உலகக் கண்கள்





(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் ஜகதீசனால் பள்ளிக்கூட வாழ்க்கையில் இரண்டு வருஷங்கள்கூட தரித்திருக்க முடியாதுபோல் தோன். ஆனால் அவன் அதே வாழ்க்கையில் பத்து வருஷங்கள் தோய்ந்திருக்க வேண்டும் என்பது போல விதி ருக்மிணியின் முகத்திலே மீறமுடியாத ஒரு கட்டளையின் சாயலை எழுதியிருந்தது. எட்டு வயது நிரம்பாத அந்தச் சிறுமி ருக்மிணியின் முகம், உருவம் எல்லாம் ஜகதீசனுக்கு அந்தக் கட்டளையின் சாயலைக் காட்டி அவனைத் திணற வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்திலிருந்த அத்தனை மாணவருள்ளும் அவள்தான் மனிதரீதியிலே உள்ள ஒருத்தியாக ஜகதீசனின் மனத்திலே தோன்றினாள். அந்தத் தொழிலே வேண்டாம் என்று அவன் வெறுப்படைந்து புறப்பட எண்ணியபோதுதான் ருக்மிணி பள்ளிக் கூடத்தில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட பிறகு, ‘எங்கேயாவது தொலைந்துவிட வேண்டும், என்ற அவனது எண்ணம் உருக்குலைந்து சிதைந்துபோய் விட்டது.
ருக்மிணியின் கண்கள், நெற்றி, வாய், உருவம், அசைவு, நெளிவு எல்லாம் ஜகதீசனுக்குப் புதுமையாகவே தோன்றின. மோகனத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் அவளது கண்களுக்கு மெருகிடுவது போல அமைந்திருந்த நெற்றி புதுமையுடன் கூடி. மழலைக் குவியலை அள்ளி அள்ளிக் கொட்டும் அந்த வாய் – மயக்கத்தைக் கொடுத்துக் கூத்தாடும்படி செய்துவிடும் அந்த மோகனச் சிரிப்பு எல்லாம் ஜகதீசனுக்கு எவ்விதம் தோற்றும்? உணர்ச்சி யற்ற ஜடங்களின் நடுவிலே கிடைத்த தெய்வக் குழந்தையல்லவா அவள்?
வெறுப்புத் தட்டியிருந்த வாழ்க்கைக்கு அவள் புத்துயிர் கொடுத்தாள். ஜகதீசனது மனத்திலே நிரம்பிக்கிடந்த வெறுப்புணர்ச்சிகள் எல்லாவற்றையும் படிப்படியாக அவள் மறையச் செய்து, இன்ப அலைகளை அவனது மனத்தில் தோன்றும்படி செய்தாள். அத்தனை பெருமைக்கும் அந்தச் சிறுமி உரித் துடையவளானதைக் கண்டபோது ஜகதீசனுக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. விதியின் விசித்திரமான போக்கைக்கண்டு யாருக்குத்தான் ஆச்சரியம் உண்டாகாது?
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை வேளையில் உலாவி வரலாம் என்று ஜகதீசன் புறப்பட்டான். வழியிலே வீதியில் ருக்மிணி அவனை நோக்கி ஓடிவந்தாள். அவளைக் கண்டதுமே ஜகதீசன் நின்று கொண்டு, “அம்மா, ருக்மிணி! ஓடாதே; விழுந்துவிடப் போகிறாய்! என்று எச்சரித்தான். ஆனால் ருக்மிணி ஓடுவதை நிறுத்தவில்லை. நெருங்கி வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“வாத்தியார், உங்களை அம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னா”
களைப்பினால் அவளது வார்த்தைகள் நடுங்கின. ஜகதீசன் அவளது தலையைத் தடவிக்கொண்டே “அம்மா கூட்டிக்கொண்டு வரச் சொன்னாளா? ஏன்?” என்று கேட்டான்.
ஜகதீசனுக்கு ருக்மிணியைத் தெரியுமேதவிர அவளது தெரியாது. வீடும் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது தாயைத் மட்டும் தெரியும்.
ருக்மிணி அவனை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே “எனக்குத் தெரியாது. வாருங்கோ” என்று அவனது கையைப் பிடித்து இழுத்தாள். “உங்கள் வீடு எங்கே அம்மா?” என்று கேட்பதைவிட வேறொன்றையுமே அவனால் கேட்க முடியவில்லை. “அதோ. அந்த ஆலமரத்துக்குப் பக்கத்து வீடு” என்று சொல்லிக்கொண்டே ருக்மணி முன்னால் நடந்தாள். காந்தத்தின் அசைவுக்கேற்பத் தானும் அசைந்து கொடுக்கும் இரும்புத்துண்டு போல ஜகதீசன் அவள் பின்னால் நடந்தான். இன்னதென்று சொல்லமுடியாத ஒரு சூழ்நிலையிலே அவனது உள்ளம் அகப்பட்டுத் தத்தளித்ததோ ஆனந்த மடைந்ததோ என்று சொல்ல முடியவில்லை.
அவனது மனம் வலையிட்டுத் துழாவிப் பார்த்தது. எங்கோ கண்டு பழகிய முகமல்லவா அது? ஆனால் எங்கே. எப்பொழுது என்பது மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை. அந்த முகம் சிந்தனையின் பழைய ஏடுகளைத் திறந்து காட்டியது. தூசு படிந்திருந்த அந்த ஏடுகளை வாசிக்க முதலில் முடியவில்லை. பிறகு தூசிகளைத் துடைத்துவிட்டுக் கூர்ந்து படித்தான்.
அடடா! அவள் – லஷ்மி – அனாதைச் சிறுவனாக ஜகதீசன் வீதியிலே திரிந்தபோது அழைத்துச் சென்று ஆதரித்து, பிறகு அனாதாஸ்ரமம் ஒன்றில் சேர்த்துவிட்ட புண்ணிய புருஷனின் மகளல்லவா? அனாதாஸ்ரமத்தின் உதவியினால் படிப்பை முடித்துக்கொண்டு ஜகதீசன் அவர்களின் வீட்டைத் தேடிச் சென்றபோது அவர்கள் எங்கோ போய்விட்டார்கள் என்று அறிந்தான். தனது வாழ்க்கைக்கு அத்திவாரமிட்ட அந்த மனிதனைக் காணாததால் ஏற்பட்ட துயரம் அவரது மகளைக் கண்டதே ஆனந்தமாக மாறிவிட்டதைக் க்ண்டு ஜகதீசனின் கண்களில் நீர் துளித்தது. அதைக் கண்டு லஷ்மியின் கண்களும் கலங்கின. ருக்மிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளும் கண்களைக் கசக்கினாள். குழந்தையல்லவா?
“ருக்கு உங்களைப் பற்றிச் சொன்னாள்”
இதைச் சொல்லும் போது லஷ்மியின் குரல் தழுதழுத்தது. குங்குமம் இடப்படாத அவளது நெற்றியின் பிரகாசம், அதிலே தோன்றிய வியர்வைத் துளிகளை முத்துக்கள்போல மிளிரச் செய்தது. மஞ்சள் நூலற்ற தன் கழுத்தைத் தடவிக்கொண்டே. “அப்பா இல்லாத அவளுக்கு உங்கள் அன்பு பெருத்த ஆறுதலாக இருக்கிறது. தனிப்பட்ட முறையிலே சொல்லப் போனால். எனது நன்றியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னாள்.
ஜகதீசனது சிந்தனை வெகு வேகமாகச் சுழன்றது. லஷ்மியின் வார்த்தைகளில், தன்னை மறந்த நிலையில் அவள் செய்த செய்கைகளில் எந்தக் கோணத்திலிருந்து அவளது உள்ளக் கருத்தை அவன் அறிந்து கொள்ள முடியும்? அந்தகாரத்தின் தொடர்ச்சியிலே. இடையில் சொருகப்பட்ட ஒரு சிறிய ஒளிக்கதிர் போலவே அவள் சொன்ன ‘தனிப்பட்ட முறையிலே’ என்ற வார்த்தைகள் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு அவள் எதை உணர்த்தினாள்?
வெகுநேரமாக நிகழ்ந்த சிந்தனைச் சுழற்சியின் பின்னணி போல அவனது வாய் “ஆசிரியன் என்ற முறையில் எனது கடமையைச் செய்யக் கிடைத்த ஒரேயொரு பாத்திரம் ருக்குதான். அதற்காகவும் உங்கள் தகப்பனாரின் உதவிக்காகவும் நான்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்” என்ற வார்த்தைகளை உழறிக் கொட்டிற்று.
தயங்காமல் அவள் பதில் சொன்னாள். “ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்றி செலுத்திக் கொள்ளுவதென்றால் அது அன்பின் சின்னம் என்றாகிறதல்லவா?”
ஜகதீசன் திகைத்துப் போனான். அந்தப் பதிலுக்கும். அவளது பார்வைக்கும் தலைகுனிந்து வணங்காமலிருக்க அவனது உள்ளத்தில் தைரியம் பிறக்கவில்லை. ருக்மிணியைப் பார்த்தபடி பேசாமல் நின்றான். “கால்வலிக்க நின்றுகொண்டிருக்க வேண்டாம். உட்காரலாமே” என்று லஷ்மி சொன்ன பிறகுதான் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.
அவள் தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே ‘எனக்கு வேண்டியதெல்லாம் இதுதான். எனது சுகங்களை எல்லாம் எப்பொழுதோ உதறித் தள்ளிவிட்டேன். என் ருக்குவுக்காகத்தான் என் உயிர் தரித்திருக்கிறது. அவள் வாழுவதைப் பாார்க்க வேண்டும் என்பதுதான் எனக்கிருக்கும் ஆசை எல்லாம். உங்கள் அன்பின் நிழலிலே அவள் செழித்து வளர்வதற்கு. உங்களை அவள் மாமா என்று அழைக்கமட்டும் அனுமதி தாருங்கள். நீங்கள் அங்கே விடுதிச் சாலையில் இருக்க வேண்டாம். அவர் விட்டுப்போன இந்த வீடும் பொருளும் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்க உங்களுக்கு நிரம்பிய உரிமை இருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?” என்று அவள் உணர்ச்சி மேலிட்டுக் கூறினாள்.
குடித்த தேநீரைக் கீழே வைத்துவிட்டு ஜகதீசன் நிமிர்ந்து பார்த்தான். லஷ்மியின் கண்களிலிருந்து கன்னத்தின் வழியாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. அவளது உதடுகள் துடித்தன. அதை மறைப்பதற்காக ருக்மிணியைத் தூக்கி முத்தமிட்டுக் கொண்டே அவள் ஜகதீசனைத் திரும்பிப் பார்த்தாள். தாய்மை உள்ளம் எப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது.
‘ஆம்’ ஜகதீசனது வாய் அவனை அறியாமலே கூறிற்று. அவனுக்கும் உணர்ச்சிக் கோளங்கள் உண்டுதானே! அவனது வாழ்க்கைப் பாதையில் அவன் கண்ட இரண்டாவது அமிர்த ஊற்று அவள் – அவனது சகோதரியாய் விட்ட அந்த லஷ்மி. இனி அந்த ஊற்றையடுத்துச் செழித்த தரைகளை அவன் காணமுடியுமா? ஆனால்…? செழித்த தரையிலும் காஞ்சிமரம் நிற்கத்தானே செய்கிறது?
அவர்களைப் பிணைத்திருந்த பாசம் அந்தக் கிராமத்து ஜனங்களின் கண்களை உறுத்திற்றோ என்னவோ, அவர்கள் அதைக் கண்டு சும்மா இருக்கவில்லை. சாக்கடை போன்ற தங்கள் மனம் திருப்தியடையும்வரை ஊளையிட்டார்கள். தன்னை அறியாத ஒருவன் மற்றவர்களைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயங்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்? வெறிகொண்ட நாய் குரைப்பதற்கும், அவன் சொல்வதற்கும் அதிகதூரம் வித்தியாசம் இருக்க முடியாது.
ஜகதீசனுக்கு முதலில் இது ஆத்திரத்தைக் கொடுத்ததென்றாலும், பிறகு அவனது உணர்ச்சியுள்ள உள்ளம் தனது லஷிய ரேகையிலிருந்து தவறி மறுபக்கம் பார்க்க விரும்பவில்லை. லஷியவாதியின் நிதான புத்தியை இப்படியான விஷயங்களிலிருந்துதான் காணமுடிகிறது.
ருக்மிணி · அவளது தாயார் லஷ்மி இருவரையும் சேர்த்துப் பிணைத்திருந்த பாசக் கயிற்றின் நடுவிலே ஜகதீசனும் அகப்பட்டு விட்டான். ஜகதீசனைப் பொறுத்தமட்டில் அவனுக்கு அந்தப் பாசக்கயிற்றின் நடுவிலே ஒர் ஸ்தானம் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
“ருக்மணி படிக்க வேண்டும். தன் படிப்பின் உதவி கொண்டு அவள் தன் வாழ்க்கைப்பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும். பிறகு எனக்கும் ஒருவழி தானாகவே தோன்றி வழிகாட்டும்” என்ற தீர்மானம் ஜகதீசனின் ஒவ்வொரு அசைவிலும் பொருத்தப்பட்டிருந்தது.
‘மாமாவைப் போல ஆசிரியத் தொழிலில் இறங்கி, உண்மைக்குத் தொண்டு செய்ய வேண்டும்” என்ற பேரவா ருக்மிணியின் வளர்ச்சியுடன் பின்னிக் கொண்டே வளர்ந்தது.
லஷ்மியின் அன்புடன் ஜகதீசனின் நிதான புத்தியும் கலந்து கொண்டு ருக்மிணியையும் “பெரியவ”ளாக்கி விட்டன. ஜகதீசன் அனுபவரீதியாகச் சொன்னவற்றைக் கேளாது அவன் ஆசிரியனாக இருந்த அதே பள்ளிக் கூடத்தில் ஆசிரியையானாள். அவளது ஆசையைக் கட்டுப்படுத்த ஜகதீசன் விரும்பவில்லை.
இனி அவளுக்கு விவாகம். அதுதான் ஜகதீசனின் மனத்திலிருந்த ஒரேயொரு குறை. அதையும் தீர்த்து வைத்துவிட்டால் அவன் நிம்மதியாகத் தனது போக்கிலே போய்விடலாமல்லவா? நெடுக அந்த ஊரிலே இருந்து அபத்தமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதிலும் மனிதரே இல்லாத. கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் அவற்றின் பேரிரைச்சலைக் கேட்டுக் கொண்டிருந்துவிடலாம்.
லஷ்மியுடன் யோசித்து இதை ருக்மிணிக்கு எட்ட விட்டபோது அவள் “அது இப்பொழுது அவசரமாக வேண்டிக் கிடக்கவில்லை” என்று ஒரே பதிலாகச் சொல்லி விட்டாள்.
பத்துவருஷங்கள் அந்தக்கிராமத்தின் மிருகத்தனத்தின் மத்தியிலிருந்த களைதீர எங்காவது சுற்றிவரலாம் என்று ஜகதீசன் புறப்பட்டான். லஷ்மியையும், ருக்மிணியையும் விட்டுப் பிரிவது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் போயே ஆகவேண்டும் என்று மனம் சொல்லிற்று. தனது உதவி தேவையானபோது கடிதம் எழுதும்படி கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டுப் போயே போய்விட்டான்.
ஒரு வருஷமாக எங்கெல்லாமோ அமைதியை நாடி அலைந்து திரிந்தான். லஷ்மியும். ருக்குவும் இல்லாத இடத்தில் கிடைப்பதெல்லாம் அமைதியே அல்ல என்று சொல்வதுபோல மனம் அலைபாய்ந்தது. கடைசியில் அவர்களை ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று எண்ணி அவன் வந்தான்.
அவன் அவர்கள் வீட்டை அடைந்தபோது லஷ்மிதான் வீட்டிலிருந் தாள். ‘அண்ணா! என்று ஓடிவந்து நமஸ்கரித்தாள். ருக்மிணி பள்ளிக் கூடத்துக்குப் போயிருந்தாள். அவளை உடனே பார்க்க வேண்டும் என்று மனத்திலேயிருந்து ஏதோ சொல்லிற்று; பள்ளிக்கூடத்துக்குச் சென்றான்.
ஜகதீசனைக் கண்டதுமே மாமா’ என்று கூவிக்கொண்டே ருக்மிணி ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள். மற்ற ஆசிரியர்கள்.மாணவர்கள் பார்க்கிறார்களே என்று அவளுக்குத் தோற்ற வேண்டுமே! கண்களிலிருந்து நீர் சொரியத் தன் ‘மாமா’வின் முகத்தைப் பார்த்தாள்.
“ஏன் அம்மா அழுகிறாய்?” என்று ஜகதீசன் கூறிக்கொண்டே கண்ணீரைத் துடைத்துவிட்டான். ஆனால் அவனுக்கும் அழுகைதான் வந்தது.
மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் இந்த உலகத்தில்தான் தோன்றும். இவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தது அன்புலகத்திலல்லவா? வேறு எண்ணங்கள் தோற்ற முடியுமா?
அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் கண்களின்மூலம் தாங்கள் நிகழ்த்திக் கொண்டிருந்த சம்பாஷணைகளை நிறுத்திக்கொண்டு. வாய்களினாலேயே சம்பாஷிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
“ஜகதீசனை மயக்க வைத்த அந்த மோகினியின் பெண்ணல்லவா இவள்?” என்று அந்த ஆசிரியப் பூண்டுகள் சொன்ன வார்த்தைகள் இவர்களுக்குக் கேட்கவே இல்லை.
உலகம் தனது கெட்டுப்போன குருட்டுக் கண்களுக்கு நிறமூட்டிய மூக்குக் கண்ணாடி உபயோகிப்பதைத் தடுக்க யாராலும் முடியாது. அது ‘பரவணிவியாதி’ யாயிற்றே!
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.