மாப்பிள்ளை தேவை என்று. அதற்குக்கூட கஞ்சத்தனம் காட்டியிருப்பார்” அவன் பொரிந்து தள்ளினான்.
“ஏன் அப்பாவில் இன்னும் இப்படி எரிச்சல் படுகிறீர்கள்” அவளுக்குத் தெரியும் எத்தனையோ காரணம் இருக்கும் எரிச்சலுக்கென்று.
”உமது அப்பாவிடம் தனிப்பட்ட முறையில் எனக்கொரு கோபமும் இல்லை. அரசியல் விஷயங்களில் அவர் செய்யும் தகிடு தத்தமான வேலைகள் உமக்கென்ன தெரியும். அவ னின் குரலில் ஆத்திரம் வெடித்தது.
“உங்கள் அரசியல் பேச்சைக் கேட்க நான் வரவில்லை. பிள்ளையும் தோளில் போட்டுக்கொண்டு” அவள் அலுப்புடன் முணுமுணுத்தாள்.
”பின்னர் என்ன பொழுதுபோக்குக்காக வந்தீரா? உமது தந்தையைப் போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒரு பொழுது போக்குத்தானே! படிப்பு, பட்டம், பதவி, நல்லவேலை இவை யெல்லாம் தேடியபின் பொழுதுபோக, ஒரு சுவையான பொழுதுபோக்காகத்தானே அரசியலைப் பாவித்து ஒரு இனத் தையே படுகுழிக்குள் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலங்கையில்’ அவன் குரலில் ஆத்திரம் வெடித்தது. அவள் இன்னும் நின்று கேட்டுக்கொண்டிருந்தால் வீண் சண்டை வரும் என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டுபோக வெளிக்கிட்டாள்.
“சகுந்தலா’” அவன் கூப்பிட்டான். எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தாள். அவள் வாய் திறக்க முதல் பேரின்பநாயகத்தார் அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
கார்த்திகேயனையும், தன்னையும் ஒன்றாகக் கண்டு தகப்பன் என்ன நினைக்கப்போகிறார் என்று ஒருகணம் நினைத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
உமது தந்தைக்குப் பயந்து ஓடியகாலம் மலையேறி விட்டது என்பதுபோல் அவளைப் பார்த்தான் கார்த்திகேயன். அவர் கள் நினைத்ததுபோல பேரின்பநாயகத்தார் அவர்கள் இரு வரையும் ஒரேயடியாகக் கண்டு திடுக்கிட்டதுபோல் இருந்தா லும் சமாளித்துக்கொண்டு கார்த்திகேயனைக் கண்டு ஒரு அசட்டுச் சிரிப்பை அவிழ்த்து விட்டார்.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்ற கருத்தில் சகுந்தலா வைப் பார்த்தான் கார்த்திகேயன். அவர் சும்மா சிரிக்கும் பேர்வழியா?
“தம்பி கார்த்திகேயன் உங்களைப் பற்றித்தான் விசாரித்துக் கொண்டிருந்தன். நல்லகாலம் இஞ்ச நிக்கிறியள்.” அவர் தன் விலை உயர்ந்த சூட்டின் கோட்டுப் பைகளுக்குள் கை களை விட்டுக்கொண்டு கார்த்திகேயனை நிமிர்ந்து பார்த் தார். பொய்மையும் புழுகும் என்ற சொற்களுக்கு அடுத்த பெயரா அவருடையது.
தம்பி கார்த்திகேயனாம்; பேரின்பநாயகத்தாரா கதைக் கிறார்? சகுந்தலாவுக்கு நேற்றுப்போல் இருக்கிறது தகப்ப னார் சண்ட மாருதமாய்ச் சீறி விழுந்த காட்சி, கார்த்தி கேயன் தலைகுனிய மாடிப்படிகளில் நின்றுகொண்டிருந்தான் வாய் பேசாமல். சகுந்தலாவின் ஒன்றுவிட்ட தமையன் ராமநாதன் மாடியின்மேல் நின்றிருந்தான் வாய்பேச வழி யில்லாது. மீனா பயத்துடன் முன் அறையால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பேரின்பநாயகத்தார் இடி மழையெனப் பொரிந்து தள்ளினார்.
“மானம் மரியாதை இருந்தால் இனி இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்காதே. உமது சினேகிதனுடன் கதைப்பதா னால் ரோட்டில் தெருவில் வைத்துக் கதைத்துக்கொள். இது குமர்ப் பிள்ளைகள் இருக்கிற வீடு. கண்டவன் வந்துபோற சத்திரம் இல்லை,”
அப்படி சொன்னவர் இன்று தம்பி கார்த்திகேயனாம். “ஏன் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். மீனாவின் கல்யாண வீட்டுக்கு வரச்சொல்லியா? அதுதான் சகுந்தலா சொல்லிக்கொண்டிருந்தா. பெரிய அமர்க்களமாக நடக்கும் போலக் கிடக்குது.” குரலில் ஒரு துளியும் நையாண்டி இல்லை. ஆனாலும் அவளுக்குத் தெரியும் தங்களை எப்படி மனதுக்குள் கிண்டல் பண்ணுகிறான் என்று.
“சும்மா கிடங்கோ தம்பி, இந்தச் சின்னப்பெட்டகத்தை விடுங்கோ. மீனாவின்ர ஆட்டத்தைத்தான் நாங்கள் ஒருகை பார்க்கிறம் என்றிருக்கிறம். புத்தியில்லாத பெண்கள் சொன் னால் அவர்கள் விருப்பப்படி விடுகிறதா?” அவர் தூக்கி யெறிந்து கதைத்தார். கார்த்திகேயனின் முகத்தில் கோபம் துளிர்ப்பது தெரிந்தது. சகுந்தலாவுக்குப் பயம் பிடித்தது. அவர்கள் எப்படியும் அடிபடட்டும், அரசியல் விஷயமாகட் டும், சொந்தப் பிரச்சனையாகட்டும் அவளில்லாத இடத்தில் அடிபடட்டும். அவளுக்கு முன்னால் என்ன நடந்தாலும் அந்த நிகழ்ச்சியால் அவள் வாழ்க்கையில் எப்படிப் பாதிப்பு ஏற்படும் என்று தெரியும்.
”உம்முடைய கள்ளக் காதலனுக்கும். உமது தகப்பனாருக் கும் உம்மாலா சண்டை வந்தது” என்று அவள் கணவன் சிவநேசன் குரூரமாகக் கேட்கத் தயங்கமாட்டான்.
“என்ன தம்பி நீங்கள் தமிழ், தமிழ்க் கலாச்சாரம் என்று கதைக்கிறியள். மீனா மாதிரிப் பெண்கள் வெள்ளைக்கார ரைக் கல்யாணம் செய்வது பிழை என்று சொல்லமாட்டீர்கள் போலக் கிடக்கு” அவர் முகத்தில் இன்னும் அசட்டுச் சிரிப்பை விடவில்லை. அவனுக்கு நன்றாகத் தெரியும் தன் னுடைய சொந்த வாழ்க்கையில் சில்வியாவுடன் வாழ்வதையும் வைத்துத்தான் இப்போது மீனாவின் சாட்டில் கிண்டல் செய்கிறார் என்று.
”கல்யாணம் செய்வது அவர்கள் சொந்த விசயம். தனக்குரிய ணையைத் தானே தேர்ந்தெடுக்கத் தேவையான அறிவுடன் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அதாவது எங்கள் தமிழ் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பதே சந்தோசமான செய்தியில்லையா! ஒரு ஆளுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி. பெண்ணுக்கு ஒரு நீதி, ஒரு சாதிக்கு ஒரு நீதி, ஒரு சட்டம் என்று நாங்கள் பாத்து இந்த நிலமைக்கு வந்தது போதாதா” கார்த்திகேயனின் குரல் கடுமையாக இருந்தது. சகுந்தலா தர்மசங்கடமான நிலையில் தகப்பனைப் பார்த்தாள்.
‘’என்ன தம்பி சொந்த வாழ்க்கையையும், அரசியலையும் ஒன்றாக்கிக் கதைக்கிறீர்கள்.” பேரின்பநாயகத்தார் விட்டுக் கொடுக்காமல் கேட்டார்.
அரசியலும், தனிப்பட்ட வாழ்க்கையும் தனித்தனியானவை அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் கொடுக்கத் தயங் காதவர்கள் தாங்கள் தமிழர் என்று சிங்கள ஏகாதிபத்தியத்திடமும் சுதந்திரம் கேட்கப் போவதில்லை. தன்னைவிடக் குறைந்ததாகச் சிலரை வைத்துக்கொண்டு, சாதி அடிப்படையிலோ, தனிப்பட்ட அடிப்படையிலோ அவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்து அன்றாட பிரச்சனையைச் சமாளிக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட தலைவர்களாற்தான் எங்கட தமிழ்ச் சமுதாயமே இப்படி இருக்கிறது. கார்த்தி மென்மையாகச் சொன்னான். கார்த்திகேயன் என்ன அர்த்த சாம யுத்தம் நடத்தத் துணிந்துவிட்டானா? நேரம் என்ன இருக்கும். நடுச்சாமமாய் இருக்காதா.
சகுந்தலா பொறுமையிழந்து விட்டாள். “குழந்தை பாவம். வசதியில்லாமல் படுத்திருக்கிறாள் அப்பா.” சகுந்தலா தகப்பனைப் பார்த்துச் சொன்னாள்.
”ஓம், ஓம் வாரும் போவம்’ பேரின்பநாயகத்தார் பின்னால் நடந்தாள். தகப்பனோ, மகளோ போய் வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை கார்த்திகேயனுக்கு. அவனைத் திரும் பிப் பார்க்க விருப்பமில்லை — தைரியமில்லை அவளுக்கு. தகப் பனைப் பின் தொடர்ந்தாள்.
சோர்ந்த முகத்துடன் போகும் சகுந்தலாவைப் பார்த்துக் கொண்டு நின்றான் கார்த்திகேயன். அவன் எதிர்பார்க்க வில்லை. அவள் கலைவிழாவுக்கு வருவாள் என்று. தானும் ஒரு பேச்சாளன் என்று தெரிந்திருந்தால் பேரின்பநாயகத்தார் கூட்டிக் கொண்டு வந்திருக்கவும் மாட்டார். சகுந்தலாவும் வந்திருக்கமாட்டாள் என்று தெரிந்தது.
பேரின்பநாயகத்தார் தன்னைத் தேடியதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஏன் தேடியிருப்பார். கடந்த ஒன்றிரண்டு மாதமாக கண்ட இடங்களில் எல்லாம் முப்பத்திரண்டு பல்லும் தெரிய புன்முறுவல் சொரிகிறார். காரணம் என்னவாக இருக்கும்.
அரசியல் ரீதியில் பரம எதிரிகள். “பாவங்கள், இந்த மாண வர்கள். படிக்கவந்த இடத்தில் இந்தப் போலிப் புரட்சிவாதி களால் தவறான வழிகளில் நடந்தப் படுகிறார்கள்” என்று எதிரிகளில் ஒருவரான ஜெகநாதன் சொன்னதற்கு இவர் போல பெரியாட்கள் ஒத்துப்பாடியதாகக் கேள்வி. இப்போது என்ன கதைக்க இருக்கிறது இவருக்கு என்னிடம்.
என்ன கேட்கப்போகிறார். “தம்பி கடவுள் பேரால் கேட் கிறன் மாணவர் சங்கங்களுக்கிடையிலும், அவர்கள் இயக்கங் களுக்கிடையிலும் ஒன்றும் செய்து குழப்பாதீர்” என்று சொல் லப்போகிறாரா. அல்லது தம்பி மீனா யாரோ வெள்ளைக் காரனைச் செய்யப் போகிறளாம். புத்திசொல்ல அமெரிக்கா வில் இருந்து மூத்தமகளை இறக்குமதி செய்திருக்கிறன். நீங் களும் ஒருக்கா மீனாவுக்குத் தமிழ்க் கலாச்சாரத்தைப்பற்றிக் கதையுங்கோ என்று சொல்லப் போகிறாரோ?
பேரின்பநாயகத்தார் மேற்சொன்ன இரண்டு விடயங்களுக்கும் கார்த்திகேயனை கடைசிவரைக்கும் கேட்கப் போவதில்லை. வேறு என்னவாக இருக்கும்? வேறு ஏதாகவும் இருக்கட்டும். அதைப்பற்றி யோசிக்க அவனுக்கு நேரமில்லை.
மண்டபத்தில் குப்பையும் கூழமாகக் கிடந்தது. எங்கு போனாலும் தமிழர்கள் தமிழர்கள்தான். சுயநலவாதிகள். எங்களின்ர மண்டபமா? யாரோ ஒருத்தனின் உரிமைதானே? என்பதுபோல் பேப்பரும் குப்பையுமாய்க் கிடந்தது.
“நீங்கள் எங்களுக்காக நிற்கவேண்டாம்” என்றான் சலீம். நாடகத்துக்குப் போட்ட பவுடரைத் துடைத்து விட்டுக் கொண் டிருந்த சிதம்பரநாதன் கேட்டான் “என்னவாம் சகுந்தலா அக்கா” கார்த்திகேயன் மறுமொழி சொல்லவில்லை.
“ஏன் சகுந்தலா அக்காவுக்கு தேவையில்லாத வேலை. மீனா தான் விரும்பி யாரையும் கல்யாணம் செய்யட்டுமே? சிதம்பர நாதன் முகம் துடைத்து முடிய சேர்ட் போட்டுக் கொண்டு சொன்னான்.
“நீர் சொல்வதுதானே சகுந்தலாவுக்கு.உமக்குத்தான் சகுந் தலா மைத்துனி. அந்த உறவில் என்றாலும் கதைக்கலாம். எனக்கென்ன உரிமை இருக்கு. சகுந்தலாவிடம்போய் மீனா வுக்காகக் கதைக்க.” இப்படிச் சொன்ன கார்த்திகேயனை கருத்துடன் பார்த்தான் சிதம்பரநாதன். உங்கள் இருவரின் பழைய கதைகளும் எனக்குத் தெரியும் என்பதுபோல் இருந்தது.
சிதம்பரநாதன் கார்த்திகேயனையும், சகுந்தலாவையும் விட ஐந்துவயது குறைந்தவன்தான். ஆனாலும் தங்கள் ‘கதை’ தெரியாமல் இருக்காது. சிதம்பரநாதன் சகுந்தலாவின் சொந்தக்காரன். மைத்துனன் முறை. வயது வித்தியாசத்தால் ‘அக்கா’ என்றுதான் சொல்வான் தன்னைவிட வயது கூடிய வர்களை. புவனேஸ்வரி மூலம் தெரிந்திருக்கலாம். புவனே சின் புருஷனும் ஜெகநாதனும் பேரின்பநாயகமும் எதிரிகள் அரசியலில். சகுந்தலா குடும்பத்துக்குச் சொந்தமோ இல்லையோ புவனேஸ் பேரின்ப மாமா குடும்பத்துடன் கதைக் காமல் விட்டு வருடக் கணக்காகி விட்டது. சகுந்தலா திருமண மாகி நியூயோர்க் போகும் வரை சகுந்தலா ஒன்றிரண்டுதரம் வந்திருக்கிறாள் புவனேசைப் பார்க்க. அதைவிட குடும்ப உறவு ஒன்றும் இல்லை. ஆனால் சிதம்பர நாதனை பொறுத்தவரை யில் மீனாவின் கல்யாண விடயத்தில் பேரின்பநாயகத்தாரின் முரட்டுப் பிடிவாதம் காட்டுமிராண்டித் தனமாக இருந்தது. இதைப் பற்றிச் சொன்னபோதுதான் சிதம்பரநாதனின் தமக்கை புவனேஸ் சொன்னாள் சகுந்தலாவையும் இப்படித் தான் படாதபாடு படுத்திக் கல்யாணம் பண்ணி வைத்தார் என்று.
சிதம்பரநாதனுக்கு சகுந்தலா மீனாவின் கல்யாணத்தைக் குழப்புவதற்காகத்தான் அமெரிக்காவிலிருந்து வருவதாக மீனா சொன்னபோது நம்பமுடியாமல் இருந்தது. சிதம்பர நாதனுக்கு மட்டுமல்ல கார்த்திகேயனுக்கும் நம்பமுடியாமல் இருந்தது.
தனக்கும் சகுந்தலாவுக்கும் உள்ள தொடர்பு தெரிந்து பேரின்ப நாயகத்தார் துள்ளிய காலத்தில் சகுந்தலா பட்ட வேதனை கள் ஞாபகம் வந்தன. தான் பட்ட வேதனை தங்கைக்கு வராது என்று நினைக்கிறாளா சகுந்தலா. காதலித்தும், காதலிக்கப் பட்டும் கண்ட வேதனையை சகுந்தலாவால் அறிய முடியாவிட் டால் வேறு யாரால் உணர முடியும். அப்படியிருக்க மீனா விடயத்தில் சகுந்தலா தலையிடுவதாகக் கேள்விப்பட்டவுடன் கார்த்திகேயனால் நம்பமுடியவில்லை. சகுந்தலாவில் எரிச் சலும் ஆத்திரமும் வந்தது. அந்த மனக்கொதிப்பில் அவளைக் கண்டதும் நடந்து கொண்ட விதம் அவனுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தாலும் சகுந்தலாவின் கலங்கிய கண்கள் ஞாபகம் வந்ததும் தேவையில்லாமல் சகுந்தலாவை மனவருத் தப்படுத்தி விட்டேனா என்று ஒருகணம் நினைத்தான்.
யார் நான் அவர்கள் குடும்பத்தில், தங்கையின் விடயத்தில் தமக்கையைத் தலையிடாதே என்று சொல்ல? நான் யார்? நான் யார் என்று சகுந்தலாவிடம் கேட்கலாமா ஒரு நாள்? தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன் மனத்தில் வேதனை யான அரிப்புத் தெரிந்தது. ஏன் தேவையில்லாமல் இவர்கள் குடும்பத்துப் பிரச்சினையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் மீனாவை நினைக்கப் பரிதாபமாக வந்தது.
‘‘அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை என்று சொன்னபோது நான் நினைக்கவில்லை கோடானுகோடி வரு டங்களாகக் கலாச்சாரம், பண்பு, கற்பு என்ற பெயரில் அடக் கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பெண்களின் பிரச்சினை தனிப் பட்டது என்று. அவர்களின் விடுதலை என்பது வெளியில் போய் வேலை செய்யக்கிடைக்கும் உரிமையில்லை. வீட்டிலும் அவள் கணவனுக்குச் சரிசமமாக நடத்தப்படவேண்டும். மீனா போன்ற பெண்களின் உரிமையை பேரின்பநாயகத்தார் பண்பு கற்பு, கலாச்சாரம் சொல்லி அடக்கப் பார்க்கிறார். இதை விட்டுக் கொடுப்பதா? வெள்ளைக்காரனைச் செய்வதும் அத னால் வரும் பிரச்சனைகளுக்கு ஈடுகொடுப்பதும் மீனாவின் பிரச்சனை, அதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? பெண்கள் ஒன்றும் உயிர் உணர்ச்சியற்ற கத்தரிக்காய்கள் அல்ல. அவர்களுக்கும் மூளை இருக்கிறது யோசிக்க.”சிதம் பரநாதன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
தங்கள் மாணவர் இயக்கத்துக்கு எதிராக பேரின்பநாயகத்தார் போன்ற பெரிய மனிதர்கள் போடும் தடைகளால் வெகுவாக மனம் நொந்துபோய் இருந்தான் சிதம்பரநாதன். இரண்டு மூன்று நாளைக்கு முதல் மீனாவைக் கண்டபோது மீனா, தமக்கை வரப்போவதையும் தன் குடும்பம் முழுதுமே தனக் கெதிராக போர் தொடுக்கத் தயாராக இருப்பதையும் சொன்னாள்.
“சிவனேசனும் வந்தானாமா?” சிதம்பர நாதன் கேட்டான். தெரியாது என்று தலையாட்டினான் கார்த்திகேயன். “எப்படி அமெரிக்கா பிடிச்சுதாமா?” சிதம்பரன் தொடர்ந்து கேட்டான். ”அடுத்த தரம் சகுந்தலாவைச் சந்தித்தால் அது பற்றிக் கேட்கிறேன்.” கார்த்தியின் குரலில் கிண்டல் தட்டியது.
“சிவனேசன் சரியாகக் குடிப்பானாம்” சாமான்களை எல்லாம் அடுக்கிவைத்துவிட்டு நிமிர்ந்த சிதம்பரநாதன் சொன்னான்.
என்ன கருத்தில் சொல்கிறான் சிதம்பர நாதன்? கார்த்தி நண் பனின் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் என்ன கருத்தில் சொன்னாலும் அதைப்பற்றி அக்கறைப்படும் நிலையில் இல்லை அவன்.
“அமெரிக்காவில் கணவன் குறட்டைவிட்டால் விவாகரத்துச் செய்யுமளவுக்கு சட்டங்கள் சுகமாக இருக்கிறது. கணவன் குடித்துவிட்டுக் கொடுமைப்படுத்துவதானால் இன்னும் சுக மாக எடுக்கலாம். இல்லை இதெல்லாம் சரியில்லை, குடும்பம் என்றால் எல்லாவற்றையுப் போட்டு மூடிமறைத்து வாழ வேண்டும் என்று போலியாக வாழ நினைத்தால் மனத்தை அமைதிப் படுத்த அமெரிக்கா முழுக்க மனவைத்திய நிபுணர் கள் இருக்கிறார்கள். போய் ‘ராங்குலைஸா’ குளிகைகள் எடுப்பதுதானே? அதெல்லாம் சரிவராவிட்டால் மகரிஷிகளைத் தேடி இந்தியாவுக்குப் போவது. எல்லாவற்றிற்கும் தானே அமெரிக்காவில் ‘எவரெடி’ மருந்துகள் இருக்கின்றனவே?
கார்த்தியின் குரலில் எரிச்சலும் கிண்டலும் கலந்திருந்ததை சிதம்பரநாதன் கவனிக்கத் தவறவில்லை.
மண்டபம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. சலீமும் இன்னும் சில வாலிபர்கள்களும் கதிரை மேசைகளைச் சரியாக்கிக் கொண்டிருந்தார்கள்.
சிதம்பரநாதனும், கார்த்தியும் வெளியில் வந்தார்கள். கார்த்தியின் காரை சலீம் கொண்டுவருவதாகச் சொன்னான். கூட்டத்திற்கு கொண்டு வந்த சாமான்களைக் கொண்டு வைத்துவிட்டுச் செல்லக் கார் தேவையாம்.
“என்ன ரெயினிலா போவது?” சிதம்பரன் கேட்டான்.
“இல்லை சில்வியா வருவதாகச் சொன்னாள்” சொல்லிக் கொண்டே மண்டபத்தைவிட்டு வெளியே வந்தார்கள்.
வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். அதன் நடுவே தவழும் பாதி நிலா. இரவின் அமைதியில் அந்தச் சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது. சித்திரை மாதத்துக் குளிர் காற்று முகத்தில் பட்டுத்தழுவியது. கலை நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் போய் ஒன்று இரண்டுபேர் அங்குமிங்கும் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.
மண்டபத்தின் படிகளால் இறங்கிய கார்த்தியின் கண்களில் தூரத்தே குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு நிற்கும் சகுந்தலாவின் உருவம் தெரிந்தது. இரவின் அமைதியில் மெல்லிய நிலவொளியில் அவள் உருவம் சோகமாகத் தெரிந்தது…
அத்தியாயம்-2
மீனா வந்து கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னாரே பேரின்பநாயகத்தார். இன்னும் வரவில்லையா மீனா? யோசித்துக்கொண்டிருக்கும்போது சில்வியாவின் கார் வந்து நின்றது. வழக்கமான தன் ஆரவாரமான குரலில் “ஹலோ கார்த்தி”, “ஹலோ சிதம்பரன்” என்று கூவிக்கொண்டு இறங்கினாள். ‘எப்படி கலை நிகழ்ச்சிகள்’ வந்ததும் வராததுமாகக் கார்த்தியைக் கேட்டாள்.
பரவாயில்லை. பொடியன்கள் பாவம். உள்ளதைக்கொண்டு கூடுமானவரையில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எப்படி இருந்தது நிகழ்ச்சிகள் என்பதைவிட என்ன இருந்தது என்று கேட்டிருக்கலாம். நன்றாக இருந்தன விடயங்கள். கார் கதவைத் திறக்கப்போன கார்த்தி தூரத்தில் சகுந்தலாவைப் பார்த்துவிட்டு தயங்கினான். இவ்வளவு நேரமும் மீனா வர வில்லை. மீனாவின் காரில் ஏதும் பழுதோ தெரியாது. இனி மேலும் பிந்தினால் அண்டர்கிரவுண்ட் ட்ரெயினையும் விட்டு விடப்போகிறார்கள்.
போய் கேட்கலாமா எங்களுடன் வரச்சொல்லி? நிச்சயம் பேரின்பநாயகத்தாரில் அக்கறை பொங்கி வழியவில்லை. பாவம் குழந்தையுடன் சகுந்தலா.
“சகுந்தலா அக்கா நிக்கிறா எங்க போய்விட்டார் உபதேசிப் பேரின்பர்?” சிதம்பரன் கேட்டான் எரிச்சலுடன்.
”எனக்கென்ன தெரியும்? நீர் போய்த் தேடும் உமது மாமனாரைத் தேவை என்றால்!”
பேரின்பநாயகத்தார் பக்கத்திலிருந்த டெலிபோன் பூத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார்.
“ஏன் மீனா இன்னும் வரவில்லையா” சிதம்பரநாதன் மாமனாரைக் கேட்டான்.
“காரில் ஏதோ தகராறாம். அண்டர்கிரவுண்ட் ட்ரெயினில் வரலாமோ என்கிறாள்” பேரின்பநாயகத்தார் இருளில் முணு முணுத்துக்கொண்டு வந்தார். குழந்தை சிணுங்கியது கேட் டது. “எங்களுடன் வரலாம் விம்பிள்டனில் இறக்கி விடு கிறோம்’ கார்த்திகேயன் தானாகச் சொன்னான். தகப்பன் தர்மசங்கடத்துடன் மகளைப் பார்த்தார். சகுந்தலாவின் முதற்பார்வை கார்த்திகேயனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற சில்வியாவில் தெறித்து விழுந்தது.
பாம்பின் கால் பாம்புதான் அறியுமாம்; பெண்களுக்குத்தான் பெண்களின் பார்வை விளங்குமா? கார்த்திகேயனைப் பார்த்தாள் சில்வியா. அவளுக்குத் தெரியும் பேரின்பநாயகத்தாரை. சகுந்தலா?
தெரிந்தும் தெரியாத குழப்பம் முகத்தில் தெரிந்தது. அப் போதுதான் இவர்களை அறிமுகப்படுத்தவில்லை என்ற எண்ணம் வந்தது கார்த்திக்கு.
“ஓ, அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன். உமக்குத் தெரியும் தானே பேரின்பநாயகத்தாரின் குடும்பத்தை. இதுதான் இவரின் மூத்தமகள் திருமதி சகுந்தலா சிவநேசன். சகுந்தலா இவள் என்.. கார்த்திகேயன் ஒருகணம் தயங்கினான். இவள் என்…யார்?
“இவள் என் கேர்ள்பிரண்ட் மிஸ் சில்வியா பார்னட்” கார்த்திகேயன் இரு பெண்களையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“ஹலோ மிஸஸ் சிவநேசன். ஹவ் டூ யுடூ” தன் வழக்கம் போல சிரித்த முகத்துடன் கைகுலுக்கினாள் சில்வியா. குழந் தையை சிதம்பர நாதன் வாங்கிக்கொண்டான். சகுந்தலா “ஹலோ சில்வியா” என்றாள். சொன்னவளுக்கு விளங்கி யதோ இல்லையோ நிச்சயம் தெரிந்தது கார்த்திகேயனுக்கு சகுந்தலாவின் குரலில் பொறாமை பொங்கி வழிகின்றது என்று.
குளிர்காற்று முகத்தில் பட்டு குழந்தை கண்விழித்தது. நித்திரைக் கண்களுடன் சுற்றி நின்றவர்களைத் தன் சுருங்கிய அழகிய விழிகளாற் துளாவியது குழந்தை.
“ஓ ஷி இஸ் பியூட்டிபுல்” சில்வியா குழந்தையின் கன்னங்களைத் தட்டினாள்.
“என்ன பேர் குழந்தைக்கு” சில்வியா கார்க் கதவை திறந்து கொண்டு கேட்டாள்.
”கீதாஞ்சலி” சகுந்தலாவின் பார்வை கார்த்தியின் முகத்தில் பதிந்திருந்தது. அவன் ஒருகணம் தன் காதுகளை நம்பமுடியாமல் திகைத்தான். ஒருநிமிடம் தன் திகைப்பில் தன்னை மறந்து நின்றான்.
‘நான் ஒருநிமிடமும் உங்களை மறக்கவில்லை’ என்று சொல்லாமல் சொல்ல என் நினைவாக ‘அந்த’ப் பெயரை வைத்திருக்கிறாளா? பெண்கள் ஏன் நினைவுப் பெட்டகமாய் இருக்கிறார்கள்?
அல்லது தன்னைத்தானே திருப்திப்படுத்தி இறந்துவிட்ட இனிய பழம் கதையின் ஞாபகத்துக்காகத் தன் குழந்தைக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறாளா?
தெருவிளக்கின் வெளிச்சத்தில் காருக்குள் ஏறிய சகுந்தலாவின் கண்களில் ஏதோ தேட நினைத்தான். கார் வெளிக்கிட்டது. வெறும் அமைதியாக நகர்ந்தது கார்.
“எப்படியக்கா அமெரிக்கா” சிதம்பரன் கேட்டான்.
”எப்படி என்றால் என்ன? ஆகாயத்தை முட்டிய கட்டிடங் களைப் பற்றி கேட்கிறாயா? அல்லது அதையும்விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் அமெரிக்கரில் சிலரைக் கேட்கிறாயா?” சகுந்தலா முணுமுணுத்தாள்.
சகுந்தலா எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் ‘மூட்’இல் இல்லை. ஏன் வந்தோம் இந்தக் கலை நிகழ்ச்சிக்கு என்று கார்த்திகேயனைக் கண்டதும் நினைத்தாள். ஏன் கண்டேன் கார்த்திகேயனை என்று நொந்தாள். இப்போது ஏன் லண்ட னுக்கு வந்தேன் என்று எரிச்சலாக வந்தது.
“ஏன் சகுந்தலாவைக் கேட்கவேண்டும்? எந்த பேப்பரிலும் அமெரிக்க புராணம் படிக்கலாமே! உலகத்தை உய்விக்க வந்த கார்ட்டரின் சமாதானப் பேச்சுக்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது. அமெரிக்காவில் எப்படி? ஒருதலைப்பட்ச மான கார்ட்டரின் சமாதான முயற்சிக்கு அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன மக்களின் உரிமை களைப் பற்றி ஒன்றும் சொல்லப்படாத எகிப்திய சமாதான உடன்படிக்கையைப் பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார்கள்”. சில்வியா விடாமல் கேள்விகளாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. “அரசியலைப் பற்றி எனக்கொன்றும் அக்கறையில்லை” என்றாள் வெடுக்கென்று. காரோட்டிக் கொண்டிருந்த சில்வியா திரும்பிச் சகுந்தலாவைப் பார்க்கத் திரும்பினாள்.
”குழந்தையைப் பார்க்கவே சகுந்தலாவின் நேரம் சரியாக இருக்கும். நீங்கள் தனியாக இருக்கும்போது அரசியலும் பொது சேவையும் பெரிய சுவையானதாக இருக்கும். குடும்பப் பெண் என்று ஆகிவிட்டால் இப்படி வெளியில் திரியக்கூடாது. குடும்பத்துக்கு நல்லதும் இல்லை.” பேரின்பநாயகத்தார் மகளுக்காகச் சொன்னார். சில்வியாவை அவருக்கு ஒருநாளும் பிடிக்காது. கட்டுப்பாடற்ற மேலைநாட்டு நாகரிகத்தின் அவிட்டு விட்ட மாடுகள் போன்ற பெண்கள் என்று அவர் கூறிக்கொள்ளும் பெண்களில் சில்வியாவும் ஒருத்தி என்று அவர் நினைப்பது அவளுக்குத் தெரியும்.
“குடும்பப் பெண்கள் என்றால் என்ன? வீட்டில் கல்யாணம் என்ற சிறைக்குள் அகப்பட்ட கைதிகளா? ஏன் குடும்ப ஆண் களுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. வீட்டிலும் குடும்பத்திலும் அவர்களுக்கும் தானே வேலையிருக்க வேண்டும்” சில்வியா பேரின்ப நாயகத்தாரை மட்டும் தட்டும் குரலில் கேட்டாள்.
அவருக்குப் பொறுமையில்லை. சில்வியாவின் பிரசங்கத்தைக் கேட்க என்று அவர் முகம் போகும் போக்கில் இருந்து தெரிந் தது. சிதம்பரநாதன் மாமனாரைப் பார்த்து மனதுக்குள் சிரித்தான். ”சகுந்தலா அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு லண்டனுக்கு வந்திருக்கிறா என்னென்ன மாறுதல் களைக் கண்டிருக்கிறா என்று கேளுங்கள் சில்வியா” என்று சொன்னான் சிதம்பர நாதன்.
“என்னைச் சும்மா விடுங்கள். இன்னும் நான் வெளிக்கிட வில்லை. வந்த நாளில் இருந்து மழை.ஷொப்பிங் கூடச் செய்ய இன்னும் ஒக்ஸ்போர்ட் ஸ்ரீட்டுக்குப் போகவில்லை” சகுந்தலா சலிப்புடன் சொன்னாள்.
உங்களைப் போன்ற பெண்கள் வெளியில் போவதானால் ஒரு காரணம் ஷொப்பிங், அடுத்த காரணம் கோயில் அல்லது படம் என்று மட்டுமா இருக்கவேண்டும் என்று கேட்க நினைத் தான் கார்த்தி. ஆனால் பேரின்பநாயகத்தார் முன்னிலையில் அவரின் மகளுடன் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருகாலத்தில் தன் மகளின் காதல னாக இருந்தவன் இப்போது எல்லாத்தையும் மறந்து சாதாரணமாக பழகுவான் என்பதைக் குறுகிய மனப்பான்மை பிடித்த பேரின்பநாயகம் போன்றவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றில்லை. அவரைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உறவு ‘ஒரே ஒரு அடிப்படையிற்தான் இருக்கமுடியும்.
ரோட்டுகளில் அதிகம் கார் நெருக்கம் இல்லை. லண்டன் மத்தியில் கார் ஓடிக்கொண்டிருந்தது. வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தால் கார் ஓடிக்கொண்டிருந்தபோது தான் செக்ரட்டரி கோஸ் படிக்க வந்த இடங்கள் ஞாபகம் வந்தன சகுந்தலா வுக்கு. இந்தப் பாலத்தில் எத்தனையோ தரம் தனக்காக காத்து நின்ற சகுந்தலாவை ஞாபகம் வருமா கார்த்திக்கு. பார்லிமெண்ட் கட்டிடத்தைக் கடக்கும்போது சில்வியா சொன்னாள். “லண்டனைப் பொறுத்தவரையில் அதிகம் மாறுதல்கள் இல்லை. லண்டனில் உள்ள உடமைகளில் பெரும்பாலானவற்றை அராபிய செல்வந்தர் வாங்குகிறார்கள். அரசியலைப் பொறுத்தவரையில் மிஸஸ் மார்க்கிரட் தாச்சர் தான் உலகைத் திருத்த வந்த மிஸஸ் மோஸேஸ் என நினக்கிறார். லேபர் பார்ட்டியும் கொன்சர்வேட்டிவ் பார்ட்டியும் நாய், பூனை விளையாட்டு விளையாடுகிறார்கள். இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சனங்களுக்கு அலுப்பு வந்து விட்டது.”
”பாராளுமன்ற முறையாட்சி இருக்கும்வரை இப்படியான விளையாட்டுக்கள் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பொய் உத்தரவாதங்கள் போலியான நாடகங்கள் தவிர்க்கமுடியாதவை பாராளுமன்றப் பாதையில்” சிதம்பர நாதன் சொன்னான். அவனுக்குத் தெரியும் மாமனார் துள்ளி எழுந்து ஏதும் சொல்வார் என்று. எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் பேசாமலிருந்தார்.
விம்பிள்டனுக்குப் போய்ச் சேர நடுச்சாமமாகி விட்டது. “கீதாஞ்சலியைத் தூக்கிக்கொண்டு போகாமல் இருந்திருக்கலாம்” என்றபடி குழந்தையை வாங்கிக்கொண்டாள் பார்வதி; சகுந்தலாவின் தாய். “வந்திட்டுப் போங்களேன்” என்றாள் மீனா, கார்த்திகேயன் தயங்கினான். இந்த வீட்டுக்குள் காலடி வைக்க அவனுக்கு விருப்பமில்லை.
‘ஒரு தேத்தண்ணீர் குடிச்சிட்டுப் போங்கோ சில்வியா’ மீனா சினேகித பாவத்தில் சில்வியாவை கேட்க சில்வியா கார்த்தியின் அனுமதியை எதிர்பார்க்காமல் குதித்துக்கொண்டு ஓடினாள், சகுந்தலா திடுக்கிட்டாள் – இவர்கள் எல்லாம் சினேகிதர்களா?
கார்த்திகேயனைக் கண்டதும் பார்வதியின் முகம் கடுமையாக மாறியதை கார்த்திகேயன் கவனிக்கத் தவறவில்லை. இன்னும் எதிரிகளாகவா இருக்கிறோம்? முன்னறை முழுக்கக் கடவுள் படங்கள், காந்தி, புத்தர் சிலைகள், நடுநாயகமாக சகுந்தலாவின் திருமணப் படம். தாழ்ந்த தலையுடன் குனிந் திருக்க சிவநேசன் தாலி கட்டிய படம் பெரிதாக்கப்பட்டு சுவ ரில் தொங்கியது. கார்த்திகேயன் படத்தில் உள்ள சகுந்தலா வின் துயர் படிந்த முகத்தை அவதானித்தவன் தன்னையறி யாமல் சகுந்தலா பக்கம் திரும்பினான். அவள் வேண்டு மென்றே பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவன் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல். வாழ்க்கையிலிருந்து விலகி விட்டவர்கள் பார்வையால் சேர்ந்து பயன் என்ன! முன்பின் தெரியாதவர்கள் போல் அவர்கள் பழகுவதை உணர்ந்துகொள்ளத் தவறினாலும் மீனாவே அல்லது சில்வியாவோ, சிதம்பரநாதனோ கவனிக்கத் தவறவில்லை. பார்வதி குசினியில் தேனீர் போடப்போக சகுந்தலா தாயைப் பின் தொடர்ந்தாள்.
“என்னவோ என்னைத் தேடியதாகச் சொன்னீர்கள்” என்று பேரின்பநாயகத்தாரைப் பார்த்துக்கேட்டான் கார்த்திகேயன்.
“அதுவா தம்பி, இலங்கையிலிருந்து தமிழ்ப் பிரமுகர் ஒருவர் வருகிறார். அவருக்கு வரவேற்புக்கூட்டம் ஒன்று நடத்த வேணும் என்று யோசிக்கிறம். லண்டனில் இருக்கிற ஒவ் வொரு சின்னக் குழுக்களும் ஒவ்வொரு கூட்டம் வைக்காமல் ஒரேயடியாகச் சேந்து வைப்பம் என்று யோசிக்கிறம். நீங்க என்ன சொல்றியள்? உங்களின்ர ஸ்டூடன்ஸ் என்ன சொல்லு வினம்? ஏன் நாங்கள் ஆளுக்கொரு பக்கத்தில் இழுபட வேணும்? இவ்வளவு காலம் நடந்ததுபோதும் இனியாவது ஒன்றுபடுவம்’ பேரின்பநாயகத்தாரா பேசுவது? மாணவர் களைத் தங்களுடன் சேரச்சொல்வது இவர்தானா? இவர் களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்தப் பிரச்சனைகளைப் பற்றிக் கதைக்க என்று துள்ளிக் கொண்டிருந்தவரா கேட்கிறார்.
சிதம்பரநாதனும். கார்த்திகேயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர் கருத்துடன். இருவரில் ஒருவராவது மறுமொழி சொல்லவில்லை கொஞ்சநேரம்.
“மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களின் கொள்கைகள் தமிழர் பிரச்சனை பற்றிய கருத்துக்கள் எனக்குப் பிடிக்கிறது. அவர்கள் கூட்டத் துக்கும், நிகழ்ச்சிக்கும் போகிறேன். அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் என்னிடம் ஏதோ செல்வாக்கு இருக்கிறது மாணவர்களை உங்களின் வழிக்குத் திருப்ப என்றான் கார்த்திகேயன். எக்காரணம் கொண்டும் பிற்போக்கு வாதத்துக்கு எடுபடத் தயாரில்லை அவன். பேரின்பநாயகத் தார் தர்மசங்கடத்துடன் நெளிந்தார். சிதம்பர நாதனை ‘பெரிய மனிதனாக’ நினைத்து கதைக்க அவர் தயாரா யில்லை. எஞ்சினியராக வந்தபின் சிலவேளை பெரிய மனித னாக நினைத்துக் கதைக்கலாம். இப்போதைக்கு “டொக் டர்” பட்டம் பெற்ற பெரிய படித்த மனிதர்களான பேரின்ப நாயகம் போன்றவர்கள் விம்பிபாரில் கோப்பை கழுவிக் கொண்டோ அல்லது பெற்றோல் செட்டில் வேலைசெய்து கொண்டோ படித்துகொண்டோ இருப்பவர்கள் முக்கியமான இலங்கை அரசியல் பற்றிக் கதைப்பதை அவர் விரும்ப வில்லை விரும்பப் போவது மில்லை அவர் போன்ற பெரிய மனிதர்கள். அவரின் முகபாவனையைப் படித்த சிதம்பர நாதன் எழுந்தான். நடுச்சாமத்தில் பேரின்பநாயகத்தாருக்கும் சிதம்பரநாதனுக்கும் எந்தவிதமான தர்க்கமும் உண்டாகி அதனால் அடுத்தவீட்டுக்காரன் போலீசுக்குப் போன் பண்ணு வதைக் கார்த்தி விரும்பவில்லை மண்டைக்கனம் பிடித்த இந்த மேதாவிகளுக்கு ஒரு பாடம் படிப்பிப்பதாக சிதம்பர நாதன் சொல்லிக் கொண்டிருக்கிறான் கொஞ்ச நாளாக. சில்வியாவுக்கு அவர்கள் மூவரின் அமைதியும் அசாதாரண மாகப் பட்டது தான் பேரின்பநாயகத்தார் வீட்டுக்கு வந்த தற்குக் காரணம் என்பதால் கார்த்திகேயன் கடிந்துகொள் வானோ என்ற பயம் மனதில் ஏற்பட்டது. அரையும் குறையு மாகக் குடித்த தேத்தண்ணியை வைத்துவிட்டு எழுந்தாள்.
கீதாஞ்சலி தாத்தா பேரின்பநாயகத்தார் அருகில் சுருண்டு படுத்திருந்தாள். சில்வியா குனிந்து குழந்தையின் கன்னத் தில் முத்தமிட்டாள். “சில்வியா போற இடமெல்லாம் குழந் நாலைந்து தைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள். பெற்றுத் தள்ளுவதுதானே?” சிதம்பரநாதன் வேடிக்கையாகக் கேட்டான். ”நாலைந்தா?” சில்வியா அலறிப் புடைத்துக்கொண்டு கேட்டாள்.
‘’உலகத்தில் இருக்கிற அரைவாசிக் குழந்தைகளுக்கே அரைப்பட்டினி கால்பட்டினியாக இருக்கிறது. ஏன் சனத் தொகையைக் கூட்டவேண்டும்? ஆசைக்கு ஒரு பெண்ணும் அருமைக்கு ஒரு ஆணும் போதும்” சில்வியா செல்லமாகச் சொல்லிக்கொண்டே கார்த்தியைப் பார்த்தாள். தேனீர்க் கோப்பைகளைத் தட்டில் அடுக்கிக் கொண்டிருந்த சகுந்தலாவுக்கு சில்வியாவின் கொஞ்சல் பொறாமையைத் தூண்டியது.
சில்வியா அதை கவனித்தும் கவனியாதமாதிரி எழுந்து எல்லோருக்கும் ‘குட்பை’ சொல்லிவிட்டு போய்க் காரை ஸ்ராட் செய்தாள். கதவைச் சாத்த அவர்கள் பின்னால் வந்த சகுந்தலா கேட்டாள். “யார் அந்த ஆட்டக்காரி’ சகுந்தலா மெல்லத்தான் கேட்டாள். அவள் குரலிலிருந்த எரிச்சலும், பொறாமையும் கார்த்தியைத் தூக்கிவாரிப் போட்டது. முன் னால் போன சிதம்பரநாதனுக்கும் கேட்டிருக்கவேண்டும். சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். பெண் களின் அடுத்த பெயர் எரிச்சலா? பொறாமையா? தேவை யில்லாமல் சில்வியாவை அவ்வளவு கீழ்த்தரமாகக் கதைத்த தால் சகுந்தலாவில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் நடந் தான் கார்த்தி. தன்னை மதித்து மறுமொழி சொல்லாமற் போகும் கார்த்திகேயனில் உள்ள ஆத்திரத்தில் கதவைப் படா ரென்று அடித்து மூடுவது கேட்டது அவனுக்கு. அவன் காரில் ஏறியிருந்ததும் திரும்பிப் பார்க்கவில்லை. இனம் தெரியாத வேதனை மனதைக் கவ்வியது. நடு இரவுக்கு மேலாகி விட்டதால் ரோட்டுகள் எல்லாம் நிசப்தமாகக் கிடந்தது. சில்வியா கொஞ்சநேரம் காரோட்டிக்கொண்டு போனாள் மௌனமாக. கார் ட்ரவிக் லைட்டில் நின்றதும் கேட்டாள் ‘இந்தச் சகுந்தலாதானே ஒரு காலத்தில் உங்கள் கேர்ள் பிரண்டாக இருந்தவள்?’ கார்த்தி பதில் சொல்லவில்லை.
பெண்கள் ஏன் இவ்வளவு ‘விண்ணானமாக’ இருக்கிறார்கள்? அவன் எப்போதோ சொல்லியிருக்கிறான் பேரின்பநாயகத் தார் தன்னிடம் எதிரியாய் இருப்பதற்கு ஒருகாரணம் அவர் மகளுடன் ஒருகாலத்தில் தனக்கிருந்த தொடர்பு என்று. அந்த மகள் அமெரிக்காவில் இருக்கிறாள் என்றும் தெரியும். இன்றைக்கு அறிமுகம் செய்யும்போது சொன்னான் பேரின்ப நாயகத்தாரின் மூத்த மகள் மிஸஸ் சகுந்தலா சிவநேசன் என்று. இப்போது என்ன விழல் கேள்வி கேட்கிறாள் சில்வியா?
“நான் நினைக்கிறேன்…” சில்வியா சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு கார்த்தியைப் பார்த்தாள். “நீர் என்ன நினைக்கின்றீர்” சோர்ந்த கண்களுடன் திரும்பிச் சில்வியாவைக் கேட்டான்.
“நான் நினைக்கிறேன் சகுந்தலா இன்னும் உங்கள் நினை வில் அதாவது உங்களை விரும்புகிறாள் என்று” சில்வியா தெளிவாகச் சொன்னாள். பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரநாதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காதலர்கள் இருவரும் சண்டை தொடங்கப் போகிறார்களோ என்று ஒருகணம் பயந்தான். கார்த்தி எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் இல்லை. கோபம் இலேசில் வராது. வந்தாலும் கெதியில் போகாது. கொஞ்சநேரம் சில்வியாவின் முகத்தில் பார்வையை ஓட்டியவன் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டான். கடந்தோடும் கட்டிடங்களில் அவன் பார்வை வெறுத்துக்கிடந்தது.
“நீங்கள் அவள் பின்னால் பைத்தியமாகத் திரிந்ததில் ஆச்சரியமுல்லை; சகுந்தலா நல்ல அழகு.”
‘சில்வியா தயவுசெய்து வேறு எதையாவது பேசித் தொலை’ என்று சொல்லவேண்டும்போல் இருந்தது கார்த்திகேயனுக்கு. சில்வியாவின் குணம் கள்ளம் கபடமற்ற குழந்தைக் குணம். அதனால் சில வேளை எத்தனைபேரை மனம் வருந்தப்பண்ணு கிறாள் என்று தெரியவில்லை அவளுக்கு. கார்த்திகேயன் இன் னும் வாய் திறக்கவில்லை.
‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்’ வீட்டருகில் காரை நிறுத்தியதும் கேட்டாள் சில்வியா. அவன் முகத்தில் ஒரு குறும்பு சிரிப்புத் தோன்றி மறைந்தது.
‘என்ன பேச இருக்கிறது? நீராகக் கேள்விகள் கேட்டு மறு மொழியும் சொல்கிறீர்.’
சலீம் வந்து கதவைத் திறந்தான். சிதம்பர நாதன் பேரின்ப நாயகத்தார் இலங்கையிலிருந்து வரும் தமிழ்ப்பிரமுகரை வரவேற்கச் செய்யும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னான். மாணவர் இயக்கமும் சேர்ந்து ஒத்துழைக்கத் தேவையானதுதான் என்றான் சலீம்.
‘இந்தப் பிற்போக்குவாதிகளுடன் சேர்ந்து என்ன பலன். எங் களைப் பாவித்து இன்னும் ஏதும் பிரயோசனமில்லாத காரியங் களைச் செய்து கொண்டிருப்பார்கள் சிதம்பரநாதன் கொதித் துக் கொண்டிருந்தான். எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் மலைநாட்டிலிருந்தும் மற்றைய சிங்களப்பகுதிகளிலிருந்தும் தமிழ்ப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களுக்கு புனத்தாருண அமைப்பில் உள்ள சீர்கேடுகளை எடுத்து விளக்குகிறான் சிதம்பரநாதன்.
‘இவர்களைப் பொறுத்தவரையில் தமிழர் பிரச்சனை வெறும் ஒரு சிறு பிரச்சனை. தங்கள் சுயநலத்துக்கு ஒரு இனத்தின் விடுதலை வேட்கையை அடகுவைக்கிறார்கள் ஒரு காலத்தில் இவ்விடமிருந்து எடுக்கும் பென்சனுடன் போய்ச் சுகமாக இருக்க ஒருசில வழிகள் சொல்கிறார்கள். அகதிகளைச் சாட் டிக்கொண்டு ஒரு தெளிவான பொருளாதார திட்டமில்லாத வர்கள் இவர்கள். கடந்த முப்பதுவருடமாகச் செய்யமுடியாத காரியங்களை எதிர்வரும் கொஞ்ச நாட்களில் இவர்கள் செய்து முடிக்கப்போவதில்லை. இவர்கள் பெரியவர்கள் என்று நம்பி யிருக்கும்வரை எங்களுக்கு விடிவில்லை. உளுத்துப்போன எங்கள் தமிழ்த்தலைவர்களின் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அதற்குப் பேரின்பநாயகம் போன்ற பெரிய மனி தர்கள் முட்டுக்கட்டை போட்டால் தகர்த்தெறிய முற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும்” சிதம்பரநாதன் ஆத்திரத்தில் கத்தினான்.
“சிதம்பரநாதன் இவர்களைத் திருத்தமுடியாது என்று சொல் வது தவறு. இவர்களின் தலைமை சரியில்லாமல் இருக்க லாம். அதற்காக இவர்களுடன் சேர்ந்திருக்கும் எல்லோரை யும் எதிர்க்க வேண்டும் என்றில்லைத்தானே? இப்படியானவர்களுடன் சேர்ந்துதான் எங்கள் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்”. சலீம் ஆறுதலாகச் சொன்னான்.
பணம் படைத்தவர்களை எதிர்த்து நட்டம் அடைபவர்கள் யார் என்று தெரியும். எவ்வளவோ கஷ்டப்பட்டு இன்று ஒரு கலை நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ண அதைக் குழப்புவதற் கென்றே ஒரு சமய விழாவை இன்னொரு இடத்தில் ஏற்பாடு செய்தவர்கள் இவர்கள். இந்தப் பணம் படைத்தவர்கள். பேரின்பநாயகத்தார் குறிப்பிட்ட வரவேற்புக்குப் போக யோசித்தான் கார்த்தி.
“யார் கூட்டத்துக்கும் போய் அவர்கள் என்ன சொல்கிறார் கள் என்று கேட்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை. அதற் காக உங்களை என்னுடன் வரச்சொல்லிக் கேட்க உரிமை யில்லை. உங்களுடன் சேர்ந்து திரிவதற்காக மற்றவர்கள் கூட்டத்துக்கு நான் போகக்கூடாது என்ற தடையும் எனக்கிருப்பதை நான் விரும்பவில்லை.” என்றான் கார்த்திகேயன்.
இலங்கையிலிருந்து வரும் தலைவருக்கு நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று போலி நாடகம் போட்டுக் காட்டத்தான் பேரின்பநாயகத்தார் எங்களுடன் சேர்ந்து வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறார் என்று தெரியும் அவனுக்கு. மனிதர்கள் எவ்வளவு கேவலமானவர்கள்?
“என்ன யோசிக்கிறீர்கள்?” கார்த்தி சிந்தனையில் முழ்கிக் கிடந்தான். அவள் உடுப்பு மாற்றிக்கொண்டிருந்தாள், சில் அவள் வியா நைட்ரெஸை மாற்றிக் கொண்டு கேட்டாள். பார்வை அவனில் நிலைத்திருந்தது.
இலங்கையில் எங்கள் இனத்துக்கு ஏற்படும் அழிவையும் சிலரின் தலைமையால் ஏற்படும் நட்டத்தையும் யோசிக்கிறேன் என்று சொன்னால் நம்புவாளா. சகுந்தலாவைக் கண்ட நேரத்திலிருந்து ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? சொல்லி. கொண்டே கட்டிலுக்கு வந்தாள்.
அவனையிறுக அணைத்துக்கொண்டு சொன்னாள் சில்வியா. “சில்வியா நீர் விளையாட்டுக்குச் சொல்கிறீரோ என்னவோ தெரியாது. ஆனால் நீர் இப்படியெல்லாம் பேசுவது எனக்குப் பிடிக்காது. பக்கத்து அறையில் இருக்கும் சலீமும், சிதம்பர நாதனும், என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நான் ஒரு நாளும் பேரின்ப நாயகத்தார் வீட்டிற்குப் போய் இல்லை. இன்றைய சந்தர்ப்பத்தில் போய்விட்டேன். நீரே இப்படிச் சாட்டுச் சொல்லிச் சொன்னால் சலீமும் சிதம்பர நாதனும், என்ன நினைப்பார்கள்? நான் அவர்களின் கண்களின் முன் இலட்சிய வாதி. புரட்சிவாதி என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை. நேர்மையுடன் இருக்கிறேன். அதைக் குழப்பாதே. என் அரசியற்பிரச்சனைகளுக்குள் சொந்த வாழ்க்கையை இழுக்காதே”. அவன் குரல் கடுமையாக இருந்தது.
கார்த்திகேயனின் கடுமையான குரலால் கொஞ்சநேரம் பேசா மல் இருந்தவள் சொன்னாள். “யாரும் தங்கள் முதற் காதலை ஒருநாளும் மறப்பதில்லை” என்றாள். அவள் குரல் குழந்தைத் தனமாக இருந்தது.
“ஐ சீ” அவன் இப்படிச் சொல்லிக்கொண்டு திரும்பிப் படுத்தான். அவன் முதுகில் அவள் கைகள் கோலம் போட்டன. அவன் உணர்ச்சிகள் சிலிர்த்தன. ”அதுவும் கல்யாணம் செய்யும் அளவுக்கு, எல்லாரையும் எதிர்த்துக் கொண்டு கள்ளமாக ஓடிப் போய்க் கல்யாணம் செய்யுமளவுக்கு இருந்த உறவை நான் நினைக்கவில்லை நீங்கள் சுலபத்தில் மறந்துவிட்டீர்கள் என்று.” சில்வியா ஏன் நெருஞ்சிமுள் கொண்டு என் நெஞ்சில் குத்துகிறாய் என்று கேட்க நினைத்துத் திரும்பினான். அவ ளின் கண்கள் களங்கமற்று இருந்தன. பொன்னிறத்தலை புரண்டு முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டிருந்தது. மிகவும் அழகாக இருந்தது அவள் முகம்.
“நீரும் அப்படியா? உமது முதற் காதலை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” அவன் அவள் அழகிய இதழ்களை முத்தமிட்டபடி கேட்டான். அவள், அவன் பிடியிலிருந்து விலகி விட்டு ஓகோ என்று சிரித்தாள். அவள் சிரிப்பு அனாவசியமாகப் பட்டது அவனுக்கு.
“ஏன் சிரிக்கிறீர்.” அவன் எரிச்சலுடன் கேட்டான். “எனது முதற் காதல் எனது ஆசிரியரில். அவருக்கு அப்போது 40 வயது இருக்கும். எனக்கு வயது பதின்மூன்று. நான் நல்ல கெட்டிக்காரி என்று என்னில் நல்ல விருப்பம். அதுதான் காதல் என்று நினைத்தேன்.” சில்வியா கலகலவென்று சிரித்தாள்.
“சில்வியா உமக்கு விளையாட நேரம் காலம் இல்லையா?” அவன் கடிந்துகொண்டான். இன்னொருதரம் அவள் சகுந்தலாவைப் பற்றிய பேச்சை எடுக்கக் கூடாதென்று அவன் மனம் தவித்தது. பழைய கதைகளைக் கிண்டிக்கேட்டுத் தொலைப்பாளோ என்று யோசித்தான். “நீங்கள் நினைக்கிறீர்களா சகுந்தலா சந்தோஷமாக இருக்கிறாள் என்று.” சில்வியா இன்னும் சகுந்தலாவிற்தான் இருக்கிறாளா? கொஞ்சநேர இடைவெளியில் கேட்டாள்.
“எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலுமில்லை” அவன் எடுத்தெறிந்து பேசினான்.
”பாவம் சகுந்தலா, சகுந்தலா மட்டுமென்ன? இன்னும் எத்தனையோ பெண்கள் சமுதாயக் கொடுமையால் சகுந்தலா போல் வேண்டா வெறுப்பான கல்யாண வாழ்க்கையால் கஷ்டப்படுகிறார்கள். உப்புச்சப்பற்ற திருமணம். உலகத்துக்காக இப்படி எத்தனையோ பெண்கள் வெறும் வாழ்க்கை வாழ்ந்து தொலைக்கிறார்கள்”, சில்வியா உண்மையான பரிவுடன் சொன்னாள். தனிப்பட்ட முறையில் சகுந்தலாவில் ஒருவித பொறாமையுணர்ச்சியுமில்லை அவளுக்கு. கார்த்திகேயனைப் பார்த்த விதத்திலிருந்து தெரிந்தது. சகுந்தலா உடம்பால் ஆள முடியாமல் உள்ளத்தால் மற்றவர்களைத் தடுக்கும் வல்லமையுள்ளவள் என்று. கார்த்திகேயனில் என்ன மாதிரியான உணர்ச்சிகள் இருக்கின்றன என்று தெரியாவிட்டாலும் இருவருக்குமுள்ள உறவு ஒரேயடியாய் அறந்து விடவில்லை என்று சில்வியாவுக்குத் தெரிந்தது.
சகுந்தலாவைக் காணும்வரையில் கார்த்திகேயனின் பழைய வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை சில்வியா. அவளின் வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை யில் மேலைநாட்டுப் பெண்கள் கல்யாணமாக முதல் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களை வைத்திருப்பது குற்றமில்லை. ஆனால் அதையே இன்னொருவனைக் கல்யாணம் செய்தபின்னும் நினைத்துக்கொண்டிருப்பதில்லை. சகுந்தலா தன்னில் இன்னும் குற்ற உணர்ச்சியுடனா இருக்கிறாள்? என்ன குற்றம் செய்துவிட்டாள். அல்லது இன்னும் கார்த்திகேயனை நினைத்துக் கொண்டிருக்கிறாளா.
கொஞ்சநேரம் சில்வியாவின் சிந்தனை எங்கோவெல்லாமோ அலைந்தது. கார்த்திகேயனுடையதும் சகுந்தலாவினுடையது மான பழைய காதலைப் பற்றி அவளுக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை. ஆனால் தன் சந்தோஷமான சீவியத்தில் சகுந்தலாவின் வருகை எந்தவிதமான இடையூறையும் உண்டாக்குவதை அவளால் தாங்க முடியாதிருந்தது
கார்த்திகேயனுக்கு விளங்குகிறதோ இல்லையோ சில்வியாவைப் பொறுத்தவரையில் அவளுக்குத் தெரியும் அவள் எவ்வளவு தூரம் கார்த்தியில் உயிரை வைத்திருக்கிறாள் என்று. உலகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒன்றாகச் சீவிக்கிறார்கள் என்று வெறுமையாகச் சொல்லிவிட்டுப் போகலாம். அவளைப் பொறுத்த வரையில் ஒன்றாக மட்டுமல்ல அவனில் உயிரையே வைத்திருக்கின்றாள். நேர்மையும் அறிவும் பண்பும் முற்போக்குக் கொள்கைகளுமுள்ள கார்த்திகேயன் போன்ற ஒரு சிலரைத்தான் அவள் சந்தித்திருக்கிறாள் இதுவரை இனி என்னென்ன நடக்குமோ தெரியாது. என்னென்ன நடந்தாலும் கார்த்தியை மனதாலோ உடம்பாலோ இழக்கத் தயாரில்லை. அதிக நேரம் அவள் மௌனத்துடன் சிந்தித்தாள். ‘கார்த்தி’ என்றாள் மெல்லிய குரலில்,
“உம்” அவன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். என்ன நினைக்கிறான்? சொல்லமாட்டானா என்னிடம்? “ஒன்று கேட்கட்டுமா” அவள் குரலில் தயக்கம் இருந்தது.
“கேட்பது சரி. பதிலையும் நீதானே சொல்ல நினைத்திருப்பீர்.” அவனின் குத்தலான மறுமொழியில் அவள் சிரித்தாள்.
“இந்தக் கேள்வி எனக்கு மறுமொழியில் தெரியாத கேள்வி” அவள் மெல்லமாக முணுமுணுத்தாள். அவன் ஏதும் பேச வில்லை.
“டூ யூ லவ் சகுந்தலா?'” (சகுந்தலாவைக் காதலிக்கிறாயா?) அவள் தெளிவான குரலில் கேட்டாள். கட்டாயம் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து என்ற தொனி குரலிலிருந்தது.
நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்ற பிரமையவனுக்கு. கடந்த ஐந்து வருடமாக அவன் தன்னையே கேட்டுகொள்ளாத கேள்வியது. சேராமற் சேர்ந்திருந்து வாழாமல் வாழ்ந்து கொண்டு இருந்த உணர்ச்சி திடீரென்று களைந்தபின் வாழ்க்கையே சூனியமாகிய உணர்ச்சியில் இருந்தது அவனுக்கு சகுந்தலா திருமணமாகிப் போய்விட்டாள் என்று தெரிந்ததும். நினைக்க விரும்பாத சில கசப்பான நினைவுகளில் அதுவும் ஒன்று.
என் கேள்விக்கு எங்கே மறுமொழி என்பதுபோல் அவனைத் தடவினாள் சில்வியா. என்ன மறுமொழி சொல்வது? சகுந்தலா யாருடையதோ உடமை இனி அவனுக்கு என்ன உரிமை?
“நோ, ஐ டோன்ட் லவ் சகுந்தலா” அவன் மறுமொழியைச் சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்தான்.
இரவெல்லாம் அரையும் குறையுமான நித்திரை சகுந்தலாவுக்கு. கார்த்தியைக் கண்டது கதைத்தது எல்லாம் கனவு போல் இருந்தது. கனவிலும் நினைக்கவில்லை காணுவாள் என்று. லண்டனுக்கு வரும்போதே அவனைப்பற்றிய நினைவுகள் அவளையரித்துக் கொண்டிருந்தன. அதைக் காட்டிக் கொள்ளப் பயம். யாரும் கார்த்தியைப் பற்றிக் கதைக்கவில்லை வந்து இவ்வளவு நாளும்.
அவளையும் கார்த்தியையும் பற்றித் தெரிந்தவர்களையும் இதுவரை சந்திக்கவில்லை. அவர்கள் காதலைப் பற்றித் தெரிந்த சினேகிதிகளை அவள் சந்திக்கவில்லை சந்திக்க விரும்பவுமில்லை. பழைய கதைகள் பழம் கனவாகப் போகட்டும் என்றே நினைத்திருந்தாள். அவள் கல்யாணத்துக்கு அவளின் சினே கிதிகள் யாருக்கும் அழைப்புக் கொடுபடவில்லை. கொடுத்தி ருந்தாலும் வந்திருப்பார்கள் என்றில்லை. என்ன நினைத்தி ருப்பார்கள் என்னைப் பற்றி? துரோகி, ஏமாற்றுக்காரி என் றெல்லாம் நினைத்திருப்பார்களா?
சினேகிதிகள் மட்டுமென்ன ஒன்றைவிட்ட தமயன் தியாக ராஜன் கூட சகுந்தலாவுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கடந்த ஐந்து வருடம் தன்னைத் தெரிந்த ஒருவருடனும் லண்டனில் தொடர்பு வைத்திருக்கவில்லை தாய் தகப்பனை விட. தாய் தகப்பன் ஒவ்வொரு தரம் கூப்பி டும்போதும் ஒவ்வொரு சாட்டுச் சொல்லி மறுத்துவிட்டாள், லண்டனுக்கு வரும் யோசனையை. இப்போது கொஞ்ச நாட் களாக தாயின் தொல்லை தாங்கமுடியவில்லை. தாய் கிட்டத் தட்ட ஒவ்வொரு கிழமையும் போன் பண்ணி அழுகிறாள் தங்கை மீனா யாரோ வெள்ளைக்காரனைச் செய்வதாகச் சொல்லிவிட்டாள் என்று. சகுந்தலா வரவேண்டுமாம். நல்ல பெண்கள் தாய் தகப்பன் சொற்படி நடக்கவேண்டும் என்று தங்கைக்குப் புத்தி சொல்ல வேண்டுமாம். தாய் தகப்பன் ஆசீர்வாதம் இல்லாமல் யாரோ ஒரு அன்னியனைச் செய்து இவள் சந்தோஷமாக இருக்கமாட்டாளாம்.
அவர்களுக்குத் திருப்தி சகுந்தலா லண்டனுக்கு வந்தது சகுந் தலாவைப் பொறுத்தவரையில். மீனா தமக்கையுடன் முகம் கொடுத்துக் கதைக்கவேயில்லை வந்த நாளிலிருந்து.போதாக் குறைக்கு போகுமிடமெல்லாம் சொல்லியிருக்கிறாள் போலும்! தன் கல்யாணத்தைக் குழப்பும் நாசகார வேலைக்கு தான் வந் திருப்பதாக. கார்த்தியின் கிண்டல் நிறைந்த கேள்விகள் நினைவுக்கு வந்தன. தான் ஏமாற்றியது போதாது ஒருவனை, தன் தங்கையும் ஒருவனை ஏமாற்றவேணும் என்று நினைக் கிறாள் என்று தானே என்னைப் பற்றி நினைக்கிறான்? யாரி டமும் சொல்லவும் தன்னால் மெல்லவும் முடியாத துன்பமான வாழ்க்கை வாழும் தன்னைப்பற்றி யார் புரிந்துகொள்ள போகிறார்கள்?
காலையில் எழும்பிய நேரத்திலிருந்து தாய் கேட்டுக் கொண்டி ருக்கிறாள் வாரவிடுமுறையில் போன் பண்ணுவதாக சொன்ன சிவனேசன் ஏன் போன் பண்ணவில்லை என்று. இன்று ஞாயிற் றுக்கிழமை… இன்று போன் பண்ணா விட்டால் எதிர்வரும் ஒருகிழமையும் நேரமிருக்காது.வேலைவிடயமாக நியூயோர்க் கில் இல்லாமல் எங்கோ போவதாகச் சொன்னான். தங்கள் கல்யாண வாழ்க்கையைப் பற்றி தாய் தகப்பன் என்ன நினைக் கின்றார்களோ. தெரியாது என்று தெரியும் சகுந்தலாவுக்கு. சிவனேசன் குடித்துக்கொண்டு திரிவதைப் பற்றி இவர்கள் கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியாது. குடி மட்டுமா? சகுந் தலாவுக்கு யோசிக்க விருப்பமில்லை. சிவனேசன் ஏன் போன் பண்ணவில்லை.
மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் பார்க்குக்குப் போய்விட்டாள். தகப்பன் இலங்கையிலிருந்து வரும் தமிழ்ப் பிரமுகரை வர வேற்பதற்கான விடயங்களைக் கதைப்பதற்காகச் சினேகிதர் வீட்டுக்குப் போய்விட்டார். அம்மா ஒவ்வொருதரமும் மணிக் கூட்டைப் பார்த்து ஏன் சிவனேசன் போன் பண்ணவில்லை என்று கேட்கிறா. “தனியாக இருக்கும்போது சமையல் வேலை வீட்டு வேலை என்றிருக்கும். எல்லாம் முடிய ஆறுதலாகப் போன் பண்ணட்டும்”. தாய் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு சகுந்தலாவுக்குச் சொன்னாள். சகுந்தலாவுக்குச் சிரிப்பு வந்தது. சிவனேசன் சமைப்பதாவது. அது முட்டாள் பெண்களின் வேலை என்றல்லோ நினைப்பவன். சைனாக் கடைச் சாப்பாட்டுடன் நல்ல குடியும் நடக்கும்.
– தொடரும்…
– உலகமெல்லாம் வியாபாரிகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, நீலமலர், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |