உபநிஷதங்கள்
இந்த உலகின் அனைத்து மதங்களுக்குமே அடிப்படையானது அன்பும், அமைதியும்தான். அந்த அடிப்படையை மறந்துவிட்டு நாம் ‘நம் மதம்’தான் பெரியது என்று கூறிக்கொண்டு அறியாமையில் உழல்கிறோம்.
நம்முடைய ஆசை, கவலை, பயம், கோபம், பொறாமை, வெறுப்பு எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம் நம்முடைய எண்ணங்கள்தான். தாட் ப்ராசஸ். எண்ணங்கள்தான் மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அதே சமயத்தில் அவனுக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபமும் அதே எண்ணம்தான்.
எப்படி அவன் எண்ணம் என்கிற சொல்லுக்கு ஆசை, பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல பெயர்களை பிரிச்சு பிரிச்சு வச்சானோ, அதே மாதிரி தன்னுடைய எண்ணத்திற்கு பல லட்சம் பெயர்களை வைத்துக்கொண்டான். அதுல ஒரு பெயர்தான் மதம். அதே மாதிரிதான் ஜாதி, இனம், தமிழன், மலையாளி, கொல்டி; அதுக்கும் மேல கடவுள்னு பொத்தாம் பொதுவா ஒரு பெரிய பேரு…
ஆமாம், கடவுள் என்பதும் நாம் வைத்த பெயர்தான்; அதுவும் ஒரு மனித எண்ணம்தான்.
எண்ணங்களின் இயல்பு என்னவென்றால் பிரிப்பது. எண்ணம் என்கிற அந்த நகர்வு இருந்துகிட்டே இருக்கிறவரைக்கும் பிரிவுகளும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதாவது ஆயிரம் ஜாதிகள் இருக்கும்; மதம் இருக்கும்; குலம் கோத்ரம் இருக்கும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களாகிய நாம்தான் உண்மையை உணர்ந்து கொள்ளாமல், நமது தனிப்பட்ட கோப தாபத்தினால் மதங்களை உடைத்து அதையே சிறிய சாதிகளாக்கி தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஆர்ப்பரிக்கிறோம். இது நமது அறியாமையின் உச்சம். இதே ஈகோதான் அரசியலிலும். மனிதர்கள் தோன்றியவுடனே ‘பிரிவு’ என்பது தொடங்கிவிட்டது.
நாம் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் இது புரியும்.
பாருங்களேன்… கிறிஸ்தவ மதம் தோன்றிய போது. சிலர் ஒன்று சேர்ந்துகொண்டு அதில் சில விஷயங்களை ப்ரோடெஸ்ட் செய்தார்கள். அவர்களினால் அந்த மதம் உடைந்து ப்ரோடஸ்டென்ட் என்கிற உட்பிரிவு தோன்றியது. கத்தோலிக்கர்களுக்கும் இவர்களுக்கும் ஒத்து வராது. ஆனால் இயேசுநாதர் தான் சிலுவையில் அறையப்பட்ட சமயத்திலும் கூட ரத்தம் சிந்தி அன்பையும், சகிப்புத் தன்மையையும்; மன்னித்தல் என்கிற உயர்ந்த குணத்தையும் உலகுக்கு உணர்த்தினார்.
அதேபோல் முஹமது நபியால் இஸ்லாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அது உயர்ந்த சிந்தனைகளையும்; நல்ல நம்பிக்கைகளையுமே விதைத்துள்ளது. இஸ்லாத்தின் கடமைகளும்; சட்டங்களும் தூய்மையையும், புனிதத்தையும் பறை சாற்றுபவை. உன்னதமான மதம் இஸ்லாம். அப்பேர்ப்பட்ட இஸ்லாமியர்களுகுள்ளும் சன்னி, சியா, அகமதியர்கள், சூபியம், இபாதி என்று பிரிவுகள் வந்தது. அதற்கும்மேல் லெப்பை, பட்டாணி என்று பல உட்பிரிவுகள்.
இந்து மதத்திலோ கேட்கவே வேண்டாம். இந்துக்களிலேயே ஜாதி இந்துக்கள் தனி. ஐயங்கார்களில் வடகலை, தென்கலை என்கிற உட்பிரிவுகள். கோயில் யானைக்கு நாமம் போடுவதில் அவர்களுக்கிடையேயான அடிதடி சொல்லி மாளாது. ஐயர்களில் அதற்கும்மேல். முதலியார்களில் சைவ முதலியார், செங்குந்த முதலியார் என பல பிரிவுகள். வன்னியர்களிலும் அப்படியே. தேவர்களிலும் வீரத் தேவர்கள், கள்ளர்கள் என்று உட்பிரிவுகள். இதெல்லாம் நாமாகவே தோற்றுவித்துக் கொண்டது.
மதத்தைவிட மனிதம்தான் பெரியது என்கிற உண்மையை என்று நாம் உணரத் தொடங்குகிறோமோ அன்றுதான் நாம் முழு மனிதர்களாவோம்.
அரசியலையும் இம்மாதிரி ‘பிரிவுகள்’ நம்மை விட்டு வைக்கவில்லை. திகவில் ஆரம்பித்து திமுக; அதிமுக; அமமுக என்று உடைந்து கொண்டே போகிறது. யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தனிமனித ஈகோ என்பது புரியும். எனவே மனிதர்கள் இருக்கும்வரை இந்தப் பிரிவுகள் இருக்கும்போல…
சரி, எனக்கு சற்றே அறிமுகமான ஹிந்து மதத்தைப் பார்ப்போம்.
பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவனாகவும், ஒருவன் தாழ்ந்தவனாகவும் ஆகிறான் என்று வேதங்கள் கூறவில்லை. மஹாபாரதத்தில் யஷப் ப்ரசன்னத்தில் இதே கருத்து வலியுறுத்தப் படுகிறது.
அது மட்டுமில்லாமல் உபநிஷதங்களின் மையக் கருத்து என்னவெனில், ‘ஆன்ம’ உணர்வைப் பெறுவதுதான் இறுதி லட்சியமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும். அதை எங்கோ தேடி அலைய வேண்டாம். அது நம்மிடம்தான் இருக்கிறது. பரம்பொருள் நமக்கு மிக அருகாமையில்தான் இருக்கிறது. ஆனால் நாம்தான் அதைப் பார்க்க மறுக்கிறோம்.’ இதை விளக்க, காஞ்சி மஹா பெரியவர் ஒரு கதையைச் சொன்னார்…
கல்யாணமாக வேண்டிய வயதில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர்கள், தங்கள் உறவினகளுக்குள்ளேயே ஒரு பையனைப் பார்த்து, அவனுக்கு அவளை கல்யாணம் செய்துவைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘எல்லா மனிதர்களையும் விட உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் தேடி கல்யாணம் செய்து கொள்வேன்’ என்று பிடிவாதம் பிடித்தாள். “சரி உன் இஷ்டம்” என்று பெற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அந்தப் பெண், மனிதர்களில் உயர்ந்தவன் மக்களை ஆளுகிற அரசன்தான் என்று நினைத்து, அந்த ஊர் அரசன் பல்லக்கில் செல்லும்போது, தினமும் அவன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒருநாள் தன் எதிரே ஒரு ஸன்யாஸி நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த அரசன், பல்லக்கை விட்டு கீழே இறங்கி, அந்த ஸன்யாஸியை வணங்கிவிட்டு மீண்டும் பல்லக்கில் ஏறிச்சென்றான்.
இதைப் பார்த்த அந்தப் பெண் அரசனைவிட இந்த ஸன்யாஸிதான் உயர்ந்தவன் என்று தீர்மானம் செய்துகொண்டு அவரையே கல்யாணம் செய்து கொள்வது என்று நினைத்தாள். அவர் பின்னாலேயே சென்றாள். அவர் பின்னால் அவள் போகும்போது ஒரு ஆலமரத்தடியில் ஒரு பிள்ளையார் விக்ரஹம இருந்தது.
ஸன்யாஸி அந்த விக்ரஹத்தின் முன்னால் மிகவம் மரியாதையுடன் நின்றுகொண்டு, தோப்புக்கரணம் போட்டு நமஸ்கரித்தார். இதை அந்தப் பெண் பார்த்தாள். ஸன்யாஸியைவிட, இந்தப் பிள்ளையார் உயர்ந்தவர் போல இருக்கிறது என்று நிச்சயித்துக்கொண்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு ஆலமரத்தின் அடியிலேயே உட்கார்ந்தாள்.
அங்கே மனித சஞ்சலம் இல்லை. ஆனால் ஒரு நாய் அங்கே வந்து அந்தப் பிள்ளையாருக்கு வெகு சமீபமாக நின்று ரொம்ப அலட்சியமாக ஒரு காலைத் தூக்கி அசிங்கப் படுத்திவிட்டுப் போய்விட்டது. இதைப் பார்த்த பெண் திகைத்தாள். ‘என்ன இது? பிள்ளையாரைவிட நாய் உயர்ந்ததா?’ என்று புரியாமல் அவள் விழித்தபோது, ஒரு பையன் அந்த நாய் மீது கல்லை விட்டு ஏறிய, அது குரைத்துக்கொண்டே ஓடியது.
அந்தப் பெண்ணின் மனதில் மீண்டும் சந்தேகம்… ‘பிள்ளையாரையே அலட்சியமாக நினைத்த நாய், இப்போது இந்தச் சிறுவனுக்கு பயந்து ஓடுகிறது. ஆகையால் இந்தச் சிறுவன்தான் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன் போல் இருக்கிறது’ என்று அவள் நினைத்தாள். அப்போது ஒரு வாலிபன் வந்து அந்தச் சிறுவனைப் பிடித்து ‘ஏன் இந்த நாயை அடித்தாய்?’ என்று அதட்டி மிரட்டினான்.
அந்தச் சிறுவன் பயந்து அழுதபடி, ‘இனி அம்மாதிரி செய்ய மாட்டேன்’ என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போய்விட்டான். இதைப் பார்த்த அந்தப் பெண், ‘இவன்தான் எல்லோரையும்விட உயர்ந்தவன்’ என்று தீர்மானம் செய்தாள்.
கடைசியில் அவன் யார் என்றால் அவள் பெற்றோர்கள் விரும்பிய அந்த உறவுக்காரப் பையன்தான். எங்கெங்கோ சுற்றிவிட்டு, தான் தேடிய மனிதன் தன் அருகிலேயே இருப்பதை அவள் உணர்ந்தாள்.
இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ உயர்ந்த பொருளாகவும், பெரிய விஷயமாகவும் கருதிக்கொண்டு, நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். நம் அருகிலேயே, நம்மிடமே, நமது ஆன்மாவாக பரம்பொருள் இருப்பதை நாம் உணர்வதில்லை – என்பதை விளக்க அழகாக இந்தக் கதையை காஞ்சி மஹா பெரியவர் கூறியுள்ளார்.
ஆசைகளுக்குப் பலியாகி பொறாமை, துவேஷம், கோபம் போன்ற குணங்களை எல்லாம் வளர்த்துக்கொண்டு நாம் அலைந்தோமானால், நமக்கு நிம்மதி என்பது கிடையாது. இவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மாவை ஒருவன் உணர முயற்ச்சித்தால், அவனே நிம்மதி உள்ளவன் ஆகிறான். அப்படிப்பட்டவன் இந்த சரீரத்தில் இருக்கும்போதே கூட ப்ரம்ம நிலையை அடைகிறான். என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. இந்த நிலையை அடைவது மிக எளிது என்று எந்த உபநிஷதமும் சொல்லவில்லை. கடும் முயற்சிகள் வேண்டும்.
இந்த நிலையை அடைய முடியாதவர்கள் அழிந்து நாசமாக வேண்டியதுதான் என்ற சாபத்தையும் உபநிஷதங்கள் அளித்து விடவில்லை. இல்லறத்தில் வாழ்ந்துகொண்டு ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்தும்கூட, நல்ல காரியங்களையே செய்து, நல்லதையே நினைத்து வாழ்கிறவர்கள் மீண்டும் பிறப்பெய்தினாலும், அது நல்ல பிறப்பாக இருக்கும் என்ற உத்திரவாதத்தை இந்த உபநிஷதங்கள் நமக்கு அளிக்கின்றன.
ஆகையால், ஆன்ம உணர்வு என்கிற நிலையை அடைய முடியாத நம்மைப் போன்ற கோடானுகோடி மக்கள் நல்லதையே நினைத்து; நல்லதையே செய்து வாழ்வது என்ற தீர்மானத்திற்கு வந்தாலே போதும், அதுவே நமக்கு நற்கதி அளிக்கும்.
இந்த உபநிஷதங்களை எல்லாம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போதே கூட, ஒரு விஷயத்தை நாம் கவனித்திருக்கலாம். ஒவ்வொரு உபநிஷத்திலும் பல விவாதங்கள் விவரிக்கப் படுகின்றன. பல கேள்விகள் கேட்கப் படுகின்றன. பல சந்தேகங்கள் எழுப்பப் படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் விடைகளும் அளிக்கப் படுகின்றன. அந்த விடைகளை உடனடியாக முழுமையாகப் புரிந்து கொள்கிற சக்தி நமக்கு இல்லை என்பதால், அந்த விடைகள் அர்த்தமற்றவையாகி விடாது.
மற்ற எந்த மத நூல்களிலும் இல்லாத அளவிற்கு கேள்விகள், சந்தேகங்கள் போன்றவை கொட்டிக் கிடக்கிற விவாதங்கள் நடத்தி, அவற்றின் மூலம் தத்துவங்கள் நிலை நாட்டப்படுகின்றன; இவைதான் உபநிஷதங்களின் தனிச் சிறப்பு.