உறவு
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மகப்பேறு மருத்துவமனையின் டாக்டர் ஜான் டான் அறைக்கு வெளியே நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்தும், அங்கே ஐந்து பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
“ஒருவேளை காலை எட்டு மணிக்குத்தான் இப்படி இருக்குமோ? அதன் பிறகு கூட்டம் நிரம்பி வழியுமோ? இந்த மகப்பேறு மருத்துவர் மிகவும் கைராசிக்காரராம். எந்த வலியும், பக்க விளைவும் இல்லாமல் செய்து முடித்து விடுவாராம். கட்டணம் அதிகமாக இருந்தாலும் அறுவைச்சிகிச்சையில் பிரச்சினை இருக்காதாம்.”
ரேகாவின் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன.
“டாக்டர் எத்தனை மணிக்கு வருவார்?”
ஒரு பெண் எழுந்து வந்து பணியாளரிடம் கேட்டார்.
“வழக்கமாக ஒன்பது மணி போல் வந்துவிடுவார்… சற்றுக் காத்திருங்கள்”.
“என் வரிசை எண் ஒன்றுதானே… நான் ஏற்கனவே ஃபோன் பண்ணியிருந்தேன்…”, என்று கூறியவாறே பணியாளர் எழுதி வைத்திருந்த குறிப்பை எட்டிப்பார்த்தார், அந்தப் பெண்மணி.
“ஆமாம், திருமதி டெய்ஸி டான்… நீங்கள்தான் டாக்டரை முதலில் பார்ப்பீர்கள்..” என்றார் பணியாளர், மேசையில் உள்ளவற்றை அடுக்கி வைத்தபடி.
மேலே தொங்கிய தொலைக்காட்சியில் திடீரென்று ‘மிஸ்டர் பீன்’ நகைச்சுவைப் படத்தொகுப்பு ஓடத்தொடங்கியது. அறை முழுவதும் அழகிய குழந்தைகளின் முகங்கள். கிள்ளத்தூண்டும் கன்னங்கள்; அள்ளி அணைக்கத் தூண்டும் சரீரம்; பல்லே இல்லாத எச்சில் உமிழும் திறந்த வாய்கள். அப்பப்பா! பார்க்கவே பரவசமாக இருந்தது ரேகாவுக்கு.
பத்தொன்பது வயதே நிரம்பிய அவளுக்கு ஏதோ ஒரு விதத் தாய்மை உணர்வு மேலிட்டது. விம்மிப் புடைப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கும் மார்பகமும், சுற்றுவட்டத்தைப் பருக்கவைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் அடிவயிறும் அவளை அப்படி எண்ண வைத்தது போலும். வயிற்றைத் தடவிப்பார்த்தாள். உள்ளே இரண்டு வார சிசு மெல்ல உருப்பெறுவதை உணர்ந்தாள்.
ஆனால், மறுகணம் அதைக்கொல்லப் போகிறோம் என நினைத்தபோது அவள் நெஞ்சில் முள் தைத்தது. வேதனை வாட்டத் தொடங்கியது. மகிழ்ச்சியான நேரம்தான். பிள்னைப்பேறு இல்லாத எத்தனையோ தாய்மார்களின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இது தாம்பத்திய உறவின் உச்சம்தான். ஆனால், அந்த உச்சம் திருமணத்திற்குப் பிறகு நடந்திருந்தால் உலகம் மெச்சும். அப்படி நடக்காததால், வீண் ஏச்சும் பேச்சும்.
இரக்கத்திற்குரிய நிலை. இதுதான் ரேகாலின் நிலைமை. அப்படியென்றால், இது கருக்கலைப்புப் படலமா? சிசுக்கொலையா? பெற்றோருக்குத் தெரியுமா?
தெரியக்கூடாது என்பதற்காகத்தானே இப்படி ஒரு வருகை.
பெற்றோருக்கு மட்டும் இது தெரிந்திருந்தால்?… நினைத்துப் பார்ப்பதற்கே இமயம் அளவு தைரியம் வேண்டும்.
அன்று ஆனந்த் அவளைச் சந்திக்கும்போது ஏதோ ஞானோதயம் ஏற்பட்டது போலப் பேசினான்:
“தப்புப் பண்ணிட்டோம் ரேகா. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்திருக்கலாம் ஆனால் இப்பெல்லாம் இது சர்வ சாதாரணம்… எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்கள் இப்படிக் கருக்கலைப்புச் செஞ்சிக்கிறாங்க.. ஒன்னும் பயமில்லை… அஞ்சே நிமிஷ வேலைதான்”, என்று ரேகாவுக்குத் தைரியம் கூறினான் ஆனந்த். அவன்தான் டாக்டரைத் தேர்ந்தெடுத்துப் பணத்தையும் கொடுத்தான்.
அவனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? கணநேரச் சிற்றின்பத்தில் திளைத்தவன் அல்லவா? ரேகா வயிற்றில் வளரும் கருவுக்குச் சொந்தக்காரன் என்னும் முறையில், அவ்வாறு அவன் முடிவு செய்தது தப்பா? ரேகாவுக்குப் பதில் தெரியலில்லை. ஆனால், அதுபற்றி ஆராய இது நேரமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், அடிவயிற்றில் கனம் அதிகரிக்கும் அவன் சொல்வது சரி என்றே அவளுக்குப்பட்டது. அதனால்தான், கருக்கலைப்புக்குச் சம்மதித்தாள்.
கைத்தொலைபேசி மணி ஒலி ரேகாவின் சிந்தனையைக் கலைத்தது.
“ஏய் ரேகா! எங்கே இருக்கே நீ உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்து இப்பத்தான் நாம ‘புரோஜெக்ட் ‘ டைச் செய்ய ஆரம்பிச்சோம் வீட்டை வீட்டுக் கிளம்பிட்டீயா, இல்லையா?” என்று தோழி கீதா மறு முனையில் கத்துவது நன்றாகக் கேட்டது. அப்போதுதான் ரேகாவுக்கு நினைவு வந்தது. இன்று பள்ளிக்கூடத்தில் முக்கியமான ஒப்படைப்பைச் செய்ய வேண்டும். ஒன்பது மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு.
கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பது பத்து.
“ரேகா… ரேகா… என்ன இருக்கே.. இந்த ‘புரோஜெக்ட்’டுக்கும் நீ வரலேன்னா அப்புறம் உன்னை எங்க குழுவிலயிருந்து விலக்கிடுவோம்.. . இது கடைசிப் ‘புரோஜக்ட்’ ரேகா முப்பத்தைந்து மதிப்பெண்கள்… விளையாட்டுத்தனமா இருக்காதே… எல்லாரும் உன் மேலே ரொம்பக் கோபமா இருக்காங்க..”
பொறுமை இழந்த கீதா தொடர்ந்து கத்தினாள்!
“இல்லே கீதா.. எனக்கு இன்னைக்கும் உடம்பு சரியில்லே.. டாக்டரைப் பாரக்க வந்திருக்கேன்.. எனக்கு இரண்டாம் நம்பரு…சீக்கிரம் முடிஞ்சதும் ஓடி வந்திடுறேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்” ரேகாவின் கெஞ்சல்.
“எப்பக் கடைசி நாள் தெரியுமா?.. அடுத்த திங்கட்கிழமை.. இன்னறைக்குப் புதன்கிழமை.. எப்படி முடிக்கிறது? ரேகா கடைசியா சொல்றேன்.. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நீ வரலே… உன்னைக் குழுவிலயிருந்து விலக்கிடுவோம்..”
தொடர்பு சட்டேன்று துண்டிக்கப்பட்டது.
ரேகாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டில் பயிலும் அவளுக்கு இது மிகவும் முக்கியமான ஒப்படைப்பு. ஏற்கனவே, மற்ற மூன்று ஒப்படைப்புகளில் அவள் சரியாகச் செய்யவில்லை இந்தக் ‘கோஸ்’ சில் தேர்ச்சி பெறுவதும் பெறாமல் போவதும் இந்தக் கடைசி முயற்சியில்தான் இருக்கிறது. தோல்வி அடைந்தால் இன்னொரு ஆறு மாதம் அதே பாடத்தை மீண்டும் படிக்க வேண்டும். பண விரயம், கால விரயம் ஏற்படும் அது ஒரு புறம் இருக்க, பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்? இரண்டாம் ஆண்டுவரை நன்றாகப் படித்து வந்த மகள், திடீரென்று இப்படிச் சரிந்தது எப்படி? உண்மையைச் சொல்லப் போனால்? இந்த ஆண்டில் நடந்த பல விஷயங்களை, ரேகா தன் பெற்றோரிடமிருந்து மறைத்துவிட்டாள். மகளும் எப்போதும் போல் நன்றாகப் படித்துக்கொண்டு வருகிறாள் என்று பெற்றோரும் நினைத்துக் கொண்டு அவளிடம் படிப்பைப் பற்றி எதுவுமே கேட்காமல் இருந்து விட்டனர். உறவில், உணர்வில் எந்த மாற்றங்களையும் பார்க்கவில்லை அவள் பெற்றோர். ஆனால், சில வேளைகளில் ரேகா வழக்கத்திற்கு மாறாகச் சோர்வாகவும், அமைதியாகவும் இருப்பதை அவள் தாய் உணர்ந்திருக்கிறாள். ஆனால், அவற்றைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள், இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்றிருந்த இவள் செய்கை யாருக்குத் தெரியும்?
ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்த ரேகாவின் வாழ்வு, ‘ஆனந்த்’ என்னும் சூறாவளியால் திசை மாறியது. ஒரே பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஒரே ஆண்டில் பயிலும் இருவரும் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் சந்தித்தனர். ஆனந்த், பொறியியல் துறை மாணவன். ரேகா, வர்த்தகத்துறை மாணவி. இரு துறைகளையும் ஒரு பாலம்தான் இணைத்துக்கொண்டிருந்தது.அதுவே அவர்களையும் இணைத்தது. நெருக்கத்தோடு பழக ஆரம்பித்தார்கள். கண்மூடித்தனமான காதல் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், படிப்புப் பாழானது; நடத்தை தடம் புரண்டது; சில நட்புகள் முறிந்தன. வீட்டில் இயல்பாக நடந்துகொள்ள முடியமில்லை. இப்படிப் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த நிலை உருவானது. ஆரம்பத்தில் ரேகாவால், தான் கருவுற்றிருப்பதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியும், சோகமும் மனத்தைக் குடைந்தன. அதுவரையில் சோலைவனம் என்று நினைத்திருந்த வாழ்க்கை பாலைவனமாக மாறியது. திடீரென்று வாழ்க்கை கேள்விக்குறியாளது. தனிமை அவளை வாட்டியது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில்தான் ஆனந்தின் கருத்தடை யோசனை தோன்றியது.
பணியாளர் ரேகாவை உள்ளே போகும்படி சொன்ன பொழுதுதான் அவளுக்கு நினைவு திரும்பியது. எழுந்து டாக்டர் அறைக்கதவைத் தட்டினாள். உள்ளே வரச்சொன்னார் டாக்டர்.
டாக்டர பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு அவள், தன் நோக்கத்தைச் சொன்னாள்.
“ம் இது உங்கள் பெற்றோருக்கோ மற்றவர்களுக்கோ தெரியுமா?”
“தெரியாது…”
அதைக் கேட்டதும் டாக்டர் எதையோ விறுவிறுவென எழுதினார. பின்னர்ப் பக்கத்திலிருந்த தாதியிடம், ரேகாவை நேரே இருந்த அறைக்குக் கொண்டு போகச் சொன்னார் பத்தே நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் டாக்டர் ரேகாவை வேறோர் அறைக்கு அனுப்பினார். அங்கு ஓர் ஆலோசகர் அவளைப் புன்முறுவலோடு வரவேற்றார்
“உடம்பு இப்ப எப்படி இருக்கிறது சோர்வா இருக்கா? ‘மைலோ’ குடிக்கிறீங்களா?” என்று அன்போடு உபசரித்தார் அந்த ஆலோசகர். சிறிது மயக்கமாக இருந்தாலும்,
“ஒன்றும் வேண்டாம்”, என்று கையசைத்தாள் ரேகா.
“நீங்க பலதுறைத் தொழிற்கல்லூரியிலே படிக்கிறீங்கதானே… படிப்பெல்லாம் நல்லபடியா போயிக்கிட் டு இருக்கா?”
“ஆமாம்…”
ஆலோசகர் ஏன் இப்படிக் கேள்விகளைக் கேட்கிறார் என்பது அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
“என் பெயர் மேரி டான். நான் இந்த மருத்துவமனையிலே ஆலோசகராக இருக்கிறேன். குறிப்பாக, இந்த மாதிரி திருமணமாகாதஇளம் பெண்கள் கருத்தடை செய்ய இங்கு வரும்போது, நான் அவர்களைச் சந்தித்துப் பேசி எந்தெந்த வழிகளில் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வழிகளை ஆராய்ந்து, உதவி செய்ய ஏற்பாடு செய்வேன்.. உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.. அதனால், நீங்க கவலைப்படத் தேவையில்லை… தாராளமாக நீங்கள் என்கிட்டே மனம் திறந்து பேசலாம்…”
மிகவும் அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசினார் மேரி. அவரின் பரிவான பேச்சைக் கேட்டதும் தன்னையறியாமல் கண் கலங்கினாள் ரேகா. பேச நா எழவில்லை. மேரி உடனே அவளை அணைத்தவாறு, ‘டிஷு’ தாளைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். ஆதரவு கலந்த அந்த அணைப்பு ரேகாவுக்கு இதமாக இருந்தது. அந்த அணைப்பைவிட்டு வெளி வர அவளுக்குத் துணிவு இல்லை. அதை நன்கு உணர்ந்த மேரி, சிறிது நேரம் அணைத்தபடியே இருந்துவிட்டு, மேலும் ஆறுதலும் அறிவுரையும் கூறி அவளை அனுப்பி வைத்தார்.
கருக்கலைப்பு முடிந்த பின் ஆனந்த் நடந்துகொண்ட முறை ரேகாவுக்கு வியப்பையளித்தது. தன்னை விட்டு மெல்ல மெல்ல அவன் விலகிப் போவதை அவள் உணர்ந்தாள். வேறு பெண்ணிடம் அவன் கவனம் திரும்பியிருப்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன்னைப் பார்த்துவிட்டுப் பார்க்காமல் போவதும், பேசும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாமலிருப்பதும், அவள் மன வேதனையை அதிகரித்தது. ஒருநாள் தன்னை விட்டு விலகிப் போகும்படி அவன் கூறியதும் அவள் இதயம் ஒரு கணம் தின்றே விட்டது. அந்த இதயம் இப்பொழுது எந்த நேரத்திலும் வெடிக்கலாம். ஆனந்த்துக்காகத் தன்னையே அர்ப்பணித்த அவள், இப்பொழுது தன்னையே வெறுக்க ஆரம்பித்தாள். தன் பெற்றோரைப் பாரக்கும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு விதக் குற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. அம்மா மடியில் முகம் புதைத்து இதயம் வெடிக்கும் வரைக் கதறிக்கதறி அழ வேண்டும் போலிருந்தது. தனக்கு எந்தக் குறையும் வைக்காத தன் பெற்றோருக்கு, இத்தகைய இழுக்கைத் தேடித் தந்துவிட்டோமே என்று நினைத்தபோது தான், வாழத் தகுதியற்றவள் என்னும் எண்ணமும் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. என்னதான் வெளிப்பார்வைக்கு ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தாலும், மனசாட்சி அவளைச் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.
‘மேரி டான் இருக்கிறாரே. அவரிடம் பேசுவோமா? என்ன பயன்? போனது திரும்பக் கிடைக்குமா? சரி, ஆனந்த்தையாவது பார்த்துப் பேசுவோமா?’
கடைசியாக அவனை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் போலிருந்தது ரேகாவுக்கு.
“ரேகா, உனக்கு நான் பல முறை சொல்லிட்டேன்.. இதெல்லாம் இப்போ சர்வ சாதாரணம்னு.. எனக்குத் தெரிஞ்சு எத்தனையோ பெண்கள் கருத்தடை செஞ்சிருக்காங்க… எல்லாரும் இப்போ நல்லாத்தானே இருக்காங்க.. இனிமே இதைப் பற்றி என்கிட்டே பேசாதே.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமும் எனக்குக் கிடையாது.. அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருந்தா அதை மாற்றிவிடு… இனிமே நீ என்னைப் பார்க்க வர வேண்டாம்..”
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது, ஆனந்த் கூறிய அந்தச் சொற்கள். அதுவே அவர்களின் இறுதிச் சந்திப்பு. அதன் பிறகு அவனைப் பார்க்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டாள் ரேகா.
அன்று பள்ளிக்கூட வளாகம் மிகவும் அமைதியாக இருந்தது அது அவள் மனத்தில் மயான உணர்வை ஏற்படுத்தியது தேர்வுக் காலமாக இருந்ததால் ஆங்காங்கே சில மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ரேகாவால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒளியிழந்த கண்களிலிருந்து ஓய்வில்லாமல் முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டிருந்தாள் ரேகா. பின்னர்த் திடீரென்று எழுந்து வெளியே எட்டிப்பார்த்தாள். அந்தக் கல்லூரியிலேயே அவளுக்குப் பிடித்த கட்டடம் எதிரில் தெரிந்தது. மன அமைதியைத் தேடி அதன் மாடிப்படிகளில் ஏறிப் பத்தாவது மாடியின் உச்சத்தை அடைந்தாள். காற்றுப் பலமாக வீசியது; கூந்தல் கலைந்தது; ஆடைகள் ஆடின; கால்கள் தாமாகக் கட்டட விளிம்பில் நின்றன. கலங்கிய மனமோ, நிரந்தர அமைதியை நாடத் தொடங்கியது. ஒரு கணம் கண்களை மூடினாள். மறு கணம் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டாள்! வேண்டாத உறவுக்குத் தன் உயிரையே விருந்தாக்கிவிட்ட அவள் வெற்றுடல், அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தை அணைத்துக் கொண்டிருந்தது.
– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.