உயிர்
எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன வேதனைகளையும் நினைத்துப் பார்க்கும்போது இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
பிறந்ததிலிருந்தே அவள் கஷ்டங்களுக்கு நடுவிலே வளர்ந்து வந்தாலும் ஆண்டவனாகப் பார்த்து அவளுக்கென ராசய்யாவை கணவனாக அனுப்பி வைத்தான். அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவளே உணர்ந்து கொண்டாள். அவளுடைய தகுதிக்கு இப்படி ஒரு நல்ல மனிதன் கிடைப்பான் என அவளே நினைக்கவில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
அதை ராசய்யாவே அடிக்கடி கேலி செய்வான். “”ஒருநாள் பாரு, நான் உன்னை விட்டுட்டுப் போகப் போறேன். அப்ப உங்க சாமி என்ன செய்யுதுன்னு பாக்கலாம்” என்பான்.
“”போனா போ, முருகன் எனக்குன்னு வேற வழி காட்டுவாரு?” என பதிலுக்கு அவள் பேசிய காலமும் உண்டு.
இப்போது அவன் சொன்னதுபோல் அவளை விட்டுவிட்டுப் போய்விடுவான் போலிருக்கிறது. கண்ணில் நீர் பொல பொலவென அவளை அறியாமல் கொட்டியது. ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் போகும்போது ஏதேதோ தப்பு தப்பாகத் தோன்றியது.
இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்ததே என மகிழ்ச்சி அடைந்தவளுக்குத் திருஷ்டி போல் அவள் கும்பிடும் முருகன் குழந்தையை மட்டும் கொடுக்கவில்லை.
இருவருக்கும் அது வருத்தமாக இருந்தாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் உணர்ச்சி வசப்படாமல் மறைத்துக் கொள்வார்கள். குழந்தை இல்லையென்றால் பரவாயில்லை, ஆண்டவன் என்ன நமக்குச் கொடுக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைக் கட்டாயம் கொடுப்பான். வேண்டாம் என நினைத்தால் தர மாட்டான் என சமாதானம் செய்துகொள்ளும் அளவிற்கு இருவருக்கும் அந்த முருகன் மன முதிர்ச்சியைக் கொடுத்திருந்தான். அந்த அளவு இருவரும் வாழ்க்கையில் அடிபட்டிருந்தார்கள்.
ராசய்யா மிகவும் நல்லவன்தான். சின்ன காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வந்தான். பணத்தையும் நகைகளையும் வாங்கிக் கொடுக்கவில்லையென்றாலும் அவளை ராணி மாதிரி தான் வைத்திருந்தான். கிடைக்கும் வருமானத்தை அவளிடம்தான் கொடுப்பான். நல்ல சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ எந்த பிரச்னையும் வந்ததில்லை. கடனே வாங்க மாட்டான். அவன் தன்னால் முடிந்த வரை சுற்றி இருப்பவர்களுக்கு உதவிதான் செய்திருக்கிறான். குடிப்பது, பீடி, சிகரெட் என எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. அவளும் அவனிடம் அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்டதில்லை. வாரம் ஒரு சினிமாவிற்கு இருவரும் போய் விடுவார்கள். அவனுக்கு சினிமா என்றால் அவ்வளவு இஷ்டம். தீபாவளி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் புதுப்படங்களை அன்றே பார்த்துவிட வேண்டும். அதில் மட்டும் அவனை மாற்ற முடியாது. அவளும் அதைப் பற்றி பேசியதில்லை. அதற்கான அவன் தனியாக செல்லவே மாட்டான். அவளை சைக்கிளில் முன் பக்கத்திலேயே ஹாண்டில் பாரில் அமர வைத்து ஜாலியாக பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவான். சுற்றியுள்ள குடும்பங்களில் சண்டைகளும், குழப்பங்களும் வளர்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் அது ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இன்று காலையில் காய்கறி வாங்க மார்கெட்டுக் சைக்கிளில் சென்றவனை ஒரு ராட்சச லாரி பிய்த்துப் போட்டுவிட்டது. அவளுக்குத் தெரிந்தபோது, அவன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடந்தான். யாரோ வழியில் சென்ற நல்லவர்கள் அவனைச் சேர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவன் செல்போனை வைத்து போலீஸ் அவளுடைய விலாசத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் நுழைந்த பின் லட்சுமியின் புருஷன்தான் அங்கங்கு கேட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வந்தான். வழியெங்கும் பலவிதமான நோயாளிகளைப் பார்த்து நடந்தபோது அவளுக்கு படபடவென இருந்தது.
அவள்தான் ராசய்யாவின் மனைவி எனத் தெரிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவு என்பதால் அவளை மட்டும் உள்ளேவிட்டார்கள். ரத்த வாடையோடும் உடல் முழுதும் கட்டுக்களோடும் மூக்கு, வாய் என எல்லா இடங்களில் இருந்தும் பல சின்ன சின்னக் குழாய்கள் சுற்றிச் செல்ல அவன் கண் மூடி படுத்துக்கிடந்தான். அவளுக்கு மயக்கம் வருவது போல் கண்கள் இருண்டு வந்தது. நாக்கெல்லாம் வறண்டது. கை, கால்களில் சக்தி போய் நிற்கக்கூட முடியவில்லை.
எப்படியோ சமாளித்துக்கொண்டாள். அவள் மனதில் ஆண்டவன் தன்னைச் சோதிக்கப் போகிறான் என்றே தோன்றியது. அவளுடைய ராசய்யாதான் அப்படிப் படுத்திருக்கிறான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. தள்ளாடிக் கொண்டே வெளியே வந்துவிட்டாள். அதிர்ச்சியால் அழக்கூடத் தெரியாமல் ஓரத்தில் நின்றிருந்தவளைக் கூட்டமே வேடிக்கை பார்த்தது. அவளைக் கை காட்டி பலர் பேசிச் சென்றனர். தன் கூட துணைக்கு வந்திருந்த லட்சுமியும் அவள் கணவனும் ராசய்யாவைப்
பார்த்துவிட்டு,””கவலப்படாத மல்லிகா…எல்லாம் சரியாயிரும்” என்றார்கள். ஏதோ பேருக்கு தான் சொல்கிறார்கள் என அவர்கள் முகங்களில் தெரிந்தது.
மல்லிகா அதன்பின் இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையின் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தாள். லட்சுமி டீயும், இட்லியும் வாங்கி வந்து கொடுத்தாள். இட்லி ஒரு துண்டு கூட தொண்டையில் இறங்கவில்லை. அதன்பின் அவ்வப்போது டீ குடித்தாள். வீட்டிற்கே செல்லவில்லை; குளிக்கவில்லை.
திடீரென டாக்டர் கூப்பிட்டு,””உம் புருஷன் முழிச்சிட்டாரும்மா. இனி எந்த பயமும் இல்லை” என சொல்லமாட்டார்களா என எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் அசையக்கூட இல்லை. மூச்சு மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தது.
மூன்றாவது நாள் பெரிய டாக்டர் கூப்பிடுவதாகச் சொல்லி அவரைப் பார்க்கத் தயங்கி தயங்கி நுழைந்தாள். “”உக்காருங்கம்மா” என மிக மரியாதையாகச் சொன்னார். அவளும்,””பரவாயில்லிங்கய்யா” எனச் சொல்லி நின்று கொண்டே பேசினாள். அவர் ராசய்யா பற்றியும் அவனின் தொழில் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கேட்டார்.
எதற்கு இப்படிக் கேட்கிறார் என பயம் வந்தது. பின் ஒரு நிமிஷம் அமைதியாக இருந்து அவள் கண்களைப் பார்த்தார். அவர் பார்வை பல அர்த்தங்களைச் சொன்னது. அவரும் “”பாருங்கம்மா…அவருக்கு இரண்டு ஆபரஷேன் பண்ணிட்டோம். எந்த முன்னேற்றமும் இல்ல” என பீடிகை போட்டுப் பேசினார். அவளுக்குப் புரிந்துவிட்டது. அவர் உட்காருங்கள் எனச் சொன்னபோது வேண்டாம் என்றவள் அருகே இருந்த நாற்காலியில் தானே அமர்ந்துவிட்டாள். “”அவருக்கு தலையில, அதுவும் மூளையில நல்லா அடிபட்டிருக்கு”என்று சொல்லி அவளைப் பார்த்தார். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவரும் அவளைப் பார்த்து,””அவர் மூளை சரி பண்ண முடியாத அளவு சேதமாயிருக்கு. நாங்களும் எவ்வளவோ போராடிப் பார்த்துட்டோம்மா. முடியல. இனி ஒவ்வொரு பாகமா வேலை பாக்கிறத நிறுத்திடும். இப்பவும் பேருக்குத்தான் உயிர் இருக்கு. முக்கியமான குழாயை எடுத்துட்டோம்னா உயிர் போயிடும்” என்று முடித்தார்.
அவன் அவளை விட்டுவிட்டுப் போய்விட்டான் என்று புரிந்துவிட்டது. அவளுக்குத் தெரியாமல் அழுகை பீரிட்டு வந்து சத்தமாக அழ ஆரம்பித்தாள். கதறி அழுதாள். டாக்டரும் அதைப் புரிந்துகொண்டு அழுது முடியும் வரை காத்திருந்தார். அழுகையை நிறுத்தி கண்களைத் துடைத்துக்கொண்டு இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பது போல் அவரைப் பார்த்தாள்.
டாக்டரும் அவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டார். மேலும் அவளைப் பார்த்து,””பாருங்கம்மா உங்களுக்கு உங்க புருஷனோட நிலைமை நல்லா புரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்”. அவளும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். “”உங்க புருஷனோட நிலைமையை நாங்க மூளைச்சாவுன்னு சொல்லுவோம்” சிறிது நிறுத்தினார்.
“”அப்படின்னா அவரோட உடம்புல இருக்கிற இதயம், குடல், கண் எல்லாம் வேலை பார்த்துட்டுத்தான் இருக்கு; அதுவும் சிலமணி நேரம்தான். அதுக்கப்புறம் எல்லாம் நின்னு போயிரும்” எனப் பேசிக் கொண்டிருந்தபோது என்னதான் சொல்ல வருகிறார் என்ற மாதிரி அவள் பார்த்தாள்.
அவரும் அதைப் புரிந்துகொண்டு, “”இங்க பாருங்கம்மா, சுருக்கமா சொல்றேன். அவரு உயிர் வாழ முடியாதுங்கிற நிலைமையில அவரோட மத்த பாகங்களை வேற நோயாளிகளுக்கு பொருத்தினா அவங்க உயிர் வாழ வாய்ப்பிருக்கு” எனச் சொல்லி முடித்தார். அவருக்கும் வேர்த்திருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
அவள் டாக்டரைப் பார்த்து,””இப்ப நான் என்ன சார் பண்ணணும்?” எனக் கேட்டாள்.
“”உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுதும்மா. எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு இள வயசுப் பையன் 25 வயசு இருக்கும்மா…அவனுக்கு இதயம் சரியில்லாம இருக்காம்மா. அவனுக்கு உங்க கணவரோட இதயத்தைப் பொறுத்த முடியும். அதையும் சீக்கிரமா பண்ணியாகணும். அந்த பையன் ரெடியாத்தான் இருக்கான். இந்த முடிவு உங்க கையில்தான் இருக்கு. நீங்க எவ்வளவு சீக்கிரமா முடிவு பண்றீங்களோ அவ்வளவு நல்லது. உங்க வீட்ல பெரியவங்க எல்லாரையும் கேட்டு முடிவு பண்ணுங்க” எனச் சொல்லி முடித்தார்.
அவள் வெளியே சென்று முடிவு பண்ணிவிட்டு வரட்டும் என்பது போல் பார்க்க அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவரைப் பார்த்து,””சார், எனக்கும் அவருக்கும் சொந்தக்காரங்கன்னு யாரும் இல்ல. நீங்க பேசுனது எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு. அவரே இல்லன்னு ஆனதுக்கப்புறம் நான் என்ன சொல்றது? நீங்களா என்ன பண்ணணும்னாலும் பண்ணிக்கலாம்” எனத் தீர்மானமாகச் சொன்னாள். பொதுவாக இந்த மாதிரி சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் சீக்கிரமாக முடிவு எடுக்க மாட்டார்கள். பல கேள்விகள் கேட்பார்கள். “”என் புருஷனோட இதயத்தை எடுக்கணுமா?” “”என்ன கண்ணை நோண்டப் போறீங்களா?” “”வேணவே வேணாம் அவரைக் கஷ்டப்படுத்த வேண்டாம்” எனப் பலர் வேறுவேறு மாதிரி பேசுவார்கள். ஆனால் ஐந்து நிமிஷத்தில் இவ்வளவு சீக்கிரம் நிலைமையைப் புரிந்து கொண்டு “சரி’ என்று சொன்னது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ படித்தவர்களும் பணக்காரர்களிடமும் கூட இது போன்ற சூழ்நிலையில் உறுப்புகளைத் தானம் செய்யுங்கள் எனக் கேட்டால் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள். “”நீங்க வேணும்னுதான் கொன்னுட்டீங்க”
எனப் பலவாறு திட்டி கலாட்டா செய்யும் மனிதர்களையும் பார்த்திருக்கிறார். ஆனால் சில நிமிடங்களில் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு,””எது வேணும்னாலும் செஞ்சுக்கங்க சார்” என்ற படிக்காத ஏழைப் பெண்ணைப் பார்க்கும்போது அவரும் கூட சற்று உணர்ச்சிவசப்பட்டார்.
அதன்பின் அவளும் எதுவும் கேட்கவில்லை. ஏதேதோ காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அன்று மாலையே அவளுக்கு ராசய்யாவின் உடலைப் பொட்டலமாகக் கொடுத்தார்கள். இறுதிச் சடங்குகளும் நடந்து முடிந்தன. அவளுக்கு வாழ்க்கையே கனவு மாதிரி இருந்தது. இரண்டே நாள்களில் சமாளித்துக்கொண்டு கடையை நடத்த ஆரம்பித்தாள்.
ஒரு வாரம் போனது.
ஒருநாள் காலை அவள் கடைக்கு முன் பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து பணக்கார அந்தஸ்தில் வடநாட்டு சேட் போல வயதானவர் ஒருவர் இறங்கினார். கூடவே இன்னொரு மனிதரும் இருந்தார். அவளைப் பார்த்து வணங்கினார். பேச வேண்டுமென்றார். அவளும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். சேட் உட்கார்ந்து சுற்றிப் பார்த்தார். மாலை போட்டு சந்தனம், குங்குமம் வைக்கப்பட்ட ராசய்யாவின் போட்டோவை எழுந்து நின்று வணங்கினார். அவளுக்குப் புரிந்துவிட்டது. கூட வந்த மனிதர்,””அம்மா, ஐயாவோட பையனுக்குத்தான் உங்க புருஷனோட இதயத்தைப் பொருத்தி இருக்காங்க. அந்த பையனுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சும்மா…பொதுவா, இந்த மாதிரி தானம் கொடுக்கிறப்ப யாரு யாருக்குக் கொடுக்கிறாங்கன்னு சொல்ல மாட்டாங்க. ஐயாதான் எப்படியோ உங்க விலாசத்தைக் தெரிஞ்சுகிட்டாரு” என நிறுத்தினார். அவளும் சரி அதனால் என்ன என்பதுபோல் கேட்டாள்.
அவரும்,””உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டதும் எப்படியாவது உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு முடிவு செஞ்சிட்டாரு” அந்த பணக்காரரும் “ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினார். “”அவரில்லாம இனி எவ்வளவு கஷ்டப்படப் போறீங்கன்னு யோசிச்சு” எனச் சொல்லி பையிலிருந்து ஒரு பணக்கட்டை எடுத்து அவளிடம் நீட்டினார். “”இந்த பணம் மட்டுமில்ல. உங்களுக்கு எப்ப எது வேணும்னாலும் ஐயா கிட்ட வரலாம். ஐயா அதைப் பண்ணத் தயாரா இருக்காரு. தயவு செஞ்சு இதை அவரும் உதவின்னு நினைக்கல. கடமைன்னுதான் நினைக்கிறாரு. உங்கள உயிர் கொடுத்த தெய்வம்னு நினைக்கிறாரு. அதனால…” என பேச, கை கொண்டு தடுத்த மல்லிகா, “”ஐயா, உங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் பணம் வாங்குனா உங்களுக்கு திருப்தியா இருக்கும். ஆனா நான் நிம்மதியா தூங்க முடியாதே. எனக்கு பிள்ளை குட்டிங்கன்னு யாரும் இல்ல. அவர் வச்சு கொடுத்த கடைய வச்சு என் பிழைப்ப பாத்துக்குவேன். தனிக்கட்டைக்கு எவ்வளவுய்யா பணம் வேணும். என் புருஷன் செத்தது விதி. யாரோ புண்ணியாத்மா அவர ஆஸ்பத்திரில சேத்ததுனால அவர கொஞ்ச நாளைக்காவது டாக்டர் காப்பாத்த முடிஞ்சது. இப்ப உங்க பையன் நல்லா இருக்காருன்னு கேக்கவே ரொம்ப சந்தோஷம். அவருக்கு பிள்ளைங்கன்னா ரொம்ப உசிரு. ஆனா, ஏன் அந்த ஆண்டவன் அந்த பாக்கியத்தை எங்களுக்குக் கொடுக்கலைனு தெரியல. உங்க பிள்ளைக்கு அவரால உசிரு கொடுக்க முடிஞ்சதுங்கிறதே சந்தோசமா இருக்கு”
சேட்டும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளும், “”உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க. அப்படி பணம் செலவழிக்கணும்னு நினைச்சா இந்த பணத்தை ஏதாவது அனாதைகளுக்கு செலவு பண்ணிருங்க. தயவு செஞ்சு இனியும் பணத்தை வாங்கு. உதவி பண்றேன்னு சொல்லாதீங்க” எனச் சொல்லி அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தப் பெரியவரும் கண்கலங்கியபடி அவளை வணங்கி ராசய்யாவின் படத்தையும் வணங்கிச் சென்றார். அவளும் கண் கலங்க அந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திருப்தியுடன் சிரிப்பது போல் இருந்தது.
– ஆர்.வெங்கட்டரமணன் (ஜூலை 2012)