உண்மை மதிப்பு!
விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக அளித்தான். மரக்கட்டைகளை வெட்டி விற்கலாம் என்று.
வீழிநாதனுக்கு மரக்கட்டைகளை வெட்டிக் கடைத்தெருவுக்குச் சுமந்து செல்வது சிரமமாக இருந்தது. அக்கட்டைகளைச் சுட்டுக் கரியாக்கினான். பிறகு அதை மூட்டையாகக் கட்டிச் சுமந்துகொண்டு சென்றான். இப்படிச் செய்வது அவனுக்கு சுலபமாக இருந்தது. கரியைக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.
மழைக்காலம் வந்தது. விறகுக் கட்டைகளைச் சுட்டுக் கரியாக்க வீழிநாதனால் முடியவில்லை. ஒரு விறகுக் கட்டையை மட்டும் மிகுந்த சிரமத்துடன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தூக்கிக் கொண்டு, சந்தையைச் சென்றடைந்தான்.
கடைக்காரர் கண்ணுச்சாமி அந்த ஒரு கட்டைக்கே ஆயிரம் ரூபாய் தரத் தயாராக இருந்தார். ஏனெனில் அது சந்தனக்கட்டை!
இத்தனை நாளும் வீழிநாதன், சந்தனக்கட்டைகளைத்தான் சுட்டுக் கரியாக்கி, அற்ப விலைக்கு விற்றிருக்கிறான்! விஷயம் முன்பே தெரிந்திருந்தால் இத்தனை நாட்களில் எத்தனை செல்வம் சேர்ந்திருக்கும்!
மனித உடல்தான் சந்தனக் கட்டை. இதன் மதிப்பை உணர்ந்தால் இறைவனாகிய பேரானந்தத்தை அடையலாம். உணராவிட்டால் வெறும் புலன் இன்பங்களிலேயே வாழ்நாளை வீணடித்து விடுவோம்!
– மு.மதுரா, பத்தமடை. (மார்ச் 2013)