உடைப்பு
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 137
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழையாற்றங்கரையில் ஒரே பெகளமாக இருந்தது. மனிதக் கூச்சல் களின் ஆரவாரம். ‘சதக் சதக்’ என்று நனைந்து கொவர்ந்திருந்த வரப்புத் திரட்டில் மண்வெட்டி இறங்கும் ஓசை. ‘சொத்’தென்று பிரம்புக் குட்டை களில் உரம் சுமைக்கடவங்களில் மண்வெட்டி முங்க வெட்டிக் கோரிய மண்விழும் சத்தம். ‘ம்’ என்று முக்கி வெட்டி உயர்த்தித் தலையில் சுமந்து ஓடுவோரின் தடதடப்பு…
பிரியாகச் சுற்றிய வைக்கோல் வடங்களையும் வைக்கோல் கூளங் களையும் பலவீனமான கரையில் பரத்தும் சலசலப்பு. வெட்டிய மண்ணைச் சுமந்து ஆற்றங்கரையில் போட்டு மண்வெட்டுபவனிடம் மீண்டும் வந்து துரிதப்படுத்தும் அரவம்…
வெட்டுபவனுக்கு குறுக்குக் கடுக்கிறது என்று நிமிர முடிய வில்லை. சுமப்பவனுக்குக் கழுத்து வலிக்கிறது என்று நிற்க முடிய வில்லை. வீசிய வாடைக் காற்றையும் பொழிந்துகொண்டிருந்த மழை யையும் மீறி வியர்வை துளிர்த்து, மழையில் கரைந்தது. ‘கரும்கும்’ மென்று அடர்வான இருள். பௌர்ணமி பக்கம், ஆனாலும் சந்திரனை இருட்டடித்த மேகச்சுருள்கள்…
குடையைப் பிடித்துநின்ற தென்கரை முத்துப்பிள்ளையின் அருகே அரிக்கேன் விளக்கை ஏத்திப் பிடித்துக்கொண்டு அவர் மகன் ஐயப்பன். இருளுக்குப் பழகிப்போன கண்களுக்கு, பூமியின் தன்வெளிச்சமே போது மானதாக இருந்தது. ஆட்கள் நடந்து நடந்து வரப்புத் திரட்டிற்கும் ஆற்றங் கரைக்குமான வழித்தடம் சதைந்தது. நொந்த வாழைப்பழமாய் மண் பிதுங்கியது. வழுகும் போல் இளகியது.
கண்ணை விரித்து ஆற்றையும் வெள்ளமட்டத்தையும் பார்த்த கண்களில் பீதி அடர்ந்தது. தொலைவில் பாறையில் இருந்து கீழே கடலாகப் பாயும் பெருவெள்ளத்தின் வெஞ்சின ஓதை. கூப்பிடுதூரத்தில் தெற்கே பாலமும் பாறைப் பிளவும் இருந்தது. பாலத்தின் வாய் கொள்ளா மல் தண்ணீர் புறப்பட்டு வெளி விழுந்தது.
பாலத்தின் வடக்கே உயரே இலுப்பைமரம் கூட்டமாக நின்ற கரையருகே பெருவெள்ளம் அலைதுள்ளி ஆர்ப்பரித்தது. செம்மண் கலந்து, கடுங்காப்பிபோல் நிறத்தில் நுரை கொழித்துக்கொண்டு வெள்ளம் மதங்கொண்ட காட்டானை போல் வேகத்தோடும் ஆர்ப்பாட் டத்தோடும் நடந்தது. வழியில் கண்ட தென்னை மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிந்துகொண்டு, கிளைகளை முறித்துக் கசக்கி வீசிக்கொண்டு, வாழைகளை மிதித்துச் சதைத்துக்கொண்டு, ஓங்காரப் பிளிறலோடு நடந்தது பழையாறு.
பூச்சி விழுந்த எருமைக் கன்றுக்குட்டியின் வயிறுபோல் இலுப்பை மரக்கரை இளைத்திருந்தது. வெள்ளத்தின் நுரை, கரையின் கூம்பில் வரிசை கட்டியது. வெள்ளத்தோடு வந்த பதவல்கள், நாணற் குச்சிகள், புன்னைமரத்தின் பொக்குக் கொட்டைகள், தங்கரளிக்காய்கள், வாழைத் தடைகள் என – வெள்ளத்தின் அசைவுக்குத் தகுந்து ஏறின, இறங்கின, மிதந்தன. நகர்ந்தன. ஒதுங்கின… அலையடித்து வெள்ளம் கரைமறிந்து பாயும் என அச்சம் தந்த இடங்களில் எல்லாம் ‘பொதீர், பொதீர்’ என்று குட்டைமண் விழுந்தவாறிருந்தது. மண் விழுந்த அதிர்ச்சியில் ஆற்று நீர் குலுங்கியது, கலங்கியது…
கனம் கொண்ட மேகம் வானில் குமுறிக் குமுறி மோதியது. கறி கொழுத்த, முரட்டு எருமைக் கடாக்கள் மூர்க்கமாய் மண்டையுடன் மண்டை மோதிச் சண்டை போடுவது போல் ‘கடார் கடார்’ என இடி முழக்கம். மண்டை பிளந்து நூலாய் வடியும் செங்குருதி போல் மின்னல் வரிகள். வானம் குமுறக்குமுற, கரை மீது மண் சுமந்து கொண்டிருந்த ஆட்கள் நெஞ்சில் கலவரம் நிறைந்தது. எவனோ ஒருவன் கவலையுடன் வடக்குமலை மூலையை அண்ணாந்து பார்த்தான்.
”யாருலே அது? சொர்ணப்பா! அங்க என்ன மயிரைப் பாக்கே? சர சரண்ணு குட்டையை எடுத்தா” தென்கரை முத்துப் பிள்ளையின் குரல் தார்க்கம்பாய் எல்லோர் உடலிலும் குத்தியதால் ஒரு துடிப்புக் கூடியது. துடிப்புக் கூடி குட்டை மண் விழுதலின் வேகம் கூடியது போன்றே நீர் மட்டமும் ஒரு சொல் உயர்ந்தது. கொவர்ந்திருந்த கரையில் பெண் குழலின் ஓரிழைபோல் நெடு நீளமாய் பிளவு தெரிந்தது. ஆற்று நீரின் உள்ளே அமிழ்ந்திருந்த கரையின் அடிவயிற்று மண் சரிந்து நீரின் ஆழத் தில் விழும் ‘திடும்’ என்ற ஓசை. கையால் இழுத்தது போல் கரையைத் தாண்டி நீரில் மறுபுறம் விழுந்தது.
மண் சுமந்தவர்களும் கரையில் நின்றவர்களும் யோசனையுடன் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர். நினைப்பதை வெளியே சொல்ல அவரவர்க்கு அச்சம். இந்த ரீதியில் மழை மேலும் பெய்து, வெள்ளம் உயர்ந்தால் எத்தனை மண் சுமந்தாலும் இந்தக் கரை தாங்காது என்று அவர்களுக்குப் புரிந்தது. கரை தாங்காமல் உடைந்தால்…
ஆற்றின் வெள்ள மட்டத்துக்குப் பதினைந்தடி தாழ்ச்சையில் கடல்போல் விரிந்து கிடந்த வயற்காடு. பாலடைத்து, காய்பிடித்து, மணி முதிர்ந்து, பத்துப் பதினைந்து நாளில் அறுக்கலாம் என்ற நிலையில் தலைசாய்ந்து பெரியதொரு கோரம்பாய் விரித்தது போல் நெற் பயிரின் படுக்கை. இரண்டு நாட்கள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தாலும் உடனே வெள்ளம் வடிந்துவிட்டால் பெரிய சேதம் ஏற்பட்டுவிடாது. வெயில் முகத்தில் இரண்டு நாட்கள் காட்டி பொத்தினாற்போல் அறுத்து எடுத்து விடலாம். ஆனால் உடைப்பு விழுமாயின்…
உடைப்பு விழுந்த வயலின் மேல் தோல், கொழுப்பு எல்லாம் பறிந்து போய் வறட்டுக் களிமண் எலும்புக் கோரமாய் இளிக்கும். சுற்றிலும் ஏழெட்டு ஏக்கர் பரப்பில் நெல் மணியும் மணல் மணியும் பிரித்துக் காண முடியாத அளவுக்குச் செறிவாக மணல் பாயும். இந்தப் பூவின் பயன் மணலாய்ப் போவது ஒரு புறமும் மணலைக் கூட்டி வாரி எடுக்க ஏக்கருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் ஆகும் செலவு மறுபுறமும்… மணலைச் சேர்த்து வாரி எடுத்துவிட்டாலும் ஆண்டாண்டு காலமாய் உரப்பட்டு செழிப்புற்றுக் கிடந்த நிலத்தில் வளமை திரும்ப எத்தனையோ கன்னிப்பூவும் கும்பப்பூவும் கழிய வேண்டும்.
இலுப்பை மரம் செறிந்து நின்ற அந்தக் கரையோரம், பழையாற்று மடையைத் தொட்டு, நீள அகலத்தில் பதினைந்து கோட்டை விதைப் பாடு நிலம் வைத்திருந்த தென்கரை முத்துப் பிள்ளையின் அடிவயிறு, வெள்ளம் மேலும் உயர்வது கண்டு கலங்கியது.
நேரம் இரவு பத்தரை மணிக்கு முன்பின்னாக இருந்தாலும் இருட் டின் செறிவும் குளிரின் கூர்மையும் ஊதல் காற்றின் வேகமும் தண்ணீரின் இரைச்சலுமாய் வெகு நேரம் ஆனதுபோல் ஒரு பொய்த்தோற்றம் காட்டியது. ஆற்றின் கரையில் ஆங்காங்கே ஆளரவம். அவரவர் வயற் கரையில் டார்ச்லைட் சகிதம் காவல் இருந்தார்கள். இருளோடு இருளாய் குடைகளின் கவியல். கொங்காணி தரித்து, மழைப் பகழிக்கு முதுகு காட்டி கூனி நின்ற மொத்தை உருவங்கள். தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டி யும் தலைப்பாகைக் கட்டும் கையில் தைத்தடியுமாய் மழைக்கொந் தலைப் பொருட்படுத்தாமல் நின்ற வேலைக்காரர்கள்.
ஆற்றங்கரை எங்கிலும் தென்கரை முத்துப் பிள்ளையின்கரைபோல் மெலிவு இல்லை. கரையைச் சீவிச் செதுக்கி ஒரு மரமடி அகலத்தில் வயலைப் பெருக்கி இருந்ததால் ஒல்லியாய் உயரம் குறைந்து இருந்தது கரை.
ஆறு உடைக்க வேண்டுமானால் தென்கரை முத்துப்பிள்ளையின் கோணத்தில்தான் உடைக்கும் என்று மற்றவர்கள் அறிந்திருந்தார்கள். மேலுக்கு ஒரு கவலை தொனிக்கும் முகங்களைக் கொண்டிருந்தாலும் கரை மறிந்து ‘பொதீர்’ என நிலப்பாளம் சரியும் ஓசையை ஆவலோடு உன்னிப்பாய்க் கவனிக்கும் யத்தனம் கொண்டிருந்தனர். சிலர் அக்கறையுடன் நீர்மட்டத்தைப் பற்றி ஒன்றிரண்டு சொல்லில் விசாரித்துப் போனார்கள். விசாரிக்கும்போதே அலையடித்து கரை மறிகிறதா என்று கள்ளக் கண்ணால் பார்த்தார்கள்.
மண்சுமந்து சுமந்து தென்கரை முத்துப் பிள்ளையின் வேலைக்காரர் களிடம் சோர்வு தெரிந்தது. இந்த உச்சிச் சுமைக்குப் பலன் உண்டா என்று ஐயம் முளைத்து வளர்ந்தது. தென்கரை முத்துப் பிள்ளை நிதானமாய் ஆற்றையும் வஞ்சம் கொண்டு கறுவும் வானையும் நொய்மைப்பட்டு வரும் கரையையும் கவனித்தார். ஆட்களை முடுக்கிவிட்டு வேலை வாங்கிக்கொண்டிருந்த மாடசாமியைச் சைகை செய்து அழைத்தார். ஒன்றுக்குப் போக ஒதுங்குவது போல், பேச்சு சத்தம் காதில் விழாமல் தூரமாய்க் கரையோரம் ஒதுங்கினார்.
கருத்தைப் புரிந்துகொண்டது போல் கவலையோடு வந்துநின்ற மாடசாமியிடம் சத்தமில்லாமல் முனகினார். ‘மளை வெறிக்கதுக்கு உண்டான கோளு இல்லியேலே…’
“ஆமா நயினாரே… வெளி வாங்கக் காங்கலியே…”
“மண்ணு செமந்தாலும் கரை நிக்கும்ணு தோணுதா?”
“சம்சயந்தான்… அரை நாளியலுக்குமிந்தி நான் போட்டு வச்சிருந்த வரையைத் தண்ணி அளிச்சிற்றே…”
“கரையும் நல்ல கொவந்தாச்சு பாத்துக்கோ… ரெம்ப நேரம் தாங்கும்ணு தோணல்லே… எங்கிணயாம் கரையைத் தீட்டீர முடியுமா?” “ம்… எங்க பாத்தாலும் காவலால்லா இருக்கு…”
“வடக்கயோ?”
“வடக்க பூரா பரமேசுரம் பிள்ளைக்கு ஆளுக நிக்கு. தெக்கேயும் காவலுதான்…”
“ரேடியோக்காரரு தோப்புக்கு வடக்க?”
“அங்கிண கொஞ்சம் பள்ளந்தான். கரை வீதியா இருக்குண்ணாலும் சொருமணலு…”
“காவலு இருக்கா?”
“அதியமா நடமாட்டம் இல்லை. இப்பம் எப்படியோ?”
“ஒண்ணு செய்யி… மண்ணு செமக்க பிள்ளைகளுக்கு திங்கதுக்கு என்னமாம் வீட்டிலே போயி வாங்கியாண்ணு நான் சத்தங் குடுக்கேன். நீ ஐயப்பனையும் மாசாணத்தையும் கூட்டிக்கிட்டுப் போ… ஐயப்பன் வீட்டுக்குப் போட்டும். நீங்க கொஞ்சம் சுத்து வளியா பத்துக்குள்ளே இறங்கி பம்மிப் பம்மி தோப்பைத் தாண்டிப் போயி காச்சீருங்கோ…”
“ஆளு நிண்ணுண்ணா?”
“இருக்க கோளு போல ஆளு இல்லாத இடமாப்பாத்து வெட்டுங்கோ… சத்தங் கேக்கக்கூடாது… அமத்தி வெட்டி ஒரு கேணி வெள்ளம் மறிஞ்சு பாஞ்சிண்ணா போரும்… பொறவு கரையை அரிச்சு வெள்ளம் புடுங்கீரும்…”
பழையாறு கங்கைபோல் காவிரிபோல் மகா நதி அல்ல. வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளனாறு என்றோ பொய்யாக் குலக் கொடி என்றோ எந்த சங்கப் புலவன் நாவிலோ சாதாரணக் கவிகள் நாவிலோதவழ்ந்த பேறுகூடக் கிடையாது. ஆனாலும் அந்தக் காட்டாற் றுக்கு உயிர் இருந்தது. கோபமும் குணமும் இருந்தன. ஆண்டுகள் பல வாகத் தேக்கி வைத்திருந்த சீற்றத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட வேண்டும் என்று குமுறிக் குமுறிப் பாய்ந்த பழையாற்றின் கிழக்குக் கரையை நோக்கி, வயற்காட்டில் இறங்கி, சுற்று வழியாக, இரண்டு உருவங்கள் அஞ்சி அஞ்சி நடந்தன.
வரப்பின் சேற்றையும் சகதியையும் பொருட்படுத்தாமல், குறுக்கே சாடும் மாக்கிறித் தவளைகளையும் ஊரும் தண்ணீர்ப் பாம்புகளையும் நண்டு, நத்தை, சிப்பிகளையும் ஆயும் பூச்சிகளையும் கூட்டாக்காமல் ஏவப்பட்ட இரு கணைகளைப்போல் மாடசாமியும் மாசாணமும் நடந்தனர். ஆற்றில் வடிய வேண்டிய பத்துக்காட்டின் போக்கு வெள்ளம் போக்கிடம் இல்லாமல் தேங்கத் தலைப்பட்டு நெல் தாள்களை நனைக்கத் தொடங்கியது. சின்னஞ்சிறு கால்வாய்களிலும் ஊற்றாங்கால் களிலும் தெவங்கிக் கிடந்து மூச்சுக்காகத் திக்குமுக்காடியது.
கால்வாய் வரப்புகளை எட்டி எட்டித் தாண்டிக்கொண்டு வேட்டை நாய்களின் தீவிரத்தோடு மோப்பம் பிடித்து நடந்தார்கள் இருவரும். ஊருக்கு மேற்கே, பழையாற்றுப் பாலத்திலிருந்து நான்கு ஃபர்லாங் வடக்கே, ரேடியோக் கடைக்காரரின் தென்னந்தோப்பு மறைவில் பதுங்கி, கரையில் ஆள்நடமாட்டம் தெரிகிறதா என்று பார்த்தார்கள்.
தொலைவில் இரண்டு பீடி முனைகள் சிவப்புப் பொட்டாகத் தெரிந்தன. கலங்கலாக ஓரிரு உருவங்கள் நடமாடின. வெகு நேரம் பேசாதிருந்த தொண்டையின் கரகரப்பில் மாடசாமி கேட்டான். ”மாசாணம்… தோப்புக்கு ரெண்டு வயலு வடக்க யாராம் தெரியாளா?”
“இல்லண்ணேன்… வடக்கத் தள்ளி ஒரு வெளிச்சம் தெரியி…”
சற்று நேரம் நிதானித்துப் பார்த்தான் மாடசாமி. மனதைத் தேற்றிக் கொண்டவன் போல் நீளமாக மூச்சை இழுத்துவிட்டான். வேட்டி, தலை முண்டு இவற்றை உரிந்து சுருட்டி வரப்போரம் நின்ற நொச்சிப் புதரின் மூட்டில் மறைத்தான். மண்வெட்டியின் கையைத் தூரில் பற்றிக் கொண்டு, நிர்வாண கோலத்தில், முயலொன்று ஒடுவதுபோல் படர்ந்து படர்ந்து தாவினான். மாசாணம் பின்னால் ஓடினான்.
கரையோரம் பதுங்கி சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். ஆளரவம் இல்லை. வடக்கேயும் தெற்கேயும் தூரத்தில் மட்டும் நடமாட்டம்.
மாடசாமியின் காதில் மாசாணம் கிசுகிசுத்தான். “எண்ணேன்… இது உமையம்மை நாச்சியாருக்கு வயக்கரையில்லா…?’
“எந்த உமையம்மைலே?”
”கீளத்தெரு… செத்துப்போன இசக்கியா பிள்ளைக்குப் பொண்டாட்டி…”
“அதுக்கு…”
“பாவப்பட்ட அறுதலி வயத்திலே மண்ணு விளும்…”
“கெடலே பேசாம… இதை விட்டா இப்பம் எங்கிண வெட்ட? திரும்பிப் போனா நயினாரு நம்ம பொஞ்சாதி தாலியை அறுத்துப்போட மாட்டாரா?”
”பாவம்லாண்ணேன்… இந்தப் பதினெட்டு மரக்கா விதைப் பாட்டை வச்சுத்தான் நாலஞ்சு கண்ணுங் கயந்தலைகளை காப்பாத்து காவ…”
“இப்பம் என்ன தான் செய்யச் சொல்லுகே?”
ஆற்றின் கரையில் சிற்றலைகள் அடிக்கும் ஓசை. கரையின் முகளில் இருந்து இரண்டடி பள்ளத்தில் தண்ணீர் மண்ணை அரித்துப் பாய்ந்தது. கரைமீது குற்றி குற்றியாக நின்ற எருக்கலை, ஆவாரை மூடுகளின் நடுவில் குத்த வைத்திருந்த மாடசாமி எந்த இடத்தில் வெட்ட தோதுப்படும் என்று நுணுக்கமாய் கவனித்தான். கரை சற்று உயரமும் வீதியுமாக இருந்தாலும் சொரிமணல் திரடு. ஒரு மண்வெட்டி ஆடும் அகலத்துக்குக் கரையை கீறிவிட்டுவிட்டால் போதும். மீதி வேலையைத் துள்ளிச் சாடி விழும் வெள்ளம் பார்த்துக்கொள்ளும்.
தண்ணீரின் முன்னால் ஓரடி முன்னணை விட்டு, மண்வெட்டியின் கையின் நடுமுதுகில் பிடித்து குனிந்து ‘சதக்’ என்று வெட்டினான் மாடசாமி. மழை பெய்து கொவர்ந்திருந்த தரை. பக்கத்தில் ஓடும் நீரின் ஈர நைப்பு. இரண்டு மூன்று வெட்டுகள் சத்தமில்லாமல் விழுந்தன.
“எண்ணேன்…” மாசாணத்தின் குரலில் ஒரு பரிதவிப்புத் தெரிந்தது.
“….ப் பொறந்த பயலே! பேசாம வெட்டுகியா? இல்லே குறுக்கிலே சமுண்டி தண்ணீல தள்ளட்டா…?”
அனக்கம் இல்லாமல் இரண்டு மண்வெட்டிகள் ஓரடி அகலத்தில், மூன்றடி ஆழத்தில் ஆறடி நீளமுள்ள கரையை வெட்டி மண்ணை இழுத் தன. குறுக்கு வாட்டில் கரையை வெட்டிய பின்பு, ஆற்றின் ஓரத்தில் இருந்த மண் அணைப்பை மாடசாமியின் மண்வெட்டி நீக்கியது. வழி கிடைத்த ஆனந்தத்தில் சலசலவென வெள்ளம் விரைந்து படர்ந்தது. வெள்ளத்தின் ஓட்டத்தோடு மண் வெட்டியைக் கொண்டு மண்ணைப் பறித்துப் பறித்து உடைப்பின் வாயையும் வழியையும் பெரிதாக்கினார் கள். காய்ந்த புன்னைச் சருகின் மீது சாரைப்பாம்பு ஊர்வது போன்ற சத்தத்துடன் தண்ணீர் கரையைக் கடந்து கோரை, நொச்சி நாணல் புதரின் ஊடே பாய்ந்து வயலில் விழுந்தது. நொடிப் பொழுதில் உடைப்பு ஒரு பாகம் பெரிதாகி விட்டதுபோல் தோன்றியது. இனிமேல் மண்வெட்டி செய்யவேண்டிய வேலையை வெள்ளமே செய்துவிடும். அரை நாளிகை நேரத்துக்கு உடைப்பருகே ஆள் யாரும் வராமல் இருந்தால் போதும். வேகத்தோடு வெள்ளம் விழுந்து, கரையும் பிளந்து சரியத் தொடங்கினால் யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.
ஆவாரை மூடொன்றின் மறைவில் குந்தி, வெள்ளம் வயலில் குழி பறித்து விழுவதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்த மாசா ணத்தை நோக்கினான் மாடசாமி. கரை வெடித்து உடைப்பு வெள்ளத்தில் விழும் ஓசை கேட்டது.
”மாசாணம் பொறப்பிடு… இனி இங்கிண நிக்கக் கூடாது…” எச்சரிக்கை உணர்வுடன் இருவரும் நடந்தனர். தோப்பருகே வந்து ஆடை உடுத்தி, நிதானமாக நடந்தனர். பின்னால் உடைப்பு வெள்ளம் பரந்து பெருகத் தொடங்கியிருந்தது. தென்கரை முத்து பிள்ளை வீட்டுக்குப் போய் சுடச்சுட தாளித்துக் கிண்டிய அவல் நிறைந்த மைசூர் சருவத் தையும் கொதிக்கும் சுக்குக் காப்பி நிறைந்த செம்புப் பானையையும் சுமந்து கொண்டு இலுப்பை மூட்டுக் கரைக்குப் போனார்கள் மாடசாமி யும் மாசாணமும்.
சுற்றிப் பார்க்கையில் -ஆற்றின் நீர்மட்டமும் வேகமும் கட்டுப் பட்டிருந்தது. வயற்காட்டில் பெருவெள்ளம் கடல்போல் கொந்தளித்துப் பரந்து வந்துகொண்டிருந்தது. மாடசாமியை ஏறிட்டுப் பார்த்த மாசாணத் தின் கண்களில் அது பிரதிபலித்தது.
– தீபம், பிப்ரவரி – 1979.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
இளையவேணி கிருஷ்ணா
September 6, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 6, 2026
