உயிர் மூச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,497 
 
 

இனி எனக்கு யாருமே இல்லையா…? 16 வயது சுந்தரி என்ற நான், இவ்வுலகில் இனி தனித்து விடப்பட்டு விடுவேனா…! அனாதையாய் அலையப்  போகிறேனா…!?  என் பள்ளி படிப்பு அவ்வளவுதானா.?! என் வாழ்க்கை பயணம்,  இனி கரடு முரடு தானா…? 

ஆள் அரவமற்ற காட்டுக்குள் , கொடூர மிருகங்களுக்கு நடுவில் , தனித்து விடப்பட்டவளாய் , ஒரு நொடி உணர்ந்தவள், சட்டென்று சுதாரித்துக் கொண்டு, இனி என்ன செய்வது என சிந்தித்தாள் சுந்தரி.

அம்மாவின் மூச்சுத் திணறல் அதிகரித்துக் கொண்டே….செல்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகி, இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.

 டாக்டரிடம் “அழுது ஆர்ப்பாட்டம்” செய்து விட்டாள். அவர்களும் முயற்சித்தார்கள். எங்குமே ஸ்டாக் இல்லையாம்.

தெரிந்தவர்களிடம், தனியார் ஏஜென்சி மூலம், முயற்சிக்க சொல்லியாகிவிட்டது. ஒரு பலனும் இல்லை. அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள்.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு  அம்மாவை கொண்டு செல்லலாம் என்று தான் இருந்தேன். அக்கம் பக்கம் பயமுறுத்தினார்கள். இன்றைய நிலையில் , அங்கு படுக்கை கூட கிடைக்காது என்றனர். எல்லாம் தொலைபேசி மூலமாகத்தான். யாரும் உதவிக்கு வரவில்லை. கொரோனா…! மக்களை அந்த அளவிற்கு…பயமுறுத்தி விட்டது.

இருப்பினும், அங்கு சென்று….பார்த்துவிட்டு தான் வந்தேன். அந்தக்  கோரக் காட்சியை என்னால் பார்க்க சகிக்கவில்லை. பலர் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஒரே கூட்ட நெரிசல். ஆங்காங்கே அழுகுரல்கள். அந்த சூழ்நிலை என்னை இன்னும் மோசமாக பயமுறுக்கியது. அதனாலயே   அம்மாவை, இங்கு  வந்து சேர்த்தேன். 

 இனி நான் என்ன செய்வேன்…! எங்கிருந்து வந்தது இந்த கொரோனா.? ஏன் வந்தது.??? உலகையே ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறது.?? திட்டமிட்டு , பரப்பப்பட்ட வைரஸ் என சொல்கிறார்களே..!!! உண்மையா..?

 ஐயோ…இரண்டாவது அலையில், கொத்துக்கொத்தாய் மரணிக்கிறார்களே. பக்கத்து வீட்டில் போன வாரம், அம்மா, அப்பா, மகன் மூவரும் பலியானார்களே…!!!

 நினைக்க… நினைக்க…. நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது சுந்தரிக்கு.

இன்னும் எவ்வளவு நேரம், அம்மாவின் உயிர் …அவள் உடலில் இருக்கும்  , என தெரியவில்லை.

அம்மாவும் போய் விட்டால்… நான் எப்படி இந்த கொடூர உலகில்… ? இந்த வயதில்…?

கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை…சுந்தரிக்கு.

அப்பா… இறந்ததை கூட ஒருவாறு… ஜீரணித்துக் கொண்டேன்.  அம்மா தான் அதிகம் புலம்பித் தீர்த்தார்கள். யாருமே இல்லாத அனாதை  பிணம் போல , ஆஸ்பத்திரியில் இருந்து, இப்படி…ஆம்புலன்ஸில் வந்து முகத்தை மட்டும் காட்டி விட்டு , அப்படியே எடுத்துச் சென்று விட்டார்களே… என தன் மனதை தேற்றிக் கொள்ள முடியாமல் அழுது புலம்பினார்கள்… 

இன்று…அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.  எட்டு வயது வரை , நான் அப்பாவை பார்த்ததே இல்லை.  அதுவரை அப்பா ,  வெளி நாட்டில்.

அதனால்,  என் நேரம் முழுவதும், அம்மாவுடன் மட்டுமே கழிந்தது. எனக்கு எல்லாமே அம்மா தான். எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை என் அம்மா… இப்பவும் என்  அம்மாவின் முந்தானை…. என் முகத்தில் பட்டால் தான் எனக்கு தூக்கம் வரும். அம்மா வாசம்.  அதை நான் இழந்து விடக்கூடாது.

 ஏதாவது செய்தாக வேண்டும்…என் அம்மா உயிர் பிழைத்தே ஆக வேண்டும்.

உலகின் அத்தனை தெய்வங்கள்யும் வேண்டிக் கொண்டாள் சுந்தரி. ஏதோ ஒரு வழியில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்து விடாதா..!!! அம்மா மீண்டு வந்து விட மாட்டார்களா..???

அப்பா இறந்து,  ஒரு மாதம் கூட ஆகவில்லை . அப்பாவிற்கு காரியம் செய்து விட்டு, இப்போதுதான் உறவினர்கள் ஊர் போய் சேர்ந்துள்ளார்கள்.  எவ்வளவு முயன்றும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அம்மாவையாவது காப்பாற்றியே தீர வேண்டும். இல்லையெனில் நானும் அவர்களுடனே போய் சேர வேண்டும்.

அம்மாவின் மூச்சுத் திணறலை பார்க்க சகிக்கவில்லை .இந்த வேதனையை பார்ப்பதே பெரிய வேதனையாய் இருந்தது. அம்மாவின் கையை  நான் அழுத்தி, பிடித்துக் கொண்டிருந்தேன்.

பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள காற்று.. சுத்தப்படுத்தப்பட்டு, புட்டிக்குள் அடைக்கப்பட்டு, உயிர் மூச்சாய், ஒரு லட்சம் ,இரண்டு லட்சம் என விற்கப்படுகிறதே…!!! அதுவும் கிடைக்கவில்லையே….!!!

மருத்துவமனையின் சூழல், சுந்தரிக்கு ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்திக் கொண்டே…. இருந்தது. ஒரு பக்கம் மகனை காப்பாற்ற அம்மா…!!, மறுபக்கம் கணவருக்காக மனைவி….! ,மற்றொரு பக்கம் அப்பாவிற்காக மகன் ….!!!, என  மருத்துவமனையில், வாடி வதங்கிய… முகத்தோடு பலர் தவித்துக் கொண்டிருந்தார்கள்..

மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மத்தியில் ,போதுமான ஜன்னலும், இயற்கையான  காற்றும் இல்லாத நிலையில்,…

அம்மாவை வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா?. …புங்க மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா…? டாக்டர்கள் விடுவார்களா.? இப்படி சாவதை விட , புங்க மரத்தடிக்கு  சென்றாலாவது , நல்ல காற்று கிடைக்குமே. கொஞ்சம் மூச்சு விட முடியுமோ…! அம்மா உயிர் பிழைத்தாலும் பிழைக்கலாம்…… சாத்தியம் இருக்கு…. மனதில் பலவித குழப்பங்கள்.

மரங்களின் மகத்துவத்தினை மக்கள் உணர்வதே இல்லை.

அம்மா கையை அசைக்கிறாள். ஏதோ சொல்ல வருகிறாள்….. சொல்ல முடியவில்லை.

 என் அம்மா…. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பது, அப்பட்டமாக தெரிகிறது.

“டாக்டர்.”….மருத்துவமனையே அதிர்ந்து போனது , சுந்தரியின் கதறலை கண்டு. வாழ்க்கையின் எல்லைக்கே சென்று விட்டாள்  சுந்தரி.  சுந்தரியின் கதறலைக் கேட்டு டாக்டர்  , நர்ஸ்  அனைவரும் ஓடி வந்தார்கள்.*

“என் அம்மா பிழைத்தே…. ஆக வேண்டும் டாக்டர் .ஏதாவது செய்யுங்கள் டாக்டர் …ஏதாவது செய்யுங்கள்…. என்று  டாக்டரின் காலை பிடித்து கதறினாள். மன்றாடினாள். அருகில் நின்ற அனைவரும் கண் கலங்கினர்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லையே… என்னம்மா செய்வது. என்னால் முடிந்தவரை முயற்சித்து விட்டேன் சுந்தரி.

டாக்டர் செய்வதறியாது திகைத்து நின்றார். அந்த அம்மாவின் உயிர் மிக மோசமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறதே..!!!

*அந்நேரத்தில் பக்கத்துவார்டில்  இருந்து , ஒரு டாக்டர்  விரைந்து வந்து, இந்த டாக்டரிடம் ஏதோ ஆங்கிலத்தில் மெதுவாக கூறினார்.  அது சரியாக கேட்கவில்லை சுந்தரிக்கு.*

உடனே  டாக்டர் விரைந்தார். 

சுந்தரி, டாக்டர்….டாக்டர்… ப்ளீஸ் போகாதீங்க…என் அம்மாவை காப்பாற்றுங்கள்…  டாக்டர்…பிளிஸ்… என  கதறி விட்டு, அம்மாவை,  திரும்பிப் பார்த்த நொடியில், அம்மாவின் உயிர் மிக மோசமாக, ஊசலாடுவதை கண்டு, சுந்தரி மூர்ச்சையானாள்.

பாவம் …அப்பாவை இழந்த பொண்ணு…! அம்மாவாவது….

எதிர் இருக்கையில் இருந்த அம்மா ,கண் கலங்கினார்.

டாக்டர் பம்பரமாய் சுழன்றார்.

மூர்ச்சையான சுந்தரிக்குள்… என் அம்மாவின் கடைசி மூச்சுக்கு முன், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட வேண்டுமே…!  இறைவா….  பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் துணைக்கு அழைத்து கொண்டிருந்தாள்.

கண் முன்  பசுமையான வேப்ப மரங்களும், புங்க மரங்களும், மா மரங்களும், மற்ற அடர்ந்த அனைத்து மரங்களும், அப்பப்பா , உயிர் மூச்சினை, இப்பிரபஞ்சத்தில்  பரப்பி வியாபித்துக் கொண்டிருந்தது. அம்மா… அங்கு சுகமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள். 

யாரோ… தன்னை தொடுவதை உணர்ந்த  சுந்தரி  , திடுக்கிட்டு, கண் விழித்தாள்.

எதிரே……டாக்டர் ….. அவர் முகத்தில் புன்னகை.

ஒருவாறாக , தெளிந்த சுந்தரி , திரும்பிப் பார்த்தாள். அம்மாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் , பொருத்தப்பட்டு, சுவாசம் சீராக போய்க்கொண்டிருந்தது.

சுந்தரியின் முகத்தில் ஆச்சரியம்.. பிரகாசம்.

எப்படி டாக்டர் …..?எப்படி…?  வியந்து கேட்டாள் சுந்தரி.

சற்று , நிதானித்து கேட்டபோது , டாக்டர் சொன்ன விஷயத்தை அறிந்த சுந்தரி , குமுறி , குமுறி அழுதாள்.

ஒரு பக்கம் ஆனந்தம்.!

மறு பக்கம் சோகம்..!

பக்கத்து வார்டில் சிகிச்சை பெற்று வந்த, 28 வயது இளைஞன் , இறந்துவிட்ட நிலையில், அவனுக்கு பொருத்தப்பட்டிருந்த, மீதி சிலிண்டர் , இந்த அம்மாவை காப்பாற்றி உள்ளது…

டாக்டர் அமுதா அவர்களின், சமயோகித  அறிவாலும், விரைந்து எடுத்த நடவடிக்கையாலும், அம்மா உயிர் பிழைத்தது அறிந்து, சட்டென்று டாக்டரின் , கால்களைத் தொட்டு வணங்கினாள்.  உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே….. எனக்கு தெரியவில்லை டாக்டர்.  கொரோனா என்பதால் பக்கத்து வீட்டில் இருந்து கூட யாரும் எனக்கு துணைக்கு வரவில்லை.  நீங்கள் நாள் முழுவதும் கொரோனா நோயாளிகளோடு… போராடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சேவைக்கு இணையில்லை டாக்டர் . 

மிக்க நன்றி டாக்டர். மிக்க நன்றி. அனைத்து டாக்டர்களுக்கும்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை சுந்தரி. எங்கள் கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

மகனை இழந்த அந்த அம்மாவிடம் போய் பேசு …சுந்தரி.

சுந்தரி….  அந்த அம்மாவை , கட்டிப்பிடித்து கதறினாள். 

விம்மினாள்.. தங்களுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை அம்மா….

அந்த அம்மாவுக்கு… மகனை இழந்த சோகம் . ஆனால்…. இந்த சுந்தரியின்  அம்மாவை , காப்பாற்றிய திருப்தி…

சுந்தரிக்கோ…. அம்மா உயிர்பிழைத்த சந்தோசம். அந்த அண்ணா…!!! இறந்துவிட்ட சோகம்.

அத்தனை நிகழ்வுகளையும் சுந்தரியின் தாய் கவனித்துக் கொண்டிருந்தாள். சுந்தரி… தன் தாயின் முகத்தில் முகம் புதைத்தாள். 

அம்மா வாசம்  … இனி  என்றும் எனக்கே…. எனக்கு.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *