உன் வீடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 4,771
பெண் குழந்தை பிறந்திருக்கு சொன்ன செவிலியரை மகிழ்ச்சியுடன் பார்த்தான்
பார்த்தீபன். இப்ப பாக்கலாமா? சிஸ்டர்?
போய் பாருங்க..புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றாள்
ரோஜாப்பூ போல படுத்துக்கொண்டிருந்த குழந்தையை ஆசையுடன் பார்த்தான். அவன் அருகாமையை உணர்ந்த பானு பிள்ளை பெற்ற களைப்பில் உறக்கத்தில் இருந்தவள் மெல்ல கண் விழித்தாள்.கணவன் குழந்தையை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து “க்கும்” கணைக்க.. சட்டென்று மனைவியை பார்த்து டயர்டா இருக்கா?..கனிவுடன் கேட்டான்.
மெல்ல தலையசைக்க மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
பார்த்தீபன் அவள் தலைமேல் கை வைத்து அருகில் உட்கார்ந்து கொண்டான்.
இந்த வீட்டுல நான் எது வச்சாலும் இவன் எடுத்துக்கறான்,.. பார்த்தீபனிடம் புகார் வாசித்தாள் பத்ப்பிரியா..
அவன் உன் அண்ணன் தான செல்லம்..அவள் தலையை கோதினான்.
ம்..எப்ப பார்த்தாலும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க. இந்த வீட்டிலே எனக்குன்னு என்ன இருக்கு?
அபடியெல்லாம் சொல்லாதே, இது உன் வீடுடா செல்லம். எனக்கு நீயும், அவனும் ஒண்ணுதான்.
சொல்றதெல்லாம் இப்படி, ஆனா இந்த அம்மா அவனை கவனிக்கறதே தனியாத்தான்.
நான் என்னடி தனியா அவனை கவனிக்கறேன், உன் வயசுகு தகுந்த மாதிரி பேசு. படிக்கறது அஞ்சாவது, ஆனா வாய் மட்டும்..திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள் பானு.
ஆமா இந்த வீட்டுல நான் எது பேசுனாலூம் உனக்கு குத்தமா தெரியுது, அதுவே உன் பையனா இருந்தா…
மகளின் பேச்சை ஆச்சர்யமுடன் பார்த்தான் பார்த்தீபன்.
என்ன பேச்சு பேசுகிறாள் இந்த வயதில்? சுட சுட பதில் சொல்ல முயற்சித்த பானுவை தொட்டு அடக்கினான்.
மகளை மெல்ல அணைத்து இது உன் வீடுடா செல்லம்..அப்பாவுக்கு நீதான் முக்கியம், சரியா..போய் படி.சமாதானப்படுத்தி அனுப்பினான்.
இந்த வயசுல என்ன பேச்சு பேசுறாள், மீண்டும் பொங்கிய மனைவியை பேசாம இரு, போக போக சரியாயிடும்.
என்ன சரியாயிடும், அவன் பெரிய பையன், அவனுக்கு எது வாங்கி கொடுத்தாலும் இவளுக்கும் ஒண்ணு வாங்கணும்கறா, நேத்து ஒரு பேனா வாங்குனேன், இவளுக்கும்
ஒரு பேனா வேணுங்கறா. இப்ப உனக்கு தேவையில்லை, அடுத்த வருசம் வாங்கிக்கலாம் அப்படீன்னா அதுக்கு ஒரு பாடு அழுகை..புலம்பிக்கொண்டே தன் காரியத்தை கவனிக்க சென்றாள்.
நான் ஆர்ட்ஸ் குரூப்தான் எடுப்பேன், பிடிவாதமாய் நின்ற மகளை பார்த்தீபன், சரிம்மா, ஆனா நீ பி.ஜி.முடிச்சு பின்னாடிதான் சொல்லிக்கறமாதிரி வேலை கிடைக்கும், யோசிச்சு பார்த்துக்க..
பரவாயில்லை, என்னைய அதுலயே சேர்த்து விடுங்க, அண்ணனை மட்டும் அவன் சொன்ன குரூப்ல சேர்த்து விட்டீங்கல்ல..
பானு மகளை முறைத்தாள், ஏண்டி, உனக்கு என்ன படிக்கணும்னு மட்டும் நினை, அதுக்கு எதுக்கு அவனை வம்புக்கு இழுக்கறே?
ஆமா, உனக்கு நான்னா எப்பவும் இளக்காரம்தான்..மகளின் முணுமுணுப்பை கேட்ட பானு அங்க என்ன முணு முணுப்பு, நீ கேட்ட கோர்ஸ்லயே சேர்த்துடறோம்னு சொல்லியாச்சுல்ல, வாய் பேசாதே
இந்த வீட்டுல எனக்குன்னு என்ன உரிமை இருக்கு..மகளின் பேச்சை கேட்ட பார்த்திபன் இது உன் வீடுடா, நீ என்ன சொல்றியோ அது கண்டிப்பா நடக்கும், கவலைப்படாதே, அவளின் தலையை வருடியவாறு சொன்னான்.
எனக்கு இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்லை, என்னைய விட அவன் அஞ்சு வருசம் பெரியவன், அவனுக்கு முதல்ல முடி..
அவனும் நீயும் ஒண்ணா, அவனே உன் கல்யாணத்தை முதல்ல முடிக்க சொல்றான், நீ நாங்க சொன்ன படி கேட்டியின்னா போதும்.
இந்த வீட்டுல எனக்குன்னு என்ன உரிமை இருக்கு, பேசறதுக்கும், செய்யறதுக்கும், புலம்பிக்கொண்டிருந்த மகளை சமாதானப்படுத்தினான், பார்த்தீபன்
இது உன் வீடுடா, நீ என்ன நினைக்கிறயோ அது கண்டிப்பா நடக்கும்..பரிவுடன் சொன்னான்.
ஏங்க, கல்யாணம் பண்ணி இரண்டு மாசத்துல தனியா வந்திருக்கா உங்க பொண்ணு, என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கறா, மாப்பிள்ளையும் கூட வரலை, என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிங்க..
ஏண்டி எதுன்னாலும் அவளே சொல்லுவா, கொஞ்சம் பொறு மனைவியை அடக்கி விட்டாலும், மகளின் வருகை அவன் மனதுக்குள்ளும் ஒரு அதிர்வை உண்டாக்கித்தான் இருந்தது.மாப்பிள்ளையிடம் போன் போட்டு கேட்கவும் தயக்கமாக இருந்தது.
அப்பா, அங்க என்னால இருக்க முடியலை, எப்ப பார்த்தாலும், ஒரே கூட்டமா இருக்கறமாதிரி இருக்கு.இவரை கவனிக்கறதை விட இவரோட தம்பியையும், தங்கச்சியையும் நல்லா கவனிக்கறாங்க. இவர் சம்பாதிக்கறவர்னு கூட நினைக்காம முதல்ல அவங்க தங்களுக்கு வேணுங்கறைதை எல்லாம் செஞ்சுக்கறாங்க..இவருக்கு
வரும்போது ஓண்ணுமே இருக்கறதில்லை. இவர் என்னடான்னா அவங்க அனுபவிக்கட்டும், படிக்கற பசங்க அப்படீன்னு டயலாக் பேசறாரு. நானும் இவர் கிட்ட சொல்லி சொல்லி பார்த்தேன், எதுவா இருந்தாலும் முதல்ல உங்களுக்கு முதல்ல செஞ்சுட்டு அப்புறம் மத்தவங்களுக்கு செய்ய சொல்லுங்கன்னு ,இதைய உங்க குடும்பத்துலயும் சொல்லிடுங்கன்னு, ஆனா இவர் கேக்க மாட்டேங்கறாரு. அதுதான் அவர்கிட்டே நான் எங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
மகளின் புகார், இவன் மனதுக்குள் கொஞ்சம் நிம்மதியை தந்தது, மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.
அம்மா வீடுன்னா அப்படித்தாமா இருக்கும். உன் புருசன் அவங்களுக்கு முதல் பையனில்லையா, அவனை நல்லா கவனிச்சுத்தான் இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பாங்க.இனி அடுத்த குழந்தைகளை பாக்கணுமில்லையா?
தனக்கு சாதகமாக பேசுவார் என எதிர்பார்த்த அப்பா இப்பொழுது இப்படி பேசவும் கவலையுடன் பார்த்தாள் மகள்.
அம்மா அது உன் வீடு, நீதான் மூத்த மருமகள், அதுனால உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, அவங்களும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகி செட்டிலாயிடுவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். இந்த மாதிரி உன் வீட்டை விட்டு அடிக்கடி வரக்கூடாது, புரிஞ்சுதா? பரிவுடன் தலையை வருடிக்கொடுத்தான் பார்த்தீபன்.
இதுவரை இந்த வீட்டை உன் வீடு உன் வீடு என்று சொன்ன அப்பா, இப்பொழுது அந்த வீட்டை உன் வீடு, உன் வீடு என்று இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டதை உணர்ந்தவள், சத்தமில்லாமல் தன் வீடு தனக்கு அடுத்த வீடாகிப்போனதை மனதுக்குள் உணர்ந்தாள்.