உந்தன் நிழலாய் நானடி தோழி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2026
வெளியான ஆண்டு: 2026
பார்வையிட்டோர்: 105 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் பாதைகள் எல்லாம் அந்த ஒறைச்சாலையில் வந்து சங்கமமாகும்.

அப்படியானசாலை நல்ல அகலமாய் இருந்ததே தவிர அம்சமாய் சீராய் இல்லை.

அதிக அளவு வாகனப் போக்குவரத்து இருக்கும் சாலையென்றாலும் சரியாக முறையாகப் பராமரிக்கப் படாமல் கிடந்தது.  

அப்படி சீர்படுத்தினாலும் விரைவில் சீர்கெட்டு சீர்கெட்டுப் போவதால்..இதே வேல.. இந்த ரோட்ட சரிபடுத்துவதற்கே அரசாங்க காசு மொத்தமும் செலவாகுது என அரசு நினைத்ததோ என்னவோ கேட்பாரற்றுக் கிடந்தது அந்த சாலை.

அப்படி கேட்பாரற்று சீர்கெட்டுக்கிடந்த அந்த சாலையில்.. முதல்நாள் இரவு குடிநீர்பைப்பை எந்த வாகனம் தட்டிவிட்டுச் சென்றதோ சாலைமுழுதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடி ஆங்காங்கே ஏற்பட்டிருந்த பள்ளங்களில்  பழுப்பு நிறத்தில் தேங்கிக் கிடந்தது.

காலையில் அடித்த வெய்யிலில் சாலை காய்ந்து விட்டாலும்  பள்ளங்களில் தேங்கியிருந்த தண்ணீர்  வற்றவில்லை.

குடிநீர் குழாய் குழாயில் தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டதேயன்றி.. உடைந்து பழுதான பைப் சரிபடுத்தப்படவில்லை.

கார்  லாரி போன்ற வாகனங்கள் தண்ணீர் தேங்கிக்கிடந்த பள்ளங்க ளில் இறங்கி ஏறி இறங்கி யேறி ஆடிஆடிச்சென்றனவே தவிற டூவீலரில் செல்வோ ரெல்லாம் பள்ளங்களில் இறக்கி ஏற்றாமல் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டிச் சென்றனர்.

அந்த சாலைக்குள் நுழையும் தருவாயில் இருந்தன சாருவின் வண்டியும்..முரளி கிருஷ்ணாவின் வண்டியும்.

கடும் வாகன நெரிசல்.

அந்த சாலைக்குள் நுழைந்த வாகனங்கள் விரைந்து செல்லாமல் ஊர்ந்து செல்வ தன் காரணம் புரியாமல் குழம்பிப் போனாள் சாரு.

அதே குழப்ப நிலையில்தான் இருந்தான் முரளிகிருஷ்ணா.

ட்ராஃபிக் போலீஸ்க்காரர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.

முதல் பத்து நிமிடங்கள் கார் பஸ் லாரி ஆட்டோ போன்ற வாகனங்களும் அடுத்த பத்து நிமிடங்கள் டூவீலர்களும் அனுமதிக்கப்பட்டன.

டூவீலர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கொசகொசவென அதிகஅளவு வண்டிகள் ஒன்றாய் அந்த சாலைக்குள் புகுந்தன.

அப்படிப்புகுந்த வண்டிகளில் சாருவுடைதும் முரளி கிருஷ்ணாவின் வண்டியும் அடங்கும்.

டுர் டுர் டு என சப்தமெழுப் பிக் கொண்டு ஒரே நேரத்தில் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்குமிங்குமாய் அநேக இடங்களில் காணப்பட்ட தண்ணீர்ப் பள்ளங்களைத் தாண்டிச் செல்ல வண்டிகளை வளைத்து வளைத்து ஓடிச்சென்றனர்.

பள்ளங்க ளில் வண்டி இறங்கியிறங்கி ஏறாமல் இருக்கப் பிரம்மப் பயத்தனம் செய்ய வேண்டி யிருந்தது வண்டி யோட்டிகளுக்கு.

அப்படித்தான் செய்தாள் சாரு.

அப்படித்தான் செய்தான் முரளி.

முன்னால் முரளி அவன் வண்டிக்குப் பின்னால் சாரு..

நிதானமாக.. வண்டியை இப்படியும் அப்படியும்  வளைத்து வளைத்து பள்ளங்களில் இறக்காமல் ஜாக்கிரதையாகத்தான் ஓட்டினான் முரளி கிருஷ்ணா.

அவனைப்போலவே சாருவும் அவனைப்பின் தொடர்ந்தாள்.

அவளின் பின்னால் வரும் டூவீலர்களும் அப்படியேதான் வந்தன.

முரளியின் போராத வேளையோ..நல்லவேளையோ..அதுவரை சமத்தாக சென்று கொண்டிருந்த அவனின் வண்டி வம்பு செய்ய ஆரம்பித்தது.

பயந்து போனான் முரளி..

மனதிற்குள் வண்டியைக் கெஞ்சினான்.. கொஞ்சினான்.

அவன் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் செவிசாய்க்காதவண்டி இரண்டடி.. தேவையேயில் லாமல் தன் உடலை இடப்பக்கமாய் நகர்த்திக் கொண்டது.

அப்படி முன்னால் செல்லும் வண்டி இடப்பக்கமாய் திரும்பும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சாரு.

படாரென்று முரளி கிருஷ்ணாவின் வண்டியின் பின்வீலில்  மோதி  ஒரு ஆட்டம் ஆடியது சாருவின் வண்டி.

அடுத்த நொடி முரளி கிருஷ்ணா பக்கத்திலிருந்த தண்ணீர் நிரம்பியிருந்த பள்ளத்தில் தொப்பென்று விழுந்து  அமர்ந்தான்.

வண்டி ரோட்டின்மீது பாதியளவும் முரளியின் மடியில் பாதியளவும் விழுந்து கிடந்தது.

பயந்துபோனாள் சாரு.

ஆனாலும் தப்பு தன்பேரில் இல்லை என்றே நம்பினாள்.

நிற்பதா தொடர்ந்து செல்வதா?புரியாமல் நின்றாள்.

ட்ராஃபிக் போலீஸ் ஒடிவந்தார்.வண்டியைத் தூக்கி நிறுத்தினார். முரளிக்குக்கைகொடுத்துத் தூக்கிவிட்டார்.

ட்ரெஸ்ல்லாம்.. சேற்றுத் தண்ணீர் பட்டு பழுப்புக் கலரில் மாறியிருந்தது.

எந்த டூவீலரும் நிற்க வில்லை.அவரவர்க்கு ஆயிரம் வேலை.

அடுத்த பத்துநிமிஷம் பஸ் லாரி கார்களுக்கான நேரமென்பதால் போலீஸ் முரளியையும் அவனது வண்டியையும் அப்புறப் படுத்த அவசரம் காட்டினார்.

ரோட்டோரம்.. தானே வண்டியைக் கொண்டுபோய் நிறுத்திவிட்டுச் சென்று விட்டார் போக்குவரத்தை சீர்படுத்த.

சாலையோரம் தன் ட்ரெஸ்ஸையும் வண்டி யையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றான் முரளி.

கடவுளே இன்னும் கொஞ்ச நேரத்துல காலேஜ்ல இருக்கணும்.நடக்கப்போற கல்ச்சுரல் ஈவன்ட்ல நாமதா மெயின் ஆளு..சேறும் சகதியுமா ட்ரெஸ்சும்.. நாமும்..அய்யோ தெய்வமே..

தவிப்போடு நின்றவனின் காதில்..

ஸாரி..என்ற தேன் குரல் காதுக்குள் நுழையவும் சேறாகிப்போனத் தனது பேன்ட்டைக் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து குரல்வந்த திசைபார்த்தான்.

அந்த ரணகளத்திலும் மனம் விசிலடித்தது.

ஸாரி..நா வேணும்னே      மோதல..ஒங்கவண்டி இடதுபக்கம் திரும்பும்னு நா எதிர்பாக்கல..

ரொம்ப கிட்டத்துல வண்டி இருந்ததால ப்ரேக் போட்ருந்தாலும் மோதிதா இருக்கும். ஸாரி.. மறுபடியும் ஸாரி சொன்னாள் சாரு.

சொன்னது அனைத்தையும்  ஹிந்தியில்தான் சொன்னாள்.

இவுங்க சொல்றது உண்மதா..எ வண்டிதா மக்கர் பண்ணிடுத்து..தேவையே இல்லாம எடது பக்கம் திரும்ப..இவங்க கண்டாங்களா எ வண்டி எடப்பக்கம் திரும்பும்னு..

ரொம்ப கிட்ட கிட்ட வண்டிங்க இருந்ததால சட்டுனு..பட்டுனு மோதிடுச்சு இவங்க வண்டி எ வண்டிய..

நொடிநேரம் அனைத்தையும் நினைத்து முடித்தவன்..

நினைத்ததை அப்படியே சாருவிடம் ஹிந்தியில் சொன்னான். ஸாரி கேட்கத் தேவையில்லை.. தப்பு என் பேரில்தான் என்றான்.

சாரு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

ஒங்கள மாரி அழகுப் பொண்ணு தள்ளிவிட்டா சேத்துத்தண்ணீல எத்தன மொற வேண்ணாலும் விழலாம்..எழலாம் என்று தமிழில் முணுமுணுத்தான் முரளி விளையாட்டாய்.

இந்தப்பொண்ணுக்கு எங்க தமிழ் தெரியப்போகிறது என்ற எண்ணத்தில்.

அக்ஷர சுத்தமாய் அவனின் முணுமுணுப்பு சாருவின் காதில் விழுந்தது.

விருக்கென திரும்பி அவனைப்பார்த்தாள்.ஓ..எனக்குத் தமிழ் எங்க தெரியப்போறது என்ற நினைப்புல இப்பிடி சொல்லியாறுதா..என்று நினைத்தவள்..

ஓ..அப்பிடியா?அப்ப அதோ தெரியுதே கொஞ்சம் பெரிய பள்ளமா..தண்ணியும் அதுல நெறையாதா தேங்கிருக்கு.. அதுலனா புடிச்சிதள்ளிட்டுப் போகவா?..பேச்சப்பாரு..

பொண்ணுங்களப் பாத்தா வழிய வேண்டியது.. மரியாதைக்கு ஸாரி சொல்லிட்டுப் போலாமேன்னு வந்து நின்னு ஸாரி சொன்னா..புத்திய காட்ட வேண்டிது..இவுங்குளுக் கெல்லாம் எங்க தமிழ் தெரியப்போகுதுங்குற எண்ணம்..தைரியம்.. படபடவென பொரிந்து தள்ளிவிட்டு..

வண்டியை நகர்த்திக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.

தலையில் இருகைகளையும் வைத்துக்கொண்டான் முரளிகிருஷ்ணா..

அம்மாடீ..தமிழா?தமிழச்சிக்கே உள்ள கோவம்..எப்பிடி பொரிஞ்சி தள்ளிட்டுப் போறாங்க?

எந்த ஊரா இருப்பாங்க இவங்க?..இந்த கிழி கிழிக்கிறாங்க?நினைத்தவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

நல்லா வேணும்டா ஒனக்கு..

அந்தப்பொண்ணுக்குத் தமிழ் தெரிஞ்சிருக்காதுன்னு நெனச்சு சொன்னியே முணு முணுன்னு.. 

அத மனசுக்குள்ள நெனைச் சிருந்தா இந்தப் பேச்சக் கேக்க வேண்டாம்ல?வாங்கிக் கட்டீண்டியா?

வெளையாட்டுப்பயடா நீ..

அவனின் நல்ல மனது நறுக்கென அவனின் தலையில் குட்டியது.

ஹிஹிஹி..மனதிடம் அசடு வழிந்தான்.

பொரிந்து தள்ளிவிட்டு வண்டியில் நிதானமாய்ச் செல்லும் சாருவையே பார்த்தபடி நின்றான்.

காலேஜ்..கல்ச்சுரல் ஈவன்ட்..

சேறும் சகதியுமாய் ஆகிப் போன ட்ரஸ் எல்லாம் ஒரு கணம் மறந்து போயிற்று. 

தமிழ் பேசுறாங்க?..அப்ப மெட்ராஸ்கார கேர்ளா இருப்பாங்களோ?

மனம் பரபரத்தது முரளி கிருஷ்ணாவுக்கு.

அந்நிய பாஷை பேசும் மாநிலங்களில் வாழும் யாருக்குமே அவரின் அருகே முன்பின் அறியாதவர்களாய் இருந்தாலும்..தன் தாய்மொழியில் அவர்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் சடாரெனத் திரும்பிப் பார்க்க வைக்கும்..

தானாகவே கால்கள் அவர்களை நோக்கி நடக்கும்.

தானாகவே அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளச் செய்யும்.பேசவைக்கும்.

நெஞ்சம் கிளர்ந்துபோகும் கண்களில் சந்தோஷக் கண்ணீர் அரும்பும்.

தாய்மொழிக்கே உள்ள சிறப்பு அது.

அப்படித்தான் ஆகிப் போனான் முரளிகிருஷ்ணா.

ஏனோ..அவுங்கள மறுபடி பாக்கமாட்டோமான்னு இருக்கு என்று நினைத்துக் கொண்டான்.

அவனுக்கெப்படித்தெரியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்கப்போகிறோமென்று?

அத்தியாயம் – 14

ஹாய்..குட்மார்னிங் சாரு..

கல்லூரி வாசலிலேயே சாருவைச்சூழ்ந்து கொண்டனர் தோழிகள்.

ஹாய்..வெரி குட் மார்னிங் எவ்வரிபடி..தோழிகளைப் பார்த்துப் புன்னகைத்தாள் சாரு.

அ..ப்..பா.. சாரு வந்தாதா காலேஜே களகட்டுது இல்லங்கடி..

ஏற்கனவே காலேஜ் கலகலன்னுதாங்கடி இருக்கு..என்றாள் சாரு.

இன்னிக்கு ஜாலி.. க்ளாஸ்லாம் கெடையாது..என்றாள் ஜான்ஸி.

ஏய் ஜான்ஸி..நீ பேச்சுப் போட்டிக்கு ரெடியாகி வந்துட்டியா?

கிழிச்சா..போனவருஷம் மாரிதா பேச்சு ஊத்திக்கப் போவுது.கிண்டலடித்தாள் லலிதாபாய்.

நாத்தவாய வெச்சுக்கிட்டு சும்மா இருடி.. மவளே பேசின மயக்க ஊசி போட்ருவே.. ஜாக்கிரத..

நீ டாக்டரா ஆகி பேஷண்டுக் குலாம் மாத்ர மருந்து எழுதித் தருவியோ இல்லையோ 

நிச்சயமா ஊசிபோட்டு மேல அனுப்புவ..இது ஸ்வப்னா.

ஹோவெனச் சிரித்தார்கள் தோழிகள்.

சாரு என்ன தலைப்புல நீ கவித சொல்லப்போற?..

போட்டிம்போது சொல்வேன்ல அப்ப கெளுங்கடி..சொல்லிவிட்டுச் சட்டென அமைதியானாள் சாரு.

சாரு..கேக்கறேன்னு தப்பா நெனைக்காத..என்றாள் கரீனா ..

தப்பா நெனைக்கிறாமாரி கேக்கமாட்டீல்ல? என்றாள் சாரு .

கரீனா.. சாருவிடம் என்ன கேட்கப்போகிறாள் என்று அறிய தோழியர்கூட்டம் காத்திருந்தது ஆவலுடன்.

அடிபோடி இவளே.. அப்டீல்லாம் கேக்க என்ன இருக்கு?

அதென்ன அப்பிடி சொல்ற?

சாருமாரி அழகான அறிவான வயசுப் பொண்ணுகிட்ட கேக்கக் கேள்வியா இல்ல? சொல்லிச் சிரித்தாள் ஜான்ஸி.

ஆமா நீ சாருகிட்ட இருக்குறதா சொன்ன அழகும் அறிவும் ஒங்கிட்ட இல்லீல்ல அதா சாருகிட்டக் கேக்குறேன்.

ஜான்ஸி.. நீ எல்லாத்துலயும் கம்மிங்கிறா கரீ..புரியல?..

ஃபரீடா கிளப்பிவிட்டாள்.

சரிசரி கரீ .. நீ என்ன சாருகிட்டக்கேக்கப்போற?ரொம்ப சஸ்பென்ஸ் வெக்காத..சீக்கிரம் கேட்டுத்தொல..

அது ஒன்னும் பெரிசா இல்லடி..நாமெல்லாம் இன்ட்ரஸ்ட்டா பேசிட்ருக்கும் போதே சாரு திடீர்திடீர்னு மூடவுட் ஆகிடுறா..ரெண்டு நிமிஷம் மௌனமாகி.. மறுபடியும் நார்மலாகி பேச்சுல கலந்துக்குறா அதா ஏ அப்பிடி ஆகுறான்னு கேக்க நெனச்சே.. 

அடிபோடி சாருவோட சில நடவடிக்க புரியதாண்டி மாட்டேங்குது..க்ளாஸ்குள்ள நொழஞ்சு தன்னோட எடத்துல ஒக்காரும்போது கர்சீப்ப எடுத்து பக்கத்துல போடுறா..ஏன்னு கேட்டா.. ம்.. அது அப்டிதான்னு சிரிச்சுட்டு பதில் சொல்லாம இருந்துடறா..

இப்போதும் தோழிகளின் பேச்சுக்குப் பதில் சொல்லவில்லை சாரு.

அவர்களுக்குத்தெரியுமா?சாரு அப்பப்ப ரெண்டு நிமிடம்  மூடவுட் ஆகிவிடுவதாயும் மௌனமாகிவிடுவதாயும் சொல்லும் அந்த ரெண்டு நிமிடம் மனதுக்குள் ரேவியோடு பேசுகிறாள் என்று.

க்ளாஸில் தன் இருக்கைக்கு அருகே கர்சீப்பைப் போடுவது தோழி ரேவி பக்கத்தில் அமர்ந்திருப் பதாய் நினைத்து என்று.

சரிசரி வாங்கடி போகலாம்..இவகிட்டேந்து பதில எதிர்பாக்குறது பைத்தியக்காரத்தனம்.

நிரம்பிவழிந்தது கல்ச்சுரல் ஈவன்ட் நடக்கவிருந்த அந்த பிரம்மாண்ட ஹால்.

எங்கு திரும்பினாலும் ஹிந்தி பேச்சே எதிரொலித்தது.

தோழிகளோடு ஹிந்தியில் பிளந்துகட்டிக்கொண்டிருந்தாள் சாரு.

பத்மாவதி என்ற. ஒரே ஒரு தமிழ்ப்பெண்தான் அவள் வகுப்பிலிருந்தாள்.

படிப்பில் சாரு முதன்மையா யிருந்தது பத்மாவதிக்குப் பொறாமையை ஏற்படுத்தி யிருந்ததால் சாருவிடம் பேசுவதில்லை பத்மாவதி.

சாருவின் தோழியர் அனைவருமே மகாராஷ்ட்ரா.. குஜராத் போன்ற மாநிலங் களைப் பிறப்பிடமாய்க் கொண்டவர்கள் என்பதால்  அவர்களுக்குத் தமிழ் தெரியாது.

அனைவரோடும் ஹிந்தி மராட்டி குஜராத்தி என எல்லா மொழிகளிலும் சாரு பேசும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந் தாள்.எனவே அவளுக்கு மொழி எவ்விதத்திலும் பிரர்ச்சனையாக இல்லை.

சாரு அனைவருடனும் நட்பு பாராட்டினாள்.ஆனால் ரேவியைத்தவிற அவள் மனதில் நெருங்கிய தோழியெனயாரும் இடம் பிடிக்கவில்லை.பிடிக்கவும் முடியாது.

நிரம்பி வழிந்த அரங்கம் (ஹால்)வெகு நேர்த்தியாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேடையில் போடப்பட்டிருந்த சேர்களில் விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.

கீழே நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக நிறைய சேர்கள் போடப்பட்டிருந்தன.

மாணவ மாணவிகளிடையே அவர்கள் எத்தனாம் ஆண்டு படிக்கிறார்கள் என்ற பேதமெல்லாம் இல்லை.

பிடித்தவர்கள் நிகழ்ச்சிக ளைப் பார்த்து மகிழலாம்.

பெரும்பாலும் மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பேச்சுப்போட்டி..பாட்டுப் போட்டி..கவிதைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர் மேடைக்கு அருகிலேயே அமரவைக்கப் பட்டிருந்தனர்.

நாடகம் டான்ஸ் என்ற நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் திடீர் மேக்கப் ரூமில் காத்திருந்தனர்.

கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளவிருந்த சாரு மேடைக்கு எதிரில் முதல் வரிசை நாற்காலி யொன்றில் அமர்ந்திருந்தாள்.

விசேஷ விருந்தினருக்காகக் காத்திருந்தது மேடை.

ஆண்களுக்கான மேக்கப் ரூம்.

பரக் பரக்கென்று பேன்ட்டோடு சேர்த்துப் பிடித்து தொடையைச் சொரிந்து கொண்டான் முரளி கிருஷ்ணா.

காலையில்.. தண்ணீர்ப் பள்ளத்தில் விழுந்தபோது அணிந்திருந்த அதே பேன்ட் அதே ஷர்ட்.

இப்போது பேன்ட்டும் ஷர்ட்டும் உள்ளாடையும் காய்ந்து வரவரத்துப் போயிருந்தது. தண்ணி யோடு சேர்ந்து மணலும் பேன்ட்டுக்குள்ளிருக்க.. பேன்ட் காய்ந்ததும் மணல் உறுத்த ஆரம்பித்து அரிப்பெடுத்தது.

அங்கிங்கென்றில்லாமல் இடுப்பு தொடை உட்காருமிட மென்று ஆங்காங்கே அரிக்க.. சொரிந்து சொரிந்து சாத்தியப்படவில்லை.

எல்லாம் தோழர்களின் யோசனையால் வந்த அவதி.

டேய் கிருஷ்ணா..இன்னிக்கு ஒனக்குப் பிச்சக்காரன் வேஷம்.அதுவும் ஒன் மேன் ஷோ..தனிநபர் நடிப்பு நாடகம்

நாடகப்படி நீ சாக்கடையில விழுந்து எழுந்து.. வாழ்க்கைத் தத்துவங்கள உணர்ச்சியோடு பேசி நடிக்கணும்.இப்ப ஒன்னப்பாத்தா சேறும் சகதியுமான ட்ரெஸ்ஸோட..

சாக்கடைல விழுந்து எழுத்தாப்லயே இருக்கு..

நெஜப்பிச்சக்காரன் மாதிரிதா இருக்கு ஒன்னப் பாத்தா..

மேக்கப் போட்டாக்கூட இவ் வளவு தத்ரூபமா இருக்கா துடா என்று ஏற்றிவிட.. அப்படியே இருந்ததன்  விளைவு.. அரிப்பு.

சீஃப் கெஸ்ட் வந்தாயிற்று.

நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிக் களைகட்டின.பாட்டு.. பேச்சுப் போட்டிகள் முடிந்தன.

சாரு கலந்துகொள்ள வேண்டிய கவிதைப்போட்டி..

மைக்கில்..மிஸ்.எஸ். சாருலதா..இரண்டாம் ஆண்டு மாணவி..மேடைக்கு வரவும்.

கரகோஷம் ஹாலைப் பிளந்தது.

மெல்ல மேடை ஏறினாள் சாரு.அழகுப்பெட்டகமாய் சாரு மேடையில் வந்து நின்றதும்..மீண்டும் மாணவர்கள் ஒரு ரிதத்தோடு ஒன்றாய்ச்சேர்ந்து ஒரேமாதிரி கரங்களைத் தட்டினார்கள்.

அது அழகான மாணவி என்று மாணவர்கள் அங்கீகரித்து எழுப்பும் ஒலி.

அதைத்தவறென்று யாரும் நினைப்பதில்லை.தவறும் இல்லை.

பொறாமையில்லா மாணவிகளும் மாணவர்களோடு சேர்ந்து கைதட்டுவதுண்டு. 

மேக்கப் ரூமில் இருப்புக் கொள்ளவில்லை முரளி கிருஷ்ணாவுக்கு.

மிஸ்.எஸ்.சாருலதா..இரண்டாமாண்டு மாணவி என்பது ஸ்பஷ்டமாக காதில் விழுந்தது.

எந்த மாணவிக்கு இத்தன கைதட்டல் கரகோஷம்?இது அழகான மாணவிக்குக் குடுக்குற அங்கீகாரமாச்சே..

சாருலதாவாமே பேரு..பேரேல்ல மனச மயக்குது..

யாரந்த அழகுதேவதன்னு பாத்தே ஆகணும்.. நினைத்தவன்..மேக்கப் ரூமில் கொடியில் கிடந்த  போர்வையொன்றை எடுத்து போட்டிருந்த ட்ரெஸ்மேல் போர்த்திக் கொண்டு மேக்கப் ரூமை விட்டு வெளியே வந்து மேடையைப் பார்த்தான்.

பார்த்தவனின் கண்கள் பச்சென்று அப்பெண்ணின் மேல் ஒட்டிக்கொண்டு நிலைத்து நின்று நகர மறுத்தது.

ஆ..இது அந்தப் பொண்ணு ல்ல? அப்ப இவுங்க மெடிகல் ஸ்டூடென்ட்டா? ரெண்டாவது வருஷ மாணவின்றாங்க.. இதுவர காலேஜ்ல பாத்ததே இல்ல?

அதெப்பிடி பாப்ப?நீ நால்ரையாவது வருஷம்.

ஓ..பில்டிங் வேற..ரெண்டாம் வருஷம் படிக்கிற இவுங்க பில்டிங் வேற..சம்மந்தமே இல்ல.. அப்பறம் எப்பிடி பாத்ருக்க முடிடியும்?மனம் குட்டியது.

அதானே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு போட்டிக்கான தலைப்பில் கவிதை சொன்னாள் சாரு.

கையில் கவிதை எழுதப் பட்டிருந்த பேப்பர் இருந்ததே தவிர.. அவள் அதைப் பார்த்தே படிக்கவில்லை.

சின்னச்சின்ன முக அசைவு களோடும்..வார்த்தைகளை ஏற்ற இறக்கத்தோடும் சாரு கவிதை பாடப்பாட..அவள் கவிதைபாடும்விதமே ஓர் கவிதைபோல் இருக்க..

ஆவென்று பார்த்தபடி மெய்மறந்து அசைவற்று அமர்ந்திருந்தது மாணவ கூட்டம்.

அவள்முடித்து கைகூப்பி வணங்கி போட்டியிட வாய்ப்புக் குடுத்தமைக்கு நன்றி என்று சிரம் தாழ்த்திய போது கரவொலி அரங்கை அதிரவைத்தது.

மேடையைவிட்டுக் கீழே யிறங்க படியைநோக்கி நடந்தாள் சாரு.

யம்மாடி..பார்ரா..பாக்கதா ஆள அசத்துறாங்கனா.. பாடின கவிதையும்..அத அவுங்க பாடின பாங்கும்?..

காலேல தமிழ்ல நம்மள போட்டுத்தாக்கி விளாசின வங்க..இப்ப ஹிந்தீல என்னமா கவித பாடுறாங்க..

என்று நினைத்தவன்..

சாரு மேடையைவிட்டு இறங்கி எந்த சேரில்போய் அமர்கிறாள் என்று அறிந்து கொள்ள பார்வையை சாருவின் பின்னாலேயே அலைய விட்டான்.

தோழிகளும் வேறு சிலரும்  சாருவை சிறப்பாய்க் கவிதையை ப்ரசன்ட் செய்ததற்கு கைகொடுத்துப் பாராட்டினார்கள்.

அடுத்து மிமிக்ரி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

சாரு மிமிக்கிரி நிகழ்ச்சி யைக் கைதட்டி ரசித்தாள்.

அடுத்து..நான்காமாண்டு மாணவர்..ஆர். முரளி கிருஷ்ணாவின் ஒன்மேன் ஷோ..ஒருநபர் நடிப்பு நாடகம்..என்று அறிவிக்கப் பட்டது.

மாணவர்கள் கிருஷ்ணா கிருஷ்ணாவென்று  உத்சாக மிகுதியில் கத்தினார்கள்.

முரளி முரளி என்றும் சப்தமிட்டார்கள்.

நாடகம் ஆரம்பமானது.

மேடையில் திரை இழுத்து மூடப்பட்டிருந்தது.

சட்டெனத் திரை விலகியது.

தொப்பென ஓப்பன் செய்யப்பட்டிருந்த பிஸ்கெட் பாக்கெட்டொன்று நாடகம் நடக்கும் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. 

ஏற்கனவே பிரிக்கப் பட்டிருந்த அந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து.. அது வந்து விழுந்த வேகத்தில்  பிஸ்கெட்டுக்கள் இரண்டு மூன்று  பாக்கெட்டின் வாயிலிருந்து வெளியே வந்து சரிந்து நின்றன.

நொடி நேரத்தில் திரைச் சீலையின் இரு ஓரங்களும் கொஞ்சமாய் நகர..

ஒருபக்கத்திலிருந்து  விலா எலும்புகள் தெரியுமளவுக்கு மெலிந்திருந்த.. கருப்பு நிறத்தில் உடலும்.. ஆங்காங்கே வெண்மைநிற திட்டுக்களோடும் கூடிய.. பேட்டரியால் இயங்கும் நாயொன்றும்..

இன்னொரு பக்கத்திலிருந்து அழுக்கான ஆடையும்..முகத்திலும்..கைகளிலும் அப்பிக்கிடந்த அழுக்குமாய் தலைமுடி கலைந்துபோய்  சாக்கடையில் வீழ்ந்து எழுந்தவன் போல்.. பிச்சைக் காரன் தோற்றத்தில் வந்து நின்றான் முரளிகிருஷ்ணா .

வந்து நின்றவனைப்பார்த்து அதிர்ந்துபோனாள் சாரு.

முகத்திலும் கைகளிலிலும் கருப்பாய் அழுக்காய் திட்டுத்திட்டாய் மேக்கப் போட்டிருந்தாலும் காலையில் கிட்டத்தில் பார்த்த அவனை அடையாளாம் தெரியாமல் போய்விடவில்லை சாருவுக்கு.

காலையில் தன் வண்டி இடித்ததால் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து எழுந்தவனின் பேன்ட்டும் ஷர்ட்டும் பழுப்புக்கலரில் மாறியிருந் ததைப்பார்த்தவள் என்பதால்..இப்போதும் அதே பேன்ட் ஷர்ட்டோடு அவன் நடிக்க வந்திருப்பது அவனைக் காட்டிக் கொடுத்தது.

கடவுளே..அப்ப..காலேல எவண்டியிடிச்சி தண்ணிப் பள்ளத்துல விழுந்தவர் இந்த காலேஜ்.. மெடிகல் ஸ்டூடென்ட்டா?

நாலாம் வருஷ ஸ்டூடென்ட் டா?பேரு ..பேரு..என்னனு அறிவிச்சாங்க..ஆர்.முரளி கிருஷ்ணா..

ஹிக்..என்னவொரு இது?

போனாப்போறுதுன்னு ஒரு கர்ட்டிஸிக்கு ஸாரிகேட்டா..

எனக்குத்தமிழ் தெரியாதுனு நெனச்சு..என்ன முணு முணுத்தாரு?..

இவுங்கமாரி அழகான பொண்ணுங்க தள்ளிவிட்டா எத்தன மொற வேண்ணா லும்..தண்ணி பள்ளத்துல விழுந்து விழுந்து எழுந்திருக்கலாம்..

அப்டீங்கல?

குடுத்துகட்டிட்டேன்ல தமிழ்ல..

ஙேன்னு அசடு வழிஞ்சிட் டாரில்ல?எனக்கு தமிழ் தெரிஞ்சிருக்காதுங்கிற தைரியம்.

மனதுக்குள் காலை நடந்ததை நினைத்துச் சிரித்தவள்..அந்நினைப்பி லிருந்து மீண்டு மேடையைப் பார்த்தாள்.

அதற்குள் பாதிவசனத்திற்கு மேல் பேசிநடித்து முடித்திருந் தான் முரளிகிருஷ்ணா.

அவள் மேடையைப் பார்த்தபோது பேட்டரி நாயும்  அவனுமாய் பிஸ்கெட் தின்பதுபோல் காட்சி நடந்து கொண்டிருந்தது.

நாய் அவனருகே வந்து காலை நக்கியது.காலடியில் படுத்தது.அவன் நாயருகே அமர்ந்து அதன் முதுகைத் தடவிக்கொடுத்தான்.

ஒருவர்மட்டுமே நடிக்கும் நாடகத்திற்கான நேர அனுமதி மிகக் குறைவே என்பதால் வெறும் இருபது நிமிடத்திலேயே  முரளிகிருஷ்ணாவின் ஒன்மேன் ஷோ முடிந்தது.

நாடக் கருத்தும் அவன் நடிப்பும் வசனமும் நன்றாய்இருந்திருக்கவேண்டும் என்பதை கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ததி லிருந்து சாருவுக்குப் புரிந்தது.

காலேல நடந்தத நெனச் சிண்டு நாடகத்த பாக்காம விட்டுட்டமே..ச்சீ..நா ஒரு லூசு என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

கூடியிருந்த அனைவரையும் பார்த்து நன்றி நன்றி என்று கைகூப்பி வணங்கிய முரளிகிருஷ்ணாவின்  பார்வை.. சாருவின் சேரைத் தேடிவந்து அவள் பார்வை தன்மீது விழாதா என அவளின் பார்வைக்காக அவள் முகம் பார்த்துக் காத்து நின்றது.

அத்தியாயம் – 15

முரளிகிருஷ்ணா மேடையி லிருந்து.. தனது நாடகத்தை ரசித்துப்பார்த்த அனைவ ருக்கும் கைகூப்பி நன்றி நன்றி என்று சொல்லியபடி பார்வையை நகர்த்திக் கொண்டே வந்ததைப்பார்த்த படியேயிருந்தாள் சாரு.

அப்படி நன்றிசொல்லியபடி பார்வையை நகர்த்திக் கொண்டேவந்தவனின் பார்வை தன்முகத்தின் மீது நிலைத்து நகராமல்  நிற்பதை அவளால் உணர முடிந்தது.

பாக்கரதப்பாரு..நம்மள அடையாளம் தெரிஞ்சிடுத் துப் போலருக்கு.அதா இந்த பார்வ..

அடையாளம் மட்டுமென்ன?

ஒம் பேரு என்ன?..நீ எத்த னாம் வருஷம் படிக்கிற? 

எல்லாந்தெரிஞ்சி போயிருக்கும்.

அதா மேடபோட்டு மைக்வெச்சு அறிவிச் சாச்சே..பேரு..எத்தனாம் வருஷம் எல்லாத்தியும்.

அப்பறமென்ன..எல்லாந் தெரிஞ்சிருக்கும்.

தெரிஞ்சான்ன?தெரிஞ்சிட் டுப் போட்டம்..அந்தாளு பேரு..எத்தனாவது வருஷம்னு இப்ப நேக்குந் தானே தெரியும்? எம்பேரும்..

நா எத்தானாவது வருஷம் படிக்கிறேன்னும் தெரிஞ்சா.. பெரிய இதா?..

விலுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள் சாரு.

க்கு..க்கு..சிரித்துக்கொண் டான் கிருஷ்ணா.

மூஞ்சிய இப்பிடியா திருப்பிக்கணும்.கழுத்து சுளுக்கிடாது?

நிச்சயமா..சந்தேகமே இல்ல..தமிழ்தா..அதுவும் தஞ்சாவூரச்சேந்த கும்மோணமாதா இருக்கும்.

கும்மோணத்துக்காராளுக்குதா இப்பிடியொரு நொர்நாட்டியம்  வரும்.

காவேரிதண்ணி..அதா இந்த சுர் கோவம்..

ஏனோ.. இனம் தெரியாத ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.

அவ்வுணர்வு வேற்று மொழி பேசும் மாநிலத்தில் சந்தித்துக் கொண்ட ஒரே மாநிலம்..ஒரே மொழிக்காரர்கள் என்ற பாச உணர்வா?

வேறு ஏதாவதா? புரிய வில்லை அவனுக்கு.

வாட்சில் மணிபார்த்தாள் சாரு.

மணி மதியம் மூன்று இருபது.பசிக்குது.கேண்டீன்ல எதுவுமிருக்காது. வீட்டுக்குன்னா போய்டலாமா?

ஆமா அதா சரி.. தோழிகளிடம் சொல்லிக் கொண்டபோது அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.

கல்லூரி வாசலில் வண்டிகள் வைக்குமிடம் வந்து வண்டியை எடுத்தபோது கவலையாய் இருந்தது. தண்ணீர்பள்ளங்களைச் சுற்றிச்சுற்றிப் போக வேண்டுமோ என்று.

நல்லவேளை பள்ளங்கள் ஜல்லியும் மணலும் கொட்டி நிரவி மூடப்பட்டிருந்தது.

வீட்டுக்கு வந்தபோது மணி நாலே முக்காலாகியிருந்தது.

ஷூக்களைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தாள்.

கால்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன.

ட்ரெஸ் சேஞ்ச் செய்து முகம் கைகால் கழுவி கிச்சனுக்குள் நுழைந்து காஸ் அடுப்பின் அருகே மூடிவைக்கப்பட்டிருந்த பாத்திரங்களிளைத் திறந்து பார்த்தபோது காவையில் செய்த தக்காளி சாதமும் சௌசௌவும் கேரட்டும் சேர்த்து செய்திருந்த மோர்க்கூட்டும் இருந்தன.

மணி அஞ்சாருது.. அஞ்சுமணிக்கு சாதத்த வெச்சிண்டா சாப்புடுவா?

பிஸ்கட் தின்னு  டீன்னா குடிக்கிலாமா?

அய்யோ..எமப்பசி பசிக்கிது..

யானப்பசிக்கு சோளப் பொரிமாரி பிஸ்கெட்.. டீலாம் போதாது.

டிஃபன் தட்டில் ரெண்டு கரண்டி தக்காளிசாதத்தை வைத்து தட்டின் ஓரமாய் மோர்கூட்டை வைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

கொஞ்சமாய்க்கூட்டை எடுத்து சாதத்தின் மீது வைத்து ஐந்து விரல் களையும்.. கூட்டை வைத்த பகுதியில் வைத்து சாதத்தை எடுத்து வாயில் வைத்து விழுங்கிய பிறகு அடுத்த கவளம் எடுத்தபோது விரல்கள் சாதத்தின் மேல் அப்படியே நின்றன.

சாதத்திலிருந்து கையை எடுத்து உள்ளங்கையையும் புறங்கையையும் விரல்களை யும் மாறிமாறிப் பார்த்தாள்.

கண்களில் கண்ணீர் வந்து முட்டிநின்றது.

ஊரும்..சித்தியும்..கரண்டி அடியும் ஞாபகம் வந்தது.

ரொம்பப்பசியாலும்..பள்ளிக்கு நேரமான அவசரத்தாலும் சித்தியைக் கேட்காமல்.. மோர்கூட ஊற்றிக் கொள்ளாமல் வெறும் உப்பை மட்டும் போட்டுக் கொண்டு பழைய சாதத்தைப் பிழிந்து தட்டில் போட்டுக் கொண்டு வழக்கமாய் உட்காரும் இடத்தில் அமர்ந்து சாதத்தில் கைவைத்தபோது பழேது கொசகொசத்துப் போய் புளித்தவாடை வீசியது.

பச்சமிளகாயோ..வெங்காயமோ இருந்தாலாவது தொட்டுண்டு புளிச்ச பழேத முழுங்கி வெக்கலாம்.

மொளகாயக்கூட சித்தி எண்ணிவெச்சுருப்பா.. ஒன்னு எடுத்தாகூட..என்ன ஒரு பச்சமொளகாயக் காணும்பா..

வெங்காயம்லா வாங்க மாட்டா..அமாவாச, கிருத்திக, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, சஷ்ட்டினு சொல்லிண்டு வெங்காயமே வாங்கறதில்ல..

ப்ச்..என்றபடி ஒரு கவளம் சாதத்தை எடுத்து வாயருகே கொண்டு சென்றபோது

அதீத புளிச்சவாடை வயிற்றைப்புரட்டி வாந்தி வரும்போன்ற உணர்வை உண்டாக்க..மீண்டும் சாதத்தைத் தட்டிலேயே வைத்தாள்.

புயலென சமயலறைக்குள் நுழைந்தாள் நாகு.

அய்யோ..அய்யோ..அய்யோ.. என்று காத்திக்கொண்டே படீர் படீரென வயிற்றி லடித்துக்கொண்டாள்.

என்ன அநியாயம்? என்ன அநியாயம்?..அதது தலகொழுத்துன்னா அலையருது?

நாவொத்தி குத்துக்கல் லாட்டம் ஆத்துல இல்ல?

சாப்பட்டமா சித்தீனு ஒருவார்த்த கேக்கமாட்டா?

தானா எடுத்து வெச்சுண்டு சாப்டறதப் பாரேன்.வயறு எரியறது.

பயந்து நடுங்கிப் போனாள் சாரு.

இல்ல சித்தி ஸ்கூலுக்கு நேரமாயிடுத்துன்னு..தெரியாம செஞ்சிட்டே சித்தி.. இனிமே செய்யமாட்டேஞ் சித்தி.. தீனமாய்ச்சொல்லிக் கெஞ்சினாள் சாரு.

சட்டென அகப்பைக் கூட்டிலிருந்து நீண்ட பிடியோடு கூடிய கடுகு தாளிக்கும் இரும்புக் கரண்டியை எடுத்து அதன் காம்புப் பகுதியால்..

இந்தக்கைதானே எங்கிட்டக் கேக்காம சாத்த எடுத்து சாப்ட்டுது? இனிமே கேக்காம எடுத்து சாப்டுமா? சாப்டுமா?

வலது கைவிரல்களிலேயே பட் பட்டென்று அடித்து விளாசினாள் நாகு.

வலிதாங்காமல் கதறினாள் சாரு.ஒரு வாய்சாதம் கூட சாப்பிடாத அந்த சின்னஞ் சிறு பெண் சாருவுக்கு தண்டனை நாகுமூலம் ஏன் கொடுத்தானோ ஆண்டவன்.

சமயலறையின் வாசல் படியருகே நின்றபடி..

நடக்கும் இக்கொடுமையைப் பார்த்தபடி நின்ற சாம்பு மகளை இரும்புக்  கரண்டி யால் அடிக்கும் நாகுவைக் கண்டிக்க வில்லை.மாறாய் சாருவிடம்..

சாரு..சித்தீண்ட சொல்லிட்டு சாப்டமாட்ட?அப்பிடியென்ன அவசரம் சாப்ட?என்று கேட்டு விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

பாசமற்ற அப்பாவின் பேச்சையும்..வலியால் அழும் தன்னை சமாதானம் கூட செய்யாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து செல்வதையும்  கண்டு விக்கித்துப்போய்

பெற்றவனையே வெறிக்கப் பார்த்தபடி நின்றாள் சாரு.

வலதுகை விரல்களும் உள்ளங்கையும் புறங்கையும் புசு புசுவென வீங்கிப் போனது.

வலியில் அழுததால் முகம் உப்பிப் போயிருந்தது.பசி மரத்துப்போய்விட்டது.

அம்மா..ஏம்மா என்ன விட்டுட்டு செத்துப்போன?

தொண்டை அடைக்கக் கேட்கும் சாருக்குட்டிக்கு பதில்சொல்ல முடியாமல்  கடவுளுக்கே வாயடைத்துப் போய்விடதோ?

இடது கையில் புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு வலதுகையை அசைக்காமல் தொங்க விட்டுக்கொண்டு வரும் சாருவை.. தன்னாத்து வாசலில்  புத்தக மூட்டை யோடு சாருவுக்காகக் காத்துக்கொண்டு நின்ற ரேவதி பார்த்தபோது..

என்ன சாருவப்பாத்தா அழுதாப்ல இருக்கு? வலது கையவேற வெரச்சாப்ல வெச்சிண்டு வரா..என்று தோன்றியது.

சாரு அழுதையான்ன?மூஞ்சி அழுதாப்ல ஒப்பிருக்கு..

கைல என்ன? சொல்லியபடி சாருவின் வலதுகையைப் பிடித்து பார்த்தவள்.. அய்யோ என்னடியாச்சு கைக்கு?இப்பிடி கையும் வெரலுங்க ளும் வீங்கிப்போய்க் கெடக்கு? சப்தமாய்க் கத்தினாள்.

உஸ்..கத்தாதடி ரேவி..

புரிந்துபோனது ரேவதிக்கு..

வாடி..சாருவின் தோளைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன்னாத்துக்குள் போனாள் ரேவதி.

அம்மா..கத்தினாள் சமயலறையைப்பார்த்து.

ஏண்டி ரேவதி இன்னுமா பள்ளிக்கூடம் போல..சாரு வந்துட்டாளா இல்லையா?.

பிடிதுணியில் கையைத் துடைத்தபடியே கூடத்துக்கு வந்த ரேவதியின் தாய் மங்களம்..ஏண்டி பொண்களா ஸ்கூலுக்கு லேட்டால..என்னபண்றேள்?

திரும்ப உள்ள வந்துட்டேள்? என்றாள்.

அம்மா சாரு மூஞ்சியப் பாத்தியா?அவ கையாப்பாரு..சாருவின் கையை மெல்லப் பிடித்துத் தூக்கி தாயிடம் காட்டினாள் ரேவதி…

அய்யோ கொடூரமே..சாரு..

சித்தி தடியாராதன செஞ்சாளா? எதுக்குடி அடிச்சா?

கொழந்தய இப்பிடிப் போட்டு அடிச்சிருக்காளே பாவி.

தாயில்லாப்பொண்ண அடிக்க மனசு எப்பிடி வந்துது? நரகத்துக்குதா போவா பாவி.

சாரு மௌனமாக இருந்தாள்.

அம்மா  வெதவெதன்னு வென்னீர் இருக்கா?

கொண்டுவரே..டிகாஷனுக்கு ஃபில்டர்ல ரெண்டாம்  வென்னீர் விட அடுப்புல வெந்நீர் போட்ருக்கே.. கொண்டுவரே..உள்ளே போனாள் மங்களம்.

கைகாமி..ஆர்.எஸ்.பதி. என்ற

பெயரோடு லேபில் ஒட்டப் பட்டிருந்த பாட்டிலிலிருந்த நீலகிரித் தைலத்தை ..பாட்டிலை சாய்த்துச்சாய்த்து ஆட்காட்டிவிரலால் தொட்டுத்தொட்டு சாருவின் கையில் வீங்கியிருந்த பகுதிகளில் பரபரவென்று இதமாய்த் தேய்த்துவிட்டாள்  ரேவதி.கண்களில் கண்ணீர் கசிந்தது.

ரேவி அழறியா?

சாரூ..ஒனக்கு எவ்ளவு வலிக்கும்டி..எப்பிடி வீங்கிருக்கு..எப்பிடி வலியால அழுதிருப்ப..

நீதாண்டி நா..நாதாண்டி நீ..

ஒனக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும்டி என்றாள் ரேவதி.

நடந்தவை நினைவைக்கிளற ரேவீ..மெல்லக்கேவினாள் சாரு.

ஒன்னப்பாத்து முழுசா பத்து வருஷம் ஆயிடுச்சுடி..நீயும் இருபது வயசுலதா இருப்ப..

காலேஜ்ல படிப்ப..நீ என்ன படிக்கிற ரேவி?

இப்பிடி நெறையா தடவ கேட்டுட்டேன்ல..

நா ஒன்ன நெனைக்காத நாளே கெடையாதுடி..நீயும் என்ன தெனமு நெனச் சுப்பீல்ல?நெனச்சுக்காம?

நீ குடுத்த மஞ்ச கலர் தகர டாப்பாவ..வாரம் ரெண்டு நாளாவது தொறந்து பாத்துடு வேண்டி ரேவி.. நிச்சயமா கடவுள் நம்ம ரெண்டு பேரையும் பாத்துக்க வெக்கிம் பாரேன்.

நீதாண்டி நா ரேவி..இந்தச் சாருதாண்டி நீ..கண்களிலி ருந்து கண்ணீர் இறங்கி கன்னம் தொட்டு வழிந்து கையிலிருந்த தட்டில் தக்காளி சாதத்தின்மேல் பட்டுத் தெறித்தது.

பாவம் சாரு..அருமைத்தோழி  ரேவி..ஊரைவிட்டுப்போய் நாலுவருடம் ஆகிவிட்ட தென்றோ..அவள் தந்தை வேலை பார்த்த கெமிக்கல் கம்பெனி மாயவரத்தில் புதிதாய்த்திறந்த கிளைக்கு அவரை மாற்றிவிட்டதால் அவர்கள் மாயவரத்தோடு போய்விட்டதோ..ரேவி ப்ளஸ் டூவுக்கு மேல் படிக்க காலேஜ்ஜெல்லாம் போக வில்லை என்பதோ எப்படித் தெரியும்?

பங்கஜம் மாமி இறந்து போய்விட கடிதத் தொடர்பும் நின்றுவிட..

சாரு.. தியாகுவுக்கும் லோச்சனிக்கும் மகளாய் மாறிவிட.. நாகுவுக்கு லோச்சனி மாதப்பணம் அனுப்புவதை நிறுத்திவிட ஊரோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போயிற்று.

சாப்பிடப் பிடிக்கவில்லை.

எழுந்துபோய் சாதத்தட்டை சமையல் மேடையில் வைத்து இன்னொரு தட்டால் மூடினாள் கைகழுவிவிட்டு..

சாய்ந்து சாய்ந்து நடந்து தன்  அறைக்கு வந்து படுக்கை யில் விழுந்தாள்.

கண்களை மூடிக்கொண்ட போது காலை முதல் நடந்த  நிகழ்வுகள் மனதில் வந்து எட்டிப்பார்த்தன.

தான் மேடையேறி கவிதை பாட நின்னபோது மாணவ கூட்டம தன்னைப்போய் அழகியாக அங்கீகாரக் கைத்தட்டலைத் தட்டி அங்கீகரித்ததை நினைத்து மகிழ்ந்து பெருமைப் படுவதா? அன்றி அழுவதா என்று தெரியாமல் வேதனையோடு நினைத்துப் பார்த்தாள்.

நா அழகா? கடவுளே..

நெட்டையும் குட்டையுமான கால மறைக்க ஷுவப் போட்டுண்டு அலையிறே..

நா சாச்சு சாச்சுதா நடப்பேன்னு யாருக்கும் தெரியாது?எங்காலுங்க நெட்ட குட்டன்னு காலேஜ்ல யாருக்கும் தெரியாது.

தெரிஞ்சிருந்தா என்னப்போய் அழகுன்னு சொல்றதுக்கு ஆட்சேபம் வந்திருக்கும்.

ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் தெரிஞ்சுபோய்ட்டா?  சாச்சு சாச்சு நடகிற ஒன்னப் போயின்னு சொல்லி காரித்துப்பமாட்டாங்க?பரியாசம் பண்ணமாட்டாங்க?

நானாவே போய் நா நெட்டகுட்ட கால்காரி..சாஞ்சு சாஞ்சுதா நடப்பேன்னு எப்பிடி சொல்றது?..என்ன அழகுனுலாம் சொல்லாதிங் கனு எப்டி சொல்றது?

என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தாள் சாரு.

ப்ச்..என்றபடி வேறுபக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தாள்.

ஏனோ காலையில் தன் வண்டி மோதியதால் பள்ளத்துத் தண்ணீரில் விழுந்தவன்..

முரளிகிருஷ்ணா என்ற பெயருடையவன்.. தான் படிக்கும் கல்லூரியில் நான்காமாண்டு படிப்பவன்.

அந்த அவன் மேடையில் நின்றபடி அனைவருக்கும் நன்றி நன்றி என்று சொல்லியபடி பார்வையை நகர்த்திக் கொண்டே  வந்து தன் முகத்தில் பார்வையை நிலை நிறுத்தியதும் மனதில் எழ..

மூஞ்சி..ஏ அப்பிடி பாத்தான்?

டோஸ் விட்டது பத்தாது போலருக்கு..அவம் பார்வையும் அவுனும்.. ஹூம்..தலையை ஆட்டி சிலுப்பிக்கொண்டாள்.

சரி படுத்துண்டே இருந்தா தேவயில்லாத யோசனைலாம் வரும்.

லோச்சு(லோச்சனியை செல் லமாக அழைக்கும் போது) அம்மா பாவம்..வந்து வேலையெல்லாம் செய்வா..

நாமதா செஞ்சு வெப்பமே என்று நினைத்தபடி எழுந்து கொண்டாள்.

– தொடரும்…

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *