உன் கண்ணில் நீர் வழிந்தால்….
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 157
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

குமாருக்கு அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.
“நாம்தான் கோபத்தில் பேசாமலிருந்தால்… அவளும் பேசவில்லை. பொட்டச்சிக்கு என்ன கொழுப்பு..?” பல்லைக் கடித்தான்.
‘இரவு நாம்தான் அதிகம் பேசி விட்டோமோ..? முகம் வாடிக்கிடக்கிறதே! அவளுக்கு உண்மையிலேயே நம் மீது கோபமா இல்ல நாம் பேசாததினால் பேசவில்லையா..? நாம் கோபம் பார்த்து மௌனம் இருந்திருக்கக் கூடாது. கருத்து முரண்பாடா…? சொன்ன பேச்சு கேட்கவில்லையா..? கத்தி, நாலு சாத்து சாத்தி இருந்தால் கோபம் மாறி இருக்கும். மனசு ஆறி இருக்கும். அதை விட்டுவிட்டு மௌனம் அனுஷ்டித்து வந்தது இம்சையாக இருக்கிறது.
மாலையில் வீடு சென்றதும்… நீ பேசினால் நான் பேசுவேன். நான் பேசினால் நீ பேசுவே. யார் முதலில் பேசுவது..? யார் விட்டுக்கொடுப்பது..? பணிந்து செல்வது..? என்கிற ஈகோ பிரச்சனை ஏற்படும். நீயா நானா தரை தொடரும். ஆளுக்கொரு மூலையில் நம் வீட்டில் நாம் மூன்றாவது மனிதராகிப் போவோம். ச்சை! இம்சை! – எழுந்து சென்று பாத்ரூமில் முகம் கழுவினான்.
ஹரியைக் காரணம் காட்டி இன்னொருத்தியை மணம் முடிக்க விருப்பம் இல்லை. அவனின் எதிர்காலம் குறித்துதான் இந்த முடிவு. சுமதி புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை. புரிந்து கொள்ளா மாட்டேன்கிறாள். ஹரிக்குப் பார்வை இருந்திருந்தால் இந்த பேச்சுக்கே வேலை இல்லை. – வேலை ஓடவில்லை.எழுந்து மறுபடியும் பாத்ரூம் சென்றான்.
என்ன! இந்த ஆள் வந்ததிலிருந்து வேலை செய்யாமல் இங்கும் அங்கும் செல்கிறான்..? வீட்டில் பிரச்சனை, சண்டையா..? ஹரிக்கு, மனைவிக்கு உடல்நிலையில் ஏதாவது கோளாறா..? – அருகில் அமர்ந்து வேலை செய்யும் நிர்மலா நினைத்தாள்.
நிர்மலா திருமணமாகாத அழகும் நிறமும் கொண்ட அம்சமான பெண். நல்ல வேலைக்காரி. வந்த புதிதில் இவளுக்கு வேலை சொல்லி கொடுத்தவன் என்கிற காரணத்தால் அவளுக்கு குமார் மீது மதிப்பு மரியாதை அதிகம். அதோடு மட்டுமில்லாமல் வேலையில் ஏதாவது சந்தேகமென்றால் இன்றைக்கும் எழுந்து சென்று அவனிடம்தான் தீர்த்து வருவாள்.
எழுந்தாள். கையில் சின்ன பைல் எடுத்துக் கொண்டு சென்று அவன் முன் அமர்ந்தாள்.
“என்ன சார் குழப்பம்…?”
“யாருக்கு..?”
“உங்களுக்கு..!”
துணுக்குற்றான்.
“சும்மா சொல்லுங்க வந்தததிலிருந்து கவனிக்கிறேன். நீங்க வேலை செய்யல…”
“….”
“மனசு சரி இல்லியா…?”
“ஆமாம்…”
“ஏன்…?”
“சொந்த விசயம்.”
“அலுவலகம் விட்டு சாயந்தரம் பேசலாமா..? சொல்றீங்களா..? என்கிட்டே சொல்லலாமா…?”
“சொ…. சொல்லலாம்…”
“என்கிட்ட சொல்ல வேண்டியதை யோசிச்சு அமைதியா வேலையைப் பாருங்க…”
“சரி”
எழுந்து வந்து இருக்கையில் அமர்ந்தாள்.
நிர்மலா வந்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்ற விளைவு… குமாருக்கு பெரிய முச்சுத் திணறலிலிருந்து விடுபட்ட உணர்வு.
பேனா எடுத்தான்.
அதேசமயம்…எதிர் வரிசையில் அமர்ந்து வேலை செய்வதுபோல் பாவனை செய்து இவர்களது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த ஜெயபால் எச்சரிக்கையானான்.
மாலை…
அலுவலகம் விட்டதும் குமார் அருகிலுள்ள பாரதி பூங்கா நோக்கி நடந்தான்.
நிர்மலாவும்… அவன் வாகனத்திற்கருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவனைத் தொடர்ந்தாள்.
இவர்கள் இருவருக்கும் தெரியாமல்…. ஜெயபால்.
பூங்கா ஒதுக்குப்புறம் உள்ள சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு முன் செடி மறைவில் ஜெயபால்.
“என்ன விசயம் சொல்லுங்க..?”
குமார் எல்லாவற்றையும் நிதானமாக சொன்னான்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நிர்மலா…
“ஹரி மேல உங்க அக்கறை, பாசம், நேசம் சரி. ஆனா… இதுக்கு இது தீர்வல்ல” சொன்னாள்.
“நீயும் சுமதி மாதிரி பேசறே… அவளுக்கு வக்காலத்து வாங்கறே….?”
“இல்லே சரியா பேசறேன்…!”
“சரி. உங்க வழிக்கே வர்றேன். இதையே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமா.?”
“புரியல…?!”
“சுமதிக்கு இன்னொரு கணவன் தேடி ஹரிக்குத் துணை தேடலாமா…?”
“நிர்மலா…!” இடி விழுந்தவனாக அலறினான்.
“ஏன் அலர்றீங்க குமார். சும்மா பேசின பேச்சையே உங்களால தாங்க முடியல, சகிச்சிக்க முடியல. உங்க மனைவி உங்களுக்குத் துணை தேட எப்படி சம்மதிப்பாள்..?”
குமாருக்குள் சுளீரென்று அடி!
‘அதானே! அவளுக்கு எப்படி வலித்திருக்கும்…?!’ அப்படியே சிலையானான்.
இப்படி ஆணும் பெண்ணும் எதிர் எதிர் திசையில் பயணித்தால் வாழ்க்கை…?! – நினைக்க நெஞ்சு நடுங்கியது.
தினம் நாம் அலுவலகத்திருக்கு வந்து விடுகிறோம். சுமதிதான் ஹரிக்கு ஊன்றுகோல். அவனை கழிவறைக்கு அழைத்துச் சென்று விடுவதிலிருந்து குளிப்பாட்டி, உடைகள் மாற்றி, சோறூட்டி. நல்லது கேட்டது செய்து… எல்லாமே அவள்தான். அவனின் ஒவ்வொரு அசைவும் அவள்தான்.
நமக்கு அலுவலக வேலை மட்டுமில்லாமல் நாலு பேர்களுடன் பேச்சு, பழக்கம் என்று சிறிது நேரமாவது வீடு மனைவி, மக்களை பற்றி சிந்தனை இல்லாதிருக்கும். சுமதிக்கு அப்படி இல்லை. எந்நேரமும் வீட்டில் அவனோடே உழன்றுகொண்டிருப்பதால் எப்போதும் அவனைப்பற்றி சிந்தனை. யோசிப்பு எல்லாம்.
தன் ஒரே மகனுக்காக ஊணுறக்கமின்றி அல்லல் படும் தாய்மையை, அவனுக்காகவே இன்னொரு குழந்தை செல்வம்கூட வேண்டாதென்று நினைத்திருக்கும் தாயை கொஞ்சமும் நினைக்காமல் ஹரிக்காக ஒரு பெண்ணை தேட நினைத்தோம்…அவனுக்குள் ஓடியது…?
“போங்க. போய் உங்க மனைவியிடம் மன்னிப்பு கேளுங்க. அதுதான் நல்லது.” என்றாள்.
காட்டில் வழி தெரியாமல் கண் அவிந்து தவித்த குமாருக்குத் திடீரென்று விழி திறந்து வழி தெரிந்த உணர்வு. உணர்வு மேலீட்டால் சட்டென்று அவள் கையைப் பற்றி …
“ரொம்ப நன்றி நிர்மலா நல்ல நேரத்துல கண் திறந்துட்டே…” சொன்னான்.
அவன் கையை ஆதரவாய் தட்டி ஆசுவாசப்படுத்திய நிர்மலா…
“நன்றியெல்லாம் வேணாம். சீக்கிரம் போய் உங்க மனைவியை சமாதானப் படுத்துங்க” எழுந்தாள்.
அவர்கள் பேசியது சரிவர கேட்க வில்லையென்றாலும்… குமார் நிர்மலா கையைப் படித்தது, அவள் அந்தக் கையை ஆதரவாய்த் தட்டியது பின் இருவரும் ஜோடியாக நடந்து சென்று பூங்காவை விட்டு வெளியேறியது எல்லாம் ஜெயபாலுக்குத் தெரிய….
அதே நேரத்தில் அங்கு எதிர்பாராத விதமாக வந்த சேகர் அவர்கள் ஜோடியாக செல்வதைக்கண்டதும்…
‘இதானா விசயம்..?’ நினைத்தான்.
ஜெயபால் அதை உறுதி செய்வது போல்… தான் பார்த்ததைச் சொன்னான்.
அத்தியாயம் – 11
சுமதியை வெறுமனே எப்படி சமாதானப் படுத்துவது…? தோன்ற… எதிரில் பூ விற்றுக் கொண்டிருந்த ஆயாவிடம் நான்கு முழ மல்லிகைப் பூ வாங்கிக்கொண்டு திரும்பினான் குமார்.
யாரோ தோளைத் தொட பார்த்தான்.
சந்தானம்…! ஒரே தெரு. நாலு வீடுகள் தள்ளி வீடு. நண்பன். பார்த்தால் பேசிக்கொள்வார்கள்.
“பார்த்து நாளாச்சு…” குமார் உற்சாகமாய் கை கொடுத்தான்.
“ஆமா… அதான் நானும் உன்னைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தினேன்.”
“என்ன விஷயம் எப்படி இருக்கே…?”
“நல்லா இருக்கேன்.”
“பூங்காவுல பேசிக்கொண்டிருந்தது உன் அலுவலக தோழியா…?”
“ஆமா…”
“உன்னிடம் ஒரு விசயம் சொல்லனும்…”
“என்ன…?”
இருவரும் வண்டி அருகில் வந்தார்கள்.
சந்தானத்தின் இரு சக்கர வாகனமும் இவன் வாகனத்திற்கருகில் நின்றது.
“சொல்லு…?” – வாங்கிய பூவை குமார் வண்டி பெட்டியில் வைத்துப் பூட்டினான்.
“ஹரி மேல் வண்டியை விட்ட வாத்தியார் தினம் உங்க வீட்டுக்கு வர்றாப்போல இருக்கு…”
“ஆமா…”
“சொந்தமா…?”
“இல்லே…”
“உன் நண்பனா…?”
“இல்லே…”
“சுமதிக்கு சொந்தமா…?”
“இல்லே…”
“எது எப்படி இருந்தாலும்…அவர் தினம் வேலைக்கு வர்றாப்போல வீட்டுக்கு வர்றது நல்லா இல்லே…”
“என்ன சொல்றே சந்தானம்…?”
“ஹரி மேல கரிசனம் இருந்தாலும்… தினம் என்ன பார்வை, வீட்டுக்குள்ளாற வரை போக்குவரத்துன்னு… தெருவுல பேச்சு…”
“அந்த ஆள் ரொம்ப நல்லவன் சந்தானம்…”
“தங்க ஊசி என்கிறதுனால கண்ணுல குத்திக்க முடியாது. அதுவும் நீ இல்லாத சமயமெல்லாம் அவன் புழங்க வேணாமே..கவனி!” சொல்லி தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
‘மக்கள் நல்லதும் பேசுவார்கள். கேட்டதும் பேசுவார்கள். பொருட்டில்லை. ஆனாலும் அவர்கள் பேச்சிலும் ஏன் உண்மை இருக்கக் கூடாது..?! அவன் தொடுப்பு தன்னை தொட அனுமதிக்கவில்லையோ…?!’ – குமார் மனதில் சின்னதாய் சாத்தான் புகுந்தான்!
அத்தியாயம் – 12
சிலருக்கு சிலர் மீது ஆத்ம அன்பிருக்கும். அவர்கள் பாதிக்கப்பட்டால், துன்பப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டாலே இவர்கள் நொறுங்கிப் போய்விடுவார்கள். இன்னும் நெருங்கி அவர்கள் அருகிலிருந்தால் துடித்துப் போய்விடுவார்கள்.
சேகரும் இப்படித்தான் துடித்துப்போனான்.
சுமதி நன்றாக வாழட்டும்… காதல் பெயரில் நம்மிடம் வந்து கஷ்டப்படுவதை விட… அவள் வசதியாகவே வாழட்டும் என்று விட்டுக் கொடுத்தால்… மகனுக்குப் பார்வை சரி இல்லை. அந்த வேதனைதான் அப்படி இருக்கிறதென்றால்… நாம் வந்து அந்த பார்வையற்ற மகன் மீது மோதி கஷ்டம்.
அவைகள் போதாதென்று கணவன் தொல்லை.
இன்றைக்குக்கூட இவன் ‘பாரதி பூங்கா’ வர வேண்டும் என்கிற எண்ணத்தில் வரவில்லை. சுமதி தன்னிடம் சொன்னதிலிருந்து தன் அறை நண்பன் ஜெயபாலிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டாலும் இப்படி குமார் எவளுடனாவது ஏடாகூடமாக இருக்கமாட்டானா மாட்டார்களா என்கிற நப்பாசையில் நகரத்தைச் சுற்றினான். அப்படியே பாரதி பூங்கா வந்தான்.
இவன் கணித்ததுபோல் கண்ணுக்கெதிரே மாட்டிவிட்டார்கள். அது மட்டுமல்லாமல்…அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து, கையைப் பிடித்து கெஞ்சியது கொஞ்சியது எல்லாம் ஜெயபால் சொல்ல உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்..? குமார் எவ்வளவு யோக்கியன், நாகரீகமானவனென்று நினைத்தோம். எவ்வளவு கேவலம்! வீட்டில் மனைவி இருக்க வெளியில் வந்து இன்னொருத்தியிடம் கொஞ்ச இவர்களுக்கெல்லாம் எப்படி மனசு வருகிறது..? இரட்டை மனமா..? மனம் ஒன்றுதானே..! ஆனாலும் ஆயிரம் எண்ணங்கள். ச்சே!
திருமணத்திற்குப் பிறக்க மனைவியை நேசிப்பது, விரும்புவது, காதலிப்பதுதான் நேர்மையான மனித தர்மம். அது இல்லாமல் இப்படி இன்னொருத்தியிடம் பழகுவது என்பது…?
சுமதி பாவம். மகனுக்காக உருகுகிறாள். ஒன்று போதும் நினைக்கிறாள். இவன்தான் உலகமென்று அந்த நினைப்பிலேயே வாழ்க்கையை ஒட்டுகிறாள்.
ஆனால் குமார் எல்லாவறையும் மறந்து, புறம் தள்ளி உல்லாசமாக இருக்க நினைக்கிறான்..?! கணவன் மனைவிக்குள் எத்தகைய வேறுபாடு. அதோடு மட்டுமில்லாமல் அவளை உரிமை உள்ளவளாக்கி வீட்டிற்குள்ளும் கொண்டுவர திட்டம் போடுகின்றான்.
“என்ன குமார்! மனைவியை சமாதானம் செய்து திருமணம் முடிக்கிறேன்னு சொன்னே. இப்போ இழுத்தடிக்கிறே.. ஏமாத்திப்புடலாம்ன்னு எண்ணமா…? வயித்துல வளர்றதுக்குப் பதில் சொல்..?” – அவள் இவனை காட்டமாக வாரி இருப்பாளோ..?! அதனால்தான் கையைப் பிடித்துக் கெஞ்சி…
சுமதி சம்மதிக்கப் போவதில்லை. குமார் என்ன செய்வான்..? விவாகரத்து கேட்ப்பானோ..? கொடுக்க முடியாது என்றால் அடித்து உதைத்து சித்திரவதை செய்து…. இவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
இதிலிருந்து மீள வழி..?
தற்சமய பழக்க வழக்கத்தில்… நாம் தலையிட்டால்…
“இத்தோடு நிறுத்திக்கோ. என் குடும்பவிசயத்தில் தலையிடாதே. வாசல் படி ஏறாதே!” சொல்லி கண்டிப்பாக கண்டிப்பான்.
அதன் பிறகு அந்த வீட்டுப் பக்கம் தலை வைத்துப் படுக்க முடியாது. பள்ளிக்கும் வேறு வழியில் சென்று நுழைய வேண்டும்…!
அந்தப் பெண்ணை தனியே சந்த்தித்து…
“குமார் திருமணமானவன். குருட்டுப் புள்ளையைப் பெத்து வைச்சு கஷ்டப்படுறான். மனைவி அதே வேதனையில் துடிக்கிறாள்.தயவு செய்து அவனை விட்டுடு.” சொல்லலாம்…
அவள் கேட்டால்தானே…! கேட்காமல் அந்த ஆளு வந்து அப்படி சொல்றான்! என்று தன்னைக் கை காட்டி விட்டால் தொல்லை.
அது மட்டுமில்லாமல் அவள் வயிற்றைக் காட்டினால்…? – தூக்கம் வராமல் சேகர் சங்கடப் பட்டான். நெளிந்தான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
என் உயிரே… மயூரி..!
ஜூனியர் தேஜ்
April 21, 2026
ஸதாநந்த போதக சாமியார்
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
April 21, 2026
கண் சிமிட்டும் வானவில்
இரஜகை நிலவன்
April 18, 2026
