உருப் பெறாத மனிதன்





நானும் என் மகளும் குளத்தில் குளித்துவிட்டு வருகிறோம். என் ஐந்து வயது மகள் குளத்தில் நீந்தும் குதூகல அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒரு கிராமத்திற்கு வந்திருக்கிறாள். வெகு நாட்கள் கழித்து என் தாத்தா வீட்டிற்கு வந்திருக்கிறோம். ஆம் தாத்தா வீடுதான். பாட்டி வீடு என்று சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. பாட்டி எங்களோடு இப்போது இல்லை. இந்த வீட்டில்தான் பாட்டி தன் வாழ்வு முழுவதையும் வாழ்ந்தாள். எங்களைப் போல் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வீடுகளில் அவள் வசித்திருக்கவில்லை. இதே ஓட்டு வீட்டின் உத்திரத்தின் கீழ்தான் ஒவ்வொரு இரவும் அவள் விழிகள் உறக்கத்தைத் தழுவின. இதோ இந்த அறையின் சுவருடன் சேர்ந்திருக்கும் அலமாரியின் கதவுக்குப் பின்னால்தான் அவள் உலகம் ஒளிந்திருந்தது. ஆம் இந்த அலமாரியில்தான் அவள் புத்தகங்கள் வாசம் செய்தன. விசித்திரம். உலகத்தை அறிய வீட்டு அலமாரிக்குள் பயணித்திருக்கிறாள். இன்று இந்த அலமாரியின் கதவு கரும்பச்சை வண்ணமாக இருக்கிறது. மிகச் சீராக வர்ணம் பூசியிருக்கிறார்கள்.
இந்தக் கதவு, காலத்தைக் கடந்து அழைத்துச் செல்லும் கால எந்திரமோ! என்னை ஏதேதோ காலத்திற்குக் கடத்துகிறது. பாட்டியின் குரல் கேட்கிறது. “இது என் பேரன் போட்ட படம். எப்படி இருக்கு பாருங்க. அவனுக்கு படம் வரையறதுன்னா அவ்ளோ இஷ்டம். நல்லா வரைவான்”. பாட்டி, அலமாரிக் கதவில் இருந்த படத்தைப் பார்த்தபடி யாரிடமோ சொல்வது கேட்கிறது. இந்த அலமாரிக் கதவு விசித்திரமானது தான். இதன் முன்னால் ஒரு சிறுவனாக நான் ஒரு தூரிகையுடன் நின்றபோது, வா, வா என்று வரவேற்றது. அப்போது கதவு கரும்பச்சையாக வண்ணம் தரித்திருக்கவில்லை. யானைத் தந்தத்தைப் போல கொஞ்சம் மஞ்சளேரிய வெண்ணிறம் கொண்டிருந்தது. நான் பஞ்சுமிட்டாய் சிவப்பு நிறத்தில் நீண்ட கோடுகள் போட்டு வரைய ஆரம்பிததேன். நான் வரைந்து முடித்தபோது ஒரு ஆள் வளைந்து நெளிந்து அந்த அலமாரிக்கதவில் கோட்டோவியமாய் நின்றுகொண்டிருந்தான். பஞ்சு மிட்டாய் கோடுகள் நிரம்பிய ஒரு மனிதன். முழுமையாக உருப் பெறாத கோட்டோவிய மனிதன். இந்த உருப் பெறாத மனிதனைத்தான் பாட்டி பெருமையா, தன் பேரன் போட்ட ஓவியம் என்று எல்லோரிடமும் காண்பித்தாள். ஒரு சிறுவனைக் கலைஞனாய் பார்க்கும் பக்குவம் பாட்டிக்கு இருந்திருக்கிறது. அது எளிதில் அடையக்கூடிய பக்குவம் இல்லை என்பதைக் கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் தெரிந்து கொண்டேன்.
எங்கள் வீட்டில் என் மகள் சுவரோடு ஒட்டி நின்று எதோ செய்து கொண்டிருந்தாள். அவள் லேசாக விலகிய போது அவள் கையில் ஒரு மெழுகு கிரேயான் இருப்பது தெரிந்தது. சுவரில் எதோ கோடு. அதிர்ச்சியில் “ஏய்” என்று அதட்ட, அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். கிரேயான் சிதறிக் கீழே விழுந்தது. சுவரில் சில வட்டங்களும் தெரிந்தன. “என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” கடு கடுத்த குரலில் கேட்டேன். அவள் உதடுகள் துடித்தன. வார்த்தை வரவில்லை. கைகளைப் பிசைந்தாள். அவள் மௌனம் என்னை மேலும் ஆத்திரப்படுத்த “செவுத்துல கிறுக்கலாமா” என்றேன். அவள் அழுதுகொண்டே முணுமுணுத்தாள், “நான் கிறுக்கல, ஒரு படம் வரையிறேன்”.
நான் உறைந்துபோய் நின்றேன். பலகாலம், இந்த அலமாரிக்கதவில் உறைந்துபோய் நின்ற உருப் பெறாத மனிதனைப்போல. இந்த வீட்டில் நடந்த எல்லா மாற்றகளையும், மாறாத சாட்சியாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் கதவு மனிதன். வீடு நீலமாக மாறியது. பின் மஞ்சளாக மாறியது. மீண்டும் நீலம் பூண்டது. அந்த மனிதன் அப்படியே இருந்தான். நான்கு முறை இந்த வீடு புதிய வண்ணங்கள் பூண்டபோதும் இந்தக் கதவுமட்டும் மாற்றப்படவே இல்லை. “அந்த அலமாரிக்கதவுல பெயிண்ட் அடிக்காதீங்க” என்ற என் பாட்டியின் குரல் கேட்கிறது. அவள் குரல் அடங்கும் வரை அந்த அலமாரிக்கதவின் கோட்டோவிய மனிதனுக்கு அரனாய் ஒலித்துக்கொண்டிருந்தது. அவளை உயிரற்ற உடலாய் இந்த அறையில் தான் கிடத்தியிருந்தார்கள். அந்தக் கோட்டோவிய மனிதனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவளைத் தீயில் கரைத்துவிட்டு வந்து அலமாரியின் முன் நின்றபோது அவன் முகத்தில் துக்கம் நிழலாடுவது போல் தெரிந்தது. தன்னைப் பாதுகாத்து உயிரோடு வைத்திருந்த இனிய சினேகிதியைப் பறிகொடுத்த துக்கமோ. பாவம். அவனால் குலுங்கி அழ முடியவில்லை. அன்று கடைசியாக அவனைப் பார்த்ததுதான்.
இதோ இன்று குளித்துவிட்டு வந்து அலமாரியின் முன் நிற்கிறேன். பாட்டியும் இல்லை. கதவு மனிதனும் இல்லை. கதவு கரும்பச்சை வண்ணமாக இருக்கிறது. மிகச் சீராக வர்ணம் பூசியிருக்கிறார்கள்.
என் மகள் ஒரு தூரிகையுடன் ஒரு சுவரின் முன் நிற்கிறாள்.
சிறப்பான கதை.. வாழ்த்துகள் சார்..